August 26, 2012

சின்னதம்பி திரைப்படம் – சில நினைவுகள்


எவ்வளவோ படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு இருக்கும். மேலும் ரீப்பீட்டட் ஆடியன்ஸும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு சகலகலா வல்லவன், கரகாட்டக்காரன், பாட்ஷா, உள்ளத்தை அள்ளி தா மற்றும் கில்லி போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் இடம்பெற்ற படம்தான் சின்னதம்பி. அதுவும் இப்படம் வெளியான போது 60 ஆண்டுகால தமிழ் சினிமா வசூல் சாதனையை இது உடைத்து விட்டதாகவே பேசிக்கொண்டார்கள்.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தான பாரதியும் வாசுவும் அவரிடம் இருந்து வெளிவந்து, இணைந்து இயக்கிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் (பன்னீர் புஷ்பங்கள் தவிர) போக, அவர்களின் பிரிவு தவிர்க்க முடியாமல் ஆனது.

பி வாசு தனித்து இயக்கிய முதல் தமிழ்படம் என் தங்கச்சி படிச்சவ. இந்தப் படத்தின் வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சத்யா மூவிஸ் வீரப்பன், தான் ரஜினியை வைத்து அடுத்து தயாரிக்க இருந்த பணக்காரன் திரைப்படத்திற்கு வாசுவை ஒப்பந்தம் செய்தார். வாசுவின் தந்தை பீதாம்பரம் எம்ஜியாரின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் என்பது அவருக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1990ல் பணக்காரன் மட்டுமில்லாமல் வேலை கிடைச்சுடுச்சு மற்றும் நடிகன் ஆகிய படங்களை சத்யராஜை வைத்து இயக்கினார்.

வேலை கிடைச்சுடுச்சு படமே கதாநாயகனாக சத்யராஜுக்கு ஒரு திருப்புமுனைப் படம். அதற்கு முன் வந்த படங்களில் எல்லாம் அவரை முழு ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து வந்த நடிகன் படம் சத்யராஜின் மார்க்கெட்டையே உயர்த்தியது.

இந்த நிலையில் தான் பி வாசு சின்னதம்பி பட வேலைகளை ஆரம்பித்தார். அவருக்கு இப்படி ஒரு கதை எப்படி தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின் பல பத்திரிக்கைகள் ப்ரெட்டி வுமன் என்னும் ஆங்கிலப் படத்தை சுட்டுத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று பேசிக்கொண்டார்கள். படகோட்டியைப் பார்த்து டைட்டானிக் எடுக்கப்பட்டது என்பதற்கு இணையான கம்பேரிசனே இது என பின்னாளில் விளங்கியது.

சின்னதம்பி படம் ஆரம்பிக்க நினைத்த உடனேயே அவர் கால்ஷீட் கேட்டது சத்யராஜிடமும், கௌதமியிடமும். சத்யராஜ் கதையைக்கேட்டு இதுக்கு நான் சரிப்பட மாட்டேன். பிரபு செட்டாவார் என்று சொன்னாராம் (இது ஜூனியர் விகடன் பாணி சொன்னாராம் இல்லை. பி வாசுவே ஒரு பேட்டியில் சொன்னது).
சத்யராஜ் தன்னை நன்றாகவே எடை போட்டுத்தான் வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் அவர் அழகேசன் படத்தில் அறியாதவன் வேஷம் போட்டதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களை சினிமா உலகம் அறியும்.

ஆமாம். கவுண்டமணிக்கு ஜென் துறவி வேஷம் கொடுத்தால் கூட அதில் ஒரு வில்லங்க மனிதர் தெரிவார். செந்திலுக்கு மாபியா லீடர் வேடம் கொடுத்தாலும் மஞ்ச மாக்கான் தான் நம் கண்ணுக்கு தெரிவார். அதுபோலத்தான் சத்யராஜும்.

கௌதமிக்கு கால்சீட் பிரச்சனையோ என்னவோ? தெரியவில்லை. குஷ்புவுக்கு அந்த வேடம் வந்தது. முதலில் வாசு இரு மனநிலையில் இருந்தாராம். ஏனென்றால் அதற்கு முன் தான் மைடியர் மார்த்தாண்டன் திரைப்படம் வெளிவந்திருந்தது. ரோமன் ஹாலிடே பட கதையை தட்டி உல்டா செய்திருந்த அந்தப் படத்தில் பிரபு விவரம் தெரியா ராஜகுமாரனாகவும், குஷ்பு நவ நாகரீக மங்கையாகவும் நடித்திருந்தார்கள். மேலும் குஷ்பு கவர்ச்சியின் எல்லையை அந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் தொட்டிருந்தார். பின் ஒரு வழியாக சமாதானமாகி பிரபு-குஷ்பு-கவுண்டமணி-மனோரமா-ராதாரவி என படையுடன் அவுட்டோருக்கு கிளம்பினார்.

அப்போது மூன்று முக்கியமான சினிமா பத்திரிக்கைகள் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமாலயா மற்றும் வண்ணத்திரை. இதில் பிலிமாலயாவும், வண்ணத்திரையும் கிளிவேஜ் தெரியும் படங்களைத்தான் அட்டைப்படமாகப் போட வேண்டும் என்ற கொள்கையில் இயங்கி வந்ததால் அவை பேட் புக்ஸ் கேட்டகிரியில் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ் மட்டும் ஓரிரு வண்ணப்பக்கங்களுடன் வெளிவரும். அதில் சின்னதம்பி பட அவுட்டோரை கவர் செய்திருந்தார்கள். குஷ்புவின் கன்னங்களில் சந்தனம் தடவி மொக்கையான ஸ்டில்களுடன் அது வெளிவந்தது. படம் பார்க்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பையும் தூண்டாத ஆவரேஜ் கவரேஜ்.

ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் பற்றி பரபரப்பு செய்திகள் வந்து கொண்டிருந்தன. 91 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு படங்களும் ரிலீஸ். அப்போது மதுரையின் முக்கிய தியேட்டரான நடனாவில் கேப்டன் பிரபாகரன் ரிலீஸ். சின்னதம்பி சக்தி தியேட்டரிலும் அப்போது அவுட்டரில் இருந்த பத்மா என்னும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆனது. மதுரை ராமநாதபுரம் வினியோக ஏரியா முழுவதும் ஆவரேஜ் தியேட்டர்களிலேயே சின்னதம்பி ரிலீஸானது.

போஸ்டர் டிசைனும் குப்பையாக இருந்தது. ஒரு உருட்டுக்கட்டையோடு பிரபு நிற்க, ஓரத்தில் குஷ்பூ, கவுண்டமணியின் தலையளவு புகைப்படம் மட்டும். என் நண்பர்களுடன் சேர்ந்து கேப்டன் பிரபாகரனை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு ஊர் திரும்பியாகிவிட்டது.

ஒரு வாரம் இருக்கும். சின்னதம்பி படம் நல்லாயிருக்குடா . என்றான் ஒரு நண்பன். அவன் அக்காவை தேனியில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அங்கு சென்ற போது அங்கே சுந்தரம் தியேட்டரில் பார்த்திருக்கிறான்.

“படம் முடிஞ்சு வெளியே வர்றோம்டா, தெருவில இருக்குற கடை, வீடு எல்லாமே அந்தப் பட பாட்டுத்தாண்டா என்று சிலாகித்தான். (அங்கு அந்தப் படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது). நாங்கள் உடனே அந்தப் படம் பார்க்க கிளம்பினோம். அருகில் இருந்த திண்டுக்கல்லில் படம் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே அடுத்த நாள் மதுரைக்கே வண்டி ஏறினோம். சக்தி தியேட்டர் இருப்பதே ஒரு  பிஸியான வணிகத் தெரு. இந்தப் பட கூட்டமும் சேர்ந்து கொள்ள தெருவே திணறியது. பின் பத்மா திரையரங்குக்கு போனோம் (இப்போது இது மதுரையில் ரிலையன்ஸ் பிரெஷ் கடையாக மாறிவிட்டது).

இப்படி ஒரு கூட்டத்தை அந்த தியேட்டர் அதற்கு முன்னும் கண்டதில்லை. பின்னரும் கண்டதில்லை. அருகில் இருந்த டீக்கடையில் அந்த வாரம் மட்டும் தினமும் 400 லிட்டர் பால் எடை கட்டி அடித்ததாக கடைக்காரர் நண்பரிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.  

