Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

February 22, 2020

பூபதி அண்ணன்

பூபதி அண்ணன் லாட்டரி சீட்டுக்கடை எனக்கு அறிமுகமானது சுசீலன் சார் மூலம்தான். நியூமராலஜி, ஜோசியம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு கொண்ட அவருக்கு ஆறாம் எண் ராசி என ஒரு ஜோசியர் மட்டையை கட்டி விட அவருக்கு ஆறாம் எண் பித்து பிடித்துவிட்டது. அப்போது ஆறாம் வகுப்பில் ஆறாம் எண் ரோல் நம்பராகக் கொண்ட என்னை, தனக்கு லாட்டரி சீட்டு வாங்கித் தரும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலம் 10.30-12.00 முடிந்ததும் ஸ்டாப் ரூமிற்கு போக வேண்டும். அவர் என்னை கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி ஆறு ரூபாய் கொடுப்பார். ஆறு லாட்டரி சீட்டுகள் வாங்கிவர வேண்டும். லாட்டரி சீட்டு எண்ணின் கூட்டுத்தொகை ஆறாக இருக்க வேண்டும் என்பார். காலையில் இட்லி கூட எண்ணி ஆறுதான் சாப்பிடுவார் என்று பேசிக்கொள்வார்கள்.

மேகாலயா, ராயல் பூட்டான், கஞ்சன் ஜங்கா, சிக்கிம், அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு நாடுகளின் சீட்டுக்கள் தான் வாங்க வேண்டும் என்பார். தமிழ்நாடு ஆகாது. கேட்டால் தென் திசை என்பார். ஆனால் மற்ற சார்களோ தமிழ்நாட்டுல சீட்டுல வரி அதிகம் பிடிப்பாங்க. லட்சம் விழுந்தாலும் 65 ஆயிரம் தான் கிடைக்கும். மத்ததுல எழுவது எம்பது தேறும் என்பார்கள். முதல்முறை நான் வாங்கித்தந்த சீட்டில் அவருக்கு 50 ரூபாய் பரிசு விழுந்து விட்டது. அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஏஜெண்ட் கமிசன் போக 45 ரூபாய் பூபதி அண்ணன் எண்ணிக் கொடுத்தார்.

அடுத்து ஆறில் இருந்து 15 ரூபாய்க்கு சீட்டு வாங்க ஆரம்பித்தார் சுசீலன். பூபதி அண்ணனுக்கு சந்தோசம். பத்து சீட்டு வித்துட்டு வர்றவனுக்கு ஒரு ரூபா கமிசன் தர்றேண்டா. வாராவாரம் நீ அவருக்கு சீட்டு வாங்கும் போது ஒரு ரூபா நீயும் வாங்கிக்கோ என்றார். அதனால் ஆர்வமாக வெள்ளிக்கிழமை 12.03க்கு சுசீலன் சார் ரூமில் ஆஜராகி விடுவேன். அந்த சமயத்தில் தமிழக அரசின் தீபாவளி சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி ரூபாய் பரிசு சீட்டு வெளியிடப்பட்டது. அப்போது இம்மாதிரி பெரிய தொகை பரிசு சீட்டு எனில் கூட்டணி சேர்த்து வாங்குவார்கள். யாராவது ஒருவருக்கு சுக்கிரதிசை இருந்து அவர் மூலமாவது பரிசு கிட்டட்டுமே என்று. சுசீலன் சாரும் தன் ராசிப்படி ஆறு பேர் சேர்ந்து வாங்கத் திட்டமிட்டார்.

பூபதி அண்ணன் கடைக்கு 5 சீட்டுகள் மட்டுமே வாங்கி வந்தார். நம்ம ஊருல இதெல்லாம் அவ்வளவு ஓடாதப்பா என்றார். சோதனைக்கு என அதில் கூட்டுத்தொகை ஆறு வரவில்லை. இதைக் கேட்டு சுசீலன் சாருக்கு வருத்தம். நான் உடனே சார் மதுரை பஸ் ஸ்டாண்ட் கே ஏ எஸ் சேகர் கடையில் போய் வாங்கிட்டு அடுத்த பஸ் பிடிச்சு வந்துடுறேன் சார் என்றேன். இல்ல பூபதிகிட்டயே கேட்டுப்பாரு அடுத்தவாரம் வாங்கி வரச்சொல்லு என்றார். மதுரைக்கு வாரம் ஒருமுறைதான் கொள்முதலுக்கு போவார் பூபதி. சுசீலனின் பங்குதாரர்கள் அதுக்குள்ள நல்ல நம்பர் போயிருச்சுன்னா, இவனவே அனுப்பிடலாம் என்றார்கள். அடுத்த நாளே காலை பள்ளியில் பையை வைத்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து மதுரைக்கு கிளம்பினேன். வாழ்க்கையில் முதல் ஆன் டியூட்டி ஆறாம் வகுப்பில் வாய்த்தது எனக்கு.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காலை 12 மணி அளவில் இறங்கும் போது நல்ல வெயில். இறங்கிய உடனேயே அந்தக் குரல் கேட்கத்துவங்கியது. தென்னகத்தின் கைராசி மன்னன் கே ஏ எஸ் சேகர், இதுவரை 64 பேருக்கு முதல் பரிசாக மட்டும் ஐந்து கோடிக்கு மேல் வாங்கித்தந்த கைராசி ஏஜெண்ட் என ரிக்கார்ட் செய்யப்பட்ட குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடைக்கு முன்னால் நல்ல கூட்டம். சின்னப் பையனாக இருந்ததால் விற்பனையாளர் கவனிக்கவில்லை. அண்ணே அன்ணே என தொடர்ந்து கத்தவும் என்ன எனக் கேட்டார். தமிழ்நாடு சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி சீட்டு ஒன்னு வேணும் என்றதும் நூறு ரூபா டிக்கெட்டு தெரியுமா என்றார். இந்தா வச்சிருக்கேன். கூட்டுத்தொகை ஆறு வர்றது மாதிரி வேணும் என்றதும், யாரு எங்க என விசாரித்தார். பூபதி அண்ணன் ரெபரன்ஸ் எல்லாம் சொல்லவும் எடுத்துத் தந்தார். டிக்கெட் வாங்கிவிட்டு அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு சப் ஏஜெண்ட்கள். விற்பனையாளர்கள், கல்லாவில் பணம் விழுந்து கொண்டே இருந்தது.

இப்பொது நினைத்துப் பார்த்தால், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருந்தார் என ஆச்சரியம் தான். மக்களுக்கு சூதாட்டம், திடீர் பணக்காரன் ஆகுதல் போன்றவற்றில் இருந்த நம்பிக்கையை நல்ல பிஸினஸ் மாடலாக மாற்றினார். தீவிர ஆசையுள்ளவர்கள் தான் கடைக்கு வருவார்கள், மற்றவர்களிடம் நாம் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என டிக்கெட்டுக்கு 10% கமிசன் கொடுத்து ஏராளமானவர்களை விற்பனையாளர் ஆக்கினார். பேருந்திற்குள் சென்று விற்பது, மாற்றுத்திறனாளிகள், பூக்கூடை பெண்டிர் என எங்கெல்லாம் மக்கள் காசை எடுப்பார்களோ அங்கே இதையும் சேர்த்து வாங்கட்டும் என நினைத்தார். அதைவிட கே ஏ எஸ் சேகர் போல ஆகிவிட வேண்டும் என ஒரு ஆசையை நூற்றுக்கணக்கானவர்களிடம் விதைத்திருந்தார். எப்போதும் பட்டு வேட்டி, லேசான மஞ்சள் நிற பட்டு சட்டை என சிரித்த முகமாக புல் மேக்கப்புடன் திரிவார்.

ஊருக்குள்ள மார்க்கெட் ஏரியால பத்துக்கு பத்து இடத்துல கடை போடு. பெருமாள் படத்தோட ஒரு அஞ்சு சாமி போட்டோ, டிக்கெட் வைக்க ஒரு ஆறுக்கு மூணு மர டேபிள், அது சரிவா இருக்கணும். கூடவே ஒரு மாருதி ஆம்னி. தவணைக்கு வாங்கீரணும் என கனவோடு பலரை அலைய வைத்தார். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் அந்த மாருதி ஆம்னியில் போய்த்தான் டிக்கெட் விற்பார்கள். பூபதி அன்ணனும் அந்தக் கூட்டத்தில் ஒருவர். அவருக்கும் கே ஏ எஸ் சேகர் போல ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. திருச்சியில கே ஏ எஸ் ராமதாஸ், கோயம்புத்தூர் பக்கம் ஏதோ மணிங்கிறாங்க. அது மாதிரி ஆகணும் என்பார்.

டிக்கெட் வாங்கி பள்ளிக்குத் திரும்பி, சுசீலன் சாரிடம் கொடுத்தாயிற்று. பசங்களுக்கு விசயம் தெரிந்து விட்டது. அடுத்த நாள் காலை செல்வி அத்தை கடைக்கு ஆப்பம் வாங்கப் போன போது, உடனிருந்தவன், என்னடா மதுரைக்கு தனியாப் போய் டிக்கெட்லாம் வாங்கிட்டு வந்தியாமே என்று கேட்டான். செல்வி அத்தைக்கு ஆச்சரியம். என் தந்தையின் ஒன்று விட்ட அக்காள் அவர். காலை பனியாரமும், வெல்ல ஆப்பமும் மதியம் வடையும் சுட்டு விற்பவர். அவருக்கு திருமண வயதில் ஒரு பெண். ஒரு மூணு பவுன் இருந்தாப் போதும் இவள தள்ளி விட்டுடலாம் என அங்கலாய்த்துக் கொண்டேயிருப்பார். சில சீட்டுகளும் கட்டி வந்தார். அவருக்கு ஒரு ஆசை. லாட்டரியில ஏதாச்சும் விழுந்தா இவளைக் கரையேத்திடலாம் என்பார். நான் ஏந்த்தை, அதெல்லாம் ஆயிரத்துல ஒருத்தருக்கு அடிக்கும். இந்த வாத்தியாருங்க ஜாலிக்கு வாங்கிப் பார்க்கிறாங்க உங்களுக்கெதுக்கு என்றேன்? ஒரு ரூபாய்க்கு மட்டும் அப்பப்போ வாங்கிக் கொடுடா என்றார்கள்.

தெரிந்த சர்க்கிளில் யாராவது ஒருவருக்கு விழும் ஒரு லட்ச ரூபாய் ஆயிரக்கணக்கானவர்களை இந்த சுழலுக்குள் இழுத்து விடுகிறது. பெரும்பாலும் தின ஊதியக்காரர்கள்தான், பூ கட்டி விற்பவர்கள், இட்லி,பனியாரக்கடைக்காரர்கள், சுமை தூக்கிகள், பார வண்டி இழுப்பவர்கள், கொத்தனார், சிற்றாள் என பாரபட்சமில்லாமல் அப்போது லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு தடவ நமக்கு விழுந்திட்டா நம்ம வாழ்க்கையே மாறிப்போகுமே என பலியாகிக் கொண்டிருந்தார்கள். காலை ரிசல்ட் பேப்பர் வரும் முன்னரே காத்திருந்து, அந்த ரிசல்டைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் எனும் அளவிற்கு நிறையப் பேரை இந்த பைத்தியம் பிடித்து இருந்தது.

நானும் பூபதி அண்ணன் கடையில் அவ்வப்போது கிடைக்கும் டீக்காகவும், பேன் காற்றுக்காகவும், டேப் ரிக்கார்டர் பாட்டுக்காகவும் டிக்கெட் வாங்கிக் கொடுப்பவனாக மாறியிருந்தேன்.

