September 29, 2008

1992 ஆம் ஆண்டின் அமர்க்கள படங்கள்

1992 ஆம் ஆண்டின் படங்கள், தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரின் அந்தஸ்தை உயர்த்தியவையாகும். அவை பற்றிய ஒரு பார்வை.

சின்னகவுண்டர்

விஜயகாந்த் அதுவரையில் பெரும்பாலான படங்களில் ஆக்சன் ஹீரோவாகவே நடித்து வந்தார். சில படங்களிலேயெ கிராமிய வேடங்களையும்,வித்தியாச வேடங்களையும் ஏற்றார். ஒரு பொறுப்புள்ள, நீதி தவறாத தலைவர் வேடத்தில் அவர் நடித்தது மிக மிக குறைவே. மக்களின் மனதில், இவர் நல்ல தலைவராகவும் இருப்பார் என்ற இமேஜை முதன் முதலில் விதைத்த படம் என்றுகூட இப்படத்தை சொல்லலாம். நாடோடி மன்னன்,ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் இவர் ஆளக்கூடியவர் என்ற இமேஜ் எம்ஜியாருக்கு மக்கள் மனதில் படிந்ததைப்போல. இது விஜயகாந்துக்கு இமேஜ் மேக் ஓவர் படம். இதற்கடுத்து ரமணா வை சொல்லலாம். ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம். சுகன்யா கதாநாயகி. நகைச்சுவைக்கு கவுண்டமணி செந்தில். முத்து மணி மாலை,அந்த வானத்தை போல, கண்னுபட போகுதய்யா போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த .பம்பர விற்பனையை அதிகரித்த படம்

மன்னன்

ரஜினிகாந்த்,விஜயசாந்தி,குஷ்பூ, கவுண்டமணி நடிக்க இளையராஜா இசையில் பி வாசு இயக்கிய படம். சிவாஜி நடித்த ஒரு படத்தையே, சிவாஜி புரடக்சனுக்கு உல்டா பண்ணித்தர வாசுவால்தான் முடியும். இந்த படம் பின்னர் சிரஞ்சீவி,நக்மா நடிக்க தெலுங்கில் ரீமேக் ஆனது. காதலன், பாட்சா வெற்றிக்கு பின் இங்கு நக்மா அலை வீசிய போது இங்கே டப் ஆகி வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்தது. நல்ல வசூல் செய்த படம். ரஜினி சொந்தக்குரலில் அடிக்குது குளிரு என்ற பாடலை பாடிய படம். அம்மா என்றழைக்காத,சண்டி ராணியே, கும்தலக்கடி, என் ராஜாவின் போன்ற பாடல்கள். பெண்களுக்கு எதிரான வசனங்கள் நிறைந்த படம். அம்மாவை வாழ்த்தியும், காதலி/மனைவியை மட்டமாக பேசுவதாலோ என்னமோ, தன் மகன்கள் ரஜினி ரசிகன் ஆவதை பல பெண்கள் விரும்புகிறார்களோ என தோன்றுகிறது. ரஜினி/ஜெயலலிதா பிரச்சினையின் போது கூட சண்டிராணியே என்ற பாடல் அமர்க்களப்பட்டது. ஆனால் பார்க்க சலிப்பு வராத படம். இப்படத்தை மதுரை சோலமலை தியேட்டரில் ஒரு பெண் 100 நாட்கள் தொடர்ந்து பார்த்து பரிசு பெற்றார். குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கிறாங்க என்ற கவுண்டரின் பன்ஞ் புகழ் பெற்றது.

ரோஜா

உலகத்திற்கு ரஹ்மானை அறிமுகம் செய்த படம். மணிரத்னத்தை இந்திய அளவுக்கு உயர்த்திய படம். சாந்தாராம் விருது தயாரிப்பாளர் பாலசந்தருக்கு கிடைக்க காரணமாய் இருந்த படம். அரவிந்த்சாமி கதானாயகனாய் நடித்த முதல் படம். இளையராஜாவிடம் இருந்து பிரிந்து மற்ற இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த வைரமுத்து பாடல் வரிகளில் அசத்திய படம். சின்ன சின்ன ஆசை,காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை போன்ற மறக்க கூடாத பாடல்கள் நிறைந்த படம். வசனம் - சுஜாதா

சூரியன்

வில்லன் வேடங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் ஹீரோ ஆகிய படம். தேவாவின் முதல் பெரிய பட்ஜெட் படம். குஞ்சுமோனை பெரிய தயாரிப்பளார் ஆக்கிய படம். பவித்ரன் இயக்கத்தில் ரோஜா நாயகியாய் நடிக்க நகைச்சுவைக்கு கவுண்டமணி. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, ஆ இங்க பூசு என்ற கவுண்டரின் அதிரடி நகைச்சுவை வெற்றியை அதிகப்படுத்தியது. லாலாக்கு டோல் டப்பிமா மூலம் பிரபுதேவாவுக்கும் நல்ல புகழ் கிடைத்தது. ஷங்கர் இப்பட உதவி இயக்குனர். இப்படத்தின் வெற்றிக்குப்பின் குஞ்சுமோன் - பவித்ரன் - சரத் ஐ லவ் இந்தியா என்னும் படத்தை துவங்கினர். இடையில் சில மனஸ்தாபங்களால் கூட்டணி உடைய, சரத் டைரக்டர் ஆதரவு நிலை எடுத்து, ஜி கே ரெட்டி (விஷால் தந்தை) தயாரிப்பில் அப்படத்தை தொடர்ந்தனர். குஞ்சுமோன் ஷங்கரை வைத்து ஜெண்டில்மேன் தொடங்கினார். பதினெட்டு வயது, நீலகிரி, லாலாக்கு போன்ற ஹிட் பாடல்கள் நிறைந்தது.

தேவர் மகன்

சிவாஜி,கமல்,ரேவதி,நாசர், கௌதமி,வடிவேல் நடித்த பல தேசிய,மாநில விருதுகளை அள்ளிய ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட படம். வடிவேலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம். பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையில், பி சி ஸ்ரீராமின் இயக்கத்தில், கமலின் திரைக்கதை வசனத்தில் வந்த அசத்தல் படம். போற்றிப் பாடடி பெண்ணே, இஞ்சி இடுப்பழகி, சாந்துப் பொட்டு போன்ற பாடல்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன


அண்ணாமலை

முரட்டுகாளைக்குப் பின் ரஜினிக்கு திரையுலக வாழ்வில் பெரும் திருப்புமுனையை கொடுத்த படம். சுரேஷ்கிருஷ்னா இயக்கத்தில், தேவாவின் இசையில் சண்முக சுந்தரம் வசனத்தில் ஓடு ஓடு என்று ஓடிய படம். இன்றும் முக்கிய நாட்களுக்கு தங்கள் துருப்புசீட்டாக தொலைக்காட்சிகள் வைத்துள்ள படம். இப்படத்திற்க்குப் பின்னர் ரஜினியின் புகழ் சமகால நடிகர்கள் எட்ட முடியாத இடத்துக்கு சென்றது எனலாம். இதன்பின்னர் ரஜினியும் படங்களை குறைத்துக் கொண்டார். அவரது பட வெளியீடு திருவிழாவானது. அரசியல் பொடி வைத்து பேசும் வசனம் அதற்க்கு முன் சில படங்களில் இருந்தாலும் இப்படத்திற்குப்பின் அது முக்கியத்துவம் பெற்றது. இப்படம் வெளிவரும் முன்னர் எற்பட்ட ரஜினி/ஜெயலலிதா மோதலால் இப்பட வசனங்கள் முக்கியத்துவம் பெற்றன. அண்ணமலை அண்னாமலை, வந்தேண்டா பால்காரன், கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண்புறா போன்ற அசத்தல் பாடல்களை தேவா அமைத்திருந்தார். குஷ்பூ, ஜனகராஜ்,மனோரமா, சரத்பாபு நடித்தது. பாலசந்தர் தயாரிப்பு.

இவைதவிர ரஜினியின் பாண்டியன், கமலின் சிங்காரவேலன், கார்த்த்க்கின் அமரன், பி சி ஸ்ரீராம் இயக்கிய முதல் படம் மீரா, பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ரோஜா அறிமுகமான செம்பருத்தி ஆகியவை வெளிவந்தன.
பாக்யராஜின் ராசுக்குட்டி, சுந்தராஜன்,சத்யராஜ் இணைந்த திருமதி பழனிசாமி ஆகிய படங்களும் வந்தன.

பின்னாட்களில் பெரும் கமர்ஷியல் நாயகனாக உருவெடுத்த விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பும் இந்த ஆண்டுதான் வெளிவந்தது.

இந்த ஆண்டின் பல படங்களின் பாடல்கள் அருமையானவை. அப்போது சிடி பிளேயர் இங்கு புழக்கத்தில் இல்லாத காலகட்டம். கேசட் ரிக்கார்டிங் கடைக்காரர்கள் காட்டில் கடைசியாக அடைமழை பொழிந்த ஆண்டு என இதை சொல்லலாம்



இந்த ஆண்டில் பல தேசிய விருதுகளும் தமிழ்படங்களுக்கு கிடைத்தன.

இசை அமைப்பு - ரஹ்மான், பாடல் - வைரமுத்து - ரோஜா படத்திற்க்காக
சிறந்த பாடகி - ஜானகி, ஆடியோகிராபி- பாண்டுரங்கன், சிறந்த துணை - நடிகை - ரேவதி, சிறந்த மாநில மொழி திரைப்படம் , தேர்வாளர்களின் சிறப்பு விருது - சிவாஜி என ஐந்து விருதுகளை தேவர்மகன் தட்டி வந்தது.
1993 ஆம் ஆண்டின் படங்கள் பற்றிய அசத்தலான பார்வைக்கு இங்கே செல்லுங்கள். டாக்டர் புருனோ அசத்தியுள்ளார்.

அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு

அன்புடையீர்

வரும் அக்டோபர் திங்கள் நான்காம் நாள் மாலை ஆறு மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் பதிவர் சந்திப்பு நடத்த உத்தேசித்துள்ளோம். வழக்கமாக பதிவர் சந்திப்புக்கு வருபவர்களையும், இதுவரை கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பழைய/புதிய பதிவர்களையும் வந்து சிறப்பிக்குமாறு இருகரம் கூப்பி அழைக்கிறோம்.

சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பொட்டிக்கடையார் கலந்து கொள்கிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டு பதிவுலகில் நுழைந்து, 2006- 2007 ஆம் ஆண்டுகளில் மிக துடிப்புடன் விளங்கினார். அரசியல், சமுதாய பிரச்சினைகளை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரபல கும்மி பதிவராகவும் திகழ்ந்தவர். எதிர் கவிதைகள் இவரது சிறப்பு. சில்வியா குண்டலகேசிக்கு எதிர்வினையாக கேத்தரின் பழனியம்மாளை ஆதரித்தவர். இவர் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரரும் ஆவார். ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் ஆடும் உள்ளூர் அணியில் இடம்பெற்றவர்.

சந்திப்புக்கு பாலபாரதி,லக்கிலுக்,நர்சிம்,அதிஷா ஆகியோர் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

மீண்டும் ஒருமுறை அனைவரையும் சந்திப்புக்கு சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறேன்

1991 ன் அசத்தல் படங்கள்

1991 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவின் முக்கிய படங்கள் வெளியாகின. இந்த படங்களின் மூலம் சிலர் வெளிச்சத்திற்கு வந்தனர். சிலருக்கு தங்கள் திரைவாழ்க்கையின் உச்சமாகவும் இப்படங்கள் அமைந்தன. அனைத்திற்கும் இசை இளையராஜா.

என் ராசாவின் மனசிலே (எலும்பு கடி)

தமிழ் சினிமாவின் முதல் கோடி ரூபாய் கதாநாயகன் அறிமுகமானது இந்த படத்தில்தான். குழந்தை நடசத்திரமாக இருந்த மீனா கதாநாயகியாக தமிழில் நடித்த முதல் படம். வடிவேலுவுக்கும் இதையே முதல்படம் எனலாம். இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கும் முதல்படம். அதுவரை விநியோகஸ்தரராகவும், சில ராமராஜன் படங்களை தன் ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்தவரான ராஜ்கிரண் தன் முறைப்பெண் மீது அளவு கடந்த பாசம் கொண்ட முரடனாக இப்படத்தில் அறிமுகமானார். முதலில் ராமராஜனையே இப்படத்திற்கு கேட்டனர். அவர் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என மறுத்ததால் ராஜ்கிரணே நடித்தார். அடுத்து இவர் நடித்து இயக்கிய அரண்மனைகிளியும் வெற்றிபெறவும் தன் மூன்றாவது படத்துக்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். சோலப்பசுங்கிளியே, பெண்மனசு ஆழமுன்னு, போடா போடா புண்ணாக்கு, பாரிஜாத பூவே போன்ற சூப்பர்ஹிட் பாடல்கள் வெற்றிக்கு துணைநின்றன. கவுண்டமணி செந்தில் காமெடியும் உண்டு.

கேப்டன் பிரபாகரன் (வீரப்பாயனம்)

விஐயகாந்த்துக்கு கேப்டன் என்னும் அடைமொழியை தந்த அவரது 100 வது படம். புலன்விசாரனை மூலம் தன் மார்க்கட்டை உயர்த்திய செல்வமணிக்கு இயக்கும் வாய்ப்பை வழங்கினார். மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். சரத்,ரம்யாவும் உண்டு. ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரு என்ற இரண்டு பாடல்கள் மட்டும். சமீபத்திய லயோலா கருத்துகணிப்பில் விஜயகாந்த்தின் சிறந்தபடமாக மக்கள் இதை தேர்வு செய்திருந்தனர்.

சின்னதம்பி (தாலி எதுக்கு?)

ஏன் ஓடியது எதற்கு ஒடியது என எல்லோரும் குழம்பிய படம். 60 ஆண்டு வசூல் சாதனையை உடைத்த படம். பிரபுவின் படங்களில் பெருவெற்றிப் படம். குஷ்புவுக்கும் அப்படியே. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரை தமிழில் நிலைநிறுத்திய படம். லயோலா கருத்துகணிப்பில் குஷ்புவின் சிறந்தபடமாக மக்கள் இதை தேர்வு செய்திருந்தனர். இந்த படத்திற்கு பின்னர் கைம்பெண் வேடம் மனோரமாவின் சொத்தாயிற்று. அவரை புக் செய்யப்போகும் போது ஒரு டஜன் வெள்ளைசேலையுடன் எல்லோரும் போகத்தொடங்கினர். கவுண்டமனி இதில் மாலைக்கண் நோய் கொண்டவராக தனியாவர்த்தனம். இளையராஜா இப்படத்தின் பாடல்களை அரை மணிநேரத்தில் போட்டுக்கொடுத்ததாக கூறுவார்கள். இயக்கம் பி வாசு.

இதயம் (ஒரு தலை ராகம்)

சின்னதம்பியின் அர்த்தமற்ற காதலையே ஆதரித்த மக்கள் ஆத்மார்த்த காதலை விடுவார்களா?. ஹீரா அறிமுகமான படம். இயக்குநர் கதிர், முரளி ஆகியோருக்கு திருப்புமுனையாய் அமைந்த படம்.

தளபதி (மார்டன் மஹாபாரதம்)

சாட்டிலைட் தொலைக்காட்சி, இணையம் இல்லாமலேயே சிவாஜி பட அளவுக்கு ஹைப் கிளம்பிய படம். பட வெளியீட்டுக்கு முன்னர் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. கேசட் ரெக்கார்டிங் சென்டர்களில் இப்பாடல்களை தொடர்ந்து பதிந்து கொண்டே இருந்தார்கள். கமல் ரசிகர்களான நாங்களே குணாவுக்கு போகாமல் இப்படத்தின் முதற்காட்சிக்கு சென்றோம். கர்ணன் ரஜினி, துரியோதனன் மம்முட்டி. அர்ஜீனாக கார்த்திக்கை கேட்டனர். அவர் 15 லட்சம் சம்பளம் கேட்டதால் அர்விந்த்சாமி கலெக்டராக அறிமுகமாகி பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தார். ராக்கம்மா கையை தட்டு, காட்டுக்குயிலு மனசுக்குள்ள, யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சின்னத்தாயவள் போன்ற பாடல்களை மணிரத்னத்துக்கு போட்டுக்கொடுத்து அவரிடம் இருந்து விடைபெற்றார் இளையராஜா.

குணா (அபிராமி அபிராமி)

இரவு முழுவதும் வெடி, காலை தளபதி, மதியம் வான்கோழி பிரியாணியை முடித்துவிட்டு தலைவர் படத்துக்கு 4 மணி ஷோ. அரைமணி நேரத்திலேயே தூங்கிவிட்டோம். படம் முடிந்து இரவு, தெருவில் ரஜினி ரசிகர்கள் கையில் லட்டை வைத்துக்கொண்டு அபிராமி அபிராமி என ஓட்ட கமலை வைது கொண்டே தூங்கினோம். இரண்டு மூன்று நாட்களுக்கு தெருவில் காலையே வைக்கவில்லை.

இப்போது எங்காவது,

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் சேர்ந்து இங்கு குப்பையாக கொட்டி வச்ச உடம்பு

பந்தபாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்குப்போகும்?

போன்ற வரிகளை கேட்கும் போதோ, நண்பர்களுடனான பேச்சில், தொலைக்காட்சியில் இப்படத்தின் ஞாபகத்தெரிப்புகள் வரும் போது மனது சொல்கிறது, கௌரவமான தோல்விதான் என்று.

இதுதவிர பிரம்மா(சத்யராஜ்) ,தாலாட்டு கேட்குதம்மா (பிரபு, இயக்குநர் ராஜ்கபூர் அறிமுகம்), கோபுர வாசல் (பிரியதர்ஷன் இயக்கம், கார்த்திக்) மாநகரகாவல் (விஜயகாந்த்) போன்ற படங்களும் வந்தன.

இளையராஜா,அடுத்த ஆண்டு ரஹ்மான் வரப்போகிறார் என்று ஒரு காட்டு காட்டியதாகவே தோன்றுகிறது

September 28, 2008

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் - 1

தமிழ்சினிமாவில் காதல் இல்லாத படங்கள் குறைவு. காதல் மட்டுமே கொண்ட படங்கள் நிறைய உள்ளன. அதில் முக்கிய படங்களைப் பற்றிய ஒரு பார்வை



கிளிஞ்சல்கள் (1981)

காதலன் இந்து, கட்டுப்பாடான தந்தை. காதலி கிறிஸ்டியன். தந்தை சோஷியல் ஆனால் மதத்தை விட்டுக் கொடுக்காதவர். முடிவில் காதல் நிறைவேறாமல் இறக்கிறார்கள் காதலர்கள். இந்த படமும் அதிக சினிமாத்தனம் இல்லாமல், சிறுநகர பிண்ணனியில் எடுக்கப்பட்ட படம். இயக்கம் துரை. பாடல் இசை டி ஆர். மோகன், பூர்னிமா ஜெயராம், திலீப் நடித்தது.

