December 28, 2016

பாண்டியராஜன்

1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார்.

அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி.
இயக்குநர் பாண்டியராஜன்.

இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும் அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.

அதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும் வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும் ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது, தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.

கோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.

எனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள் என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை.

இடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில் எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில் ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு, அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள். நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம் படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள்.

இதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக் கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன் இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும், பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.

வாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.

நெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர் குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான் இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை இயக்கினார்.

ஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10 படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர் என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பார்.

பாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது. கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள் இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல் அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார். சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும் புதிய முயற்சியில் இறங்கவில்லை.

இயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில் இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம், நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும் போது நடித்தவர்கள்.
பாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும் நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும் தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.

இப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும் என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால் பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர். இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர் கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல் அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல் இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.

இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும் நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு. அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும் எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.

நடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை.

பாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ, உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள் வந்துவிட்டார்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில் அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார்.
இயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.

November 29, 2016

சிந்தாமணி தியேட்டர்



எம் கே தியாகராஜர்-பி.யூ சின்னப்பா காலம் தொடங்கி, எம்ஜியார்-சிவாஜி கணேசன், ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜீத்-விஜய் காலம் வரை அவர்களின் முக்கிய படங்களையும், அந்தந்த காலத்தின் சூப்பர் ஹிட் படங்களையும் தொடர்ந்து திரையிட்ட தியேட்டர்கள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும். அவற்றில் உடனடியாக நினைவுக்கு வருவது   தியேட்டர் மதுரைசிந்தாமணியாகத்தான் இருக்கும். தமிழகத்தின் வேறு எந்த தியேட்டரும் இந்த நான்கு காலகட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கியதாகத் தெரியவில்லை.  எம் கே தியாகராஜா பாகவதர் காலகட்டத்தில் துவங்கப்பட்ட பல தியேட்டர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் காலம் வரையே இயங்கின. எம்ஜியார் காலத்தில் கட்டப்பட்ட பல திரையரங்குகள் மட்டும் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிந்தாமணி தியேட்டர் கட்ட காரணமாய் இருந்த சிடிசினிமா தியேட்டரும் ரஜினி-கமல் காலம் வரையே இயங்கியது. சிடிசினிமா திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தால் கிடைத்த லாபத்தில் தான் எம்.எம்.ஆர் கிருஷ்ண மூர்த்தியால்  இந்த திரையரங்கம் கட்டப்பட்டது.

இந்தத் திரையரங்கில் பின்புறம் சாயமுடியாத வகையிலான பெஞ்ச், பேக் பெஞ்ச் ஆகியவை தரைத்தளத்தில் இருக்கும். இதில் அனைவரும் சேர்ந்து அமரும்படியாகத்தான் இருக்கும். ஆண், பெண் தனித்தனியே அமரும் படி நடுவே தடுப்பு அமைத்திருப்பார்கள். இந்த பெஞ்சுகள் முழுவதும் தேக்கில் செய்யப்பட்டவை. முதல் மாடியில் மக்கள் தனித்தனியாக  அமரும்படி சோபா அமைக்கப்பட்டிருக்கும். 1000 பேர் அமரக்கூடிய திரையரங்கம் என்றாலும் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகும் போது மக்கள் நெருக்கி அடித்து உட்கார்ந்து 1200 பேர் வரை கூட பார்ப்பார்கள். பெண்களுக்கான டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் தியேட்டரின் உள்புறத்தில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும். ஆண்கள் பகுதியில் அதற்கு பதிலாக சைக்கிள் நிறுத்துவதற்கான இடமாக அது இருக்கும். ஆண்கள் டிக்கெட் கவுண்டர் தியேட்டரின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.  

சிந்தாமணி தியேட்டர் அமைந்திருப்பது மதுரையின் பெரும்பாலான பேருந்துகள் செல்லும் முக்கிய சாலையில்.  மதுரை பின்கோடு 1ல் அமைந்திருந்த தியேட்டர் அது. எல்லா பேருந்துகளும் நிற்கும் முக்கியமான நிறுத்தம் வேறு. எனவே டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும் போது அந்தப் பகுதியே கூட்டத்தால் திணறும். எம்ஜியார்,சிவாஜி,ரஜினி,கமல் ஆகியோரது படங்கள் வெளியாகும் நேரத்திலும், திருவிழா நாட்களிலும் போலிஸ் துணையில்லாமல் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவே முடியாது

இந்தத் திரையரங்கில் ஏராளமான எம்ஜியார் படங்கள் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளன. மன்னாதி மன்னன், அரசிளங்குமரி, அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரகசிய போலிஸ் 115, அன்பே வா போன்ற ஏராளமான படங்கள் எம்ஜியாருக்கு என்றால் சிவாஜி கணேசனுக்கு காத்தவராயன், தங்கப் பதக்கம், திரிசூலம் போன்ற மெகா பிளாக் பஸ்டர் படங்கள். திரிசூலம் சிந்தாமணியில் ஓடிய ஓட்டத்தில் வந்த லாபத்தில் அவர்கள் திரிசூலம் என்னும் பெயரில் இன்னொரு தியேட்டரே கட்டி இருக்கலாம் என்பார்கள். கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா முதல் ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம், விருமாண்டி வரை படங்கள் அங்கே வந்துள்ளன. மின்னலே, தூள், ரன்,பாய்ஸ், கஜினி,போக்கிரி வரை புதிய படங்கள் அங்கே திரையிடப் பட்டுள்ளன.

சிந்தாமணி தியேட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் இம்மாதிரி மாஸ் ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்லாமல் அந்தக் கால சாரதாவில் தொடங்கி ஒரு தலை ராகம், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, வைகாசி பொறந்தாச்சு போன்ற எல்லாத் தரப்பு மக்களும் சென்று பார்க்கும் படங்களும் அங்கே பெருமளவு வந்திருக்கின்றன. சிந்தாமணி தியேட்டருக்கு 1990களின் ஆரம்பக் கட்டம் வரை பெண் பார்வையாளர்கள் மாலை மற்றும் இரவு காட்சிக்கு அதிக அளவில் வருவார்கள். மதுரையின் சிறப்புகளாகச் சொல்லப்படும் ரோட்டோர இட்லிக் கடைகள் மற்றும் பூக்கடைகளுக்கு மாவு அரைத்து கொடுக்கும் மற்றும் பூ கட்டிக் கொடுக்கும் பெண்கள் அந்தப் பகுதியில் ஏராளம். அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு மாலை அல்லது இரவு காட்சிக்கு வந்து விடுவார்கள். எல்லோரும் பார்க்கும் வகையில் 80களின் இறுதிவரை பெஞ்சு ரூ 1.10, பேக் பெஞ்சு ரூ 2,20 மற்றும் பால்கனி ரூ 3.00 என்னும் வகையிலேயே டிக்கெட் விலை இருந்தது. எனவே அவர்கள் தினமும் சம்பாரிக்கும் காசில் தாராளமாக 1.10 டிக்கெட்டில் படம் பார்க்கலாம். பிடித்துப் போய்விட்டால் நான்கைந்து முறை கூடப் பார்ப்பார்கள். வேறு பொழுது போக்குகள் இல்லாத காலகட்டம் வேறு.
சிந்தாமணி தியேட்டருக்கு எதிரே நின்றோமானால் இடப்பக்கம் மொத்த ஜவுளி வியாபாரம் களைகட்டும் விளக்குத்தூண் பகுதி, வலப்பக்கம் நெல்பேட்டை எனப்படும் நெல் போன்ற விவசாயப் பொருட்கள் கொள்முதல் பகுதி மற்றும் விவசாய இடுபொருட்கள், உரம், பூச்சி மருந்து விற்கும் கடைகள். தியேட்டருக்கு எதிரே சற்றுத்தள்ளி காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகள். எனவே மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வணிகம் புரிய வருபவர்கள் எல்லோரும் தங்கள் பணி முடிந்த உடன் காலைக் காட்சியோ, மதியக் காட்சியோ பார்த்து விட்டுச் செல்வார்கள்.  இதனால் இப்பகுதியில் ரிக்ஷாக்காரர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அதிகம். அவர்கள் மாலை மற்றும் இரவுக்காட்சிக்கு வந்து விடுவார்கள்.

தியேட்டர் ஆரம்பித்த காலத்தில் இருந்து 1970கள் வரை சிந்தாமணி, செல்வந்தர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் படம் பார்க்கும் உயர் வர்க்க தியேட்டராக இருந்தது.  நாளடைவில் புதிய தியேட்டர்கள் வருகைக்குப் பின்னர் நடுத்தர வர்க்கத்துக்கான தியேட்டராக மாறியது. நெரிசல் மிகுந்த அந்த ஏரியாவில் கார், பைக் நிறுத்துவதற்கான வசதிக் குறைபாடு ஒரு காரணமாக இருந்தது. மேலும் ரோட்டில் வெயிலில் நின்று டிக்கெட் எடுப்பது போன்ற அமைப்பும் அவர்களை சங்கடப்படுத்தியது

சிந்தாமணி தியேட்டர் லண்டன் ஒடியன் தியேட்டர் அமைப்பில் கட்டப்பட்டது என்று சொல்வார்கள். ஏராளமான திரையரங்கங்கள் பின்னாளில் இம்மாதிரியான கட்டமைப்பில் கட்டப்பட்டது. இம்மாதிரியான கட்டமைப்பில் பால்கனி பகுதியில் கழிவறைப் பகுதி மிக குறுகியதாக இருக்கும். பின்னர் பாக்ஸ், பால்கனி என்ற அமைப்பில் 70களுக்குப் பின்னர் திரையரங்குகள் கட்டப்பட்டன. இந்த அமைப்பில் கழிவறை வசதி ஓரளவு விசாலமாக இருக்கும். இம்மாதிரியான தியேட்டர்களுக்கே செல்வந்தர்கள், கல்லூரி மாணவர்கள் செல்லத் துவங்கினர். மாப்பிள்ளை விநாயகர், சினிபிரியா, அம்பிகா,நடனா ஆகியவை மக்களை இழுக்கத் தொடங்கின.
90களில் ரூ 6.50, ரூ 9.00 என்ற அளவில் டிக்கெட் விலை இருந்தது. ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட நிர்வாகத்தினர் வசதிகளை சற்று மேம்படுத்தினார்கள். மின்னலே, தூள் என இளைஞர்களை கவர்ந்திழுக்கும் படங்கள் 2000ல் இருந்து தொடர்ந்து வெளியாகத் துவங்கின. ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல ஒலி அமைப்புடன் விளங்கிய திரையரங்கம் சிந்தாமணி. 2000 வாக்கில் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார்கள். அப்போது டிக்கெட் விலை ரூ 20 மற்றும் 30 என இருந்தது. மற்ற தியேட்டர்களில் சரியாக கேட்காத லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட விருமாண்டி படத்தின் சில ஒலிகள்    இங்கே துல்லியமாக கேட்டது. பின்னர் பாய்ஸ், கஜினி, போக்கிரி ஆகிய படங்கள் திரையிடப்பட்டு 2008 வரை இயங்கியது. பின்னர் ஒரு பிரபல துணிக்கடையால் வாங்கப்பட்டு குடோனாக உபயோகப் படுத்தப்பட்டது. இப்போது ஏதோ ஒரு கட்டுமானத்திற்காக இடிக்கப்பட்டு வருகிறது.

