November 12, 2022
இயக்குநர் கமல்ஹாசன்
25 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகம் படத்தின் வெள்ளோட்ட காட்சித் தொகுப்பு ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அந்தப் படத்தின் இயக்குநர் கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். அப்போது குங்குமம் பத்திரிக்கையில் இருந்த மாலன் அவர்கள் மற்றவர்களையும் நல்லா நடிக்க வச்சிருக்கீங்க அது முடியும் ஆனால் குதிரையும் அந்தக் காட்சிக்கு ஏற்ற சினத்தை கண்ணில் காட்டியதே எப்படி? என்று கேட்டார். அந்தக் காட்சிக்கு முன் குதிரையை குச்சியால் சீண்டிக் கொண்டே இருந்தேன் என்றார் இயக்குநர் கமல்ஹாசன்.
தமிழ்சினிமாவில் கமல்ஹாசன் மூலம் வெளிச்சம் பெற்ற, ரீ எண்டிரி கொடுத்த நடிகர்கள், நடிகைகள், திரைக்கதை வசனகர்த்தாக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உண்டு. பொதுவாக ஒரு இயக்குநர் மூலம் தான் பலரது திறமைகள் வெளிச்சம் பெறும். ஆனால் சமகால இயக்குநர்களுக்கு நிகராக ஏன் அவர்களை விட அதிகமாகவே பல திறமைகளை தனிழ்சினிமாவிற்கு கொண்டு வந்தவர் கமல்ஹாசன். ஏனென்றால் கமல்ஹாசனிடம் இருப்பது நாயக மனம் அல்ல. இயக்குநர் மனம்.
90களின் ஆரம்பத்தில் குணா, தேவர் மகன் படங்களில் காகா ராதாகிருஷ்ணனுக்கும் தேவர் மகன் படத்தில் கள்ளபார்ட் நடராஜன் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். பிரமாதப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த நடிகர்களை ஞாபகம் வைத்து அழைத்து வந்தது இன்னாருக்கு இன்ன ரோல் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் கமல்ஹாசனின் இயக்குநர் மனம். போலவே கிரேசி மோகனுக்கு கொடுத்த அபூர்வ சகோதரர்கள் வசனகர்த்தா வாய்ப்பு, மருதநாயகத்தில் பசுபதி, தேவர் மகனில் வடிவேலுக்கு ஒரு குணசித்திர நடிகர் வாய்ப்பு, எஸ் என் பார்வதிக்கு கொடுத்த தொடர் வாய்ப்புகள், நாசருக்கு என தனியாக சிந்திப்பது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது என சொல்லிக் கொண்டே போகலாம்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சோதனை எட்டு ஒன்பது வயதில் இருந்து தங்கள் பதின் பருவத்தை கடக்கும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் கிரீடம் இழந்த இளவரசனின் மன உளைச்சல். அதிலும் ஆண் நடிகர்கள். பத்து வயதுக்கு மேல் அதிக ரோல்கள் கிடைக்காது. குரல் உடைந்து விடும். பெரிய வேடங்களுக்கு 18 வயது வரை பொறுத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதும் சங்கடமாக இருக்கும். அந்தக் காலத்தில் ஒருவன் தன்னை எப்படி தகவமைத்துக் கொள்கிறான் எனபதே அவன் பிற்கால வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமையும்.
கமல்ஹாசனைப் பொறுத்த வரையில் அந்த வயது காலத்தில் தொடர்ந்து நடனப்பயிற்சி எடுத்து வந்தார். ஒரு நாட்டிய நாடகம் நடத்தும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தன் டீன் ஏஜை கடக்கும் போது அவருக்கு இயக்கத்தின் மீது நான் நாட்டம் அதிகமானது. அதை அவர் ஆரம்ப கால படங்களைப் பார்த்தால் அதை உணரலாம்.
கமல்ஹாசன் எழுபதுகளின் ஆரம்பத்தில் பணியாற்றிய படங்களைப் பார்த்தால் உதவி இயக்குநர், உதவி நடன ஆசிரியர் என்றே இருக்கும். நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி படங்களில் உதவி இயக்குநர். நூற்றுக்கு நூறு படத்தின் இயக்குநர் கே பாலசந்தரிடம் ஏற்பட்ட அறிமுகத்தால் அரங்கேற்றம் படத்தில் பெயர் சொல்லும் படியான கேரக்டர். அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேனில் நடிப்போடு சேர்த்து உதவி இயக்குநர் வேலையும்.
