December 03, 2012

ரிக்கி பாண்டிங்


1991ல் இந்திய அணி அசார் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றது. உண்மையிலேயே மிக நீண்ட நாள் சுற்றுப்பயணம். அசார், தான் அப்போது எழுதிவந்த ஒரு பத்திரிக்கை பத்தியில் கூட பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என்று எழுதினார். 5 டெஸ்டுகள், இந்தியா, ஆஸி, வெ இ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடர் அதன்பின்னர் உலககோப்பை. டெஸ்டு தொடருக்கு முன்  மூன்று பயிற்சி ஆட்டங்கள் வேறு.

ஆஸ்திரேலிய கண்டத்தின் குறுக்கும் நெடுக்கும் நம் அணிவீரர்கள் அலைக்கழிக்கப் பட்டாலும் இந்திய கிரிக்கெட் அணி எத்திசையில் செல்ல வேண்டுமென தேர்வாளர்களுக்கு கோடிட்டு காட்ட உதவியது அந்த சுற்றுப்பயணம். ஸ்ரீகாந்த்,ரவிசாஸ்திரி மற்றும் கபில்தேவ் ஆகியோரிடம் இருந்த கிரீடங்கள் சச்சின் தலைக்கு மாறியது.  முத்தரப்பு தொடரின் போது மூன்று வீரர்களை எதிர்கால சூப்பர்ஸ்டார்கள் என புகழ்ந்தது மேற்கத்திய மீடியாக்கள். சச்சின், லாரா, ஸ்டீவ்வாக் ஆகியோர்களே அவர்கள்.

அதன்பின் வந்த 92 உலககோப்பையில் இன்சமாம் ஒரு காட்டு காட்டிய உடன் சச்சின், லாரா, இன்சமாம் என அதே மீடியாக்கள் எழுதின.
93ஆம் ஆண்டு மார்க்வாவின் எண்ட்ரியைத் தொடர்ந்து இன்சமாமுக்கு பதில் அவரை கொண்டாடத்துவங்கின மீடியாக்கள். பின்னர் ஸ்டீவ்வாவ் அந்த பட்டியலில் மீண்டும் இடம் பிடித்தார்.

வாவ் பிரதர்ஸின் ஓய்வுக்குப் பின் பாண்டிங்கை அந்த இடத்தில் வைத்தன மீடியாக்கள். லாரா ஓய்வுக்குப் பின் அது அதிக செஞ்சுரி என்னும் பரிணாமத்தை அடைந்து சச்சின், காலிஸ், பாண்டிங் என்ற பந்தயம் தொடங்கியது.

இப்போது பாண்டிங் அந்த பந்தயத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அந்த மீடியா ஹைப்பில் இருந்தவர் பாண்டிங். அதற்கு அவர் தகுதியானவர் தானா?

பாண்டிங் 95ல் இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆன போது, டெய்லர் காப்டன். 80களின் மத்தியில் சரிந்து கிடந்த ஆஸியை பலமாக்கி அவர் கையில்கொடுத்திருந்தார் ஆலன் பார்டர்.

அப்போது வெ இண்டீஸின் அம்புரோஸ், வால்ஷ் ஆகியோர் தங்கள் வசந்தத்தின் பிற்பகுதில் இருந்தார்கள். வாசிம் அக்ரம் மற்றும் வக்கர் யூனிஸும் கூட. இந்தியா, இலங்கை, இங்கிலாந்தில் நல்ல பவுலரே இல்லை. முரளிதரன் மலர்ந்து கொண்டிருந்த தருணம் அது. அவர் மீது ஆஸ்திரேலிய அம்பயர்கள் காட்டிய காண்டு அனைவரும் அறிந்ததே.
தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே டொனால்ட்,போலக் என்ற பலமான கூட்டனி இருந்தது.

எனவே பாண்டிங் அறிமுகமாகி பல மேட்சுகள் எந்த பிரஷரும் இல்லாமலேயே ஆடினார். வார்னே, மெக்ராத், கில்லெஸ்பி பவுலிங்கில் மற்ற அணிகளை சாய்க்க, டெய்லர், ஸ்லாடர், வாவ் பிரதர்ஸ் பேட்டிங்கில் ஆடிவிட வசதியான குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே நல்ல வேலை கிடைத்த அதிர்ஷ்டக்காரனாகவே வளர்ந்தார் பாண்டிங். இவர்கள் ஆடாவிட்டாலும் பின் வரிசையில் ஹீலே வேறு.

டெய்லர் ஓய்வு பெற்றதும் ஸ்டீவ் வாவ் கேப்டனாக, அணி இன்னும் பலம் பெற்றது. ஹெய்டன், லாங்கரின் வருகை, கில்கிறிஸ்ட் என்ற நூறாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என அணி அசுரபலம் பெற்றது.

மாறாக இதே சமயத்தில் மற்ற அணிகளின் சிறந்த பவுலர்கள் ஓய்வு பெற்றார்கள். இந்த காலகட்டத்தில் ஆஸி விளையாடிய  மேட்சுகள் ஐந்து நாட்கள் நடந்தால் ஆச்சரியம் என பேசப்பட்டது. எதிர் அணி கேப்டன்கள் யாருக்கு வியூகம் வகுப்பது என திண்டாடிப் போனார்கள். ஆஸி முதல் பேட்டிங் என்றால் ஹைடன் லாங்கர் ஜோடி நல்ல அடித்தளம் இட்டிருக்கும். பின் ரிக்கி வந்து ஆடிக்கொள்வார். பின்னர் வாவ், கில்லி யெல்லாம் வருவார்களே என முக்கிய பவுலர்களை பிரஷாக வேறு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எதிர் அணி கேப்டனுக்கு.
இரண்டாவது பேட்டிங் என்றாலோ முதலில் ஆடிய அணி பெரும்பாலும் சுருண்டிருக்கும். டீ மாரலைஸ் ஆன அணியை இவர்கள் சுளுக்கெடுப்பார்கள்.

டெஸ்டில் ஆடும்போது ஒரு பேட்ஸ்மேனை அவன் சந்தித்த சூழலில் எப்படி ஆடினான் என்பதை வைத்தே கணிக்க முடியும்.

ஆர்தர்டன் தெ ஆ க்கு எதிராக அடித்த 185, ராபின் ஸ்மித், ஸ்டீவ், மார்க் வாவ் ஆகியோர் வெ இ க்கு எதிராக அடித்த சதம், லட்சுமண் – கல்கத்தா ஆட்டம், லாரா, டிராவிட்டின் பல ஆட்டங்கள், சச்சினின் பெர்த் டெஸ்ட் போன்றவை கடுமையான சூழலில் எடுக்கப்பட்டவை. அம்மாதிரி புகழ்பெற்ற ஆட்டங்களுக்குப் பின்னரே அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.

ஆனால் ரிக்கி, கன்ஸிஸ்டெண்டாக பெர்பார்ம் செய்து வந்தாரே தவிர உலகை திரும்பி பார்க்க வைக்கும் ஆட்டத்தை (டெஸ்டுகளில்) வெளிப்படுத்தியதில்லை. 2003 உலக் கோப்பை பைனலில் இந்தியாவை பெண்டு எடுத்த பின்னர் தான் அவர் தொடர்ச்சியாக பல சதங்கள் டெஸ்டு அரங்கில் அடித்தார். அவை எல்லாமே பிள்ளைப்பூச்சிகளுக்கு எதிராக.
2003-07 வரையிலான ஆஸி வெற்றிகளும் அந்த சமயத்தில் அவர் குவித்த ரன்களுமே அவரை டாப் 3 க்கு கொண்டு சென்றன. அச்சமயத்தில் திரெட்னிங் பவுலர் என்ற வர்க்கமே மற்ற அணிகளில் இல்லை.
வெ இண்டீஸில் லாராவுக்கு மட்டும் பிளான் பண்ணினால் போதும். இந்தியா என்றால் சச்சினுக்கு. ஆனால் ரிக்கிக்கு அப்படி ஏதும் பிளான் பண்ணும் அளவுக்கு சூழ்நிலை அமையவே இல்லை. அப்படி அவர் ஸ்குருட்னி பண்ணப்பட்டிருந்தால்  மைக்கேல் பெவனை காலி பண்ணியது போல் இவரையும் பண்ணியிருப்பார்கள்.

ஆனால் அவரை சோதனைக்கு உள்ளாக்கியவர்கள் என்றால் மூவர். 2001ல் ஹர்பஜன், 2005ல் பிளிண்டாப், 2007ல் இஷாந்த் சர்மா. ஆப் ஸ்டம்பிற்கு சற்றுத்தள்ளி குட் லெங்த்தில் விழுந்து உள்ளே வரும் பந்துகள் ரிக்கிக்கி அலர்ஜி என்று தோலுரித்துக் காட்டியவர்கள் இவர்கள். என்ன அதை மெயிண்டைன் செய்ய மற்றவர்களால் முடியவில்லை.

எனவே ஆஸி லெவல் பிளேயிங் பீல்டுக்கு வந்தபின்பு (வார்னே, கில்லி, மெக்ராத், ஹெய்டன் ஓய்வு பெற்ற பின்) வந்த மேட்சுகளைப் பார்த்தோமேயானால் பிரஷர் சிட்சுவேஷன்களில் பாண்டிங் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.

பேட்டிங்கில் அவர் பலம் முழுவதும் பிரண்ட் புட்டில்தான். ட்ரைவ், புல் ஷாட் எல்லாமே பிரண்ட் புட்டில்தான் இருக்கும். பேக் புட் ஸ்கொயர் கட் அவருக்கு அவ்வளவாக வராது. அவர் ஆட வந்தவுடன் பேக்புட்டிற்கு அவரைக் கொண்டு சென்றாலே அவர் விக்கெட் எடுக்க வழி பிறந்து விடும். ஆனால் அப்படி கொண்டு செல்ல , வியூகம் வகுக்க பவுலர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.