தமிழ்நாடு 2 கோடி குலுக்கலுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று இரண்டு கோடி என்பது ஒர் மிகப்பெரிய பணம். முக்கிய கடைவீதியில் சென்ட் 4500 ரூபாய் விற்ற காலம் அது. இப்போது பத்து லட்சத்திற்கு மேல் கொடுத்தாலும் தரமாட்டோம் எனும் காலகட்டம். டிக்கெட் விலை நூறு ரூபாய் என்பதுதான் மக்களின் தயக்கத்துக்கு காரணமாய் இருந்தது. தீபாவளிக்கு மதுரைக்கு துணி எடுக்கப் போணோம் ஆனது ஆச்சுன்னு ஒரு டிக்கெட்ட வாங்கிட்டோம் என இரண்டு பேர் சொல்லவும் அந்த தயக்கம் குறையலாயிற்று. பூபதி அன்ணன் கூட என்னடா, நிறைய பேர் கேட்டு வர்றாங்க. பத்தா வாங்கிருக்கலாம் போலயே என சலித்துக் கொண்டார். ஆளாளுக்கு கூட்டணி போட்டு வாங்கத் துவங்கியிருந்தார்கள். செல்வி அத்தைக்கு இந்த தகவல் போயி, யார் கூடவாவது சேர்த்து வாங்குடா என் பங்குக்கு பத்து ரூபா தர்றேன் என்றார்.

எங்கள் ஊரில் முதன் முதலாக ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது ஆறுமுகம் என்பவருக்கு. அவர் மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வந்தார். அந்தப் பரிசு விழுந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் புலம்பியது இது.
பரிசு விழுந்தாலும் விழுந்துச்சு. ஆள் ஆளாளுக்கு ஆஞ்சு போட்டாங்கப்பா. இங்கிட்டு எங்க அக்கா தங்கச்சிகளுக்கு எல்லாம் துணி மணி எடுத்துக்கொடுத்து, அப்புறம் சம்சாரம் வீட்டு ஆளுகளுக்கும் செய்ய வேண்டியதாப் போச்சு. ஆள் ஆளுக்கு காது குத்து, கல்யாணம்னு காசு கேட்டு வர்றாங்க. ஏஜெண்ட் கமிசன், வரி போக எழுபதாயிரம் கிட்ட தான் வந்துச்சு. எத்தனை பேருக்கு அழுகுறது. எப்பயும் அம்பத்தோரு ரூபாய்க்கு மேல மொய் வச்சதில்ல. இங்க பாரு லச்சாதிபதிய இருவது அம்பதுங்கிறான் 500, 1000னு வைக்கணும்கிறாங்க. சைக்கிள்ளதான் வேலைக்குப் போறதுதான் வசதி எல்லோரும் ஒரு டிவிஎஸ் பிப்டியாவது வாங்கக் கூடாதாங்கிறாங்க. தியேட்டருக்குப் போனா என்னயா பேக் பெஞ்சுல உட்கார்றா மாடி சோபா டிக்கெட் எடுக்க வேண்டியது தானேங்கிறாங்க.

பக்கத்துல எந்த கும்பாபிஷேகம் நடந்தாலும் ஒரு மஞ்ச நோட்டீஸ அடிச்சு, ரசீது புக்கோட தேடி வந்துடறாங்க. ஏ ஈ கூட என்னா ஆறுமுகம், லட்சாதிபதி ஆயிட்டேன்னு மதிக்க மாட்டேங்கிறய்யான்னு கேட்கிறாரு. அதெல்லாம் கூட போகட்டும், போன தீபாவளிக்கு கடைகள்ள வசூல் பண்ணின லைன்மேன் காசுல பங்கு தராம, அவருக்கு என்னயா லச்சாதிபதின்னு எனக்கு கொடுக்காம அவங்களே பங்கு போட்டுக்கிட்டாங்க என்று அழுகாத குறை.

எழுபதுகளில் ஒரு லட்சத்திற்கு இதைவிட மதிப்பதிகம். இந்தியாவில் முதன் முதலில் லாட்டரிசீட்டில் ஒரு லட்சம் பரிசு பெற்றவரின் வாழ்க்கை எப்படி மாறியிருந்தது என்பதைப் பற்றி எண்பதுகளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பரிசு பெற்றவர் சமையல் கலைஞர். வென்றதும் அவருக்கு தலை கால் புரியவில்லை. நண்பர்களோடு ஒரே கூத்து. செகண்ட் ஷோ முடிந்ததும், நண்பர்களுக்காக தனி ஷோ எல்லாம் தியேட்டரில் ஓட்டச் சொல்லி பார்த்திருக்கிறார். ராசுக்குட்டி பட தியேட்டர் சீனெல்லாம் இதைக் கேள்விப்பட்டு எடுத்திருப்பார்களோ என நினைத்ததுண்டு. ஆனால் ஒரு வருடத்திலேயே எல்லாவற்றையும் தொலைத்து ஓட்டாண்டியாகி அவர் நின்றார் எனக் கட்டுரை முடியும்.

நானெல்லாம் ஒரு லாட்டரி அடிச்சாப் போதும் அதை வச்சு கருத்தாப் பொழைச்சுக்கிருவேன்னு எல்லோரும் மனதில் நினைப்பார்கள். அதுவே அவர்களை லாட்டரி வாங்கச் சொல்லி நகர்த்தும் சக்தி. நான் தொடர்ந்து செல்வி அத்தைக்காக கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று பேர் சேர்ந்து கூட்டணியில் டிக்கெட் வாங்க வந்தவர்களிடம், மூணு ராசியில்லை, இன்னொரு பங்கா பத்து ரூபா ஒருத்தவங்க போடட்டும் எனச் சொல்லி செல்வி அத்தையை ஒரு பங்குதாரர் ஆக்கினார் அண்ணன். அத்தைக்கோ ஒரே பூரிப்பு. ஏதோ பரிசே விழுந்துவிட்டது போல உற்சாகமானார். எப்போதும் துயர வடிவாய் உட்கார்ந்திருப்பவர் முக மலர்ச்சியோடு இருந்தார். ஒருவனிடம் ஒன்று கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே அவனின் நடவடிக்கைகளை எவ்வளவு மாற்றுகிறது என கண்கூடாக கண்டேன். எவ்வளவு கஷ்டத்தில் இருப்பவர்களும் கையில் ஒரு லாட்டரி இருந்தால், ரிசல்ட் வரும் வரை நம்ம கஷ்டம் அடுத்த வாரம் தீர்ந்திடும் என்ற மோடிலேயே வலம் வருவார்கள்.

தீபாவளி குலுக்கல் நாள் நெருங்கியது. பூபதி அண்ணன், எனக்குத் தெரிஞ்சு 15 சீட்டுக்கிட்ட நம்ம ஊர்ல வாங்கியிருக்காங்க. அதுபோக மதுரையில தனியாப் போயி வாங்கினதும் இருக்கு. நம்ம கிட்ட வாங்கினதுல பர்ஸ்ட் பிரைஸ் கூட வேணாம், செக்ண்ட், தேர்ட் பிரைஸ் இல்லாட்டி இருபது ஒரு லட்ச ரூபா பரிசு இருக்கு அதுல ஒன்னு விழுந்தாக்கூட போதும் கைராசி ஏஜெண்ட்னு போர்டு வச்சிரலாம் என்பார். இப்போதைய நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஏங்குவது போல அப்போது லாட்டரி விற்பனையாளர்கள் கைராசி ஏஜெண்ட் பட்டத்துக்கு ஏங்குவார்கள்.

அந்த நாளும் வந்தது. ஊரில் யாருக்கும் கடைசி பரிசான 500 ரூபாய் கூட விழவில்லை. சுசீலன் சார், மதுரைக்குப் போயி வாங்கிட்டு வந்ததுக்காச்சும் ஒரு சின்ன பரிசாவது விழுந்திருக்கலாம் என அங்கலாய்த்துக் கொண்டார். செல்வி அத்தை கடைப்பக்கமே நான் ஒரு வாரத்திற்குப் போகவில்லை. பூபதி அண்ணனும் இப்பத்தான் வளர்ந்து வர்றோம். இப்படி கால வாரி விட்டுருச்சே என புலம்பினார்.

ஒரு வாரம் தான். எல்லோரும் தத்தம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள். அடுத்து என்ன குலுக்கல், எப்படி இருக்கும்? என பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் ஒரு நம்பர் லாட்டரி வந்தது. கடைசி எண்ணுக்கு பரிசு விழுந்தால் ஒரு தொகை. கடைசி இரண்டு எண் எனில் ஒரு தொகை, ஆறு எண்ணும் சரியாக இருந்தால் முதல் பரிசு என்று வந்த லாட்டரியை பலருக்கும் பிடித்துப் போய் விட்டது. ஐம்பது பைசாதான் ஒரு டிக்கெட். பத்து டிக்கெட் வாங்கினால் எப்படியும் ஒரு டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துவிடும். ஒரு எண் மட்டும் சரியாக இருந்துவிட்டாலே கடைசிப் பரிசான ஐந்து ரூபாய் கிடைத்து விடும். பாதிக்காசு வந்து விட்டதே என ஆறுதல் பட்டுக் கொள்வார்கள்.

இந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலை அந்தந்த மாநிலங்களில் இருந்து உரிமை பெற்று தலைமை ஏஜெண்டே நடத்திக் கொள்ளலாம் என்பது லாட்டரி வியாபாரிகளுக்கு வசதியாகப் போயிற்று. ஏராளமான சீரியல்களில் அச்சடித்து விற்கத் துவங்கினார்கள். விற்பதில் 12% சீட்டுகள் அளவுக்குத்தான் பரிசு கிடைக்கும். அது விற்கும் லாட்டரி சீட்டு மதிப்பில் 20% அளவுக்குத்தான் வரும். எனவே ஏஜெண்டுகளுக்கு அதிக கமிசன் கொடுத்து விற்கலானார்கள்.

பூபதி அண்ணனுக்கு இந்த ஒரு நம்பர் லாட்டரியில் தான் லாட்டரி அடித்தது. விற்பனை அதிகரிக்க கமிசனும் அதிகரித்தது. தெருவின் முதல் பிளாக் அண்ட் ஒயிட் டிவி, கிரைண்டர் இறுதியாக டி வி எஸ் 50 என பல முதல்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

முதலாளிகள் என்பவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்காக யோசித்துக் கொண்டேயிருப்பவர்கள். எப்படி தங்கள் முதலீட்டைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே முதலாளியாய் இருக்க முடியும். லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களின் அடுத்த முன்னேற்றத்திற்கு யோசித்து அறிமுகப்படுத்தியதுதான் சுரண்டல் லாட்டரி. லாட்டரி சீட்டு வாங்கிவிட்டு எதற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும்? காசு கொடுத்து வாங்கிய உடனேயே ரிசல்ட் பார்க்கலாம் என்று அறிவித்து களத்தில் இறங்கினார்கள். மக்களுக்கும் அது பிடித்துப் போயிற்று. லக்கி நம்பர் பார்த்து சீட்ட வாங்கி, அதப் பத்திரமா வச்சிருந்து ரிசல்ட் பார்க்கிறதுக்கு, காச கொடுத்தமா, சுரண்டுனமான்னு போயிடலாம் என நினைத்தனர்.

ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. விட்டத பிடிக்கணும் என்ற சொல் அவர்களை ஆட்டுவித்தது. ஒரு ரூபாய் கொடுத்து, சுரண்டி விழுகவில்லை என்றதும் அடுத்த சீட்டு அடுத்த சீட்டு என்று காசு தீரும்வரை போனார்கள். ஐந்து செண்டிமீட்டருக்கு ஐந்து செண்டிமீட்டர் இருக்கும் அந்த சதுர சீட்டு, பலருக்கு சவப்பெட்டி ஆனது. பாக்கெட்டில் மடித்து வைத்த சீட்டோடு ஒரு ஹேண்ட் பேகில் சீட்டுக்களோடு விற்பனையாளர்கள் வலம் வரத் தொடங்கினார்கள். பஸ் ஸ்டாண்ட், கடை வீதியில் மட்டும் இருந்த அவர்கள் திரையரங்கம், தொழிலகங்கள் அருகிலும் நடமாடத் தொடங்கினார்கள். வார சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவர்களது இலக்கு. எங்கு வாரச்சம்பளம் கொடுத்தாலும் அங்கே பேக்குடன் சென்று விடுவார்கள்.