படம் பார்த்தாகி விட்டது. எந்த அம்சம் கவர்ந்தது எனத் தெரியவில்லை. இளையராஜாவின் இசையா, குஷ்புவின் இளமையா, கவுண்டமணியின் காமெடியா என பிரித்தறியத் தெரியவில்லை. ஆனால் படத்தை மட்டும் பல தடவை பார்த்தாகி விட்டது. திண்டுக்கல் சோலைஹால், பெரியகுளம் அருள், விருதுநகர்- செண்ட்ரல்,வத்தலக்குண்டு பரிமளம் என அப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அட்டெண்டென்ஸ் போட்டாகி விட்டது. அப்போதைய கால கட்டத்திற்கு நல்ல ஆக்‌ஷன் படமான கேப்டன் பிரபாகரனையே கான்ஸ்டபிள் ஆக்கியது இந்தப் படம்.

இன்னும் கூட எனக்கு ஏன் இந்தப் படத்தை இத்தனை முறை பார்த்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை. பத்திரிக்கைகளில் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் இல்லை. தீப்பொறி ஆறுமுகம் கூட இந்தப் படத்தை வைத்துத்தான் சிவாஜி குடும்பத்தை நக்கலடிப்பார்.

“அவங்கப்பா ஏன் பிறந்தாய் மகனே? ந்னு பாட்டுப் பாடுவார். மகனுக்கு தாலி தெரியல. என லாஜிக் இல்லா மேஜிக்காய் அடித்து விடுவார்.

முன்னர் குறிப்பிட்ட மற்றும் பெரும்பாலான வசூல் சாதனை படங்களையெல்லாம் பார்த்தால் அவற்றின் மேஜிக் சில ஆண்டுகளுக்காவது நிலைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தின் மேஜிக் ஆறு மாதங்களுக்குள் காலாவதியாகி விட்டது. ஒரு படத்தின் வெற்றியை ரீ ரிலிஸ் மற்றும் திருவிழா காலங்களில் உபயதாரர் மூலம் திரையிடல் போன்றவற்றின் வழியாக கணக்கிடலாம். ஆனால் இந்தப் படம் அந்த ஆறுமாதத்துக்குப் பின் அவுட் டேட்டட் ஆகி விட்டது.

அப்படியென்றால் எந்த அம்சம் இந்தப் படத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்க்கும் படி தூண்டியது? இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு மாதம்  முன் என் ராசாவின் மனசிலே படம் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. உடன் வெளியான கேப்டன் பிரபாகரனும் நல்ல படம்.

ஒருவேளை தமிழ் ஆண்களுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் கொப்பும் குலையுமான பெண்ணைக் கைபிடிக்க வேண்டும் என்ற ஆழ் மன ஆசை காரணமாக இருக்குமா?    

எது எப்படியோ? இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

August 18, 2012

2004 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி



விருமாண்டி

கமல் ஹேராமுக்கு அப்புறம் இயக்கிய இரண்டாவது படம். கமலுக்கு இயக்குநராக வசூல் ரீதியில் வெற்றியைக் கொடுத்த முதல் தமிழ் படம். தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கும் என்று செய்திகள் அடிபடும் சூழலில், தன் கிணற்றில் இருக்கும் வற்றாத தண்ணீருக்காக ஒரு வெள்ளந்தி இளைஞன் சந்திக்கும் சூழ்ச்சிகளும், பிரச்சினைகளும் தான் கதை. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துகளும் படத்தில் முன்வைக்கப்பட்டன.

சத்யராஜ் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியது. ஆனால் அவர் மறுத்து விடவே அந்தக் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்தார். பசுபதி, சண்முகராஜ் ஆகியோருடன் நாசர், ரோகிணி ஆகிய ராஜ்கமல் கம்பெனி கலைஞர்களும் நடித்திருந்தார்கள். பசுபதி அனைவரையும் கவர்ந்தார் என்றாலும் சண்முகராஜ் சர்பிரைஸ் பேக்கேஜ்.

கமல் நாயகி அபிராமியிடம் பேசும் சில வசனங்கள் பஞ்ச் டயலாக்குகளாக இப்போது மாறிவிட்டன.

மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

ஒருவன் தான் சந்தோஷமா இருக்குறத அந்தக் காலகட்டத்துல உணர்றதில்ல.

ட்ரைலாஜி வரிசையில் தேவர்மகன், விருமாண்டிக்கு அப்புறம் அடுத்த படம் என்னவாயிருக்கும்?

ஆயுத எழுத்து
மணிரத்னம் தமிழ்  ஆடியன்சுக்கு மட்டும் படம் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் படங்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் எப்போது நேஷனல் ஆடியன்ஸ்ஸை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தாரோ அன்றுடன் அது குறைந்துவிட்டது. அதன்பின் அலைபாயுதே மட்டும் தான் தப்பித்தது. ஆயுத எழுத்துக்கும் அதே கதிதான். கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்துடன் (ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?) எடுக்கப்பட்ட படம். சூர்யாவின் அம்மா,ஈஷா தியோல் ஆகியோர் படத்துடன் ஒன்றவிடாமல் தடுத்தனர். பாரதிராஜாவுக்கு கெட்ட அரசியல்வாதி (என்னைய்யா ஒரு பொருட் பன்மொழி என்றெல்லாம் கேட்கப்படாது) வேடம். சித்தார்த், அவரின் அப்பா ஆகியோர் மணிரத்னம் படத்தில் வழக்கமாக வரும் கதாபாத்திரங்கள். மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு நேரம் என்பதை உணரவைத்த படம்.

கண்களால் கைது செய்

பட்டைச் சாரயம் போரடிக்கும் போது பாரின் ஸ்காட்சுக்கு போவது போல கிராமப் படங்கள் போரடிக்கும் போது திரில்லர் பக்கம் எட்டிப் பார்ப்பார் பாரதி ராஜா. சிகப்பு ரோஜாக்கள், டிக் டி டிக் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் கேப்டன் மகள் படு தோல்வி. மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கினார். கிளப்டோமேனியா இருக்கும் நாயகன் ஒரு கண்காட்சியில் இருக்கும் வைரத்தை சுட்டுவிட, சேல்ஸ் கேர்ள் மீது சந்தேகம் எழுகிறது. அப்பெண்ணின் காதலனான போலிஸ் அதிகாரி அப்பெண்ணையே தூண்டிலாக வைத்து அவனைப் பிடிக்க நினைக்கிறார். பின்னர்தான் நாயகனுக்கு மனச்சிதைவும் இருப்பது தெரிய வருகிறது. சுஜாதா வசனம், ரஹ்மான் இசை என பல அயிட்டங்கள் இருந்தும் படம் மக்களை கவரவில்லை.

எதிரி

கே எஸ் ரவிகுமார் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான படம். விவேக் காமெடி, சதா, பூமிகா, டெல்லிகணேஷ் நல்ல விகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர்.

கோவில், அருள்

சாமி வெற்றிக்குப் பின் வந்த இந்த இரண்டு ஹரி படங்களும் ஆவரேஜ்தான்.

ஏய்

வடிவேலுவின் காமெடியும், நமீதாவின் கவர்ச்சியும் இந்த சரத்குமார் படத்தை காப்பாற்றியது. இயக்குநர் வெங்கடேஷ்க்கு இந்தப் படமும், இதே ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான குத்து படமும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.

மகா நடிகன்

நமீதாவாலும் லொல்லு சபா டைப் காமெடியாலும் காப்பாற்றப்பட்ட சத்யராஜ் படம். சக்தி சிதம்பரம் இயக்கம். இந்த ஆண்டில் சேட்டை, செம ரகளை, ஜோர், அடிதடி என பல காமெடிப் படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ்.

கிரி
வடிவேலுவால் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட இன்னொரு படம். சுந்தர் சி இயக்கம், அர்ஜூன் சண்டை, ரீமா சென் மற்றும் குத்து ரம்யா கவர்ச்சி, பிரகாஷ் ராஜ், தேவயானி நடிப்பு என குஷ்பு தயாரிப்பில் ஒரு அக்மார்க் மசாலா படம். சிங்கம் சிங்கிளாத்தன் வரும் என்ற பஞ்ச் டயலாக் முதன் முதலில் பேசப்பட்ட படம்.

