January 03, 2014

சிவகாசி

பல ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் இதழில் மாலன் அவர்கள் எழுதிய “தமிழ்ச்செல்வன் நடத்திய மெஸ்” சிறுகதை இன்னும் என் மனதில் இருந்து அழியாத ஒன்று. அதில் அரசை எதிர்க்கும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒருவன் தான் கதை நாயகன். அவனது காதலி, எப்போதும் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டே இருக்கிறாயே? குண்டூசியில் இருந்து விமானம் வரை எல்லோமே பலர் உழைப்பின் காரணமாகவே உன்னை வந்து அடைகிறது.  ஒரு இரண்டாண்டு காலம் ஏதாவது ஒரு தொழிலை நடத்திப் பார். பின்னர் குறை கூற ஆரம்பிக்கலாம் என்கிறாள்.

அவனும் சவாலை ஏற்று, ஒரு சிறு உணவகத்தைத் துவக்குகிறான். முதல் ஆண்டு பலத்த அடி. பின்னர் சிறிது சிறிதாக லாபம் வர ஆரம்பிக்கிறது. இரண்டாண்டு காலம் கழித்து அவனது காதலியிடம் சொல்கிறான், ”அரசாங்கத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? அரசாங்கத்துடன் சிறு சிறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் எல்லோரும் நன்றாக வாழலாமே? என்று.”

எப்படி ஒரு தொழிலை நடத்தினால்,  நம் சிந்தனைகள் சிறிது சிறிதாக மாறுமோ, அதைப் போலத்தான் சிவகாசி என்னும் ஊருக்குச் செல்வதும். சில காலம் அங்கே தங்கினால் போதும். நமது சிந்தனைகள், பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்று மாறிவிடும். திருப்பூரும் கிட்டத்தட்ட இதைப் போலத்தான் என்கிறார்கள். நான் திருப்பூருக்கு இதுவரை சென்றதேயில்லை. ஏன் முப்பதாண்டு காலம் மதுரையைச் சுற்றியே வாழ்ந்தும் கூட சென்ற மூன்று மாதமாகத்தான் சிவகாசிக்குப் போய் வருகிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு சமமாக ஏன் அதற்கு அதிகமாகக் கூட பணம் கொழிக்கும் ஊர் விருதுநகர். அங்கே நான்காண்டுகள் இருந்திருக்கிறேன். அந்த ஊர் சிவகாசி போல உழைக்கும் சிந்தனையைத் தராமல் பணக்காரர்கள் மீதான ஒரு எரிச்சலையே தரவல்லது. ஏனென்றால் அது ஒரு வியாபார ஸ்தலம். தொழில் நகரமல்ல. பரம்பரையாகத் தொழில் செய்பவர்களே அங்கு நிறைய சம்பாதிக்க முடியும். ஆனால் சிவகாசி அப்படியல்ல. உழைக்கும் மனதுடன் செல்பவர்களை அது கைவிடாது.

மதுரை, திண்டுக்கல் பகுதி டீக்கடைகளில் ஒன்றைக் கவனிக்கலாம். ஸ்டாலில் சிறிது வடை, பஜ்ஜி இருந்தாலும் அடுத்த ஈடு போடுகிறார்களா என பார்த்துக் கொண்டேயிருந்து, சூடாக எண்ணெய் சட்டியில் இருந்து எடுக்கும் போதுதான், ”மாஸ்டர் எனக்கு ரெண்டு வடை” என்று ஆர்டர் செய்வார்கள். சாப்பிட்டு கை கழுவி விட்டு, சிறுது தண்ணீர் குடித்து விட்டுத்தான் டீ ஆர்டர் செய்வார்கள். டீயை சூடாக உள்ளே இறக்குவதற்காக. ஆனால் சிவகாசியில் பேக்கரியிலோ/டீக்கடையிலோ நுழையும் போதே, டீ வரை ஆர்டரை சொல்லி விடுவார்கள், வந்த உடன் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். நேர சிக்கனம்.

