சென்ற வாரம், வழக்கமாக
காய்கறி வாங்கும் கடையில் வாரத்தேவைக்கானவற்றை வாங்கிவிட்டு, கொசுறாக அவர்கள் கொடுக்கும்
கருவேப்பிலை-கொத்தமல்லிக்காக பையை அகலமாகத் திறந்தபோது, அதில் கருவேப்பிலை மட்டும்
விழுந்ததைப் பார்த்து, மல்லி? என கடைக்காரரிடம் கேட்டேன்.
கிலோ 200 ரூபாய்.
நாலு தழை பத்து ரூபாய் ஆகுது. அதான் போடலை என்றார். வேறுவழியில்லாமல் 10 ரூபாய் கொடுத்து
மல்லி வாங்கும் போது, 25 வருடம் மனம் பின்னால் சென்றது. அப்போது ஆட்டுக்கறியின் விலை
கிலோ 24 ரூபாய். 10 ரூபாய் கொண்டு சென்றால் கால்கிலோ கறி, ஒரு தேங்காய்,காய்கறிகள்
என பை நிறைய வாங்கிக்கொண்டு வந்து விடலாம். ,அவ்வளவு ஏன்? பத்தாண்டுகள் முன்னர் கூட
வெறும் 50 ரூபாய்க்கு பை நிறைய காய்கறி சென்னை வேளச்சேரியில் கிடைத்தது.
அதுக்கேத்தமாதிரி
தான் சம்பளம் கூடியிருக்கே? எனச் சொல்லலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மை. ஆனால்
தமிழ்நாட்டில் எப்படி குறைவாக மதிப்பிட்டாலும் ஒரு 30% சதவிகிதம் பேர், இந்த விலைவாசி
உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த சதவிகிதம் கூட
வாய்ப்பிருக்கிறது.
நான்கு பேர் கொண்ட
ஒரு குடும்பத்திற்கு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளுடன்
கத்தரிக்காய், வாழைக்காய், முட்டை கோஸ் போன்ற பெரும்பாலோனோருக்கு பிடிக்காத காய்கறிகளை
மட்டும் வாங்கினால் கூட மாதம் ஒன்றுக்கு ரூ 1000 முதல் 1200 வரை ஆகும். பட்டர்பீன்ஸ்,
சோயா பீன்ஸ், பச்சை பட்டாணி,காலிபிளவர் என வெரைட்டியாக வாங்கினால் 1500 வரை ஆகும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள்
என்றால் வாரம் ஒருமுறை குறைந்தபட்சமாக கால் கிலோ வாங்கினாலும், மாதம் 500 ரூபாய் வந்துவிடும்.
இதில் பழங்கள் வாங்கி சாப்பிட்டால் காய்கறி பட்ஜெட் 4000த்தை தொட்டு விடும். (கால்
கிலோ நாவல் பழம் – 50 ரூபாய், கால் கிலோ கொடுக்காப்புளி – 50 ரூபாய், வாழைப்பழம் ஒன்று
4 ரூபாய் விற்கிறது).
நாம் குறைந்த பட்சமாக
சுமாரான காய்கறிகளுடன் இருக்கும் முதல் ஆப்சனையே எடுத்துக் கொள்ளலாம். 1000 ரூபாய்
மாதம் ஒன்றிற்கு. இதன் பின்னர் மளிகை சாமான்கள் குறைந்தபட்சம் 1500 ரூபாய் ஆகும். பால்
ஒரு நாளைக்கு அரை லிட்டர் வாங்கினால் கூட 500 ரூபாய். ஒண்டுக்குடித்தன வீட்டு வாடகை,
மின் கட்டணம்,எரிபொருள், போக்குவரத்து, நல்லது கெட்டதுக்குப் போதல், பிள்ளைகளின் கல்விகட்டணம்
முக்கியமாக உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் அந்த செலவு என எப்படியும் மாதம்
10,000 வந்துவிடும்.
இந்த 10,000 என்பது
இருப்பதிலேயே மிகக் குறைந்த வாழ்க்கைத்தரம். அசைவம் உண்ணாமல், பழங்கள் ஏதும் சாப்பிடாமல்,
தியேட்டருக்குச் சென்று படம் பார்க்காமல், எதிர்காலத்திற்கான/ பிள்ளைகளின் கல்விக்கான/திருமணத்திற்கான
சேமிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே
இது சாத்தியம்.