அரசாட்சி
தமிழுக்கு வந்த உலக அழகிகள் வரிசையில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று லாரா தத்தாவை கூட்டி வந்து மகராஜன் இயக்கிய படம். அர்ஜூன், நாசர், பி வாசு, மன்சூர் அலிகான் என தேவையான நடிகர்கள், எஸ் வி சேகர், விவேக் காமெடி இருந்தும் படம் கவரவில்லை. தப்புச் செய்ய்றவனுக்கு வாதாடும் வக்கீலை போட்டுத்தள்ளினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று ஷங்கர் தனமான தீர்வைச் சொன்ன படம்.

அட்டகாசம்

சில மன வருத்தங்களுக்குப் பின் அஜீத் சரண் இணைந்த படம். அஜீத்துக்கு இரட்டை வேடம். அஜீத்துக்கு கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் செய்ய மட்டும் உதவியது. ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்த ஜனா படமும் இந்த ஆண்டு வெளியாகி ஜண்டு பாம் விறபனையை அதிகரித்தது. நியாயப் படி இந்தப் படத்தை ரீமேக் (பாட்ஷா) லிஸ்டில் தான் சேர்த்திருக்க வேண்டும்.

சுள்ளான்

திருமலை வெற்றிக்குப்பின் இயக்குநர் ரமணா இயக்கிய படம். தனுஷ் நாயகன். எறும்பின் தலையில் இமயமலை. புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் இந்தப் படமும் தனுஷின் ஆரம்பகால வெற்றிப் பயணத்தின் தடைக்கற்கள்.

மதுர

கில்லியின் வெற்றிக்குப் பின் வந்த விஜயின் படம். ஷங்கரின் இணை இயக்குநர் மாதேஷ் இயக்கிய படம். தம் ரக்‌ஷிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ என நாயகிகள், வடிவேலு நகைச்சுவை, பசுபதி வில்லத்தனம் என அம்சங்கள். விமர்சகர்கள் கிழித்தாலும் தயாரிப்பாளர் டவுசர் கிழியவில்லை.

வானம் வசப்படும்

பி சி ஸ்ரீராம் இயக்கம். படமும், வந்த நேரமும் சரியில்லை. பார்க்க போனவர்களுக்கும் தான்.

ஜெய்
முதலில் மாதேஷ் இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகிக் கொள்ள நாராயணன் என்பவர் இயக்கிய பிரசாந்த் படம். அந்த ஆண்டு வெளியான பாட்டம் பத்தில் இதற்கு நிச்சய இடம் உண்டு.

இந்த ஆண்டில் வடிவேலு தான் காமெடியில் டாப். ஏய், சத்ரபதி, அருள், கோவில், கிரி, எங்கள் அண்ணா, ஜோர், மதுர என கொடிகட்டிப் பறந்தார்.

விவேக்கும் தன் பங்குக்கு செல்லமே, எம் குமரன் சன் ஆப் மகா லட்சுமி, எதிரி, அரசாட்சி என கலக்கினார்.

நீங்கள் இன்று சிரிப்பொலி அல்லது ஆதித்யா பாருங்கள். மேற்கூறிய படங்களில் இருந்து நிச்சயம் கிளிப்பிங்ஸ் இருக்கும்.

தமிழர்களின் கனவை   இந்த ஆண்டில் அதிகம் ஆக்ரமித்தது நமீதா தான். ஏய், மகா நடிகன், எங்கள் அண்ணா படங்களில் சித்தப்பூ நடிகர்களுக்கு துணையாக வந்தார்.

இந்த ஆண்டில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரிச்சர்ட் மதுரம் நடித்த காமராஜர் படம் வெளியானது.

ரீமேக் படங்களும் காதல் படங்களும் கலக்கிய 2004


தமிழ்சினிமா உலகுக்கு ரீமேக் ஒன்றும் புதிதில்லை என்றாலும், ஓர் ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலானவை ரீ மேக் படங்களாய் இருந்தது இந்த ஆண்டில்தான். அதுதவிர சில வித்தியாச காதல் படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன.

முதலில் ரீமேக்குகளைப் பார்ப்போம்.

கில்லி

கதாநாயகனாக நடிக்க வந்த காலத்தில் இருந்தே நிறைய ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு சாப்ட் கேரக்டர் படங்களே நிறைய வெற்றியைத் தந்திருந்தன. அதனால்தான் எஸ் ஏ சந்திரசேகர் கூட நெஞ்சினிலே படத்தை இயக்கும் போது, இது என் மகனுக்கு நான் வைக்கும் ஆசிட் டெஸ்ட் என்று சொல்லியிருந்தார். விஜய் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி பெற்ற படம் என்றால் திருமலை திரைப்படத்தைத் தான் சொல்ல வேண்டும். அந்தப் படம் அதற்கு முன் வந்த சில படங்களால் தள்ளாடிக் கொண்டிருந்த விஜய் மார்க்கெட்டை ஸ்டெடி செய்தது. தெலுங்கில் பெரு வெற்றி பெற்ற ஒக்கடுவின் ரீமேக்கான கில்லி விஜயின் மார்க்கெட்டை பல படிகள் தூக்கியது. கில்லியின் இயக்குநர் தரணிக்கு இதுதான் இன்றைய தேதி வரை வெற்றிப்படமாக இருக்கிறது. திருட்டு விசிடியையும் மீறி, உதயம் காம்ப்ளக்ஸின் எல்லா திரைகளிலும் இந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல நாட்களுக்கு ஓடியது. ரஜினிக்கு ஒரு பாட்ஷா, கமலுக்கு ஒரு நாயகன் என்று சொல்வது போல விஜய்க்கு ஒரு கில்லி.

வசூல் ராஜா எம் பி பி எஸ்

மருத்தவமனை/மருத்துவர்கள் மனிதாபிமானமாய் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் வந்த இந்திப் படம் முன்னாபாய் எம் பி பி எஸ்ஸின் ரீமேக்கான இது வசூலிலும் ராஜாவானது. இந்தப் படத்தில் கமலின் அப்பாவாக நடிக்க பாலசந்தரை அணுகியபோது அவர் மறுக்க நாகேஷ் அந்த கேரக்டரில் நடித்தார். ஆனால் பாலசந்தர் அதற்குப் பின் டிவி சீரியல், தாமிரா இயக்கிய ரெட்டை சுழி  என நடிப்பு அவதாரம் எடுத்தார். இதுவரை தனது கேரியரில் கிரேஸி மோகன் அழுத படம் இதுவாகத்தான் இருக்க முடியும். டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ண காதலி இப்போது பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா, சலீம் கௌஸ், அதுல் குல்கர்னி என பல வேற்று மொழி கலைஞர்களை தமிழுக்கு கொண்டுவந்த கமல் இதில் காந்தி படத்தில் கஸ்தூரிபாயாக நடித்த ரோஹிணி ஹட்டாங்குடியை தன் அம்மா வேடத்தில் நடிக்க வைத்தார். காகா ராதாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படத்துக்கு சிறப்பு சேர்த்தார்கள்.

எங்கள் அண்ணா

குரோனிக்கில் பேச்சிலர் என்ற மலையாளப் படத்தின் ரீ மேக் இந்தப் படம். விஜயகாந்தின் அரைத் தங்கை சொர்ணமால்யாவின் காதலர் வேடத்தில் முதலில் கார்த்திக் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வேடத்தில் பிரபுதேவா நடித்தார். வடிவேலுவின் காமெடியும் நமீதாவின் அழகும் இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்.

பேரழகன்

திலீப் நடித்த குஞ்சிக்கூனன் படத்தின் ரீமேக். சூர்யாவுக்கு இரட்டை வேடம். ஜோதிகாவுக்கும்.  பெரும்பாலான தமிழ்படங்களில் மாற்றுத் திறனாளி ஹீரோ என்றாலே அவரைச் சுற்றி ஒரு சோக வளையம் இருக்கும். இந்தப் படத்தில் அங்க ஹீனமுள்ள நாயகனைச் சுற்றி நவரசமும் நடை போடும். ஓரளவு ஓடியது. அன்பு நண்பர் கேபிள் சங்கர் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். (பாக்ஸிங் சீன்).

குமரன் சன் ஆப் மகாலட்சுமி
ரீமேக் ராஜா தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்த படம். அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இந்தப்படம் அசினை ராசியான ஹீரோயினியாக்கியது. இயக்குநர் தரணி இப்படத்தின் படப்பிடிப்பின் போது ராஜாவிடம் “நதியா நடிக்கிறாங்கண்ணா நான் உதவி இயக்குநரா வர்றேன்என்றாராம். அப்படி ஒரு தலைமுறையை கவர்ந்திருந்த நதியா ரீ எண்டிரி ஆன படம்.