அதே போல் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஏரியாக்களில் பொது இடங்களில் அரசியல் பேச்சுகள் தூள் பறக்கும். ஆனால் சிவகாசி பகுதியில், பேருந்து, டீக்கடைகள், உணவகங்களில் டபுள் டெம்மி, கிரவுன், 170 ஜி எஸ் எம் ஆர்ட் பேப்பர், பிளேட், அஞ்சாம் நம்பர் கேக் போன்ற வார்த்தைகளே நம் காதில் விழும். போனால் போகிறது என்று, அரசின் திட்டங்கள் சார்பான அரசியல் பேச்சுக்கள் ஆங்காங்கே காதில் விழும்.
ஏ0, ஏ3, ஏ4 என ஐ எஸ் ஓ அளவீடுகளாலே பேப்பரைப் பார்ப்பவர்களுக்கு, இந்த டபுள் டெம்மி, கிரவுன், இம்பீரியல் எல்லாம் கிரீக் அண்ட் லத்தீனாகத்தான் முதலில் தெரியும். என்னதான் ஐ எஸ் ஓ, எஸ் ஐ அளவீடுகளில் ஒரு வாகனம் தயாராகி வந்தாலும் அதற்கு காற்று பிடிக்கும் போது நீங்கள் இன்னும் பி எஸ் ஐ யில் தானே பிடிக்க முடிகிறது. இம்பீரியல் அளவைகளின் தாக்கம் இந்த உலகில் அப்படி. பிரிண்டிங் தொழிலில் இந்த அளவீடுகள் மாற வெகு காலமாகும்.

தீபாவளி முடிந்த முதல் வாரம், சிவகாசி சோம்பல் முறிப்பது போல் தெரியும். ஆனால் அது அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக தூரம் கணக்கிடும் காலம் அது. மந்த்லி/டெய்லி காலண்டர், டைரி, டேபிள் டாப் காலெண்டர் ஆர்டர், டிசைன் என சூடுபிடிக்கும். புத்தாண்டு முடிந்ததும் பள்ளி/கல்லூரி நோட் புக் சீசன். ஜூனுக்கு அப்புறம் தான் பட்டாசு சீசன்.
இது தவிர எப்போதும் இருக்கும் சீசன் தீப்பெட்டி, பொதுவான/மத சம்பந்த புத்தகங்கள், திருமண பத்திரிக்கைகள், சினிமா/அரசியல் போஸ்டர்கள், வார/மாத இதழ்கள், வணிக ஸ்தாபனங்களுக்கான லேபிள்கள் தயாரிக்கும் பணி.

எனவே ஆஃப் சீசன் என்ற ஒன்றே இங்கு கிடையாது. குடும்பத்தில் உள்ள எல்லோரும் வேலை பார்ப்பதால், இரவு சாப்பாடு தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்படும். ஒரு காலத்தில் பால் சோறு பக்கோடா என்ற கான்செப்ட் இருந்தது. சாதம் மட்டும் வடித்து வைத்து விட்டு, பாலை அதில் ஊற்றி சாப்பிடுவார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள பக்கோடா. தினமும் மாலையில் சுடச்சுட பக்கோடா ஏராளமாக தயாராகும். அம்மாதிரி தயாரித்து தட்டில் வைத்து விற்கும் ஒரு கடைக்கு தட்டு கடை என்றே பெயர். இப்போதும் (வேலாயுத நாடார் ஸ்வீட் ஸ்டால்) அது தட்டு கடை என்றே அழைக்கப்படுகிறது.

கடந்த 20 வருடங்களில் சிவகாசியில் புரோட்டா கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கவும் இதே காரணம்தான்.  தினமும் அதிக அளவில் ஏஜெண்டுகள், லாரி போன்றவை அதிக அளவில் வந்து போவதால் சுமாரான ஹோட்டல்களில் கூட கூட்டம் அம்முகிறது.
90களில் சொல்வார்கள். உலகத்தில் ஒரு சதுர கிமீ பரப்பளவில் அதிக ஆண் பிரம்மச்சாரிகள் வசிக்கும் இடம் திருவல்லிக்கேணி என்று. அதுபோல் ஒரு சதுர கிமீ பரப்பளவில் உலகிலேயே அதிக புரோட்டா உற்பத்தி ஆகும் இடம் சந்தேகத்துக்கே இடமில்லாமல் சிவகாசிதான். எட்டு மணி அளவில் சிவகாசி சாலைகளின் வழியே போனால் பார்க்கலாம். உணவு உண்ண நாலு பேரும், பார்சல் வாங்க 40 பேரும் எல்லாக்கடைகளிலும் நின்று கொண்டிருப்பார்கள்.

டெக்னாலஜி அப்டேட் என்பதும் சிவகாசியில் நான் பார்த்து வியந்த ஒன்று. பிரிண்டிங் சம்பந்தமான எந்த தொழில்நுட்பமும் கண்டுபிடித்த உடனேயே சிவகாசிக்குத்தான் வருகிறதோ என அதிசயிக்கும் படி இருக்கிறது அங்கு இருக்கும் சில பிரஸ்கள். சிலர் தாங்கள் ஈடுபட்டிக்கொண்டிருந்த டெக்னாலஜி அவுட் டேட் ஆனாலும் கூட (புது டெக்னாலஜியை அப்டேட் செய்து கொள்ள முடியாத திறமை/வயதில்) ஏஜெண்ட் ஆக மாறி பீல்டில் நின்று கொண்டே இருக்கிறார்கள். ஒரு பேப்பரின் அடர்த்தியை (கிராம்ஸ் பெர் ஸ்கொயர் மீட்டர்) கையால் தடவிப்பார்த்தே 170ஆ 180ஆ என சொல்லும் வல்லுநர்கள் இங்கே சாதாரணம். நமக்கு தெரிந்ததெல்லாம் பாடப்புத்தகம் அடிக்கப்படும் 60 ஜி எஸ் எம் தாள் தான்.

