August 28, 2009

கிராமராஜன்களுக்கு இனி வாய்ப்பிருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்படத்துக்கு சென்றிருந்தேன்.(திண்டுக்கல் - கணேஷ் தியேட்டர்) மதிய காட்சி ஹவுஸ்புல். இடைவேளை முடிந்து ரசிகர்கள் அரங்கிற்கு உள்ளே சென்றதும் கேண்டின்காரரிடம் கேட்டேன்.

”என்னங்க இந்தப்படத்துக்கு இவ்வளோ கூட்டம்”

”ராமராஜன் படம் எதுவும் இப்போ இல்ல, பித்தளப்பட்டி,பாறைப்பட்டி,தெத்துப்பட்டின்னு எல்லா ஆளுகளும் இப்போ இந்தப் படத்துக்குத்தான் வந்திருக்காங்க” என்று பதிலளித்தார்.

அதுமட்டுமல்ல அதன்பின் வந்த ஊர் மரியாதை,எல்லைச்சாமி,சாமுண்டி, கட்டபொம்மன்,ராஜபாண்டி என சரத்குமார் நடித்த கிராமியப் படங்கள் எல்லாம் அந்த ஏரியாவில் நன்றாக ஓடியது.

91 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே வெற்றிக்குப் பின் ராஜ்கிரணுக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது. அரண்மணைக்கிளி,எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியும், பின் வந்த படங்கள் மற்ற இடங்களில் தோலிவியடைந்தாலும் சி செண்டர்களில் முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

சென்னை-28, சரோஜா படங்களின் இயக்குநர் வெங்கட் பிரபு முதலில் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த படம் பூஞ்சோலை. அவர் தந்தை கங்கை அமரனே தயாரித்து இயக்குவதாக இருந்தது. நாயகி சங்கீதா (அப்போது ரசிகா). அந்தப் பட பிரஸ் மீட்டில் அமரன் சொன்னது,

“ராம்ராஜனின் இடம் இப்போது காலியாக இருக்கிறது. என் மகனுக்கு கிராமத்து ஹீரோவுக்கு உரிய முகம். ஒரு ரவுண்டு வருவான். அதனால் துணிந்து அறிமுகப்படுத்துகிறேன்” என்றார். விதி, வெங்கட் பிரபுவை நல்ல இயக்குநராக அடையாளம் காட்டியது பின்னர்.


ஆமாம். இப்பொது அந்த கிராமிய படங்களுக்கே உரித்தான ஹீரோக்கள் எங்கே போனார்கள்?
ராமராஜன்,ராஜ்கிரண் வரிசையில் அடுத்த ஆள் யார்?

கிராம மக்களின் ரசனை அப்படியே இருக்கிறதா? இல்லை முன்னேறி விட்டதா?

தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?

ஐந்து வயதுப் பையனுக்கு ஹேராமும்,நான் கடவுளும் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்தது சண்டைப் படம்,மீசை அரும்பியபின் காதல் படம், கொஞ்சம் அடிபட்ட பின் அன்பே சிவம், மகாநதி.

ஆனால் விகடன், குமுதத்திலேயே தங்கி விடும் போதுதான் ரசனைத் தேக்கம் ஏற்படுகிறது. அதுபோலவே சி சென்டர் ரசிகர்களும் எதையுமே நேரடியாகச் சொல்லும் படங்களுடன் தங்களை நிறுத்திக் கொண்டார்கள். காட்சிகளுக்கு இடையே படித்தல், குறியீடுகள் ஆகியவை அவர்களுக்கு அன்னியமாய் இருந்தன.

எடுத்துக்காட்டாக

சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர் என்ற பாத்திரம். அதற்கு சப்போர்டிவ்வாக அவர் ஏதும் கான்பரண்ஸில் பேசுவது மாதிரியோ அல்லது ஒரு சிக்கலான கேஸை ஹேண்டில் செய்வது மாதிரியோ காட்சி அமைத்து விளக்காமல், “அவர் எவ்வளோ பெரிய டாக்டர்” என்ற ஒரு வரி வசனத்தில் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.

ராமராஜன்,சரத்குமார்,ராஜ்கிரண் நடித்த பல கிராமிய படங்களில் இம்மாதிரி நேரடிக் காட்சிகளே இருக்கும்.

சரி. இப்போது எப்படி நிலைமை? அவர்கள் அங்கேயே தங்கி விட்டார்களா? என்ற கேள்விக்கு
முன்னேறி வருகிறார்கள் என்பதே பதிலாக இருக்கும்.


கடந்த சில வருடங்களில் பஞ்சாயத்து,மஞ்சு விரட்டு,முறை மாமன் என லைட்டான கதையமைப்புடன் வந்த எந்த வழக்கமான கிராமியப் படமும் ஓடவில்லை. ஆனால் விருமாண்டி,பருத்திவீரன் போல உள்ளடக்கத்துடன் வந்த படங்கள் தப்பித்தன.

இப்போதைய தமிழ்சினிமாவில் இரண்டு வகையான படங்களே எடுக்கப்படுகின்றன. ஒன்று நகரத்தைக் களமாகக் கொண்ட ஆக்‌ஷன்,காதல், காமெடி பொழுது போக்குப் படங்கள்.

இன்னொன்று யதார்த்தமான அழகி,காதல்,சுப்ரமணியபுரம்,பூ, வெண்ணிலா கபடிக் குழு,நாடோடிகள்,பசங்க போன்ற படங்கள். இவை மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டாலும் வழக்கமான கிராமியப் படங்களின் வகையில் சேர்க்க முடியாது. சில படங்கள் சிறு நகர பேக் கிரவுண்டில் எடுக்கப்படுகின்றன.
தங்கர் பச்சான் வட மாவட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். வெடிகுண்டு முருகேசன் கூட வழக்கமான கிராமியப் படங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றே.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, காத்தவராயன் என வழக்கமான பாணியில் எடுக்கப்பட்ட கிராமியக் கதைகள் படு தோல்வி அடைந்ததால் அனைவரும் யோசிக்கிறார்கள்.

செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

யதார்த்தப் படங்களுக்கு கதைக்கேற்ற ஹீரோதான். ஆனால் வழக்கமான கிராமியப் படங்களுக்குத்தான் ரெககணைஸ் ஆன முகம் தேவை. அம்மாதிரிப் படங்கள் இனி வருவது கடினம் என்பதால் அதற்கேற்ற கிராமராஜன்களும் வருங்காலத்தில் உருவாவப் போவதில்லை.

இனி எல்லாம் அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு,விஷால்,ஜெயம் ரவி,ஆர்யா, மாதவன் டைப் ஹீரோக்கள் தான் வருவார்கள். சில சமயம் சசிகுமார் போல வந்தாலும் கதைக்கேற்ற வேடம்தான் போடுவார்கள்.