உங்களின் வாழ்க்கைக்காக ஒருவர் இரண்டு செஷன் அவுட் ஆகாமல் ஆடவேண்டும் என்றால் உங்களின் மனதில் ட்ராவிட் அல்லது ஸ்டீவ்வாக் நினைவு வரும். உங்களின் கண்பார்வை போகப் போகிறது அதற்குள் யாராவது ஒருவரின் செஞ்சுரியைப் பார்க்கலாம் என்று சொன்னால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் பெயர் ஞாபகம் வரும். ஆனால் ரிக்கிக்கு இதுமாதிரி எந்த சிறப்பும் வாய்க்கப் பெறவில்லை.

ரிக்கிக்கு பிளசே இல்லையா? என கேட்கலாம். ஏன் இல்லாமல்?

ஆஸி அணியில் அப்போது மிடில் ஆர்டர் இடம் கிடைப்பது அரிது, ஹுசே போன்றோர்க்கு எல்லாம் கிழடு தட்டிய பின்தான் இடம் கிடைத்தது. ஆனால் பாண்டிங் 20 வயதிலேயே உள்ளே வந்தது திறமைதான். டாஸ்மானியா அணியில் அவர் காட்டிய கன்ஸிஸ்டென்சி அதற்கு காரணமாய் இருந்தது. அதை அவர் மிக அருமையாக உபயோகம் செய்து கொண்டார்.


மேலும் ஆஸி எப்பொழுதுமே பீல்டிங்கில் கம்ப்பேரடிவ் ஆக நன்கு செய்வார்கள். கேட்ச் விடுவது, காலுக்கு இடையே போர் விடுவது எல்லாம் கிரிமினல் குற்றங்களாகவே கருதப்படும். ஆனால் அங்கும் சிலர் எக்செப்ஷனலாக பீல்டிங் செய்வார்கள். டீன் ஜோன்ஸ் அப்படிப்பட்ட ஒருவர். அதுபோலவே  ரிக்கி வந்த புதிதில் எக்செப்ஷனல் பீல்டராக விளங்கினார். பவுண்டரி லைனை நோக்கி ஓடும் பந்தை அவர் விரட்டி செல்வது (95 வாக்கில்) இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

மேலும் ஆஸி அணிக்கு கோபமான மற்றும் ஸ்லெட்ஜிங் கேப்டன்கள் என்றால் மிகப் பிடிக்கும்.
ஸ்டீவ் வாவுக்குப் பின் வார்னே அல்லது கில்லிதான் கேப்டனாக வருவார்கள் என எதிர்பார்த்த போது ரிக்கி வந்தது ஆச்சரியம். (அவர்கள் இருவரும் பின் தங்கள் கெப்பாசிட்டியை ஐ பி எல்லில் காட்டினார்கள்)
ஆரம்ப கட்டத்தில் மற்றவர்களிடம் குத்து வாங்கிய ரிக்கி (98 கல்கத்தா டெஸ்ட் முடிந்தவுடன் நடந்த பார்ட்டியில் ஒரு பெண் கையைப் பிடித்து இழுத்து குத்து வாங்கியது பின்னர் ஆஸியில் ஒரு பாரில் பெண்ணைப் பார்த்து சைகை காட்ட அவள் காதலன் மூக்கில் குத்தியது) பின் மற்ற அணிகளுக்கு அதை திருப்பித்தந்தார்,

முக்கியமாக ரிக்கி பாண்டிங் கடுமையாக எந்த சூழலிலும் போராடும் டிபிகல் ஆஸி மெண்டாலிட்டி கொண்டவர். அந்த ஜெனெரேஷனின் கடைசி பிளேயரும் அவரே. இப்போதுள்ள கிளார்க் அணியில்  அந்த அளவு வெறி கொண்டவர்களை தேட வேண்டியுள்ளது.

ரிக்கி பாண்டிங்கின் வெற்றி சொல்வது எல்லாம் ஒன்றுதான். கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து விடக்கூடாது. நமக்கு நன்றாக வருவதை தொடர்ந்து பிராக்டிஸ் செய்து நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். பின் மற்றவை தானே நடக்கும் என்பதே அது. 

November 30, 2012

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

சில அருமையான ஆண்ட்ராயிட் அப்ளிகேஷன்ஸ்

அனுஷ்காய நம

இந்த அப்ளிகேஷன் தீவிர அனுஷ்கா வெறியரால் உருவாக்கப்பட்ட ஒன்று. நம்முடைய போட்டோ ஒன்றை இதில் அப்லோடு செய்துவிட்டால் போதும். நம் மொபைலில் அனுஷ்காவின் எந்தப் பாடலைப் பார்த்தாலும், ஹீரோவின் முகத்திற்குப் பதிலாக நம் முகத்தை அதில் சூப்பர் இம்போஸ் செய்து நம்மை கிளுகிளுக்க வைக்கும்

தங்கமணி டங் கட்

நம் மனைவியின் நம்பரை இந்த அப்ளிகேஷனில் கொடுத்து விட்டால் போது. அவர் எப்போது நமக்கு  போன் பண்ணினாலும் அம்சமான பெண் குரலில்

“நீங்க நல்லவரு,  வல்லவரு”
“உங்களை கல்யாணம் பண்ணினதால தான் நான் நல்லாயிருக்கேன்”
”உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்”

என பேசி நமக்கு வரப்போகும் பிபியை குறைக்கும்

பேலன்ஸ் பிளாஸ்ட்

இந்த அப்ளிகேஷனில் நம்முடைய பேங்கில் இருந்து வரும் பணம் எடுத்த அலெர்டுகளின் நம்பரை கொடுத்துவிடவேண்டும்.

நாம் அதிகம் எடுத்தால், கிரெடிட் கார்டில் பொருள் வாங்கினால்

உடனே

“ஓட்டை டவுசரைப் போட்டுக்கிட்டு, இய்யப் பாத்திரத்துல கஞ்சி குடிச்ச உனக்கு இதெல்லாம் கேட்குதா?”

என வாய்ஸ் மெசெஜ் வந்து நம்மை குட்டும்

பிளஸ்ஸோமேனியா

இந்த அப்ளிகேசனில் நம் நண்பர்களின் கூகுள் பிளஸ், பேஸ்புக், ட்விட்டர், பிளாக் போன்றவற்றை உள்ளீடு செய்துவிட்டால் போதும்,

அவர்கள் பிளஸ் விட்டால் ஆட்டோமேட்டிக்காக +1 போட்டுவிடும்

பேஸ்புக்கில் லைக் செய்துவிடும்

ட்விட்டரில் ரீடிவிட் செய்துவிடும்

டெம்பிளேட் கமெண்டோ

இதில் ஃபிரண்ட்ஸ் பகுதியில் நம் நண்பர்களின் ஐடிக்களையும், எனிமீஸ் பகுதியில் பகைவர்களில் ஐடியையும், காமன் பகுதியில் மற்றவர்களின் ஐடியையும் கொடுத்துவிட்டால்

சூப்பர், அட்டகாசம்

மொக்கை, குப்பை

:-))

போன்ற கமெண்டுகளை முறையே போட்டு நம்மை லைவ்வாக வைத்திருக்கும்

தீனி தின்னி

இந்த அப்ளிகேஷன் +போன்றோரின் அருமுயற்சியால் உருவானது. இதில் உலகில் உள்ள எல்லா சாப்பாட்டு கடைகளின் விபரமும் துல்லியமாக இருக்கும். நம்முடைய மொபைலின் ஜிபிஎஸ்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மற்றும் நம் பேங்க் பேலன்ஸ், நேரம் இவற்றைப் பொருத்து அருகில் உள்ள ஆப்டான ஹோட்டல், அங்கு ஆர்டர் செய்யவேண்டிய அயிட்டம் இவற்றைக் கொடுக்கும்.

November 17, 2012

துப்பாக்கி விதைக்கும் நஞ்சு

நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம் 

“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே  இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.

படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. 

இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.

சரி ஒரு வாதத்துக்காக ஆக்‌ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.

ஆக்‌ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன்  அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.

இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.

அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.

எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல

இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.

நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.  சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.

தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்‌ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான்.  அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?

படத்தில் டைட்டிலுக்கு முன் ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!

சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும்.

படம் நல்ல லாஜிக்கோடு இருக்கிறது என்று வேறு சொன்னார்கள். பல இடங்களில் ஓட்டை இருக்கிறது.

அருகாமையில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்கள்/அன்பர்களிடம் மாற்று மத குழந்தைகள் தள்ளி இருக்கச் செய்யும்படி இருக்கிறது இந்தப் படம்.

November 05, 2012

பிரதாப் போத்தன்


சின்ன வயதில் தெரியவில்லை. இப்போது பிரதாப் போத்தனை நினைத்தால் சற்று பொறாமையாய்த்தான் இருக்கிறது.

சிவாஜி கணேசன், திலகன், கமல்ஹாசன், மோகன்லால்,சத்யராஜ்,கார்த்திக்,பிரகாஷ்ராஜ்  மற்றும் ரகுவரன் போன்ற அற்புதமான நடிகர்களை இயக்கியிருக்கிறார்.  

ஆரம்ப காலத்தில் இருந்தே விளம்பர உலகில் இருந்து, டெண்டுல்கர், லாரா போன்ற லெஜண்டுகளை இயக்கியவர்.