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
சின்ன சின்ன கண்ணா
கிளையில்லா மரங்களில்
போன்ற பாடல்கள் ஹிட்.


விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பாடல் அரசு தொலைக்காட்சி மட்டும் இருந்த போது சித்ரமாலா வில் அடுக்கடி ஒளிபரப்ப பட்டது. சின்ன சின்ன கண்ணா பாடலில் காதலனை கவர்வதற்காக பெண்கள் பக்கத்து வீட்டு சிறுவனை கொஞ்சுவதை காடசிப்படுத்தியிருப்பார்கள்.

வாழ்வே மாயம் (1982)

பல முயற்சிகளுக்குப்பின் காதலில் வெற்றி பெறுகிறான் காதலன். ஆனால் தனக்கு கேன்சர் என அறிந்ததும் மற்றொரு பெண்ணிடம் சேர்வது போல நடித்து காதலியின் நல்வாழ்க்கைக்கு உதவுகிறான்

பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கங்கைஅமரன் இசையில் வெளிவந்த படம். கமல்ஹாசன்,ஸ்ரீதேவி,ஸ்ரீப்ரியா, அம்பிகா, ஜெய்சங்கர், மனோரமா,பிரதாப் நடித்தது.

தேவி ஸ்ரீதேவி
மழைக்கால மேகம் ஒன்று
ஏ ராசாவே
மழைக்கால மேகம் ஒன்று
நீலவான ஒடையில்
வந்தனம் என் வந்தனம்
வாழ்வே மாயம்

போன்ற பாடல்கள். ஸ்ரீதேவியை கவர்வதற்காக கமல் படும் பாடுகள், கமல் ஸ்ரீதேவி நடனம் என இளமை துள்ளலாக செல்லும் படம் பின் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இதயம் (1991)

மருத்துவ கல்லூரி பின்புலத்தில் எடுக்கப்பட்ட காதல் கதை. தொடாத காதல் சிறப்பு. கிராமத்தில் இருந்து வரும் மாணவன் நகர பெண்ணை காதலிக்கிறான். தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒருவழியாக காதலி அதை அறிந்து கொள்ளும் நேரத்தில் இதயநோய் வாய்ப்படுகிறான் காதலன்.

கதிர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வந்த படம். முரளி,ஹீரா,சின்னி ஜெயந்த் நடித்த படம். முதல் ஒருவாரம் சுமாராக ஓடி வாய்மொழி தகவலால் பிக்கப் ஆகி பெருவெற்றி அடைந்த படம். தாழ்வு மனப்பான்மையால் காதலை சொல்லாத ஒருவனை நன்கு காட்சிப்படுத்தியிருப்பார் கதிர். முரளியும் உணர்ந்து நடித்திருப்பார். 90 களில் அப்படிப்பட்டோர் பலர் இருந்தனர். இப்பொது அப்படியிருக்கிறார்களா என தெரிய வில்லை. அந்த கூட்டத்தை பிரதிபலித்தது பட வெற்றிக்கு காரணமாயிற்று.

ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை
ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
இதயமே இதயமே
பூங்கொடிதான் பூத்ததம்மா

போன்ற கலக்கலான பாடல்கள் நிறைந்த படம்.

கமலிடமிருந்து மோகனுக்கு வந்து பின்னர் யாரிடம் அடைக்கலம் புகலாம் என விழித்துக்கொண்டிருந்த திருவாளர் மைக்கார் இப்படத்துக்குப்பின் முரளியிடம் தங்கிவிட்டார். இப்படம் வந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு கல்லூரி சோலா சிங்கர் போட்டியில் பலரும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ வையே பாடினார்கள். குரூப் டான்சுக்கு ‘ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை’. என்னைக்கூட என் சீனியர்கள் ராக்கிங்கின் போது பாடச்சொல்ல ‘பொட்டு வைத்த’ என ஆரம்பித்து பாடினேன். தர்மஅடி விழுந்தது. ஏண்டா எப்பிடி பீல் பண்ணி கேப்போம் இந்த பாட்டை, கெடுத்திட்டேயேடா என்று துவைத்து விட்டார்கள்.


ஏப்ரல் மேயிலே பசுமையே யில்லை பாடல் பிரபு தேவாவுக்கும், ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் பாடல் ராஜீசுந்தரத்துக்கும் நல்ல ரீச்சை கொடுத்தது.

தொடரும்

September 27, 2008

ஏவிஎம் தமிழ்சினிமாவின் வரமா? சாபமா?

60 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் குப்பை கொட்டிவரும் நிறுவனம் ஏவிஎம். 1947 ல் ஏ வி மெய்யப்பன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின் அவரது புதல்வர்களால் நடத்தப்பட்டு வருகிறது. சகோதரர்களில் முதலில் முருகன், பின்னர் குமரன், தற்போது பாலசுப்பிரமணியன் பிரிந்து விட்டனர். சரவணன் மற்றும் அவர் புதல்வர் குகன் மட்டும் முன்னர் சிவாஜி படத்தையும் தற்போது அயன் படத்தையும் தயாரிக்கிறார்கள். பாலசுப்பிரமணியன் விஐய் நடிக்க வேட்டைக்காரன் என்னும் படத்தை தயாரிக்கப்போகிறார். முருகன்,குமரன் சின்னத்திரையில் புகுந்து விட்டனர். ஏவிஎம் வரலாற்றை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்

1947-1979 – ஒரளவு நல்ல படங்கள்
1982-1994 - நத்திங் பட் மசாலா
1994-2001 - சின்னத்திரை காலம்
2002 - ? - மீண்டும் மசாலா

ஒரளவு நல்ல படங்கள்

நாம் இருவர்,அந்தநாள்,வாழ்க்கை,களத்தூர் கண்ணம்மா, அன்பே வா போன்ற ஒரளவு நல்ல படங்கள் இந்தக்காலத்தில் எடுக்கப்பட்டன. இந்தி,தெலுங்கு படங்களும் எடுத்தார்கள்.

நத்திங் பட் மசாலா

ஏவிஎம் மறைந்தபின் இரண்டு ஆண்டுகள் புது படமெடுக்காது இருந்தனர். பின்னர் வணிக மசாலாவை அரைத்து தங்கள் கணக்கைத் தொடங்கினர். தலைமை சமையல்காரராக எஸ் பி முத்துராமன் பணியமர்த்தப்ட்டார். இக்காலத்தில் மசாலா நன்றாக அரைக்கத்தெரிந்தவராவோ, சகாய விலையில் அரைப்பவராவோ யாராவது தென்பட்டால் அவர்களையும் அமுக்கினார்கள்.

இந்தக் காலத்தில் ரஜினியை வைத்து முரட்டுக்காளை, பாயும்புலி, போக்கிரிராஜா, மிஸ்டர் பாரத், மனிதன், ராஜா சின்ன ரோஜா, எஜமான் போன்ற படங்களையும், கமலை வைத்து சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களையும் தந்தார்கள்.

விஐய்காந்த்தை வைத்து சிவப்பு மல்லி,வெள்ளைப்புறா ஒன்று,மாநகர காவல், சேதுபதி ஐ பி எஸ். மற்றும் அர்ஜீனை வைத்து சங்கர் குரு, தாய்மேல் ஆணை, சொந்தக்காரன் போன்ற படங்களையும் தந்தனர்.

பாக்யராஜை வைத்து முந்தானை முடிச்சு, விசுவை வைத்து சம்சாரம் அது மின்சாரம், ராமநாராயணன் மூலம் சிவப்புமல்லி, சுந்தர் ராஜன் மூலம் மெல்லத் திறந்த்து கதவு. பாரதி ராஜா – புதுமைப்பெண். பின்னர் பிரபு-சூரக்கோட்டை சிங்க குட்டி, மோகன் – வசந்தி, ராம்கியுடன் ஒருபடம் என கலந்து கட்டி அடித்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் எல்லோருமே ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் போது புக் செய்யப்பட்டவர்கள். வெற்றி பெற்றவுடன் அமுக்கப்பட்டவர்கள். பட தயாரிப்பு வியாபாரம் இதில் என்ன தவறு? என்கிறீர்களா.

இவர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நேரத்தில்தான், இன்றுவரை தரமான படங்கள் என்று சொல்லப்படும் 16 வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே,மூன்றாம் பிறை போன்ற படங்கள் வந்து தமிழ்சினிமா புதுப்பொலிவுடன் இருந்தது. இவர்கள் முரட்டுக்காளை,சகலகலா வல்லவன் என்று எடுத்து போக்கையே மாற்றிவிட்டார்கள். தொடர்ந்தும் அதைச்செய்தார்கள். தரமான இயக்குநர்களை வைத்து இவர்களும் நல்ல படம் தந்திருந்தால் தமிழ்சினிமா இன்னும் முன்னேறியிருக்கும்.

சின்னத்திரை காலம்

1990 க்குப்பின் இவர்கள் படங்கள் சறுக்கத்தொடங்கின. திருட்டு வீடியோ\விசிடி பிரச்சினை வேறு. 94 க்குப்பின் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி நிம்மதியாக, உங்கள் சாய்ஸ் என்று இருந்தனர். அங்கும் இவர்கள் செட் பிராப்பர்டிக்களை விடவில்லை. வீட்டு வேலைக்காரர் யூனிபார்ம் உட்பட பழையவற்றை உபயோகப் படுத்தினர். 1997 பொன்விழாவுக்காக ராஜீவ்மேனன் இயக்கத்தில் மின்சார கனவு படத்தை மட்டும் இக்காலத்தில் எடுத்தனர். ஏ ஆர் ரஹ்மான்,அரவிந்த்சாமி,பிரபுதேவா,கஜோல் என அவர்கள் கொள்கைப்படி பீக்கில் இருந்தவர்களையே பயன்படுத்தினர். எனினும் படம் தோல்வி. இந்தக்காலத்தில் சன்டிவி இவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தது. அவர்களின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இவர்கள் அரங்கில் படமாக்கப்பட்டன. இவர்களின் படங்கள் அனைத்தையும் வாங்கியது.


மீண்டும் மசாலா

கையில் புது படமிருந்தால் தான் சேனலில் மதிப்பு இருக்கும் என்பதற்காக மீண்டும் பட தயாரிப்பில் இறங்கினார்கள். பார்த்தேன் ரசித்தேன் வெற்றியில் இருந்த சரண், தில் விக்ரம் உடன் இனைந்து ஜெமினியை துவக்கினர். படம் வெற்றி. பின்னர் சின்னத்திரை நடிகர்களை வைத்து அன்பே அன்பே என்னும் உப்புமா, விக்ரமன் – பிரியமான தோழி, சூர்யா – பேரழகன், அஜீத், பேரரசு – திருப்பதி, ஷங்கர், ரஜினி – சிவாஜி என வெற்றி பெற்றவர்களை வைத்து கலந்து கட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இனியாவது

வாய்ப்புத்தேடும் திறமைசாலிகளை அரவணைப்பார்களா?

இயக்குநரான ஒளிப்பதிவாளர்கள்

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது ஒரு நீட்சியாகவே கருதப்
படுகிறது. பாலுமகேந்திரா, அசோக்குமார், என் கே விஸ்வநாதன், கர்ணன் போன்றோர் சென்ற தலைமுறையில் இயக்குநரானார்கள். இந்த தலைமுறையில் பல சாதனை புரிந்த ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராக மாறியிருக்கிறார்கள்.

பி சி ஸ்ரீராம்

இப்போது இங்கும்,இந்தியிலும் வலம் வரும் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இவரின் வாரிசுகளே. மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தேவர்மகன் போன்ற மறக்க முடியாத படங்களை ஒளிப்பதிவு செய்தவர். ஆனால் இயக்கத்தில்?

மீரா
விக்ரம், ஐஸ்வர்யா இணை, இளையராஜாவின் ‘ஓ பட்டர் ப்ளை’ போன்ற பாடல்கள். படம் படுதோல்வி. திரைக்கதை மோசமாக இருந்த படம்.

குருதிப்புனல்
ரஜினியின் முத்து படத்துடன் வெளியாகி தாக்குப்பிடித்த படம். கமல்-நாசர் விசாரணை காட்சிகள் அருமையானவை. கமலின் கதை வசனமும் பெரும்பலம்.

வானம் வசப்படும்
இப்படி ஒரு படம் வெளியானதா? என்று கேட்கும் அளவில் அமைந்த படம்.

ராஜீவ் மேனன்

பம்பாய் பட ஒளிப்பதிவாளர். விளம்பர பட பிஸ்தா. பாடகி கல்யாணி மேனனின் மகன். ரஹ்மானின் சிறு வயது தோழர். பம்பாய் படத்துக்கு நாயகனாக மணிரத்னம் முதலில் இவரைதான் கேட்டார்.
மின்சார கனவு
அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல், ரஹ்மானின் ஊல்லலா,வெண்ணிலவே,தங்கத்தாமரை இருந்தும் ஏவி எம் ரயில் விட்டு ஒட்ட வேண்டியதாயிற்று.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

அஜீத்,அப்பாஸ்,மம்முட்டி,தபு, ஐஸ்வர்யா ராய் இருந்தும், சுஜாதா வசனம், ரஹ்மான் படல்கள் (என்ன சொல்ல போகிறாய்) இருந்தும் படம் எதிர்பார்த்த படி அமையவில்லை.


தங்கர்பச்சான்

மலைச்சாரல் படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, மறுமலர்ச்சி, பொரியார் போன்ற பல படங்களை ஒளிப்பதிவு செய்த தங்கர்பச்சான் பின்னர் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கினார். அடிப்படையில் இவர் எழுத்தாளர் என்பதால் இவர் படங்களின் கதைக்களன்கள் வித்தியாசமாக இருந்தன.

அழகி – இவரது கல்வெட்டு என்னும் சிறுகதையை தழுவியது.
ஒன்பது ரூபாய் நோட்டு – இவர் கதையே

சொல்ல மறந்த கதை – நாஞ்சில் நாடன் நாடனின் தலை கீழ் விகிதங்கள் நாவலை தழுவியது.

தென்,மேற்கு மாவட்ட வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்து கொண்டிருந்த தமிழ்சினிமா இவரின் வருகைக்குப்பின்னரே வட மாவட்டங்களையும் பதிவு செய்யத்தொடங்கியது.

ஜீவா

ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், குஷி, ரன் என ஹிட் படங்களாக ஒளிப்பதிவு செய்தவர்.
12 பி
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இதற்கு மட்டுமல்லாமல் இவரின் அனைத்து படங்களுக்கும் இசை. பாக்யராஜ் திரைக்கதை அமைப்பில் ஆலோசனை வழங்கினார். அழகான நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் மட்டும் வாய்த்த ஷாம் ஹீரோ. ஜோதிகா,சிம்ரன் நாயகியர். படம் சுமார்

உள்ளம் கேட்குமே

ஆர்யா, அசின் இதில் அறிமுகம், லூசு கேரக்டர் புகழ் லைலா, ஷாம், பூஜா நடித்தது. சுஜாதா வசனம். ஓ மனமே, மழை மழை பாடல்கள் சூப்பர் ஹிட். படமும் ஹிட்

உன்னாலே உன்னாலே

வினய், தனிஷா அறிமுகம். உடன் சிடு சிடு சதா. எஸ். ராமகிருஷ்ணன் வசனம். ஆண் பெண் ஈகோ, பொஸஸிவ்னெஸ் ஆகியவற்றை பேசிய படம். உன்னாலே உன்னாலே, ஜூன் போனால் போன்ற பாடல்கள். படமும் ஓரளவு ஓடியது.

தாம்தூம்

துரதிஷ்டவசமாக இப்பட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது ஜீவா மரணமடைந்தார். எஸ். ராமகிருஷ்ணன் வசனம். பாடல்களும் சூப்பர். ஜெயம் ரவி, லஷ்மிராய். கங்கனா ராவத் ( இங்கு அறிமுகம்) நடித்தது. இப்பொது ஓடுக்கொண்டிருக்கிறது.


கே வி ஆனந்த்

தேன்மாவின் கொம்பத் படத்துக்காக தேசியவிருது வாங்கினார். காதல்தேசம்,முதல்வன்,சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
கனா கண்டேன்
பிரிதிவிராஜ் வில்லனாக அறிமுகமான படம். ஸ்ரீகாந்த,கோபிகா நடித்த திரில்லர். சு-பா கதை,வசனம். இவரும் சு ரேஷ் பா லா க்களும், சூப்பர் நாவல் காலத்திய பழக்கம். சுபாவின் கதைகளுக்கு இவர் போட்டோ எடுத்துக்கொடுத்தது முதல்படி. அப்போதே இவரை புகழந்து எழுதியிருப்பார்கள்.

அயன்

சூர்யா,தமன்னா நடிக்க ஏவி எம் தயாரிப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் படம்

ரவிவர்மன்

சாந்தம் படத்திற்காக உலக அளவிலான விருது பெற்றவர். அந்நியன், தசாவதாரம் பட ஒளிப்பதிவாளர். தற்போது மாஸ்கோவின் காவிரி படத்தை இயக்கிகிறார் ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பு.



சந்தோஷ்சிவன்

தளபதி பட கேமராமேன். மல்லி, டெரரிஸ்ட், அசோகா (இந்தி) ஆகிய படங்களை இயக்கினார். விருதுகளை குவித்தவர்

இதுதவிர மணிகன்டன்,ரத்னவேல், ஆர் டி ராஜசேகர் என பலர் பட இயக்கபோகிறார்கள்.

வாய்ப்புகளுக்கு காரணம்

இயக்குநர்களின் கண்ணாய் இருப்பதால், எந்த உணர்ச்சி/ காட்சிக்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொண்டு விடுகிறார்கள்

தயாரிப்பாளருடன் எளிதான தொடர்பில் இருப்பது ஒரு சாதகமான அம்சம். வேலை தெரிந்தவர் என எளிதில் புரியவைக்க முடியும்.

பழக்கத்தால் நாயகன், நாயகி கால்ஷீட் பெறுவதும் எளிது.