August 27, 2009

திட்டு

எங்கள் குழுவின் நிகழ்ச்சிகள் முடிந்து வாத்தியக் கருவிகளை வேனில் ஏற்றும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. கீ போர்ட் ஹரி பார்த்து பார்த்து என்று ஏற்றுபவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தான். குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து வேனை நோக்கி வந்து கொண்டிருந்தார். பக்கா செட்டில்மெண்டாயிருக்கும்.

செட்டில்மெண்டில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் பண்பு தெரிந்தது என்றால் நிகழ்ச்சியை நடத்திய விதத்தில் அவர்களின் ரசனை தெரிந்தது. சாப்பிட இடம் கிடைக்காத
வர்களும்,சாப்பிட்ட அசதியில் ஐந்து நிமிடம் உட்கார்ந்து போவோமே என நினைப்பவர்களும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ரிசப்ஷன் கச்சேரிகளுக்கே வாசித்தே
நொந்து போயிருந்த எங்களுக்கு இந்தக் கச்சேரி புது அனுபவமாய் இருந்தது. ஆம். கல்யாணம் முடிந்து, மதிய சாப்பாடு இரண்டு மணி வரை. கச்சேரி இரண்டு முதல் ஐந்து வரை. ஞாயிற்றுக் கிழமையாததால் அனைவரும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வேனில் அனைவரும் ஏறிவிட நான் மட்டும் இங்கே தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்கார், பார்த்து நாளாச்சு,பார்த்துட்டு வந்துடுறேன் என கழண்டு கொண்டேன். இதைக் கவனித்துவிட்ட உதித்தும் வேனில் இருந்து இறங்கி என்னுடன் சேர்ந்து கொண்டான். உதித் நாராயணன் குரலில் அமைந்த பாடல்களைப் பாடும் ஸ்பெசலிஸ்ட் என்பதால் முருகேசனுக்கு அந்தப் பெயர். ஆறு மாதம் முன்பு குழுவில் இணைந்தவன்.சாரில் தொடங்கி இப்போது அண்ணே வரை வந்திருப்பவன்.

என்னாப்பா, இன்னைக்கு எங்கேயோ பார்த்த மயக்கத்தை ரொம்ப பீல் பண்ணி பாடீட்டயே என ஆரம்பித்தேன்.

ஆமண்ணே, ஆடியன்ஸில நாலஞ்சு நயன்தாரா அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சுக்கிட்டு இருந்ததில்ல அதான் பீல் பண்ணிட்டேன். ஆமா நீங்களும் தாலாட்ட வருவாளா, கவிதைகள் சொல்லவான்னு பிழிஞ்சுட்டீங்களே? என்றான்.

தொடர்ந்து, எண்ணன்னே ஏன் வேன்ல போகல என ஆரம்பித்தான்.

ஆமடா, பி பி ஸ்ரீனிவாஸ் வாய்ஸ் ஆள்ல இருந்து பாங்கோஸ் வாசிக்கிறவன் வரைக்கும் இருக்கிற மூணு லேடி சிங்கர்ஸ்ஸ லுக் விடுறதும், கவன ஈர்ப்பு பண்றேன்னு கோமாளித்தனம் பண்ணுறதும், எரிச்சலா இருக்குடா. அதான் பஸ்ல போயிறலாம்னு.

அண்ணே வாழ்க்கைங்கிறது சின்ன சின்ன சந்தோஷத்துல தானன்னே அடங்கியிருக்கு

தம்பி, இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.

அண்ணே செட்டில்ங்குறது, நாம கடைசியா சுடுகாட்டில ஆகுறதுதானன்னே. வாழ்க்கையை அதன் போக்குல வாழ வேணாமா?

நீ நெறையா புத்தகம் படிக்கிறேன்னு நெனைக்கிறேன். ஆமா இப்ப வேலைக்கு ட்ரை பண்ணுறியா இல்ல சினிமாக்கு ட்ரை பண்ணுறியா?

பார்ட் டைமா ஒரு ஜாப் கிடைச்சுருக்குண்ணே. மத்த நேரங்கள்ல பிராக்டிஸ், சான்ஸ் தேடன்னு இருக்கலாம்னு பார்க்குறேன்.

ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும். ஒரு பர்டிகுலர் டைம் பிக்ஸ் பண்ணிக்கோ. அதுவரைக்கும் சின்சியரா ட்ரை பண்ணு.முடியலையா புல் டைம் வேலைக்குப் போயிடு. என்ன மாதிரி அல்லாடாத.

ஆமண்ணே நானும் கேட்கணும்னே இருந்தேன். உங்களுக்கு அப்போ சான்ஸ் கிடைக்கலியாண்ணே?

கிடைச்சுருக்கும். முழு மூச்சா ட்ரை பண்ணியிருந்தா. ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால். இப்போ சோத்துக்கு, சுண்ணாம்பா வேக வேண்டியிருக்கு.

ஏழெட்டு வருஷம் சும்மா திரிஞ்சதால சொல்லிக்கிற மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு சுமாரான வேலை தான் கிடைச்சது. அப்புறம் கல்யாணம். கைக்கும் வாய்க்குமே பத்தாத சம்பளம்.

ராணி மாதிரி வாழணும்னு கனவு கண்டேன். சாணி மாதிரி என்னைய ஆக்கிட்டியேன்னு வீட்டுக்காரி தெனமும் வார்த்தையாலே கொல்லுறா. அவளச் சொல்லியும் குத்தமில்ல. அவ செட்டு ஆளுங்க இருக்கிற நெலமையோட கம்பேர் பண்ணி மாஞ்சு மாஞ்சு போறா. அஞ்சு வயசுல பொம்பளப்பிள்ள. ஸ்கூல் யூனிபார்ம தவிர ரெண்டே டிரஸ்தான் அவளுக்கு இருக்கு.ஆத்திரத்த எங்கதான் போயி காட்டுவா? அதான் இப்போக் கூட ரெண்டுமணி நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு ராத்திரிக்கு போகலாம்னு இருக்கேன்.

கேட்கவே சங்கடமா இருக்குண்ணே.என்ன தான் பண்ணலாம்னு இருக்கீங்க?

காலேஜில வோக்கல் சோலோ ஜெயிக்கும் போதெல்லாம் கிடச்ச கைதட்டல் போதை இன்னும் கேட்குது. ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரோகிராம குறைச்சுக்கிட்டு வர்றேன். மத்த ஆளுங்கள்ளாம் கூப்பிட்டா போறது இல்ல. வெங்கட்டுக்காக மட்டும்தான் பாடவர்றது.சில்லறை செலவுக்கு ஆகுது. இனி காலையில இல்லாட்டி, சாயங்காலம் எதுவும் பார்ட் டைம் ஜாம் கிடைச்சா பார்க்கலாமுன்னு இருக்கேன்.