கவுண்டமணி, ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் போன்ற காமெடியர்களை இயக்கியவர்.

மகேந்திரன்,பாலு மகேந்திரா, பரதன், மணிரத்னம், செல்வராகவன்,பிளஸ்ஸி போன்ற திரை மொழி தெரிந்தவர்களிடமும், பாலசந்தர், விசு போன்ற நாடக மொழி தெரிந்தவர்களிடமும் மணிவண்ணன், கே எஸ் அதியமான், ராஜசேகர், சந்தான பாரதி, பி வாசு, விஷ்ணுவர்தன், சிங்கீதம் சீனிவாசராவ், பில்லா கிருஷ்ணமூர்த்தி போன்ற கமர்ஷியல் இயக்குநர்களிடமும் நடித்திருக்கிறார்.


கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்கள் திரைப்படமாகும் போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சில்க் ஸ்மிதா, அமலா போன்ற  பேரழகிகளையும் ரஞ்சிதா, குஷ்பூ, கௌதமி,கஸ்தூரி போன்ற அழகிகளையும் லட்சுமி, ராதிகா போன்ற பெர்பார்மன்ஸ் ஆர்டிஸ்டுகளையும் இயக்கியிருக்கிறார்.


கேரளாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரின் பிள்ளையாகப் பிறந்த பிரதாப் தமிழ்சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான எம் ஆர் ராதாவின் மருமகனும் ஆவார்.

பிரதாப் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான ஜெனரில் அமைந்தவை.

மீண்டும் ஒரு காதல் கதை மன நலம் குன்றிய இருவரின் காதல், அவர்களின் உறவு, கர்ப்பம், அதனால் உருவாகும் சிக்கல்கள்

ஜீவா ராணுவ சதி- அப்பாவியின் மீது பழி மீண்டு வருதல்
வெற்றி விழா காவல்துறையின் ரகசிய ஆப்பரேஷன் ஆப்பரேசன் மேற்கொண்டவருக்கு ஏற்படும் மறதி வெற்றி

மைடியர் மார்த்தாண்டன் அரச பரம்பரை வாரிசு சாமான்யமாக வாழ நினைத்தல் காதல்

மகுடம் கிராமிய கதை

ஆத்மா அமானுஷ்ய திரில்லர்

சீவலப்பேரி பாண்டி சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டவனின்  ஆட்டோபயோக்ராபி

லக்கி மேன் எமன் பிரம்மசுவடி பிழை -  காமெடி

தமிழில் இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை.

இவற்றில்
மீண்டும் ஒரு காதல் கதை தேசிய விருதுக்கு போட்டியிட்டது

ஜீவா திரைப்படம் அக்கால மட்டுமல்ல எக்கால இளைஞர்களாலும் மறக்கப்படாமல் இருக்கும். சில்க் ஒரு மாடலாகவும், சத்யராஜ் போட்டோ கிராபராகவும் இருப்பார்கள். போட்டோ எடுக்கும் ஒரு பாடல் காட்சியில் திரையரங்கமே ஜொள்ளால் ஈரமாயிருக்கும். அந்த ஆண்டு வெளியான எல்லா சினிமா பத்திரிக்கைகளின் தீபாவளி ஸ்பெசலையும், நடுப்பக்கத்தையும் ஜீவா சில்க்கே ஆக்ரமித்திருந்தார். ஸ்பெஷல் போனஸாக அமலாவின் நீச்சலுடை தரிசனம்.

போர்ன் சூப்பர்மஸி நாவலின் பாதிப்பில் இயக்குநர் ஷண்முகசுந்தரம் எழுதிய கதையை வெற்றிவிழாவாக எடுத்தார். அபூர்வ சகோதரர்களின் பெரு வெற்றிக்குப் பின் வந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம். இந்தப் படத்தில் போலிச்சாமியாரை (ஜனகராஜ்) ஒரு சூப்பர் பவராக காமித்திருப்பார். அது இப்போது வெகு உண்மையாக மாறிவிட்டது.

கோயிங் டு அமெரிக்கா பட்டி டிங்கரிங் பார்த்து பிரதாப் இயக்கிய மைடியர் மார்த்தாண்டன் ஒரு கலகல காமெடி காதல் பிலிம். குஷ்பூவை தமிழில் வெகு கிளாமராக காட்டியபடம். தத்துவம் எண் 10001, ஏழைகள் போன்ற இன்னும் மறக்க முடியாத காமெடிகள் கொண்ட படம்.

விகடனில் தொடராக வந்து, ராஜேஸ்வரின் திரைக்கதை வசனத்தில் பிரதாப் இயக்கிய சீவலப்பேரி பாண்டி நெப்போலியனுக்கு கதாநாயக அந்தஸ்து கொடுத்த படம்.  

பிரதாப் இயக்கத்தில் சோடை போன படம் என்றால் அது மகுடம் தான். ஆத்மா, லக்கிமேன் போன்றவை வெற்றி பெறவில்லையென்றாலும் பார்க்க போரடிக்காது.

மலையாளத்திலும் இவர் திலகனை வைத்து இயக்கிய ரிதுபேதம், லட்சுமியை வைத்து இயக்கிய டெய்ஸி, சிவாஜி, மோகன்லாலை வைத்து இயக்கிய யாத்ரா மொழி என எல்லாமே வித்தியாச களங்கள்தான்.

பெரும்பாலும் மற்ற இயக்குநர்களின் படங்களில் அப்பவித்தனமான குடும்பஸ்தன், மைல்ட் சைக்கோ போன்ற கேரக்டர்களில் நடித்தாலும் இயக்கத்தில் புத்திசாலி. மலையாளி என்பதால் நல்ல தமிழ் கதை வசனகர்த்தாக்களிடம் தேவையானதைப் பெற்று போரடிக்காத படங்கள் கொடுத்தவர். தன் பட நாயகிகளை அழகாகக் காண்பிக்கும் கலைக்கண்ணும் உண்டு.

1980ல் தொடங்கி தற்போது மலையாளத்தில் ஹிட்டான 22 பீமேல் கோட்டயம் வரை நல்ல படங்களில், நல்ல இயக்குநர்களிடம் நடித்துக் கொண்டிருக்கும் பிரதாப் மேல் ஏன் பொறாமை கொள்ளக்கூடாது?

October 30, 2012

ஏதாச்சும் வழி இருக்கா?


நான் பார்க்கும் பத்தாவது ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் இவர். பல சோதனைகளுக்குப் பின்னர் உதட்டைப் பிதுக்கினார். எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. எதுக்கும் அடுத்த வாரம் வாங்க. நான் கொஞ்சம் ஸ்டடி பண்ணி சொல்லுறேன் என்றார். கவலையுடன் வெளியே வந்த போது, சுவற்றில் மாட்டியிருந்த காலண்டர் கவலையை கூட்டியது.

காரணம் கேட்டால் உங்களுக்கு சிரிப்பாகக்கூட இருக்கும். ஆனால் இது பல நூறு ஆண்டுகால சத்த சரித்திரம். ஆம் சத்த சரித்திரம்தான். யாரிடம் இருந்து ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் பரம்பரையில் ஆண்கள் எல்லோருக்கும் இரவில் வரும் குறட்டை ஒரு போயிங் விமானம் பறக்கும் போது வரும் சத்தததைவிட அதிகமாகவே இருக்கும்.

நல்ல வேளையாக அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒரே தெருவில் வசித்து வந்ததால் நியூசென்ஸ் கேஸில் இருந்து எங்கள் மக்கள் தப்பித்திருந்தார்கள். அந்தத் தெருவில் சிறுபான்மையாக இருந்த சிலரும் குறட்டைக்கு பயந்து தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு வேறுபக்கம் ஓடியிருந்தார்கள். வாடகைக்கு வந்தவர்களும் ஒரே வாரத்தில் தெறித்து ஓட, அனைத்து வீடுகளும் சகாய விலையில் எங்கள் வசமாயிற்று.

ஒவ்வொருவரின் குறட்டையும் ஒரு ராகத்தில் அமைந்திருப்பது எங்களின் ஸ்பெசாலிட்டி. என் பெரியப்பா முதலில் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயிக்குப் போவார். பின்னர் அங்கே சில வினாடிகள் சஞ்சாரித்து விட்டு அப்படியே இறங்குவார். அவரின் தம்பி இரண்டு வீடு தள்ளி இருப்பவர், அண்ணன் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பார். மல்லாடி பிரதர்ஸ் போல இவர்கள் கச்சேரி இருக்கும். இன்னொரு சித்தப்பா தந்தி அனுப்புவது போல் குறட்டை விடுவார்.  கிர்ர்ர்ர்       கிர்ர்ர்ர்    கிர்ர்ர்ர் என சத்தத்துக்கு இடையே சீரான இடைவெளி இருக்கும். என் பாட்டிக்கு 98 வயது. கண்ணே தெரியாது. ஆனால் குறட்டையே வைத்தே இன்னின்னார் இங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடித்து விடுவார்.

எங்கள் வீட்டுக் குழந்தைகளும் கருவில் இருந்தே இந்த சத்தத்தை கேட்டு வளருவதால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. சிலர் ஹாஸ்டலில் தங்கப்போய், வார்டனே காலில் விழுந்து வீட்டுக்கு அனுப்பி வைத்த கதையெல்லாம் இங்கே உண்டு.