இந்த காலகட்டத்தில் கமலின் ஒரே குறிக்கோள் இயக்குநர் ஆவதாகத்தான் இருந்தது. இயக்குநர் ஆர் சி சக்தியின் முதல் படமான உணர்ச்சிகளில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் கதை விவாதத்தில் இருந்து, வசனம், உதவி இயக்கம் வரை கமலின் பங்களிப்பு இருந்தது. தொடந்து கே பாலசந்தரின் படங்களான அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு என எல்லாப் படங்களிலும் அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகவே செயல்பட்டார் கமல்ஹாசன்.
தான் விரைவாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த கமல்ஹாசனுக்கு ப்ரேக் போட்டவர் பாலசந்தர் தான். நீ இயக்குநரா இருக்கும் போது ஹீரோ தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாம உன்கிட்ட ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கிற ஹீரோ இருந்தா நல்லது தானே? முதல்ல நடிச்சு உன்னை நிலை நிறுத்திக்கோ என்றார் கே.பி.
தொடர்ந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தினாலும் ஒரு இயக்குநராக என்னெவெல்லாம் என்ன திறமையெல்லாம் தேவையோ அதை எல்லாம் தேடித் தேடி சேர்த்துக் கொண்டே தான் இருந்தார் கமல்ஹாசன். பாரதி ராஜா, பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் துவங்கி ரா கி ரங்கராஜன், சுஜாதா போன்ற கதாயாசிரியர்கள் வரை அவர் நட்பிலேயே இருந்தார். அவர்களிடம் இருந்த கதைத்திறமையை உள்வாங்கிக் கொண்டார்.
ஒரு கம்பெனியின் சி ஈ ஓ ஆக விரும்புபவர்கள் தாங்கள் இருக்கும் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் துறையிலும் ஒரு சி ஈ ஓ வைப் போலவே யோசித்து செயலாற்ற வேண்டும். அப்படித்தான் ஒரு இயக்குநர் மனநிலையிலேயே தான் கமல் திரைத்துறையில் செயல்பட்டு வந்தார். கதை, தன் கேரக்டர், உடன் நடிப்பவர்களின் பெர்பார்மன்ஸ், மற்ற எல்லா தொழில்நுட்ப விசயங்களிலும் ஒரு அறிவிக்கப்படாத இணை இயக்குநராகவே செயல்பட்டு வந்தார்.
சட்டம் என் கையில் என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி என் பாலுவின் அடுத்த படம் சங்கர்லால். படப்பிடிப்பின் பாதியிலேயே அவர் இயற்கை எய்தி விட, மீதிப் படத்தை ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதனுடன் சேர்ந்து இயக்கி முடித்தார். இதன் பின்னர் 80களின் மத்தியில் கமல் விரைவாகவே ஒரு படத்தை இயக்கி முடிப்பார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கமல் நிறைய முன் தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாரே தவிர களத்தில் இறங்க வில்லை.
தன் பெயரில் வரும் முதல் படம் தமிழ்சினிமாவால் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அதற்கான களம் மருதநாயகம் படத்தில் அமைந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தடைப்பட்டது. தமிழில் பெரிய வெற்றி பெற்ற அவ்வை சண்முகியை இந்திக்கு கொண்டு சென்றார். அங்கே படத்தை இயக்க வந்தவருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கிரியேட்டிவ் டிபரன்ஸில் அவர் விலகிக் கொள்ள கமலே படத்தை இயக்கினார்.
கஷ்டமான மேக் அப், உடன் நடிக்க அம்ரீஷ் பூரி, ஓம் பூரி, தபூ என தேர்ந்த நடிப்பு பட்டாளம். நகைச்சுவையை திரையில் இருந்து பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய கட்டாயம் இவை அனைத்தையும் எளிதாக சமாளித்து படத்தை வெற்றியாக்கினார்,
அடுத்து கமல்ஹாசன் இயக்கிய படம் ஹேராம். மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. டாக்கு-பிக்சன் ஜானரில் தமிழ்நாட்டின் முக்கிய படமாக இன்றளவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு ரெபரன்ஸாக இருக்கக் கூடிய படமாகவும் இருக்கும்.
அதற்கடுத்து இயக்கிய விருமாண்டி திரைப்படமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் தற்போதைய இளைய சமுதாயத்திடமும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இருபது ஆண்டுகள் ஆகப்போகும் வேளையிலும் அப்பட கதாபாத்திரங்கள் பேசு பொருளாகவே
இருந்து வருகிறது. அதன் பின்னர் கமல் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படமும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தியது.