கட்டிடத் தொழிலாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த இடத்திற்கே சென்று சுரண்டிவிடுவார்கள். கிட்டத்தட்ட குடிபோதைக்கு நிகரான போதை. எப்படி 20-20 வந்ததும் டெஸ்ட் மேட்ச் பிளேயர்களின் மவுசு குறைந்து அதிரடி ஆட்டக்காரர்களுக்கு மவுசு ஏறியதோ அதுபோல கே ஏ எஸ் சேகர், கே ஏ எஸ் ராமதாஸ், மணி, கனி என கோலோச்சியவர்கள் அமுங்கிப் போய் மார்ட்டின் போன்றவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். பல குடும்பங்கள் தெருவுக்கு வந்தன.

2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு லாட்டரிக்கு தமிழகத்தில் தடை விதித்தது. 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவர்கள் வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். சிலர் மட்டும் கள்ளத்தனமாக கேரளா லாட்டரிகளை இங்கே தருவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பூபதி அண்ணனை சமீபத்தில் சந்தித்தேன். அந்த கடையில் முதலில் பி சி ஓ, அப்புறம் ஜெராக்ஸ் அப்புறம் மொபைல் ரீ சார்ஜ் என வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். சுசீலன் சார் ரிட்டயர்ட் ஆனபிறகு உள்ளூர் கிளப்பில் அளவாக சூதாடிக் கோண்டிருக்கிறாராம். செல்வி அத்தை, மகளுக்கு தக்கி முக்கி திருமணம் செய்து கொடுத்து விட்டார். அந்த தெரு வழி போனால், மருமகனுக்கு சூடா ரெண்டு ஆப்பம் கொடு என இப்போது கடையைப் பார்த்துக்கொண்டிருக்கும் மகளிடம் சொல்வார்.

அத்தை, உனக்கு ஒரு முறை 100 ரூபா பரிசு விழுந்துச்சு, விழுகலைன்னு ஏமாத்தி நானே செலவழிச்சுட்டேன் என்று சொல்ல வேண்டும் என நினைப்பேன். தயக்கத்துடன் வந்து விடுவேன்.

August 30, 2016

தலைவாசல் விஜய்


92 ஆம் ஆண்டு தலைவாசல் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான நேரத்தில் 40க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே தமிழகம் முழுவதும் இருந்தன. ஆனால் முன்னூறுக்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. தலைவாசல் திரைப்படமானது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் போதைப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. படம் வெளிவரும் முன்பே அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளில் ஏராளமான விளம்பரங்களைக் கொடுத்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டு உருவாகும் படம் என்றே விளம்பரம் செய்திருந்தார்கள். அறிமுக இசை அமைப்பாளர் பாலபாரதியின் இசையில் பாடல்களும் ஹிட்டாகி இருந்தன. இந்தப் படத்தில் தான் ஒரிஜினல் கல்லூரி கானா முதன் முதலாய் தமிழ்சினிமாவில் இடம் பெற்றது என்று கூடச் சொல்லலாம். எனவே இந்தத் திரைப்படமானது முற்றிலும் புது முகங்களைக் கொண்டிருந்தாலும் கல்லூரி மாணவர்களின் ஆதரவால் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், நாசர் போன்ற சீனியர்கள் நடித்திருந்தாலும், கானா பாடல் பாடும் முன்னாள் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருந்த விஜய்யும், மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்த விசித்ராவும் உடனடியாகப் புகழ் பெற்றார்கள். விஜய், ஏற்கனவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி புகழ் அடைந்திருந்த நீலா மாலா என்னும் தொடரில் வேறு நடித்திருந்ததால் தமிழக மக்களிடையேயும் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

அடுத்த இரண்டு மாதங்களில் வெளியான தேவர் மகனில் கமல்ஹாசனின் குடிகார அண்ணன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குள் விஜய் தலைவாசல் விஜய்யாக பெயர் பெற்றிருந்தார். அடுத்ததாக தலைவாசல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர்  கூட்டணியில் அஜித்-சங்கவி நடித்த அமராவதியிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்தார். மணிரத்னத்தின் திருடா திருடா, அடுத்ததாக கமல்ஹாசனின் மகாநதி,  ராஜ்கமல் புரடக்‌ஷனில் மகளிர் மட்டும் என தொடர்ந்து முண்ணனி நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

அடுத்து முரளியின் அதர்மம், விஜயகாந்தின் பெரிய மருது திரைப்படங்களிலும் நல்ல வேடங்கள் கிடைத்தன.
இதற்கடுத்து அவர் ஏராளமான படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தார். பெரும்பாலான கேரக்டர்கள் அவரின் நடிப்புத் திறமையை பறைசாற்றிய கேரக்டர்கள் தான். ஆனாலும் அவரால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, படத்தையே தாங்கி நிற்கும் படியான கேரக்டர்களில் நடிக்க வில்லை அல்லது கிடைக்கவில்லை.

அவருக்கு முன்னால் நடிக்க வந்திருந்த ரகுவரன், நாசர் மற்றும் அவருக்குப் பின்னால் வந்த பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இணையான நடிப்புத்திறன் கொண்டிருந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவர்களுக்கு இணையான பெயரை தமிழ் சினிமாவில் அவரால் பெற முடியவில்லை. தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேடங்களே அவருக்குக் கிடைத்தன. இத்தனைக்கும் அவர் முதல் படமான தலைவாசலில் இளைஞர்கள் தங்களை அவருடன் அடையாளப் படுத்திப் பார்க்கும்படியான கேரக்டர். கல்லூரி படிப்பு முடித்தும், கல்லூரி வளாகத்திலேயே சுற்றி, கானா பாடிக்கொண்டிருக்கும் கேரக்டர். ஆனால் அதற்கடுத்து உடனடியாக அவர் நல்ல பாஸிட்டிவ்வான கேரக்டர்களில் நடிக்கத் தலைப்படவில்லை.

வேலை செய்யும் இடங்களிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி, ஒருவர் ஒரு வேலையை திறம்பட செய்துவிட்டால் போதும், அது சம்பந்தமான வேலை வரும் போதெல்லாம் அவர் தான் முதல் சாய்ஸாக இருப்பார். இதனால் உடனடி பலன்கள் இருந்தாலும், நாளடைவில் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர் இன்னொருவர் வந்து விட்டாலோ அல்லது அந்த மாதிரியான வேலைகளுக்கான தேவை குறைந்து விட்டாலோ அவரைச் சீந்த மாட்டார்கள். எனவே தான் மற்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தலைவாசல் விஜய், அறிமுகமான படத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகி, பின்னர் திருந்தும் வேடம், அதற்கடுத்த தேவர் மகனில் குடிக்கு அடிமை. பின் வந்த மகளிர் மட்டும்மில் குடிகார கணவன். எனவே தமிழ்சினிமாவில் அதற்கடுத்து எந்த வித குணச்சித்திர குடிகார வேடம் என்றாலும் இயக்குநருக்கு தலைவாசல் விஜய் தான் முதல் சாய்ஸாகத் தெரிவார்.
மகாநதி மற்றும் பேரழகனில் கழைக்கூத்தாடி, காதல் கோட்டையில் ஆட்டோ டிரைவர், கோகுலத்தில் சீதையில் பெண் புரோக்கர், துள்ளுவதோ இளமையில் நடைபாதை மீன் வியாபாரி, சண்டக் கோழி படத்தில் மாற்றுத் திறனாளி  என வித்தியாச வேடங்களும் அவ்வப்போது கிடைத்து வந்தன. இந்த வேடங்களில் எல்லாம் அவர் அப்படியே பொருந்திப் போயிருப்பார். இவர் நடித்த காட்சிகளுக்கான வசனங்கள் கூட அதற்குரிய வார்த்தைக் கோவையில், அந்தக் கேரக்டர்க்கு உரிய உச்சரிப்போடு அமைந்திருக்கும்.

ஆனாலும் அவர் நடித்த பெரும்பாலான வேடங்களை போதைக்கு அடிமையானவர்/நய வஞ்சக கோழை/விளிம்பு நிலை மனிதர் என்ற வகைகளுக்கு உள்ளேயே அடக்கி விடலாம். இந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலே தலைவாசல் விஜய்யை கூப்பிடுங்க என்னும் படி நாளடைவில் ஆகிப்போனார்.
காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த சற்று கோழையான இன்ஸ்பெக்டர் வேடம்.   ஹரிசந்திரா, என்னம்மா கண்ணு, உன்னை நினைத்து,அனேகன் போன்ற படங்களில் நடித்த நல்லவன் போல் நடித்து ஏமாற்றும் வேடம் போன்றே அடுத்தடுத்து தலைவாசல் விஜய்க்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த கேரக்டர்கள் எல்லாமே படத்துக்கு தேவையானதாக இருந்ததே தவிர அவருக்கு என பெரிய மரியாதையை தமிழ்சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

நடிக்க வந்த மூன்றாண்டுகளிலேயே விஷ்ணு படத்தில், நாயகன் தந்தையின் நண்பனாக இருந்து பின் எதிரியாக மாறும் வயதான வேடம். அதுதான் பரவாயில்லை என்று பார்த்தால் அடுத்து பிரபுவிற்கு தந்தை வேடம். இளவயதிலேயே வயதான வேடங்களில் நடித்த குணசித்திர நடிகர் என்றால் வி.கே. ராமசாமியைச் சொல்வார்கள். அவர் தன் இருபதுகளில் அறுபது வயது வேடம் பூண்டவர். வி கே ராமசாமி என்றாலே யாருக்கும் அவருடைய வயதான தோற்றம்தான் ஞாபகம் வரும். அவரும் அப்படியே தன்னை மெயிண்டெயின் செய்து கொண்டார். அடுத்து நெப்போலியன். அவர்  அறிமுகமான புது நெல்லு புது நாத்திலேயே வயதான கேரக்டர்தான். அதற்கடுத்து அவரை விட மூத்தவரான கார்த்திக்கிற்கு தந்தையாக நாடோடித் தென்றலில் நடித்தார். ஆனால் அவரது  ஆஜானுபாகுவான உருவத்தால் இளவயது வில்லனாக, பின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தார். ஆனால் தலைவாசல் விஜய் ஏற்ற வயதான வேடத்தால் பின்னர் அவருக்கு கிடைக்க வேண்டிய தாக்கம் தரக்கூடிய இளவயது வேடங்கள்  கிடைக்கவில்லை. வி கே ராமசாமி தன் நகைச்சுவை நடிப்பாலும், நெப்போலியன் தன் மிடுக்கான உருவத்தாலும் ஏற்றம் பெற்றது போல் தலைவாசல் விஜய்க்கு முன்னேற்றம் அமையவில்லை.

தமிழ்சினிமாவில் கொடூர வில்லன்களைத் தவிர எல்லோருமே ஒரு காலகட்டத்தில்  நகைச்சுவை காட்சிகளில் நடித்து விடுவார்கள். இப்போதெல்லாம் கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தியில் இருந்து நான்கடவுள் ராஜேந்திரன் வரை பெரிய வில்லன்கள் தான் காமெடியனாகவே நடிக்கிறார்கள். ஹீரோக்களும் கூட அவ்வப்போது காமெடி சீன்களில் நடித்தே ஆகவேண்டி இருக்கிறது. ஆனால் தலைவாசல் விஜய் அவ்வளவாக காமெடி காட்சிகளில் நடிக்கவில்லை. ஒரு வேளை, அர்த்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க அவர் மனதுக்கு பிடிக்க வில்லையோ என்னவோ? மேலும் அவரின் ஆரம்ப காலப் படங்களினால் அவர் மேல் விழுந்த சீரியஸான ஆள் என்ற இமேஜால் மற்றவர்கள் தயங்கினார்களோ என்னவோ?.
தலைவாசல் விஜய்யின் உடல் அமைப்பு காரணமாக ஹீரோவாகவோ அல்லது முழுநேர வில்லனாகவோ அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குவார்கள் என இயக்குநர்கள் நினைத்தார்கள். எனவே அவர் பெரிய அளவிலான கேரக்டர்கள் வாங்க வேண்டுமானால் அவரே தனக்கான ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தன்னை நிரூபித்திருக்கலாம்.

கோகுலத்தில் சீதையில் குடும்பப் பெண்ணை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கும் கதாபாத்திரம் அவருக்கு. அதில் பெண்கள் விபச்சாரம் செய்வதால் அவர்களின் வழக்கமான கடினமான வாழ்வில் இருந்து விடுபட்டு எப்படி சொகுசாக வாழலாம் என மூச்சு விடாமல் பேசுவார். நிச்சயமாக அந்த வசனம் எல்லாம் அவரே மெருகேற்றியிருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு வாசிப்பும், சினிமா பற்றிய புரிதலும் உண்டு. 

