January 30, 2016

நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் திருமணம் பற்றிய தற்போதைய எதிர்பார்ப்புகள்.

1. மாப்பிள்ளையின் வயது கண்டிப்பாக 30க்குள்தான் இருக்க வேண்டும். மாப்பிள்ளையின் வயது என்ற கேள்விக்கு இருவத்தி என்று ஆரம்பித்தால்தான் காது கொடுக்கிறார்கள். 25க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சரி, என்ன வேலை என அடுத்து தொடர்கிறார்கள்.

2. அரசு வேலை, சாஃப்ட்வேர், மக்கள் அறிந்த பெரிய கம்பெனிகளில் வேலை என்றால்தான் அடுத்த கேள்வி தொடங்குகிறது.


3. முப்பதாயிரத்துக்கு குறைவான சம்பளம் என்றால் மேல படிக்கணும்னு ஆசைப்படுறா என அசால்டாக கட் செய்துவிடுகிறார்கள்.

4. அரசு வேலை, பேங்க் அல்லது பொறியியல் படித்தவர்கள் என்றால் சரி. டிப்ளமோ, பி ஏ என்றால் போய்யா என்று சொல்லி விடுகிறார்கள்.


5. தொப்பை, கண்ணாடி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். வழுக்கை என்றால் பெரிதும் யோசிக்கிறார்கள்

6. மிலிட்டரி, போலீஸ், வக்கீல் மற்றும் அரசியல் சார்புள்ள குடும்ப வரன்களை இந்த கேட்டகிரியில் இல்லாதவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.


7. வெளிநாட்டு வேலை மாப்பிள்ளை என்றால் பொறியியல் சார்பு பணி ஒன்றுக்கு மட்டுமே மார்க்கெட். மற்ற வேலைகளில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு சிரமம்தான்.
8. வீட்டில் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த அக்காவோ, திருமணமாகாத தங்கையோ ஏன் தம்பி இருந்தால்கூட யோசிக்கிறார்கள்.

9. மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணச் செலவுகளை ஏற்கவேண்டும், நாங்கள் இது மட்டும்தான் செய்வோம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார்கள்.

10. மாப்பிள்ளை வீட்டார் தங்களை விட வசதியில் ஒரு படி அதிகமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

January 28, 2016

ராதிகா

மதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.

சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.

பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.

ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.

எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.

இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.

பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.

ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்த்து. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,

பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.

இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.

அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு பாசமா தலையத் தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.

இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.

சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.

காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரம்ம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.

வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிரவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக் கேட்க குற்ற உணர்ச்சி தாங்காமல் ஷவருடன் சேர்ந்து அழத்தொடங்கினேன்.

January 27, 2016

தமிழ்நாட்டில் பானிபூரி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கோவை காந்திபுரம் ஏரியாவில் குடியேறிய போது ஆச்சரியப்படுத்திய விஷயம் அங்கே முக்குக்கு முக்கு இருந்த பானிபூரி கடைகள். மதுரை ஏரியாவில் டீ, வடைக்கடைகள் அப்படி இருக்கும். ஆனால் இது புதிதாக இருந்தது. சென்னையில் கூட அப்போது அந்த அளவுக்கு அதிகமான கடைகள் இருந்ததா எனத் தெரியவில்லை.

ஆனால் கோவையைப் பொறுத்தவரை அது மிக அத்தியாவசியம் எனத் தெரிந்தது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் காலை ஏழு மணிக்கே ஷிஃப்ட் தொடங்கிவிடும். மதியம் 1 மணிக்குள் மதிய உணவு சாப்பிட்டு விடுவார்கள். கல்லூரி,பாலிடெக்னிக் மாணவர்களும் கூட  மதியம் ஒரு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இரவு உணவு என்பது சராசரியாக ஒன்பது மணிக்கு மேலேயே சாப்பிடும்படி இருக்கும்.