பாதக அம்சம்

திரைக்கதை அமைப்பு, வசனம் எழுதுதல் போன்றவை உதவி இயக்குநராக இருந்து வருபவர்களுக்கு எளிதில் கைகூடும். இவர்கள் அதிலே வீக். எனவே பெரிய எழுத்தாளர்களை பிடித்துக்கொள்கிறார்கள்.

நல்ல திரைக்கதை அமைந்துவிட்டால் கலக்கிவிடுவார்கள். அயன், மாஸ்கோவின் காவிரியை எதிர்பார்க்கலாமா?

September 26, 2008

திரைப்பட கல்லூரி இயக்குநர்கள் – எங்கே?

திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே யாருக்கும் புரியாமல் படம் எடுப்பார்கள் என்று வணிக சினிமா தன் கதவுகளை அடைத்து வைத்திருந்தது. 1986 ல் ஆபாவாணன் தலைமையில் ஒரு கூட்டம் பூட்டை மட்டுமல்லாது கதவையும் உடைத்துப் போட்டது, ஊமைவிழிகள் என்னும் படத்தால். அடுத்து வந்த 5 ஆண்டுகளில் அந்த மாணவர்கள் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்கள். அவர்களில் மூன்று வேறுபட்ட இயக்குநர்களை பார்க்கலாம்

ஆர் அரவிந்த்ராஜ் (கிரைம் திரில்லர்)
ஆர் கே செல்வமணி (உலுக்கிய செய்திகள் + அரசியல்)
ஆர் வி உதயகுமார் (கிராமம்)

ஆர் அரவிந்த்ராஜ்

ஊமைவிழிகள் (1986)

காதலில் தோற்ற செல்வந்தன், இளம்பெண்களின் கண்களை சேகரிக்கிறான். மூழ்கும் நிலையில் உள்ள பத்திரிக்கையின் ஆசிரியர் குழு இதை துப்பு துலக்க முயற்சிக்கிறது. விஐயகாந்த் காவல்துறை அதிகாரி. பரபரப்பான படம். ராத்திரி நேரத்து பூஜையில், மாமரத்து பூ எடுத்து, தோல்வி நிலையென நினைத்தால் போன்ற வெரைட்டியான பாடல்களை மனோஜ் கியான் அமைத்திருந்தனர். ஒரு விளக்கு வெளிச்சத்தில் இருந்து கார் அணிவகுப்பு உருவாகும் காட்சி பெரிதும் பாராட்டப்பெற்றது. ரவிசந்திரன்,ஜெய்சங்கர்,கார்த்திக், அருண்பாண்டியன், சந்திரசேகர், செந்தில், சரிதா,சசிகலா என நட்சத்திரபட்டாளமே இருந்தது இந்தப்படத்தில்.

உழவன்மகன் (1987)
எம்ஜியார் பாணியில் விஜய்காந்த் 2 வேடங்களில் நடித்த படம். செம்மறி ஆடே, சொல்லித்தரவா போன்ற அருமையான பாடல்கள். படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். இதுவும் கொலை, துப்பு வகை படம்.

தாய்நாடு (1989)

சத்யராஜ் ஆர்மி ஆபிசராக நடித்த படம். டி எம் சௌந்தர்ராஜன் எல்லா பாடல்களையும் பாடினார். இதுவும் துப்பறியும் படமே.



ஆர் கே செல்வமணி

புலன் விசாரனை (1990) – ஆட்டோசங்கர்
கேப்டன் பிரபாகரன் (1991) – வீரப்பன் என விஐயகாந்த்தை தூக்கி நிறுத்தியவர். உலுக்கிய உண்மை சம்பவங்களை படமாக்கியவர் அதிலிருந்து வேறுபட்டு செம்பருத்தி (1992) படத்தை இயக்கினார். ரசிகர்கள் மனதில் ரோஜாவை விதைத்தார். அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை (ராஜீவ் காந்தி கொலை) அரசியல் காரணங்களால் 14 ஆண்டுகள் கழித்து வெளியானது. கண்மனி (1994) குப்பை. ராஜமுத்திரை(1995) மட்டம். மக்களாட்சி (1995) ரகளையான படம். அதன்பின் வந்த அசுரன்,அரசியல்,ராஜஸ்தான், அடிமை சங்கிலி என எல்லாம் அத்துக்கொண்டு போய்விட்டன. இவரது அரசியல் பட அனுபவங்கள் இப்போது மனைவி ரோஜாவுக்கு அக்கட கைகொடுக்கின்றன.


ஆர் வி உதயகுமார்
இவரின் முதல் படம் பக்கா திரில்லர், உரிமைகீதம். கொலையான முதல்வரின் மகன், குற்றவாளியாக கருதப்படுபவருடன் இணைந்து உண்மையை கண்டுபிடிக்கும் படம். பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த இந்தப்படத்தின் வெற்றி பட உலகை இவரின் மேல் திரும்ப வைத்தது. பின்னர் கிழக்கு வாசலில் உச்சிக்குப்போனார். சின்னக்கவுண்டரால் நட்சத்திர இயக்குநரானார். பின்னர் சிங்கார வேலனில் கமலை கவிழ்த்தார். எஜமானில் ரஜினியை சிறுமைப்படுத்தினார், ராஐகுமாரனில் பிரபுவை ஊற்றி மூடினார் (100 வது படம்). இடையில் பொன்னுமணி தப்பியது. கார்த்திக்குடன் இவர் இணைந்த மற்றொரு படமான நந்தவனதேரு தோல்விப்படம். ஆனால் அதையே விக்ரமன் உல்டா செய்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என எடுக்க அது வெற்றி. கடைசியாக கற்க்கசடற வில் வந்து நிற்கிறார்.

இதுதவிர தேவராஜ் (செந்தூரப்பூவே), ரமேஷ் குமார் (அதர்மம்) போன்றவர்களும் வணிக வெற்றி அடைந்தனர். மற்றவர்கள் தயங்கியபோது விஜய்காந்த் இவர்களை நம்பினார். இவர்களும் அவரை கைவிடவில்லை. சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள் எங்களால் வணிக படங்கள் செய்யமுடியும் என நிரூபித்து விட்டனர். வரும் தலைமுறை?

இப்பொழுது திரைப்பட கல்லூரி இயங்குகிறதா என்றே தெரியவில்லை. பேராசிரியர்,இயக்குநர் நியமனத்தில் பல பிரச்சினைகள் என்கிறார்கள். எந்தெந்த துறைகளில் சேர்க்கை நடைபெறுகிறது என்றே தெரியவில்லை.

திரைப்பட கல்லூரி மாணவர்களே, ரித்விக் கட்டக், ஜான் ஆப்ரஹாம் ரேஞ்ச் படங்கள் எங்களுக்கு வேண்டாம். அதற்காக பேரரசு, பி வாசு மாதிரி படங்களை எடுத்து விடாதீர்கள். இரண்டுக்கும் இடையில் எங்களை மகிழ்விக்குமாறு படங்களை எடுக்க படியுங்கள்

பாதை மாறிய இயக்குநர் - பார்த்திபன்

புதியபாதையாய் தமிழ்திரைக்கு வந்தவர். பல வெற்றிகளை காண்பார் என நினைக்க வைத்தவர். எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா?

இயக்கிய படங்கள்

புதியபாதை
பொண்டாட்டி தேவை
சுகமான சுமைகள்
உள்ளே வெளியே
புள்ளகுட்டிகாரன்
சரிகமபதநீ
ஹவுஸ்புல்
இவன்
குடைக்குள் மழை
பச்சக்குதிர


இதுதவிர பாரதிகண்ணம்மா,அழகி, வெற்றிக்கொடி கட்டு,தென்றல், புதுமைப்பித்தன்,காதல் கிறுக்கன்,டாட்டா பிர்லா உட்பட பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

புதியபாதையின் பெருவெற்றிக்குப்பிறகு பொண்டாட்டி தேவை படத்தை இயக்கி நடித்தார். அது தோல்வியடைந்தவுடன் சுகமான சுமைகள் இயக்கினார். அது படுதோல்வி. உங்களுக்கு இதுதானே வேணும் வந்து பாருங்க என உள்ளே வெளியே எடுத்தார். நல்ல வெற்றி. அதற்குப்பின் இவர் இயக்கிய எந்தப்படமும் வணிகரீதியிலான வெற்றி பெறவில்லை. நல்ல இயக்குநர் என்னும் பெயரை மட்டும் ஒரளவு காப்பாற்றியது.

இவர் இயக்கிய படங்களில் வேறு வேறான கேரக்டர்களில் நடித்தாலும் நம் கண்ணுக்கு பார்த்திபனே தெரிவார். ஹவுஸ்புல் படத்தில் மட்டும்தான் ஓரளவு பாடிலாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மாறுபாடு இருக்கும். மாஸ் ஹீரோ என்றால், கேரக்டரை மீறி அவரே தெரிந்தால் (ரஜினி,விஜயகாந்த்,விஜய்) பரவாயில்லை. மெத்தட் ஆக்டிங் தேவைப்படும் கேரக்டர்களில் நடிக்கும் போது, கேரக்டரை மீறி இவர் தெரியும் போது அது படத்தை பாழ்படுத்திவிடுகிறது.

இயக்கும் படங்களில் தானே நடிப்பேன் என்ற கொள்கை தவறானது. சரிகமபதநீ, ஓரளவு இளமை,அழகு கொண்ட நடிகர் நடித்திருந்தால் நல்ல வெற்றி அடைந்திருக்கும். கதை முடிச்சு, திரைக்கதை, பாடல்கள் சிறப்பாக அமைந்த படம்.

இவரது பரிசுகள் திரையிலகில் புகழ்பெற்றவை. நடிகர், நடிகையினரின் பிறந்த நாள் மற்றும் சிறப்பு நாட்களுக்காக இவர் கிரியேட்டிவ்வாக செய்து தரும் பரிசுகள் பேசப்பட்டவை. பெப்ஸி பிரச்சினையில் கமல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்குநர்களுக்கு எதிரான நிலை எடுத்தபோது, நிறைய உதவி இயக்குநர்கள் மூலம் பொக்கேவை அனுப்பி நோகடித்தார். பூக்களால் காயப்படுத்தும் உத்தி. இவர் விளம்பரத்துறைக்கு வந்திருந்தால் பெரிய ஆளாயிருப்பார் என்று கூட சொல்வார்கள். ஆனால் இந்த உத்திகள் திரைக்கதையை மீறி வெளிப்படும் போது பார்வையாளனுக்கு படம் தொடர்ச்சியற்றதாகிறது.

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் போது (அழகி, தென்றல்) அவர்கள் ஒரளவுக்கு பார்த்திபனை மறைக்கிறார்கள். சில இயக்குநர்கள் (சக்திசிதம்பரம் – காதல் கிறுக்கன், ரங்கநாதன் – டாட்டா பிர்லா) பார்த்திபன் அக்கேரக்டருக்கு தேவை என்பதால் மறைக்காமல் விடுகிறார்கள். அதனால் அப்படங்கள் வெற்றி பெறுகின்றன. இயக்குநர் பார்த்திபனை விட நடிகர் பார்த்திபன் தான் அதிக வெற்றி பெற்றிருக்கிறார்.

பார்த்திபன், மற்ற நடிகர்களை வைத்து இயக்குங்கள். மீண்டும் ஒரு புதியபாதை கிடைக்கட்டும். நடிக்க வேண்டுமானால் மற்ற இயக்குநர்களிடம் நடித்துக்கொள்ளுங்கள். செல்வராகவன் உங்களை (ஆயிரத்தில் ஒருவன்) மற்றொரு பரிமாணத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கிறேன்.

September 25, 2008

விஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்?

ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன மாற்றம்?. அதே படத்தை அவனுடன் சேர்ந்து பார்க்கும் இன்னும் யாருக்கும் ரசிகனாகாத பலர் அவ்வாறு மாறுவதில்லையே ஏன்?. எம்ஜியார்,சிவாஜி கலக்கும் போதும் ஜெமினி,எஸ்எஸ்ஆருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். கமல்,ரஜினி காலத்தில் விஜயகாந்த், சத்யராஜ்,ராமராஐன். அஜீத்,விஜய் காலத்தில் விக்ரம்,சூர்யா. இப்போது விஷால்,தனுஷ்,சிம்புக்கும் ரசிகர்கள். எப்போது, எப்படி ஒருவன் ரசிகனாக மாறுகிறான்?

இதற்கு முக்கிய காரணியாக விளங்குபவை

ஏற்கும் வேடங்கள்

ஒவ்வொரு மனிதனின் மனத்திற்கும் நெருக்கமாக சில கேரக்டர்கள் இருக்கும். நாம் இப்படி இருக்க வேண்டும் என்று நம் மனத்தில் இருப்பதை ஒருவன் திரையில் செய்யும் போது ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அது போன்ற கேரக்டர்கள் தொடர்ந்து ஒரு நடிகரிடம் இருந்து வெளிப்படும் போது இவன் ரசிகனாகிறான். கோபக்கார இளைஞன் பாத்திரம் ஏற்கும் நடிகர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது இதனால்தான்.

சிறந்த உதாரணம்
ராமராஐன் – கிராமப்புற இளைஞர்கள்


பாடி லாங்குவேஜ்

சுறுசுறுப்பான உடல் மொழி உள்ளவர்களை பலருக்குப் பிடிக்கும். ரஜினியின் உடல் மொழி அனைவரையும் கவர்ந்த ஒன்று. ரசிகர்கள் பேசிக்கொள்ளும் போது என்னடா உங்காளு சொங்கி மாதிரி இருக்கான்? போன்ற பேச்சுக்களை கேட்கலாம். எம்ஜியார்,விஐய் போன்றவர்களும் தங்கள் உடல்மொழியை எல்லா படங்களிலும் பாஸிட்டிவ்வாக கட்டமைத்திருப்பார்கள். ஏற்கும் வேடங்களை பொறுத்து அது மாறுவதில்லை.

நடிகரின் வயது

பார்வையாளனின் வயதுக்கு நெருக்கமான வயது அவசியம். இந்த தலைமுறையில் ரஜினியைவிட விஜய்,அஜீத்துக்கு ரசிகர்கள் அதிகம். அவன் தன் பிம்பமாக நடிகனை பார்க்கும் போது அதிக வயதானவனை நிராகரிக்கிறான். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து விஐய்க்கு அதிக அளவில் இளம் ரசிகர்கள் (ஒப்பீட்டளவில்) வருவது கடினம்.

சிறப்புத்திறமைகள்

நடனம்,சண்டை,நடிப்பு போன்றவற்றில் சிறப்புத்திறமை.

விஐயகாந்த் நல்லா சண்டை போடுறாரு, பிரபுதேவா நல்லா ஆடுறாரு என ரசிகர்கள் உருவாவார்கள்

ஊடக கட்டமைப்புகள்

இவர் நல்லவரு, வல்லவரு, தானதர்மம் செய்பவரு என நல்ல கட்டமைப்புகள். மற்றவரை பற்றி நடக்கும் பெண்பித்தர், கஞ்சன் போன்ற எதிர் கட்டமைப்புகள், ஒரு பார்வையாளனை ரசிகனாக்கும் வல்லமை பெற்றவை.

ஜாதி

இதுவும் ஒரு பங்கை வகிக்கிறது. தென்மாவட்டங்களில் இவர் கோட்டையில் மணவிழா, அவர் ராஜாங்கத்தில் காதுகுத்து போன்ற போஸ்டர்கள் சாதாரணம். நடிகரின் ஜாதி ஏற்பில்லை எனில் அவரை ரசிக்க மாட்டார்கள். இது இங்கு ஓரளவுக்கு குறைவே.
ஆனாலும் இதையெல்லாம் வைத்து ஒருவன் ரசிகனாவான் என்று சொல்ல முடியாது. அது ஒரு தங்க தருணத்தில் ஏற்படும் மாற்றம், காதலைப்போல. காதலியைக்கூட மாற்றுவார்கள் அபிமான நடிகனை மாற்ற மாட்டார்கள்.

விஐய்க்கு இதில் பல அம்சங்கள் சாதகமாக இருப்பதால் தான் இப்போது லயோலா கருத்துகணிப்பில் ரஜினியை முந்தியுள்ளார் விஜய், அழகிய தமிழ் மகன்,குருவி யின் தோல்விக்குப்பின்னரும்.

September 24, 2008

தமிழ்சினிமாவில் காமெடி நடிகைகள் குறைவு-ஏன்?

தமிழில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகைகள் என்றால்

டி ஏ மதுரம்
டி பி முத்துலட்சுமி
மனோரமா
ஈ வி சரோஜா
சச்சு
காந்திமதி
ஊர்வசி
கோவை சரளா
கல்பனா
ஆர்த்தி

முதலானோரை சொல்லலாம். இதுதவிர கனகா (விரலுக்கேத்த வீக்கம்), சுவாதி (அசத்தல்) போன்ற நாயகிகள் மார்க்கட் போனபின் காமெடி செய்தனர்.

ஷகிலா,ஷீத்தல் – ஜல்லிக்கட்டு காளை
ஜோதிமீனா - பரம்பரை
பாபிலோனா - அசத்தல்
போன்ற கவர்ச்சி நடிகைகள் சில படங்களில் காமெடி செய்தனர்.

ஆனால் காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஏன் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா?. அதில்லை காரணம்.

ஸ்கிரிப்ட் ரைட்டர்

காமெடிக்கு வலுவான ஸ்கிரிப்ட் அவசியம். சில இயக்குநர்களே அதில் மன்னர்கள். இல்லையெனில் ஸ்கிரிப்ட் ரைட்டர் துணை தேவை. எடுத்துக்காட்டாக

கலைவானர் – தானே எழுதும் ஆற்றல் கொண்டவர்
நாகேஷ் – ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றோரின் படங்களில் மின்னிய
அளவுக்கு மற்ற படங்களை சொல்ல முடியாது.

கவுண்ட மணி – ராஜகோபால்

விவேக் – பிரசன்னகுமார் (தற்போது மறைந்து விட்டார்),
செல்முருகன்

வடிவேலு – சிங்கமுத்து, அல்வா வாசு, போண்டா மணி,
லஷ்மண் போன்றோருடன் குழு விவாதம்


மேற்கூறிய அனைவரும் சுயமாக காமெடி செய்யக்கூடியவர்கள் என்றாலும் ரைட்டர் துணை தேவைப்படுகிறது. பெண்கள் இவ்வாறு இயங்குவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம்.