உதவி இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தாவாக இருந்த லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் கிடைத்த வில்லன் வேடங்களுடன் திருப்தி அடைந்து விடாமல், தனக்கேற்ப ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து போராடி சுந்தர புருசன் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் சில வாய்ப்புகள் கிடைத்தன. அது போல ஒரு தீவிர முயற்சியை தலைவாசல் விஜய் மேற்கொள்ளவே இல்லை.


அவர் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் அவர் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதில் இருந்து அவர் எவ்வளவு அணுக்கமாக நடந்து கொள்வார் என்று தெரிகிறது. கமல்ஹாசன் மற்றும் விஜய்காந்த் படங்களிலும் சரி,
பாஸில்,விக்ரமன்,அகத்தியன்,சரண்,லிங்குசாமி,ஹரி ஆகிய இயக்குநர்களின் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்து இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பெயர் சொல்லும் படியான படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஹரியின் இயக்கத்தில் நடித்த சிங்கம் 2 மற்றும் பூஜையில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் கதாபாத்திரம் தான். கே வி ஆனந்தின் அனேகனிலும் அவருக்கே உரித்தான கதாநாயகியின் தந்தை வேடம். சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான புது இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஓரளவு யதார்த்தமான படங்களையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். இம்மாதிரி படங்களில் இருக்கும் கேரக்டர்களில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். 90களில் வந்த புது இயக்குநர்கள் எல்லோருமே ரகுவரனுக்கு என ஒரு ரோல் வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த தலைமுறை இயக்குநர்களிடம் சில கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸாக வைக்கும் படி பெரிய தாக்கத்தை தலைவாசல் விஜய் ஏற்படுத்தவில்லை.

தமிழ் தவிர்த்துப் பார்த்தால் தலைவாசல் விஜய் போன்ற குணச்சித்திர நடிகர்களுக்கு ஏற்ற மாநிலம் ஆந்திரா. நாசரோ பிரகாஷ் ராஜோ இல்லாமல் ஒரு படத்தை எடுக்கவே தயங்கும் நிலையெல்லாம் அங்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவருக்கு அம்மாதிரி வாய்ப்புகள் அங்கும் அமையவில்லை.

மலையாளத்தில் யுகபுருசன் என்னும் திரைப்படத்தில் நாராயன குருவாக நடித்தார். அவருக்கு அட்டகாசமாக அந்த வேடம் பொருந்தியது. அதன்பின்னர் அங்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அங்கும் பெரிய அளவில் அவர் நடிக்கவில்லை.

அவரது மகள் நீச்சலில் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது கேரியரில் கவனம் செலுத்தக்கூட தற்போது அதிக படங்களில் தலைவாசல் விஜய் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மிக இயல்பாக கொடுத்த கேரக்டருக்கு ஏற்ற உடல் மொழியுடன் நடிக்கக் கூடிய ஒரு நடிகரை சமீப கால புது இயக்குநர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்

August 11, 2016

ஆண்களின் வசந்தகாலம்

ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும் குறிப்பாக பொருளாதாரத்தில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஆணுக்கு. 20-21 வயதில் படிப்பு முடிக்கும் ஆணுக்கு குறைந்தது 4-5 ஆண்டுகளில், அதிகபட்சம் 10-12 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது. சராசரியாக படிப்பு முடிந்து 7 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த காலம் மாதிரியான ஒன்று அவன் வாழ்வில் திரும்ப வரவே வராது.

முன்னர் எப்படியோ, ஆனால் இப்போது இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு இருப்பதில்லை. வரதட்சனை கொடுக்காமல் அக்கா வாழாவெட்டியாக இருக்கிறார், தங்கைக்கு சீருக்கு பணம் சேர்க்க வேண்டும், தம்பி படிப்புக்கு அப்பா காசு கேட்கிறார் போன்ற பேச்சுக்கள் இப்போது பெருமளவில் இல்லை. மத்திய வர்க்க பெற்றோர், தன் மகனிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் கடமைகளை முடிக்கும் நிலையிலேயே இப்போது உள்ளனர். விதிவிலக்குகள் இருக்கலாம். நம்மை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல் இருக்கும் பெற்றோர் அமைவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் திருமணத்திற்கு முன்னான காலத்தை வசந்தகாலம் ஆக்கும்.


அமெரிக்காவில் உள்ள ஏடி அண்ட் டி ஆராய்ச்சி சாலையில் நடந்ததாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அங்கு ஒரு ஆராய்ச்சியாளர், தன் மேலதிகாரியிடம் சென்று இவ்வாறு கேட்டாராம், “நானும் என்னுடன் பணிபுரிபவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் இங்கே ஒரே நாளில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். இருவரும் அறிவைப் பொறுத்தவரையிலும் ஒரே அளவில் தான் இருந்தோம். ஆனால் தற்போது அவர் என்னைவிட அறிவும் அதிகமாகி. பதவி உயர்வும் பெற்றுவிட்டார். இது எப்படி?”.

அதற்கு அவரின் மேலதிகாரி “நீ உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்துக் கொடுத்தாய். ஆனால் வேலை நேரம் முடிந்த உடன் அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டாய். ஆனால் அவனோ தினமும் 2 மணி நேரம் உன்னை விட அதிகமாக இருந்து இங்கே மற்ற விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடைய மூளையில் நீ கற்றுக் கொண்டதை விட அதிகமான தகவல்கள் குடியேறின. மேலும் இரண்டு விஷயங்களை தெரிந்தவன் அதோடு தொடர்புடைய மூன்றாவது விஷயத்தை, எந்த விஷயமும் தெரியாதவனை விட விரைவாக கற்றுக் கொள்வான். இதனால் அவன் கற்றுக் கொள்ளும் வேகம் அதிகரித்தது.

எந்த ஒரு வேலையோ அல்லது பிரச்சனையோ வரும் போது நம் மூளையானது நம்மிடம் உள்ள தகவல்களைக் கொண்டே அதற்கான தீர்வை எடுக்க முனையும். அதிகமான தகவல்களை கொண்டவன், விஷயங்கள் புரிந்தவன், அதற்கு எளிதான தீர்வை எடுத்து விடுவான். 

தினமும் 2 மணி நேரம் என்பது குறைவான நேரம். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகள் இரண்டு மணி நேர உழைப்பு என்பது அவனுடைய அறிவை உன் அறிவை விட பல மடங்கு மேலாக்கிவிட்டது. அதனால் எந்த வேலையையும் அவனால் இப்போது உன்னை விட சிறப்பாக செய்ய முடிகிறது என்றார்.


இந்த அதிக நேரமானது நமக்கு திருமணத்திற்கு முன்னரே கிடைக்கும். திருமணத்திற்கு முன் நம்மை நம் வீட்டிலோ,உறவு வட்டங்களிலோ அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன் தங்கையின் பிரசவத்திற்கு போகாத அண்ணனைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் திருமனத்திற்குப்பின் தங்கை மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கூட அது ஒரு பிரச்சனையாகும். பெற்றோர்களே கூட திருமணத்திற்குப் பின் தங்கள் மகன் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்யாணத்துக்கு முன்னாடிலாம் இப்படி இல்லை. அவ வந்து தான் இப்படி என்று அவள் காதுபட வேறு சொல்லி, தேவையில்லாத பஞ்சாயத்துகளில் நம் நேரத்தை விரயமாக்குவார்கள். நம் சுற்றத்தாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகாவிட்டால், எங்கள் வீட்டிற்கெல்லாம் நீங்கள் வருவீர்களா, கல்யாணத்துக்குப் பின்னாடி கண்ணு தெரியலை என்று குமைவார்கள். அதைவிட மனைவி வீட்டு விசேஷங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம். அவர்களின் ஒன்றுவிட்ட சித்தியின் மகள் வளைகாப்புக்கு கூட நாம் போயாக வேண்டும். சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மனைவிகள், அலுவல நேரத்தில் பணி புரிய அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நேரம் செலவு செய்து விட்டு தாமதமாக வந்தால் நாம் வேறு வகை செலவுகளை செய்தாக வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் அது தொடர்பான விஷயங்களுக்கு இப்பொழுது அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. எனவே திருமணத்திற்குப் பின் நம் நேரம் நம் கையில் இல்லை.

வேலைக்காக இன்னொரு ஊருக்கு வந்து, திருமணமாகாத காலகட்டத்தில், நம் இளைஞர்கள் செய்யும் இன்னொரு நேரச் செலவு, உணவு தேடி அலைவது. வார நாட்களின் இரவுகள், வார இறுதி நாட்களில் சாப்பிட என்று பைக்கில் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்பவர்களைத்தான் மன்னிக்கவே முடியாது. அத்தியாவசிய சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாத்திரம் கழுவுவது, அதனால் ஏற்படும் சண்டைகள், வீட்டுக்கு சாமான் வாங்குவது, சிறு சிறு ரிப்பேர்கள் செய்வது என தங்களின் வசந்த காலத்தை வீணடிப்பவர்கள் இவர்கள். இந்த வேலைகளை எல்லாம் அதிகபட்சம் மூன்று மாதங்களில் திருமணத்திற்குப் பின் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் வேறு ஊருக்கு வந்து வேலை பார்க்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. மூன்று வேளை சாப்பாடு நேர நேரத்திற்கு கிடைத்து விடும். செலவும் மிகக் குறைவு. ஆண்களுக்கு இது போல ஒர்க்கிங் மென்ஸ் ஹாஸ்டல் இருந்தால் நலம். அதே போல பிரயாண நேரம். தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கிக் கொள்வது நமது நேரம் அனாவசியமாக செலவாவதை குறைக்கும். திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏதுவாக, குழந்தைகளின் கல்விக்காக, எல்லோருக்கும் சிரம்மில்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மாமியார் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற மனைவியின் நிபந்தனைக்காக தினமும் நான்கைந்து மணி நேரம் பயணம் செய்யும் பலரை நான் அறிவேன்.

இப்போதைய மத்திய வர்க்க இளைஞன் தன் பெற்றோர்க்கு பணம் அனுப்பத் தேவையில்லாத காரணத்தால் சிக்கனமாக செலவழித்தால் நிறைய சேமிக்கலாம். ஏழாண்டுகள் இப்படி சேமிக்கும் பணம், ஒரு மிகப்பெரிய கையிருப்பாக மாறும். அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால் அந்நேரத்தில் அது கை கொடுக்கும். அம்மாதிரியான சேமிப்பை நாம் திருமணமான பின் செய்வது மிகக் கடினம்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் அங்கே நம்மை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். வருமானத்தையும் சரியாக சேமித்துக் கொண்டால், நாம் இருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மேலே உயர ஏதுவாக இருக்கும். 

இந்த வசந்த காலம் ஒரு ஸ்பிரிங் போர்ட் போன்றது. ஊன்றி அழுத்தி எவ்வினால் சமூக பொருளாதார நிலையின் அடுத்த தளத்திற்கு தாவி விடலாம். இல்லையென்றால் நம் மகனுக்கு பின்னாட்களில் தெரியப்படுத்துவதற்காக இதை எழுதிக் கொண்டிருக்கலாம். 

March 27, 2016

இயக்குநர் ஹரி



2002 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டுக்கு விக்ரமின் ஜெமினி, விஜய்யின் தமிழன், பிரசாந்தின் தமிழ் ஆகிய படங்கள் வெளியாகின. ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வந்த ஜெமினிக்கு ஏவிஎம் வழக்கம் போல ஏராளமான விளம்பரங்களைச் செய்தது. விஜய்க்கு அதற்கு முந்தைய ஆண்டுப்படங்களின் வெற்றியால் உருவாகியிருந்த கூட்டம் துணையாய் இருந்தது. சரணின் உதவி இயக்குநரான ஹரி இயக்கிய தமிழுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் படம் வெளியாகி ஒரு வாரத்தில் படம் பற்றிய நல்ல அபிப்ராயம் பரவி படம் வெற்றி பெற்றது. ஒரு தாதாவால் ஒரு எந்த வம்புதும்புக்கும் போகத் தலைப்படாத குடும்பத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதில் இருந்து எப்படி அக்குடும்பம் வெளிவருகிறது என்பதும்தான் கதை. மதுரைப் பிண்ணனியில் அமைந்த கதை. அந்தப் படத்தில் மதுரைப் பகுதிப் பெயர்கள் மற்றும் இட விபரங்கள் துல்லியமாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தன.