சிந்தாமணி தியேட்டரின் முதல் சரிவு 90களில் துவங்கியது எனலாம். அத் திரையரங்கிற்கு வரும் பெண்களின் முதல் பொழுது போக்கு சாதனமாக தொலைக்காட்சி மாறியது. போக்குவரத்து வசதிகள் அதிகமானதால் சுற்றுப் பட்டு ஊர்களில் இருந்து வரும் மக்கள் வேலை முடிந்ததும் உடனடியாக திரும்பத் தொடங்கினார்கள். மேலும் நடுத்தர வர்க்கத்தின் சுய மரியாதையும் கூடியது. வெயிலில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கத் தயங்கினார்கள். கைகளில் குச்சியோடு, திட்டி அவ்வப்போது அடித்து கூட வரிசையை ஒழுங்கு படுத்தும் பணியாளர்கள் அவர்கள் ஈகோவை காயப்படுத்தினார்கள். 600 ரூபா சம்பளம் வாங்குகிறவரிடம் நாம் திட்டும் அடியும் வாங்குவதா என்ற எண்ணம் வந்தது. குடும்பத்தோடு வரும் பொழுது மரியாதை இல்லாமல் வா, போ எனப் பேசும் பணியாளர்கள் அவர்களை கோபப்படுத்தினார்கள். எந்த குடும்பத்தலைவன் தான் தன் மனைவி முன்பும் குழந்தைகள் முன்பும் அவமானப்பட விரும்புவான்? 80கள் வரை மத்திய தர வர்க்க வீடுகளில் மின் விசிறி, கழிவறை வசதிகள் முன்னே பின்னே தான் இருக்கும். ஆனால் 90களில் இருக்கை வசதி, மின் விசிறி வசதி, நல்ல கழிப்பறை ஆகியவை  பெரும்பாலான வீடுகளுக்கு வந்தன. நம் வீட்டில் இருக்கும் வசதி கூட இங்கில்லையே என்ற எண்ணம் பெரும்பாலோனோருக்கு தோன்றியது. இதனால் டிவியில் பார்ப்போம், குறுந்தகடில் பார்ப்போம் என்ற எண்ணம் வந்தது

இந்த நிலை சிந்தாமணியை மற்றும் குறித்தல்ல. பெரும்பாலான திரையரங்குகள் இந்நிலையைச் சந்தித்தன. எனவே தங்கள் வசதியை மேம்படுத்த தொடங்கின. அவ்வாறு மேம்படுத்தப்படா திரையரங்குகள் வணிக வளாகங்கள் ஆகின. சிந்தாமணி இந்த நிலையை கடந்து சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி 2008 வரை இயங்கியது. ஆனால் அது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால் வெகுவாக மேம்படுத்த முடியவில்லை. அதற்கு ஆகும் செலவை திருப்பி எடுக்க முடியுமா என்ற நிலை வேறு

இப்பொழுது ஒரு விழா நாளில் இரண்டு மூன்று திரைப்படங்கள் வந்தால், சினிமா மீது ஆர்வமிருப்பவரோ அல்லது இளைஞர்களோ தான் எல்லாப் படங்களையும் பார்க்க முடிகிறது. குடும்பஸ்தர்கள் ஒரு படத்தைத்தான் பார்க்க முடிகிறது. ஏன் என்றால் நான்கு பேர் கொண்ட குடும்பம் திரையரங்கிற்குச் சென்றால் டிக்கெட் கட்டணம், போக்குவரத்து, சிற்றுண்டி என 1000 ரூபாய் ஆகிவிடுகிறது. மதுரையில் 20 சதவிகித்தினர் 15,000க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களே. 60 சதவிகிதம் 15,000ல் இருந்து 25,000 வரை சம்பாதிப்பவர்கள். எனவே இவர்களால் ஏதாவது ஒரு திரைப்படத்தை மட்டுமே மாதமொருமுறையோ அல்லது காலாண்டுக்கொருமுறையோ பார்க்க முடிகிறது

முன்னர் எல்லாம் ஹிட், ஆவரேஜ், தோல்வி என படத்தின் ரிசல்ட் மூன்று வகையில் இருக்கும். இப்போது ஹிட் அல்லது தோல்விதான். ஏனென்றால் 80 சதவிகிதம் பேர் வருபவற்றில் ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் பார்த்துவிட்டு மற்றொன்றை ஓரளவு நன்றாக இருந்தாலும் சாய்ஸில் விட்டு விடுகிறார்கள்.   எனவே திரையுலகத்தினரும் கமர்சியல் படங்களை எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். புது முயற்சிகளை மிகக் குறைந்த முதலீட்டில் மட்டுமே செய்கிறார்கள். எனவே ஓரளவு நல்ல பட்ஜெட்டில் பரீட்சார்த்த ரீதியிலான படங்கள் எடுப்பது மிகக்குறைந்து வருகிறது.

சிந்தாமணி போன்ற திரையரங்குகள் மூன்று வகுப்புகளையும், சில திரையரங்குகள் நான்கு வகுப்புகள் வரையும் வைத்திருந்தன. எனவே பொருளாதார வசதிக்கேற்ப நாம் தேர்வு செய்யும் வசதி இருந்தது. இப்பொழுது 120 ரூபாய் டிக்கெட் மட்டுமே கொடுக்கிறார்கள். அரசாங்க கொள்கையின் படி குறைந்த விலையில் கொடுக்க வேண்டிய  10 சதவிகித டிக்கெட்டுகளை கொடுப்பதேயில்லை. எனவே ரிப்பீட் ஆடியன்ஸ் என்ற கருத்தாக்கமும் குறைந்து கொண்டே வருகிறது

நியாயமான கட்டணத்தோடு, அடிப்படை வசதிகளுடன் திரையரங்குகள் இயங்கினால் பார்வையாளர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். பன்முகத்தன்மையிலும் திரைப்படங்கள் வெளிவரும். இல்லையென்றால் வணிக வளாகம் ஆகும் நிலை வரும் என்பதே சிந்தாமணி திரையரங்கம் நமக்குச் சொல்லும் செய்தி.

November 28, 2016

திங்கள் கிழமை

தோல்வி அடைந்தவனின் ஞாயிற்றுக்கிழமை தான்
எவ்வளவு மோசமானதாய் இருக்கிறது?

குழந்தைகளின் பழுப்பேறிய சீருடைகளைத் துவைக்கும் போது அடுத்த மாதமாவது புது சீருடைகள் வாங்கித்தரவேண்டும் என வருந்த வைக்கிறது.

பக்கத்து வீட்டு கறிக்குழம்பு வாசனை வராமல் சாளரத்தை அடைக்க வைக்கிறது.

நீண்ட நேரம் மணி ஒலிப்பதாய் தோன்றும் ஐஸ்கிரீம் வண்டி விரைவாக கடந்து விடவேண்டுமே என பதற வைக்கிறது.

மாலை வேளைகளில் பக்கத்து வீட்டு குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பதை சகிக்க வேண்டியிருக்கிறது.

எந்தப் புள்ளியில் இணையுடன் சண்டை துவங்குமோ என பதைபதைப்புடன் இந்த நாள் விரைவாய் கடந்து விடாதா என எண்ண வைக்கிறது.

சாக்கு சொல்ல முடியாமல் விசேஷங்களில் கலந்து கொண்டு அவமானப் படவேண்டி இருக்கிறது.

இந்த வாரமும் நோயுற்ற பெற்றோரைச் சென்று சந்திக்க முடியவில்லையே என வேதனைப் பட வைக்கிறது.

இத்தனை பிரச்சனைகளையும் மறக்க வைத்துவிடும் திங்கள் கிழமையே போற்றி போற்றி

November 17, 2016

சதுரம்

மூன்று உலகங்களில் இரண்டாவது உலகமான பொருள் உலகத்தில் அன்று குறை தீர்ப்பு நாள். மூவுலகத்தின் தலைமை அதிகாரி அன்று குறை கேட்க வந்திருந்தார். அவ்வளவு சாதாரணமாக எல்லாம் அவரை உலகின் குடிமக்கள் சந்தித்து விட முடியாது. அவரவர் உலகின் தலைமை அதிகாரியின் ஒப்புதல் வேண்டும். இரண்டாவது உலகமான பொருள் உலகிலும் சரி, மூன்றாம் உலகமான ஆற்றல் உலகிலும் சரி தலைமை அதிகாரிகள் சில கட்ட ஆற்றுப்படுத்தலுக்கு பின்பு அனுமதி வழங்கி விடுவார்கள். முதல் உலகமான அறிவுலகில், நாமே பிறருக்கு குறை தீர்க்க வேண்டியவர்கள், நாம் குறை தீர்க்க இன்னொருவரிடம் போவதா என அந்த தலைமை அதிகாரி மறுத்து விடுவார்.

பொருள் உலகில் இருந்த வடிவங்கள் நாட்டைச் சேர்ந்த சதுரத்திற்குத்தான் பெரும் மனக்குறை. இரு பரிமாண வடிவங்களில் சிறந்த வடிவமாக வட்டத்தைச் சொல்லி, இந்த மூவுலகங்களின் பயனாளி உலகமான பூமியில் எல்லோரும் உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். நானும் செவ்வகமும் இரண்டாம் நிலையில் இருந்தோம். ஆனால் இப்போது பூமியில் செவ்வகத்தையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள், என்னை மதிப்பாரில்லை என.

முதலில் சக வடிவமான முக்கோணத்திடம் புலம்ப ஆரம்பித்தது. இங்கிருந்து அந்த பூமியைப் பார். நீக்கமற செவ்வகமே நிறைந்திருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகபட்சம் காட்சியாகப் பார்ப்பது எல்லாமே செவ்வகமாகவே இருக்கிறது. கையில் இருக்கும் அலைபேசி, வேலை செய்ய உபயோகிக்கும் கணித்திரை, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சி, திரையரங்கத் திரை என எல்லாமே செவ்வகம் தான்.

வீட்டின் கதவு, சாளரம், உபயோகிக்கும் மேஜை, படுக்கும் கட்டில், வாகனங்கள் என நீக்கமற செவ்வகமே ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

விளையாட்டு மைதானங்களைப் பார்த்தாலும் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், கூடைப்பந்து என எல்லாமே செவ்வகங்கள் தான். செஸ் விளையாட்டில் மட்டும்தான் என் உபயோகம். அதை இம்மாதிரி ஆரவாரத்துடன் யார் பார்க்கிறார்கள் என்றது.

ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து போடும் தொட்டில் முதல், இறுதியில் அவன் உறங்கும் கல்லறை வரை செவ்வகம் தான். விளம்பரப் பலகைகள், வீட்டின் அறைகள், பீரோ என எங்கெங்கெலாம் மனிதன் புழங்குகிறானோ அங்கெல்லாம் செவ்வகமே என அங்கலாய்த்துக் கொண்டது.

முக்கோணத்திற்கு இதில் பெரிய குறையொன்றும் இல்லை. என்னை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணித சமன்பாடுகள் இருக்கும் காலம் வரை என் பயன்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். உனக்கு மட்டும் என்ன? எத்தனை இடங்களில் நீ பயன்பட்டுக் கொண்டு இருக்கிறாய்? என சதுரத்திடம் கேட்டது.

நீ மூன்று பக்கம் உடையவன், அதனால் உனக்கு நான்கு பக்கக் காரனான செவ்வகத்திடம் போட்டி இல்லை. ஆனால் நானும் அவனும் ஒரே இனம். என்னை விட அவன் அதிகளவு பயன்படுவதை என்னால் தாங்க முடியவில்லை என சதுரம் முக்கோணத்திடம் கூறியது.
இது போல தொடர்ந்த நச்சரிப்பால் பொருள் உலக தலைமை அதிகாரி, சதுரத்திற்கு குறை தீர்க்கும் நாளில் ஒரு வாய்ப்பு வழங்கினார். மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் நேர்காணலுக்குச் சென்றது சதுரம்.