சிறு/குறு தொழில்
செய்பவர்கள், வியாபாரிகள், அரசு பணியாளர்கள், மருத்துவம்/பொறியியல்/தணிக்கை போன்ற தொழிற்படிப்பு
முடித்து பணியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த விலையேற்றமானது பாதிக்காது. ஏனென்றால்
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இவர்களின் வருமானமும் கூடிவிடும்.
ஆனால் கலை-அறிவியல்
கல்லூரிளில்/பள்ளிப்படிப்பு படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர், தனியார்
பள்ளிகளில் வேலை பார்ப்போர், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சிறிய கடைகளில்/சர்வீஸ்
செண்டர்களில் பணிபுரிவோர்களுடைய சம்பளம் என்பது பெரும்பாலும் நான்கு இலக்கங்கள் தான்.
ஐந்தாம் இலக்கம் பல ஆண்டுகளுக்குப் பின்னரே சாத்தியமாகிறது.
இவர்களுக்கு திருமணமாகதவரை பிரச்சினை இல்லை. பெற்றோர்களிடம் ஒரு
தொகையைக் கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்து கொள்ளலாம். ஆனால் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால்
கஷ்ட ஜீவனம் தான். இதைச் சமாளிக்க தங்கள் வாழ்க்கைத்துணையையும் பணிக்கு அனுப்ப வேண்டிய
நிர்ப்பந்தம் உருவாகிறது. ஆனால் இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு
கிடைப்பதில்லை. அதிகமான ஆட்கள் இம்மாதிரி வேலைக்கு
கிடைப்பதால் சொற்ப சம்பளமே வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு இருக்கும்
இன்னொரு ஆப்சன் – மாலை வேளைகளில் வேறு தொழில் பார்ப்பது. ஆனால் இப்போதெல்லாம் பணியில்
இருந்து வீட்டிற்குத் திரும்பவே ஏழு மணி ஆகிவிடுகிறது. அதனால் இந்த வாய்ப்பும் பறிபோகிறது.
மின்கட்டணம், கல்வி
கட்டணம், பஸ் டிக்கட், வீட்டு வாடகை இதையெல்லாம் குறைக்க முடியாது என்ற நிலையில் இவர்கள் குறைத்துக்கொள்வது
உணவுப் பொருட்களில்தான். .
20கிலோ ரேசன் அரிசி
விலையில்லாமல், ஐந்து கிலோ பச்சரிசி கிலோ 2 ரூபாய் விலையில், உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு,
கோதுமை மற்றும் பாமாயில் போன்றவை ரேசன் கடைகளில் வாங்குவதின் மூலம் சிறிது தாக்குப்பிடிக்கிறார்கள்.
இந்தப் பொருட்களின்
தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களுடன் கலந்து
உபயோகிக்கிறார்கள். உதாரணத்திற்கு ரேசனில் கிடைக்கும் துவரம்பருப்பில் சாம்பார் செய்தால்
விழுவிழுவென சுவைகுன்றி இருக்கும். இதனுடன் வேறு துவரம்பருப்பு கொஞ்சம் சேர்த்து, தக்காளி
கூடுதலாகச் சேர்த்தால் பரவாயில்லாத சுவை கிடைக்கும்.
முகூர்த்த நாட்களில்
சாம்பாரில் போடும் காய்கறிகளின் விலையும் கூடுதலாகிவிடும். அந்நாட்களில் சுண்டவத்தல்,
மிதுக்க வத்தல், பாக்கெட் கருவாடு (5 ரூபாய்) போன்றவற்றைக் கொண்டு குழம்பு வைத்து சமாளித்துக்
கொள்கிறார்கள். இன்னும் சிலர், இரண்டாம் தரத்தில் இருக்கும் (நடைபாதையில் கூறுகட்டி
விற்கப்படும்) காய்கறிகளை மட்டும் வாங்குகிறார்கள். அசைவம் பெரும்பாலும் மாதம் ஒருமுறை.
அதுவும் பிராய்லர் கோழிதான்.