கஜேந்திரா

ராஜமவுலியின் சிம்மாத்ரி பட ரீமேக் இது. சுரேஷ் கிருஷ்ணா கமலுக்கு ஆளவந்தானையும், ரஜினிக்கு பாபாவையும் கொடுத்த பின்னரும் விஜயகாந்த் துணிந்து இறங்கிய படம். படு தோல்வி.

ஷாக்

இந்தி திகில் படமான பூட் ஐ தழுவி எடுக்கப்பட்ட படம். தியாகராஜனும் தன் மகன் நன்றாக வர வேண்டுமென என்னென்னவோ செய்கிறார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆக மாட்டென் என்கிறது.

இது தவிர அன் அபீசியலாக ட்ரு மேன் ஷோவை தழுவி பார்த்திபன் குடைக்குள் மழையையும், பிக் படத்தை தழுவி எஸ் ஜே சூர்யா நியூ படத்தையும் கொடுத்தார்கள். நியூ ரஹ்மானின் ஹிட் பாடல்களாலும், ஸ்ட்ரக்சர் குயின் சிம்ரனாலும், எஸ் ஜே சூர்யா பிராண்ட் காட்சிகளாலும் நன்கு கல்லா கட்டியது.

காதல் படங்கள்

ஆட்டோகிராப்

அழகி பட வெற்றிக்குப் பின் பல நாஸ்டால்ஜியா படங்கள் வந்தன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படம் ஆட்டோகிராப். ஒரு ஆணின் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் அவன் சந்திக்கும் காதல் பற்றிய கதை. இது பெண்ணின் பார்வையில் எடுக்கப்பட்டிருந்தால் பல விளைவுகளைச் சந்தித்து இருக்கும்.

காதல்

ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் படம் சாமுராயில் சறுக்கி இருந்தாலும் தன் குரு தயாரித்த இந்தப் படத்தின் மூலம் நிமிர்ந்தார். உண்மைக் கதையை தழுவிய படம் என்ற விளம்பரத்துடன் வந்தது. மெக்கானிக் ஷெட் ஹீரோ ஒயின் ஷாப் ஓனர் மகளை காதலிக்கும் கதை. ஜாதிய பிரச்சினையும் உண்டு. எதிர்பாராத முடிவு கலங்க வைத்தது. ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்தின் இசை அறிமுகம். ஆனால் இப்படத்திற்குப் பின் அதிகம் பிரகாசிக்கவில்லை. காதல் தண்டபாணி, காதல் சுகுமார், காதல் சந்தியா என்ற அடைமொழிகளே இப்படத்தின் பெரு வெற்றியைச் சொல்லும்.  

7ஜி ரெயின்போ காலனி

இது கே கே நகரின் காதல்கதை என்ற டேக் லைனுடன் வந்த படம். ஏ எம் ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்த படம். காதல் கை கூடாத நிலையில் காதலி தன்னை அவனுக்கு பரிசாக கொடுத்துவிட்டு பிரிய நினைக்கிறாள் என்ற கருத்துடன் வந்த படம். செல்வராகவனின் இயக்கமும், யுவனின் இசையும், முத்துக்குமாரின் வரிகளும் படத்தை தூக்கி நிறுத்தின. நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் ஒன்றே இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல போதும்.

அழகிய தீயே

என் பிரண்ட் ராதா மோகன் இயக்கிய  படத்தை நான் பார்க்கணும். அதுக்கு டிக்கட் ரெண்டு கோடின்னு நினைச்சிட்டுப் போறேன் என்று சொல்லி  பிரகாஷ் ராஜ் தயாரித்த படம். நம்பிக்கையை காப்பாற்றினார் ராதாமோகன். சினிமா வாய்ப்பு தேடும் இளைஞன், பணத் தேவைக்காக பணக்காரப் பெண்ணின் காதலனாக நடிக்கப் போய் பின் உணமையாகவே காதலில் விழுகிறான். பிரசன்னா, நவ்யா நாயர் இணை. ஆனால் படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது பிரசன்னாவின் நண்பனாக வரும் குமரவேலுவும், அண்ணாச்சியாக நடித்த எம் எஸ் பாஸ்கரும். படத்தின் பிளஸ் பாயிண்ட் விஜியின் வசனங்கள்.   

செல்லமே

இந்தியன் பட இணை இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கிய படம்.  அடுத்து கமல் இவர் படத்தில்தான் நடிக்கப் போகிறார் என்ற வதந்தி இந்தியன் வெளியானபோது இருந்தது. பின் இவர் அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் காம்பினேஷனில் எஞ்சினியர் என்னும் படம்  இயக்கப் போவதாக விளம்பரங்கள் வந்தன. அணை கட்டப் படும் களத்தில் படம் இயங்கும் என்ற ஹேஸ்யத்துடன் பல அருமையான ஸ்டில்கள் வெளியாகின. மாதுரி தீட்சித் மொட்டை போடப்போவதாக கூட செய்திகள் வெளியாகின. ஆனால் படம் எடுக்கப்படவில்லை. பின் இவர் நிலாக்காலம் என்னும் படத்தை எடுத்தார். அதன்பின் இயக்கிய இப்படம் மூலம் விஷால் அறிமுகமானார்.

ஒரு பையனுக்கு தன்னிடம் பாசம் காட்டும் தன்னை விட மூத்த பெண்ணுடன் வரும் காதல், அவள் திருமணம் செய்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அல்லாடுவது, அதற்காக கடத்தல் வரை இறங்குவது என கதைக் களம். பரத்திடம் அன்பு காட்டும் பெண்ணாக ரீமாசென், அவளின் விஷால். விவேக்கின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், சுஜாதாவின் வசனம், கேவி ஆனந்தின் ஒளிப்பதிவு ஆகியவை பிளஸாக அமைந்தன.

சுஜாதாவுக்கு இவர் மேல் எப்போதும் ஒரு ஷாஃப்ட் கார்னர் இருந்து வந்திருந்தது. எஞ்சினியரிலும் அவர் பங்கிருந்தது. நிலாக்காலமும் சுஜாதா உடையதே. பின் இவர் இயக்கிய ஆனந்த தாண்டவமும் (பிரிவோம் சந்திப்போம்) சுஜாதாவே.

தென்றல்

ஜெயகாந்தன் டைப் இலக்கியவாதி பார்த்திபனை காதலிக்கும் அப்பாவி பெண், தன்னையே அவரிடம் இழக்கிறாள். குழந்தை பிறக்கிறது. அது தன் குழந்தை என அவருக்கு தெரியவரும் சிக்கல்கள் என்ற கதைக்களம். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பெரிதாக போகவில்லை. ராகவேந்திரா லாரன்ஸ் ஆடிய பறை பாடல் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது.

மன்மதன்

இதை ரீமேக் வகையிலும் (சிகப்பு ரோஜாக்கள்) சேர்க்கலாம். கோடாம்பாக்க ரேஸில் இப்போதுதான் குதிரையில் ஏறியிருக்கிறார் சிம்பு என விகடன் சிலாகித்தது. காதலில் துரோகம் செய்யப்பட்டு தற்கொலை செய்யும் தம்பிக்காக அண்ணன் துரோகம் செய்யும் பெண்களையெல்லாம் பழிவாங்கும் கதை.

அடிதடி

திருமணம் செய்து கொள்ளாத தாதா சத்யராஜுக்கு இளம் பெண் ரதி மீது காதல் வந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்களும், பின் அவர் திருந்துவதும் தான் கதை. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு லொல்லு சபா டைப் காமெடியால் நல்ல வசூல் கொடுத்த படம்.

அழகேசன்

இதுவும் சத்யாரஜ் படமே. சிப்பிக்குள் முத்து போல ஒரு காதல். ஆனால் அது பட வெற்றிக்கு கைகூடவில்லை.