ஒருமுறை எல்லோரும் திருப்பதிக்கு ரிசர்வ் செய்து டிரெயினில் போனபோது, சீட் நம்பர் எல்லாம் மாறி வந்திருக்கிறது. கம்பார்ட்மெண்டில் இருந்தவர்களிடம் பெண்கள், குழந்தைகள் எல்லாம் இருக்காங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பெர்த் மாத்திக் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களோ நோ நோ என மறுத்திருக்கிறார்கள். இரவானதும் பங்காளிகள் அனைவரும் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பிக்க சக பயணிகள் அலறிப்புடைத்து அபாயச் சங்கிலியை இழுத்து அடுத்த கம்பார்ட்மெண்டுக்கே ஓடிய கதையெல்லாம் உண்டு.

பெண்கள் குறிப்பிட்ட வயதானதும் பூப்படைவது மாதிரி எங்கள் பங்காளி ஆண் பிள்ளைகளும் 17 அல்லது 18 வயதில் குறட்டை விடத் துவங்குவார்கள். குறட்டை விடத்துவங்கியதும்தான் அவனை ஒரு தலைக்கட்டாக ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் இருந்தது.

எங்களின் பராக்கிரமம் அறிந்தவர்கள் யாரும் பெண் தர மாட்டார்கள் என்பதால், பெரும்பாலும் அத்தை மகள், அக்கா மகளையே கட்டும் பழக்கம் எங்கள் வம்சத்தில் இருந்தது. அந்த பெண்களும் இந்த குறட்டை சத்தத்துக்கு சிறுவயதிலேயே பழகியவர்கள் என்பது மட்டுமல்லாமல் மரபணு ரீதியாகவே அவர்கள் குறட்டையை சகித்துக் கொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்கள்.

நான் படிப்பை முடித்து, சென்னையில் வேலை கிடைத்ததும் என் சுற்றத்தார் மகிழ்வை விட கவலையே அடைந்தார்கள். எப்படி அங்க சமாளிப்ப? என்று கேட்டார்கள்.

அவர்கள் கேட்டதின் நியாயம் ஒரு வாரத்தில் தெரிந்தது. தங்கியிருந்த மேன்ஷனில் நான் காட்சிப் பொருளானேன். இரண்டே வாரத்தில் லேண்ட் மார்க் ஆனேன். பயங்கரமா குறட்டை சத்தம் கேட்கும், அந்த ரூமில இருந்து மூணாவது ரூம் என அட்ரஸ் சொல்லலானார்கள்.

அடுத்த வாரத்திலேயே மேனேஜர் வந்து, இங்கே தங்கியிருக்கும் எல்லோரும் காலி பண்ணி போயிருவாங்க போலிருக்கு. தயவு செய்து காலி பண்ணிடுங்க இந்தாங்க அட்வான்ஸ் என குமுறிவிட்டுப் போனார்.

பின் வேறு ரூம் தேடும் போதுதான் அந்த ஏரியாவில் நான் பிரபலமாகியிருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக யாரும்  குடி வராத, வாஸ்து சரியில்லாத ஒரு வீட்டு மாடி கிடைத்தது. நானும் கதவு, ஜன்னல் எல்லாம் இறுக சாத்தி, தெர்மோகோல் வைத்து சவுண்ட் புரூப் சிஸ்டம் பண்ணியும் பாச்சா பலிக்கவில்லை. வீட்டு ஓனர் காலிலேயே வந்து விழுந்துவிட்டார்.

சென்னையின் புற, புற நகரில் அக்கம் பக்கம் இன்னும் வீடே இல்லாத  ஒரு வீடு கிடைத்தது. தற்போதுவரை அங்குதான் ஜாகை.

இதற்கிடையில் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு ஒரு காதலும் வந்தது. அது எப்படி வந்தது எப்படி சக்சஸ் ஆனது எல்லாம் கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் அந்தக் காதல் இப்போது ஊசலாடிக்கொண்டிருப்பதற்கு என் ஜீனே காரணம்.

ஆம். ஒருநாள் அலுவலக மக்களுடன் அவுட்டிங் சென்று மாலை திரும்பிக்கொண்டு இருந்தபோது அலுப்பில் வேனில் தூங்கி விட்டேன். வேனே நிலை குலைந்து போனது. காதல் அதைவிட.

பல சுற்று கெஞ்சல்களுக்குப் பின் அவள் சொன்னது இதுதான். எனக்கு முன்னால் ஒருநாள் குறட்டை விடாமல் தூங்கிக்காட்டு. பின் திருமணம் என்று. காளையை அடக்கி திருமணம், இளவட்டக்கல்லை தூக்கி திருமணம், ரேக்ளா ரேஸ் வெற்றி என்று வந்த தமிழர் பரம்பரையில் இப்படி ஒரு சவாலா என நொந்து கொண்டேன்.

ஆறு மணிக்குள் இரவு உணவை முடித்தால் குறட்டை வராது, சிக்ஸ் பேக் இருந்தால் குறட்டை வராது என பல அட்வைஸ்கள். எல்லாம் முயற்சித்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் பல்வேறு சோதனைகள், ஸ்கேன்கள் எடுத்தும் ஒன்றும் வழி பிறக்கவில்லை.

இன்னும் ஒரு மாதம் டயம். குறட்டையை நிப்பாட்டலைன்னா எங்க வீட்ல பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி விடுவேன் என காதலி சொல்லிவிட்டாள்.

இன்று பார்த்த ஈ என் டி யும்  ஜகா வாங்கி விட, இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதை காலண்டர் சுட்டிக்காட்டியது.

எப்படியும் இது நடக்கப்போவதில்லை. சிறிது காலம் கழிந்ததும் எதோ ஒரு அத்தை மகளையோ இல்லை அக்கா மகளையோ. திருமணம் முடித்து வழக்கப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனையும் கஷ்டப்படுத்த வேண்டுமா? என யோசிக்கிறேன். இல்லை பிரம்மாச்சரியாகவே காலத்தை கழித்து விடலாமா? என்றும் யோசனையாய் இருக்கிறது.

ஏம் பாஸ் உங்களுக்கு யாராவது நல்ல ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் தெரியுமா?

September 26, 2012

சென்னை மெரினாவில் பதிவர் சந்திப்பு – அனைவரும் வாரீர்


வருகிற சனிக்கிழமை (29-9-12) அன்று மாலை 5 மணி அளவில் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையின் அருகே பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. பதிவர்கள், பதிவுகளை படிப்பவர்கள் மற்றும் இணையத்தில் தமிழில் புழங்குபவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு அமைப்பாளர்கள் என்று யாரும் கிடையாது. வருகின்ற அனைவருமே அமைப்பாளர்கள் தான். இடம், நேரம் போன்றவற்றில் சந்தேகம் இருப்பின் தெளிவு பெறுவதற்காக சில தொடர்பு எண்களை கீழே கொடுத்துள்ளோம்

பாலபாரதி 9940203132
யுவகிருஷ்ணா 9841354308
அதிஷா 9884881824
புதுகை அப்துல்லா 9381377888
கேபிள் சங்கர் 9840332666
ஜாக்கி சேகர் 9840229629
மணிஜி 9340089989
பட்டிக்காட்டான் ஜெய்  9094969686
முரளிகண்ணன் 9444884964

தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அனைவரின் வருகைக்கும் முன்கூட்டிய நன்றிகள்.

September 24, 2012

மனைவி


வீட்டின் உள்ளே நுழைந்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த மாமனார் தலையை கீழ்நோக்கி அசைத்து வெற்றுப் பார்வை பார்த்தார். மைத்துனன் உதடு பிரியாமல் புன்னகை போன்ற ஒன்றால் வரவேற்றான். சென்று அவனருகில் உட்கார்ந்து

“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சா? எதுவும் வாங்கி வரணுமா? என பேச்சைத் தொடங்கினேன்.

இல்ல மாமா. எல்லாம் வாங்கியாச்சு. நாளைக்கு எட்டு மணிக்கு அய்யர் வர்றேன்றிருக்கார் என்றான். பேச்சு சப்தம் கேட்டு ஐந்து நிமிடம் கழித்து இறுகிய முகத்துடன் காப்பிக் குவளையுடன் வந்தார் மாமியார்.

பாவம் அவரும் என்ன செய்வார்?. மகளின் முதல் திவசத்துக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையை எப்படி வரவேற்க வேண்டும் என்ற முறை சாஸ்திரத்தில் இல்லையே.

காப்பியைக் குடித்தவாறே பிளாஸ்டிக் மாலை அணிவித்திரிந்த பிரேமுக்குள் சிரித்த முகத்துடன் இருந்த பிரியாவைப் பார்த்தேன். சில நிமிடங்களில் ஒரு சங்கடமான மௌனம் எங்களுக்குள் நிலவியது.

கல்யாணமாகி ஒரே ஆண்டில் விபத்தில் செத்துவிட்ட பிரியா எனக்கும் அவர்கள் வீட்டிற்கும் இருந்த தொடர்பையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டாளோ எனத்  தோன்றியது. இதே வீட்டிற்கு மறு வீட்டிற்கு வந்த நேரம் எப்படி இருந்தது?. குழைந்து பேசும் மைத்துனன், மருமகனுக்கு சமைப்பதற்காகவே இத்தனை ஆண்டுகள் பயிற்சி செய்தவளைப் போல இயங்கிய மாமியார், அவர் மேலதிகாரிக்கு கொடுத்த மரியாதையை விட அதிக மரியாதை கொடுத்த மாமனார்.

இப்போது, கொடுத்த கடனை திருப்பி கேட்க வந்தவனுக்கு செய்வதைப் போன்ற சம்பிரதாய உபசரிப்புகள்.