ஹரி படங்களின் முக்கிய அம்சமே இதுதான். தொடர்ந்து அவர் படங்களில் ஏதாவது ஒரு ஊர் முன்னிறுத்தப்படும். அந்த ஊரிலேயே பல ஆண்டுகள் தங்கி இருந்தவர் போல அந்த நிலப்பரப்பு படங்களில் உபயோகப் படுத்தப்படும். சாமி (திருநெல்வேலி), கோவில் (நாகர் கோவில்), அருள், பூஜை (கோவை), தாமிரபரணி, சிங்கம் (தூத்துக்குடி), ஆறு (சென்னை), வேல் (திண்டுக்கல்) என கதை நடைபெறும் களம் அந்த வட்டார சொல்லாடல்களோடு, பழக்க வழக்கங்களோடு இடம் பெறும்.
தமிழ் படத்தின் வெற்றி, ஹரிக்கு பாலசந்தர் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. விக்ரமின் கேரியருக்கு பூஸ்டாய் அமைந்த சாமி தான் அது. சாமியே ஹரியின் இத்தனை ஆண்டுகால தாக்குப் பிடித்தலுக்கு அஸ்திவாரமாய் அமைந்த படம். படத்தின் வெற்றிவிழாவில் ஆறுச்சாமி கேரக்டர் எனக்கு அமைந்திருந்தால் எப்படி அமைந்திருக்கும் என்று ரஜினிகாந்தே சிலாகித்த படம். ஷங்கர், சாமி படத்தைப் பார்த்த பின்னர்தான் அந்நியன் படத்திற்கு விக்ரம் சரியாக வருவார் என தீர்மானித்தார்.

அடுத்து சிம்புவை வைத்து இயக்கிய கோவிலும், விக்ரமை வைத்து இயக்கிய அருளும் சுமாரான வெற்றியையே பெற்றது. ஹரி திட்டமிட அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி முடித்துவிடுவார். அதனால் படம் குறைவான நாட்கள் ஓடினாலும் நஷ்டத்தை தந்துவிடாது.

2005ஆம் ஆண்டில் சரத்குமார் இருவேடங்களில் நடிக்க ஐயா படத்தை இயக்கினார். இதில் தான் நயன்தாராவை அறிமுகம் செய்தார். இந்தப்படம் விஜய்யின் திருப்பாச்சியோடு இணைந்து வெளியானது. பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு லாபம் கொடுத்த படம். அதே ஆண்டில் சூரியாவை வைத்து ஹரி இயக்கிய ஆறு படமும் வெளியானது. சாக்லேட் பாயாக இருந்த சூர்யாவுக்கு ஆக்சன் அவதாரம் கொடுத்தவர் பாலா என்றால், ஒரு கமர்சியல் ஹீரோவுக்குரிய இமேஜ் ஏற்பட காரணமாய் இருந்தவர்களில் முக்கியமானவர் ஹரி. அதன்பின் 2007ல் விஜயின் போக்கிரியோடு ஹரியின் தாமிரபரணி மோதியது. மிகப்பெரும் வெற்றி பெற்ற போக்கிரியோடு வெளியானாலும் விஷால் நடித்த தாமிரபரணியும் களத்தில் நின்றது. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து வேல் படத்தை இயக்கி வெளியிட்டார் ஹரி. இப்போதும் விஜயின் அழகிய தமிழ்மகனுடன் போட்டி. இதில் வேலுக்கே ஜெயம். இதன்பின் பரத்தை வைத்து சேவல் படத்தை இயக்கினார்.இப்படம் மக்களை கவரவில்லை.
அதன்பின்னர் இரண்டாண்டுகள் ஸ்கிரிப்ட் ஒர்க் செய்து ஹரி இயக்கிய படம் சிங்கம். ஹரி படப்பிடிப்புக்குப் போகும் முன் செய்யும் முன் தயாரிப்பே அவர் வெற்றிகரமான கமர்சியல் இயக்குநராக தாக்குப்பிடிக்க காரணம். சிங்கம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். அதன்பின் தனுஷை வைத்து இயக்கிய வேங்கை நன்றாகப் போகவில்லை. பின் சிங்கம் 2 இதுவும் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சென்ற ஆண்டு மீண்டும் விஷாலை வைத்து  பூஜை படத்தை இயக்கினார். அது விஜய்யின் கத்தி படத்தோடு வெளியானது. ஆனால் பெரிய வெற்றி பெறவில்லை.

ஹரி 13 ஆண்டுகளில் 13 படங்களை இயக்கியுள்ளார். 2000க்குப் பின் வந்த இயக்குநர்களில் 10 படங்களுக்கு மேல் இயக்கிய மிகச்சிலரில் ஹரியும் ஒருவர். ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,அஜீத்,விஜய் என்று இந்த 13 ஆண்டுகளில் முண்ணனியில் இருந்த ஒருவரைக்கூட இயக்காமல் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.
கமர்சியல் படங்கள் பார்க்கும் போது நம் மூளையை சிந்திக்க டைரக்டர் விடக்கூடாது என்பது மிக முக்கியம். ஹரி அதனை செவ்வனே செய்யக்கூடிவர். ஆனால் மூளை சிந்திக்கும் அவகாசமானது வருடங்கள் ஓட ஓட குறைந்து கொண்டே வருகிறது. 80 மற்றும் 90 களில் தனி காமெடி டிராக், கதைக்குச் சம்பந்தமில்லாத காட்சிகள் வந்தால் கூட யாரும் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது சிறிய இடைவெளி கிடைத்தாலும் இது சாத்தியமா என யோசிக்கும் மூளையுடைவர்கள் அதிகரித்து விட்டார்கள். எனவே கமர்சியல் படத்துக்கு காட்சி நகரும் வேகம் மிக அத்தியாவசியமாகிவிட்டது. இங்குதான் ஹரி தன்னை மாற்றிக் கொண்டே வருகிறார். அவரது ஆரம்ப கால படங்களான தமிழ்,சாமி,கோவில் போன்றவற்றில் காட்சி நகரும் வேகம் குறைவாகவே இருக்கும். ஆறு படத்தில் காட்சி நகரும் வேகம் அதிகமாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் மித வேகமாகவே காட்சி நகர்ந்தது.

சிங்கம் படத்தில் இருந்து ஹரி டாப் கியருக்குச் சென்றார். அடுத்த காட்சியின் வசனம் முந்தைய காட்சி தொடங்குமுன்னே ஒலிக்கத் தொடங்கியது. யாரும் நடக்கவில்லை. ஏறக்குறைய ஓடினார்கள். வேங்கை படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் கூட வெகு வேகமாக இருந்தன. சிங்கம் 2 வில் இன்னும் வேகம் கூடியது. அதில் செண்டிமெண்ட் காட்சிகள் கூட வேகமாக இருந்தன.

பூஜை இதில் உச்சம் எனலாம். படமே பாஸ்ட் பார்வர்ட் மோடில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. பொதுவாக பாடல்கள் நான்கு முதல் நான்கரை நிமிடங்கள் இருந்தால் ஹரியின் படங்களில் அதிகபட்சம் மூன்று-மூன்றரை நிமிடத்தில்  பாடல்காட்சிகள் முடிந்து விடும். பாடலின் கடைசி வரியும் அடுத்த காட்சியின் முதல் வரியும் சில சமயம் ஒன்றாகக் கூட ஒலிக்கும்.

ஆனால் இப்போதைய, படம் பார்க்கும்போதே ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் தலைமுறைக்கு இதுதான் சரி. அவர்கள் தங்கள் போனை உபயோகிக்காமல் இருக்கச் செய்வதில்தான் படத்தின் வெற்றியே இருக்கிறது. ஹரி வேகமாக காட்சிகளை கடத்தி அதை சாதிக்கிறார். ஸ்மார்ட் போன் என்றவுடன் ஹரியின் கதாநாயகர்கள் போனை உபயோகிக்கும் லாவகம்தான் நினைவுக்கு வரும். உண்மையிலேயே போனை ஸ்மார்ட்டாக உபயோகிப்பவர்கள் ஹரியின் நாயகர்கள்தான். ஹரி பட டிஸ்கசனின் போது எது இருக்குமோ இல்லையோ பலவித போன்களின் மேனுவல்கள் நிச்சயம் இருக்கும் போல.

ஹரியின் கதாநாயகிகளிலும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் வந்து கொண்டேயிருக்கிறது. ஆரம்ப காலப் படங்களில் தாவணி அணிந்த நடுத்தர குடும்பத்துப் பெண்களையே தொடர்ந்து நாயகியாக்கினார். பின்னர் காலமாற்றத்தில் படம் பார்க்க வரும் நவீன இளைஞர்களின் உருவகத்திற்கு ஏற்ப நவீன உடை அணியும் பணக்கார பெண் கேரக்டர்களை நாயகியாக்கினார். ஆனால் அந்த நாயகியரை குடும்பப்பாங்காகவே சித்தரிப்பார். நாயகனை குடும்பத்திற்கு மிக அடங்கியவராக சித்தரிப்பார்.

ஹரியின் படங்களில் சேவல் படத்தைத் தவிர எல்லாப்படங்களிலும் நாயகனானவன் குடும்பத்திற்கு அடங்கி, அவர்களின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பவனாகவே பாத்திரப்படைப்பு இருக்கும். சேவல் தோல்வி அடைந்ததில் இருந்து ஹரி இன்னும் அழுத்தமாக அவரின் பாத்திரப்படைப்பை பிடித்துக் கொண்டார். ஒரு வகையில் ஹரி தமிழக குடும்ப அமைப்பை காப்பாற்றும் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம். இது அவரின் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் வருகைக்கும் காரணமாக இருக்கிறது.

 ஹரி இயக்கிய படங்களின் வசனங்களும் தமிழ்நாடு முழுவதும் ஊடுருவி விடும். சாமி படத்தின் ஒருச்சாமி இருச்சாமி”, ”அவன் பேசும் போது காது ஆடுதில்லே அவன் நம்ம சாதிக்காரன்லே”, “துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்போன்ற மாஸ் வசனங்கள்  ஆகட்டும், ஆறு படத்தில் போகிற போக்கில் வரும் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” ஆகட்டும் தமிழகத்தின் எல்லா மட்டங்களிலும் பேசப்படுபவை. சிங்கம் படத்தின் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் பஞ்ச் டயலாக்கான சிங்கத்த காட்டுல பார்த்திருப்ப பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது.  
ஹரியின் பலம் தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்திருப்பது மற்றும் தனக்கு என்ன தேவை என்று உணர்ந்திருப்பது. அதனால் தான் ஒரு இயக்குநரின் வேலையைப் பற்று அறிந்து, அதை சப்போர்ட் செய்ய சினிமா பிண்ணனியில் இருந்து வந்த பெண் தான் வேண்டும் எனச் சொல்லி சினிமா குடும்பத்தில் வந்த பிரித்தா விஜயகுமாரை மணந்து கொண்டார். தன் படத்தை பார்க்க வருகிறவர்கள் யார்? அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதிலும் தெளிவானவர் ஹரி.
இப்போது சூர்யாவை வைத்து சிங்கம் 3 படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார். சூர்யாவுக்கும் இந்த இரண்டாண்டுகளாக சிங்கம் 2 விற்குப்பின்னர் சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப்படம் கிடைக்கவில்லை. சமீபத்தில் சிங்கம் 3 யின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. வெளியாவதற்கு முன் எப்படி இருக்குமோ என பலரும் கற்பனை பண்ணிக்கொண்டிருக்க சிங்கமுகத்தில் சூர்யாவின் முகத்தை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டார். இணையவாசிகள் அதனை கிண்டல் செய்தார்கள், ஆனால் ஹரியின் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கும் மக்களுக்கு அது ரீச்சானது.