August 16, 2012

தேவர் மகன் – சில நினைவுகள்



தீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ் பேச/எழுதப் படும் இடங்களிலெல்லாம் அடிபட்டுக்கொண்டே தான் இருந்து வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன் வந்த இரண்டு கமலின் படங்களும் (குணா, சிங்காரவேலன்) எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனால் இதே நேரத்தில் ரஜினியின் தளபதி, மன்னன், அண்ணாமலை ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்றிருந்தன. பார்வையாளராக இருந்து ரசிகராக மாறும் வயதில் இருந்த சிறுவர்கள் எல்லாம் ரஜினியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் எஸ் பி முத்துராமன் யூனிட் பெனிபிட் பண்டுக்காக ரஜினி நடித்துக் கொண்டிருந்த படம் பாண்டியன்.
92 தீபாவளிக்கு இந்த இரு படங்களுடன் திருமதி பழனிச்சாமி, ராசுக்குட்டி ஆகிய படங்களும் வெளிவர இருந்தன.

சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடிப்பது, இஞ்சி இடுப்பழகி பாடல் பதிவு பற்றிய குமுதம் அட்டைப்படக் கட்டுரை, பொள்ளாச்சியில் தேர் செட், கண்மாய் செட் என வழக்கமான பில்ட் அப்புகள் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு பட பாடலின் வெற்றியை அப்போது தீர்மானிக்க இருந்த வழி கேசட் விற்பனை. 60 நிமிடம் ஓடும் கேசட்டில் 12/13 பாடல்கள் பதியலாம் என்பதால் இரண்டு படங்களின் பாடல்களைப் பதிந்து தருவார்கள். கிட்டத்தட்ட இது திருட்டு வி சி டி போலத்தான். ஆனால் அதை அப்போது (இப்போதும்) அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே செய்து வருகிறார்கள். (பாழாய்ப் போன காப்பிரைட் லா). ஒரு படத்தின் பாடல் பயங்கர ஹிட் எனில் அதனுடன் காம்பினேஷனாக லொப்பை பாடல்கள் உள்ள படங்களையே பதிந்து விற்பார்கள்.

தேவர்மகன் பாடல்கள் வெளியான போது அது எங்கள் ஏரியாவில் அவ்வளவு ஹிட்டாகவில்லை. (ஆனால் ஒரு பாடல் மட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் தேசிய கீதமாய் ஆனது). எங்கு பார்த்தாலும் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாவும், ஜும்பா ஜெயிப்பது இந்த பாண்டியனேவும் தான். காம்பினேசன் கேசட்டுகளில் எல்லாம் பாண்டியன் ஏ சைடிலும்  மற்ற படங்கள் பி சைடிலும் இருந்தன.

படம் வெளியானது. ஊர்க்காரர்களுடன் சேர்ந்து தீபாவளியன்று அதி காலையில் காக்கிச் சட்டை கமல் மன்ற டிக்கட்டுகளை வினியோகிப்பதற்காக தியேட்டருக்கு போயாகிவிட்டது. உடன் நாலு பைகள். அதில் சீராக கிழிக்கப்பட்ட ராயல் பூடான், சிக்கிம் லாட்டரிச்சீட்டுகள்.

கமலின் ரயில்வே ஸ்டேஷன் எண்டரிக்கு சீட்டுக்களை வீச ஆரம்பித்தோம். சிவாஜியைக் கண்டவுடன் பம்மியது கமல் மட்டுமல்ல நாங்களும்தான். அதன்பின் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது ஒரு முறை வீசினோம்.

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.

மதியம் தீபாவளியின் முக்கிய சடங்கான ஜே பி ஹோட்டல் வான் கோழி பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து டேபிளில் ராஜபந்தா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் உட்கார்ந்திருந்தார். பாண்டியன் எப்படி என்று கேட்டதற்கு “அண்ணாமலை அளவுக்கு இல்லைஎன்றார்.  சிங்காரவேலனை விட தேவர் மகன் நல்லாயிருக்கு என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னோம்.

பின் கல்லூரி நண்பர்களுடன் இரண்டாம் முறை பார்த்தபோதுதான் கவனிக்காமல் விட்ட பல விஷயங்கள் தென்பட்டன.

அதுவரை நகரப் படங்களுக்கே பெரும்பான்மையாக ஒளிப்பதிவு செய்த பி சி ஸ்ரீராம் பணிபுரிந்த கிராமப்படம். சிட்டி பேஸ்டு கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்த நாசர் செய்த கிராமப் படம், வடிவேலு தன் கெப்பாசிட்டியை காட்டிய படம் என்பது போக வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

கண்மாய் உடைந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஆனதால் கவலை அடைந்திருக்கும் மக்களைப் பார்த்து கமலும் சாப்பிடாமல் இருப்பார். அப்போது சிவாஜி சொல்வார்

“இவளைப் பாரு, குழந்தயப் பறி கொடுத்தவ. ஏன் சாப்பிடுறா? நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை சுத்தியுள்ளவங்கள காப்பாத்த முடியும்.

என் தந்தைக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலை ஏழு மணி அளவில் ஒரு ஆப்பரேசன் நடந்தது. நான் 4 மணிக்கெல்லாம் எழுந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அவர் கூட்டிச் செல்லப்பட்டதும் என் அம்மா, தங்கை எல்லோரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு பசி. ஆனால் தயக்கம். அப்போது இந்த வசனம்  ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரி கேண்டினுக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தேன். 

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன் என் மகனை ஐ சி யூவில்  அனுமதித்து விட்டு மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சாப்பிடச் சென்றேன்.

ஆனால் இந்தப் படத்தில் கமல் தமிழ்சினிமாவிற்கு செய்த இன்னொரு நல்லதும் உண்டு. அதுதான் காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோருக்கு கொடுத்த வேடம். காகா ராதாகிருஷ்ணன் அதன்பின் பல படங்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு இந்த ஆண்டு மறைந்தார். ரேவதியின் தந்தையாக அந்த படத்தில் வாழ்ந்திருந்த கள்ளபார்ட் நடராஜன் சில ஆண்டுகள் மேலும் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் தந்தையும் கள்ளபார்ட் வேடத்தில் விற்பன்னர்.

கமல் ராஜபார்வைக் காலத்தில் இருந்தே இது போல பல ஆட்களை ஞாபகத்தில் வைத்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பல திறமைகளை இறக்குமதி செய்திருக்கிறார்.

இந்த சமயத்தில் 96 வாக்கில் பெப்ஸி ஸ்டரைக்கைத் தொடர்ந்து நடந்த சில கூட்டங்கள் ஞாபகம் வருகின்றன். அதிலொன்றில் கமல் பேசும் போது சொன்னது இது

பல நடிகர்களை நாம் மறந்து வருகிறோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர்கள் பொருத்தமாய் இருப்பார்கள். ஆனால் நம் நினைவுக்கு அப்போது வராது”. எனவே நடிகர் நடிகைகளைப் பற்றிய ஒரு கம்ப்ளீட் டேட்டா பேஸ் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களது முக்கிய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். அது நடிகர் சங்கத்தில் இருந்தால் நலம். டைரக்டர்கள் அதை புரட்டிப் பார்த்து நல்ல முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.

இப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே?

எனவே தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு டேட்டா பேஸை விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன்  அருமையாக தயார் செய்யலாம். எல்லோரும் பி ஆர் ஓ வைத்துக் கொள்ள முடியாது. படியேறி வாய்ப்புக் கேட்கவும் தன்மானம் தடுக்கும். அதனால் இரு தரப்புக்கும் இழப்பே.

நடிகர் சங்கம் இதை முன்னெடுத்துச் செய்து கொண்டிருப்பதாய் இப்போது செய்திகள் வருகின்றன.

August 14, 2012

பொசசிவ் கமலேஷ்


அது என்னவோ தெரியவில்லை எனக்கு ஒரு வியாதி. நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று ஸ்டேட்மெண்ட் கொடுப்பதில் ஒரு அல்ப சந்தோஷம். சும்மாவா, கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்தகுடியில் பிறந்துவிட்டு இந்த பகட்டு கூட இல்லாவிட்டால் எப்படி?

இப்போது கூட பெசண்ட் நகர் பக்கம் போகும் போதெல்லாம் உடன் வருபவர்களிடம், நாங்க இங்க 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்தப்ப எல்லாம் இந்த ஏரியா எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்பது உண்டு.

நோ நோ நீங்க உடனே அங்க நாங்க வீடு கட்டி குடியிருந்தோம் அப்படின்னு எல்லாம் கற்பனை பண்ணிடாதீங்க. அவ்ளோ ஒர்த் எல்லாம் நான் இல்லை. 92ல் வேலை தேடி சென்னை வந்த போது உறவினர் ஒருவரின் தயவால் பேச்சிலர்களாக ஒன்று சேர்ந்து தங்கியிருந்த ஒரு வீட்டில் அடைக்கலமானேன்.