தன் மன வருத்தங்களையெல்லாம் அவரிடம் கொட்டியது சதுரம். நான் இருவருக்கும் சமமாக கூட முக்கியத்துவம் கேட்கவில்லை. செவ்வகப் பயன்பாட்டில் பாதியாவது எனக்கு கிடைக்குமாறு செய்யலாமே என வேண்டியது. அறிவுலகத்தில் சொல்லி, என் வடிவத்தில் மிகப் பிரபலமாகும் இரண்டு விளையாட்டுக்கள், என் வடிவத்தில் சிறப்பாக இயங்கும் சாதனங்கள் என ஏதாவது உருவாக்கி என் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாமே என கேட்டது சதுரம்.
பொறுமையாக சதுரத்தின் தரப்பை கேட்டுக் கொண்ட மூவுலகத்தின் தலைமை அதிகாரி, சிறிது யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார். வட்டம் ஆதியில் இருந்து மனிதர்களால் நீக்கமற உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. அதில் கூர்மையான முனை ஏதும் இல்லை. யார் அதை அணுகினாலும் காயப்படுத்தாது. எங்கும் யாருடனும் உரசல் இல்லாமல் நழுவிவிடும். அதனாலேயே அதை எங்கும் உபயோகப்படுத்தி வந்தார்கள்.

செவ்வகம் இருவேறு அளவுகளைக் கொண்டது. மனிதர்கள் இப்போது ஒவ்வோர் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற காலகட்டம். ஒருவரிடத்தில் ஒரு விதமாகவும், இன்னொரு இடத்தில் இன்னொரு விதமாகவும் தங்கள் முகங்களைக் காட்ட வேண்டி இருக்கிறது. எனவே அவர்களின் மனதிற்கு நெருக்கமான செவ்வகத்தை இப்போது அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ எல்லாப் பக்கமும் ஒரே அளவு கொண்டவன். இப்போதைய மனித மனம் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி நடக்க தயாரில்லை. உன் கட்டுக் கோப்பு அவர்களை பயமுறுத்துகிறது. எனவே அவர்கள் உன்னை தவிர்க்கிறார்கள். மேலும் இன்னும் சிக்கலான மனநிலைக்கு அவர்கள் மாறும் போது சமமில்லா பக்கம் கொண்ட முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம் என்றெல்லாம் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை அமைத்துக் கொள்வார்கள் என்று முடித்தார்.

சதுரம் ஆதங்கத்துடன் மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் கேட்டது, “அப்படியென்றால் எதிர்காலத்தில் என் உபயோகம்?”.

நீ மட்டுமல்ல, எல்லோரிடம் ஒரே மாதிரி நடக்கும் எந்த அறிவுக்கும், பொருளுக்கும், ஆற்றலுக்கும் பூமியில் தேவை குறைந்து கொண்டேதான் போகும். எல்லோரிடமும் ஒரே மாதிரி நடக்க கூடியவர்களால் மட்டுமே நீ பயன்படுத்தப்படுவாய். அது தான் இன்றைய நியதி என பதிலளித்தார்.

October 31, 2016

இயக்குநர் மனோபாலா

”நான் உங்கள் ரசிகன்” என்று ஒரு படம் 1985ஆம் ஆண்டு வெளியானது. அந்த ஆண்டு வெளியான சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளிலும் சரி, மற்ற பல்சுவை வார இதழ்களிலும் சரி அந்தப் படத்தின் ஸ்டில்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் அந்தப் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரம் அதிகம். தன் முதல் படமான கார்த்திக்,சுஹாசினி நடிப்பில் வெளியான ஆகாய கங்கை சரியாக கவனிக்கப் படாததால் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பில் வெற்றி பெற கடுமையாக முயற்சிகள் எடுத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் மனோ பாலா. அந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத்தரவில்லை என்றாலும் ஒரு இயக்குநராக பலரின் நம்பிக்கையை பெற்றுத்தந்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.

அதற்கு அடுத்து அவர் இயக்கிய ”பிள்ளை நிலா” பெரிய வெற்றி பெற்றது. ஒரு வகையில் தமிழில் முண்ணனியில் இருந்த நடிகர்,நடிகைகள் நடித்து வெளியான முதல் பேய்ப்படம் இது என்றும் சொல்லலாம். அப்போது மார்க்கெட்டில் நல்ல நிலைமையில் இருந்த மோகன், ராதிகா மற்றும் நளினி இணைந்து நடித்த படம். அதற்கு முந்தைய பேய்ப்படங்கள் எல்லாம் சிறிய நடிகர்கள் அல்லது மார்க்கெட் இழந்த நடிகர்களே நடித்து வந்தார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து மோகன், விஷ்ணுவர்த்தன், விஜய்காந்த் ஏன் ரஜினிகாந்த் படத்தையே இயக்கும் வாய்ப்பு வந்தது.

மனோ பாலாவின் படங்கள் எல்லாவற்றிலும் பெண் கேரக்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரின் கதாநாயகிகள் கவர்ச்சியாகவும் இருக்க மாட்டார்கள். நன்கு நடிக்கத் தெரிந்தவர்களை மட்டுமே அவர் நாயகியாக தேர்ந்தெடுப்பார். ராதிகா,சுஹாசினி,பானுபிரியா, சுகன்யா என அவரின் நாயகிகள் எல்லாமே நன்றாக நடிக்கக் கூடியவர்கள் தான்.

80களில் இருந்த நாயக பிம்பம் சாராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையம்சம் உடைய படங்களை இயக்கியவர்களில் மனோ பாலாவும் ஒருவர். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்கள் இந்தக் காலகட்டத்தில் முக்கியமானவர்கள். விசு,ரங்கராஜன் போன்ற இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களை எடுத்திருந்தாலும் அதில் பாரம்பரிய குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கும் பெண் கதாபாத்திரங்களையே அமைத்திருப்பார்கள்.

மனோபாலா பா வரிசை இயக்குநர்கள் மற்றும் ஆர் சி சக்தியைப் போல புதுமைப் பெண்களை திரையில் உலவ விட்டவர். மனோ பாலாவின் குருவான பாரதிராஜா, கிராமத்து தைரியசாலி பெண்களை காட்டினார் என்றால், பாலசந்தர் நகரத்து நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்களின் முற்போக்கு வடிவங்களைக் காட்டினார். தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எப்படி தங்களின் தியாக மனப்பான்மையால், திட மனதால் உழைப்பால், எதிர்கொள்கிறார்கள் என்பது பாலசந்தரின் கதையுலகமாக இருந்தது. அவர் எடுத்த கிராமிய அரசியல் படங்களான தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் கூட பெண் கதாபாத்திரத்துக்குத் தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்றாலும் அவை உழைப்பு, தியாகம், மன உறுதியால் பிரச்சினைகளை சமாளிப்பது போலவேதான் கதை இருக்கும்.

பாலு மகேந்திராவின் கதைகளில் இருக்கும் பெண்கள் இயல்பான ஆசைகளுடன் இருந்து, அதன் மூலம் வரும் கஷ்டங்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். வீடு, சந்தியாராகம் போன்றவற்றில் நடுத்தர வர்க்க குடும்பத்து பிரச்சினைகள் பேசப்பட்டிருக்கும், ரெட்டை வால் குருவி, மறுபடியும், சதிலீலாவதியில் இரண்டு மனைவிகள் கதை சொல்லப்பட்டு, அதில் அவர்கள் எடுக்கும் தைரியமான முடிவுகள் சொல்லப்பட்டிருக்கும். ஆர் சி சக்தியின் படங்களிலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்க சிக்கல்களே அலசப்பட்டிருக்கும். மனக்கணக்கு, கூட்டுப் புழுக்கள், பத்தினிப் பெண் என நடுத்தர வர்க்க இயலாமையைச் சுற்றி அவரின் கதைகள் பின்னப்பட்டிருக்கும். சிறை மட்டும் விதிவிலக்கு. அதில் மானபங்கம் செய்யப்பட்ட பெண், கணவன் வீட்டின் நடவடிக்கைகள் பொறுக்க மாட்டாமல் மான பங்கம் செய்தவன் வீட்டில் அடைக்கலம் புகுவாள்.

மனோ பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் இன்னும் சற்று தைரியசாலிகள். கர்ப்பமான மனைவி இருப்பவனை காதலித்து, அது நிறைவேறாமல் இறக்கும் கதாநாயகி பிள்ளைநிலாவில். கருணாநிதி கதையில் வெளியான தென்றல் சுடும் படத்தில் அப்பாவியாக இருந்து, காதலித்து ஏமாற்றப்பட்டு, இறந்ததாக கருதப்பட்டு தப்பித்து பின்னர் மாடல் அழகியாக வந்து ஏமாற்றியவனை பழிவாங்கும் நாயகி. இந்த இரண்டு படங்களிலும் ராதிகா தான் நாயகி.

மனோபாலாவின் அதிக படங்களில் நாயகியாய் நடித்தவர் ராதிகா. மனோ பாலா விஜயகாந்தை வைத்து இயக்கிய சிறைப் பறவை, ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஊர்காவலன் ஆகிய படங்களிலும் ராதிகாதான் நாயகி.

அனந்து அவர்களின் கதையில் மனோபாலா இயக்கிய படம் நந்தினி. ராதிகாவிற்கு அடுத்து மனோபாலா இயக்கத்தில் அதிகப்படங்களில் நடித்தவர் சுஹாசினி. தன் தாய்க்கு இன்னொருவருடன் இருக்கும் நட்பை சந்தேகித்து, பின் அது தவறென மகள் உணரும் கதை. அந்த சிக்கலான தாய் கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான அன்னை, தத்தெடுத்து வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியது. விதவைப் பெண் ஒருவர், வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஒரு குழந்தையை எடுத்து வந்து தன் திருப்திக்காக வளர்ப்பதும், அதனால் அந்த அனாதைக் குழந்தைக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் என வித்தியாச கதைக்களம்.

சன் டிவி டெலிபிலிம் எடுக்க ஆரம்பித்த போது, மனோ பாலா – ராதிகா காம்பினேசனில் சிறகுகள் என்னும் படத்தை தயாரித்தார்கள், அதில் விக்ரமும் நடித்திருந்தார். தன் கணவனால் புறக்கணிக்கப்படும் பெண், தன் திறமையால் வெகுவாக முன்னேறும் கதாபாத்திரம் ராதிகாவுக்கு. இப்போது ஒலிபரப்பாகும் ஏராளமான தமிழ் சீரியல்களின் மையக்கருத்தாக இந்தப் பட கதை இருக்கிறது.

மனோபாலாவின் பெரும்பாலான கதைகள் பெண் தன் பிரச்சினையில் இருந்து எப்படி குலைந்து போகாமல் வெகுவாக முன்னேறிக்காட்டுகிறாள் என்பதாகவே இருக்கும். இதில் இருந்து தான் அவர் தன்காலத்தில் பெண் கதாபாத்திரங்களைப் படைத்த மற்ற இயக்குநர்களில் இருந்து வேறுபடுகிறார். பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் அந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்ற அளவிலேயே இயங்கும், ஆனால் மனோபாலாவின் நாயகிகள் பிரச்சினையைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் முன்னேறி, தன்னை வதைத்த ஆண்களை நோக்கி வெற்றிச் சிரிப்பு சிரிப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

மனோபாலா மற்ற கதைக்களங்களிலும் சிறப்பாகவே தன் திறமையைக் காட்டி இருக்கிறார். அதற்கு அவர் கருணாநிதி, அனந்து, கலைமணி, ஆபாவாணன், ஆர் பி விஸ்வம் போன்ற திறமையான கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியதும் ஒரு காரணம்.
அவர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான், சிறைப் பறவை ஆகியவை மக்களிடையே வரவேற்பு பெற்ற படங்கள். ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன், சாமியார்கள் தங்கள் நலனுக்காக செய்யும் தகிடு தத்தங்கள் எப்படி குடும்பங்களை பாதிக்கும் என்று காட்டியது. ராம்கி நடித்த வெற்றிப்படிகள், அருண் பாண்டியன், பானுபிரியா நடித்த முற்றுகை ஆகியவை திரில்லர் வகைப் படங்கள்.