யோசித்துப் பார்த்தால் மூன்று திரைப்படங்கள் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் இதற்கு இணையான தரத்தில் தமிழ்சினிமாவில் மூன்று படங்களை கொடுத்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இந்தப் படங்களை இயக்க கமல் எடுத்துக் கொண்ட் முன் தயாரிப்பு பெரிது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடு வாங்குவதைப் போல அவர் தன் திரைப்பயணத்தில் கற்றவற்றைக் கொண்டு இந்தப் படங்களை இயக்கினார்.
இனி எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை என்ற போதிலும், சில மாதங்கள் முன்பு அமெரிக்கா சென்று திரைக்கதை பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் பெற்ற சமூக அனுபவம், அரசியல் அனுபவத்தையும் கொண்டு மேலும் சில தமிழ் சினிமா மறக்க இயலாத படங்களை கமல் இயக்க வேண்டும்.
August 27, 2022
ஆணும் சமைக்கனும்
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் 23 வயது வரை வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தந்தை அரசு அதிகாரி. போஜனப் பிரியர். வாரத்தில் இரண்டு நாள் காலை சாம்பார் வடை ஹோட்டலில் வாங்குவோம், வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. இரண்டு நாள் இரவு புரோட்டாவுடன். புதன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம்.
சாமி கும்பிட கோவிலுக்குப் போவதாக இருந்தால் கூட, முதல் நாள் இரவு, புளிக்காய்ச்சல் தயாராகும்.தயிர் சுமாரா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பன்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே லாலா கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். முக்கு கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த கோவிலுக்கு என்ற கேள்வியே எழும்பும்.
எங்கள் வீடாவது பரவாயில்லை. என் அம்மாவின் அக்கா வீடு இன்னும் ஒரு படி மேல். என் அம்மாவின் தந்தை ஒரு நிலச்சுவான் தார். முதல் மகளுக்கு அரசு அதிகாரியாகவும் வேண்டும், நிலபுலன்களும் இருக்க வேண்டும் எனப் பார்த்து எக்கச்சக்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 10 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு அதிகாரி என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். கிராமத்தில் இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும். காப்பி பொடி அரைப்பது, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி அரைப்பது எல்லாம் விழா போல நடக்கும்.
என் பெரியம்மாவின் பையன், பெரும்பாலான ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தவர். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் பெரியப்பாவிற்கு சிகரெட் பழக்கம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு இரண்டு தெரு தான் தள்ளி இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் குடுகுடுவென ஓடிப்போய் அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும்.
சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார். டேய், நாளைக்கு கம்மாய்ல விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வராங்கடா. உங்க அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட சொல்லிட்டு வா என்பார்கள்.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் அவர்கள் வீட்டிற்குத்தான் போவேன். முறுகலாக இரண்டு நெய் தோசை, பில்டர் காபி மூத்த அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு எந்த வீட்டில் என முடிவு செய்வேன்.
திருவிழா சமயங்களில் பாட்டி ஊருக்குப் போனால், இன்னும் விசேஷம். பெரிய வீடு. மாமா அத்தைகள் என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும். நான் அன்னிய மாப்பிள்ளையின் பையன் என்பதால் என் தந்தைக்கு ஏதும் கோபம் வந்து விடக்கூடாதே என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டார்கள். அதில் தான் கையே கழுவுவார்கள். சமையல் கட்டுக்குள் யாரும் நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
திருமணத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். என் மனைவியும் சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் மாமனார்-மாமியார் இருவரும், அவர் என்ன சொன்னாலும் கேட்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என உருவேற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்தால் கூட அவர்கள் பார்த்து விட்டால் என் மனைவியைக் கோபிப்பார்கள்.
இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என் மூத்த மகன் ஹைபர் ஆக்டிவ். எனவே மாலை வேளைகளில் அவனை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது இதோடு என் கடமை முடிந்தது என இருப்பேன்.
பதினைந்து ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள் பையன்களுக்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் கூட சாப்பிடுற பசங்க கிண்டல் பண்றாங்கப்ப. நல்லாவும் இல்ல என்றார்கள்.எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட் போட்டு கொடுத்து விட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன். இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்றி மாற்றிக் கொடுத்து விட்டேன். சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில் மனைவி ஓரளவு குணமாகி நான் பார்த்துக்கிறேங்க என என்னை விடுதலை செய்தார். அப்பாடா தப்பிச்சோம்டா என வழக்கத்திற்குத் திரும்பினேன்.
அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமத்துவம் என்கிறோம். ஆனால் மனைவிக்கு சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று தோன்றியது.
ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் டீ போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு, கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். ஒரு வைர நெக்லஸ் வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே.
இப்போதெல்லாம் காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன்.