ரேசன் அரிசியில்,
உளுந்து மிகக்குறைவாகப் போட்டு தயாரிக்கப்பட்டு
தெருவில் விற்கப்படும் இட்லிமாவு இவர்களுக்கு ஆபத்பாந்தவன். ஒரு கப் 15 ரூபாய்க்கு
வாங்கி பசியாறிக் கொள்வார்கள். பழங்கள் என்றால் வாழைப்பழம் அதிகபட்சம் கொய்யாப்பழம்.
இம்மாதிரியான உணவுப்
பழக்கம் நாளடைவில் பலவகையான நோய்களை கொண்டுவரவல்லது.
பெற்றோர்களுக்குப் கூட பரவாயில்லை. குழந்தைகள் பாடுதான் பாவம். ஊட்டச்சத்து மிகக் குறைவாக
உள்ள உணவை தொடர்ந்து உண்டு பின்னாட்களில் எதிர்ப்பு சக்தியில்லாமல் நடமாடுவார்கள்.
ஆனால் 25 வருடம்
முன்னால் இப்படியில்லை. தனியாரில் சின்ன வேலை பார்த்தவர்கள் கூட ஆரோக்கியமாக சாப்பிடும்படியே
விலைவாசி இருந்தது. சாதாரண தொழிலாளிகூட ஞாயிறு தோறும் ஆட்டுக்கறி வாங்கி குடும்பத்தோடு
சாப்பிட்டு முக்கியமாக பழங்கள் ஏராளமாக சாப்பிடும் வகையில் சூழல் இருந்தது.
ஆனால் இன்று? தொழில்
அதிபர்கள். அரசு ஊழியர்கள், தொழிற்படிப்பு படித்து பணியில் உள்ளோர் மட்டுமே ஆரோக்கியமான
ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடும் நிலை உள்ளது. ஆடம்பரமான அல்ல ஒரளவு ஆரோக்கியமான சாப்பாடு
சாப்பிடவேண்டுமானால் மேற்கூறிய ஒன்றாக நீ மாறவேண்டும் என்ற நிலையில் தமிழகம் உள்ளது.
விலைவாசி உயர்வுக்கு
அரசின் தவறான கொள்கைகள், மழையின்மை, வியாபார முறைகள் மாறியது என பல காரணம் சொல்லலாம்.
ஆனால் விவசாயி நிச்சயம் காரணமல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரும் அதிகம் பாதிக்கப்பட்டே
இருக்கிறார். காய்கறிகளை விளைவித்து, ஆள் வைத்து அறுவடை செய்து, பேருந்தில் லக்கேஜ்
கொடுத்து, கமிசன் கடை வரை தலையில் வைத்து/ வண்டியில் கொண்டு வந்து கொடுத்து, ஏஜெண்ட் கமிசன் போக அவருக்கு
கிடைக்கும் பணம் அவரின் மனித உழைப்புக்கான கூலியை விட குறைவாகவே இருக்கிறது. அவரும்
கூட வெயிலுக்கு இளனி வாங்கி சாப்பிடமுடியாமல் டீ குடிக்கத்தான் முடிகிறது.
இனி தமிழகம் சாதாரண
வேலையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த மாநிலமாக இருக்கப் போவதில்லை. அப்படி இருந்தால் தொழில் திறமை உடையவர்கள், புத்திசாலிகள்,
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரளவு சமாளிக்கலாம். இல்லையென்றால்
முட்டை மட்டும் தான் அசைவம், வாழைப்பழம்மட்டும் தான் பழம், பிஸ்தா,முந்தரி பருப்பெல்லாம்
நவரத்தினக் கற்கள், வத்தக்குழம்புதான் கறிக்குழம்பு என்று பழகிக்கொள்ள வேண்டியதுதான்.
13 comments:
பகீர்னு இருக்குதுண்ணே! இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோவரப்போகுதோ.
உணவினை மட்டும் பார்க்கும்போதே பீதியை கெள்ப்பது :( இன்னும் உடை மற்றும் உறைவிடம் பத்தி யோசிக்க ஆரம்பித்தால்...:( :(
முத்தலிப், நாம்தான் முன்னேற்பாடுகளுடன் இருந்து கொள்ளவேண்டும்.