இப்படியே போயிக்கிட்டு இருந்தா எப்படிண்ணே?

கஷ்டம்தான். ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கொஞ்சம் காசு சேர்த்து சைடு பிஸினஸ் பண்ணலாம்னு இருக்கேன். எப்படியும் அஞ்சாறு வருஷத்துல மேடேறிரணும்.

பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பேருந்து வர ஏறிக்கொண்டோம். கூட்டம் அதிகமானதால் பேச்சு தடைப்பட்டது.இறங்க வேண்டிய இடம் வர கண்களாலேயே விடை பெற்றுக் கொண்டு இறங்கினேன்.

ஐந்து வருடத்தில் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடுமா? யோசிக்கத் தொடங்கியது மனம்.சரி தீரவில்லை யென்றால்? இப்போ வயசு முப்பத்தாறு. அறுபது வரைக்கும் இருப்போம்னா இன்னும் 24 வருஷம். எட்டு மணி நேரத் தூக்கத்திலேயே எட்டு வருஷம் போயிடும். எட்டு மணி நேரம் ஆபிஸ் வேலையில்ல எட்டு வருஷம். ஞாயிறு, லீவெல்லாம் கழிச்சாலும் ஆறரை வருஷம் வரும். அப்புரம் குளிக்கிறது, கடைக்குப் போறது, பாப்பாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க்ண்ணு ஒரு நாலரை வருஷம் வச்சோமின்னா ஒரு 19 வருஷம் ஓடிடும், பார்ட்டைமோ சைடு பிஸினஸோ மூணு மணி நேரம் பார்த்தா அது ஒரு மூணு
வருஷம் ஓடிடும்.

வீட்டுக்காரி திட்டுனா எவ்வளவுதான் திட்ட முடியும்? ரெண்டு வருஷம்தான் அவளுக்கு டைம் கிடைக்கும்.

என ஏதேதோ எண்ணங்கள் ஓட வீட்டுக் கதவைத் தட்டினேன். நல்ல தூக்கக் கலக்கத்தில் மனைவி கதவைத் திறந்தாள். சாப்பிட்டுட்டேன் என்றதும், குழந்தையின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷத்தில் இப்போது எவ்வளவு நேரம் கழிந்திருக்கும்? என எண்ணிக்கொண்டே படுக்கையை விரித்தேன்.

August 22, 2009

என்ன செய்யப் போகிறார்? ஜெயலலிதா.

எதிர்பார்த்தபடியே இடைத்தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தொண்டாமுத்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுகவிற்கும், தே தி மு கவிற்கும் முன்பை விட அதிகமான ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. 67% தானே ஒட்டுப் பதிவு, ஓட்டுப் போடதவர்கள் எல்லாம் அதிமுக வினர் என்று ஜெயா டிவி கூட சொல்லாது.

எப்போதும் ஓட்டுப் போடுபவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்திருக்கிறார்கள். எப்போதும் வராதவார்கள் வரவில்லை.

சரி. ஜெயலலிதாதான் அதிமுகவினர் ஓட்டுப் போட வேண்டாமென்று மறைமுக உத்தரவு எல்லாம் கொடுத்தாரே? அவர்கள் அதை மதிக்க வில்லையா? இல்லை அதிமுக என்னும் ஓட்டு வங்கியே திவாலாகி விட்டதா? என்று கேள்விகள் வரலாம்.

ஒரு கட்சியின் ஓட்டு வங்கி என்பது, முழுக்க முழுக்க அக்கட்சிக்காரர்களை மட்டும் சேர்ந்ததல்ல. இந்தக்கட்சி மற்றவர்களை விட பரவாயில்லை (எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி பெஸ்ட்?) என்ற அடிப்படையில் அதை முதல் சாய்ஸாக வைத்திருப்பவர்களைச் சேர்த்தும்தான்.

அதிமுகவில் கட்சிக்காரர்கள் அதன் ஓட்டு வங்கியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு என்றால், அதிமுகவை பர்ஸ்ட் ஆப்ஷனாக வைத்திருக்கும் பொதுமக்கள் மீதப் பங்கு. இதேதான் திமுக விற்கும், தேதிமுகவிற்கும்.

இந்தப் பொதுமக்கள் அதிமுக போடியிடவில்லை என்பதற்காக வீட்டில் இருந்துவிடவில்லை. தங்கள் அடுத்த ஆப்ஷனுக்கு வாக்களிக்கச் சென்று விட்டார்கள்.

எம்ஜியார் கட்சியை ஆரம்பித்தபோது, அவர் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு என்பதே. அதனால் தான் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டால் அண்ணாயிஸம் என்று மழுப்புவார். அப்போதைய அதிமுக ஓட்டு வங்கியில் இருந்தவர்கள் எல்லாம் கருணாநிதிக்கு வாக்களிக்க கனவிலும் நினைக்காதவர்கள்.

ஆனால் இப்பொதைய அதிமுக ஓட்டு வங்கி அப்படி இல்லை. திமுக விற்கு அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார்கள். சென்ற தேர்தலைவிட திமுக இப்போது அதிகம் பெற்றுள்ள வாக்குகளே சாட்சி.

சரி. என்ன செய்து திமுக, அதிமுகவின் ஓட்டு வங்கியை கரைத்துள்ளது?.

இதற்கு முன் பழைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

எம்ஜியார் ஆட்சிக்கு வரும்முன், அவரது ராமாவரம் தோட்டம் சார்பாக ஒரு ஆவணம் தேவைப்பட்டது. அதை வாங்கிவர அவரது உதவியாளார், அந்த பஞ்சாயத்து நாட்டாமையிடம் சென்றார். அவர் இவர்களை மதிக்கவேயில்லை. அதை அறிந்த எம்ஜியாரின் சூப்பர் ஈகோ விழித்துக் கொண்டது. நாட்டாமையைப் பற்றி விசாரித்தார்.

”இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்த பதவிக்கு வருபவர்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பதில் வந்தது”

எம்ஜியார் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக போட்ட உத்தரவே, இந்த பரம்பரை பதிவுகள் ஒழிக்கப்படுகின்றன என்பதுதான். அதற்குப் பின் அரசுத் தேர்வு மூலம், கிராம் நிர்வாக அலுவலர்கள் (வி ஏ ஓ) என்ற பதவியில் யார் வேண்டுமானலும் தேர்வு பெறலாம் என சட்டமியற்றினார்.