அப்போது பெசண்ட் நகருக்குள் நுழைந்தால் ஏதோ டெல்லி செக்கரட்ரியேட் குவாட்டர்ஸில் நுழைந்தது போல் இருக்கும். 33 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழர்களும் அப்போது அங்கே வாழ்ந்து வந்தார்கள். யு டி ஐ குவாட்டர்ஸ், நேவி குவாட்டர்ஸ் மற்றும் ஹெச் ஐ ஜி வகை குடியிருப்புகள் என அனைத்து சமையல் கட்டுகளிலும் சப்பாத்தியே சுடப்பட்டது.

அரிதாக தென்படும் ஆப்டெக், என் ஐ ஐ டி வகையறா போஸ்டர்களும், விடாது இம்சிக்கும் ஷிகான் உசைனியின் போஸ்டர்களுமே இது தமிழ்நாடு என்பதை ஞாபகப்படுத்தும். சாலையோரங்களில் அடிக்கடி தென்படும் கலாசேத்ரா பிகர்களை நான் பார்த்ததேயில்லை என என் மனைவிக்குப் பயந்து இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.

ஒரு ஹெச் ஐ ஜி டைப் சொந்த வீட்டில் இருந்தவர் டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றதால் அதைத் தன்னுடன் பணிபுரிந்த பேச்சிலர்க்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர் இன்னும் தன் நாலு நண்பர்களுடன் அதில் குடியிருந்தார். ஒருவர் கேஸ் கனெக்‌ஷன் வாங்கினார். இன்னொருவர் பாத்திர பண்டங்கள் வாங்கிப்போட்டார். பின் அந்த கூட்டணியில் ஒவ்வொருவராக திருமணமாகிச் செல்வதும் அதற்குப் பதிலாக தன் பங்குக்கு ஒருவரை அங்கே நுழைப்பதும் தொடர்ந்து வந்தது.

நான் அங்கு சென்றது 3ஜியாக. அப்போது அங்கே சீனியராக இருந்தவர் கமலேஷ். டிப்ளமோ படித்துவிட்டு கம்ப்யூட்டர் சர்வீஸ் எஞ்சினியராக பணியாற்றிவர். அப்போது அவர்க்கு இருந்த டிமாண்ட் இப்போது ராஜமவுலிக்கு கூட இல்லை. கம்ப்யூட்டர் வைத்திருந்தவர்கள் அதைக் கழட்டிப் பார்க்க வெகுவாக தயங்கிய காலம். அதனால் எதுவானாலும் சர்வீஸ் இஞ்சினியர்தான் பார்க்க வேண்டும். ஏ எம் சி எடுத்தவர்கள் பணத்தில் கொழித்த நேரமானதால்  சர்வீஸ் இஞ்சினியருக்கு பைக், இன்செண்டிவ் என அள்ளி விடுவார்கள்.     

அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களின் பொருளாதாரம் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர் வைத்ததே அங்கு சட்டமாக இருந்தது. சர்வாதிகாரி இல்லை என்றாலும் தன் முடிவுகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வாடகை டிடியை டெல்லிக்கு அனுப்புவது, பலசரக்கு சாமான்களை வாங்கிப்போடுவது, வீட்டு பணி செய்ய அமர்த்தப் பட்டிருந்த பெண்மணிக்கு முதல் தேதி சம்பளம் கொடுப்பது என அனைத்தும் அவர் பொறுப்பு என்பதால் எங்களால் மூச்சு விட முடிந்தது. பத்து தேதிக்குள் அனைத்தையும் செட்டில் செய்வோம்.

அவருக்கு கம்பெனி கொடுத்த டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் புளூ கலரை அவர் தன்னை விட அதிகமாக நேசித்தார். காலை ஆறு மணிக்கு எழுந்து அரைமணி நேரம் துடைப்பார். பின்னர் அவர் வைத்திருந்த நேஷனல் போனோசேனிக்கில் பாடல்களைப் போட்டு எங்களை எழுப்புவார். பின்னர் அவர் போகும் ஏரியாவில் யார் வேலை செய்கிறார்களோ அவர்களை ஏற்றிக் கொள்வார். வேலை இல்லாதவர்களுக்கு ரெஸ்யூம் டைப் பண்ணி பிரிண்ட் எடுத்துக் கொடுப்பதும் அவரே. இதுதான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வீடு, இது விஸ்வநாதன் ஆனந்த் வீடு, அப்புறம் மீரால நடிச்சானே விக்ரம் அவன் இந்த கட்தான் என்று பைக்கில் போகும் போதே கைடாக மாறி விடுவார். அப்போது அங்கு இருந்த இரண்டே இரண்டு சூப்பர் மார்க்கட்களான மகராஜாவிலும். காமதேனுவிலும் கூட அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. ஞாயிறு நாங்கள் சத்யத்தில் பர்க்கப் போகும் படமும் அவர் சாய்ஸே. ஒரு நூறு ரூபாய் நோட்டை அசால்டாக கவுண்டரில் நீட்டி ஸ்டைலாக பைவ் டிக்கட்ஸ் என்பார். 

ஆறு மாதம் அலைந்து வேலை கிடைக்காத விரக்தியில் நான் இருந்தபோது என்னை தேற்றியவர் அவர்தான். அருகேயிருந்த  அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்துச் சென்று ஒரு கதை சொன்னார்.

ஒரு ராஜா நல்லாட்சி நடத்தாமல் இருந்ததால் அங்கிருந்த அஷ்டலட்சுமிகளும் கோபம் கொண்டார்களாம். தினமும் ஒருவராக அந்நாட்டை விட்டு வெளியேறினார்களாம். கடைசியாக தைரியலட்சுமி வெளியேறும் போது அவர் குறுக்கே விழுந்து தடுத்தாராம். நீ ஒருத்தி மட்டும் இருந்தால் போதும். மற்றவர்கள் எல்லாம் தன்னால் வருவார்கள் என்று சொன்னாராம். அதன்படியே பின் எல்லா லட்சுமிகளும் நாட்டுக்குள் திரும்பி வந்து விட்டார்களாம். எனவே தைரியமாய் இரு என்றார்.

அதன்பின் எனக்கு வேலை கிடைத்தது. மெட்ரோ பிரியாவும் சூப்பர் ஹிட் முகாப்லாவும் எங்கள் மாலை நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டன. இரவு உணவுக்குப்பின் எலியட்ஸ் பீச்சில் அரட்டை என சந்தோசமாக கழிந்தன நாட்கள்.

இந்தச் சூழ்நிலையில் தான் ராஜேஷ் எங்கள் வீட்டுக்கு 4ஜியாக வந்தான். வந்த அன்றைக்கே நீங்க டிப்ளமாதானா என்று கமலேஷை சிறுமைப்படுத்தி விட்டான். கமலேஷ் சில விஷயங்களில் பொசசிவ்வாக இருப்பார். அவருடைய தட்டு, டம்ளர், டேப் ரிக்கார்டர் என எதையும் மற்றவர்கள் உபயோகப் படுத்துவதை விரும்பமாட்டார். படுக்கும் இடம் கூட அவர் இல்லாவிட்டால் காலியாக இருக்க வேண்டுமே தவிர அங்கு யாரும் படுத்ததாக கேள்விப்பட்டால் கூட கோபம் கொள்வார்.

ராஜேஷ் கலகக்காரன். இதை எல்லாம் மீறுவதுதான் அவனின் வேலையாக ஆகிப் போனது. பின்னர் அவன் யமஹா ஒன்றை ஊரிலிருந்து இறக்கினான். ஒரு மியூசிக் சிஸ்டம், கலர் டிவி என அது தொடர்ந்தது. மற்ற இருவரும் ராஜேஷ் அணிக்கு தாவி விட்டார்கள்.

இப்போது கமலேஷின் கை தாழத் தொடங்கியது. அவரது மேனேஜராக வந்தவருக்கும் அவருக்கும் செட்டாகவில்லை. வேலையை ரிசைன் செய்தார். அவருக்கு கொடுத்திருந்த பைக்கை மேனேஜர் உடனே விற்று விட்டார். அதைத்தான் கமலேஷால் தாங்க முடியவில்லை. புதுப்பேட்டை முழுவதும் அலைந்து அதே பைக்கை கூடுதல் விலை கொடுத்து வாங்கினார்.