விஜயா வாஹினி பல வருடங்களுக்கு பின்னர் படத்தயாரிப்புக்கு திரும்பி வந்தபோது தயாரித்த படங்களில் மனோபாலா இயக்கத்தில் வெளியான கறுப்பு வெள்ளையும் ஒன்று. அதே ஆண்டில் சிவாஜிகணேசன், சரோஜா தேவி நடிப்பில் பாரம்பரியம் என்னும் படத்தையும் இயக்கினார். இவையிரண்டும் எண்ணிக்கையை கூட்ட மட்டுமே உதவின.

மனோபாலா இயக்கத்தைத் துறந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக தற்போது அறியப்படுகிறார். ஆனால் அவரது படங்களில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. அவர் முழுநேர இயக்குநராக இருந்த 80களில் காமெடி டிராக்குகள் மிகப் பிரபலம். கவுண்டமணி-செந்தில், ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் முக்கியப்படங்களில் எல்லாம் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் மனோபாலாவின் படங்களில் இந்த நகைச்சுவை டிராக்குகள் இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும். அதுவும் சில காட்சிகளே இருக்கும்.

1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான மல்லு வேட்டி மைனர் நகைச்சுவைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்து மனோபாலா இயக்கிய படம். சத்யராஜ், அவரது தந்தையின் சின்ன வீடுகளுக்கெல்லாம் பென்சன் அனுப்பும் குணமுள்ள மைனர். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் மைனராக இருந்தாலும் அவருக்கும் ஒரு பெண்ணிடம் காதல் வருகிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். காதலித்த பெண்ணால் வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வு என வித்தியாசமான ஒரு கதை. காதலியாக ஷோபனா, சந்தர்ப்ப வசத்தால் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாக சீதா என இருவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். சத்யராஜ் மைனர் வேடத்தில் அதகளப்படுத்தி இருப்பார்.
இப்போது ட்ரெண்டாக இருக்கும் பேய் பிளஸ் நகைச்சுவை பார்முலாவையும் முதலில் கொண்டுவந்தவர் மனோ பாலாதான். ஜெயராமை வைத்து அவர் இயக்கிய நைனா திரைப்படத்தில் தான் இந்த கான்செப்ட் தமிழ் சினிமாவில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது, கொலைக் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட தன் மகனுக்கு ஆவியாய் வந்து உதவும் தந்தையின் கதை. இதில் ஏமாற்றுக்கார மீடியமாக வடிவேலு. படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தற்போது வெளியாகும் ஏராளமான நகைச்சுவைப் பேய் படங்களுக்கு முன்னோடியாக இருந்தது.

90களுக்குப் பின்னர் பிறந்த யாருமே மனோபாலாவை ஒரு இயக்குநராக நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ஆண்டுக்கு குறைந்தது 15 படங்களிலாவது தலையைக் காட்டி விடுகிறார்.
அவர் காலத்து இயக்குநர்கள் எல்லாமே தங்களுக்கு என்று ஒரு தனி பாணியை வைத்திருந்தார்கள். அந்த பாணி படங்களினாலேயே அவர்கள் அறியப்பட்டார்கள். ஆனால் மனோபாலா கதையின் தன்மைக்கேற்ப தன் படங்களை இயக்கினார். அதனால் தான் அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் தனித்தன்மை இல்லாத இயக்குநர் என்பது போல மக்களால் உணரப்படுகிறது. மேலும் அவர் இயக்கிய படங்களில், அப்போதைய பெரு வெற்றிக்கான அளவுகோலான சில்வர் ஜூபிளி படங்கள் ஏதுமில்லை.
ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஊர்காவலனும் சரி, பிள்ளை நிலா, தென்றல் சுடும் போன்ற படங்களும் சரி 100 நாட்களை மட்டுமே கண்டவை. மற்ற படங்கள் எல்லாம் சராசரியான 50 நாள் படங்கள்.

மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் ஒருவரை சிறந்த இயக்குநர் எனலாம். ஆனால் அதிலும் மனோபாலாவின் திரைப்படங்கள் படைப்பு ரீதியாக பெரிய பாதிப்பை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. தற்போது அவர் நடிக்கும் படங்களிலும் கூட சிறு சிறு வேடங்களிலேயே திருப்தி அடைந்து கொள்கிறார். தன் நடிப்புத்திறனை நிரூபிக்க பெரிய முயற்சி ஏதும் எடுப்பதில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனோபாலா, வினோத் இயக்கத்தில் தயாரித்த சதுரங்க வேட்டை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோபாலாவிற்கு இருக்கும் அனுபவம் மற்றும் கதையறிவைக் கொண்டு இனி சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து குறு முதலீட்டுப்படங்களைத் தயாரிக்கலாம். சிறந்த வேடங்களைத் தேர்ந்த்தெடுத்து நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகப் பெயர் பெறலாம். சராசரியான இயக்குநர் ஆனால் வித்தியாச கதைக்களங்களை இயக்கியவர் என்ற பெயரை அவர் மாற்ற பெரிய மனதுடன் இனி செயல்பட வேண்டும்.

October 17, 2016

இயக்குநர் கங்கை அமரன்

திருமணத்திற்கு வருபவர்களில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே முந்தைய நாள் இரவு கல்யாண மண்டபங்களில் தங்கும் காலம் இது. 25 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் கல்யாணத்துக்கு வருபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் முதல்நாள் இரவு கல்யாண மண்டபத்தில் தங்கி விடுவார்கள். ஒரு குரூப் மேடை அலங்காரத்தைப் பார்த்துக்கொண்டால் இன்னொரு குரூப் தேங்காய் பை போடுவார்கள். சிலர் ஜமுக்காளத்தை விரித்து வெட்டி அரட்டையும், சிலர் சீட்டும் ஆடுவார்கள். ஒரு குரூப் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு செகண்ட் ஷோ செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும்.


அப்படி ஒரு குரூப் எந்தப்படத்திற்கு போவது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பி பின் ஒரு மனதாக கங்கை அமரன் இயக்கியிருந்த ”எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்துக்குப் போகலாம் என முடிவெடுத்தார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அதற்கு முந்தைய வாரம் நடந்த கல்யாணத்தின் போதும் இந்தப் படத்தை அந்த குரூப்பில் இருந்த பலர் பார்த்திருந்தார்கள். பாட்டு, காமெடி அப்படின்னு போரடிக்காம போகும்யா, அதுக்கே போகலாம் என்பது அவர்களின் மனநிலையாக இருந்தது.


கங்கை அமரன் இயக்கிய பெரும்பாலான படங்கள் அப்படித்தான். மிக இலேசான கதை, அதில் ஒரு முடிச்சு, அந்த முடிச்சையும் பெரிய புத்திசாலித்தனம் இல்லாமல் எளிதாக அவிழ்ப்பது,அருமையான பாடல்கள், அலுக்காத காமெடி என ஒரு பேக்கேஜாகத் தருவார். பெரும்பாலும் கிராமிய கதைக்களனிலேயே படங்களை இயக்கிய கங்கை அமரனின் படங்களில் ஹீரோயிசம் அதிகமாக இருக்காது. கதை நாயகன் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனாகவோ, கிராமிய கலைஞனாகவோ,மீனவனாகவோ இருப்பான். பொறி பறக்கும் வசனங்களோ, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளோ அதிகம் இருக்காது.


கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர் என விஜயகாந்த் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கும்போதே அவரை கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டவராக வைத்து கதை செய்தது கங்கை அமரனின் இயல்பு.


கங்கை அமரன் படங்களில் மலையாளத் திரைப்படங்களில் இருப்பது போன்றே கதையோட்டம் இருக்கும். மிக மெதுவாகவே படம் தொடங்கி சீராகச் செல்லும். வெகு வேகமாக காட்சிகள் பறக்காது. என்ன மலையாளப் படங்களுக்கு இணையான அழுத்தமான கதை இருக்காது. அதற்குப் பதிலாக தூக்கலான காமெடியும், இனிமையான இசையும் இருக்கும். அதனாலேயே அமரனின் படங்கள் அலுப்பூட்டாதவையாக இருக்கும்.

மணிரத்னம், டி ராஜேந்தர் ஆகியோரை எந்த இயக்குநரிடம் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநரானவர்கள் என்று சொல்வார்கள். கங்கை அமரன் எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் எனத் தெரியவில்லை. அவர், தன் சகோதரர் இளையாராஜா உடன் தான் ஆரம்பகாலங்களில் உதவியாக இருந்துள்ளார்.


முதன்முதலில் அவர் இயக்கிய கோழிகூவுது பெரிய வெற்றிப்படம். பிரபு,சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி நடித்த படம். இளையராஜாவின் இசை பெரிய பங்கு வகிக்க படம் பல செண்டர்களில் 200 நாட்களை கடந்து ஓடியது. ஆனால் அதற்கடுத்து கங்கை அமரன் இயக்கிய கொக்கரக்கோ,

தேவி ஸ்ரீதேவி, பொழுது விடிஞ்சாச்சு, வெள்ளைப் புறா ஒன்று என வரிசையாக தோல்விப்படங்கள். எங்க ஊரு பாட்டுக்காரன் வெற்றி. அதற்கடுத்து செண்பகமே செண்பகமே, அண்ணனுக்கு ஜே என சுமாரான படங்கள். பின்னர் கரகாட்டக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, கும்பக்கரை தங்கையா, கோயில் காளை, சின்னவர் என தொடர்ச்சியாக பெரிய நாயகர்களுடன் படங்கள். பின்னர் பொண்ணுக்கேத்த புருசன், வில்லுப் பாட்டுக்காரன், அத்தை மக ரத்தினமே, தெம்மாங்குப் பாட்டுக்காரன் என மிக சுமாரான படங்கள். கடைசியாக தன் மகன் வெங்கட் பிரபுவை நாயகனாக்கி, ரசிகா (எ) சங்கீதா வை நாயகியாக்கி பூஞ்சோலை என்னும் படத்தை இயக்கினார், ஆனால் படம் இன்றுவரை வெளியாகவில்லை.


இந்தப் படங்களைப் பொறுத்த வரை, எந்தப் படத்திற்கும் கங்கை அமரன் ஸ்கிரிப்ட் என்ற ஒன்றைத் தயாரித்திருப்பாரா என்பது சந்தேகமே. அவரின் கோல்டன் ஜூபிலி படமான கரகாட்டக்காரனுக்கே ஒரு ஒன்லைனை மட்டும் மனதிற்குள் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு போனதாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். வசனங்கள் எல்லாமே ஸ்பாட்டில் போய்த்தான் யோசித்து அப்படியே சொல்லியிருப்பார் போலும். மிக சாதாரண, அன்றாட வழக்கில் பேசப்படும் வசனங்கள் மட்டுமே அவர் படங்களில் இருக்கும். அதனால் கூட அவை அலுப்பூட்டாதவையாக இருக்கிறதோ என்னவோ?


கங்கை அமரனின் படங்களில் கேமிராமேனுக்கு பெரிய வேலை எல்லாம் இருக்காது. வித்தியாசமான கோணங்கள், லைட்டிங் என்று பெரிய மெனக்கெடல் தேவையில்லை. சாதாரணமாக ஒரு கிராமத்து நிகழ்வுகளை நாம் எப்படி காண்போமோ அதே போன்ற கோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். பட்ஜெட்டும் மிக குறைவாகவே இருக்கும். விஜயகாந்த், அர்ஜூன், பிரபு போன்ற நாயகர்கள் நடிக்காத படங்களில் இளையராஜாவின் இசை தான் படத்தின் பட்ஜெட்டில் முக்கியமாக இருக்கும்.