என் மனைவியிடம் மட்டுமல்ல. என் பாட்டி, பெரியம்மா மற்றும் அக்காக்கள், அம்மா, மாமியார் என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் இனி என் மகன்களை சமையலில் பயிற்றுவிப்பதுதான்.
August 09, 2021
காதலுக்கு மரியாதை
இயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர் குஞ்சாகோ போபன், ஷாலினியை வைத்து அவர் எடுத்த அனியத்திப் பிறாவு படத்தை இங்கே இயக்க வந்தார். ஹீரோயின் ஷாலினி என பிக்ஸ் ஆகிக் கொண்டார். சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரையும் பிக்ஸ் செய்து விட்டார். நாயகனாய் நடிக்க அவருக்கு ஒரு இளமையான ஹீரோ தேவைப்பட்டர். சிலர் சூர்யாவை சொன்னதாகவும், ஆனால் சிவகுமார் அப்பா-மகனாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள். அடுத்து விஜய்யை புக் செய்ய போனார்கள்.
அப்போது விஜயின் கால்ஷீட் சங்கிலி முருகனிடம் இருந்தது. விஷ்ணு படம் பி & சி செண்டரில் நன்கு ஓடியதைப் பார்த்து அவர் விஜய்யின் கால்ஷீட்டை எஸ் ஏ சந்திரசேகரனிடம் இருந்து வாங்கியிருந்தார். சங்கிலி முருகன் தயாரிப்பு, பாசில் இயக்கம், விஜய்-ஷாலினி ஜோடியில் காதலுக்கு மரியாதை உருவாகத் தொடங்கியது. இசை பாசிலின் மனம் கவர்ந்த இளையராஜா.
பாசில் என்றாலே பட்டாசாக பாடல்களைப் போட்டுக் கொடுப்பார் இளையராஜா.
சங்கிலி முருகனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தமே உண்டு. சங்கிலி முருகனின் நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு ஸ்ட்ராங். சங்கிலி முருகனுக்கு எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என பல ஆல்பம் ஹிட்களை கொடுத்தவர். அவர் ஆர்மோனியப் பெட்டியை சும்மா திறந்தாலே இனிமையான பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. மனதிற்குப் பிடித்தவர்களுக்கு என ஆர்மோனியத்தை திறந்தால்? கேட்கவா வேண்டும்.
படம் விரைவாக ஷூட்டிங் முடிந்தது. படத்திற்குப் பிண்ணனி இசை அமைக்க உட்கார்ந்த இளையராஜாவிற்குப் பொறி தட்டியது. இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என. உடனே தன் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்து விநியோக உரிமை வாங்குங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னவர்களில் தாணுவும் ஒருவர். ஆனால் தாணுவோ, அவர் பார்ம்லாம் போயிருச்சு. இப்படித்தான் கற்பூர முல்லைக்குச் சொன்னார். படம் தேறவே இல்லையே என தயங்கினார். தாணு சொன்னதிலும் நியாயம் உண்டு. பாசிலுக்கு அப்போது தமிழில் கடைசி கமர்சியல் ஹிட் வருசம் 16 தான். அதன்பின் அவர் எடுத்த அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா என தொடர்ச்சியாக வசூல் ரீதியாக சுமாரான படங்கள் தான்.
இளையராஜாவும் அப்போது கமர்சியலாக தன் முதல் இடத்தை ரஹ்மானிடம் இழந்திருந்தார். ரஹ்மான் பெயர் இருந்தாலே விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டி படத்தை வாங்கிய நேரம். காதலுக்கு மரியாதையில் அன்றைக்கு மார்க்கெட் வேல்யூ விஜய்க்கு தான் இருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக விஜய்க்கு பெரிய வெற்றி. ஆனால் அதற்கடுத்து வசந்த வாசல். மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என சுமாரான படங்களைக் கொடுத்து சறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து லவ் டுடே படம் வெளிவந்து அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதற்கடுத்து சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர், வசந்தின் நேருக்கு நேர் படங்களின் கமர்சியல் வெற்றி, விஜய்க்கு ஒரு மார்க்கெட் வேல்யூவை கொடுத்திருந்தது.
இந்த நேரத்தில் தான் படத்தை ப்ரிவியூ பார்த்தார் என் எஸ் சி ஏரியாக்களின் முக்கிய விநியோகஸ்தரான என் எஸ் சி ரவி என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தும் பரவலாக அறியப்பட்டவர். அவருக்கும் இந்தப் படம் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. அன்றைய தேதிக்கு படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்பார்கள். அதற்கு மேல் ஒரு தொகையை வைத்து சங்கிலி முருகனிடம் இருந்து தமிழ்நாடு ஏரியா முழுவதையும் வாங்கினார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். சங்கிலி முருகனும் படம் வெளிவரும் முன்னரே லாபம் வந்து விட்டதே என திருப்தியடைந்து விட்டார்.