ராஜேஷுக்கு இந்த விஷயம் அல்வா சாப்பிட்டது போல் ஆனது. ஜாடை மாடையாக இதை கிண்டல் அடிக்க ஆரம்பித்தான். கமலேஷுக்கு உடனே வேறு வேலை கிடைத்தாலும் முன் கிடைத்த சம்பளம் கிடைக்கவில்லை.

துன்பம் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கும். கமலேஷ்க்கு கல்யாண வயது தாண்ட துவங்கி இருந்தது. அவர்கள் ஜாதியில் அப்போது அரசாங்க மாப்பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு இருந்தது. அதிலும் மனரீதியாக பாதிக்கப்பட்டார். ஒருவழியாக பெண் கிடைத்ததும் வேறு வீடு பார்க்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில் ராஜேஷ் செய்திருந்த குளறுபடிகளால் வீட்டில் சமையல் செய்வது நின்றிருந்தது. எனவே கமலேஷ் தனக்கு அந்த ஸ்டவ் மற்றும் சிலிண்டரைக் கேட்டார். ராஜேஷ் ஒரே அடியாக மறுத்துவிட்டான்.  மற்ற இருவரும் ராஜேஷ் பக்கம். அவனது தாராள அணுகுமுறை அவர்களை கவர்ந்திருந்தது. அதனால் என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பொசசிவ்னெஸ் இருக்கலாம். அதுக்காக இவ்வளவா? என்றார்கள்.

அவர் பைக் நிறுத்தும் இடத்தில் ராஜேஷின் பைக் நின்றதற்கு ஒருமுறை அவர் சண்டையிட்டதை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

கனத்த மனத்துடன் என்னிடம் இருந்து விடைபெற்றார் கமலேஷ். திருமணத்துக்கு கூட என்னால் போகமுடியவில்லை. பின் நானும் அங்கிருந்து சில மாதங்களில் கழன்று கொண்டேன். பின்னர் அந்த வீட்டுடன் தொடர்பு அறுந்து போனது.

அது நடந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து நான் ஆர் பி ஜி கனெக்‌ஷனில் சோனி எரிக்சன் போன் வாங்கியிருந்த நேரம் (பார்த்தீங்களா பீத்தாம எழுதவே முடியலை). புது நம்பரில் இருந்து அழைப்பு. கமலேஷ்தான். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் அடுத்த ஞாயிறன்று அவர் பையனின் பிறந்த நாள் பார்ட்டி இருப்பதாகவும், பழைய நண்பர்கள் அனைவரையும் தேடிப்பிடித்து அழைப்பதாகவும் கூறினார். தற்போது அவரே ஒரு கம்பெனியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.

அந்த ஞாயிறும் வந்தது. பெசண்ட் நகரில்தான் குடியிருந்தார். அவர் மனைவியின் அலுவலக நண்பர்களும் பெருமளவு வந்திருந்தார்கள்.   கமலேஷ் மனைவியிடம்  அவரது நண்பர்கள் உரிமை எடுத்து சகஜமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். கமலேஷும் மற்றவர்களை உபசரித்துக் கொண்டே அவ்வப்போது அந்த ஜமாவிலும் இயல்பாக கலந்து கொண்டார். எனக்கு அவரின் பொசசிவ் நேச்சர் ஞாபகத்துக்கு வந்து போனது.

சிறப்பு உணவு முடிந்த பின் பழைய நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்று விட்டு வருவதாக கமலேஷிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். திடீரென ராஜேஷ் ஞாபகம் வந்தது. உடன் வந்தவர்களிடம் அவன் எப்படி இருக்கான்? என வினவினேன்.

அத ஏண்டா கேட்குறே. ரெண்டு வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. போன வருஷம் அந்தப் பொண்ணை டைவர்ஸ் பண்ணிட்டான். ரெண்டு மாசம் முன்னாடி இன்னொரு பொண்ண நிச்சயம் பண்ணுனான். அப்புறம் அதுவும் கேன்சல் ஆகிடுச்சு என்றார்கள்.

ஏன்? என்றேன் 

முதப் பொண்னு சாப்ட்வேர்ல வேலை பார்த்துச்சு. கொலீக்ஸோட எல்லாம் சோசியலா பழகியிருக்கு. இவனுக்கு பொறுக்கலை. ஒரே சண்டை. போடான்னு போயிடுச்சு. ரெண்டாவது பொண்ண இவன் வேவு பார்த்தான். அது தெரிஞ்சு அதுவும் கழண்டுகிடுச்சு என்றார்கள்.

திரும்பி வந்து கமலேஷிடம் சொல்லிவிட்டு அவரவர் வாகனங்களை எடுக்கும் போதுதான் கவனித்தேன். டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் புளு கலர் பள பள வென நின்றுகொண்டிருந்தது.

August 13, 2012

மெடிகோர் மீடியேட்டர்


இந்த இயற்கைக்கு என் மேல் என்னதான் கோபமோ தெரியவில்லை. நான் எந்த விஷயம் சம்பந்தமாக ஒரு சங்கல்பம் செய்தாலும் உடனே அதை காலி பண்ணி விடுகிறது.

எங்கள் தெருவில் இருந்த இரண்டு தி.க மற்றும் இரண்டு கம்யூனிச அண்ணன்களிடம் குடித்த யானைப்பாலின் காரணமாக கோவிலுக்கே செல்லக்கூடாது என முடிவெடுத்த அடுத்த வாரமே குலதெய்வ கோயிலுக்கு பால் குடம் தூக்க வைத்தனர் என் குடும்பத்தினர்.

இப்படித்தான் குழந்தைகளை திட்ட, அடிக்க கூடாது, புறம் பேசக் கூடாது, அலுவலக அரசியல் செய்யக் கூடாது என பல சங்கல்பங்கள் எடுப்பேன். ஆனால் அது அடுத்த ஒரு மணி நேரத்தில் விகல்பம் ஆகிவிடும்.

ஆனால் பத்து வருடங்களுக்கு மேலாக நான் போட்டிருந்த ஒரு சபதத்தை மட்டும் இயற்கையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. வேறொன்றுமில்லை அது, சில திருமணங்களில் மீடியேட்டராக இருந்தவர்கள் பட்ட பாட்டை பார்த்ததால் எடுத்த முடிவு அது. இந்த பூவுலகில் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம், கல்யாண மீடியேட்டர் வேலை மட்டும் செய்யக்கூடாது என்பதே அது.

ஆனால் அதுவும் சென்ற வருடம் ஆட்டம் கண்டது. தவிர்க்க முடியாத ஒருவருக்காக (வேறு யார்? சகதர்மிணியின் உறவினர்க்காகத்தான்) மீடியேட்டர் ஆக நேர்ந்தது. தாங்க முடியாத மன வருத்தத்துடன் நண்பனிடம் புலம்பினேன்.


டேய், இந்த சபதம் ஒண்ணுதான் பத்து வருஷம் தாக்குப் பிடிச்சது. இதுவும் இப்படி புட்டுகிடுச்சே என்றேன்.

அவன் எகத்தாளமாகச் சிரித்து, தம்பி மீடியேட்டர் ஆகுறதுக்கு குறைந்த பட்ச தகுதியே கல்யாணமாகி பத்து வருசம் ஆகி நல்லது கெட்டது, லௌகீக கொடுக்கல் வாங்கல் எல்லாம் தெரிஞ்சிருக்கிறது தான். உனக்கு எலிஜிபிலிட்டி கிரிடீரியா சாடிஸ்பை ஆன உடனேயே அழைப்பு வந்துடுச்சு என்றான்.

மேலும் சிரித்தபடி, பூராடம் நூலாடும், தலைக்கும் வாலுக்கும் ஆகாது, அவிட்டம் தவிட்டுப் பானையை தங்கமாக்கும், பரணி தரணி ஆளும், மகம் ஜெகமாளும், கேட்டை கோட்டை கட்டி வாழும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம், ரோகிணி மாமனுக்கு ஆகாது இதெல்லாம் உனக்கு எப்ப தெரிஞ்சது? என்று கேட்டான்.

நான் யோசித்தபடியே இப்போ சில வருஷமாத்தான் என்றேன்.