குழுவாக இயங்குதல்

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு நாயகி/குணசித்திர வேடம், பிண்ணனி பாடுதல்/பேசுதல், நடன இயக்கம் ஒரளவு எளிது. மற்ற துறைகள் குழுவாக இயங்குபவை. நேரம் காலம் கிடையாது. மற்றவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். எ.கா. டைரக்ஷன்,ஒளிப்பதிவு, கலை. இத்துறைகளில் பல துறையினரின்
ஒத்துழைப்பு தேவைப்படும். காமெடியும் அது போலத்தான். பிற நடிகர்களுடன் ரிகர்சல், விவாதம் தேவை. இல்லையெனில் சொதப்பிவிடும். பலரால் இதுபோல் செய்ய முடிவதில்லை. இயக்குநர் காமெடியன் கெமிஸ்டரி கட்டாயம் தேவை.

வடிவேல், சுந்தர் சி – வின்னர், இரண்டு
வடிவேல், சுராஜ் - தலைநகரம், மருதமலை

இவை மற்ற வடிவேல் படங்களை விட பெரிதும் பேசப்பட்டவை. ஆனால் நடிகைகளுடன் அத்தகைய ரேப்போ கிரியேட் செய்வது கடினம்.

மொழி

காமெடிக்கு தமிழ் நன்கு தெரிய வேண்டும். அர்த்தம் புரிந்து பேச வேண்டும். மற்றவர்கள் பேசுவது புரிந்து ரியாக்ட் செய்ய வேண்டும். இல்லையெனில் டைமிங் அமையாது மற்றவர்களை வைத்து வசனம் டப் செய்ய இயலாது. இது மற்ற மாநிலத்தவர்களை தடுத்து விடுகிறது. (விதிவிலக்கு ஊர்வசி,கல்பனா ஆனால் தமிழ் நன்கு கைவரப்பெற்ற பின்னரே இவர்கள் காமெடி செய்ய தொடங்கினர்)

சமுதாய மதிப்பு

பெண்கள் கதாநாயகியாக இருப்பதையே அவர்கள் மனம் விரும்பும். சமுதாயத்தில் ஹீரோவுக்கும் காமெடியனுக்கும் உள்ள மரியாதை வேறுபாடு அனைவருக்கும் தெரியும். காமெடி சீனுக்காக அவலட்சணமாக தோன்ற வேண்டும். இரட்டை அர்த்த வசனம் பேச வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்கள் உள்ளன. இது பெண்களை கூச்சப்படுத்தும் ஒன்று. கவர்ச்சி உடை அணிந்து ஆட தயாராக உள்ள பெண்கள் கூட நாலு பேருக்கு முன்னால் இரட்டை அர்த்தத்தில் பேச தயங்குவர். குறிப்பிட்ட அனுபவத்துக்கு பின்னரே காமெடி கைகூடும். இதற்கு கல்யாண பிரச்சினை தடைக்கல்லாக அமைகிறது. தன் மனைவி காமெடியாக நடிக்க போவதை எத்தனை ஆண்கள் விரும்புவார்கள்?

டி ஏ மதுரம், ஈ வி சரோஜா – கணவர் காமெடியன்கள்
சச்சு, கோவை சரளா - திருமணம் செய்யவில்லை


சம்பளம்

கதாநாயகி/கவர்ச்சி நாயகிகளின் சம்பளம் நகைச்சுவை நாயகிகளை விட அதிகம். நயன்தாரா 1 கோடி. ஆர்த்தி - ?.
இவர்கள் காலம் முழுவதும் சம்பாதிப்பதை அவர்கள் இரண்டாண்டில் எடுத்து விடுவார்கள்.

இதுபோன்ற காரணங்களால்தான் கடந்த 40 ஆண்டுகளில் 4 நல்ல காமெடி நடிகைகள் கூட வரவில்லை. எஸ் வி சேகர், கிரேஸி மோகன் நாடக குழுவில் கூட சிலரை வைத்தே ஒப்பேற்றினர். ஆனால் இப்போது டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளால் உமா ரியாஸ் போன்றோரும்.நகைச்சுவை தொடர்கள் மற்றும் புரிதல் காரணமாக தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு), தீபா வெங்கட் (ஜெயம் கொண்டான்) போன்றோரும் பொரிய திரைக்கு வருகிறார்கள். இது தொடர வேண்டும். சன்னை போலவே கலைஞரும் காமெடி சானல் துவக்கவிருப்பதால் இனி இது அதிகமாகும் என்றே தோன்றுகிறது.

சினிமாவில் நீதிமன்றங்களின் அபத்த சித்தரிப்புகள்

பல அரசுத்துறைகளை சினிமாவில் தவறாக சித்தரித்து வருகிறார்கள். இதற்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. நீதிமன்ற காட்சிகள் பல படங்களின் அடிநாதமாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப பார்ப்போம்

கௌரவம்
பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது தம்பி மகன் கண்ணனாகவும் சிவாஜி இருவேடத்தில் நடித்த படம். ஒரு கொலைக்குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தரும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் எதிராக மோதுவது தான் கதை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு’ மறக்க முடியாத வசனம். இதில சிவாஜி ஏற்று நடித்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேட மேனரிஷங்கள் இன்று மிமிக்ரி செய்ய உதவி கொண்டிருக்கின்றன.

விதி
20 ஆண்டுகளுக்கு முன்பு மதிய நேரங்களில் முடிதிருத்தகம், டீக்கடை, ஒலி பெருக்கி வாடகை கடைகள் போன்றவற்றில் இந்த படத்தின் வசன கேசட் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும். காதலி காதலனிடம் கற்பை இழக்கிறாள். காதலனின் தந்தை வக்கீல். காதலி மற்றொரு பெண் வக்கீலிடம் தஞ்சம் புகுகிறாள். இரண்டு வக்கீல்களுக்கும் இடையேயும் இதே நிகழ்வு முற்காலத்தில். விவாதம் அனல் பறக்கிறது. வசனம் ஆரூர்தாஸ். மோகன்,பூர்னிமா,ஜெய்சங்கர்,சுஜாதா நடித்த இப்படம் இந்தி ரீ மேக். பாலாஜி தயாரிப்பு.

நான் அவன் இல்லை

பல வேடங்களில் பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறான் ஒருவன். நீதிமன்றத்தில் தன் சாதுர்ய பேச்சால் தப்பிக்கிறான். முதலில் பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்தது. பின்னர் செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிக்க வெளிவந்தது.


கனம் கோர்ட்டார் அவர்களே/ மிடில் கிளாஸ் மாதவன்

இந்த இரண்டு படங்களிலும் ஜூனியர் வக்கீல்களின் கஷ்டங்களை காண்பித்திருப்பார்கள். கனம் கோர்ட்டார் அவர்களே யில் சத்யராஜ், மிடில் கிளாஸ் மாதவனாக பிரபு.

பராசக்தி, நான் சிகப்பு மனிதன், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களின் கோர்ட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் பெயர் பெற்றவை. பராசக்தி யில் சிவாஜியின் அனல் கக்கும் பதிலுரை பல எதிர்ப்பதிவுகளை இன்றும் பெற்று வருகிறது. சட்டம், படிக்காதவன் போன்ற படங்களிலும் வக்கீல்கள் முக்கிய பாத்திரங்கள்.

அபத்த சித்தரிப்புகள்
௧. வழக்கறிஞர்கள் ஒரிடத்தில் நின்று கொண்டே பேச வேண்டும். ஆனால் இங்கே குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள்

௨. ஒரு நேரத்தில் ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப் படுவர். ஒரு சாட்சி கூண்டு தான் இருக்கும். இங்கேயோ எதிர் எதிர் கூண்டுகள்,வாதி பிரதிவாதிக்கென அது வாய்ப்பேயில்லை.


௩. ஒரு கூண்டில் ஒருவருக்கு மேல் நிற்க அனுமதியில்லை. இங்கே இருவர், மூவர் என.

௪. திடீரென ஒரு புதிய சாட்சியையோ, ஆதாரத்தையோ கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியாது. எதிர் வழக்கறிஞரிடம் அதைக்காட்டி அவர் அனுமதி அளித்த பின்னரே அதை சமர்ப்பிக்க முடியும். இங்கேயோ திடீரென ஒரு ஆதாரத்தைக்காட்டி திடுக்கிட வைப்பதாக காட்சி அமைப்பு இருக்கும்.


௫. எதிர் வழக்கறிஞரின் குறுக்கு விசாரனையின் போது, பதில் மட்டுமே அளிக்க வேண்டும். விளக்கம் அனுமதிக்கப்படாது. அது நம் வழக்கறிஞர் விசாரிக்கும் போதே தரவேண்டும். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் (மாயூரம் வேதநாயகம் பிள்ளை – ஆசிரியர்). இதுபற்றி கிண்டலாக எழுதியிருப்பார்.


எதிர் வக்கீல் – குதிரைக்கு ஒரு கொம்பா, இரண்டா?
வாதி - குதிரைக்கு கொம்பு இல்லைங்க
எதிர் வக்கீல் – கேட்ட கேள்விக்கி பதில்?
வாதி - (மனதுக்குள், ஒரு வேளை குதிரை காத

பத்தி கேட்கிறாரோ?) இரண்டு சார்.

எதிர் வக்கீல் - யுவர் ஆனர், குதிரைக்கு இரண்டு கொம்பு
என்கிறார் இவர்


௬. வழக்கறிஞர்கள் கத்தி பேசுவதில்லை. நீதிபதி,டைப்பிஸ்ட் க்கு கேட்டால் போதும்.

இனி வருபவர்களாவது அபத்தமில்லாமல் எடுக்கட்டும்

September 20, 2008

மறக்கப்பட்ட இயக்குனர் கே ரங்கராஜன்

80 களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்களில் இவரும் முக்கியமானவர். இவரின் முக்கிய படங்கள் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்தன. குடும்ப உறவுகளை மையப்படுத்தி, இனிமையான பாடல்கள்,நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இவரது படங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றன. பெரும்பாலும் உ என்ற எழுத்தில் இவரது படங்கள் தொடங்கும்.

உதயகீதம்

இளையராஜாவின் 300 ஆவது படம். மோகன்,ஆனந்த்பாபு,ரேவதி,லட்சுமி மற்றும் கவுண்டமணி நடித்தது. சகோதரனின் கொலைக்கு பழிவாங்க நினைக்கும் பெண், நிரபராதி, சிறை அதிகாரியாக நிரபராதியின் தாயார் என அமைந்த கதை. போலிச்சாமியார்,சிறைக் கைதி என பல கெட்டப்புகளில் கவுண்டமணி கலக்கிய படம். நான் சிகப்பு மனிதன், காக்கிச்சட்டை போன்ற படங்களுடன் வெளியாகி வெற்றி பெற்ற படம். தேனே தென்பான்டி, மானே தேனே, என்னோடு பாட்டு பாடுங்கள், உதய கீதம் பாடுவேன், பாடு நிலாவே என தேனான பாடல்கள் நிறைந்தது.


உயிரே உனக்காக

பியாரிலால் இசையில் மோகன்,நதியா, சுஜாதா,மீசை முருகேஷ், விஜயகுமார் நடிக்க உருவானது. இதை ரோமன் ஹாலிடே படத்தின் தழுவல் என்றும் கூறுவார்கள். கட்டுப்பாடுகள் பிடிக்காத ராஜ வம்சப்பெண் அங்கிருந்து தப்பி ஒரு சிற்றூரில், நடுத்தர குடும்பத்தில் அடைக்கலம் புகுதலும், அதன் தொடர்ச்சியும் என கதை. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க என்று தொடங்கி நதியா பாடுவதாக அமைந்த பாடல் ஒன்றும் மெல்லப் போடு மெல்லப் போடு என்று ஆரம்பிக்கும் குடும்ப கலாட்டா பாடலும் அமைந்தது.


உன்னை நான் சந்தித்தேன்

சிவகுமார், சுரேஷ்,ரேவதி,சுஜாதா நடித்தது. இதில் கவுண்டமனியும் உண்டு. சிவகுமார் கல்லூரி ஆசிரியர், அவரது பழைய காதலியாக ரேவதியின் தாய் சுஜாதா, பின்னர் அவர்கள் சந்திக்கையில் ஏற்படும் நிகழ்வுகள் என செல்லும் கதை. ஏ ஐ லவ் யூ என்னும் பாடல் இடம்பெற்றது (இளையராஜா ஏராளமான அருமையான பாடல்களை கொடுத்துவிட்டார், அவற்றுக்கு ஏற்ற அட்ஜெக்டிவ்கள் என்னிடம் குறைவு. எப்படி வேறுபடுத்தி காட்டுவேன்? எல்லாவற்றுக்கும் இனிமையான,தேனான என்று போட வேண்டியதுதான்)

உனக்காகவே வாழ்கிறேன்
சிவகுமார், நதியா நடித்தது. இளையராஜா இசை, பெரிய வெற்றி இல்லை.

இதுபோக கற்பூர தீபம், கீதாஞ்சலி, கிராமத்து மின்னல், பாடு நிலாவே, போன்ற படங்களையும் இயக்கினார். பெரும்பாலும் இவர் படங்களில் சிவகுமார்,மோகன்,ரேவதி,நதியா,லட்சுமி,சுஜாதா போன்றோரே நடித்தனர்.

மாறிவரும் ரசனையை கருத்தில் கொள்ளாது ஒரே பாணியில் படமெடுத்து தங்கள் கடைசி படங்களில் தோல்வி கண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

வித்தியாசமான பாத்திரப்படைப்புகள் மற்றும் மாறுபட்ட கதைக்களன் இல்லாமை, இவரின் ஆஸ்தான நடிகர்களின் சரிவு போன்றவற்றால் இவர் துறையில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.

அண்ணா ஒருமுறை சொன்னார் "ஆதரவற்ற பெண்களுக்கு தமிழ்நாட்டில் இட்லிக்கடை தானே தாசில்தார் உத்தியோகம்" என்று. அதைப்போல இன்று வாய்ப்பில்லா இயக்குனர்களுக்கு தொலைக்காட்சி.

September 19, 2008

தலைமுறையை உருவாக்கும் இயக்குனர்கள் பகுதி 2

இதன் முதல் பகுதி இங்கே

தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற சில படங்களை தவிர பாலசந்தரின் அனைத்து படங்களும் உயர் மத்தியதர வாழ்க்கையையே பேசும். இரு கோடுகள்,பாமா விஜயம் ஆகட்டும், அரங்கேற்றம் ,அவள் ஒரு தொடர்கதையாகட்டும் வசதியான/வசதியற்ற மத்திய தர வர்க்கமே அங்கு கதைக்களன். நாடக இயக்குனராக இருந்துவிட்டு திரைத்துறைக்கு வந்ததால் இவரின் படங்களில் நடிப்புக்கு குறை இருக்காது. அதனால் தான் ரஜினி,கமல்,விவேக்,பிரகாஷ்ராஜ்,சௌகார் ஜானகி, சரிதா, ரேனுகா என பலரை பட்டை தீட்ட முடிந்தது.

இவரின் ஆரம்பகாலப் படங்கள் எல்லாமே இவரது நாடகங்களின் நீட்சியே. வாழ்க்கை என்பது வட்டம் என்பதால் அந்த படங்கள் இப்போது தொலைக்காட்சி நாடகங்களாக வந்து கொண்டிருக்கின்றன. இவரது உதவி இயக்குனர்களில் விசு,அமீர் ஜான்,சுரேஷ் கிருஷ்னா,வசந்த்,சரண் போன்றோர்கள் வெற்றி பெற்றவர்கள். அனந்து அவர்கள் சிகரம் என்னும் படத்தை இயக்கினார். இடைக்கால படங்களில் இவர்களின் பங்களிப்பு இருந்தாலும் கடைசியில் பாலசந்தரின் முகமே நமக்கு தெரியும். அவரின் அலைவரிசையிலேயே இவர்களும் சிந்தித்தார்கள். எனவே தான் அவரின் சாயல் இவர்களது படங்களில் வந்துவிடும். சுரேஷ் கிருஷ்னா,சரண் போன்றோர் ஜனரஞ்சக படங்களை இயக்கினாலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோல்விப் படங்களையே அளித்தார்கள்.

இளைஞர் போல் சிந்திப்பவர் கே.பி என்று சொல்லப்பட்டாலும் புதிய செய்திகளை உள்வாங்குபவர் என்று சொல்ல முடியாது. 1977 ல் அவர்கள் படத்தில் ரஜினி செய்ததையே 1996 ல் கல்கி படத்தில் பிரகாஷ்ராஜ் செய்தார். அவரின் பெண் பாத்திரங்களை பார்த்தோமேயானால் இன்று வரையில் அதில் மாற்றம் இருக்காது. அபூர்வ ராகங்கள் படாபட்டும், ஜாதிமல்லி யுவராணியும், கல்கி ஸ்ருதியும் ஒரே மாதிரி பெண்ணுரிமை வசனம் பேசுவார்கள். அவரிடம் சில வகை பாத்திரங்கள் உண்டு. காலங்கள் மாறும் போது அதில் புதியவர்கள் வருவார்கள். இதனால் தான் அவரின் உதவி இயக்குனர்களும் ஒரு வட்டத்தை தாண்டி சிந்திப்பதில்லை.

பாரதி ராஜாவால் கருத்தம்மா வையும் எடுக்க முடிகிறது, கண்களால் கைது செய் யையும் எடுக்க முடிகிறது. ஆனால் பாலசந்தர் மத்திய தரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை

கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க படங்களை தந்தவர்கள் பாலு மகேந்திராவின் வாரிசுகளே

பாலா (சேது,நந்தா,பிதாமகன்)

அமீர் (மௌனம் பேசியதே,ராம், பருத்தி வீரன்)

ராம் (கற்றது தமிழ்)

வெற்றி மாறன் (பொல்லாதவன்)

சசி (சுப்ரமனியபுரம்)

பாடலாசிரியர் முத்துக்குமார் இவரிடம் உதவியாளராய் இருந்துவிட்டு பின்னர் பாட்டெழுத சென்று விட்டார்.

உலகப் படங்களை பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என தான் செய்யும் எல்லாவற்றையும் உதவியாளர்களுடன் சேர்ந்தே செய்வார் இவர். அதனால் அவரின் ரசனை உதவியாளர்களிடம் படிந்து விடுகிறது. மாற்று சிந்தனை அந்த குழுவில் குறைவாகவே இருக்கும். மேற்கூறிய எல்லா படங்களிலும் அவரின் தாக்கம் இருப்பதை அறியலாம். 20 ஆண்டுகளுக்குப் பின்னரே இவரால் உதவியாளர்களுடன் ஓருயிர் பல உடலாக இருக்க முடிந்தது. தன் வயதொத்த ஆட்களுடன் ஆரம்பத்தில் ஓத்துபோக முடியவில்லை எனலாம். ஒரு மூத்த அண்ணன்/தந்தை ஸ்தானத்தில் இருந்து இளைஞர்களை இவர் இப்போது வழிநடத்துகிறார்.