அப்போது பதவிக்கு வந்த வி ஏ ஓ அவர்தம் குடும்பத்தினர் எல்லாம் அதிமுகவிற்கு விசுவாமாக இருந்தார்கள். ஏனெனில் வாழ்க்கை கிடைத்ததல்லவா?.

அதே போலத்தான் இப்போது திமுகவின் இந்த ஆட்சியிலும் சரி, 1996-2001 ஆட்சியிலும் சரி ஆசிரியர் பணிகளுக்கு எந்த வித பணப் பரிமாற்றமும் இல்லாமல் (குறிப்பாக அன்பழகன் அமைச்சராக இருந்த போது) ஏராளமானோர் நியமிக்கப் பட்டார்கள். அதில் சிலர் 27 வயது கடந்தும் மணமாகாத பெண்கள். அவர்களுக்கெல்லாம் உததரவு கிடைத்த ஆறு மாதத்தில் கல்யாணம் நடந்தது. அவர்களின் ஓட்டு என்றென்றைக்கும் திமுக விற்குத்தான்.

மற்ற அரசுத்துறைகளிலும் நியமனம் திமுக ஆட்சியிலேயே அதிகம் நடைபெறுகிறது. அந்த ஊழியர்களையும் திமுக திருப்திப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆறாவது ஊதியக் கமிஷன் அமலாக்காத்திற்கு முன்னேயே இடைக்கால நிவாரணத்தை வழங்குகிறது. அதிமுகவின் ஆட்சிக்காலத்திலோ ஜெயலலிதா எஸ்மா டெஸ்மா என அவர்களை பகைத்துக் கொண்டார்.

சிறுபான்மையினரின் ஓட்டு என்ற வங்கியை குறிவைத்தே திமுக காய்களை நகர்த்துகிறது. எந்த மேடையாய் இருந்தாலும் எஸ்றா சற்குணம் அங்கே இருப்பார். இயேசு அழைக்கிறார் (காருண்யா) அமைப்புக்கு அதிக விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதால், கிரீன் வேஸ் ரோட்டின் ஒரு பகுதியை டி ஜி எஸ் தினகரன் சாலை என மாற்றுகிறார்கள். இனி அவர்களின் ஓட்டு யாருக்கு விழும்? அதிமுகவோ மத மாற்ற தடைச்சட்டம், கன்னிமேரி விவகாரம் என எதிர்ப்பாளர்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

பாஜகவுடன் மறைமுக அண்டெர்ஸ்டாண்டிங், நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்வது, அவர் சென்னை வந்தால் விருந்து கொடுப்பது என தனக்கு ஆதரவாக இருக்கும் ஓரளவு முஸ்லிம் ஓட்டுக்களையும் ஜெயலலிதா இழந்து வருகிறார்.

அதிமுகவின் பலமாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு வங்கியும், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர் ஓட்டு வங்கியும் கருதப்படுகிறது. ஜெயலலிதாவும் தன் அருகில் அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களையே வைத்துக் கொண்டிருக்கிறார். அம்மாவட்டங்களில் இருக்கும் பிற வகுப்பினர்களுக்கு (நாயுடு, பிள்ளைமார் போன்ற வகுப்பினர்கள்) இப்போது முக்கிய பதவிகள் எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் திமுக அமைச்சரவையிலும் சரி, கட்சியில் மாவட்ட, ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளிலும் சரி ஒரு பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனால் அவர்களுடைய வாக்குகள் முதல் சாய்ஸாக திமுகவிற்கு மாறி வருகின்றன.

அதிமுகவை முதல் சாய்ஸாக வைத்திருந்த இன்னொரு முக்கிய பிரிவினர் அடித்தட்டு மக்கள். ஓட்டுப்பதிவன்று சுனாமியே வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயங்காதவர்கள். அவர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி, கேஸ் அடுப்பு என அள்ளி விட்டு வருகிறார்கள். பொங்கல் சீர் வேறு. எனவே அவர்களும் மெல்ல மெல்ல திமுகவை முதல் சாய்ஸாக மனதில் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்னும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், பிரசவ உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என பல் திட்டங்களை சரியாக செயல்படுத்தி, பயணாளிகளின் முதல் சாய்ஸாக திமுக மாறி வருகிறது.

சென்ற ஆண்டு ரேஷன் கார்டு இருந்தால் தான் அடுத்த சிலிண்டர் பதிவே என்னும் அளவுக்கு கெடுபிடிகள் துவங்கின. வேறு ஆதாரங்கள் மூலம் இணைப்பு வாங்கியவர்கள் லீவு போட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு படையெடுத்தார்கள். அங்கேயோ இலவசத்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ரேஷன் கார்டுதானே அடிப்படை என்பதால் பல ஆதாரங்களைக் கேட்டு மக்களை திருப்பியனுப்பினார்கள். சில நாட்களில் உத்தரவு வந்தது. சிலிண்டருக்கு ரேஷன் கார்டு ஆதாரம் தேவையில்லை என. பெருமூச்சு விட்ட பலரில் சிலர் திமுகவை முதல் சாய்ஸாக எண்ண அது வழி வகுத்தது.


மேடையில் பேசி எல்லாம் யார் மனத்தையும் மாற்றி விட முடியாது என்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்திருக்கிறார். அதனால் தான் குறிபார்த்து ஓட்டுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.

அடுத்த கட்டமாக அதிமுகவின் நிர்வாகிகளையும் தூக்க ஆரம்பித்து விட்டார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் என்ன? அடுத்து ஓ பி எஸ்ஸையே தூக்கப் போகிறோம் என்கிறார்கள்.


ஜெயலலிதா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கட்சி நிர்வாகிகளையும் பாதுகாக்க வேண்டும். தன் முதல் சாய்ஸ் வாக்காளர்களையும் தக்க வைதுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யப் போகிறார் பார்ப்போம்.

August 21, 2009

என்னைக் கவர்ந்த புருனோ

பெரும்பாலான பதிவர்களைச் நான் முதன்முதலில் சந்தித்த மெரினா காந்தி சிலை அருகேதான் டாக்டர் புருனோவையும் சந்தித்தேன். அந்த சந்திப்பு வரை, அவர் ஒரு மருத்துவர், இட ஒதுக்கீடு பற்றி ஆழ்ந்த புரிதல் உள்ளவர், மருத்துவ உயர் கல்வி நுழைவுத்தேர்வு பற்றிய புத்தகங்கள் எழுதியவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். அந்தச் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது.

அவர் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து சேர்ந்த உடனேயே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. பேசிய போதுதான் தெரிந்தது அவர் சினிமா,விளையாட்டு,இசை,அரசியல், சமூகம் என எல்லாத்துறைகளிலும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர் என்பது.