அப்புறம் அப்பா பேரு, தாத்தா பேரு குல தெய்வம் இருக்குற ஊரு இதெல்லாம் சொன்ன உடனேயே இவன் இந்த ஜாதிக்காரனா இருப்பான் அப்படின்னு உனக்கு எப்ப தோண ஆரம்பிச்சது? என்றான்.

அதுவும் இப்போ சமீபமாத்தான் என்றேன்.

இதெல்லாம் கல்யாணம் ஆகி பத்து வருஷத்துக்கு மேல ஆனா கிடைக்கிற எக்ஸ்பீரியன்ஸ். அடிசனலா பொறுமையும் சேர்ந்திருக்கும். இனிமே நீ மீடியேட்டர் தான். சொந்த பந்தம் அலையன்ஸ் விசாரிக்கச் சொல்லும், தகவல் கேட்கும். தவிர்க்க முடியாது. எஞ்சாய் என்று அனுப்பிவைத்தான்.

என்னுடைய முதல் அஸைன்மெண்ட் எப்படியோ சக்ஸஸ் ஆனது. அதற்கு என்னுடைய பங்களிப்பு ஏதுமில்லை. சம்பந்தப்பட்ட பையனின் பெண்ணைப் பற்றிய எதிர்பார்ப்பு அனுஷ்கா, அஞ்சலி, அமலாபால் என படிப்படியாகக் குறைந்து அங்கமுத்துவில் நின்றிருந்த நேரம்.

போலவே, அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பும் கலெக்டர், டாக்டர், சாப்ட்வேர் என படிப்படியாகக் குறைந்து சரவணபவன் சப்ளையர் என்றாலும் பரவாயில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம். சில மொக்கைப் படங்கள் கூட வெளியாகும் நேரத்தைப் பொறுத்து வெற்றி பெற்று விடுவதைப் போல இந்த சம்பந்தம் டைமிங்கால் முடிந்தது.

மேட்ரிமோனி இணைய தளங்களில் கூட இந்த அமைப்பைப் பார்க்கலாம். முதலில் வரும் ரிக்வெஸ்ட்டை எல்லாம் ரிஜக்ட் செய்வார்கள். பின்னர் அக்செப்ட் செய்வார்கள். பின்னர் ஏதாவது ரிக்வெஸ்ட்  வராதா என்று காத்திருப்பார்கள். எனக்கென்னவோ இதற்கு அவர்கள் தங்கள் தேவைகளை அடிக்கடி அப்டேட் செய்து கொண்டால் நல்லாயிருக்கும் என்று தோன்றும்.

ஷுட் பி வொர்க் இன் எ எம் என் சி என்று கொடுத்தவர்கள், ஏதும் தகையாவிட்டால் மே பி வொர்க் இன் எ எம் என் சி அல்லது மே பி வொர்க் என அடிக்கடி திருத்திக் கொள்ளலாம். ஆனால் சில வில்லங்கங்கள் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கலாய்க்காமல் இருக்க வேண்டும்.

இந்த மீடியேட்டர் தொல்லையில் நான் கண்டு கொண்டது, மாப்பிள்ளை/ பொண்ணுக்கு முதல் வரன் என்றால் நாம் அதில் தலையிடக் கூடாது. தோல்விதான் கிட்டும்.

முதல் முதலாக மாப்பிள்ளையானவர் பெண் பார்க்கப் போனால், அவர் தாய் மாமா (அவரிடம் பெண் இல்லாமல் இருந்தால்), அக்கா, தங்கை கணவர்கள், மற்றும் சுற்றத்தார் எல்லாம் ஏ/சி டெம்போ ட்ராவலர் பிடித்து போவார்கள்.

அங்கே பெண் வீட்டில் பட்சணங்களையெல்லாம் செய்து வைத்து, அவங்க வந்துட்டுப் போன உடனே  தர்றோம் என அவர்கள்
வீட்டு குஞ்சு குளுவான்களிடம் பிராமிஸ் செய்திருப்பார்கள். ஆனால் இந்தக் கூட்டம் அந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விடும்.
ஆனால் சில படலங்களுக்குப் பின் ஒவ்வொரு டிக்கட்டாக கழன்று கொள்ளும். இன்னோவா, டவேரா, அம்பாசிடர், இண்டிகா, நேநோ, ஆட்டோ என வாகன அளவு குறையும். பையனின் பெற்றோரும் எதாவது ஒரு மகளும் மட்டும் கூட வருவார்கள். என் அனுபவத்தில் ஒரு பையன் வீட்டார் கார் வாடகைக்கு எடுத்த காசை சேர்த்து வைத்திருந்தால் காரே வாங்கியிருப்பார்கள்.

பெண் வீடுகளிலும் அப்படித்தான், முதன் முதலாக தங்கள் பெண்ணைப் பார்க்க வருகிறவர்களுக்கு இரண்டு வித இனிப்பு, மூன்று வகை காரம் என அமர்க்களப் படுத்துவார்கள். பக்கத்து வீட்டில் இருந்து ஜமுக்காளம், சேர்கள் எல்லாம் வாங்கிப் போடுவார்கள். சிலர் பக்கத்து வீட்டில் இருந்து நகைகளும் இரவல் வாங்கி போடுவார்கள். இதிலும் சில பிரச்சினைகள் வரும். கண் கூர்மையுடைய சில நாத்தனார்கள், நாங்க பொண்ணு பார்க்க வந்தப்போ பச்சைக்கல் டாலர் கோர்த்து வக்கப்பிரி செயின் போட்டிரிந்தியே, அது இல்லையா? எனக் கேட்பார்கள்.

இவர்களும் பல வைபவங்களுக்குப் பிறகு அசந்து விடுவார்கள். அரக்கிலோ சுவீட், காக்கிலோ மிக்சர், பத்து ரூபா சன்ரைஸ் பாக்கெட் ஒண்ணு மட்டும் வரும் போது வாங்கிட்டு வாங்க என்று      
குடும்பத்தலைவி சொல்லி விடுவார்.

இந்த ஜாதகம் பார்க்கும் விசயத்திலும் இப்படித்தான். முதல் சில மாதங்களுக்கு நல்ல ஜோசியர், கைராசிக்காரர் என்று பார்ப்பார்கள். பின் முகராசி இல்லாமல் போணியாகாத உள்ளூர் ஜோசியரிடம் போவார்கள். பின் அவர்களே இந்த நட்சத்திரத்துக்கு இது ஆகாது என முடிவெடுக்கும் லெவலுக்கு இறங்கி விடுவார்கள். எங்கள் தெருவில் தாலுகா ஆபிஸில் வேலை பார்த்து தன் மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த குமாஸ்தா ஒருவர் வெள்ளி மலருக்கு ராசி பலன் எழுதித்தரும் அளவுக்கு தேர்ந்து விட்டார்.

அவர் எப்போது பேசினாலும் மகேந்திரப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் என பினாத்திக் கொண்டேயிருப்பார்.

பத்துப் பொருத்தம் தேடி பெயர்ப் பொருத்தம் இருந்தால் போதும் என்று நேற்று கூட ஒருவர் வந்தார். ஏன் கவலைப் படுறீங்க? அயனான ஜாதகம் ஒண்ணு இருக்கு என்று சொல்லி இப்போதுதான் அயனாவரம் கூட்டிக் கொண்டு போகிறேன்.

பையனின் அம்மா விக்டோரியா மகாராணி ரேஞ்சுக்கு ஹாலில் உட்கார்ந்து நோட்டம் விடுகிறார். பெண்ணின் அம்மா பம்மிக் கொண்டே பேசுகிறார்.

ஒருவேளை இந்த வரன் தகைந்து விட்டாம் (சை, மீடியேட்டர் வேலை பார்த்து அந்த லாங்குவேஜே வந்து தொலையுது), இந்த காட்சி ஓராண்டில் எப்படி மாறும் என்று நினைத்தேன். வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அங்க ஹீனமான மைசூர் பாக்கை கடித்தேன்.

முடிந்து திரும்பி வரும் போது, பொண்ணு குடும்பப் பாங்காத் தெரியுதே? இல்லை தம்பி என்று பையனின் தகப்பனார் ஆரம்பித்தார். ஆமா நல்ல குடும்பம் என்று அந்தக் கேள்விக்கு முட்டுக் கொடுத்தேன்.

பின்ன இவன மட்டும் நிம்மதியா இருக்க விட்டிடுவனா
என்ன?