“கடை வீதி வரை போய் விட்டு வருகிறேன்என சொல்லிவிட்டு கிளம்பினேன், அப்படியாவது மனப்புழுக்கம் குறையுமா, என்று. போன முறை இங்கு வந்தது தலை தீபாவளி மாப்பிள்ளையாக. இதே தெருவில்தான் பிரியா ஓடி ஓடி அலங்காரப் பொருட்களை அன்று வாங்கினாள். எதிலும் ஓட்டம் தான் அவளுக்கு. படிப்பு முடித்து வேலை, அதில்  உயர்வு பின் கல்யாணம் என. பிறந்ததில் இருந்தே ஓடிக் கொண்டுதான் இருந்திருப்பாள் போல. போதும் என ஒரு நாள் நிறுத்திக் கொண்டாள்.

அவள் எங்கே நிறுத்தினாள். விடுமுறைக்கு இங்கே வந்தவள், ஒரு விசேஷத்துக்கு சித்தி மகனுடன் பைக்கில் போனாள். அவள் தான் வேகமாக போகச் சொன்னதாக கேள்வி.  இருக்கும். அவன் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொள்ள, இங்கே நான் பெரும் மனக் காயத்துடன் நிற்கிறேன்.

29 வருடம். யாரிடமும் பகிராத காதலை அவள் மீது கொட்டினேன். அவளுக்குத்தான் அதை வாங்கிக்கொள்ள நேரமே இல்லை. ஹனிமூன்? வேண்டாம். இந்த பிராஜக்ட் முடியும் லெவலில் இருக்கிறது. திருப்பதி? வேண்டாம். பி எம் ஆகிட்டு போலாம். மகாபலிபுரம்? முன்னமே பார்த்தாச்சு.

அப்பாவிற்கு போன் செய்தேன். நாளைக்கு எட்டு மணிக்கு என்றேன். சிரத்தை இல்லாமல், நாளைக்கு அவனுக்கு லீவ் இல்லடா. கைலாஷுக்கு ஸ்கூல்ல ஏதோ மீட்டிங்காம். நான் தான் போறேன். என்றார்.

என் மனைவியின் முதல் திவசம் இவர்களுக்கு பைசா பெறாத விஷயம் ஆகி விட்டிருக்கிறது. கல்யாணத்துக்கு முன் என் சின்ன பையன் சின்ன பையன் என என்னைத் தூக்கி வைத்து ஆடியவர், கல்யாணத்துக்குப் பின் அப்படி இல்லை. பிரியாவின் மறைவுக்குப் பிறகு இன்னும் சுத்தம். பிரியா வீட்டாரே என்னை அன்னியனாய் நினைக்கத் துவங்கி விட்ட பின் மாமனரா மருமகள் திவசத்துக்கு வருவார்?

இரவு ஆனதும் மாமனார் வீட்டிற்கு திரும்பினேன். நாளை திவசம் முடிந்ததும் கோவையிலுள்ள எங்கள் வீட்டிற்குப் போய், ஒரு நாள் தங்கி விட்டு சென்னைக்கு புறப்படுவதாக ஏற்பாடு. 

காலையில் இயந்திர தனமாக எல்லா நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. அய்யர் கிளம்பிய உடன் விரதம் முடித்து சாப்பிட்டேன். அடுத்து என்ன? என்பது போலவே அனைவர் பார்வையும் இருந்தது. அதை சகிக்க முடியாமல் உடனே கிளம்பினேன்.

பஸ் ஸ்டாண்ட் வந்து கோவை பஸ்ஸுக்காக காத்திருந்த போது, அக்காவிடம் பேசலாம் எனத் தோன்றியது. எடுத்தவள் இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன் என்று வைத்து விட்டாள்.

போன மாதம் அவள் பையன் பத்தாவது பரிட்சை நன்கு எழுத, யோக ஹயகிரீவரிடம் சென்று அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது, அவள் செய்த போன் கால்கள் அத்தனையும் ஞாபகத்துக்கு வந்தன. ஒவ்வொரு மணி நேரமும் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் காரியம் என்றால் மட்டும் தான் இந்த சில ஆண்டுகளில் பேசுகிறாள்.

கோவை பஸ் வர ஏறிக் கொண்டேன்.  இந்த ஒராண்டில் எத்தனை புறக்கணிப்புகள்?  அவள் விதி அவள் போய்ச் சேர்ந்து விட்டாள். நானென்ன செய்வது? அபார்ட் மெண்டில் நடந்த குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்கள், வெட்டிங் டே பார்ட்டிகள் எதற்கும் அழைப்பில்லை.

அவர்களை விடுங்கள். அலுவலகத்தில் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் கெட் டு கெதர் போபவர்கள் என்னை புறக்கணித்து விட்டுப் போகிறார்கள். பேச்சிலர்களும் அவர்கள் ஜமாவில் என்னை சேர்ப்பதில்லை. சமீபத்தில் கல்யாணம் நிச்சயமான நண்பன் அவன் உட்பியிடம் இருந்து போன் வந்தால் எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறான். கண்ணு வச்சிடுவான்என்று இன்னொருவனிடம் கமெண்ட் வேறு.


கோவை வந்தது. இறங்கி அன்னபூரணாவில் காபி குடிக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது. நேற்று நான் பேசியபிறகு, ஒரு போன் கூட இன்னும் வீட்டில் இருந்து வரவில்லை. இன்று வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். என்ன என்று கேட்க கூட நாதியில்லை. சரி என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம் என மனதில் கறுவிக் கொண்டு, மாலைக் காட்சிக்கு ராகம் தியேட்டருக்கு பேக்குடன் கிளம்பினேன்.

படம் முடிந்தும் போன் வரவில்லை. ஆட்டோ பிடித்து, ஆம்னி பஸ் நிறுத்தத்துக்கு வந்தேன். சென்னை பஸ் கிடைத்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, காலை 7 மணி. பல் துலக்கிவிட்டு, காலண்டரில் தேதி கிழித்தேன். நல்ல நேரம் ஏழரையில் இருந்து ஒன்பது என அது சொன்னது.

லேப்டாப்பை ஓப்பன் செய்து, கூகுளுக்குள் போனேன். கை அனிச்சையாக மேட்ரிமோனி என டைப்பத் தொடங்கியது.

September 13, 2012

அன்னப் பட்சி நெக்லஸ்


பத்த வைத்த, பாலிஷ் போட்ட, திருகாணி போட்ட உருப்படிகளை எல்லாம் மீண்டும் எடை போட்டு, சிட்டையில் எழுதிவிட்டு நிமிர்ந்தபோது மணி பத்தரை ஆகி இருந்தது. கருநீல சபாரி அணிந்த சூப்பர்வைசர் முத்தண்ணனிடம் கொடுத்து பேரேட்டில் ஏற்றும் போது பதினொன்னைத் தொட்டுவிட்டது மணி.

“சண்முகம், நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வந்திருப்பா. முகூர்த்த நாளு. பழைய நகை எல்லாம் நிறைய வரும். சாயங்காலத்துக்கு மேல ரிப்பேர் வேலை பார்த்துக்கிடலாம்என்றார் முத்தண்ணன்.

ஆடி தொடங்கி தீபாவளி வரையிலான இந்த சீசன் நகைக்கடைகளுக்கு அருமையான சீசன். தள்ளுபடியில் தொடங்கி, சுபமுகூர்த்தங்களுக்கு வாங்க, நல்ல நாளுக்கு வாங்க என தீபாவளி வரை வியாபாரம் அனல் பறக்கும்.

என்னுடைய பிரச்சினைகளும் இந்த தீபாவளிக்குள் தீர்ந்துவிடும். 35 வயதிலும் தனிமை, கொடுமை. முன்னெல்லாம் வேலையில் மட்டுமே இருக்கும் கவனம் இப்போது சுற்றுப்புறத்தையும் நோட்ட மிட வைக்கிறது. மாநகர கலாச்சாரம் பெண்களின் அழகை வெளிச்சமிடவைக்கிறது. அவர்கள் தி நகர் மாதிரி ஏரியாவிற்கு வரும்போது மினுமினுக்க வைக்கிறது. அந்த மினுமினுப்பு உள்ளச் சூட்டை உமி போட்ட தணலாய் தகிக்க வைக்கிறது. வயிற்றுப்பசி தீர்ப்பதற்கு இந்தத் தொழில் இருக்கிறது. ஆனால் இந்தப் பசி தீர்க்க? அவமானங்களுக்கு பயந்து ஒழுக்கமாய் இருக்க வேண்டியிருக்கிறது.

இரண்டு லட்ச ரூபாய் சீட்டின் கடைசித் தவணை நேற்றோடு முடிந்தது. கசர், கமிசன் பிடித்துக் கொண்டு நாளை  கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். வாங்கிக் கொண்டு ஊருக்குப் போய் பெரியகுளத்தம்மா கடனை அடைக்க வேண்டும். அதோடு முடிந்துவிடும். பின் தீபாவளி வரை பார்க்கும் வேலை, ஓட்டி, போனஸ் எல்லாம் சேர்த்து ஒரு ரூபாய் வரும். அப்பாவுக்கு புதுச் சட்டை, வேட்டி எடுத்துக் கொடுத்து பெண்பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும்.

பாருங்க, நான் பாட்டுக்கு மனசுல வர்றத சொல்லிக்கிட்டே போறேன். நான் யாரு என்னன்னு சொல்லாமலேயே!.