அதற்கடுத்த மாதமே ஓப்பன் சோர்ஸ் பற்றி கருத்தரங்கில் விரிவுரையாற்றி தன் கணிணித்துறை அறிவை வெளிப்படுத்தினார். அறிவு ஜீவிகள் வேறு தலைமைப் பண்பு வேறு என்று பலரும் சொல்வார்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது கடினம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அது அப்படியில்லை என என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  புருனோவும் அப்படித்தான். அவர் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர்.

அப்பாடா, அவரைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என நினைத்திருந்த எனக்கு கிடைத்தது ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவர் ஜோதிடத்திலும் விற்பன்னர் என்பது. சித்தர் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை மனிதர்.

கிழக்கு பதிப்பகத்தில் அவர் ஆற்றிய பன்றிக்காய்ச்சல் பற்றிய உரை இன்னும் மனதில் இருக்கிறது. விரைவில் பன்றிக்காய்ச்சல் பற்றிய அவரது புத்தகமும் வர இருக்கிறது.

இந்த வார ஆனந்த விகடனில் அவர் வைரஸ்களைப் பற்றி எழுதிய சிறு கட்டுரை 143ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. (இலவச இணைப்பில்).

இவை எல்லாவற்றையும் விட அவரது இன்னொரு முகம் எனக்குப் பிடித்தமானது. அதுதான் தான் சரி என்று நம்பியதற்காக கடைசி வரை போராடுவது.

சட்டக் கல்லூரி சம்பவம் பற்றிய பதிவர் சந்திப்பிற்காக மெரினாவில் 50 பேர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறை உதவி ஆய்வாளரும், காவலர்கள் இருவரும் வந்து இப்படி கூட்டமாக நிற்கக் கூடாது, கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை. நண்பர்கள் கூடி பேசுகிறோம், அதனால் அனுமதியுங்கள்” என்று மழுப்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது புருனோ, அவர்களிடம் ”எந்த சட்டத்தில் இருக்கிறது?, ஆர்டர் இருக்கிறதா? வாய் மொழி உத்தரவா?” என வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் கூரான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள்.

அவர்கள் போகும்போது டிசி கிட்ட பேசி வண்டி அனுப்பச் சொல்லணும் என்பது போல பேசிக் கொண்டே சென்றார்கள். அதற்குள் பாலபாரதி டிசி யிடம் அலைபேசியில் பேசி நிலைமையை விளக்கியதும், அவர் கூட்டம் நடத்த தடை இல்லை, நீங்கள் அந்த உதவி ஆய்வாளரிடம் போய் என்னிடம் வயர்லெஸ்ஸில் பேசச் சொல்லுங்கள் என்று கூறினார்.

நாங்கள் இருவரும் கிளம்பிப் போய் இதை சொன்னவுடன், அவர் டிசியிடம் பேசிவிட்டு அனுமதியளித்தார்.

அப்போது என்னிடம் அவர் கேட்டது, “உங்க கூட நின்னு பேசிக்கிட்டிருந்தாரே, யாருங்க அவரு? லாயரா?”


பின்குறிப்பு

இதே கூட்டத்துக்கு அகநாழிகை வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார். அவர் உடை, ஹேர்ஸ்டைல், மீசை, அளந்து வார்த்தைகளைப் பேசிய விதம், விவரங்களைக் கேட்ட பாங்கு ஆகியவற்றை வைத்து, அவர் உளவுத்துறை என பதிவர்களிடம் ஒரு வதந்தி பரவியது. உடன் வந்த அவர் நண்பரும் அதே கெட்டப்பில் இருந்தார். சில பதிவர்கள் அவரிடம் பேசவே பயந்தார்கள் (ஹி ஹி நானும்தான்).

August 15, 2009

தென்னங்கீற்று

தமிழ்சினிமாவில் பெண்கள் வயதுக்கு வருவது, அதற்கான சடங்குகள் நடத்துவது போன்ற காட்சியமைப்புகள் எப்போதிலிருந்து வருகின்றன என்று பார்த்தால் 70 களின் ஆரம்பத்தில் இருந்துதான் என்று சொல்ல முடியும். இயல்பான கதைகள் வரத்தொடங்கிய காலகட்டத்தில் தான் பெண்களின் இயல்பான பருவமாற்றமும் திரையில் வரத் தொடங்கியது.

இந்தக் காட்சிகளின் அவசியமென்ன?. இரு குடும்பத்தாரிடையே சண்டை வர ஒரு களம், அதைத் தொடர்ந்து கதையில் வரும் முடிச்சிற்க்காக சில இயக்குநர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக பாரதிராஜா. தாய்மாமன் என்னும் உறவை தூக்கிப்பிடிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.


ஒரு பெண்ணிற்க்கு காதல் வரத்தொடங்கும் ஆரம்பப் புள்ளியாகவும் (பாரதிகண்ணம்மா,காதல்), ஆணுக்கு காதல் தொடங்கும் (அழகி) ஆரம்பப்புள்ளிக்காகவும் இந்தக் காட்சிகள் பல இயகுநர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

சில இயக்குநர்களே இதை காமெடி காட்சிகளுக்கும் உபயோகப் படுத்தினார்கள் (ஜல்லிக்கட்டு காளை, திருப்பதி). வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஒரு ஆண் வயதுக்கு வந்தால் எப்படி பாட வேண்டுமென காமெடி பண்ணியிருந்தார்கள். பாட்டாளி திரைப்படத்தில் பெண் வேடமிட்ட ஆணுக்கு சடங்கு என்று ஒரு காமெடியும் உண்டு.

ஆனால், இந்த விஷயத்தை திரைப்படத்தின் கருவாகவே உபயோகித்த படங்கள் மிகக் குறைவு. தென் மாவட்டங்களில் ஒரு பழக்கம் உண்டு (மற்ற இடங்களிலும் இருக்கலாம்). ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் அந்தத் துணிகளை துவைத்து கொடுப்பவர்கள் சலவைத் தொழிலாளர்களே. பின் அந்தப் பெண்ணை தனியே உட்கார வைத்து, சில நாட்களுக்குள் தாய்மாமன் சீர் நடைபெறும். (பூப்புனித நீராட்டு விழா என்பது வசூலுக்காகவும், எங்கள் பெண் பெரியவளாகிவிட்டாள் என ஊருக்குத் தெரியப்படுத்தவும் பின் சவுகரியமான ஒரு நாளில் நடத்தப்படுவது.). இந்த தாய்மாமன் சீரில் கொடுத்த புடவையைத் தான் முதலில் உடுத்திக் கொள்ள வேண்டுமென சொல்வார்கள். இந்த இடைப்பட்ட ஓரிரு நாளில் அந்தப் பெண்கள் உடுத்திக் கொள்வது சலவைத் தொழிலாளர்கள் கொடுக்கும் உடைகளையே.