தொலைக்காட்சி வருவதற்கு முன் ஆரம்ப 80களில் தெருவில் பையன்களுடன் சேர்ந்து காவியம்-மணிக்காவியமோ, கப் ஐஸோ இல்லை கபடியோ ஆடிக்கொண்டிருக்கும் போது, ஏதாவது ஒரு உத்தியை அவர்கள் வீட்டில் இருந்து வந்து கூட்டிக் கொண்டு போய்விடுவார்கள். உடனே அவங்க அவங்க வீட்டுக்கு அவரக்கா சோத்துக்குன்னு பாடிவிட்டு வீட்டுக்கு சாப்பிட ஓடுவோம். இரவு அதிகபட்சம் எட்டரை மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம். நைட் பத்துமணி என்பதெல்லாம் திருவிழா காலங்களில்தான் பார்த்திருக்கிறேன். இரவு சாப்பாட்டுக்கும் காலை சாப்பாட்டுக்கும் எப்படியும் 12 மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருக்கும். அதனால் தான் அது பிரேக் பாஸ்ட். ஆனால் தொலைக்காட்சி வந்த கடந்த 30 வருடங்களில் இரவு உணவு என்பது ஒவ்வொரு அரை மணி நேரமாக தள்ளிப்போய் சராசரியாக 10 மணி அளவில் தான் இப்போதெல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காலை பள்ளிக்கோ அலுவலகத்துக்கோ கிளம்ப சென்னை மற்றும் கோவை போன்ற மாநகரங்களில் காலை ஏழு மணிக்கே சாப்பிட வேண்டி இருக்கிறது. மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இருக்கும் இடைவேளை, இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையேயான இடைவெளியை நெருங்கிக் கொண்டு வருகிறது.

அதுபோலவே முன்னர் மதிய சாப்பாடு பெரும்பாலும் மாணவர்களும், ஏன் சில இடங்களில் அலுவலக வேலை பார்ப்பவர்களும் கூட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்லும்படியும் இருக்கும். இப்போதெல்லாம் பள்ளி,கல்லூரி மாணவர்கள்  சாப்பாடை எடுத்துச் சென்று சாப்பிடுகிறார்கள். அவர்கள் மாலை வீடு திரும்பும் போது அசுரப்பசி ஏற்படும். ஆனால் நம் வழக்கத்தில் மாலை சாப்பாடு செய்து தருவது என்பது மிகக் குறைவான வீடுகளிலேயே நடைமுறையில் உள்ளது.
அதுவும் கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடென்றால் சுத்தம். பிஸ்கெட் பாக்கெட்டுகளும், சிப்ஸ்,முறுக்கு பாக்கெட்டுகளும் தான் கிடைக்கும். அதே போல கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று திரும்பி வரும் பெண்களுக்கும் பசியாற வாகான உணவு வகைகள் குறைவு. திரும்ப திரும்ப டீயும், வடையும் சாப்பிட்டால் போரடிக்கும். தினமும் ஹோட்டலில் சாப்பிடவும் பொருளாதாரம் இடிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்ததே பானிபூரி கடைகள். ஹோட்டலில் ஒரு சாதா தோசை 35 ரூபாய், அதை சாப்பிட்டால் பசி அடங்காத அளவில்தான் இருக்கும். ஆனால் காளான் பிரை 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டால் இரவு உணவுவரை பசி தாங்கும். காலி பிளவர், மசால் பூரி, பேல் பூரி, தாகி பூரி என நிறைய வெரைட்டிகளும் கிடைக்கும். பாக்கெட் மணியிலேயே அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதனால் தான் பெண்களும் இயல்பாக பானிபூரி கடைகளில் தென்படுகிறார்கள். டீக்கடைகளில் சிகரெட்,பீடி புகைத்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு ஜாடை மாடையாக பேசுவது கூட நடக்கும். ஆனால் இந்தக் கடைகளில் அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் பிற மாநிலத்துவர்கள் நடத்தும் கடை என்றால் வெளியூரில் தொழில் செய்வதால் பெண்களை மிக மரியாதையுடன் நடத்துவார்கள்.

நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பல உபாதைகள் வரும் வாய்ப்பு இருந்தாலும் வேறு வழியில்லாமல் தட்டேந்தி அங்கே நிற்க வேண்டியிருக்கிறது. 

January 19, 2016

இயக்குநர் சரண்

1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில் ஆசை, வான்மதி, காதல் கோட்டை என வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் 97ல் இருந்து வெளியான உல்லாசம் முதலான படங்களின் தோல்வியால் காதல் மன்னன் படத்திற்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.

படத்தின் பாடல்கள் வெளியாகி, நல்லாயிருக்கு என்ற பேச்சு கிளம்பியது. எம்
எஸ் விஸ்வநாதன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நடிகர் விவேக்
படத்தில் இணை இயக்குநராக பணிபுரிகிறார் என தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிபட்ட செய்திகளாலும், பாலசந்தரின் அஸிஸ்டெண்ட், ஆனந்த விகடனின் முன்னாள் கார்டூனிஸ்ட் என்ற பின்புலங்கள் சரணுக்கு இருந்ததாலும் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவானது.

படமும் ஏமாற்றாமல் இருந்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜெயாங்கேயின் ஒன்லைன் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து கைப்பிடிக்கும் கதை.

ஆனால் படத்தின் முக்கிய அம்சமே படத்தில் கதையுடன் சேர்ந்து வந்த சென்னை பேக்டிராப் தான். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. நாயகன் ஒரு டூ வீலர் சர்வீஸ் செண்டரில் மெக்கானிக், நாயகியின் தந்தை செக்யூரிட்டி சர்வீஸ் வைத்து நடத்துபவர். பரதவாஜின் இசை, விவேக்கின் காமெடி கை கொடுக்க படம் ஓரளவு ஓடியது.

காதல் மன்னனின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படமான அமர்க்களத்தை
இயக்கினார் சரண். அஜீத்-ஷாலினி ஜோடி. காதல் மன்னன் படத்தில் உருவான ஈகோ பிரச்சினையால் சரணும் விவேக்கும் பிரிந்திருந்தார்கள். பிக்ஸ் யுவர்
எனிமி என்னும் கேப்சனோடு அமர்க்களம் படம் ஆரம்பமானது. தியேட்டரில் தங்கி இருக்கும் ஒரு ரவுடி, போலிஸ் கமிசனரின் மகளைக் காதலிக்கும் கதை. பட ஷூட்டிங்கின் போதே அஜீத்-ஷாலினி காதல் பத்திரிக்கைகளில் வெளியாகி படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. மாம்பலம் சீனிவாசா தியேட்டர் எனும் பேக்டிராப், வைரமுத்துவின் கேட்டேன் கேட்டேன் பாடல் என தொடர்ந்து செய்திகள் அடிபட்டு படமும் ஒரு எதிர்பார்ப்போடு வந்து நன்கு ஓடியது. அஜீத்துக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும்பங்கு உண்டு.

அடுத்து சரண் இயக்கிய படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் முழுக்க
முழுக்க அன்றைய சென்னையை பிரதிபலித்த படம். கப்பல் வேலைக்காக கிராமத்தில் இருந்து வந்து தங்கியிருக்கும் நாயகன் (பிரசாந்த்) , பேஜர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகியை (லைலா) காதலிக்க, பிரசாந்த் தங்கியிருக்கும் வீட்டிலிருக்கும் மருத்துவ மாணவி (சிம்ரன்) பிரசாந்தை ஒரு தலையாய் காதலிக்கிறார். தன் காதலைப் பெற எந்த அளவுக்கு அவர் இறங்குகிறார் என்பதுதான் படம். லைலாவை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் ராகவேந்திரா லாரன்ஸ்.