இனிவரும் காலங்களில் பாலு மகேந்திராவின் வாரிசுகள் தலைமுறையை உருவாக்கலாம்


தலைமுறையை உருவாக்கும் இயக்குனர்கள்

கடந்த 40 ஆண்டுகளில் அதிகமான, சிறந்த படங்களை தந்த இயக்குனர்கள் என்றால் ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா இவர்களை சொல்லலாம். இவர்களில் யாருக்கும் இல்லாத சிறப்பு பாரதிராஜாவுக்கு உண்டு. இவரின் உதவி இயக்குனர்கள், பின்னர் அவர்களிடம் உதவியாய் இருந்தவர்கள் என மூன்று, நான்கு தலைமுறை வரையில் இவரது ஆதிக்கம் தமிழ் சினிமாவில் தொடருகிறது.


முதல் : பாக்யராஜ்

இரண்டு : கோலப்பன்,பாண்டியராஜன், பார்த்திபன், வி.சேகர்

மூன்று : விக்ரமன்,கே எஸ் ரவிகுமார், சேரன்

நான்கு : ராஜகுமாரன், ஜெகன்,

மணிவண்ணன் ->செல்வமணி,சுந்தர் சி -> சுராஜ்
இதுபோல பல உதாரணங்களை சொல்லலாம்.

ஸ்ரீதர் அவர்களின் உதவி இயக்குனர்கள் என்றால் சி வி ராஜேந்திரன், கோபு பாபு, சந்தான பாரதி, பி வாசு ஆகியோர். ஆனால் இம்மாதிரி தலைமுறை உருவாகவில்லை.

பாலசந்தரிடம் அனந்து, அமீர்ஜான்,சுரேஷ் கிருஷ்னா,வசந்த், சரண் என்று இருந்தாலும் பெரிய தலைமுறை என்று சொல்ல முடியாது. இதில் அனந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாகவே இருந்தவர். கமலின் அணுக்கத் தோழர். கமல் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்தார். ஹே ராம் படத்தை அவருக்கே சமர்ப்பனம் செய்தார்

பாலு மகேந்திரா விடம் இருந்து பாலா,அமிர்,வெற்றி மாறன், ராம், சசி ஆகியோர் வந்து இருந்தாலும் அது 1998 க்கு பின்னரே. (20 ஆண்டுகள் கழித்து)
மணி ரத்னம் இன்னும் மோசம். அழகம் பெருமாள், சுசி கணேசன், கண்ணன் என சிலரே சோபித்துள்ளனர்
பாரதிராஜா வின் உதவி இயக்குனர்கள் பெரிய அளவில் வர என்ன காரணம் என்ன என்று பார்க்கும்போது பல செய்திகள் தெரியவருகின்றன. முதலில் மணி ரத்னம் அவர்களுடன் ஒப்பிடுவோம். பின்னர் மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடுவோம்.

16 வயதினிலே படப்பிடிப்பு, பாக்யராஜின் வசனம் திருப்தி இல்லை. காட்டு கத்து கத்துகிறார் பாரதி ராஜா. வெறியுடன் சென்ற பாக்யராஜ் திரும்பி வருகிறார். அந்த வசனம் தான் அதன் பின் நடிக்க வாய்ப்பு கேட்பவர்கள் எல்லாம் பேசி காட்டியது. பராசக்திக்குப் பின் புகழ்பெற்றது. ஆத்தா ஆடு வளர்த்தா என்ற வசனம் தான் அது. மணிவண்னனின் கதை நிழல்கள், அது தோல்வி. பின்னரும் அவரிடம் நம்பிக்கை வைத்து அடுத்த கதை கேட்கிறார். அலைகள் ஓய்வதில்லை ஹிட். தன் உதவியாளர்கள் பாக்யராஜ்,மணிவண்னனை தன் படங்களில் நடிக்க வைக்கிறார்.

மணி ரத்னத்தை எடுத்துக் கொள்வோம். அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிரார். "அவர் தனியே அமர்ந்து ஸ்க்ரிப்ட் எழுதுவார். எந்த காட்சிக்கு எவ்வளவு கை தட்டல் கிடைக்கும் என்று சொல்வார்" . இங்கு உதவி இயக்குனர்கள் அவர் இயக்கும் விதத்தை பார்ப்பவர்களே. கதை வேண்டுமெனில் சுஜாதா (உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து) அல்லது செல்வராஜ் (அலைபாயுதே) என விற்பன்னர்களிடம் பெற்றுக்கொள்வார். வசனமும் பாலகுமாரன் (நாயகன்), சுஜாதா (ரோஜா மற்றும் பல படங்கள்) வாங்கிக் கொள்வார்.

ஒவ்வொரு மனிதனிடம் ஒரு கதை இருக்கும், அதை எப்படி காட்சிப்படுத்துவது என்பதே இயக்கம். பாரதிராஜா தன் உதவியாளர்களின் கதையை திரைக்கதையாக்குகிறார், பின்னர் காட்சிப்படுத்துகிறார். எவ்வாறு தன் கதை மாற்றம் பெறுகிரது என்பதை அணு அணு வாக காண்பவனுக்கு கிடைக்கும் அனுபவம் அவனை மெருகேற்றும். மணி ரத்னம் தன் ஸ்க்ரிப்டை தன் பாணியில் படமாக்குகிறார். திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் அவரின் கண்ணசைவில் பணிகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு உதவி இயக்குனரும் ஒரு பணியாளரே. எப்படி கோணங்கள் வைப்பது, பெர்பெக்ஷன் போன்றவற்றை கற்றுக் கொள்ளலாமே தவிர இயக்குவதை அல்ல.

இதனால் தான் மணிரத்னம் படங்களில் குழந்தைகள் ஒரே மாதிரி பேசுகிறார்கள், பெண்கள் ஒரே மாதிரி பாவம் காட்டுகிறார்கள். நாயகர்களும் ஒரே டோனில் பேசுகிறார்கள். படங்களிலும் ஒருவித டெம்பிளெட் வந்துவிடுகிறது. பாரதி ராஜாவின் படங்களில் உதவியாளர்களின் தாக்கமும் இருப்பதால் தான் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என பலவித கேரக்டர்கள், கதைகளங்கள், கேரக்டர் மாடுலேஷன்கள் அமைகின்றன.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்

இதற்க்கான கருவை கொடுத்த பதிவர் பைத்தியக்காரனுக்கு நன்றிகள்

மணிரத்னம் படங்களின் டெம்ப்லேட் பற்றி பதிவர் பினாத்தல் சுரேஷ் அவர்கள் இரண்டு வருடம் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தார். அவருக்கு என் நன்றிகள்.

September 18, 2008

தமிழ் திரைஇசையில் சமையல் பாடல்கள்

இந்த 75 ஆண்டுகளில்,பாடல்கள் இல்லாமல் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உடனே நினைவுக்கு வருபவை அந்த நாள்,குருதிப்புனல்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்றவை. 1940 களில் வந்த படங்களில் குறைந்தது 40 பாடல்கள் இருக்கும்.

இதைப்பற்றி கவிஞர் வாலி ஒருமுறை கூறும் போது, முதல்ல நாப்பது பாட்டுன்னான்,அப்புறம் இருபதுன்னான், அப்புறம் பத்துப்பாட்டு அஞ்சு பாட்டுன்னான் இனிமே நிப்பாட்டுன்னுவான் என்றார்.

இந்த பாடல்களில் பெரும்பாலும்

காதலன் காதலி டூயட் பாடல்கள் (இவை 50% க்கு மேல் இருக்கும்)

காதல் தோல்வி பாடல்கள்

கலாட்டா பாடல்கள் (காதலி/நண்பன்)

தத்துவ பாடல்கள்

எழுகவே டைப் புரட்சி பாடல்கள்

கதநாயகன்/நாயகி அறிமுகப் பாடல்கள்

கவர்ச்சி நடன பாடல்கள்

கானா/குத்து பாடல்கள்

போன்ற வகையை சார்ந்தே அமையும்.

உணவை மையமாக வைத்து பாடப்பட்ட பாடல்கள் மிக குறைவே. அப்படி பாடப்பட்ட பாடல்கள் சில

1 கல்யான சமையல் சாதம்

மாயாபஜார் திரைப்படத்தில் கடோத்கஜன் வேடத்தில் வரும் எஸ் வி ரங்காராவ் பாடும் இப்பாடலில் ஏகப்பட்ட உணவு வகைகள் வரும்.
புளியோதரையும் சோறு, பொருத்தமாய் சாம்பாரு, மந்தார பஜ்ஜி இங்கே? சொஜ்ஜி எங்கே? சுவையான சீனிப்புட்டு, லட்டு என நமக்கு பசி ஏற்படுத்தி விடுவார்கள்.

2. நித்தம் நித்தம் நெல்லு சோறு

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் கிராம் உணவு வகைகள் அனைத்தும் இடம் பிடித்திருக்கும். நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் மணக்குதைய்யா எனத் தொடங்கி எல்லா வகைகளையும் சொல்லும். பாடல் கடைசியில் தன் காதலை சூசகமாக சொல்லுவார் கதானாயகி. தான் பெண் எனவே உடைத்து சொல்ல முடியாது என்னும் வரியில் அப்பாடல் முடியும்.

3. தூக்கு சட்டிய தூக்கி பார்த்து

எஜமான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ரஜினி தன் பண்னையில் வேலை செய்பவர்கள் சாப்பாட்டை கவுண்டமணி உதவியுடன் தூக்கிச் சென்று ருசி பார்க்கும் போது பாடும் பாடல். இப்பாடலிலும் பல ஐட்டங்கள் இடம்பெறும். செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்டை தோசை நாக்கு பேசும் என கலக்கலாக இருக்கும்.

4. சமைத்து காட்டுவோம்

உன்னால் முடியும் தம்பி படத்தில் இடம் பெற்றது. மனோரமா விடம் சவால் விட்டு கமலும்,தாரணியும் சமைக்கும் போது பாடும் பாடல். இதில் சமைப்பதற்க்கான செய்முறையே அதிகம் இடம்பெற்றிருக்கும். கருகப் பிள்ளை எங்கே? சாம்பார் பொடி எங்கே? என சமையல் முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கும்

5. மட்டன் கறி கொண்டு வரட்டா?

பிஸ்தா படத்தில் இடம் பெற்ற பாடல். சர்வராக இருக்கும் கார்த்திக் தங்கள் உணவகத்தில் இருப்பவைகளை வருபவர்களிடம் சொல்லி ஆர்டர் கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய எல்லா அசைவ உணவு வகைகளும் இப்பாடலில் இடம் பிடித்திருக்கும்.

6. என்ன வேணும் தின்னுங்கடா டோய்

உயர்ந்த உள்ளம் என்னும் படத்தில் இடம் பெற்றது. கமல் ஒரு அறிமுகமில்லாத ஜோடியின் கல்யானத்திற்க்காக விருந்து கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருக்கும். இதில் உணவு வகைகளை விட உபசரிப்பு தொனியே அதிகம் இருக்கும்.

இவை தவிர அன்னக்கிளி (முத்து முத்தா பச்சரிசி குத்தத்தான் வேணும்),திருப்பாச்சி (அரைச்சு வச்ச நெல்லுக்கும் ஆட்டி வச்ச மாவுக்கும்)போன்ற படங்களில் விஷேசங்களில் பாடும் பாடலில் உணவு வகைகள் இடம் பிடித்து இருக்கும். நினைவிருக்கும் வரை படத்தில் வரும் காத்தடிக்குது காத்தடிக்குது பாடலில் வரும் பாவம் இந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்தது யாரு என்ற வரிகள் மறக்க முடியாதது.

தமிழில் இதுவரை வந்திருக்கும் பாடல்களில் இவ்வகை பாடல்கள் 0.01% சதவீதமே


விஐயகாந்தின் வித்தியாச வேடங்கள்

எந்த தமிழ் கதாநாயகனுக்கும் இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. இதுவரை எதிர்நாயகனாக நடித்ததில்லை, மற்றும் தமிழைத்தவிர வேறு மொழியில் நடித்ததில்லை. இவரின் 90% படங்களை இரண்டு வகையில் அடக்கிவிடலாம்.

சீருடை அணிந்த போராளி
இதில் காவல்துறை,ராணுவம்,உளவுத்துறை,மாவட்ட ஆட்சியர், வழக்கறிஞர், தேர்தல் அதிகாரி இவை அடங்கும்

சீருடை அணியாத போராளி
இதில் பகைவனால் பாதிக்கப்பட்டு போராடுபவர், தன்னிச்சையாக நீதி நேர்மைக்கு போராடுபவர் அல்லது ஊர் பெரிய மனிதராக இருந்து போராடுபவர் இவை அடங்கும்


இதுதவிர மீதி படங்களிலும் வல்லவராகவும், நல்லவராகவுமே இவரின் பாத்திரம் படைக்கப் பட்டிருக்கும். இவை அல்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடித்தது என்றால் 3 படங்களை குறிப்பிடலாம்

1 நானே ராஜா நானே மந்திரி

இதில் ஈகோ அதிகமான பண்ணையார் வேடம். ஜீவிதா காதலி, ராதிகா மானேஜர். தன்னை விட பெரிய மீசை வைத்திருக்கும் கவுண்டமணியின் ஒருபக்க மீசையை எடுக்கச சொல்லி அவரை ஒத்த மீசை குப்பு சாமி ஆக்கும் காட்சியும், தன்னை புகழ்ந்து வேலை கேட்பவனை இன்னொரு முறை சொல்லு என பலமுறை கேட்டு வெறுப்பேற்றும் காட்சியும் நல்ல நகைச்சுவை. மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்னும் அருமையான பாடலும் உண்டு.

2 தழுவாத கைகள்
இதில் எட்டு குழந்தைகளுக்கு அப்பா வேடம். அம்பிகா நாயகி. ஒரு குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித தந்தாரே அப்பா என்னிம் கலக்கல் பாடலும் உண்டு.

3 பாட்டுக்கு ஒரு தலைவன்

இதில் மனமுதிர்ச்சி அடையாத இளைஞன் வேடம். ஷோபனா நாயகி. நீண்ட இடைவேளைக்குப்பின் ஜிக்கி பாடிய நினைத்தது யாரோ நீ தானே என்னும் பாடல் இடம்பெற்ற படம்.

இப்போது அரசியல் தலைவர் ஆகிவிட்டதால் இனி இதுபோன்ற வேடங்களில் இவரை பார்ப்பது அரிது.

September 17, 2008

காலங்களை கடந்த சில்க்



ஒரு படத்துக்கு வில்லன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கவர்ச்சி நாயகி/நடன மங்கை முக்கியமாக இருந்த காலகட்டம். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகள் உச்சத்தில் இருந்த போது தமிழ் திரையுலகில் நுழைந்தவர் சில்க் ஸ்மிதா. இயற்பெயர் விஜயலட்சுமி, ஆந்திர மாநிலம் சூலூருவை சேர்ந்தவர். 1979 ல் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதா என்னும் பெயரில் தன் திரை வாழ்க்கையை துவங்கினார். அந்த படத்தில் அவரின் திரைப்பெயர் சில்க். பின்னர் அப்பாத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார்.


வண்டிச்சக்கரத்தில் அறிமுகமான அவர் பல படங்கள் ஓட சக்கரமாய் இருந்தார். பத்து ஆண்டுகள் தமிழ் திரைஉலகின் கனவுக்கன்னியாய் கோலோச்சினார். இவரின் நடனம் இருந்தால் மட்டுமே படத்தை வாங்குவேன் என வினியோகஸ்தர்கள் அடம் பிடித்தனர். படப்பிடிப்பு இடைவேளையில் இவர் கடித்து வைத்த ஆப்பிள் 300 ரூபாய்க்கு ஏலம் போனது. இவர் கதாநாயகியாக நடித்த சில்க் சில்க் சில்க், போலிஸ் போலிஸ் போன்ற படங்கள் சி சென்டர்களில் நல்ல ஒட்டம் ஓடின.

ரஜினி,கமல்,விஜயகாந்த்,சத்யராஜ் போன்ற அனைத்து நடிகர்களின் படத்திலும் இடம்பிடித்தார். அனுராதா, டிஸ்கோ சாந்தி யின் வரவுக்கு பின்னால் இவரின் மார்க்கெட் சரிந்தது. இன்றைய தலைமுறை நடிகர்களில் விஜய் வரை நடித்தவர்.


1981 அலைகள் ஓய்வதில்லை

கதாநாயகிக்கு ஆதரவாக இருக்கும் அண்ணி வேடம். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.


1982 மூன்றாம் பிறை
வயதான கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு இளைஞனை விரும்பும் கேரக்டர். இவர் கமலுடன் இணைந்து ஆடிய பொன்மேனி உருகுதே என்ற பாடல் யாராலும் மறக்கமுடியாத ஒன்று


1983 மூன்றுமுகம்,

சகலகலா வல்லவனில் கமலுடன் இவர் ஆடிய நேத்து ராத்திரி யம்மா, 25 ஆண்டுகள் கழித்து சிவாஜி வரை நிலைத்து நின்றது.


அடுத்த வாரிசு
ரஜினியை பணமில்லாததால் நிராகரிக்கும் பாத்திரம். பேசக் கூடாது வெறும் பேச்சில் இல்லை சுகம் என்னும் பாடலில் இருவரின் கெமிஸ்ட்ரி அருமையாக இருக்கும்
தங்க மகன்
இதிலும் ரஜினியுடன் இவர் இணைந்து ஆடிய அடுக்கு மல்லிகை என்னும் பாடல் அசத்தல் ரகம்

கோழி கூவுது

ஏதோ மோகம் என்னும் பாடலில் பிரபு உடன் நடித்திருப்பார்.

சூரக் கோட்டை சிங்கக்குட்டி
இதில் பிரபுடன் இணை. காளிதாசன், கம்ப தாசன் என்னும் இனிமையான பாடல் உண்டு

1985 பாயும்புலி
ரஜினியுடன் இவர் ஆடிய ஆடி மாச காத்தடிக்க பாடல் மிக பிரபலம்


1988 ஜீவா, கனம் கோர்ட்டார் அவர்களே

ஜீவாவில் புகைப்படக்காரராய் சத்யராஜ் மாடலாக சில்க். அந்த பாடலின் ஸ்டில்கள் இன்றும் பிரபலம்.