இதை மையமாக வைத்து 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் முதல் சீதனம். சிவா, ஆம்னி நடிக்க சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி இசையில் வெளியானது இந்தப்படம். இயக்கியது சேரன் பாண்டியன் போன்ற படங்களின் வசனகர்த்தா ஈரோடு சவுந்தர். இசை சௌந்தர்யன்.

ஒரு சலவைத் தொழிலாளியை பெரிய வீட்டுப் பெண் காதலிக்கிறார். அந்தத் தாய்மாமனை விட எனக்கு முதல் சீதனம் கொடுத்த இந்த தொழிலாளி பெரியவர்தான் என நாயகி சொல்கிறாள். முடிவு எப்படியிருக்கும்?. இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சில சமூக சிந்தனைகளைத் தூண்டியது.

தாழ்த்தப்பட்டவர்களில் புதிரை வண்ணார்கள் என்று ஒரு பிரிவு உண்டு. சுருக்கமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டவர்களில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் தீட்டுச் சேலையை சலவை செய்து கொடுப்பவர்கள் என்று சொல்வார்கள். திண்டுக்கல்,விருதுநகர் மாவட்டங்களில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சற்று அதிகமாகவே. இவர்கள் தங்கள் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். பல சமூக ஆர்வலர்கள் இவர்களுக்காக உழைத்தார்கள்.

தமிழக அரசு சமீபத்தில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது. அதைத் தொடர்ந்து நீண்ட முயற்சிகளுக்குப் பின் புதிரை வண்ணார்களுக்கான தனி நல வாரியத்தை அமைத்துள்ளது. இது அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் என நம்புவோமாக.

முதல் சீதனம் படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கும். குறிப்பாக எஸ் பி பி பாடிய எட்டு மடிப்புச் சேலை என்னும் பாடல்.

மேற்குறிப்பிட்ட படங்களெல்லாம் பெண் பருவமடைந்த பின் வரும் காட்சியமைப்புகளை வைத்து. ஆனால் ஓரு பெண் பருவமடையாவிட்டால் என்னென்ன கஷ்டங்களை அவளும் அவள் குடும்பத்தாரும் பட நேரிடும் என்பதை அருமையாக காட்டிய படம் 1975 ஆம் ஆண்டு வெளியான தென்னங்கீற்று.

எழுத்தாளர் கோவி மணிசேகரன் எழுதிய நாவலே இது. அவர் சில காலம் சினிமா மீது கொண்ட பற்றுக்காரணமாக இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். முதல் படம் அரங்கேற்றம். பின்னர் அவரிடம் இருந்து வெளியேறியபின்
இயக்கிய படமே தென்னங்கீற்று.

இந்தக் கதையை கேள்விப்பட்ட ஒரு கன்னட தயாரிப்பாளர் இதை கன்னடத்தில் படமாக்க வந்தார். அவரிடம் கோவி, படத்தை தானே இயக்குவதாகவும், தமிழிலும் இதை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

விஜயகுமார், சுஜாதா நடிக்க உருவானது இந்தப் படம். சுஜாதா 28 வயதாகியும் பருவமடையாத பெண்ணாக நடித்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வேடத்தில் நடித்த கல்பனா. கன்னடத்தில் சுஜாதா வேடத்தை ஏற்றிருந்தார். பல சங்கடங்களை சந்திக்க நேரும் சுஜாதா இறுதியில் பருவமடைவார்.

கன்னடத்தில் நல்ல வெற்றி பெற்ற இந்தப் படம், தமிழில் தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களால் பாராட்டப் பட்டது. தமிழக அரசு விருதும் கிடைத்தது.

இந்தப்படம் வெளியான காலகட்டங்களில் பெண்ணின் பருவமடையும் வயது 14-15 ஆக இருந்தது. பி யூ சி படிக்கத் தொடங்கும் வயது பெண்களுக்கு 16. அந்தக் காலகட்டத்தில் பெண் பருவமடையாமல் இருந்தால் அவளை தென்னங்கீற்று என மறைமுகமாக கிண்டல் செய்வார்களாம்.

இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பெண் பருவமடையும் வயது படிப்படியாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 60களில் 16 ஆக இருந்தது தற்போது 12-13 என மாறிவருகிறது. இதற்குச் சூழலும் முக்கியமாக உணவுப் பழக்கங்களும் காரணம் எனத் தெரிவிக்கிறார்கள். இந்த வயது இன்னும் குறைந்தால் மிகப் பிரச்சினை. மன முதிர்சிக்கு முன் உடல் முதிர்ச்சி அபாயகரமானது.

August 13, 2009

துண்டு சிகரெட்

எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது. அதற்கு எங்கள் குலதெய்வமே காரணம். படையலில் சுருட்டு இல்லாவிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி அதை வாங்கிவர என்னை விரட்டி விடுவார்கள். அனைவருக்கும் தேங்காய் பழம் பிரித்துக் கொடுத்த பின் சுருட்டை மட்டும் கோடாங்கியிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.புதிதாய் வந்த கோடாங்கிக்கு சேவல் மார்க் சுருட்டு ஒத்துக்கொள்ளவில்லை. சாமி கும்பிடும் ஒரு நாளில் என்னை அழைத்து, ராஜாபாதர் கடையில வாங்கிக் கொடுப்பா, அங்கதான் நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

ராஜாபாதர் கடை என்பது ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்யேகக் கடை. பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ரோத்மண்ஸ், 555 போன்ற சிகரெட் ரகங்கள்,வெத்திலை பாக்கு, சர்பத், செண்ட் பாட்டில், ஜவ்வாது,காண்டம்,  என சில அயிட்டங்களே அங்கேயிருக்கும். கடை அமைந்திருக்கும் இடமும் ஊருக்கு வெகு தள்ளி.

நான் போய் சுருட்டு கேட்டதும், ”இந்தாடா இதுதான் சர்ச்சில் குடிச்ச சுருட்டு” என்று சொல்லி கொடுத்தார்.அந்தக்கடையே அப்படித்தான். எதுவுமே சாதாரணமானதாக இருக்காது. கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.

ஒருமுறை ஒரு வாடிக்கையாளார் அவரிடம், ஏன்? இந்தக் கடையை ஊருக்குள்ள வச்சா எங்களுக்கு வசதியா இருக்குமே என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்துப் பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழமும், காயாக வாங்கி, அவரே புகை போட்டு பழுக்க வைக்கும் லால்குடி ரஸ்தாளியும் மட்டும் தான் அங்கே கொக்கியில் தொங்கும். கடலை மிட்டாய், முறுக்கு இதெல்லாம் அவர் சாப்பிட்டுப் பார்த்து அவருக்கு திருப்தி ஆனால் தான் கண்ணாடி பாட்டிலில் அடுக்குவார். விற்பனையாளர்கள் கொண்டு வரும் தேங்காய் பர்பி சரியில்லை என, அய்யம்பாளையத்தில் நன்கு முற்றிய தேங்காய் வாங்கி தெரிந்த ஆளிடம் கொடுத்து, அதில் பர்பி செய்யச்சொல்லி வாங்கி விற்பார். சிகரெட் பற்ற வைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்.