தன் தம்பி என்பதற்காகவோ அல்லது இளையராஜாவின் மனதுக்கு ஏற்ற களமான கிராமத்து எளிய கலைகள் புழங்கும் கதைகளாய் இருப்பதாலோ என்னவோ இளையராஜா இவருக்கு எப்போதும் அருமையான பாடல்களையே கொடுத்து வந்திருக்கிறார். கங்கை அமரன், கவுண்டமணி, எஸ் எஸ் சந்திரன், செந்தில் மூன்று பேரையுமே சிறப்பாக தன் படங்களில் உபயோகப் படுத்தியவர். நகைச்சுவை சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் பல காட்சிகள் கங்கை அமரனின் படங்களில் இருந்து எடுத்தாளப்படுபவையே.


தேவர் மகனுக்கு முன்னால் கங்கை அமரன் இயக்கத்தில் கமல்ஹாசன் – ஐஸ்வர்யா (நடிகை லட்சுமி மகள்) நடிக்க இளையராஜா இசையில் சர்க்கரைப் பொங்கல் என்னும் படத்தை கங்கை அமரன் இயக்குவதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது. கலைஞானம், ம வே சிவக்குமார் போல ஆரம்ப காலத்தில் சில பேட்டிகளில் சர்க்கரைப் பொங்கலின் கதை தேவர் மகனின் கதைக்கு அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கங்கை அமரனுக்கு கடைசியாக சுமாராக ஓடிய படமென்றால் அது பிரபு நடித்த சின்னவர் தான். அதிலும் கதையில் ஒரு சின்ன முடிச்சுதான். பாடல்களும், கவுண்டமணி-செந்தில்-கோவை சரளாவின் காமெடியும் படத்தைக் காப்பாற்றியது, அதன்பின் வந்த எந்தப் படமும் கைகொடுக்கவில்லை. ஏனென்றால் ரசிகர்களை இழுக்கக்கூடிய நாயகர்களும் இல்லை, இளையராஜாவின் இசையும் ரஹ்மானின் வருகையால் ஆட்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொஞ்சம் இழந்திருந்தது. மேலும் ரசிகர்கள் சற்று வேகமான பட ஓட்டத்திற்கு பழகியிருந்தார்கள்.

பின்னர் தன் மகன் வெங்கட் பிரபுவை வைத்து பூஞ்சோலை படத்தை துவக்கினார், அது பொருளாதார சிக்கல்களால் நின்று போனது.


டைரக்டர்ஸ் டச் எனச் சொல்லக்கூடிய முத்திரைக் காட்சிகளோ, பவர்புல்லான கதையோ இல்லாமல், சாதாரண நிகழ்வுகளைக் கொண்டு தன் பாணியில் இயக்கினாலும் தமிழ்சினிமா என்றென்றும் நினைத்திருக்கும் இரண்டு, மூன்று படங்களை இயக்கியவராக இந்தத் துறையிலும் மக்கள் ஞாபகத்தில் இருப்பார் கங்கை அமரன்.

August 30, 2016

தலைவாசல் விஜய்


92 ஆம் ஆண்டு தலைவாசல் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான நேரத்தில் 40க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே தமிழகம் முழுவதும் இருந்தன. ஆனால் முன்னூறுக்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. தலைவாசல் திரைப்படமானது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் போதைப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. படம் வெளிவரும் முன்பே அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளில் ஏராளமான விளம்பரங்களைக் கொடுத்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டு உருவாகும் படம் என்றே விளம்பரம் செய்திருந்தார்கள். அறிமுக இசை அமைப்பாளர் பாலபாரதியின் இசையில் பாடல்களும் ஹிட்டாகி இருந்தன. இந்தப் படத்தில் தான் ஒரிஜினல் கல்லூரி கானா முதன் முதலாய் தமிழ்சினிமாவில் இடம் பெற்றது என்று கூடச் சொல்லலாம். எனவே இந்தத் திரைப்படமானது முற்றிலும் புது முகங்களைக் கொண்டிருந்தாலும் கல்லூரி மாணவர்களின் ஆதரவால் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், நாசர் போன்ற சீனியர்கள் நடித்திருந்தாலும், கானா பாடல் பாடும் முன்னாள் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருந்த விஜய்யும், மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்த விசித்ராவும் உடனடியாகப் புகழ் பெற்றார்கள். விஜய், ஏற்கனவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி புகழ் அடைந்திருந்த நீலா மாலா என்னும் தொடரில் வேறு நடித்திருந்ததால் தமிழக மக்களிடையேயும் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

அடுத்த இரண்டு மாதங்களில் வெளியான தேவர் மகனில் கமல்ஹாசனின் குடிகார அண்ணன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குள் விஜய் தலைவாசல் விஜய்யாக பெயர் பெற்றிருந்தார். அடுத்ததாக தலைவாசல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர்  கூட்டணியில் அஜித்-சங்கவி நடித்த அமராவதியிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்தார். மணிரத்னத்தின் திருடா திருடா, அடுத்ததாக கமல்ஹாசனின் மகாநதி,  ராஜ்கமல் புரடக்‌ஷனில் மகளிர் மட்டும் என தொடர்ந்து முண்ணனி நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

அடுத்து முரளியின் அதர்மம், விஜயகாந்தின் பெரிய மருது திரைப்படங்களிலும் நல்ல வேடங்கள் கிடைத்தன.
இதற்கடுத்து அவர் ஏராளமான படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தார். பெரும்பாலான கேரக்டர்கள் அவரின் நடிப்புத் திறமையை பறைசாற்றிய கேரக்டர்கள் தான். ஆனாலும் அவரால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, படத்தையே தாங்கி நிற்கும் படியான கேரக்டர்களில் நடிக்க வில்லை அல்லது கிடைக்கவில்லை.

அவருக்கு முன்னால் நடிக்க வந்திருந்த ரகுவரன், நாசர் மற்றும் அவருக்குப் பின்னால் வந்த பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இணையான நடிப்புத்திறன் கொண்டிருந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவர்களுக்கு இணையான பெயரை தமிழ் சினிமாவில் அவரால் பெற முடியவில்லை. தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேடங்களே அவருக்குக் கிடைத்தன. இத்தனைக்கும் அவர் முதல் படமான தலைவாசலில் இளைஞர்கள் தங்களை அவருடன் அடையாளப் படுத்திப் பார்க்கும்படியான கேரக்டர். கல்லூரி படிப்பு முடித்தும், கல்லூரி வளாகத்திலேயே சுற்றி, கானா பாடிக்கொண்டிருக்கும் கேரக்டர். ஆனால் அதற்கடுத்து உடனடியாக அவர் நல்ல பாஸிட்டிவ்வான கேரக்டர்களில் நடிக்கத் தலைப்படவில்லை.

வேலை செய்யும் இடங்களிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி, ஒருவர் ஒரு வேலையை திறம்பட செய்துவிட்டால் போதும், அது சம்பந்தமான வேலை வரும் போதெல்லாம் அவர் தான் முதல் சாய்ஸாக இருப்பார். இதனால் உடனடி பலன்கள் இருந்தாலும், நாளடைவில் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர் இன்னொருவர் வந்து விட்டாலோ அல்லது அந்த மாதிரியான வேலைகளுக்கான தேவை குறைந்து விட்டாலோ அவரைச் சீந்த மாட்டார்கள். எனவே தான் மற்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தலைவாசல் விஜய், அறிமுகமான படத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகி, பின்னர் திருந்தும் வேடம், அதற்கடுத்த தேவர் மகனில் குடிக்கு அடிமை. பின் வந்த மகளிர் மட்டும்மில் குடிகார கணவன். எனவே தமிழ்சினிமாவில் அதற்கடுத்து எந்த வித குணச்சித்திர குடிகார வேடம் என்றாலும் இயக்குநருக்கு தலைவாசல் விஜய் தான் முதல் சாய்ஸாகத் தெரிவார்.
மகாநதி மற்றும் பேரழகனில் கழைக்கூத்தாடி, காதல் கோட்டையில் ஆட்டோ டிரைவர், கோகுலத்தில் சீதையில் பெண் புரோக்கர், துள்ளுவதோ இளமையில் நடைபாதை மீன் வியாபாரி, சண்டக் கோழி படத்தில் மாற்றுத் திறனாளி  என வித்தியாச வேடங்களும் அவ்வப்போது கிடைத்து வந்தன. இந்த வேடங்களில் எல்லாம் அவர் அப்படியே பொருந்திப் போயிருப்பார். இவர் நடித்த காட்சிகளுக்கான வசனங்கள் கூட அதற்குரிய வார்த்தைக் கோவையில், அந்தக் கேரக்டர்க்கு உரிய உச்சரிப்போடு அமைந்திருக்கும்.

ஆனாலும் அவர் நடித்த பெரும்பாலான வேடங்களை போதைக்கு அடிமையானவர்/நய வஞ்சக கோழை/விளிம்பு நிலை மனிதர் என்ற வகைகளுக்கு உள்ளேயே அடக்கி விடலாம். இந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலே தலைவாசல் விஜய்யை கூப்பிடுங்க என்னும் படி நாளடைவில் ஆகிப்போனார்.
காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த சற்று கோழையான இன்ஸ்பெக்டர் வேடம்.   ஹரிசந்திரா, என்னம்மா கண்ணு, உன்னை நினைத்து,அனேகன் போன்ற படங்களில் நடித்த நல்லவன் போல் நடித்து ஏமாற்றும் வேடம் போன்றே அடுத்தடுத்து தலைவாசல் விஜய்க்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த கேரக்டர்கள் எல்லாமே படத்துக்கு தேவையானதாக இருந்ததே தவிர அவருக்கு என பெரிய மரியாதையை தமிழ்சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

நடிக்க வந்த மூன்றாண்டுகளிலேயே விஷ்ணு படத்தில், நாயகன் தந்தையின் நண்பனாக இருந்து பின் எதிரியாக மாறும் வயதான வேடம். அதுதான் பரவாயில்லை என்று பார்த்தால் அடுத்து பிரபுவிற்கு தந்தை வேடம். இளவயதிலேயே வயதான வேடங்களில் நடித்த குணசித்திர நடிகர் என்றால் வி.கே. ராமசாமியைச் சொல்வார்கள். அவர் தன் இருபதுகளில் அறுபது வயது வேடம் பூண்டவர். வி கே ராமசாமி என்றாலே யாருக்கும் அவருடைய வயதான தோற்றம்தான் ஞாபகம் வரும். அவரும் அப்படியே தன்னை மெயிண்டெயின் செய்து கொண்டார். அடுத்து நெப்போலியன். அவர்  அறிமுகமான புது நெல்லு புது நாத்திலேயே வயதான கேரக்டர்தான். அதற்கடுத்து அவரை விட மூத்தவரான கார்த்திக்கிற்கு தந்தையாக நாடோடித் தென்றலில் நடித்தார். ஆனால் அவரது  ஆஜானுபாகுவான உருவத்தால் இளவயது வில்லனாக, பின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தார். ஆனால் தலைவாசல் விஜய் ஏற்ற வயதான வேடத்தால் பின்னர் அவருக்கு கிடைக்க வேண்டிய தாக்கம் தரக்கூடிய இளவயது வேடங்கள்  கிடைக்கவில்லை. வி கே ராமசாமி தன் நகைச்சுவை நடிப்பாலும், நெப்போலியன் தன் மிடுக்கான உருவத்தாலும் ஏற்றம் பெற்றது போல் தலைவாசல் விஜய்க்கு முன்னேற்றம் அமையவில்லை.