1989 பிக்பாக்கெட்
போலிஸ் அதிகாரியாக இவர் நடித்த படம். மஞ்சக் குருவி என்னும் பாடலும் உண்டு.


1994 தோழர் பாண்டியன்

1995 ஸ்படிகம்,கோயம்புத்தூர் மாப்பிள்ளை

ஸ்படிகம், இது வீறாப்பு என சுந்தர் சி நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. ஒரிஜினலில் மோகன்லால். இவர் ஆட்டக்காரி. இருவரையும் இணைந்து விலங்கு போட்டு அழைத்து செல்லும் ஸ்டில் அருமையாக இருக்கும். விஜய்யுடன் இணைந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை யில் இவர் ஆடிய அண்ணாமலை தீபம் பாடலும் ஹிட்டே.

இவர் கதானாயகியாய் நடித்து ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய அன்று பெய்த மழையில் என்னும் படத்திலும், தம்பிக்கு ஒரு பாட்டு என்னும் படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

1996
டிசம்பர் 23 அன்று குடும்ப வாழ்வில் (தாடிக்காரர்?) ஏற்பட்ட பிரச்சினைகளால் தன் முப்பத்தைந்து வயதில் (பிறந்த தேதி டிசம்பர் 2, 1960) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பிற்குப்பின் சுபாஷ் என்னும் அர்ஜூன்,ரேவதியுடன் இவர் நடித்த படம் வெளிவந்தது.


டீ ஆர் ராஜகுமாரிக்குப்பின் கண்ணாலேயே அனைவரையும் கவர்ந்த இவர் காலங்களை கடந்தும் நம்மிடையே இருப்பார்

போட்டோ கர்ட்டஸி
http://www.dailomo.com/


September 16, 2008

சரித்திரம் படைத்த இயக்குனர் - ஸ்ரீதர் : பகுதி- 2

இந்த பதிவின் முதல் பகுதி

ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை. நகைச்சுவை எப்போதும் ரசிக்கத்தக்கதாய் இருக்கும். கதாநாயகிகளின் தோற்றம், பாடி லாங்குவேஜ் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்

1967 ஊட்டி வரை உறவு

1968 கலாட்டா கல்யாணம்

1969 சிவந்த மண்

1971 உத்தரவின்றி உள்ளே வா

1972 அவளுக்கென்று ஒரு மனம்

1974 உரிமைக்குரல்

சிவாஜி அவர்களுடன் இணைந்து எடுத்த ஊட்டி வரை உறவு,கலாட்டா கல்யாணம் ஆகியவை நல்ல நகைச்சுவை படங்கள். சிவந்த மண் ஒரு மசாலா படம். எம்ஜியாரை வைத்து அவர் இயக்கிய உரிமைகுரலும் அவ்வகையே. மிகப்பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் போது அவர்களுக்காக சில காட்சிகளை அமைக்கும் கட்டாயம் எல்லா இயக்குனர்களுக்கும் நேரிடுகிறது. அது இவருக்கும் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இவரின் படங்கள் முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது ஒரு மாற்று குறைவே.

1978 இளமை ஊஞ்சலாடுகிறது

1979 அழகே உன்னை ஆராதிக்கிரேன்

1983 ஓடை நதியாகிறது

1984 ஆலய தீபம்

1985 தென்றலே என்னை தொடு

1986 யாரோ எழுதிய கவிதை, நானும் ஒரு தொழிலாளி

1991 தந்து விட்டேன் என்னை

இளமை ஊஞ்சலாடுகிறது

காதலன், காதலனின் நண்பன், காதலி, காதலியின் தோழி இளம் விதவை. இந்த நான்கு பாத்திரங்களை சுற்றி சுழலும் கதை. சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலன், இளம் விதவை உறவு கொண்டுவிட கோபமடைந்த காதலி, காதலனின் நண்பனை திருமணம் செய்ய முடிவெடுக்க தொடங்குகிறது உணர்ச்சி போராட்டம். காதலன் - கமல்ஹாசன், காதலி - ஸ்ரீப்ரியா, நண்பன் - ரஜினி காந்த், விதவை - ஜெய்சித்ரா. தண்ணி கருத்துருச்சு, என்னடி மீனாட்சி?, கிண்ணத்தில் தேன் வடித்து, நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் போன்ற கலக்கல் பாடல்கள் நிறைந்தது. இந்த படம் வந்த புதிதில் மீனாட்சி என்ற பெயருள்ள பெண்களை கலாய்க்க இளைஞர்கள் இப்பாடலை பயன்படுத்தினார்கள். தற்போது, என்னைத் தெரியுமா? என்னும் படத்துக்காக தண்ணி கருத்துருச்சு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது.
என்னைக் கேட்டால் இந்தப் படத்தை, அஜித்,சூர்யா,அசின்,மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து, யுவன் இசையில் யாராவது ரீமேக் செய்யலாம்.

நானும் ஒரு தொழிலாளி

கமல்,அம்பிகா நடிக்க சக்தி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, இப்பெயரில் வெளிவந்தது. நீண்ட நாட்கள் (7 ஆண்டுகள்) இப்படம் தயாரிப்பில் இருந்ததாக கூறுவார்கள். பேஷன் மாற்றம் இப்படத்தில் நன்கு தெரியும். சில காட்சிகளில் பெல்ஸ்ம், சில காட்சிகளில் பேண்ட்டும் கமல் அணிந்திருப்பார். இதில் இடம்பெற்ற நான் பூவெடுத்து, செம்பருத்தி பூவூ போன்ற பாடல்கள் மிக இனிமையானவை. படம் தோல்வி.


தென்றலே என்னை தொடு

ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன் அழகின் உச்சத்தில் இருப்பார். அது அவர்களின் ஜீன்,வளர்ப்பை பொருத்தது. ஜெயஸ்ரீ தன் உச்சக்கட்ட அழகில் இருந்த போது எடுக்கப்பட்ட படம் இது. மோகன்,தேங்காய் சீனிவாசன், காந்திமதி, ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் வெளிவந்த சாப்ட் ரொமாண்டிக் மியுசிகல் காமெடி. தென்றல் வந்து, கண்மனி நீ வரக் காத்திருந்தேன் போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்தது. இப்படம் ஓடியதற்க்கு இளையராஜா தான் காரணம் என்றும். இல்லை இல்லை ஜெயஸ்ரீ தான் காரணம் என்றும் எங்கள் விடுதியில் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

இவர் கடைசியாக இயக்கிய படம் தந்துவிட்டேன் என்னை. விக்ரம் கதாநாயகன். காதலிக்க நேரமில்லை திரைபடத்தை ரீமேக் செய்யும் உரிமையை, இவரிடம் இருந்து இயக்குனர் மனோ பாலா பெற்றுள்ளார். நடிக நடிகையர் தேர்வில் பல ஹேஸ்யங்கள் நிலவுகின்றன.

தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தன் மனைவியின் துணையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் இவரின் கலைத்தாகம் குறையவில்லை. அண்மையில் இவரை சந்தித்த பாரதிராஜா விடம், நல்ல கதை இருக்கிறது, குணமடைந்தவுடன் விரைவில் அதை இயக்குவேன் என்று சொல்லியிருக்கிறார்.


சரித்திர சாதனையாளரே மீண்டு வாருங்கள், மீண்டும் வாருங்கள். புது ஒளிப்பதிவாளர்கள்,இசை அமைப்பாளர்கள், நடிக,நடிகையர் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து ஒரு கலானுபவத்தை இந்த தலைமுறைக்கும் .தாருங்கள்

September 15, 2008

சரித்திரம் படைத்த இயக்குனர் - ஸ்ரீதர்


ஐம்பது ஆண்டுகள் ஆகப் போகின்றன அந்த நகைச்சுவை காட்சி வெளியாகி, இந்த தலைமுறையினரும் அந்த பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். மன்னார் அண்ட் கம்பெனி தான் அது. 1959 ஆம் ஆண்டு கல்யாணப்பரிசு படத்தை இயக்கிய ஸ்ரீதர், தமிழ் சினிமாவுக்கு விடிவெள்ளியாய் வந்தார். செட்டுக்குள் சுற்றிக்கொண்டு இருந்த சினிமாவை வெளியுலகுக்கு அழைத்து வந்தவர் பாரதிராஜா என்பார்கள். நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் ஸ்ரீதர்.

1959 கல்யாணப்பரிசு

1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம்

1961 தேன் நிலவு

1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், ஆலயமணி

1963 நெஞ்சம் மறப்பதில்லை

1964 காதலிக்க நேரமில்லை

1965 சுமை தாங்கி, வெண்ணிற ஆடை

என குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர். தெலுங்கு, இந்தியிலும் கொடி நாட்டியவர். ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர், அருணாசலம் படம் மூலம் ரஜினி உதவ வந்த போது, நான் நன்றாக இருக்கிறேன். வேறு ஒருவருக்கு உதவுங்கள் என்ற தங்க மனதுக்காரர். ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர்.

கல்யாணப் பரிசு


ஜெமினி கணேசன், சரோஜா தேவி, தங்கவேலு நடித்த காதல் தோல்விப்படம். இதில் சரோஜா தேவி தன் கொஞ்சும் குரலால் ' அம்மா நான் காலேஜ்க்குப் போகிறேன்' என்று காதலனுக்கு சிக்னல் கொடுக்கும் பாங்கு, அப்போதைய இளம் பெண்களிடம் மிகப் பிரபலம். தங்கவேலுவின் மனைவியை ஏமாற்றும் காமெடி 50 ஆண்டுகளாகியும் புதியதாகவே உள்ளது. மன்னார் அண்ட் கம்பெனி, எழுத்தாளர் பைரவன் என அவர் ஏமாற்றுவதை விவேக் பார்த்திபன் கனவில் மாற்றி பயன்படுத்தி இருப்பார்


தேன் நிலவு

தமிழின் முதல் ரொமாண்டிக் காமெடி படம்?. தந்தையின் தேனிலவுக்கு உடன் செல்லும் இளம்பெண், மானேஜர் இடையே ஏற்படும் காதல். ஜெமினி கணெசன், வைஜயந்தி மாலா, தங்கவேலு நடித்தது. ஓஹொ எந்தன் பேபி, பாட்டு பாடவா போன்ற ஏ எம் ராஜா வின் இசையில் அமைந்த பாடல்கள் இன்றும் நம்மை கேட்கத் தூண்டுபவை. அனேகமாக சாமானிய மக்களுக்கு தேன் நிலவு என்ற கான்செப்டே இந்த படத்தில்தான் அறிமுகமாயிருக்க வேண்டும்.


நெஞ்சில் ஓர் ஆலயம்


எங்கிருந்தாலும் வாழ்க என்று காதலியை வாழ்த்த எப்படிப்பட்ட மனம் வேண்டும்? . காதலியின் நோயாளி கணவன், டாக்டரான காதலனிடம் சிகிச்சைக்கு வருகிறான். முடிவு என்ன?, ஒரு காட்சியைத்தவிர முழுக்க முழுக்க மருத்துவமனை செட்டிலேயே எடுக்கப்பட்ட படம். தில் ஏக் மந்திர் என இந்தியில் இவராலேயெ எடுக்கப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. எங்கிருந்தாலும் வாழ்க,நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் போன்ற கண்னதாசனின் பாடல்கள் இன்றும் முனுமுனுக்கப்படுவை. கல்யான் குமார்,தேவிகா, முத்துராமன் நடித்தது. இதில் தான் முத்துராமன் நோயாளி கணவனாக அறிமுகமானார்.


காதலிக்க நேரமில்லை


இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும். முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. விஸ்வனாதன் வேலை வேணும் என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக். அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள்,ஆள்மாறாட்டம் என இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது


சுமைதாங்கி


மயக்கமா? கலக்கமா? வாழ்விலே குழப்பமா? என்னும் பாடல் இடம் பெற்ற படம். தன் குடும்பத்தாராலேயே வஞ்சிக்கப்படும் ஒருவன் கிருத்துவ சன்னியாசியாக மாரும் கதை. ஜெமினி கணேசன் இந்த பாத்திரத்தில் கலக்கியிருப்பார்


வெண்ணிற ஆடை


ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி,ஸ்ரீகாந்த் ஆகியோர் அறிமுகமான படம். மனசிதைவு அடைந்த இளம் விதவையை மனநோய் மருத்துவர் சரிப்படுத்தும் கதை. இந்த படத்துக்கு தான் ஹேமமாலினியை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து நிராகரித்தார். பின்னர் அவர் இந்தி திரையுலகின் கனவுக்கன்னி ஆனார்


50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அடுத்த பதிவில் எம் ஜி ஆர்,சிவாஜி,கமல்,ரஜினி ஆகியோருடன் எடுத்த படங்களை எழுதுகிறேன்.

புகைப்பட உதவி

http://www.chennaibest.com/


பதிவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டால் மிக உதவியாய் இருக்கும்

September 14, 2008

திருப்புமுனை இயக்குனர் விக்ரமன்

ஏகபோக அரசர்கள் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் ஜெயிக்கும் நடுவிலே என்று புதுவசந்தமாய் வந்த விக்ரமன் திரைஉலகில் பலருக்கும் திருப்புமுனையை தந்தவர்.

புதுவசந்தம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கமுடியும் என்று சொன்ன கதை. ஆர்.பி. சௌத்ரி என்ற தயாரிப்பாளரை உருவாக்கிய படம். அவர் இதற்க்குப்பின் 50 படங்களுக்கு மேல் தயாரித்து, பல இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்களை. அறிமுகப்படுத்தினார். எஸ் ஏ ராஜ்குமார் (இசை) அவர்களுக்கும் இப்படம் பெரும் திருப்புமுனை. பாலம் என்னும் படத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றிருந்த முரளிக்கு இப்படம் நல்ல ஏற்றத்தை தந்தது. சித்தாராவை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. சித்தாரா சேலை,தோடு ஒரு ரவுண்டு வந்தது. சார்லியின் காமெடியும் பாராட்டுபெற்றது.

புதியமன்னர்கள்

ரஹ்மான் இசையமைத்த படம். வைரமுத்துவின் ஆதிக்கத்தில் இருந்து அவர் வெளிவந்த படம். பழனி பாரதியின் பாடல்களை ரஹ்மான் இப்படத்தில் பயன்படுத்தினார். இதன் பின்னரே பழனி பாரதி மற்றும் பல புதிய பாடலாசிரியர்களுக்கு கதவு திறந்தது. விக்ரம்,ஸ்ரீமன்,விவேக்,மோகினி,தாமு,பாபு கணேஷ் நடித்த மாணவர்கள் அரசியலுக்கு வரும் கதை. கட்டும் சேலை மடிப்பிலே நான் கசங்கி போனேனே என்ற கலக்கல் பாடல் இடம் பெற்ற படம்

நான் பேச நினைப்பதெல்லம்

ஆனந்த்பாபு,மோகினி,விவேக் நடித்த காத்லர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் முன்னேறி இணையும் கதை. விவேக் தனி காமெடியனாக புரமோசன் ஆன படம்

கோகுலம்

ஜெயராமை மக்களிடம் கொண்டு சென்ற படம். காதலி, காதலன் இறந்தபின் அவன் வீட்டிற்க்கு உதவும் கதை. சின்னி ஜெயந்த்/வடிவேலு காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது

பூவே உனக்காக


யுவராணி,சங்கவி,சுவாதி யின் புண்னியத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த விஜய்யின் வாழ்க்கையை மாற்றி அமைத்த படம். ஒரு மாதிரி படங்களில் நடிப்பவர் என்ற இமேஜ் மாறி பேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு வந்தது இந்த படத்தில் இருந்துதான். இதன் பின்னரே காதலுக்கு மரியாதை மூலம் முண்னனி நடிகராய் மாறினார். காதல் என்பது எக்சாம் இல்லை வெற்றி தோல்வி பார்க்க, அது ஒரு பீலிங் என்பதே விஜய்யின் முதல் பன்ச் டயலாக்.

சூரிய வம்சம்

நாட்டமைக்குப்பின் சரத்குமார்க்கு வெற்றிப்படம் இதுதான். அதன்பின் இன்னும் கூட இப்படி ஒரு வெற்றிப்படம் தரவில்லை. நாடாளுமன்றத்தேர்தலில் திருனெல்வேலித் தொகுதியில் இவர் போட்டி போட்ட போது, நாட்டாமையையும்,இதையும் நெல்லை செல்லும் எல்லா அரசு பேருந்துகளிலும் போட்டு வெளுத்தனர். இந்தியில் அமிதாப் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு ஊற்றிக்கொண்டது. தந்தைக்குப் பிடிக்காத மகன் முன்னேறும் கதை. காதல் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ஜா, தகுதி பார்த்து வர? என்ற வசனம் பல இளைஞர்களை அப்போது கனவில் ஆழ்த்தியது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கார்த்திக்குக்கு கடைசி சூப்பர் ஹிட் படம். திணறிக்கொண்டிருந்த அஜீத்தை ரெப்ரெஸ் செய்த படம். துண்டு துக்கடா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ரமேஸ் கண்ணா வை முழு நீள காமெடியனாக மாற்றிய படம். நன்றி பாராட்டுதல் கதைக்கரு.

வானத்தை போல

சின்ன கவுண்டருக்குப்பின் பெரிய வெற்றி இல்லாமல் தவித்த விஜயகாந்துக்கு அதை கொடுத்தபடம். ஆஸ்கார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய படம். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இப்படம் வெற்றி பெற்றால் பத்து படமாவது எடுப்பேன் இல்லையென்றால் வினியோகத்துக்கே போய் விடுவேன் என்றார். படம் ஓடி ரமணா,அன்னியன்,தசாவதாரம் போன்ற மெகா பட தயாரிப்பாளராய் மாறினார்.

அதன்பின் இவர் எடுத்த உன்னை நினைத்து சுமாராய் ஓடியது. ப்ரியமான தோழி, சென்னைகாதல் போன்றவை தோல்வி அடைந்தது. இவரின் இரண்டாம் படமான பெரும் புள்ளி இவருக்கு கரும்புள்ளியாய் அமைந்தது. அது மாணவன் ஆசிரியையை காதலிக்கும் கதை. என் உயிர்த் தோழன் புகழ் பாபுவும்,சுமா ரங்கனாத்தும் நடித்தது.