நான் ஒரு பொற்கொல்லர். பரம்பரையாக புகழ்பெற்ற குடும்பம். நிலக்கோட்டை ஆசாரி என்றால் சுத்தி இருக்குற நாலஞ்சு தாலுகாவுக்கும் தெரியும். தாத்தா கல்யாண நகை ஆர்டர் மட்டும்தான் செய்வாராம். கைராசிக்காரர்ன்னு கூட்டம் அலைமோதும். நல்ல முறையில சம்பாதிச்சவங்களுக்கு மட்டும்தான் செய்வாராம்.அவர் செஞ்சு கொடுத்த நகை பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில இருக்குமே தவிர, அடகுக்கடை வாசலைக் கூட மிதிக்காது என்பார்கள்.  அப்பா தலை எடுத்த பின்னாடி தொழிலை நல்லா விரிவுபடுத்தினார். மதுரைக்கு ஜாகையை மாத்தினார். பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு திருட்டு எங்க வாழ்க்கையையே பொரட்டி போட்டிருச்சு.

இன்சூரன்ஸ் மாதிரி யெல்லாம் பண்ணாம கூட இருக்குற ஆளுங்களையும், இரும்பு லாக்கரையும் நம்பி இருந்தார் அப்பா. ரெண்டுமே அடிக்கிற மாதிரி அடிச்சா வளையறதுதானே. அட்வான்ஸ் வாங்கி, செஞ்சு வச்சிருந்த நகை, தங்கம் எல்லாம் போயிடிச்சு. சொத்தை வித்து எல்லோருக்கும் திருப்பி கொடுத்தார் அப்பா. அப்படியும் பத்தலை. தாத்தா எடுத்து வச்சிருந்த நல்ல பெயர்னால யாரும் நெருக்கலை. ஆனா அம்மா அந்த அதிர்ச்சியிலேயே கொஞ்ச நாள்ல போயி சேர்ந்துட்டா. நான் பத்து வருஷமா இங்க வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சுக்கிட்டு வர்றேன். கடன் அடையிறவரைக்கும் புதுத்துணி எடுக்கக்கூடாது, நல்ல சாப்பாடு சாப்பிடக்கூடாது அப்படின்னு அப்பாவுக்கு ஒரு வைராக்கியம்.

இந்த கடன கட்டிட்டாப் போதும். அப்பா முகத்துல ஒரு நிம்மதியப் பார்த்துடலாம். என்னோட தாபமும் தீரும். எந்த கெட்ட வழிக்கும் என்னைய கொண்டு போயிராதன்னு தினமும் தாத்தாவத்தான் வேண்டிக்கிருவேன்.


என் கூட வேலை பார்க்கிற ஆளுங்க எல்லாம் சேர்ந்து ரூம் எடுத்து தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்னறை. அந்த நேரத்துலயும் ஹவுஸ் ஓனர் முழிச்சுக்கிட்டுத்தான் இருந்தார். ரெண்டு விரல்லயும் நல்ல உருட்டா ஒண்ணரைப் பவுனுக்கு மோதிரம், அஞ்சு பவுன் பிரேஸ்லட், ஏழு பவுன் சங்கிலி போட்ட வாட்ச், பத்து பவுனுக்கு எட்டுப் பிடியில் மைனர் செயின் அப்படின்னு ஆளு ஜம்முனு இருந்தார். 25 பவுன் நகை போட்டும் அது தெரியாத மாதிரி ஆகிருதியான பாடி.

சண்முகம்எனக் கூப்பிட்டு வீட்டிற்குள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே போனதும்,

என்னோட இன்னொரு காம்பவுண்ட்ல குடியிருக்கிறவர் ஒருத்தர் இருக்காரு. நல்ல மனுசன். பணமுடை. நகை ஒண்ணை விக்கணும்னாரு. போயிப் பாரேன் என்றார்.

சரிங்கஎன தலையசைத்து விலாசம் கேட்டுக் கொண்டேன்.

காலையில் அங்கு போய் விவரம் சொன்னதும், உள்ளே கூப்பிட்டு போய், விசாலாட்சி காப்பி போடும்மா என்று சமையல்கட்டு பார்த்து குரல் கொடுத்தார். அவர் கையிலும், விரலிலும் நகை அணிந்திருந்த அடையாளங்கள் மிச்சம் இருந்தன. காப்பியோடு வந்த அம்மாளைப் பார்த்தேன். எண்ணெய் ஏறிய கல் மூக்குத்தி, பவுனைவிட அரக்கு அதிகமாய் இருந்த அரைப்பவுன் தோடு, கவரிங் வளையல், மஞ்சக் கயிற்றில் கோர்த்திருந்த தாலி.

அவர் செருமிக் கொண்டே, பேரனுக்கு ஒரு  ஆப்பரேஷன் பண்ணவேண்டியிருக்கு. அதான். என்று சொல்லி நகையை எடுத்து வரச் சொன்னார். இரண்டு அன்னப்பட்சிகள் கொண்ட கல் நெக்லஸ். அன்னப்பட்சியின் பொருத்தமான இடங்களில் சின்ன சைஸ் வெள்ளை, சிகப்பு, பச்சைக் கற்கள் வைத்து உயிரோட்டமாய் இருந்தது. அவை காதலுடன் ஒன்றையொன்று பார்ப்பதாகவே தோன்றியது. பட்சியின் பின்புறம் நல்ல முறுக்கான செயின். அதில் முக்கால் இஞ்சு இடைவெளியில் அரை இஞ்சு விட்டமுள்ள கல் பதக்கம். பக்கத்துக்கு ஆறாய் பன்னிரண்டு கல் பதக்கங்கள். அருமையான் பெரிய சைஸ் வெள்ளைக்கல் பதக்கங்களில் பதிக்கப்படு இருந்தது.

சூழ்நிலை மறந்து அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.

“நாங்க வசதியா இருந்தப்ப, எங்க தெருவில பொண்ணு பார்க்க ஆள் வந்தாங்கண்ணா, பொண்ணு வீட்டுகாரவுங்க இந்த நெக்லஸ் வாங்கிட்டு போயி, அவங்க பொண்ணுக்கு போட்டு விடுவாங்க. ராசியானதுன்னு அப்ப பேரு. புள்ளைத் தாச்சி பொண்ணுங்கல்லாம் வளைகாப்பு அன்னைக்கு இதப் போட்டுக்கிட்டு போயித்தான் போட்டோ பிடிக்கும்க.

பின்ன பையன் ஒரு ஆட்டம் ஆடி, ஓஞ்சு போயி, காதலிச்சு, அதுல ஒரு பிரச்சினையாகி  ஏகப்பட்ட விரயம் தம்பி.

எந்தப் புண்ணியமோ தெரியலை. இப்ப நாலு வருஷமா திருந்தி தொழில் பண்ணிக்கிட்டு இருக்கான். ரெண்டு வருசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. பொண்ணு வசதியில்லாத குடும்பம், ஆனா நல்லவங்க. போன வருசம் பேரன் பொறந்தான். ஹார்ட் பிராப்ளமாம், ஒரு பைபாஸ் சர்ஜரி பண்ணனும். ரெண்டு லட்சம் அவசரமா தேவைப்படுது அதான் என்று முடித்தார்.

இப்போது எங்கு செய்தது என்ற முத்திரையைப் பார்க்க லேசாக திருப்பிப் பார்த்தேன்.

அந்த அம்மாள் வருததமான குரலில் சொல்லத் தொடங்கினார்,

“அந்தக் காலத்துல நிலக்கோட்டை ஆசாரின்னு ஒருத்தர் செஞ்சது. ரொம்ப கைராசிக்காரராம். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் கையால செஞ்சு கொடுக்கிற நகை  லட்சுமிகரமானதும்மா. இது இருக்க வரைக்கும் லட்சுமி உன்னைய விட்டு போகமாட்டா அப்படின்னு.” அதனால தான் இதை மட்டும் எந்த கஷ்டம் வந்தப்பவும் விக்காம இருந்தேன். இப்ப பேரனுக்காகத்தான் இதை வெளியவே எடுக்கிறேன் என்றார்.

நகையின் பின்புறத்தில் பதிந்திருந்த என் தாத்தாவின் முத்திரை என்னைப் பார்த்து ஏதோ சொல்வது போல் இருந்தது.

இந்த நெக்லஸ் இங்கேயே இருக்கட்டும், இது எந்தக் காலத்துக்கும் அடகுக்கோ, விக்கவோ போக வேணாம்.  நான் சாயங்காலம் ரெண்டு லட்ச ரூபா கொண்டு வந்து கடனா தர்றேன்”  கொஞ்சம் கொஞ்சமா அடச்சாப் போதும் என்று சொல்லியபடி கிளம்பிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.



August 26, 2012

சின்னதம்பி திரைப்படம் – சில நினைவுகள்


எவ்வளவோ படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு இருக்கும். மேலும் ரீப்பீட்டட் ஆடியன்ஸும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு சகலகலா வல்லவன், கரகாட்டக்காரன், பாட்ஷா, உள்ளத்தை அள்ளி தா மற்றும் கில்லி போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் இடம்பெற்ற படம்தான் சின்னதம்பி. அதுவும் இப்படம் வெளியான போது 60 ஆண்டுகால தமிழ் சினிமா வசூல் சாதனையை இது உடைத்து விட்டதாகவே பேசிக்கொண்டார்கள்.

இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தான பாரதியும் வாசுவும் அவரிடம் இருந்து வெளிவந்து, இணைந்து இயக்கிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் (பன்னீர் புஷ்பங்கள் தவிர) போக, அவர்களின் பிரிவு தவிர்க்க முடியாமல் ஆனது.