சுருட்டு வாங்க அடிக்கடி சென்ற வகையில் அந்தக் கடையின் மேல் எனக்கு ஒரு காதலே வந்துவிட்டது. மாலை வேளைகளில் பாதாம் சர்பத்தைக் குடித்துவிட்டு, வில்ஸ் பில்டரை ஊதிக் கொண்டிருப்பவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே காண்டமை பக்குவமாக பாக் செய்து சில்லறையுடன் சேர்த்துக் கொடுப்பார் ராஜாபாதர். ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுபவர்களைப் பார்க்கையில் ஒரு பொறாமையே வரும்.

சர்பத் மீது நாட்டமில்லை,காண்டமை உபயோகிக்க வயதில்லை என்பதால் சிகரெட்டையாவது பிடித்துப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தே விட்டது.

நேரடியாக கடையில் வாங்கப் பயம் மேலும் பொருளாதார சிக்கல் வேறு. இம்மாதிரியானவர்களுக்கு கைகொடுப்பது ஒட்டுப்பீடி என்றும் துண்டு சிகரெட் என்றும் அழைக்கப்படம் முழுவதும் புகைக்கப்படாத சிகரெட்டுகள்.

இம்மாதிரி துண்டு சிகரெட் ஆட்களில் பலவகையினர் உண்டு. கிடைத்தது போதும் என்று சொக்கலாலோ, மங்களூர் கணேஷோ, பாசிங் ஷோ தொப்பியோ, கத்திரியோ, சார்மினாரோ எது கிடைத்தாலும் இழுப்பவர்கள்.

எச்சியா சீ சீ நாங்கள் சுத்தமாக்கும் என்று சொல்லி நோட்டு பேப்பரை பீடி போல் சுருட்டி அதைப் பத்தவைத்து இழுப்பவர்கள்.

குடிக்கிறது கூழா இருந்தாலும் கொப்புளிக்கறது பன்னீரா இருக்கணும் என்ற கொள்கையுடையவர்கள்.என்னைப்போல. இவர்களெல்லாம் பில்டர் சிகரெட்டைத்தான் எடுத்து உபயோகிப்பார்கள். ராஜாபாதர் கடை புண்ணியத்தில் எனக்கு அவ்வப்போது பாரின் சிகரெட் மிச்சங்களும் கிடைத்துக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் எங்கள் தெருவுக்கு குடிவந்தனர் ராஜேஸ் குடும்பத்தார். வந்த சில நாட்களிலேயே நன்றாக படிப்பது,தெருவில் யார் சொன்னாலும் கடைக்குப் போவது போன்ற செயல்களால் நல்ல பிள்ளை என்ற பட்டத்தை வாங்கி விட்டான் ராஜேஷ். எனக்கு எரிய ஆரம்பித்தது.அவனை தவிர்க்கத் தொடங்கினேன்.

ஒரு விடுமுறை நாளில் புதர்ப்பக்கம் ஒதுங்கியபோது, ராஜேஸையும் அங்கே பார்த்தேன். அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி. உடனே அவன் மனதுக்கு நெருக்கமானவனாக மாறிவிட்டான். அவனுக்கும் பில்டரின் மகத்துவத்தை எடுத்துரைத்து என் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்.

ஆசை தானே மனிதனை குகையில் இருந்து காஸ்மோபாலிட்டன் வரை கொண்டு வந்திருக்கிறது. எங்கள் ஆசை முழு சிகரட்டை நோக்கி எங்களை தூண்டியது. நாளும் குறிக்கப்பட்டது. காசும் சேர்க்கப்பட்டது.அந்த சுபயோக சுபதினம் ராஜேஸ் வீட்டார் ஒரு திருமணத்திற்க்கு செல்லும் ஞாயிற்றுக் கிழமை.

அந்த நாளும் வந்தது. எங்கள் உறவுக்காரர் விக்கெட் ஒன்றும் விழுந்தது. யாருக்கும் தொல்லையில்லாம ஞாயித்துக்கிழமை செத்திருக்காரு, நல்ல சாவு என்று சொல்லி வீடே கிளம்பியது. என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.

திரும்பி வந்தால் தெருவில் ஒரே பேச்சு. நம்ம ராஜேஸா இப்படி? என்று. தப்பை தப்பாகச் செய்து மாட்டிக்கொண்டான் அவன்.

என் தாய்,தமக்கைகள் எல்லோரும் இவனும் இப்படித்தான் இருப்பான். நாலடி போட்டு விசாரிங்க என்று என் தந்தையைத் தூண்டினார்கள்.ராஜேஸிடம் பலமுறை ஜாடை மாடையாக விசாரித்தார்கள்.

அவனும் காட்டிக்கொடுக்கவில்லை. என் தந்தையும் இன்றுவரை என்னிடம் அதைப் பற்றி கேட்டதில்லை.

August 12, 2009

தேங்காய் சீனிவாசன் - சில நினைவுகள்

நாற்பது வயதானாலே நாய்க்குணம் ஆண்களுக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள்.
இந்த நாய்க்குணம் என்பது வீட்டைக் காவல்காக்கும் என்ற அர்த்தத்தில்.
படியவாரிய தலைமுடி,கைவைத்த பனியன்,நறுக்கிய மீசை,கலரில்லாத உடை
என தங்கள் கேரக்டரையே பெரும்பாலான ஆண்கள் இந்த வயதில் மாற்றிக்கொள்வார்கள்.

இந்த வளர்சிதை மாற்றம் சிலருக்கு, தன் பெண்ணை ஒருவன் சைட்டடிக்கத்
தொடங்கிய பின்னரோ அல்லது தன் மகன் செகண்ட் ஷோ தனியாகப் போக
ஆரம்பித்தவுடனோவும் வரப்பெறும்.

ஆனால் சிலர் மட்டும் இந்த மாற்றம் வாய்க்கப்பெறாமல் காலம் முழுவதும் மைனராகவே
திரிவார்கள். மகள் கல்யாணத்திற்க்கு முதல் நாள் கூட மேட்னி ஷோ சினிமா போவார்கள்.
பளபள ஷேவ், மடிப்பு கலையாத ஆடை, பெண்களைக் கண்டால் அலைபாயும் கண்கள் என
தங்கள் சுயத்தை விடாமல் இருப்பார்கள். தெருவிற்கு ஒன்றிரண்டு பேர் இப்படி நிச்சயம் இருப்பார்கள்.