இரண்டு பாகங்களிலும் சூர்யா விற்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் ஆகவில்லை. இதிலாவது ஆகுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், கூடுதல் அட்ராக்‌ஷனாக போலிஸ் அதிகாரி வேட்த்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். என்ன கதையாக இருந்தாலும் சிங்கம் 3 யிலும் குடும்பத்திற்கு அடங்கிய, பெண்களை மதிக்கக்கூடிய, மொபைலை இன்னும் லாவகமாகப் பயன்படுத்தக்கூடிய, ஓட மட்டுமே தெரிந்த ஒரு போலிஸ் அதிகாரியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

January 30, 2016

நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் திருமணம் பற்றிய தற்போதைய எதிர்பார்ப்புகள்.

1. மாப்பிள்ளையின் வயது கண்டிப்பாக 30க்குள்தான் இருக்க வேண்டும். மாப்பிள்ளையின் வயது என்ற கேள்விக்கு இருவத்தி என்று ஆரம்பித்தால்தான் காது கொடுக்கிறார்கள். 25க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சரி, என்ன வேலை என அடுத்து தொடர்கிறார்கள்.

2. அரசு வேலை, சாஃப்ட்வேர், மக்கள் அறிந்த பெரிய கம்பெனிகளில் வேலை என்றால்தான் அடுத்த கேள்வி தொடங்குகிறது.


3. முப்பதாயிரத்துக்கு குறைவான சம்பளம் என்றால் மேல படிக்கணும்னு ஆசைப்படுறா என அசால்டாக கட் செய்துவிடுகிறார்கள்.

4. அரசு வேலை, பேங்க் அல்லது பொறியியல் படித்தவர்கள் என்றால் சரி. டிப்ளமோ, பி ஏ என்றால் போய்யா என்று சொல்லி விடுகிறார்கள்.


5. தொப்பை, கண்ணாடி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். வழுக்கை என்றால் பெரிதும் யோசிக்கிறார்கள்

6. மிலிட்டரி, போலீஸ், வக்கீல் மற்றும் அரசியல் சார்புள்ள குடும்ப வரன்களை இந்த கேட்டகிரியில் இல்லாதவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.


7. வெளிநாட்டு வேலை மாப்பிள்ளை என்றால் பொறியியல் சார்பு பணி ஒன்றுக்கு மட்டுமே மார்க்கெட். மற்ற வேலைகளில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு சிரமம்தான்.
8. வீட்டில் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த அக்காவோ, திருமணமாகாத தங்கையோ ஏன் தம்பி இருந்தால்கூட யோசிக்கிறார்கள்.

9. மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணச் செலவுகளை ஏற்கவேண்டும், நாங்கள் இது மட்டும்தான் செய்வோம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார்கள்.

10. மாப்பிள்ளை வீட்டார் தங்களை விட வசதியில் ஒரு படி அதிகமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

January 27, 2016

தமிழ்நாட்டில் பானிபூரி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை காந்திபுரம் ஏரியாவில் குடியேறிய போது ஆச்சரியப்படுத்திய விஷயம் அங்கே முக்குக்கு முக்கு இருந்த பானிபூரி கடைகள். மதுரை ஏரியாவில் டீ, வடைக்கடைகள் அப்படி இருக்கும். ஆனால் இது புதிதாக இருந்தது. சென்னையில் கூட அப்போது அந்த அளவுக்கு அதிகமான கடைகள் இருந்ததா எனத் தெரியவில்லை.

ஆனால் கோவையைப் பொறுத்தவரை அது மிக அத்தியாவசியம் எனத் தெரிந்தது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் காலை ஏழு மணிக்கே ஷிஃப்ட் தொடங்கிவிடும். மதியம் 1 மணிக்குள் மதிய உணவு சாப்பிட்டு விடுவார்கள். கல்லூரி,பாலிடெக்னிக் மாணவர்களும் கூட  மதியம் ஒரு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இரவு உணவு என்பது சராசரியாக ஒன்பது மணிக்கு மேலேயே சாப்பிடும்படி இருக்கும்.

தொலைக்காட்சி வருவதற்கு முன் ஆரம்ப 80களில் தெருவில் பையன்களுடன் சேர்ந்து காவியம்-மணிக்காவியமோ, கப் ஐஸோ இல்லை கபடியோ ஆடிக்கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு உத்தியை அவர்கள் வீட்டில் இருந்து வந்து கூட்டிக் கொண்டு போய்விடுவார்கள். உடனே அவங்க அவங்க வீட்டுக்கு அவரக்கா சோத்துக்குன்னு பாடிவிட்டு வீட்டுக்கு சாப்பிட ஓடுவோம். இரவு அதிகபட்சம் எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம். நைட் பத்துமணி என்பதெல்லாம் திருவிழா காலங்களில்தான் பார்த்திருக்கிறேன். இரவு சாப்பாட்டுக்கும் காலை சாப்பாட்டுக்கும் எப்படியும் 12 மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருக்கும். அதனால் தான் அது பிரேக் பாஸ்ட். ஆனால் தொலைக்காட்சி வந்த கடந்த 30 வருடங்களில் இரவு உணவு என்பது ஒவ்வொரு அரை மணி நேரமாக தள்ளிப்போய் சராசரியாக 10 மணி அளவில் தான் இப்போதெல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காலை பள்ளிக்கோ அலுவலகத்துக்கோ கிளம்ப சென்னை மற்றும் கோவை போன்ற மாநகரங்களில் காலை ஏழு மணிக்கே சாப்பிட வேண்டி இருக்கிறது. மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இருக்கும் இடைவேளை, இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையேயான இடைவெளியை நெருங்கிக் கொண்டு வருகிறது.

அதுபோலவே முன்னர் மதிய சாப்பாடு பெரும்பாலும் மாணவர்களும், ஏன் சில இடங்களில் அலுவலக வேலை பார்ப்பவர்களும் கூட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்லும்படியும் இருக்கும். இப்போதெல்லாம் பள்ளி,கல்லூரி மாணவர்கள்  சாப்பாடை எடுத்துச் சென்று சாப்பிடுகிறார்கள். அவர்கள் மாலை வீடு திரும்பும் போது அசுரப்பசி ஏற்படும். ஆனால் நம் வழக்கத்தில் மாலை சாப்பாடு செய்து தருவது என்பது மிகக் குறைவான வீடுகளிலேயே நடைமுறையில் உள்ளது.
அதுவும் கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடென்றால் சுத்தம். பிஸ்கெட் பாக்கெட்டுகளும், சிப்ஸ்,முறுக்கு பாக்கெட்டுகளும் தான் கிடைக்கும். அதே போல கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று திரும்பி வரும் பெண்களுக்கும் பசியாற வாகான உணவு வகைகள் குறைவு. திரும்ப திரும்ப டீயும், வடையும் சாப்பிட்டால் போரடிக்கும். தினமும் ஹோட்டலில் சாப்பிடவும் பொருளாதாரம் இடிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்ததே பானிபூரி கடைகள். ஹோட்டலில் ஒரு சாதா தோசை 35 ரூபாய், அதை சாப்பிட்டால் பசி அடங்காத அளவில்தான் இருக்கும். ஆனால் காளான் பிரை 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டால் இரவு உணவுவரை பசி தாங்கும். காலி பிளவர், மசால் பூரி, பேல் பூரி, தாகி பூரி என நிறைய வெரைட்டிகளும் கிடைக்கும். பாக்கெட் மணியிலேயே அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதனால் தான் பெண்களும் இயல்பாக பானிபூரி கடைகளில் தென்படுகிறார்கள். டீக்கடைகளில் சிகரெட்,பீடி புகைத்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு ஜாடை மாடையாக பேசுவது கூட நடக்கும். ஆனால் இந்தக் கடைகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் பிற மாநிலத்துவர்கள் நடத்தும் கடை என்றால் வெளியூரில் தொழில் செய்வதால் பெண்களை மிக மரியாதையுடன் நடத்துவார்கள்.

நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பல உபாதைகள் வரும் வாய்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் தட்டேந்தி அங்கே நிற்க வேண்டியிருக்கிறது. 

January 19, 2016

இயக்குநர் சரண்

1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில் ஆசை, வான்மதி, காதல் கோட்டை என வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் 97ல் இருந்து வெளியான உல்லாசம் முதலான படங்களின் தோல்வியால் காதல் மன்னன் படத்திற்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.

படத்தின் பாடல்கள் வெளியாகி, நல்லாயிருக்கு என்ற பேச்சு கிளம்பியது. எம்
எஸ் விஸ்வநாதன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நடிகர் விவேக்
படத்தில் இணை இயக்குநராக பணிபுரிகிறார் என தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிபட்ட செய்திகளாலும், பாலசந்தரின் அஸிஸ்டெண்ட், ஆனந்த விகடனின் முன்னாள் கார்டூனிஸ்ட் என்ற பின்புலங்கள் சரணுக்கு இருந்ததாலும் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவானது.

படமும் ஏமாற்றாமல் இருந்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜெயாங்கேயின் ஒன்லைன் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் கதை.

ஆனால் படத்தின் முக்கிய அம்சமே படத்தில் கதையுடன் சேர்ந்து வந்த சென்னை பேக்டிராப் தான். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. நாயகன் ஒரு டூ வீலர் சர்வீஸ் செண்டரில் மெக்கானிக், நாயகியின் தந்தை செக்யூரிட்டி சர்வீஸ் வைத்து நடத்துபவர். பரதவாஜின் இசை, விவேக்கின் காமெடி கை கொடுக்க படம் ஓரளவு ஓடியது.

காதல் மன்னனின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படமான அமர்க்களத்தை
இயக்கினார் சரண். அஜீத்-ஷாலினி ஜோடி. காதல் மன்னன் படத்தில் உருவான ஈகோ பிரச்சினையால் சரணும் விவேக்கும் பிரிந்திருந்தார்கள். பிக்ஸ் யுவர்
எனிமி என்னும் கேப்சனோடு அமர்க்களம் படம் ஆரம்பமானது. தியேட்டரில் தங்கி இருக்கும் ஒரு ரவுடி, போலிஸ் கமிசனரின் மகளைக் காதலிக்கும் கதை. பட ஷூட்டிங்கின் போதே அஜீத்-ஷாலினி காதல் பத்திரிக்கைகளில் வெளியாகி படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. மாம்பலம் சீனிவாசா தியேட்டர் எனும் பேக்டிராப், வைரமுத்துவின் கேட்டேன் கேட்டேன் பாடல் என தொடர்ந்து செய்திகள் அடிபட்டு படமும் ஒரு எதிர்பார்ப்போடு வந்து நன்கு ஓடியது. அஜீத்துக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும்பங்கு உண்டு.

அடுத்து சரண் இயக்கிய படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் முழுக்க
முழுக்க அன்றைய சென்னையை பிரதிபலித்த படம். கப்பல் வேலைக்காக கிராமத்தில் இருந்து வந்து தங்கியிருக்கும் நாயகன் (பிரசாந்த்) , பேஜர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகியை (லைலா) காதலிக்க, பிரசாந்த் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் மருத்துவ மாணவி (சிம்ரன்) பிரசாந்தை ஒரு தலையாய் காதலிக்கிறார். தன் காதலைப் பெற எந்த அளவுக்கு அவர் இறங்குகிறார் என்பதுதான் படம். லைலாவை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் ராகவேந்திரா லாரன்ஸ்.

இப்போது புழக்கத்தில் இல்லாத அப்போது பிரபலமாயிருந்த பேஜர், 23 சி, 41 டி
பேருந்துகள், பஸ் டே என முழுக்க முழுக்க சென்னை பிளேவரோடு இருந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது
நம்ம ஏரியாவைப் பார்த்த மாதிரியே இருந்தது என சென்னை இளைஞர்களை பீல் செய்ய வைத்த படம். நல்ல வெற்றியும் பெற்றது.