ஆயில்யன், சராசரியில் இருந்து ஒரு ஸ்டெப் உயரவேண்டுமென்றாலும் அதிக செலவாகிறது இப்போது :-((
உணவகங்கள்ள குவாண்டிட்டியை பொறுத்தவரை வேறெந்த ஸ்டேட்க்காரனும் இந்த அநியாயம் செய்யுறதில்ல. ஆந்திரா, கர்நாடகாக்காரன் அள்ளியள்ளி தேங்கா சட்னி,சாம்பாருன்னு தமிழகத்தை விட குறைந்தவிலைல டபுள் த சைஸ் இட்லி,வடைன்னு தர்றப்ப இங்க மட்டும் ஏன் முடியறதில்ல?
ஸ்ரீ, நான் ஆந்திரா,கர்நாடகா,கேரளா மாநிலங்களுக்கு சேர்த்து மொத்தமே நாலஞ்சு தடவ தான் போயிருக்கேன். அப்பவும் கல்லூரி/கம்பெனி கேண்டின்லதான் சாப்பிட்டிருக்கேன். அதனால இதப் பத்தி சரியா சொல்ல எனக்குத் தெரியல. கம்பேரிசனும் பண்ண முடியலை. இந்த மாநிலங்களுக்கு அடிக்கடி போய் வர்றவங்க அனலைஸ் பண்ணி சொன்னாத்தான் சரியா இருக்கும். ஆனா தமிழக உணவகங்கள் அன்றும் இன்றும்னு ஒரு பதிவு எழுதுற அளவு மேட்டர் இருக்கு.
எதிர்காலம், எல்லாருக்குமே எதிரி காலம் போலத்தான் தெரியுது :(((
Excellent anakysis. reality is shocking
நன்றி ஓ ஆர் பி ராஜா
நன்றி சேது
இது குறித்து எழுத நினைத்து, ஏனோ விட்டு விட்டேன்! உங்களுடையது மிக நல்ல அலசல். நன்றி இவ்விடுகைக்கு.
இவ்வளவு கேடு கெட்டுப் போனது, கடந்த 10 ஆண்டுகளில் தான்! தமிழ்நாடு என்றல்ல, இந்தியாவே சாதாரண சம்பளக்காரர்களுக்கும், முக்கியமாக, உணவின் மூலகாரணமான விவசாயிகளுக்கும், நரகமாகி விட்டது. நல்ல சாப்பாடுக்கே இந்த நிலைமை எனும்போது, குழந்தைகளுக்கு நல்ல கல்வி (அதன் மூலம் ஏற்றம்), சொந்தமாக ஒரு மிகச்சிறிய வீடு, சைக்கிளைத் தாண்டி ஒரு இருசக்கர வண்டி .....என்பவை எல்லாம் எட்டா விஷயங்கள் தான் லோயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும், அதற்குக் கீழ் இருக்கும் அத்தனை ஏழை எளியோருக்கும்!
நன்றி பாலா
உண்மை ரொம்பவே சுடுது:(
தமிழ்நாட்டில் அதுவும் சிங்காரச் சென்னையில்தான் இப்படி அதிகவிலை.
மற்ற ஊர்களில் ஓரளவு பரவாயில்லை. வீட்டு வாடகையைப் பற்றிச் சொல்லவே வேணாம். சம்பளத்தில் முக்கால்வாசி கொடுத்தால்தான் ஓரளவு தரமான வீடு கிடைக்குது.
ஊட்டசத்துக்காக கம்பு, சோளம் கேழ்வரகு பயன் படுத்தலாம். ஆனால் இவற்றின் விளையும் இப்போது ஏறி விட்டது. நெல்லிக்கனி, கொய்யா போன்றவை மட்டுமே Affordable price ல் இருக்கும் சத்து மிக்க சில கனிகள். சென்னையை விட்டு சற்று விலகி சென்றால் நுங்கு, பனங் கிழங்கு போன்றவை குறைந்த விலையில் கிடைக்கும் சத்து மிக்க உணவு பொருட்கள். (நிலக்கடலை - கடந்த 5 வருடங்களில் இதன் விலையேற்றம் மிக அதிகம்.)
Post a Comment