இம்மாதிரி ஆட்களை வெள்ளித்திரையில் அட்டகாசமாக பிரதிபலித்த நடிகர், 70களிலும் 80களிலும் தமிழ் சினிமாவைக் கலக்கிய மறைந்த தேங்காய் சீனிவாசன்.

சித்தூர் சீனிவாசன் என்ற இயற்பெயருடன் சினிமாவுக்கு வந்தவர்,
தான் ஏற்று நடித்த தேங்காய் என்னும் கேரக்டரின் மூலம் தேங்காய் சீனிவாசனானார்.நடிக்க வரும் பெரும்பாலானோர் நாயகன் ஆகும் கனவுடனேயே திரையுலகுக்கு வருவார்கள். ஆனால் காமெடியன் ஆகும் எண்ணத்துடனே சீனிவாசன் சென்னை வந்தார் என நாம் கொள்ளலாம். ஏனென்றால் அவர் சென்னைக்கு வந்து முதலில் சந்தித்ததே காலத்தை வென்ற காமெடியன் சந்திரபாபுவைத்தான். ஒரு தெய்வத்தைப் பார்க்கும் மனநிலையுடன் சந்திரபாபுவை சீனிவாசன் பார்த்தாரென ஒரு கட்டுரையில் அருள்
எழிலன் குறிப்பிட்டுள்ளார்.

காமெடியன், கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன், கதாநாயகன், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரையில் அவர் எடுத்து இருந்தாலும் அவரின் பிம்பமாக நம்மிடம் எஞ்சியிருப்பது காமெடியன் வேடமும், நாற்பதுகளின் மைனர் வேடமும்தான்.

இந்த மைனர் வேடத்தை இவருக்கு முன்னாலும் பின்னாலும் காட்சிப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. டிக் டிக் டிக் படத்தில் போட்டோ ஸ்டுடியோ ஓனராக வந்து, தன் தொழிலாளி கமலுக்கு கால் கேர்ள்கள் அட்ரஸைக் கொடுத்து டென்சனை குறைத்துக் கொள்ளச் சொல்வார். அப்போது அந்த சுகத்தை அவர் வர்ணிப்பது இப்போதைய டெலிபோன் செக்ஸ் அழைப்புகளுக்கு முன்னோடி எனச் சொல்லலாம்.

தென்றலே என்னைத் தொடு வில் மோகனின் மேனேஜராக, சனிக்கிழமையானால் கால்கேர்ள்களிடம் கட்டாயம் செல்ல வேண்டுமென துடிக்கும் நடுத்தர வயது வேடம். தேங்காய்க்குத்தான் அது அல்வாவாயிற்றே. மாட்டிக்கொள்ளாமல் அதைச் செய்வதும், தன் மனைவி காந்திமதியை ஏமாற்றுவதுமாய் மனுஷன் பின்னியிருப்பார்.

தங்கமகனில் ரஜினிக்கு தந்தையாக ஆனால், வில்லன் வேடம். வில்லனாக இருந்தாலும் சாண்ட்விச் மசாஜை பற்றி ஒரு வசனமும் உண்டு. வீரப்பா,நம்பியார் காலம் முதல் இப்போதைய கிஷோர், சம்பத் காலம் வரை எல்லோருக்கும் வில்லனைப் பார்த்தாலே பயம் வரும்படியாகத்தான் காட்சிகள் அமைப்பார்கள். ஆனால் இதில் தேங்காய் மட்டும் விதிவிலக்கு. வில்லனாக இருந்தாலும் அவருக்கு வசனங்களிலும்
நடவடிக்கைகளிலும் ஒரு கிளுகிளுப்பு சாயத்தைப் பூசிவிடுவார்கள்.

இதனால் காக்கிச்சட்டை படத்தில் கூட சைடு வில்லனாக இருந்தாலும், கஞ்சா கடத்துதலும், விபச்சாரமுமே இவரது தொழிலாக சித்தரித்திருப்பார்கள்.

இவர் நாயகனாக நடித்த நான் குடித்துக் கொண்டேயிருப்பேனில் (தலைப்பிலேயே) கூட குடியால் கெடும் வேடமே.

ஆனால் தேங்காயின் லேண்ட் மார்க் படங்களாக கருதப்படும் காசேதான் கடவுளடா படத்திலும், தில்லு முல்லு படத்திலும் ஒன்றுக்கொன்று முரணான கேரக்டர்கள், முக்கியமாக அவரது டிரேட் மார்க் இல்லாத கேரக்டர்கள். காசேதான் கடவுளடா படத்தில் சென்னை பாஷை பேசும் டீக்கடை உரிமையாளர் நண்பர்களுக்காக போலி சாமியார் வேடத்தில் நடித்து ஏமாற்றும் கேரக்டர். தில்லுமுல்லில் கம்பெனி உரிமையாளர் தன் பணியாளரிடம் ஏமாறும் கேரக்டர்.

வானவில்லின் இரண்டு எதிரெதிர் முனைகளின் நிறங்களைப் போன்ற வேறுபாடான கேரக்டர்கள். இரண்டிலும் மிளிர்ந்தவர் தேங்காய்.


தேங்காய் சீனிவாசனின் இன்னொரு தனித்தன்மை அவரது வேறுபாடான வசன உச்சரிப்புகள். மாடுலேஷன் எல்லோரும் செய்வதுதான் என்றாலும் பச்சக், கிச்சக்,ஜலாபத்ரி என ஏராளமான தமிழில் நாம் கேட்டறியாத சொற்களைத் திரையில் ஒலிக்கச் செய்தவர் தேங்காய்தான். இவரது மறைவும், சின்னி ஜெயந்தின் வருகையும் சமகாலத்தில் நிகழ்ந்தது. இவர் விட்டுச் சென்ற ஜில்பான்ஸி, கில்போத்ரி பாணி சொற்களை சின்னி தத்தெடுத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் சிவாஜியுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், பின்னர் எம்ஜியாருடன் நெருக்கமானார். ஆனால் அதன் பின் சிவாஜியை நாயகனாக வைத்து கண்ணன் வந்தான் படத்தை தயாரித்தார். கமல்ஹாசனுடன் பல படங்கள் செய்திருந்தாலும், ஒப்பீட்டளவில் இவர் ரஜினிகாந்துடந்தான் அதிக படங்கள் செய்துள்ளார்.

பில்லா,கழுகு,தங்கமகன்,தாய்வீடு, நான் சிகப்பு மனிதன் என ஏராளமான படங்களில் ரஜினியுடன் வித விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

அவர் மறைந்து 20 வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு அவர் அகலப் போவது எப்போதுமில்லை