இதே ஆண்டுதான் பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக வைத்து இயக்கிய தாஜ்மஹால் படம் வெளியாகி தோல்வி அடைந்திருந்தது. தன் மகனை நிலை நிறுத்துவதற்காக சரணை அணுகினார் பாரதிராஜா. ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க, ஈவ் டீஸிங்கை மையமாக வைத்து “அல்லி அர்ஜுனா” படம் தயாரானது. இதில் சென்னையின் நடைபாதை உணவகம் ஒரு பகுதியின் பிண்ணனியாக வந்தது. ரஹ்மான் ஒரு இந்திப் படத்திற்கு கொடுத்திருந்த பாடல்களையே இதற்கு கொடுத்தார். இந்தப்
படம் படுதோல்வி,

இந்தப் படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, ஏவி எம்மின் தயாரிப்பில்
படம் இயக்கும் வாய்ப்பு சரணுக்கு கிடைத்தது. அதற்கு சில மாதங்கள்
முன்புதான் அஜீத்குமாரை நாயகனாக வைத்து ஏறுமுகம் என்னும் படத்தை
தொடங்கினார் சரண். ஆனால் அதில் இருந்து அஜீத் விலகிக்கொள்ள படம்
கைவிடப்பட்டது. இதே கதையை, விக்ரமை நாயகனாக வைத்து ஜெமினி என்னும் பெயரில் இயக்கினார் சரண். பட பூஜையன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். இந்தப் படம் வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப்படம் உறுதி செய்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா செண்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்.

அடுத்து மாதவனோடு ”ஜே ஜே” படத்தில் களமிறங்கினார் சரண். காதலைச் சொல்லாத காதலியைத் தேடிப் பயணிக்கும் கதைக்கு பக்கபலமாக எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்கியிருப்பது. அவ்வளவாக தமிழ் திரையில் வந்திராத சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, ஜாதிக் கட்சி நடத்தும் வில்லன்கள் என சுவராசியமான சென்னை பிண்ணனிகள். பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது.

மீண்டும் அஜீத்துடன் இணைந்து அட்டகாசம் படத்தை ஆரம்பித்தார் சரண்.
கமல்ஹாசனை வைத்து முன்னாபாய் எம் பி பி எஸ்ஸை ரீமேக் செய்யும் வாய்ப்பும் சரணுக்கு கிடைத்தது. குறுகிய காலத்தில் சரண் கமல்ஹாசனை வைத்து இயக்கிய வசூல்ராஜா நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான அஜீத் இருவேடங்களில் நடித்த அட்டகாசமும் தோல்வியில் இருந்து தப்பியது.

அடுத்து ஜெயம்ரவி-காம்னா ஜெத்மலானி நடிக்க “இதயத் திருடன்” படத்தையும், ஆர்யா-கீரத் நடிக்க வட்டாரம் படத்தையும் இயக்கினார் சரண். இதயத்திருடன் படுதோல்வி. வட்டாரத்தில் வட சென்னை துப்பாக்கி வியாபாரம் என்னும் பிண்ணனி படத்தை ஓரளவு தப்பிக்க வைத்தது. அடுத்து மூன்றாடுகள் இடைவெளிக்குப் பிறகு வினய்-காஜல் அகர்வால் நடிக்க எஸ்.ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு வெளியானது. இந்தப்படமும் படுதோல்வி.

அடுத்ததாக, சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான ஹீரோ அஜீத்குமாரை வைத்து “அசல்” படத்தை இயக்கினார். இந்தப்படமும் தோல்விப் பட்டியலில் இணைந்தது. அடுத்ததாக வினய் நடிக்க, ஆயிரத்தில் இருவர் என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சரண்.

சரண் இயக்கத்தில் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர், வசூல் சாதனைப்
படங்களும் கொடுத்தவர் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திணற என்ன காரணம்?

சரணின் படங்கள் எதுவுமே வலுவான கதையைக் கொண்ட படங்கள் இல்லை. ஆனால் எல்லாப் படங்களிலுமே ஒரு புதுமையான முடிச்சு இருக்கும். கதைப்
பிண்ணனியில் வலுவான சம்பவங்கள் இல்லாவிட்டாலும் சென்னைப் பிண்ணனியில் அதுவரை அவ்வளவாக திரையில் வராத சம்பவங்கள், உரையாடல்கள் இருக்கும்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாயிருக்கும். பட வெளியீட்டுக்கு முன்னதாக படம்
பற்றி ஒரு பாசிட்டிவ்வான ஹைப் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றை
எல்லாம் தாங்கிப்பிடிக்க ஒரு வலுவான ஹீரோவும் படத்தில் இருப்பார்.
இவற்றில் எது குறைந்தாலும் படம் நிச்சயம் தோல்வி அடையும்படிதான்
இருக்கும். அல்லி அர்ஜுனாவை எடுத்துக் கொண்டால் படத்தின் திரைக்கதையை வலுவாக்கும் காட்சிகள் மிக சாதாரணமாக அமைந்திருந்தன. அதற்கு காரணம் நாயகன் – நாயகி. ஒரு உணர்ச்சிமயமான ஈவ் டீசிங் தொடர்பான பகுதி இருந்தும் படம் மனதில் ஒட்டவில்லை.

இதயத்திருடனும் வட்டாரமும் அப்படித்தான். சரணின் சாதாரண காட்சி, வசனங்களை தூக்கி நிறுத்த ஜெயம் ரவியாலும், ஆர்யாவாலும் முடியவில்லை. மோதி விளையாடு வினய்யும் பெர்பார்ம் செய்யக்கூடிய அளவு பெரிய நடிகரில்லை. மேலும் இந்தப் படங்களில் சரணின் பலமான சென்னை பிண்ணனி ஏதும் சிறப்பாக அமையவில்லை. பார்வையாளர்களால் படத்தில் காட்டப்பட்ட பிண்ணனியுடன் ஒன்ற முடியவில்லை.

அசல் படம் இன்னும் மோசம். நல்ல தயாரிப்பாளர், பெரிய ஹீரோ இருந்தும் மிக சாதாரணமான கதையை தேர்ந்தெடுத்திருந்தார். சிவாஜியை மனதில் வைத்து எழுதப்பட்ட பாட்டு என வைரமுத்துவால் சிலாகிக்கப்பட்ட “என் தந்தை தான்” பாடல் ஒரு நியாயமான கடத்தல்காரருக்கு?! வைக்கப்பட்டது. சரணின் பலமே சென்னைப் பிண்ணையில் கதை அமைப்பதுதான். அசலில் சம்பந்தமில்லாத இடம், கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூட பரிச்சியமில்லாமல் வைத்திருந்தார்.

நல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்குவது, கேட்சியான வரிகளை பாடல் ஆசிரியரிடம் இருந்து வாங்குவது, என திறமைகள் கொண்ட சரண், கதைகளையும் நன்கு செலக்ட் செய்திருந்தால் இந்தக் கடைசி 11 ஆண்டுகளில் ஒரு படமாவது சொல்லிக் கொள்ளும்படி கொடுத்திருக்கலாம். காதல் மற்றும் தாதா சம்பந்தமான கதைகளையே தொடர்ந்து கையாண்டு வந்திருக்கார் சரண். எனவே சில படங்களுக்குப் பின்னர், தன் ஆரம்பகாலப் படங்களுக்கு ஏற்படுத்திய படம் பார்க்கும் ஆர்வத்தை மக்களிடையே அவரால் அதற்குப் பின்னர் ஏற்படுத்த முடியவில்லை.

சரண் இயக்கும் படங்களுக்கான பார்வையாளர்கள் என்று பார்த்தால் நகர
இளைஞர்களும், நடுத்தர வர்க்க மக்களும் தான். அவர்களுக்கு அப்பீலாகும்
கதைகளை விட்டு விலகி எடுத்த படங்களில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

மேலும் சென்னையின் அடையாளங்களும் விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் சென்னையின் அடையாளமாக கருதப்பட்ட பல இடங்கள் தங்கள் இடத்தை இழந்துவிட்டன. அதற்குப்பதிலாக பல புதிய இடங்கள் வந்துவிட்டன. வெங்கட் பிரபுவின் “சென்னை-28” மற்றும் பா.ரஞ்சித்தின் அட்ட கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்கள் சென்னையை பிண்ணனியாக மட்டும் கொள்ளாமல் சென்னையின் அசல் வாழ்க்கையையே இறங்கி காட்டி விட்டன.

சரண் தற்போது இயக்கி வரும் “ஆயிரத்தில் இருவர்” கூட ஹவாலா பிண்ணனியில் அமைந்த கதைதான் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. தாதாயிசம்,ஹவாலா கதைகளில் எல்லாம் இப்போது மிகவும் இறங்கி, அக்கு வேறு ஆணி வேறாக அலசி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சரண் தன் மேலோட்டமான பாணியில் இந்தப் படத்தை இயக்காமல் ஆழமான காட்சி அமைப்புடன் இயக்கினால் வெற்றி நிச்சயம் அவருக்கு.

June 06, 2015

இயக்குநர் மணிவண்ணன்

இரண்டாண்டுகளுக்கு முன்னர், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, அந்த தகவல் வந்தது. இந்த, காமெடியா நடிப்பாரே மணிவண்ணன் அவரு இறந்துட்டாராம் என்று. பெரிய அதிர்ச்சி எனக்கு. மணிவண்ணன் இறந்ததை விட, 50 படங்கள் இயக்கிய ஒரு இயக்குநரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று. 90களுக்குப் பின் பிறந்த தலைமுறை வேண்டுமானால் அவரை காமெடி நடிகர் என்றோ அல்லது எங்கள் கிராமப் பகுதிகளில் வழங்கப்படும் “சைடு ஆக்டர்” என்ற பதம் கொண்டோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் 80களைச் சேர்ந்தவர்கள் கூட அவர் ஒரு இயக்குநர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்னால், பொழுது போக்கிற்கு திரைப்படங்களை மற்றுமே நம்பியிருந்த சிற்றூரில் இருந்த எனக்கு இரண்டு வகையான திரைப் படங்கள் மட்டுமே காணக்கிடைத்தன.

ஒரு வகையில் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள். கதைக்களன் நன்கு அமைந்திருக்கும் இந்த வகைத் திரைப்படங்களில் நாயகர்களுக்கு பெரிய வேலை இருக்காது. இன்னொரு முனையில் நாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் மசாலா படங்கள். இந்த இரண்டும் வகையும் எனக்குப் பிடித்தமில்லை. கலைப் படங்களுக்கும் வணிகப் படங்களுக்கும் இடையில் பேரலல் சினிமா என்று ஒன்று இருப்பதுபோல, வணிகப் படங்களிலேயே கதையை அடிப்படையாக கொண்ட படங்களுக்கும், ஹீரோயிச படங்களுக்கும் நடுவில் இருக்கும் படமே அந்த வயதில் எனக்கு தேவைப்பட்டது.

அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு திரைப்பட சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜும் தாடி வைத்திருந்த ஒருவரும் கம்புகளை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பது போலவும், அதை பாரதிராஜா பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் அடியில் சிறந்த சிஷ்யன் யார் என்ற போட்டிக்கே சண்டை என்பதைப் போலவும் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது. அது மணிவண்ணன் இயக்கிய முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”க்கான விளம்பரம். எங்கள் ஊருக்கு, வெளியாகி 100 நாட்கள் கழித்தே எந்தப் படமும் வரும். இந்தப் போஸ்டர் 100 நாட்கள் ஓடியபின்  அடிக்கப்பட்ட போஸ்டர் என்பதாலும் அப்போது எந்த சமூக வலைத்தளமும் இல்லாததாலும் யாரும் அதை கிண்டல் செய்யவில்லை. அந்த போஸ்டருக்கான நியாயத்தை சிறப்பாகவே செய்தவர் மணிவண்ணன். ஆனாலும் படம் பார்க்கும் ஆவல் வரவில்லை. அதன்பின் அவர் இயக்கி வெள்ளி விழா கண்ட “இளமைக் காலங்கள்” படத்தையும் பார்க்கவில்லை.

சத்யராஜுக்கு அடையாளம் கொடுத்த நூறாவது நாள் திரைப்படம் வந்தபோது, இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது. சில தியேட்டர்களில் பெண்கள் மயங்கி விழுந்தார்கள், எனவே இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து ஒரு சோடாவை உடைத்து ரெடியாக வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. படம் பிடித்திருந்தது. தொடர்ந்து வந்த 24மணி நேரமும் ஓக்கே ரகம். அதன்பின் மணிவண்ணன் படங்கள் என்றாலே ஒரு ஆவல் பிறந்தது.