தமிழ்சினிமாவில் கொடூர வில்லன்களைத் தவிர எல்லோருமே ஒரு காலகட்டத்தில்  நகைச்சுவை காட்சிகளில் நடித்து விடுவார்கள். இப்போதெல்லாம் கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தியில் இருந்து நான்கடவுள் ராஜேந்திரன் வரை பெரிய வில்லன்கள் தான் காமெடியனாகவே நடிக்கிறார்கள். ஹீரோக்களும் கூட அவ்வப்போது காமெடி சீன்களில் நடித்தே ஆகவேண்டி இருக்கிறது. ஆனால் தலைவாசல் விஜய் அவ்வளவாக காமெடி காட்சிகளில் நடிக்கவில்லை. ஒரு வேளை, அர்த்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க அவர் மனதுக்கு பிடிக்க வில்லையோ என்னவோ? மேலும் அவரின் ஆரம்ப காலப் படங்களினால் அவர் மேல் விழுந்த சீரியஸான ஆள் என்ற இமேஜால் மற்றவர்கள் தயங்கினார்களோ என்னவோ?.
தலைவாசல் விஜய்யின் உடல் அமைப்பு காரணமாக ஹீரோவாகவோ அல்லது முழுநேர வில்லனாகவோ அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குவார்கள் என இயக்குநர்கள் நினைத்தார்கள். எனவே அவர் பெரிய அளவிலான கேரக்டர்கள் வாங்க வேண்டுமானால் அவரே தனக்கான ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தன்னை நிரூபித்திருக்கலாம்.

கோகுலத்தில் சீதையில் குடும்பப் பெண்ணை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கும் கதாபாத்திரம் அவருக்கு. அதில் பெண்கள் விபச்சாரம் செய்வதால் அவர்களின் வழக்கமான கடினமான வாழ்வில் இருந்து விடுபட்டு எப்படி சொகுசாக வாழலாம் என மூச்சு விடாமல் பேசுவார். நிச்சயமாக அந்த வசனம் எல்லாம் அவரே மெருகேற்றியிருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு வாசிப்பும், சினிமா பற்றிய புரிதலும் உண்டு. 

உதவி இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தாவாக இருந்த லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் கிடைத்த வில்லன் வேடங்களுடன் திருப்தி அடைந்து விடாமல், தனக்கேற்ப ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து போராடி சுந்தர புருசன் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் சில வாய்ப்புகள் கிடைத்தன. அது போல ஒரு தீவிர முயற்சியை தலைவாசல் விஜய் மேற்கொள்ளவே இல்லை.


அவர் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் அவர் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதில் இருந்து அவர் எவ்வளவு அணுக்கமாக நடந்து கொள்வார் என்று தெரிகிறது. கமல்ஹாசன் மற்றும் விஜய்காந்த் படங்களிலும் சரி,
பாஸில்,விக்ரமன்,அகத்தியன்,சரண்,லிங்குசாமி,ஹரி ஆகிய இயக்குநர்களின் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்து இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பெயர் சொல்லும் படியான படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஹரியின் இயக்கத்தில் நடித்த சிங்கம் 2 மற்றும் பூஜையில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் கதாபாத்திரம் தான். கே வி ஆனந்தின் அனேகனிலும் அவருக்கே உரித்தான கதாநாயகியின் தந்தை வேடம். சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான புது இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஓரளவு யதார்த்தமான படங்களையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். இம்மாதிரி படங்களில் இருக்கும் கேரக்டர்களில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். 90களில் வந்த புது இயக்குநர்கள் எல்லோருமே ரகுவரனுக்கு என ஒரு ரோல் வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த தலைமுறை இயக்குநர்களிடம் சில கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸாக வைக்கும் படி பெரிய தாக்கத்தை தலைவாசல் விஜய் ஏற்படுத்தவில்லை.

தமிழ் தவிர்த்துப் பார்த்தால் தலைவாசல் விஜய் போன்ற குணச்சித்திர நடிகர்களுக்கு ஏற்ற மாநிலம் ஆந்திரா. நாசரோ பிரகாஷ் ராஜோ இல்லாமல் ஒரு படத்தை எடுக்கவே தயங்கும் நிலையெல்லாம் அங்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவருக்கு அம்மாதிரி வாய்ப்புகள் அங்கும் அமையவில்லை.

மலையாளத்தில் யுகபுருசன் என்னும் திரைப்படத்தில் நாராயன குருவாக நடித்தார். அவருக்கு அட்டகாசமாக அந்த வேடம் பொருந்தியது. அதன்பின்னர் அங்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அங்கும் பெரிய அளவில் அவர் நடிக்கவில்லை.

அவரது மகள் நீச்சலில் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது கேரியரில் கவனம் செலுத்தக்கூட தற்போது அதிக படங்களில் தலைவாசல் விஜய் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மிக இயல்பாக கொடுத்த கேரக்டருக்கு ஏற்ற உடல் மொழியுடன் நடிக்கக் கூடிய ஒரு நடிகரை சமீப கால புது இயக்குநர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்

August 11, 2016

ஆண்களின் வசந்தகாலம்

ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும் குறிப்பாக பொருளாதாரத்தில் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஆணுக்கு. 20-21 வயதில் படிப்பு முடிக்கும் ஆணுக்கு குறைந்தது 4-5 ஆண்டுகளில், அதிகபட்சம் 10-12 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது. சராசரியாக படிப்பு முடிந்து 7 ஆண்டுகளில் திருமணம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த காலம் மாதிரியான ஒன்று அவன் வாழ்வில் திரும்ப வரவே வராது.

முன்னர் எப்படியோ, ஆனால் இப்போது இந்த வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு இருப்பதில்லை. வரதட்சனை கொடுக்காமல் அக்கா வாழாவெட்டியாக இருக்கிறார், தங்கைக்கு சீருக்கு பணம் சேர்க்க வேண்டும், தம்பி படிப்புக்கு அப்பா காசு கேட்கிறார் போன்ற பேச்சுக்கள் இப்போது பெருமளவில் இல்லை. மத்திய வர்க்க பெற்றோர், தன் மகனிடம் எந்த பண உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் கடமைகளை முடிக்கும் நிலையிலேயே இப்போது உள்ளனர். விதிவிலக்குகள் இருக்கலாம். நம்மை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல் இருக்கும் பெற்றோர் அமைவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் திருமணத்திற்கு முன்னான காலத்தை வசந்தகாலம் ஆக்கும்.


அமெரிக்காவில் உள்ள ஏடி அண்ட் டி ஆராய்ச்சி சாலையில் நடந்ததாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அங்கு ஒரு ஆராய்ச்சியாளர், தன் மேலதிகாரியிடம் சென்று இவ்வாறு கேட்டாராம், “நானும் என்னுடன் பணிபுரிபவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் இங்கே ஒரே நாளில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். இருவரும் அறிவைப் பொறுத்தவரையிலும் ஒரே அளவில் தான் இருந்தோம். ஆனால் தற்போது அவர் என்னைவிட அறிவும் அதிகமாகி. பதவி உயர்வும் பெற்றுவிட்டார். இது எப்படி?”.

அதற்கு அவரின் மேலதிகாரி “நீ உனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்துக் கொடுத்தாய். ஆனால் வேலை நேரம் முடிந்த உடன் அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டாய். ஆனால் அவனோ தினமும் 2 மணி நேரம் உன்னை விட அதிகமாக இருந்து இங்கே மற்ற விஷயங்களை கற்றுக் கொண்டான். அவனுடைய மூளையில் நீ கற்றுக் கொண்டதை விட அதிகமான தகவல்கள் குடியேறின. மேலும் இரண்டு விஷயங்களை தெரிந்தவன் அதோடு தொடர்புடைய மூன்றாவது விஷயத்தை, எந்த விஷயமும் தெரியாதவனை விட விரைவாக கற்றுக் கொள்வான். இதனால் அவன் கற்றுக் கொள்ளும் வேகம் அதிகரித்தது.

எந்த ஒரு வேலையோ அல்லது பிரச்சனையோ வரும் போது நம் மூளையானது நம்மிடம் உள்ள தகவல்களைக் கொண்டே அதற்கான தீர்வை எடுக்க முனையும். அதிகமான தகவல்களை கொண்டவன், விஷயங்கள் புரிந்தவன், அதற்கு எளிதான தீர்வை எடுத்து விடுவான். 

தினமும் 2 மணி நேரம் என்பது குறைவான நேரம். ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகள் இரண்டு மணி நேர உழைப்பு என்பது அவனுடைய அறிவை உன் அறிவை விட பல மடங்கு மேலாக்கிவிட்டது. அதனால் எந்த வேலையையும் அவனால் இப்போது உன்னை விட சிறப்பாக செய்ய முடிகிறது என்றார்.


இந்த அதிக நேரமானது நமக்கு திருமணத்திற்கு முன்னரே கிடைக்கும். திருமணத்திற்கு முன் நம்மை நம் வீட்டிலோ,உறவு வட்டங்களிலோ அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன் தங்கையின் பிரசவத்திற்கு போகாத அண்ணனைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் திருமனத்திற்குப்பின் தங்கை மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கூட அது ஒரு பிரச்சனையாகும். பெற்றோர்களே கூட திருமணத்திற்குப் பின் தங்கள் மகன் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்யாணத்துக்கு முன்னாடிலாம் இப்படி இல்லை. அவ வந்து தான் இப்படி என்று அவள் காதுபட வேறு சொல்லி, தேவையில்லாத பஞ்சாயத்துகளில் நம் நேரத்தை விரயமாக்குவார்கள். நம் சுற்றத்தாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகாவிட்டால், எங்கள் வீட்டிற்கெல்லாம் நீங்கள் வருவீர்களா, கல்யாணத்துக்குப் பின்னாடி கண்ணு தெரியலை என்று குமைவார்கள். அதைவிட மனைவி வீட்டு விசேஷங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம். அவர்களின் ஒன்றுவிட்ட சித்தியின் மகள் வளைகாப்புக்கு கூட நாம் போயாக வேண்டும். சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மனைவிகள், அலுவல நேரத்தில் பணி புரிய அனுமதிக்கிறார்கள். அதற்கு மேல் அங்கு நேரம் செலவு செய்து விட்டு தாமதமாக வந்தால் நாம் வேறு வகை செலவுகளை செய்தாக வேண்டும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் அது தொடர்பான விஷயங்களுக்கு இப்பொழுது அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கிறது. எனவே திருமணத்திற்குப் பின் நம் நேரம் நம் கையில் இல்லை.

வேலைக்காக இன்னொரு ஊருக்கு வந்து, திருமணமாகாத காலகட்டத்தில், நம் இளைஞர்கள் செய்யும் இன்னொரு நேரச் செலவு, உணவு தேடி அலைவது. வார நாட்களின் இரவுகள், வார இறுதி நாட்களில் சாப்பிட என்று பைக்கில் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் என்பவர்களைத்தான் மன்னிக்கவே முடியாது. அத்தியாவசிய சமையலைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாத்திரம் கழுவுவது, அதனால் ஏற்படும் சண்டைகள், வீட்டுக்கு சாமான் வாங்குவது, சிறு சிறு ரிப்பேர்கள் செய்வது என தங்களின் வசந்த காலத்தை வீணடிப்பவர்கள் இவர்கள். இந்த வேலைகளை எல்லாம் அதிகபட்சம் மூன்று மாதங்களில் திருமணத்திற்குப் பின் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில் வேறு ஊருக்கு வந்து வேலை பார்க்கும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் இருக்கிறது. மூன்று வேளை சாப்பாடு நேர நேரத்திற்கு கிடைத்து விடும். செலவும் மிகக் குறைவு. ஆண்களுக்கு இது போல ஒர்க்கிங் மென்ஸ் ஹாஸ்டல் இருந்தால் நலம். அதே போல பிரயாண நேரம். தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே தங்கிக் கொள்வது நமது நேரம் அனாவசியமாக செலவாவதை குறைக்கும். திருமணத்திற்குப் பின் மனைவிக்கு ஏதுவாக, குழந்தைகளின் கல்விக்காக, எல்லோருக்கும் சிரம்மில்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மாமியார் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற மனைவியின் நிபந்தனைக்காக தினமும் நான்கைந்து மணி நேரம் பயணம் செய்யும் பலரை நான் அறிவேன்.