படம் வெளியானது. விஜய்க்கான கூட்டம், பாசில் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு சிறு கூட்டம் படத்திற்கு வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல பீல்குட் படம், இனிமையான பாடல்கள், படம் முடிந்து வெளிவரும் போது மனசு லேசான உணர்வு. அவ்வளவு தான். முழுக்க முழுக்க வாய்மொழி விளம்பரத்தாலேயே படம் பற்றிக் கொண்டது. எப்படிப்பட்ட ஹிட் என்றால் நாகர்கோவில் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது, ஓரிரு மாதம் கழித்து வெளியான அருப்புக்கோட்டையிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கெல்லாம் ஐந்து மடங்கு வரை லாபம் என்றார்கள். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இனி நாமளும் படம் தயாரித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்தார். முதல் படமே விஜய்காந்த் – விக்ரமன் காம்போவில் வானத்தை போல, அடுத்தடுத்து பெரிய படங்கள் தான். ஷங்கரின் அந்நியன், கமல்ஹாசனின் தசாவதாரம் என.
பாசிலுக்கு ஒரு ராசி உண்டு. அவர் படத்தின் மூலம் அறிமுகமாகும் / நடிக்கும் சில நடிகைகளுக்கு கிட்டத்தட்ட தேவதை ஸ்டேட்டஸ் கிடைத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் உள்ள வீடுகளுக்கும் சென்று சேர்ந்து விடுவார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஆர்க் அமைக்கக் கூடிய வல்லமை பாசிலுக்கு உண்டு. பூவே பூச்சுடவாவில் அவர் அறிமுகப்படுத்திய நதியா 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு ஸ்டேட்டஸோடுதான் இருக்கிறார். வருசம் 16 குஷ்பூ இத்தனை பொலிட்டிகல் ஸ்டேண்டுகளுக்கு அப்புறமும் ஒரு பெர்சனாலிட்டியாக முக்கிய படங்களில் நடிக்கிறார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு அப்படி ஒரு ஸ்டேட்டஸை கொடுத்தது. அவர்க்கு காதலுக்கு மரியாதையின் மூலம் கிடைத்த கிரேஸை அமர்க்களம் பட ஓப்பனிங் ஷோவில் கண்டு கொள்ள முடிந்தது. அமர்க்களம் படத்தில் முதல் காட்சியே ஷாலினியின் பாடல் தான். அதற்கு கிடைத்த கை தட்டல் வரவேற்பு ஹீரோக்களுக்கு இணையானது.
காதலுக்கு மரியாதை, இளையராஜாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது எனலாம். திரையுலகமே ரஹ்மான் ரஹ்மான் என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த போது, என்னாலும் ஒரு கமர்சியல் ஹிட் படத்தைக் கொடுக்க முடியும் என காட்ட ஒரு வாய்ப்பாய் காதலுக்கு மரியாதை அமைந்தது. எக்கச்சக்க கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
விஜய்க்கு பூவே உனக்காக ஒரு மேக் ஓவர் கொடுத்தது என்றால் காதலுக்கு மரியாதை ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ஏராள பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள். பம்பாய் ரொட்டி சுக்கா ரொட்டி, தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்ட பரோட்டா என குத்துப் பாடல்களாய் பாடிக்கொண்டிருந்த விஜய்க்கு ஒ பேபி, ஓ பேபி என்ற பாடலை இளையராஜா பாடக் கொடுத்து இன்னும் விஜயை மெருகேற்றினார்.
பாசில் அதற்கடுத்து விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, ஸ்ரீகாந்தை வைத்து ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களை இயக்கினார். இரண்டும் சரியாகப் போகவில்லை. அதோடு இங்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யோசித்துப் பார்த்தால் தமிழில் பாசிலின் மிகப்பெரிய ஹிட் காதலுக்கு மரியாதை தான். வருசம் 16 கூட அதற்கடுத்து தான் வரும். காதலுக்கு மரியாதையின் வெற்றிக்கு படத்தின் கதை, இசை போன்ற அம்சங்கள் காரணமாய் இருந்தாலும் படத்தை தாங்கி நிற்க நல்ல இளமைத் துடிப்பான ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதை சிறப்பாக விஜய் செய்தார். அவருடைய கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது.
Subscribe to:
Posts (Atom)