பி வாசு தனித்து இயக்கிய முதல் தமிழ்படம் என் தங்கச்சி படிச்சவ. இந்தப் படத்தின் வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சத்யா மூவிஸ் வீரப்பன், தான் ரஜினியை வைத்து அடுத்து தயாரிக்க இருந்த பணக்காரன் திரைப்படத்திற்கு வாசுவை ஒப்பந்தம் செய்தார். வாசுவின் தந்தை பீதாம்பரம் எம்ஜியாரின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் என்பது அவருக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1990ல் பணக்காரன் மட்டுமில்லாமல் வேலை கிடைச்சுடுச்சு மற்றும் நடிகன் ஆகிய படங்களை சத்யராஜை வைத்து இயக்கினார்.

வேலை கிடைச்சுடுச்சு படமே கதாநாயகனாக சத்யராஜுக்கு ஒரு திருப்புமுனைப் படம். அதற்கு முன் வந்த படங்களில் எல்லாம் அவரை முழு ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து வந்த நடிகன் படம் சத்யராஜின் மார்க்கெட்டையே உயர்த்தியது.

இந்த நிலையில் தான் பி வாசு சின்னதம்பி பட வேலைகளை ஆரம்பித்தார். அவருக்கு இப்படி ஒரு கதை எப்படி தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின் பல பத்திரிக்கைகள் ப்ரெட்டி வுமன் என்னும் ஆங்கிலப் படத்தை சுட்டுத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று பேசிக்கொண்டார்கள். படகோட்டியைப் பார்த்து டைட்டானிக் எடுக்கப்பட்டது என்பதற்கு இணையான கம்பேரிசனே இது என பின்னாளில் விளங்கியது.

சின்னதம்பி படம் ஆரம்பிக்க நினைத்த உடனேயே அவர் கால்ஷீட் கேட்டது சத்யராஜிடமும், கௌதமியிடமும். சத்யராஜ் கதையைக்கேட்டு இதுக்கு நான் சரிப்பட மாட்டேன். பிரபு செட்டாவார் என்று சொன்னாராம் (இது ஜூனியர் விகடன் பாணி சொன்னாராம் இல்லை. பி வாசுவே ஒரு பேட்டியில் சொன்னது).
சத்யராஜ் தன்னை நன்றாகவே எடை போட்டுத்தான் வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் அவர் அழகேசன் படத்தில் அறியாதவன் வேஷம் போட்டதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களை சினிமா உலகம் அறியும்.

ஆமாம். கவுண்டமணிக்கு ஜென் துறவி வேஷம் கொடுத்தால் கூட அதில் ஒரு வில்லங்க மனிதர் தெரிவார். செந்திலுக்கு மாபியா லீடர் வேடம் கொடுத்தாலும் மஞ்ச மாக்கான் தான் நம் கண்ணுக்கு தெரிவார். அதுபோலத்தான் சத்யராஜும்.

கௌதமிக்கு கால்சீட் பிரச்சனையோ என்னவோ? தெரியவில்லை. குஷ்புவுக்கு அந்த வேடம் வந்தது. முதலில் வாசு இரு மனநிலையில் இருந்தாராம். ஏனென்றால் அதற்கு முன் தான் மைடியர் மார்த்தாண்டன் திரைப்படம் வெளிவந்திருந்தது. ரோமன் ஹாலிடே பட கதையை தட்டி உல்டா செய்திருந்த அந்தப் படத்தில் பிரபு விவரம் தெரியா ராஜகுமாரனாகவும், குஷ்பு நவ நாகரீக மங்கையாகவும் நடித்திருந்தார்கள். மேலும் குஷ்பு கவர்ச்சியின் எல்லையை அந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் தொட்டிருந்தார். பின் ஒரு வழியாக சமாதானமாகி பிரபு-குஷ்பு-கவுண்டமணி-மனோரமா-ராதாரவி என படையுடன் அவுட்டோருக்கு கிளம்பினார்.

அப்போது மூன்று முக்கியமான சினிமா பத்திரிக்கைகள் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ், பிலிமாலயா மற்றும் வண்ணத்திரை. இதில் பிலிமாலயாவும், வண்ணத்திரையும் கிளிவேஜ் தெரியும் படங்களைத்தான் அட்டைப்படமாகப் போட வேண்டும் என்ற கொள்கையில் இயங்கி வந்ததால் அவை பேட் புக்ஸ் கேட்டகிரியில் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ் மட்டும் ஓரிரு வண்ணப்பக்கங்களுடன் வெளிவரும். அதில் சின்னதம்பி பட அவுட்டோரை கவர் செய்திருந்தார்கள். குஷ்புவின் கன்னங்களில் சந்தனம் தடவி மொக்கையான ஸ்டில்களுடன் அது வெளிவந்தது. படம் பார்க்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பையும் தூண்டாத ஆவரேஜ் கவரேஜ்.

ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் பற்றி பரபரப்பு செய்திகள் வந்து கொண்டிருந்தன. 91 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு படங்களும் ரிலீஸ். அப்போது மதுரையின் முக்கிய தியேட்டரான நடனாவில் கேப்டன் பிரபாகரன் ரிலீஸ். சின்னதம்பி சக்தி தியேட்டரிலும் அப்போது அவுட்டரில் இருந்த பத்மா என்னும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆனது. மதுரை ராமநாதபுரம் வினியோக ஏரியா முழுவதும் ஆவரேஜ் தியேட்டர்களிலேயே சின்னதம்பி ரிலீஸானது.

போஸ்டர் டிசைனும் குப்பையாக இருந்தது. ஒரு உருட்டுக்கட்டையோடு பிரபு நிற்க, ஓரத்தில் குஷ்பூ, கவுண்டமணியின் தலையளவு புகைப்படம் மட்டும். என் நண்பர்களுடன் சேர்ந்து கேப்டன் பிரபாகரனை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு ஊர் திரும்பியாகிவிட்டது.

ஒரு வாரம் இருக்கும். சின்னதம்பி படம் நல்லாயிருக்குடா . என்றான் ஒரு நண்பன். அவன் அக்காவை தேனியில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அங்கு சென்ற போது அங்கே சுந்தரம் தியேட்டரில் பார்த்திருக்கிறான்.

“படம் முடிஞ்சு வெளியே வர்றோம்டா, தெருவில இருக்குற கடை, வீடு எல்லாமே அந்தப் பட பாட்டுத்தாண்டா என்று சிலாகித்தான். (அங்கு அந்தப் படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது). நாங்கள் உடனே அந்தப் படம் பார்க்க கிளம்பினோம். அருகில் இருந்த திண்டுக்கல்லில் படம் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே அடுத்த நாள் மதுரைக்கே வண்டி ஏறினோம். சக்தி தியேட்டர் இருப்பதே ஒரு  பிஸியான வணிகத் தெரு. இந்தப் பட கூட்டமும் சேர்ந்து கொள்ள தெருவே திணறியது. பின் பத்மா திரையரங்குக்கு போனோம் (இப்போது இது மதுரையில் ரிலையன்ஸ் பிரெஷ் கடையாக மாறிவிட்டது).

இப்படி ஒரு கூட்டத்தை அந்த தியேட்டர் அதற்கு முன்னும் கண்டதில்லை. பின்னரும் கண்டதில்லை. அருகில் இருந்த டீக்கடையில் அந்த வாரம் மட்டும் தினமும் 400 லிட்டர் பால் எடை கட்டி அடித்ததாக கடைக்காரர் நண்பரிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.  

படம் பார்த்தாகி விட்டது. எந்த அம்சம் கவர்ந்தது எனத் தெரியவில்லை. இளையராஜாவின் இசையா, குஷ்புவின் இளமையா, கவுண்டமணியின் காமெடியா என பிரித்தறியத் தெரியவில்லை. ஆனால் படத்தை மட்டும் பல தடவை பார்த்தாகி விட்டது. திண்டுக்கல் சோலைஹால், பெரியகுளம் அருள், விருதுநகர்- செண்ட்ரல்,வத்தலக்குண்டு பரிமளம் என அப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அட்டெண்டென்ஸ் போட்டாகி விட்டது. அப்போதைய கால கட்டத்திற்கு நல்ல ஆக்‌ஷன் படமான கேப்டன் பிரபாகரனையே கான்ஸ்டபிள் ஆக்கியது இந்தப் படம்.

இன்னும் கூட எனக்கு ஏன் இந்தப் படத்தை இத்தனை முறை பார்த்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை. பத்திரிக்கைகளில் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் இல்லை. தீப்பொறி ஆறுமுகம் கூட இந்தப் படத்தை வைத்துத்தான் சிவாஜி குடும்பத்தை நக்கலடிப்பார்.

“அவங்கப்பா ஏன் பிறந்தாய் மகனே? ந்னு பாட்டுப் பாடுவார். மகனுக்கு தாலி தெரியல. என லாஜிக் இல்லா மேஜிக்காய் அடித்து விடுவார்.

முன்னர் குறிப்பிட்ட மற்றும் பெரும்பாலான வசூல் சாதனை படங்களையெல்லாம் பார்த்தால் அவற்றின் மேஜிக் சில ஆண்டுகளுக்காவது நிலைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தின் மேஜிக் ஆறு மாதங்களுக்குள் காலாவதியாகி விட்டது. ஒரு படத்தின் வெற்றியை ரீ ரிலிஸ் மற்றும் திருவிழா காலங்களில் உபயதாரர் மூலம் திரையிடல் போன்றவற்றின் வழியாக கணக்கிடலாம். ஆனால் இந்தப் படம் அந்த ஆறுமாதத்துக்குப் பின் அவுட் டேட்டட் ஆகி விட்டது.

அப்படியென்றால் எந்த அம்சம் இந்தப் படத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்க்கும் படி தூண்டியது? இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு மாதம்  முன் என் ராசாவின் மனசிலே படம் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. உடன் வெளியான கேப்டன் பிரபாகரனும் நல்ல படம்.