சொந்தமாக ஒரு ஆபிஸ் போடுவது என்பது அங்குள்ளவர்களின் கனவாக இருக்கும் ஒன்று. தமிழ்நாடு முழுவதும் செண்ட் கணக்கில் வசிக்கும் இடம் விற்கப்பட்டால் இங்கே குழி அளவை. 9 சதுர அடி ஒரு குழி என்ற கணக்கில் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றால் ஊகித்துக் கொள்ளுங்கள்.  

சிவகாசி மக்களிடையே நான் கண்ட இன்னொரு விஷயம் வேகம். மெதுவாக மசை போல நடப்பவர்கள் அங்கே அரிது. சென்னையில் கூட அந்த வேகத்தை பலரிடம் பார்க்கலாம். ஆனால் குறிப்பிட்ட வயதுக்குப் பின் தளர்ந்து விடுவார்கள். இங்கே இயல்பாகவே ஒரு வேகத்துடனே பேச்சும் செயலும் இருக்கும். அண்ணாச்சி நாளைக்கு டெலிவரி, கிரடிட் ஆயிடும்ல என்றபடியே நேரடியான பேச்சுக்கள் இருக்கும். பேச்சில் நரித்தனம் குறைவு. பார்ட்டியை ஏமாத்தினா நாளைக்கு எப்படி வருவான் என்ற சுதாரிப்பில் தான் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். ஏனென்றால் அங்கே ஒருவர் நீண்ட நாள் மோனோபோலியாக இருப்பது கடினம்.

ஒரு விஷயத்தில் தான் இன்னும் சிவகாசி தன்னிறைவு அடையவில்லை. புரபொஷனல் டிசைனர்கள். சல்லடை போட்டு தேட வேண்டும். கோரல் ட்ரா தெரிந்த மூன்றாண்டு அனுபவமுள்ள டிசைனர்கள் தேவை என வால் போஸ்டர் அடித்து தேடும் அளவுக்கு டிசைனிங் துறையில் வறட்சி. எல்லா டெலிவரி செட்யூல்களும் டிசைனரின் அவைலபிலிட்டியைப் பொறுத்தே மாறுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


நான் முன்பெல்லாம் என்னுடைய வேலை பற்றிய பயத்துடனே இருப்பேன். வேலை போய்விட்டால், அடுத்த வேலை கிடைக்கும் வரை எப்படி பணத்தேவையை சமாளிப்பது? அக்கம் பக்கம் உறவினர் பேச்சுக்கள், குழந்தைகளில் கல்வி என பல யோசனைகள் ஓடும். ஆனால் இந்த மூன்று மாத சிவகாசி அனுபவம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உழைக்கும் மனத்துடன் சென்றால் எப்படியும் சிவகாசியில் சர்வைவ் ஆகிவிடலாம் என்று.

January 02, 2014

ரஜினியை ஜெயித்த கமல்


கமர்ஷியலில் ரஜினியை, கமல் ஜெயித்த நிகழ்வுகளில் ஒன்று போலிஸ் கேரக்டர்கள் ஏற்று நடித்த படங்கள். ரஜினி போலிஸ் வேடமிட்டு நடித்த படங்களில் மூன்று முகம் தவிர அத்தனை படங்களும் வசூல் ரீதியாக தோல்வி. பாலு மகேந்திரா இயக்கிய “உன் கண்ணில் நீர் வழிந்தால்”, பாரதி ராஜா இயக்கிய “கொடி பறக்குது”, வி ரவிச்சந்திரன் இயக்கிய “நாட்டுக் கொரு நல்லவன்” மற்றும் எஸ் பி முத்துராமன் இயக்கிய “பாண்டியன்” ஆகிய அனைத்துப் படங்களும் ரஜினி ரசிகர்களே மறக்க விரும்பும் படங்கள்தான்.

அன்புக்கு நான் அடிமையில் விஜயனுக்கு பதிலாக போலிஸ் வேடம் போடுவார். ஆனால் கதைப்படி போலிஸ் அல்ல. அந்தப் படம் ஓரளவு ஓடிய படம்.