இப்போதைய மத்திய வர்க்க இளைஞன் தன் பெற்றோர்க்கு பணம் அனுப்பத் தேவையில்லாத காரணத்தால் சிக்கனமாக செலவழித்தால் நிறைய சேமிக்கலாம். ஏழாண்டுகள் இப்படி சேமிக்கும் பணம், ஒரு மிகப்பெரிய கையிருப்பாக மாறும். அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால் அந்நேரத்தில் அது கை கொடுக்கும். அம்மாதிரியான சேமிப்பை நாம் திருமணமான பின் செய்வது மிகக் கடினம்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன் அங்கே நம்மை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். வருமானத்தையும் சரியாக சேமித்துக் கொண்டால், நாம் இருக்கும் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மேலே உயர ஏதுவாக இருக்கும். 

இந்த வசந்த காலம் ஒரு ஸ்பிரிங் போர்ட் போன்றது. ஊன்றி அழுத்தி எவ்வினால் சமூக பொருளாதார நிலையின் அடுத்த தளத்திற்கு தாவி விடலாம். இல்லையென்றால் நம் மகனுக்கு பின்னாட்களில் தெரியப்படுத்துவதற்காக இதை எழுதிக் கொண்டிருக்கலாம். 

August 03, 2016

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள்

முன்னர் மதுரை மாவட்டத்தில் இருந்து இப்போது தேனி மாவட்டத்தில் இருக்கும் ஊர் அது. பெயர் கெங்குவார்பட்டி. 80களில் அங்கே இருந்தது ஒரே ஒரு தியேட்டர் தான். இப்போதும் கூட அந்த தியேட்டர் மட்டும் தான் அங்கே இருக்கிறது. அங்கே ரஜினி படங்களுக்கு எப்போதும் நல்ல கூட்டம் வரும். இளைஞர்கள், குடும்பத்தோடு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து வரும் சிறுவர்கள் என சுமாரான படங்களுக்கு கூட திருவிழா கூட்டம் வரும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ரஜினி படத்திற்கு மட்டும் வழக்கமாக வரும் இளைஞர்களின் கூட்டத்தை விட அதிகமாகவும், அதற்கு இணையாக பள்ளிச் சிறுவர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடைசி சில நாட்களில் திரையரங்கு முழுவதும் இளைஞர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர்.

இத்தனைக்கும் அந்த படத்தின் கதை ஏராளமான படங்களில் வந்தது தான். பாசமான அண்ணன் தங்கை. அண்ணன் எந்த வம்பு தும்புக்கும் போகாத அப்பாவி மிடில்கிளாஸ் வாலிபன். அவனது தங்கையை வில்லன் கூட்டம் கற்பழித்து கொலை செய்து விடுகிறது. அதற்கு பழிவாங்க துடிக்கிறான் அண்ணன். மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுத்தரும் ஒரு குருகுலத்தில் சேர்ந்து அந்தக் கலைகளை கற்று இறுதித் தேர்வில் முதலிடம் பிடிக்கிறான். அங்கே அவனுடன் பயின்று போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவன் கோபத்தில் வில்லன் கூட்டத்துடன் சேர்கிறான். இவர்களை எப்படி நாயகன் வெல்கிறான் என்பதுதான் கதை.

அந்தப் படம் பாயும்புலி. பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். காரணம் அதில் இடம் பெற்ற சண்டைப் பயிற்சி காட்சிகள். 36 சேம்பர் ஆப் ஷாவோலின் படத்தில் இருந்து சண்டைப் பயிற்சி காட்சிகளை அப்படியே உருவி இதில் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தை பார்க்காத பட்டி தொட்டிகளில் எல்லாம் பாயும்புலில சண்டை அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்றே பேச்சாக இருந்தது.

திரைப்பட பாடல்களுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சண்டை காட்சிகளுக்காக ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தது இந்தப் படத்திற்குத்தான். அதுவரை தமிழ்சினிமாவில் வராத சண்டைக் காட்சிகள் இருந்ததால் ரசிகர்களை அந்தப் படம் பெருமளவு ஈர்த்தது.

கொடூர வில்லனாகவே தமிழக மக்கள் மனதில் பதிந்து போயிருந்த எம் என் நம்பியார்க்கு நல்லவர் என்ற இமேஜ் மேக் ஓவர் கொடுத்த படம் பாக்யராஜ் இயக்கிய தூறல் நின்னு போச்சு. இந்தப் படத்தின் கதையும் வழக்கமான பாக்யராஜின் யதார்த்தமான கதைக்களம் தான். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பக்கத்து ஊர் பெண்ணை வெகுவாக காதலிக்கும் கிராமத்து இளைஞனாக பாக்யராஜ். ஆனால் அவன் பெற்றோரால் திருமணம் தடைப்பட அந்த ஊருக்கே வந்து தங்கி, தன் காதலில் ஜெயிக்கிறான். இதில் பெண்ணின் பெரியப்பாவாக வரும் எம் என் நம்பியார் சிலம்பக் கலை வல்லுநர். அவர் பாக்யராஜுக்கு ஆதரவு தருகிறார். இந்தப் படத்தில் முக்கிய காட்சியாக பாக்யராஜ் லாவகமாக சிலம்பு சுற்றும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடியும் வரை காத்திரு படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், பாக்யராஜுக்கு தமிழக மக்களிடத்தில் ஒரு அப்பாவி இளைஞன் இமேஜே இருந்தது. அந்தப் பின்புலத்தில் அந்த சிலம்பும் சுற்றும் காட்சி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்ஜியாருக்கு அடுத்த படியாக திரையில் லாவகமாக சிலம்பம் சுற்றியவர் என்ற பெயரையும் பாக்யராஜுக்கு பெற்றுத் தந்தது. அதே போல ஆசியாவின் மிகப்பெரிய மதுரை தங்கம் தியேட்டரில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியாரின் படங்களுக்கு அடுத்து 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது. எம்ஜியார் தூறல் நின்னு போச்சு படத்தைப் பார்த்து பாக்யராஜின் சிலம்ப ஆட்டத்தை மிகவும் சிலாகித்தார். இதுவே பின்னாட்களில் பாக்யராஜை எம்ஜியார் தன் கலையுலக வாரிசு என அறிவிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது.

இந்தப் படத்தில் இன்று கேட்டாலும் மயக்கும் பாடல்கள், இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சிலம்ப சண்டைக் காட்சிகள் இளைஞர்களிடம் படத்தின் பால் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படங்கள் என்றில்லை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சண்டைக்காட்சிகளுக்கு என பிரத்யேக ரசிகர் கூட்டம் இருந்தது.
சினிமா தொடங்கி பல ஆண்டுகள் வரை புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்தன. அதில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. எம்ஜியார், ஆனந்தன் ஆகியோர் இந்த கத்திச் சண்டைகள் மூலமாக ஆரம்ப காலத்தில் மக்களைக் கவர்ந்தவர்கள். ஒரு முறை கம்யூனிஸ்ட் பேச்சாளர் ஒருவர் தங்கள் கொள்கையையெல்லாம் முழங்கிய பிறகு, அதெல்லாம் சரி, உங்க கட்சித்தலைவர் எங்க எம்ஜியார் மாதிரி சண்டை போடுவாரா என கூட்டத்தினர் கேட்ட வரலாறெல்லாம் தமிழகத்தில் உண்டு.

சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் மார்சியல் ஆர்ட்ஸ் முறையில் சண்டை அமைத்து மிகவும் குறைவான படங்களே வந்தன. மார்டன் தியேட்டர்ஸ் படங்களின் சண்டைக் காட்சிகளில் மட்டும் சிறிதளவு மார்சியல் ஆர்ட்ஸ் பிண்ணனி இருக்கும். பெரும்பாலான படங்களில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் தான். எப்படி பரதம், கதகளி, ஒடிஸி என எந்த வித நடன முறையும் இல்லாமல் புதுவிதமாக சினிமா நடனம் ஒன்றை உருவாக்கினார்களோ அதுபோல ஜூடோ,குங்பூ,கராத்தே என எந்த வித முறையும் இல்லாமல் சினிமாவுக்கென தனியாக சண்டைக் காட்சிகளை அப்போது அமைத்தார்கள். ஏன் இன்றும் கூட அப்படி கலந்துகட்டித்தான் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகிறார்கள்.
சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜியாரை வைத்து தயாரித்த படங்களில் சிலம்ப சண்டை முக்கிய இடம்பெறும். தாய்க்குப் பின் தாரம் படத்தில் எம்ஜியாருக்கும் சின்னப்பா தேவருக்கும் நடக்கும் சிலம்ப சண்டைக்காட்சி பிரசித்தம்.

70களின் பிற்பகுதியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமமாலினி நடித்த ஷோலே தமிழகத்தில் அபார ஓட்டம் ஓடிய போது அதே காலகட்டத்தில் புரூஸ்லி நடித்த எண்டர் தி ட்ராகனும் பட்டி தொட்டியெங்கும் ஓடியது. தொடர்ந்து புருஸ்லிக்கும் மார்சியல் ஆர்ட்ஸ் முறையிலான சண்டைக்காட்சிகளுக்கும் தமிழகத்தில் ஒரு ஈர்ப்பு வந்தது.
ஒரு திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். கல்லூரி மாணவர்கள், திருமணமாக இளைஞர்கள் காதல் சம்பந்தமான படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மத்திய வயதினர் கதையம்சம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். கலகலப்பான, மசாலா படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரை சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். 80களில் சினிமா போஸ்டர்களில் ஒரு ஆக்ஷன் ஸ்டில்லாவது இருந்தால் தான் அந்த படத்திற்குப் போகலாம் என முடிவெடுப்பார்கள். அவர்கள் பேச்சிலும் கூட இந்தப் படத்துல இத்தனை சண்டை, அந்தப் படத்துல அத்தனை சண்டை என்றே பேச்சிருக்கும். இப்பொழுதும் கூட பள்ளி மாணவர்கள் ஆக்ஷன் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். தற்கால பள்ளி மாணவர்களே ஒரு நடிகரின் எதிர்கால ரசிகர்கள் என்பதால் அவர்கள் விரும்பும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிப்பவர்களுக்கே தொடர்ந்து ரசிகர்கள் கிடைத்த வண்ணம் இருப்பார்கள்.

இதனாலேயே உச்ச நடிகர்கள் அனைவரும் தாங்கள் நடிக்கும் படத்தில் சிறப்பான சண்டைக்காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.
இந்த சண்டைக்காட்சிகள் பரவலாக ஆரம்பித்த உடன், அப்போது ஊர் ஊருக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போல திடீரென கராத்தே கற்றுத் தரும் பள்ளிகளும் முளைத்தன. பள்ளிகளில் கட்டாயம் ஒரு கராத்தே மாஸ்டர் இருந்து கராத்தே உடுப்புகள் விற்பனையை அதிகரிக்க உதவினார். யெல்லோ பெல்ட், பிளாக் பெல்ட் என டெக்னிக்கல் வார்த்தைகளும் தமிழில் புழங்க ஆரம்பித்தன. ஒரு ஆர்வத்தில் கராத்தே கிளாஸில் சேர்பவர்களில் 25 சதவிகிதம் கூட தொடர்ந்து பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். எப்படி ஜாக்கிங் போக வாங்கிய ஷூ செப்பல் ஸ்டாண்டில் ஒரு அலங்காரப் பொருளாக மாறுமோ அதுபோல இந்த கராத்தே உடைகளும் துணி அலமாரியில் காட்சிப் பொருளாகவே பல வீடுகளில் ஆகிப்போனது.