இவரின் பலம்

பேமிலி ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் கதை பண்னுவது
இனிமையான பாடல்கள், நகைச்சுவை யுடன் அதை கொடுப்பது
எல்லோரும் நல்லவரே என்னும் வகையில் கதாபாத்திரங்களை அமைப்பது
இவரின் எல்லா படங்களும் தெலுங்கில் பெரு வெற்றி பெற்றவை. இங்கு அடிவாங்கிய ப்ரியமான தோழி அங்கே வசந்தம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி அடைந்தது. (இருமொழி படமாகவே இது எடுக்கப்பட்டது. இங்கே மாதவன், அங்கே வெங்கடேஷ்).

இவரின் பலவீனம்

பிண்னனி இசை. இன்னும் லலலா லலல்லா வையே பிடித்து தொங்குவது.புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தாது

தற்போது விஜயகாந்த்,மீரா ஜாஸ்மின் நடிப்பில் மரியாதை என்னும் படம் இயக்க உள்ளார். தன் குறைகளை களைந்து அதை வெற்றிப்படமாக கொடுக்க வாழ்த்துக்கள்.

September 13, 2008

மக்கள் கலைஞர் – ஜெய்சங்கர்

ஒரு நடிகர் தன் திரைவாழ்க்கையை தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை ரசிகர்களை ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் புதிய ரசிகர்கள் வருவது நிற்கிறது. காரணம், முதலில் பார்வையாளனாக வந்து ரசிகனாகுபவன் தன் வயதுக்கு அருகாமையில் உள்ள நடிகர்களையே ஆதர்சமாக கொள்ளுகிறான். அடுத்த காரணம் ரசனை மாற்றம். இதன் காரணமாகவே நடிகர்கள் குறிப்பிட்ட வயதுக்குப்பின்னால் வெற்றி பெறுவது கடினமாகிறது. உச்ச நடிகர்கள் மட்டுமே இதனைத் தாண்டி தாக்குப்பிடிக்கிறார்கள். இங்கு எம்ஜியார்,சிவாஜி,ரஜினி,கமல் போன்றோரால் மட்டுமே தலைமுறையைத்தாண்டி ரசிகர்களை ஈர்க்க முடிகிறது. மற்றவர்கள் பீல்ட் அவுட் ஆகிறார்கள் அல்லது வில்லன்/ குணசித்திர நடிகர்களாக பதவியிறக்கம் பெறுகிறார்கள். இந்த தலைமுறையில் பிரபு,கார்த்திக் போன்றோரை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். இந்த காலகட்டத்தை நடிகர்களின் மெனோபாஸ் என்றும் சொல்லலாம்.

எம்ஜியார், சிவாஜி என்ற மலைகள் இருந்த போது தனக்கென ஒரு பாணியை வகுத்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மக்கள் கலைஞன் என்று பெயர் பெற்ற ஜெய்சங்கர் அவர்களும் இந்த காலகட்டத்தில் திணறி வில்லன் நடிகராக மாறினார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்த அவர் வெள்ளிக்கிழமை ஹீரோ எனவும் புகழப்பட்டவர். அவர் உச்சத்தில் இருந்த போது வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய் டிவியை ஸ்டார் குழுமம் வாங்கும்முன் அந்த டிவிக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர் இவரே. இவரின் படங்களைப்போட்டே அந்த டிவி கிராமங்களில் ஜெய்சங்கர் டிவி என பெயர் பெற்றது.

இவர் வருகைக்கு முன் திரைஉலகில் சீனியர்களை அண்ணா,சார் போன்ற அடைமொழிகளில் அழைக்கும் பழக்கம் இருந்தது. ஹாய் என்று வர்க்கபேதமில்லாமல் அனைவரையும் அழைத்து ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்தினார். (பின்னர் சத்யராஜ் வந்து – தலைவா என மாற்றினார்). துப்பறியும் படங்கள், கௌபாய் படங்கள் என்றால் அப்போதைய இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவரே.

பட்டணத்தில் பூதம், துணிவே துணை, பூவா தலையா, வைரம், கங்கா, சி ஐ டி சங்கர், வல்லவன் ஒருவன்,யார் நீ, இருவல்லவர்கள், ஊமை விழிகள், குழந்தையும் தெய்வமும், நூற்றுக்கு நூறு,வீட்டுக்கு வீடு,நான்கு கில்லாடிகள் போன்ற படங்கள் இவரின் முக்கிய படங்கள். முரட்டுக்காளையில் வில்லனாக மாறி பின்னர் ரஜினியின் ஆஸ்தான வில்லனானார் (தனிக்காட்டு ராஜா, பாயும்புலி, துடிக்கும் கரங்கள்). கமலுடன் சவால், அபூர்வ சகோதரர்கள் என ஒரு ரவுண்டு வந்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் 2000 ல் மறைந்தார். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. பல சமூக சேவைகளை மூன்றாம் நபர் அறியாமல் செய்தவர். தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தாதவர். ஜெண்டில்மேன் என புகழப்பட்டவர்.

குறிப்பிட்ட வயதுக்குப்பின் தங்களுக்கு ஏற்ற கதைக்களங்களை உருவாக்கி அதில் மிளிர வேண்டும் அல்லது உருவாக்கத்தெரிந்த இயக்குநர்களின் ஆதரவு வேண்டும். இல்லையெனில் பதவியிறக்கம் தான் இங்கே.

வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்


தற்போதைய தலைமுறைக்கு வெறும் குணசித்திர/காமெடி நடிகராக அறியப்படும் ஆர்.சுந்தர்ராஜன், பா வரிசை இயக்குனர்கள் என அறியப்பட்ட பாலசந்தர்,பாரதிராஜா,பாலுமகேந்திரா,பாக்யராஜ் ஆகியோர் தங்கள் உச்சத்தில் இருக்கும் போதே தன் முத்திரையை பதித்தவர். குறுகிய இடைவெளியில் ஏழு வெள்ளிவிழா படங்களை தந்து அனைவரையும் அசத்தியவர்.

இயல்பான திரைக்கதை,மென்மையான பாடல்கள்,அருமையான நகைச்சுவை இந்த மூன்றும் இவர் படங்களின் வெற்றிக்கு காரணம். அதில் சில முக்கிய படங்களை பார்க்கலாம்

பயனங்கள் முடிவதில்லை

கமல் நடித்த வாழ்வே மாயமும் இதே கதைதான். சாகப்போகும் வியாதி உள்ள காதலன், காதலியின் நல்வாழ்வுக்காக அவளை வெறுப்பது போல் நடிப்பது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இரண்டும் வெற்றி என்றாலும் பயனங்கள் முடிவதில்லை சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலத்தில் புதியதாக டேப் ரிக்காடர்கள் வாங்கியவர்கள் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப்பட கேசட்தான். கவுண்டமனியின் 'இந்த சென்னை மாநகரத்திலே' காமெடி சிறப்பாக பேசப்பட்ட ஒன்று.

வைதேகி காத்திருந்தாள்

விஜயகாந்துக்கு தாய்க்குலத்தின் ஆதரவு இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது எனலாம். மூன்று கதைகளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு இல்லதாதால் சோகம். ஒருவருக்கு அதிகம் இருந்ததால் சோகம் (தண்ணீர்). ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடலை மெல்லிசைக்குழுக்களும்,அழகு மலராட பாடலை கல்லூரியின் ஆண்டு விழாக்களில் ஆடும் பெண்களும் தத்து எடுத்துக்கொண்டனர். கவுண்டர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வந்து ஆல் தியேட்டரையும் அதிரவைத்த படம்

நான் பாடும் பாடல்

விதவை சென்டிமென்ட் படம். கெடா எப்ப வெட்டுவாங்க? ரெண்டு ரூவாய்க்கு இவ்வளோ கொடுக்கும் போதேய் நெனைச்சேன், பீஸ் போயிருச்சா? போன்ற கவுண்டரின் பன்ச் டயலாக்குகள், பாடவா உன் பாடலை,மச்சானை வச்சுக்கடி போன்ற பாடல்கள் எல்லம் சேர்ந்து நல்ல பொழுதுபோக்கு படம்.

குங்குமசிமிழ்

மோகன்,ரேவதி,இளவரசி மற்றும் சந்திரசேகர் நடித்தது. நிலவு தூங்கும் நேரம் என்ற சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்ற படம்.

அம்மன் கோவில் கிழக்காலே
விஜயகாந்துக்கு மற்றுமொரு பிரேக் தந்த படம்.


ராஜாதி ராஜா
இளையராஜா தயாரித்த படம். பிறகென்ன சொல்ல வேண்டும் பாடல்களைப் பற்றி.

மெல்லத் திறந்தது கதவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த படம். மோகன்,அமலா,ராதா நடித்தது. குழலூதும் கண்னனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?, வா வென்னிலா உன்னைத்தானே மேகம் தேடுதே போன்ற மறக்க முடியாத பாடல்கள் நிறைந்த படம். இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து. ஏவிஎம் தயாரித்த படமிது.


இவை தவிர நினைவே ஒரு சங்கீதம்,என் ஆசை மச்சான்,திருமதி பழனிச்சாமி, சாமி போட்ட முடிச்சு போன்ற படங்களையும் இயக்கினார்.

90 களில் பெரும்பாலான கதானாயகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதையே விரும்பியது,இவரது படங்களுக்கு ஆதாரமான லேடிஸ் ஆடியன்ஸ் தொலைக்காட்சிகள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியது, ரஹ்மானின் வருகையால் மெலடி பாடலை ரசிப்பவர்கள் குறைந்தது மற்றும் பொதுவாகவே குடும்பப்பாங்கான படங்களை ரசிப்பவர்கள் குறைந்தது இவற்றால் இவரது சில கடைசி படங்கள் தோல்வி அடைந்தன.
ஒயிலாட்டம் என்ற படத்தை இயக்கி,நடித்து தயாரித்தார். படம் வெற்றி பெறவில்லை. ஆனால் நடிப்பு என்னும் பாதை திறந்தது. அறியப்பட்ட நடிகராய் மாறிவிட்டார்.

அருமையான பாடல்களை ராஜா தந்திருந்தாலும், கவுண்டரின் நகைச்சுவை இருந்தாலும் இவரின் கதையும்,இயக்கமுமே அந்த படங்களை வெற்றி பெற வைத்தது. ஏனென்றால் அதைவிட நல்ல பாடல்களும்,நகைச்சுவையும் இருந்த படங்கள் பல தோல்வி கண்டுள்ளனவே?,

ஒரு நாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஐவர்

37 வருடமாக ஆடப்பட்டு வரும் இது, தோன்றியதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் இவர்கள்.


ஜாவேத் மியான்டாட்


சாப்ட் ஹேண்ட் சிங்கிள் இவரது சிறப்பு. தட்டி தட்டி எடுக்கப்படும் இவருடைய சிங்கிள்கள் எதிர் அணியின் வசமிருக்கும் ஆட்டத்தை தட்டிப் பறித்து விடும். 15 முதல் 40 ஓவர் வரையில் இந்த வகை சிங்கிள்கள் எந்த அணிக்கும் கைகொடுக்கும். டீன் ஜோன்ஸ், பேவன் ஆகியோர் இதை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றனர். இந்த வகை ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக முதலில் பயன்படுத்தியவர் இவரே.


ஜான்டி ரோட்ஸ்

இவர் வருகைக்கு முன் விக்கெட் கீப்பர் மட்டுமே ஸ்பெசலிஸ்ட் பீல்டர். பேக்வர்ட் பாயிண்ட்ம் ஒரு ஸ்பெசலிஸ்ட் ப்ளேஸ், 30 முதல் 40 ரன் தடுக்க முடியும் என காட்டியவர். இவர் வருகைக்கு பின்னர்தான் எல்லா அணிகளிலும் பீல்டிங் புரட்சி ஏற்பட்டது

கிரேட் பாட்ச்

நம்ம ஸ்ரீகாந்த்,அதற்கு பின்னால் ஜயசூரிய/கலுவித்தரன அப்படி ஆடியிருந்தாலும், வெற்றிகரமாக முதலில் நடத்திக்காட்டியவர் இவரே. அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் இன்று எந்த அணியும் இல்லை. 1992 ல் இவர் அம்புரோஸ்,அக்ரம் போன்றோரை அடித்ததைப் பார்த்துதான் ரணதுங்காவுக்கே இந்த ஐடியா வந்திருக்க வேண்டும்.

பாப் ஊல்மர்

கிரிக்கெட்டில் கோச்சுகளின் முக்கியதுவத்தை உணர வைத்தவர். முதல் லேப் டாப் கோச். இவர் வருகைக்கு பின்னரே எதிர் அணியினரின் பலவீனத்தை அக்கு வேறு ஆணி வேறாக பலரும் அலசத்தொடங்கினர்.

கில்க்ரிஸ்ட்

பலத்த எதிர்ப்புக்கிடையில் ஹீலேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்தவர். அதற்க்கு முன்னால் விக்கெட் கீப்பர் எடுக்கும் ரன்கள் போனஸ் என்று இருந்த நிலையை மாற்றியவர். இப்பொதெல்லாம் எந்த அணியிலும் விக்கெட் கீப்பர் சிறந்த மட்டையாளராக இருக்க இவர் தான் காரணம்

ஐ சி சி ஆட்டத்தை பிரபலப்படுத்த பல புதிய விதிகளை கொண்டு வந்தது. அதில் பல தோல்வி அடைந்தன (எ.கா. சூப்பர் சப் ரூல்). ஆனால் இந்த தனிப்பட்ட சாதனையாளர்கள் தங்கள் திறமையால் ஆட்ட்டத்தை சுவராசியமாக்கினார்கள். அமைப்புகள் தேவை தான், ஆனால் அதை விட முக்கியம் ஆட்டக்காரர்கள்.

September 12, 2008

கர்ணன் -- ஒளிப்பதிவு மேதை?

உலக அறிவியல் வளர்ச்சியை இரண்டு கட்டங்களில் சொல்வார்கள். முதலில் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்தது, பின்னர் அதையே தலைகீழாய் திருப்பி நுண்ணோக்கியாய் மாற்றி அணு,வைரஸ் போன்றவற்றை ஆராய்ந்தது. ஆங்கில சயின்ஸ் பிக்சன் படங்களையும் இந்த இரண்டில் அடக்கி விடலாம். ஒன்று வானில் இருந்து ஏதாவது வரும். இல்லையென்றால் சாதாரண பிராணி அசுரத்தனமாகும்.

சி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.

மீனாவின் தாயார் ராஜ் மல்லிகா, சித்தி ராஜ் கோகிலா, ஜெயமாலா, மாதவி,சுகந்தி ஆகியோரை மற்றோர் கோணத்தில் காட்டியவர்.
இவரது ஜம்பு, எங்க பாட்டன் சொத்து,ரெட்டை குழல் துப்பாக்கி,ஜான்ஸி போன்ற படங்கள் எம்ஜியாரின் படங்களுக்கு இணையான ரீ ரீலீஸ் மதிப்பு
பெற்றவை.

இவர் பட சண்டைக்காட்சிகளை பார்த்தவர்கள் யாரும் தலைவலியில் இருந்து தப்ப முடியாது. பட இடைவேளையில் அதிக டீ விற்பனை ஆனதே இதற்க்கு ஆதாரம். சமவெளியில் தொடங்கும் சண்டைக்காட்சி பள்ளத்தாக்குகள்,மலைகள்,பாலைவனம் என பிரயாணித்து மீண்டும் சமவெளியில் முடியும்.இதன் மூலம் பார்வையாளனுக்கு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை போன்ற அனைத்து நிலப்பிரிவுகளுக்கும் சென்ற திருப்தி வரும். ஒரு வகையில் பார்த்தால் அவர் பின்னவீனத்துவ வாதி. கட்டுடைப்புக்கு அவர் பட சண்டைக்காட்சிகளே உதாரணம். பல வகை நிலங்களை காட்டுவதையும் அடிபடுவோரின் உணர்ச்சிகளையும் நாம் தொடர்புபடுத்திக்கொள்லலாம்.

ஆறு,குளம்,குட்டை என சகல நீர்நிலைகளிலும் நாயகியரை குறைந்த வெள்ளை உடையில் குளிக்கவைத்தவர். பரிகாராமாக நாயகர்களுக்கு தொப்பி முதல் ஷூ வரை கடின ஒளி ஊடுருவாத தோல் ஆடை அணிவித்தவர். ஆணை புனிதமாக போற்றிய கட்டுடைப்பு.

அவருடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர்கள் அசோகன் மற்றும் ஜெய்சங்கர். விஜயகாந்த்,கார்த்திக்,ராதாரவி ஆகியோருடனும் கலைச்சேவை புரிந்துள்ளார். சி சென்டர் ரசிகர்கள் கதானாயகனுக்காகவும்,மசாலாவுக்காகவும் தான் படம் பார்ப்பார்கள். இயக்குனருக்காக அவர்கள் படம் பார்த்தால் அது விட்டலாச்சார்யாக்காகவும், கர்ணனுக்காகவும் தான்.

September 11, 2008

தமிழ் சினிமாவின் தங்க ஆண்டு - 1989

1989 ஆம் வருடம் சினிமா துறையில் இருந்த எல்லொருக்கும் தங்க வருடமாயிருந்தது. அந்த ஆண்டு வெளியான பல படங்கள் (டப்பிங்) உட்பட பெரு வெற்றி பெற்றன. அந்த படங்கள் அதில் இடம் பெற்ற புதியவர்களுக்கு முகவரியாகவும், மற்றவர்களுக்கு ஒரு மைல்கல் படமாகவும் அமைந்தன. அதில் முக்கிய படங்களைப் பார்ப்போம்

ராஜாதி ராஜா
ராஜ் டிவிக்காகவே எடுத்த படம் என்று கூட சொல்லலாம். இது வரை அவர்கள் 100 முறைக்கு மேல் ஒளிபரப்பியிருப்பார்கள். அவர்கள் வீடியொ கேசட் வெளியிட்ட போது அதிகம் விற்பனையானவற்றில் இதுவும் ஒன்று.அருமையான பாடல்கள், ரஜினியின் அப்பாவி நடிப்பு என களைகட்டிய படம்

வருஷம் 16
சைனீஸ் பட்லர் குஷ்பூவையும், கார்த்திக்கின் குறும்பான நடிப்பையும் மறக்க முடியுமா?. பாடல்கள் இன்றும் பலரால் கேட்கப்பட்டு வருகின்றன. அப்பொதெல்லாம் பல உதவி இயக்குனர்கள் "வருஷம் 16 மாதிரி ஒரு பேமிலி சப்ஜெக்ட் வச்சிருக்கேன்" என்று தான் ஆரம்பிப்பார்கள்

அபூர்வ சகோதரர்கள்
இன்றும் பல கல்லூரி விழாக்களில் யாராவது அப்பு வேஷம் போடுகிறார்கள். காதல் தோல்வி அடைந்தவர்களின் (இப்பல்லாம் தோல்வி அடையுதா காதல்?) தேசிய கீதமான உன்னை நெனைச்சேன் பாடலை யாரால் மறக்க முடியும்?.