பாரதி ராஜாவின் படத்தைப் புகழ்ந்து கடிதம் எழுதி, அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தவர் மணிவண்ணன். ஐந்து பெரிய வெற்றிப்படங்களுக்குப் பின் நிழல்கள் படத்தில் தான் தன் முதல் தோல்வியைச் சந்தித்தார் பாரதிராஜா. அது மணிவண்ணனின் கதை. இருந்தும் தன் அடுத்த படத்திற்கு மணிவண்ணன் சொன்ன கதையையே எடுத்தாண்டார். அதுதான் பெரிய வெற்றி அடைந்த அலைகள் ஓய்வதில்லை. காதல் ஓவியம் வரை பாரதிராஜாவிடம் பணியாற்றினார்.  அதன்பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கினார்.
மணிவண்ணனின் சிறப்பே எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டு எல்லாவற்றிலும் வெற்றியைக் கண்டவர் என்பதுதான். காதல் என்றால் இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை. குடும்பக் கதைகள் எனில் கோபுரங்கள் சாய்வதில்லை,அம்பிகை நேரில் வந்தாள். திரில்லர் என்றால் நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், மூன்றாவது கண். சமூக சீர்திருத்தம் என்றால் முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம்.  ஜனரஞ்சகமான படங்கள் எனில் ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, சந்தனக்காற்று. அவர் எக்காலத்திலும் நினைவு கொள்ளப்படும் அரசியல் விமர்சனப் படங்கள் எனில் பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தியிலும் படங்களை இயக்கியவர் மணிவண்ணன்.

மணிவண்ணன் இயக்கிய படங்களில் தொழில் நுட்பம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்காது. நடனம், சண்டைக்காட்சிகள் மனதை கவராது. அவருடைய பலமே சுவராசியமான கதை. நல்ல கதாசிரியர்களை அவர் தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டார். கோபுரங்கள் சாய்வதில்லை,முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களில் கலைமணி, சின்ன தம்பி பெரிய தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகிய படங்களில் ஷண்முகபிரியன், ஜல்லிக்கட்டு படத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் என தேர்ந்த கதாசிரியர்களின் துணையோடு படங்களை இயக்கினார்.

 அந்தக் கதைக்கு ஏற்றார் போல அன்றாட வாழ்வில் இருந்து எடுக்கப்படும் கேரக்டர்கள், அந்த கேரக்டர்கள் பேசும் சமூகத்தை கேள்வி கேட்கும் வசனங்கள் தான் மணிவண்ணனின் சிறப்பு. அந்த கேரக்டர்களும் மணிவண்ணனின் குரலாகவே ஒலிக்கும். மணிவண்ணனின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் நகைச்சுவை. அவரின் முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி கடைசிப்படமான நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ வரை மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியான நகைச்சுவை அமைந்திருந்தது. சில த்ரில்லர் படங்களைத் தவிர. கவுண்டமணியுடன் இணைந்து அவர் பணியாற்றிய வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களில் சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கும்.

மணிவண்ணின் இயக்கிய சமூக கருத்துள்ள படங்களில் முக்கியமானது முதல் வசந்தம். அதுவரை வந்த படங்களில் பெரும்பாலும் பிராமணர், முதலியார்,செட்டியார் போன்ற எளிதில் தெருவில் இறங்கி சண்டைக்கு வந்துவிடாத வகுப்பினரே தங்களை விட ஜாதி அடுக்கில் குறைவானவர்களுடன் ஏற்படும் காதலை எதிர்ப்பதாக காட்சிப்படுத்துவார்கள். சில திரைப்படங்களில் தேவர் சமூகத்தினரை காட்சிப்படுத்தி இருப்பர். மிக அரிதாக ”மனிதரில் இத்தனை நிறங்களா” என்ற படத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உள்ளேயே அடுக்குகளில் இருக்கும் தீண்டாமையைக் காட்டி இருப்பார்கள். கவுண்டர் சமூகத்தினரின் தீண்டாமையை நேரடியாக பெயர்களுடன் பதிவு செய்தது ”முதல் வசந்தம்” படம்தான். வேட்டைக்கார கவுண்டர் (மலேசியா வாசுதேவன்) , குங்குமப் பொட்டுக் கவுண்டர் (சத்யராஜ்) என நேரடியான பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். இருவரும் எதிரிகள்.  இருந்தாலும் வேட்டைக்கார கவுண்டர், தன் வேலையாட்கள் குங்குமப் பொட்டு கவுண்டரை திட்டுவதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு ஜாதிப்பாசம் கொண்டவர். தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எதிரியான குங்குமப் பொட்டுக் கவுண்டருக்கே மணமுடிக்க திட்டமிடுவார். 
வாழ்க்கைச் சக்கரம் படத்தில் வரதட்சினை பிரச்சினையை தொட்டு இருப்பார். இப்பொழுது வரதட்சினைப் பிரச்சினை என்பது குறைந்து விட்டது. பெண் கிடைத்தால் போதும் என பலரும் சொல்ல கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரச்சினை வெகுவாக இருந்தது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் வரதட்சினைப் பிரச்சினையை மார்க்கட் இழந்த நடிகர்களை வைத்து, நாடக பாணியில்  எடுப்பார்கள். ஆனால் மணிவண்ணன் ஆக்சன் ஹீரோவாக அப்போது இருந்த சத்யராஜை வைத்து இந்த படத்தை எடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீட்டில் காசு இல்ல, ஆனாலும் கவுரவத்துக்காக கடன் வாங்கி பெட்ரோல் போட்டு லயன்ஸ் கிளப் போறேன் என்று வாழ்ந்து கெட்டவர்களை காட்சிப்படுத்தி இருப்பார்.

மணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங்களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்.  இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும். பாலைவன ரோஜாக்களில் சத்யராஜ் நேர்மையான, அரசியல் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி மாவட்ட ஆட்சியர். வசனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. 80களில் வெளிவந்த அரிதான அரசியல் படங்களில் இந்தப்படமும் ஒன்று. அடுத்த ஆண்டில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் அவலத்தைச் சொல்லிய “இனி ஒரு சுதந்திரம்”. இப்படம் கோமல் சுவாமிநாதனின் நாடகம் ஒன்றை தழுவியது. 94ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை” தமிழ்சினிமாவில் அரசியல் பேசிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் இக்கால சூழ்நிலைக்கு பொருந்தும்படி இருக்கிறது இந்தப் படம். அடுத்து மணிவண்ணன் இயக்கிய தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் ஆகிய படங்களிலும் பொது உடைமை மற்றும் சுயமரியாதை கருத்துகள் இடம்பெற்று இருந்தன.

மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு (சிவாஜி,சத்யராஜ்), சின்ன தம்பி பெரிய தம்பி (பிரபு,சத்யராஜ்), சந்தனக்காற்று (விஜயகாந்த்) ஆகிய படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள். சத்யராஜை வைத்து அவர் தொடர்ந்து இயக்கிய புது மனிதன்,தெற்கு தெரு மச்சான் ஆகியவையும் முதலுக்கு மோசமில்லாத படங்கள். கனம் கோர்ட்டார் அவர்களே என்னும் படம் மட்டும்தான் வர்த்தக ரீதியாக அந்நாட்களில் தோல்வி அடைந்தது. இந்தப் படங்களிலும் மணிவண்ணன் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லிவந்தார். தெற்கு தெரு மச்சான் படத்தில் காவிரி நதி நீர் பிரச்சினையை லேசாக தொட்டுக் காட்டி இருப்பார்.

விஜயகாந்த், மோகன்,சத்யராஜ், பிரபு ஆகியோர் மணிவண்ணனின் படங்களில் தொடர்ந்து நடித்தவர்கள். சிவகுமார், சந்திர சேகர் ஆகியோரும் தவறாமல் மணிவண்ணன் படங்களில் இடம் பிடிப்பார்கள். சிவாஜி கணேசனையும் இயக்கிய மணிவண்ணன் ஏனோ கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றவில்லை. இத்தனைக்கும் ரஜினிகாந்துடன் கொடிபறக்குதுவில் வில்லனாகவும் நடித்து நல்ல அறிமுகமும் கொண்டவர். மணிவண்ணன், ஹீரோக்களை நம்பி படம் எடுத்தவர் அல்ல. அவர் ஸ்கிரிப்டை நம்பி படம் எடுத்தவர். அதனால்தான், தான் எடுக்கப்போகும் கதைக்கு தோதான நடிகர்களையே உபயோகப்படுத்தினார். அதனால்தான் அவர் உருவாக்கிய அருக்காணி, அம்மா வாசை, ஆபாயில் ஆறுமுகம், வேட்டைக்கார கவுண்டர், குங்குமப் பொட்டு கவுண்டர் எல்லாம் அனைவர் நினைவிலும் நிற்கிறார்கள்.
மணிவண்ணனிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும் சோடை போனவர்கள் அல்ல. திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு வந்த ஆர்  கே செல்வமணி, விக்ரமன், வைகாசி பொறந்தச்சு ராதா பாரதி, சுந்தர் சி, செல்வ பாரதி, சீமான், ஈ ராமதாஸ், மாயாண்டி குடும்பத்தார் ராசு மதுரவன் என குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மணிவண்ணனின் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள்.  மணிவண்ணன் படங்கள் எப்படி வெரைட்டியாக இருக்குமோ அப்படித்தான் அவர் உதவியாளர்களும். பீல்குட் குடும்பப் படங்கள் எனில் விக்ரமன், அரசியல் பின்புலம் எனில் செல்வமணி,சீமான், ஈ ராம்தாஸ், டப்பிங் படங்கள் எனில் செல்வபாரதி, கிராமத்து குடும்பத்துக் கதைகள் எனில் ராசு மதுரவன், சுந்தர் சியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

மணிவண்ணன் 1994 வரை பிஸியான இயக்குநராகவே இருந்தார். அந்த ஆண்டிலேயே அவருடைய நான்கு படங்கள் வெளிவந்தன. பின் 95ல் கங்கைக்கரை பாட்டு படத்தை இயக்கிய பின்னர், உடல்நிலை பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார்.
மணிவண்ணன் ஈழ போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான், வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். மதிமுக, 98ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்த உடன் சற்று மனம் தளர்ந்தார். 2007க்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தது. பாரதிராஜா, சீமான்,அமீர் ஆகியோர் சில போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு மணிவண்ணன் தார்மீக ஆதரவை அளித்தார்.
பிரசாந்த், ஜெயா ரே, மும்தாஜ் நடித்த சாக்லேட் படம் வெற்றிபெற்ற பின்னர் ஜெயாரே வுக்கு வாய்ப்பே வரவில்லை. மலை மலை பாட்டுல எல்லா கல்லையும் மும்தாஜே எடுத்துட்டுப் போயிட்டாங்க, எனக்கு கூழாங்கல் கூட கிடைக்கல என்று அவர் நிருபர்களிடம் வருத்தப்பட்டாராம். அதுபோல இந்த போராட்டங்களில் புகழ் பெரும்பாலும் சீமானுக்கே சேர்ந்தது. இதில் பாரதிராஜா சற்று மனவருத்தம் கொண்டு விலகிக்கொண்டார். ஆனால் மணிவண்ணன், சீமான் அணியினருடனே இருந்தார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே சற்று மனவிலக்கம் ஏற்பட்டது.

பிஸியான இயக்குநராக இருந்து, குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக மாறிய மணிவண்ணன்  அதிலும் தன் முத்திரையைப் பதித்தார். முதலில் கூறியதைப் போல 90களில் பிறந்தவர்களுக்கு அவரை ஒரு இயக்குநராக தெரிவதை விட நடிகராகத்தான் தெரியும். தான் நம்பிய அரசியலுக்கு மாறாக நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நடக்காத மணிவண்ணன் ஒரு சமூகப் போராளிக்கு உரிய மரியாதையோடு வழியனுப்பப்பட்டார்.

தமிழ் மின்னிதழ் (மே-1)ல் வெளியானது. நன்றி தமிழ் மின்னிதழ்