ஒருவேளை தமிழ் ஆண்களுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் கொப்பும் குலையுமான பெண்ணைக் கைபிடிக்க வேண்டும் என்ற ஆழ் மன ஆசை காரணமாக இருக்குமா?    

எது எப்படியோ? இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

August 18, 2012

2004 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி



விருமாண்டி

கமல் ஹேராமுக்கு அப்புறம் இயக்கிய இரண்டாவது படம். கமலுக்கு இயக்குநராக வசூல் ரீதியில் வெற்றியைக் கொடுத்த முதல் தமிழ் படம். தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கும் என்று செய்திகள் அடிபடும் சூழலில், தன் கிணற்றில் இருக்கும் வற்றாத தண்ணீருக்காக ஒரு வெள்ளந்தி இளைஞன் சந்திக்கும் சூழ்ச்சிகளும், பிரச்சினைகளும் தான் கதை. தூக்குதண்டனைக்கு எதிரான கருத்துகளும் படத்தில் முன்வைக்கப்பட்டன.

சத்யராஜ் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியது. ஆனால் அவர் மறுத்து விடவே அந்தக் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்தார். பசுபதி, சண்முகராஜ் ஆகியோருடன் நாசர், ரோகிணி ஆகிய ராஜ்கமல் கம்பெனி கலைஞர்களும் நடித்திருந்தார்கள். பசுபதி அனைவரையும் கவர்ந்தார் என்றாலும் சண்முகராஜ் சர்பிரைஸ் பேக்கேஜ்.

கமல் நாயகி அபிராமியிடம் பேசும் சில வசனங்கள் பஞ்ச் டயலாக்குகளாக இப்போது மாறிவிட்டன.

மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

ஒருவன் தான் சந்தோஷமா இருக்குறத அந்தக் காலகட்டத்துல உணர்றதில்ல.

ட்ரைலாஜி வரிசையில் தேவர்மகன், விருமாண்டிக்கு அப்புறம் அடுத்த படம் என்னவாயிருக்கும்?

ஆயுத எழுத்து
மணிரத்னம் தமிழ்  ஆடியன்சுக்கு மட்டும் படம் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் படங்கள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் எப்போது நேஷனல் ஆடியன்ஸ்ஸை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தாரோ அன்றுடன் அது குறைந்துவிட்டது. அதன்பின் அலைபாயுதே மட்டும் தான் தப்பித்தது. ஆயுத எழுத்துக்கும் அதே கதிதான். கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்துடன் (ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?) எடுக்கப்பட்ட படம். சூர்யாவின் அம்மா,ஈஷா தியோல் ஆகியோர் படத்துடன் ஒன்றவிடாமல் தடுத்தனர். பாரதிராஜாவுக்கு கெட்ட அரசியல்வாதி (என்னைய்யா ஒரு பொருட் பன்மொழி என்றெல்லாம் கேட்கப்படாது) வேடம். சித்தார்த், அவரின் அப்பா ஆகியோர் மணிரத்னம் படத்தில் வழக்கமாக வரும் கதாபாத்திரங்கள். மூன்று மணி நேரம் என்பது எவ்வளவு நேரம் என்பதை உணரவைத்த படம்.

கண்களால் கைது செய்

பட்டைச் சாரயம் போரடிக்கும் போது பாரின் ஸ்காட்சுக்கு போவது போல கிராமப் படங்கள் போரடிக்கும் போது திரில்லர் பக்கம் எட்டிப் பார்ப்பார் பாரதி ராஜா. சிகப்பு ரோஜாக்கள், டிக் டி டிக் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் கேப்டன் மகள் படு தோல்வி. மீண்டும் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கினார். கிளப்டோமேனியா இருக்கும் நாயகன் ஒரு கண்காட்சியில் இருக்கும் வைரத்தை சுட்டுவிட, சேல்ஸ் கேர்ள் மீது சந்தேகம் எழுகிறது. அப்பெண்ணின் காதலனான போலிஸ் அதிகாரி அப்பெண்ணையே தூண்டிலாக வைத்து அவனைப் பிடிக்க நினைக்கிறார். பின்னர்தான் நாயகனுக்கு மனச்சிதைவும் இருப்பது தெரிய வருகிறது. சுஜாதா வசனம், ரஹ்மான் இசை என பல அயிட்டங்கள் இருந்தும் படம் மக்களை கவரவில்லை.

எதிரி

கே எஸ் ரவிகுமார் இயக்கி மாதவன் நடிப்பில் வெளியான படம். விவேக் காமெடி, சதா, பூமிகா, டெல்லிகணேஷ் நல்ல விகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர்.

கோவில், அருள்

சாமி வெற்றிக்குப் பின் வந்த இந்த இரண்டு ஹரி படங்களும் ஆவரேஜ்தான்.

ஏய்

வடிவேலுவின் காமெடியும், நமீதாவின் கவர்ச்சியும் இந்த சரத்குமார் படத்தை காப்பாற்றியது. இயக்குநர் வெங்கடேஷ்க்கு இந்தப் படமும், இதே ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான குத்து படமும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.

மகா நடிகன்

நமீதாவாலும் லொல்லு சபா டைப் காமெடியாலும் காப்பாற்றப்பட்ட சத்யராஜ் படம். சக்தி சிதம்பரம் இயக்கம். இந்த ஆண்டில் சேட்டை, செம ரகளை, ஜோர், அடிதடி என பல காமெடிப் படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ்.

கிரி
வடிவேலுவால் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட இன்னொரு படம். சுந்தர் சி இயக்கம், அர்ஜூன் சண்டை, ரீமா சென் மற்றும் குத்து ரம்யா கவர்ச்சி, பிரகாஷ் ராஜ், தேவயானி நடிப்பு என குஷ்பு தயாரிப்பில் ஒரு அக்மார்க் மசாலா படம். சிங்கம் சிங்கிளாத்தன் வரும் என்ற பஞ்ச் டயலாக் முதன் முதலில் பேசப்பட்ட படம்.

அரசாட்சி
தமிழுக்கு வந்த உலக அழகிகள் வரிசையில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று லாரா தத்தாவை கூட்டி வந்து மகராஜன் இயக்கிய படம். அர்ஜூன், நாசர், பி வாசு, மன்சூர் அலிகான் என தேவையான நடிகர்கள், எஸ் வி சேகர், விவேக் காமெடி இருந்தும் படம் கவரவில்லை. தப்புச் செய்ய்றவனுக்கு வாதாடும் வக்கீலை போட்டுத்தள்ளினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று ஷங்கர் தனமான தீர்வைச் சொன்ன படம்.

அட்டகாசம்

சில மன வருத்தங்களுக்குப் பின் அஜீத் சரண் இணைந்த படம். அஜீத்துக்கு இரட்டை வேடம். அஜீத்துக்கு கொஞ்சம் இமேஜ் பில்ட் அப் செய்ய மட்டும் உதவியது. ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்த ஜனா படமும் இந்த ஆண்டு வெளியாகி ஜண்டு பாம் விறபனையை அதிகரித்தது. நியாயப் படி இந்தப் படத்தை ரீமேக் (பாட்ஷா) லிஸ்டில் தான் சேர்த்திருக்க வேண்டும்.

சுள்ளான்

திருமலை வெற்றிக்குப்பின் இயக்குநர் ரமணா இயக்கிய படம். தனுஷ் நாயகன். எறும்பின் தலையில் இமயமலை. புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் இந்தப் படமும் தனுஷின் ஆரம்பகால வெற்றிப் பயணத்தின் தடைக்கற்கள்.

மதுர

கில்லியின் வெற்றிக்குப் பின் வந்த விஜயின் படம். ஷங்கரின் இணை இயக்குநர் மாதேஷ் இயக்கிய படம். தம் ரக்‌ஷிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ என நாயகிகள், வடிவேலு நகைச்சுவை, பசுபதி வில்லத்தனம் என அம்சங்கள். விமர்சகர்கள் கிழித்தாலும் தயாரிப்பாளர் டவுசர் கிழியவில்லை.

வானம் வசப்படும்

பி சி ஸ்ரீராம் இயக்கம். படமும், வந்த நேரமும் சரியில்லை. பார்க்க போனவர்களுக்கும் தான்.

ஜெய்
முதலில் மாதேஷ் இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகிக் கொள்ள நாராயணன் என்பவர் இயக்கிய பிரசாந்த் படம். அந்த ஆண்டு வெளியான பாட்டம் பத்தில் இதற்கு நிச்சய இடம் உண்டு.

இந்த ஆண்டில் வடிவேலு தான் காமெடியில் டாப். ஏய், சத்ரபதி, அருள், கோவில், கிரி, எங்கள் அண்ணா, ஜோர், மதுர என கொடிகட்டிப் பறந்தார்.

விவேக்கும் தன் பங்குக்கு செல்லமே, எம் குமரன் சன் ஆப் மகா லட்சுமி, எதிரி, அரசாட்சி என கலக்கினார்.

நீங்கள் இன்று சிரிப்பொலி அல்லது ஆதித்யா பாருங்கள். மேற்கூறிய படங்களில் இருந்து நிச்சயம் கிளிப்பிங்ஸ் இருக்கும்.

தமிழர்களின் கனவை   இந்த ஆண்டில் அதிகம் ஆக்ரமித்தது நமீதா தான். ஏய், மகா நடிகன், எங்கள் அண்ணா படங்களில் சித்தப்பூ நடிகர்களுக்கு துணையாக வந்தார்.

இந்த ஆண்டில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரிச்சர்ட் மதுரம் நடித்த காமராஜர் படம் வெளியானது.