அந்த 25 சதவிகித ஆட்களில் 15 சதவிகிதத்தினர் ஓடு உடைப்பது செங்கல் உடைப்பதுடன் திருப்தி பட்டுக்கொள்வர். எஞ்சிய சிலரே ஏதாவது பெல்ட் வாங்கி தங்கள் பெயருடன் கராத்தே என்று போட்டுக் கொள்வார்கள்.
சண்டைப் பயிற்சியாளர்கள் கூட தங்கள் பெயர் டெரராக தெரிய வேண்டுமென தற்காப்புக் கலை பெயர்களைச் சூடிக் கொண்டார்கள். ஜூடோ ரத்னம், கொபுடோ கிருஷ்ணமூர்த்தி என.

தன் தனித்துவமான ஸ்டைலின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ரஜினி, சண்டைக் காட்சிகளிலும் தனி ஸ்டைலை பின்பற்றினார். அவரின் கைகள் மின்னல் வேகத்தில் அசைந்தாலும் வேகம் மட்டுமில்லாது அதில் ஸ்டைலும் கலந்திருக்கும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய ”கராத்தே” மணி ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இருவருக்குமான சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால் கராத்தே மணியின் சிஷ்யர்கள் அனைவருக்கும் கராத்தே மணி சண்டையில் தோற்றதாக இருந்தது பலத்த மன வருத்தத்தை கொடுத்தது என்பார்கள்.

அதன்பின் ரங்கா படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தார்கள். திருடனான கராத்தே மணி, ரஜினியின் பேச்சைக் கேட்டு நல்லவராக மாறுவார், ரஜினி, கராத்தே மணியின் பாதையைப் பின்பற்றி திருடனாக மாறுவார். இருவரும் எதிர் எதிரே சந்திக்கும் சூழல் வரும். கராத்தே மணி தன்னுடைய முறையான கராத்தே பாணியால் தாக்க, ரஜினி தன் அனாயாசமான ஸ்டைலால் அதை முறியடிக்க தியேட்டரில் விசில் பறக்கும். அவசர அடி ரங்கா என ஸ்டைலாக எதிரியின் நெற்றியில் அவர் வைக்கும் பஞ்ச் அப்போது பிரசித்தம். பள்ளி மாணவர்கள் தங்கள் கையில் தங்கள் பெயர் கொண்ட பேப்பரை வைத்துக் கொண்டு அடுத்தவனின் நெற்றியில் அது போல் பஞ்ச் வைப்பார்கள். நிஜமான சண்டை என்பது வேறு. மக்கள் ரசிக்கும் படியாக அதை திரையில் கொண்டு வருவது என்பது வேறு. ரஜினிகாந்திடம் அப்போது இருந்த வேகம் அவர் செய்யும் சண்டைகளை மிகவும் ரசிக்க வைத்தது. அந்த சண்டைக் காட்சிகளில் அவர் கலக்கும் குறும்பும் எல்லோரையும் தங்களை மறந்து களைகநிஜ வாழ்க்கையில் புகழ்பெற்ற கராத்தே மாஸ்டரை ரஜினி அனாயாசமாக வெல்வதை மக்கள் ரசிக்க அவருடைய வேகமான தனித்துவம் மிக்க ஸ்டைலே காரணம். எந்த வகை சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் அதை களைகட்ட வைக்க ரஜினியால் முடிந்தது.

முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் சிலம்பம், அடுத்த வாரிசில் கத்திச் சண்டை என அதற்கு முன்னர் மற்றவர்கள் சண்டையிட்ட விதங்களில் இருந்து சற்று மாறுபட்டு தன் ஸ்டைலைக் காட்டியிருப்பார் ரஜினி. ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் பாடல் காட்சியிலும் மாப்பிள்ளையில் ஊர் திருவிழாவில் நகைச்சுவை கலந்து செய்யும் சிலம்பு சண்டையிலும் தன் முத்திரையை பதித்திருப்பார்.

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். ஒரு பேட்டியில் கூட படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகன் யாரையாவது அடிக்க வேண்டும் என்று வெறியேறுவது போல சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும் என்று சொல்வார். சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ், பயிற்சி பட்டறை என பல முன்னெடுப்புகள் செய்தவர் கமல்ஹாசன். தன்னுடைய படங்களில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.

கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமண் என்னும் படத்தில் சிலம்பம் உள்ளிட்ட எல்லா வகையான கலைகளையும் பயன்படுத்தி இருப்பார்கள். எப்படி சலங்கை ஒலியில் எல்லா வகையான நடனமுறைகளையும் ஆடிக்காண்பிப்பாரோ அதேபோல நான் தான் ஒங்கப்பண்டா நல்ல முத்து பேரண்டா என்ற பாடலில் எல்லா வகையான சண்டைப் பயிற்சி முறைகளையும் செய்து காண்பித்திருப்பார். ஒரு வகையில் தூள் படத்தில் வரும் சிங்கம் போல என்னும் சண்டைக்காட்சியுடன் இணைந்த பாடலுக்கு இது ஒரு முன்மாதிரி. சகலகலா வல்லவன் படத்திலும் ஒரு சிலம்ப சண்டைக்காட்சி உண்டு. கமல்ஹாசனுக்கு சிலம்ப சண்டை மீது நல்ல ஈர்ப்பு உண்டு. தேவர் மகனிலும் ஒரு சிலம்ப சண்டைக் காட்சியை வைத்திருப்பார். தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் பெஞ்ச் வைத்துக் கொண்டு ஜாக்கிசான் படப்பாணியில் ஒரு சண்டைக்காட்சியை வைத்திருப்பார். எனக்குள் ஒருவன் திரைப்படத்திலும் கராத்தே கற்ற வாலிபராக தன் கேரக்டரை அமைத்திருப்பார்.

ராம நாராயணன் 84 ஆம் ஆண்டு அர்ஜூனை தன்னுடைய நன்றி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரம். ஆனால் சிறப்பாக கராத்தே சண்டை போடுவார். இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து கடமை,இவன்,வேஷம் என கராத்தே சண்டை போடும் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். எப்படி ஆனந்தபாபுவை டிஸ்கோ டான்சர் என மக்கள் நினைத்தார்களோ அது போல அர்ஜூனை கராத்தே மாஸ்டர் என்றே நினைத்தார்கள்.
அவரும் தான் நடித்த பெரும்பாலான படங்களில் மார்சியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சிகளில் திறம்பட நடித்து வந்தார். தாய் மேல் ஆணை என்னும் படத்தின் கதை மிகச் சாதாரணமானது. வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் அந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டு அதனாலேயே அந்தப் படம் கவனம் பெற்றது. தொடர்ந்து தன்னுடைய படங்களில் கராத்தே, குங்பூ கற்றவராகவே தன்னுடைய பாத்திரத்தை அமைத்திருப்பார். சுதந்திரம் படத்தில் குத்துச் சண்டை வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சண்டை காட்சிகளில் நடித்தே கிராமப் பகுதிகளில் அதிக ரசிகர்களைப் பெற்றவர் விஜயகாந்த். அவர் பெரும்பாலும் எந்த கலை பிண்ணனியும் இல்லாத சினிமா சண்டையையே போட்டு வந்தார். கால்களால் எதிரியை சுழன்று சுழன்று அடிக்கும் சண்டைதான் அவரின் ட்ரேட் மார்க். பரதன் படத்தில் கிக் பாக்ஸராக நடித்திருப்பார். பிரபுவும் குத்துச் சண்டைக் காட்சிகளில் நடித்தால் நம்பும்படி இருக்கும். அவரும் வெற்றி மேல் வெற்றி என்னும் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்தார். இதில் குத்துச் சண்டையில் இருக்கும் பாதுகாப்பின்மையால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை அமைத்திருப்பார்கள்.
அதற்கடுத்த தலைமுறையில் விஜய் பத்ரி திரைப்படத்திலும், ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியிலும் கிக் பாக்ஸர்களாக நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், இந்த மார்சியல் ஆர்ட்ஸ் வகை சண்டைகளை ஆக்ஷன் படங்களில், ஒரு பகையைத் தீர்த்துக் கொள்ள நாயகனுக்கு உதவும் கருவியாகவே வைத்திருப்பார்கள். கதாநாயகன் வீரமானவன் எனக் காட்டுவதற்கு அவன் பாக்ஸிங் போட்டியிலோ அல்லது கராத்தே போட்டியிலோ வெல்வது போல காட்டியிருப்பார்கள். அல்லது நகைச்சுவைக்காக (இன்று போய் நாளை வாவில் சோமா பயில்வான், கோவிலில் சிலம்ப ஸ்கூல் வைத்திருக்கும் வடிவேல்) உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

ராக்கி, கிக் பாக்ஸர் போன்ற ஆங்கில படங்களில் சாம்பியன்ஷிப் பெறுவதன் பொருட்டே கதை நிகழும், முழுக்க முழுக்க கதைக்களம் சண்டைப் பயிற்சிகளைச் சுற்றியே வரும். இங்கு அதுபோல நிறைய படங்கள் வருவதில்லை.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளராக வந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சண்டைக் காட்சிகளை அந்தப் படத்தில் அமைக்கவில்லை. ஆனால் அடுத்து சில ஆண்டுகள் கழித்து வந்த தசாவதாரத்தில் சிங்கன் நரகாசி என்னும் ஜப்பானிய தற்காப்புக்கலை நிபுணராக ஒரு வேடத்தில் நடித்திருந்தார். கமல் நடித்த இன்னொரு வேடமான பிளட்சர் அமெரிக்க தொழில் முறை கொலைகாரனாக நடித்திருப்பார். ஒரு ஜப்பானிய கலைக்கும் அமெரிக்க தற்காப்புக்கலைக்குமான சண்டைக் காட்சியாக அப்பட்த்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளியான முகமூடியில் நாயகன் சமுதாய பிரச்சினைகளை தீர்க்க சூப்பர் ஹீரோவாக மாறுவார். அவர் முறையான தற்காப்புக்கலை பயிற்சியை மேற்கொண்டவர். மேலும் வில்லனும் அதே தற்காப்புக் கலை பயின்றிருப்பவர். இவர்களுக்கிடையேயான மோதல் என கதைக்களம் பெரும்பாலும் மார்சியல் ஆர்ட்ஸ்ஸையே சுற்றிவரும்.

சென்ற ஆண்டில் வெளியான ஜெயம் ரவி நடித்த பூலோகம், மாதவன் நடித்த இறுதிச்சுற்று ஆகியவை பாக்ஸிங்கை கதைக்களமாக கொண்டவை. ஆனாலும் பூலோகத்தில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை சுரண்டுகின்றன என்பதும், இறுதிச்சுற்றில் பாக்ஸிங் அமைப்பில் நிகழும் அரசியலும் மையப்புள்ளியாய் இருந்தன. மற்ற நாட்டுப் படங்களில் குழந்தைகளுக்கான சினிமா, இளைஞர்களுக்கு, ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு என தனித்தனி வகைகளில் படமெடுப்பதால் ஆக்ஷன் படங்களில் முழுக்க முழக்க மார்சியல் ஆர்ட்ஸ்ஸை வைத்தே படமெடுக்க முடிகிறது. தமிழிலும் அம்மாதிரி வகை வகையாக படமெடுக்கும் சூழல் வரும்போது அம்மாதிரிப் படங்களை நாமும் எதிர்பார்க்கலாம்.

(அந்தி மழை ஜூலை இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி:அந்திமழை)