கரகாட்டக்காரன்
வாழைப்பழம், இப்ப யாரு வச்சுருக்கா? எல்லாம் சாகாவரம் பெற்றுவிட்டன. பாடல்கள் பஞ்சாமிர்தம். ராமராஜன் என்றாலே நினைவுக்கு வருவது.

புதுப் புது அர்த்தங்கள்
சித்தாராவை இங்கு அறிமுகப்படுத்திய படம். விவேக்கிற்க்கு கவனக் குவிப்பை ஏற்படுத்திய படம். யாரால் மறக்க முடியும் கேளடி கண்மனியையும்,கல்யாண மாலையையும்?

புதிய பாதை

பார்த்திபன் நடித்து,இயக்கி அறிமுகமான படம். 40 படம் நடிச்சு எங்களுக்கு கிடைச்ச ஆக்‌ஷன் இமேஜ் ஒரு படத்திலேயே உனக்கு கிடச்சுருச்சே என ரஜினி பாராட்டிய படம். அனாதையாக்கப்படுதலின் சோகத்தை கன்னத்தில் அறைந்து சொல்லியிருப்பார்கள். இன்று வரை இதுதான் பார்த்திபனின் சிறந்த படம்.

இதயத்தை திருடாதே
இன் அன்ட் அரௌண்ட் 35 எல்லோரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள். தியேட்டர் எல்லாம் வாலிப அலை. காவியம் பாடவா தென்றலே, ஓம் நமஹா, ஓ பாப்பா லாலி இப்பவும் காதுக்குள் கேட்கிறது.

இதுதான்டா போலிஸ்
கவர்ச்சி, காமெடி இல்லை, பாடல் ஆவரேஜ், யாரோ நடிச்சது, டப்பிங் இப்படி எல்லாமே மைனஸ். ஆனால் படம், பட்டி தொட்டி எல்லாம் பட்டை மட்டுமில்லாமல் லவங்கம்,கிராம்பு எல்லாவற்றையும் கிளப்பி ஓடியது. இன்னும் இவர் பெயர் இதுதான்டா போலிஸ் ராஜசேகர் தான்.

இது தவிர வெற்றிவிழா,மாப்பிள்ளை,ராஜா சின்ன ரோஜா,பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற வெற்றி படங்களும் வந்தன.
இந்த படங்கள் எல்லாமே (இ. போ தவிர) இசை - இளையராஜா.

இதெல்லாம் போதாதென்று இந்தியில் இருந்து கயாமத் ஸே கயாமத் தக், தேஸாப் போன்ற படங்களும் டப் செய்யப்பட்டு அவையும் இங்கு வெற்றி பெற்றன.


1989 போல இன்னொரு வருடம் வருமா என வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டுமல்ல ரசிகன் ஆகிய நானும் காத்திருக்கிறேன்

September 09, 2008

ரோபோ ஆரம்பம் - மர்மயோகி குழுவினர் நிம்மதி

ரஜினியின் ரோபோ ஆரம்பிக்கப்பட்டவுடன் எல்லோர் கவனமும் அதை நோக்கி திரும்பிவிட்டது. இணைய தளங்கள்,பத்திரிக்கைகள்,பிளாக்குகள் என அனைவரும் அதைப்பற்றியே பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கும் 365 நாட்களுக்கும் செய்தி வேண்டுமல்லவா?


இந்த விஷயத்தில் அதிக சந்தோஷம் அடைந்திருப்பது மர்மயோகி வட்டாரமே. தசாவதார வெற்றியாலும், குசேலன் சுருண்டதாலும் மர்மயோகி பற்றி எழுத வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஏனென்றால் எல்லாத்தரப்பும் இவர்களைப் பற்றிய செய்தியைத்தான் அதிகம் படிக்கிறார்கள்.


ரஜினிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் கமலை விட ரஜினிக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். இனி மர்மயோகியைப் பற்றி பிரஸ் ரிலீஸ் கொடுத்தால் கூட போடுவார்களா என்பது சந்தேகமே. அதனால் தேவையற்ற செய்திகள் வெளியாகது. ஹைப்பும் எழும்பாது. அந்த படம் எடுக்கப்படும் 2 வருடங்களில் சத்தமில்லாமல் நம் படத்தை முடித்துவிடலாம் என அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

September 08, 2008

விஜய், ஜெயம் ரவி இது நியாயமா?

முன்னெல்லாம் கொறஞ்சது வருஷத்துக்கு பத்து தெலுங்கு டப்பிங் படம் வரும். அதப்பார்த்துட்டு வெளிய வந்தமுன்னா என்னடா தமிழ்நாடு இவ்வளவு அமைதியா இருக்கேன்னு தோணும்.

சோபன்பாபு,கிருஷ்ணா,விட்டலாச்சார்யா இவங்கள்ளாம் ஓஞ்ச பின்னாடி சிரஞ்சீவியும்,விஜயசாந்தியும் வந்தாங்க. இதுதாண்டா போலிஸ், இதயத்தை திருடாதேக்கு அப்பறம் கொஞ்சம் ராஜசேகர் படமும், நாகார்ஜூனா படமும் வந்துச்சு.

இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டது நம்ம ரோஜா. செம்பருத்தில நம்ம ஆளூக பூராம் மட்டையாகவும், சுதாருச்சுக்கிட்ட நம்ம டப்பிங் ஆளூக வரிசையா ரோஜா படத்த இறக்கிட்டாங்க. அதனால பாலகிருஷ்ணா,வினோத்குமார் மாதிரி ஆளூக படத்தையும் பார்க்க வேண்டியதாப்போச்சு.

இப்பல்லாம் பாருங்க டப்பிங் படத்தயே காணோம்.

ஜெயிக்கற படம்தான் டப்பாகும். அங்க ஜெயிக்கிறது முக்கியமா மூணு டைப்பு.

பக்கா நேட்டிவிட்டி படம். அத இங்க டப் பண்ணா ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு

அப்புறம் இங்கன இருந்து சுட்டு எடுக்கிறது. கருவாடு மீனாகுமா? கறந்த பால் மடிபுகுமான்னு? காளிமுத்து டயலாக்தான் ஞாபகம் வருது.

அடுத்தது அவங்களே தெரியாம எடுத்துற்ற நல்ல படம். இத நம்ம விஜய் கோஷ்டி அப்படியே அமுக்கீருது. இதுக்காக தனி உளவுத்துறையையே நம்ம டாக்டர் வச்சிருக்காரு. இப்ப ரவியும் அதுக்கு போட்டியா வந்துட்டாரு.

இனிமே தெலுங்கு படத்த ஜெமினியிலயும், ஈ லயும் தான் பார்க்கணும் போல. அத போட்டாலே வீட்டுல கொன்னுற்றாங்க. யாராச்சும் திருப்பதி போனா சொல்லுங்க. உங்க கூடவே வர்றேன். நீங்க லட்டு வாங்க நிக்கும் போது நான் ரெண்டு படம் பார்த்துட்டு வந்துர்றேன். எனக்கு ரெண்டு லட்டு குடுத்தீங்கன்னா அடில இருந்து தப்பிச்சுக்கிருவேன்.

September 07, 2008

ரஜினிக்கு தலைமைப்பண்பு இருக்கிறதா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பலரும் விவாதித்து விட்டார்கள். அரசியலுக்கு அவசியமான தலைமைப்பண்பு அவரிடம் உள்ளதா என்பதை நாம் முதலில் பார்க்கலாம். பொது பிரச்சினைகளை விட்டு விடுவோம். அவர் சார்ந்த திரைஉலகில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர் அணுகிய விதத்தை மட்டும் பார்க்கலாம்.

96-97 ல் திரை உலகத்தை உலுக்கிய பிரச்சினை பெப்சிக்கும் இயக்குநர்களுக்குமான பிரச்சினை. ராமன் அப்துல்லா படத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பேக்கப் சொன்னதால் ஆரம்பித்த இந்த பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு வருடம் திரைஉலகை காயப்போட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர பலரும் பாடுபட்டனர். ஆனால் இதை ரஜினி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அவரின் கருத்தாக ஒரு அ னா கூட இப்பிரச்சினையில் பதிவாகவில்லை.

90 களின் மத்தியில் ஆரம்பித்து, ஜெயலலிதா 2004 ல் தடுப்பு சட்டம் கொண்டு வரும் வரை குத்தாட்டம் போட்டது திருட்டு விசிடி பிரச்சினை. பல தியேட்டர்களை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிய பெருமைக்குரியது இது. இந்த காலகட்டத்தில் இரண்டு பேர் சில படங்களை எடுத்தார்கள். அதை உப்புமா படம் என்றால், அதற்கு முன்னால் உப்புமா படம் எடுத்தவர்கள் சண்டைக்கு வருவார்கள். அத்தகைய படங்களை எடுத்தவர்கள் கே.ராஜன் மற்றும் பாபு கணேஷ். அவர்கள் கூட திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். அவர்கள் படங்களை விசிடியுடன் 100 ரூபாய் கொடுத்தாலும் யாரும் பார்க்கமாட்டார்கள். பர்மா பஜாரில் பல தடவை இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இந்த காலகட்டத்தில் தான் (1996- 2004) முத்து, அருணாசலம்,படையப்பா மற்றும் பாபா ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டுகளில் திருட்டு விசிடி யை எதிர்த்து எந்த வாய்ஸ்ம் ரஜினியால் கொடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? நாம இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் தர்றோம். எப்படியும் ஓடிடும். எதுக்கு அனாவசியமா வாய்ஸ் என்ற எண்ணமா?

தன்னை உயர்த்திய துறைக்கு வந்த பிரச்சினைகளை தீர்க்க துரும்பைக் கூட தூக்கிப்போடாத ரஜினிக்கு தலைமைப் பண்பு எந்த அளவுக்கு இருக்கிறது?.

September 05, 2008

எந்திரம் தி ரோபோ புதிய தகவல்கள்

கதை நடப்பது 2025ல். மனிதர்களைப் போல தோற்றம் உடைய ரோபோக்களை வைத்து உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரி. அதன் மூலம் மக்கள் படும் கஷ்டங்களை அறியும் முக்கிய விஞ்ஞானி அந்த சர்வாதிகாரியிடம் இருந்து தப்புகிறார். அதற்கு உதவும் ரஜினியையே அந்த ரோபோவை போல மாற்றுகிறார். சில உபகரணங்கள் ரஜினி உடலில் பொருத்தப்படுகின்றன. அதன் மூலம் எப்படி அவர் மக்களை விடுவிக்கிறார்? என்பதே கதையின் ஒன் லைன்.

ஐஸ்வர்யா பச்சன் காதலி. ரஜினியும் இவரும் மட்டுமே எல்லா மொழிக்கும். சர்வாதிகாரி,விஞ்ஞானி மொழிக்கு ஏற்ப மாறுவார்கள்.இந்திப் பதிப்பில் முக்கிய இந்தி நடிகர்களை நடிக்க வைக்க ஈராஸ் நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது.

ஏக் துஜே கேலியே,சனம் தேரி கசம், சாகர் மற்றும் சாச்சி 420 போன்ற நேரடி வெற்றிப்படங்களிலும், ஹிந்துஸ்தானி,அப்பு ராஜா போன்ற டப்பிங் படங்களிலும் வெற்றியை ருசித்த கமல் இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் தசாவதாரத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் மர்மயோகிக்கு கூட ஹேமமாலினி, கஜோல், ரஹ்மான் என்று சேலபில் ஸ்டார் வேண்டும் என அவர்களை தொங்கிக்கொண்டிருக்கிறார்.

ரஜினி அங்கு நடித்ததெல்லாம் பி கிரேட் படங்கள் தான். (அந்தா கானூன், கங்குவா, ராஜகுரு,லட்சத்தில் ஒருவன்). அவர் நடித்த ஏ கிரேட் படத்தில் இரண்டாம், மூன்றாம் கதானாயகனே. (பாட்ஷா வின் மூலமான ஹம்மில் அவருக்கு செண்பகா வின் வேடம்). தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான். அதனால் தான் சிவாஜி யை கூட அங்கே டப் செய்யவில்லை.

ஈராஸ் நிறுவனம் இந்தியில், படத்திற்க்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்த சர்வாதிகாரி,விஞ்ஞானி கேரக்டர்களுக்கு முக்கிய இந்தி நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஷங்கர் வழக்கப்படி இரண்டு பாடல்கள் படமாக்கப்படும். பார்ப்போம் ஐஸ்வர்யா, ரஹ்மான் கூட்டணியில்இந்த படமாவது ரஜினிக்கு இந்தியில் வெற்றி தருகிறதா? என.

September 02, 2008

பாலபாரதி இப்படி செய்யலாமா?


பதிவர் சந்திப்புகள் எப்போதும் இரண்டு நாட்களுக்கான உற்சாகத்தைக் கொடுக்கும். வாழ்வதன் மீதான காதலை அதிகப்படுத்தும் அந்த ஒத்த அலை வரிசையினரின் சந்திப்பு. இந்த ஞாயிறு அப்படியில்லை. காரணம் பாலபாரதி.



நான் படித்த சிற்றூரில் நிறத்தாலும் அதிர்ந்து பேசா குணத்தாலும் என் தெருப்பையன்களிடம் நான் அன்னியப்பட்டுபோயிருந்தேன். வகுப்பிலும் வீட்டிலும் செல்லப்பிள்ளை, ஆனால் தெருவில் கிடைக்காத அங்கீகாரம் என்னை அலைக்கழித்தது.என்னை அவர்களிடம் நிரூபிப்பதற்க்காக பலான படங்கள்,சிகரட் என திசை மாறத்தொடங்கினேன். என் தந்தையின் இடமாறுதல் எனக்கு ஏற்படவிருந்த விபத்துக்களை தடுத்து நிறுத்தியது.
ஒரு சிறுகுழுவிடம் எனக்கு கிடைக்காத அங்கீகாரமே என்னை துவளச்செய்தது.



திருநங்கைகள் தங்கள் வாழ்வில் எங்குமே அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்கிறார்கள். ஒவ்வொருமுறை அது மறுக்கப்படும்போதும் ஒரு காயத்தை அது அவர்கள் மனதில் உண்டாக்குகிறது. வாழ்வின் மீதான காதல்தானே அவர்களை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளச்செய்கிறது. பாலபாரதியின் அவன் - அது = அவள் படித்தபின் எனக்குத் தோன்றியதெல்லாம் மன வலி என்றால் என்னவென்றே உணராமல் அடிக்கடி மனசு கஷ்டமா இருக்கு என்ற பதத்தை உபயோகிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சிதான்.



இனி திருநங்கைகளை காணும் போதோ அவர்களிடம் உரையாடும் போதோ என்னிடம் அனுதாபத்தொனி இருக்காது. தோழமைத்தொனி மட்டுமே. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.இந்த புனைவு என் மனத்தில் விதைத்ததும் அதைத்தான்.

ஆசிரியர் : யெஸ். பாலபாரதி

தோழமை வெளியீடு விலை: ரூ. 120 பக்கங்கள் : 184


தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்

தோழமை 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை

நடிக்காதீங்க, இயக்குநர் மணிவண்ணன்

அன்புள்ள இயக்குநர் மணிவண்ணனுக்கு

நான் முன்னெல்லாம் வாரத்துக்கு ஒரு படம்னு வருஷம் 40-50 படம் பார்த்துருவேங்க. இப்ப மாசம் ஒண்ணுன்ணு 12 தான். அதிலயும் பாருங்க இந்த வருஷம் நாலுதான். நான் ஆசைப்பட்டாலும் உங்க சினிமாக்காரங்க எனக்கு அதிகம் செலவு வைக்கிறதில்லீங்க.

ஒரு காலத்துல ரசிக்கிற மாதிரி படமெல்லாம் எடுத்தீங்க

கோபுரங்கள் சாய்வதில்லை
இளமைக்காலங்கள
இங்கேயும் ஒரு கங்கை
நூறாவது நாள்
24 மணி நேரம்
விடிஞ்சா கல்யாணம்
முதல் வசந்தம்
இனி ஒரு சுதந்திரம்
அமைதிப்படை
மூன்றாம் கண்ணுன்னு.

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, தோழர் பாண்டியன், வீரப்பதக்கம், ஆண்டான் அடிமைன்னு சொதப்ப ஆரம்பிச்சுட்டீங்க. அமைதிப்படைக்கப்புறம் நடிப்புல அதிக கவனம் செலுத்தறனால நல்ல படம் எடுக்க முடியலையா?

தமிழ்சினிமா ஆடியன்ஸ்ஸ ரெண்டு பிரிவா பிரிக்கலாங்னா. ஒண்ணு 18 ல இருந்து 25 வயசு வரைக்கும் இருக்கிற படிக்கிற,வேலைக்குப்போற, வேலை இல்லாத ஆளுங்க. இதுல என்னை மாதிரி சினிமா பைத்தியங்களையும் சேர்த்துக்கலாம். இன்னொண்ணு பேம்லி ஆடியன்ஸ்.


இரண்டு கூட்டமுமே இப்ப கடைசியா நீங்க எடுத்த படங்களுக்கு வரலைண்ணா.

நீங்க இப்ப இருக்கிற பசங்களுக்கு ஏத்த மாதிரி இளைய தலைமுறை ஆளுங்களை போட்டு படம் எடுக்கிறதில்ல, பாட்டுகளை படமாக்கிறதுலயும் வீக்கு. நாத்திக கருத்துகள் அதிகமா இருக்கிறதால தன்னை மாதிரியே கட்டுபெட்டுயா தன் பிள்ளைக இருக்கணும்னு நினைக்கிற பேமிலியும் வர்றதில்ல.

நீங்களும் என்னதான் செய்வீங்க?

பேசாம நடிப்ப கொறைங்கண்ணா. நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம் மாதிரி திரில்லர் படம் எடுங்கண்ணா. அதுக்கு இப்ப இங்க ஆளுங்க கம்மி.

இப்ப பாருங்க மாசத்துக்கு ஒண்ணாச்சும் பார்க்கணுமேன்னு மொக்க படமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. நீங்க வந்தீங்கன்னா அதில ஒண்ணு எனக்கு கொறையும்.

இப்படிக்கு

நல்ல படம் பார்க்க ஆசைப்படும் சராசரி சினிமா ரசிகன்.