ஆனால் கமல்ஹாசன் போலிஸ் கேரக்டர் ஏற்று நடித்த படங்களில் சித்ரா லட்சுமணன் இயக்கிய  சூர சம்ஹாரம், ராஜசேகர் இயக்கிய விக்ரம்  தவிர மற்ற எல்லாப் படங்களுமே வெற்றிப் படங்கள் தான்.

கே விஜயன் இயக்கிய ”சட்டம்”, பாரதிராஜா இயக்கிய ”ஒரு கைதியின் டைரி”, ராஜசேகர் இயக்கிய ”காக்கிசட்டை”, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ”அபூர்வ சகோதரர்கள்”, பிரதாப் போத்தன் இயக்கிய ”வெற்றி விழா”, பி சி ஸ்ரீராம் இயக்கிய ”குருதிப்புனல்” மற்றும் கௌதம் மேனன் இயக்கிய ”வேட்டையாடு விளையாடு” என எல்லாமே ஓடியவை தான்.

இந்த மாதிரி விகிதாச்சாரம் பார்த்தால் சூர்யா தான் 100க்கு 100. காக்க காக்க, சிங்கம், சிங்கம் 2 எல்லாமே செம ஹிட் வகையறா. விஜயகாந்த்துக்கும் அர்ஜூனுக்கும் வெற்றி விகிதம் 50க்கு மேல் இருக்கும். சத்யராஜ்க்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வால்டேர் வெற்றிவேல், அமைதிப்படை என பெரிய ஹிட்டுகள் போலிஸ் வேடத்தில். எல்லாமே வெவ்வேறு வகையான வேடங்கள். வீரப்பதக்கம் என்ற படத்தில் அமைதிப்படை அமாவாசை டைப்பில் போலிஸ் கான்ஸ்டபிளாக இருந்து டிஜிபியாக மாறி பின் திருந்தும் வேடம். ஆனால் படம் பப்படம்.

விக்ரமுக்கும் போலிஸ் கேரக்டர் நன்றாக செட் ஆகும். தில், சாமி இரண்டும் விக்ரமின் கேரியரையே பூஸ்ட் பண்ணிய படங்கள். அவருக்கும் தாண்டவம் தண்ணி காட்டியது. எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் நடித்த “காவல் கீதம்” தோல்விப்படம். எனவே அவருக்கும் 50% வெற்றி.
இவர்களைத் தவிர போலிஸ் வேடத்துக்கு அம்சமாக செட் ஆகும் இன்னொருவர் விஷால். ஆனால் அவரது சத்யம், நயன் தாரா இருந்தும் மரண பிளாப்.

அஜீத்துக்கு ஆஞ்சநேயா அடி. ஆனால் மங்காத்தா,ஆரம்பம் ஹிட். விஜய்க்கும் போக்கிரி,ெறி எனாஸ் ஹிட்கள் உண்ு. வேட்டைக்காரில் போலிஸ் ஆனாரா என ெரியில்லை. ஜில்லஆவேஜ்.

சிம்பு கூட தம் மில் ஐ பி எஸ் ஆபிசராக மாறிவிடுவார். ஒஸ்தியில் சமாளித்தார்.

முன் காலத்தில் பார்த்தால் எம்ஜியார்க்கு போலிஸ் வேடத்தில் அவ்வளவு சிறப்பு கிட்டவில்லை. என் அண்ணன், ரகசிய போலிஸ் 115 எல்லாம் வெற்றிதான் என்றாலும் பெரிய இம்பாக்ட் இல்லை. சிவாஜி ஏராளமான போலிஸ் வேடங்களில் நடித்திருந்தாலும் நமக்க ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் தான். வெள்ளை ரோஜா, விடுதலை என பல படங்களில் அவர் காக்கி உடுப்பு போட்டாலும், எஸ் பி சௌத்ரிக்கு முன்னால் அந்த  வேடங்கள் எல்லாம் எடுபடவில்லை.


அதுபோலத்தான் ரஜினிக்கும். அந்த அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு முன்னால் ஈரோடு சிவகிரி, பாண்டியன் எல்லாம் எடுபடவில்லை. சாமி படத்தில் மட்டும் ரஜினி நடித்திருந்தால், ஒரு சாமி ரெண்டு சாமி வசனம் ஒரு தடவை சொன்னாக்கு சமமாகப் புகழ் அடைந்திருக்கும். ஏ ஆர் முருகதாஸ் அல்லது கௌதம் மேனன் படத்தில் ஒரு ஸ்டைலிஷான ரஜினியைக் காண ஆசையாக இருக்கிறது.