இப்போது புழக்கத்தில் இல்லாத அப்போது பிரபலமாயிருந்த பேஜர், 23 சி, 41 டி
பேருந்துகள், பஸ் டே என முழுக்க முழுக்க சென்னை பிளேவரோடு இருந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது
நம்ம ஏரியாவைப் பார்த்த மாதிரியே இருந்தது என சென்னை இளைஞர்களை பீல் செய்ய வைத்த படம். நல்ல வெற்றியும் பெற்றது.

இதே ஆண்டுதான் பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக வைத்து இயக்கிய தாஜ்மஹால் படம் வெளியாகி தோல்வி அடைந்திருந்தது. தன் மகனை நிலை நிறுத்துவதற்காக சரணை அணுகினார் பாரதிராஜா. ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க, ஈவ் டீஸிங்கை மையமாக வைத்து “அல்லி அர்ஜுனா” படம் தயாரானது. இதில் சென்னையின் நடைபாதை உணவகம் ஒரு பகுதியின் பிண்ணனியாக வந்தது. ரஹ்மான் ஒரு இந்திப் படத்திற்கு கொடுத்திருந்த பாடல்களையே இதற்கு கொடுத்தார். இந்தப்
படம் படுதோல்வி,

இந்தப் படம் உருவாக்கத்தில் இருக்கும் போதே, ஏவி எம்மின் தயாரிப்பில்
படம் இயக்கும் வாய்ப்பு சரணுக்கு கிடைத்தது. அதற்கு சில மாதங்கள்
முன்புதான் அஜீத்குமாரை நாயகனாக வைத்து ஏறுமுகம் என்னும் படத்தை
தொடங்கினார் சரண். ஆனால் அதில் இருந்து அஜீத் விலகிக்கொள்ள படம்
கைவிடப்பட்டது. இதே கதையை, விக்ரமை நாயகனாக வைத்து ஜெமினி என்னும் பெயரில் இயக்கினார் சரண். பட பூஜையன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். இந்தப் படம் வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப்படம் உறுதி செய்தது. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா செண்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்.

அடுத்து மாதவனோடு ”ஜே ஜே” படத்தில் களமிறங்கினார் சரண். காதலைச் சொல்லாத காதலியைத் தேடிப் பயணிக்கும் கதைக்கு பக்கபலமாக எம் எல் ஏ ஹாஸ்டலில் தங்கியிருப்பது. அவ்வளவாக தமிழ் திரையில் வந்திராத சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, ஜாதிக் கட்சி நடத்தும் வில்லன்கள் என சுவராசியமான சென்னை பிண்ணனிகள். பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது.

மீண்டும் அஜீத்துடன் இணைந்து அட்டகாசம் படத்தை ஆரம்பித்தார் சரண்.
கமல்ஹாசனை வைத்து முன்னாபாய் எம் பி பி எஸ்ஸை ரீமேக் செய்யும் வாய்ப்பும் சரணுக்கு கிடைத்தது. குறுகிய காலத்தில் சரண் கமல்ஹாசனை வைத்து இயக்கிய வசூல்ராஜா நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான அஜீத் இருவேடங்களில் நடித்த அட்டகாசமும் தோல்வியில் இருந்து தப்பியது.

அடுத்து ஜெயம்ரவி-காம்னா ஜெத்மலானி நடிக்க “இதயத் திருடன்” படத்தையும், ஆர்யா-கீரத் நடிக்க வட்டாரம் படத்தையும் இயக்கினார் சரண். இதயத்திருடன் படுதோல்வி. வட்டாரத்தில் வட சென்னை துப்பாக்கி வியாபாரம் என்னும் பிண்ணனி படத்தை ஓரளவு தப்பிக்க வைத்தது. அடுத்து மூன்றாடுகள் இடைவெளிக்குப் பிறகு வினய்-காஜல் அகர்வால் நடிக்க எஸ்.ராமகிருஷ்ணன் வசனத்தில் மோதி விளையாடு வெளியானது. இந்தப்படமும் படுதோல்வி.

அடுத்ததாக, சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான ஹீரோ அஜீத்குமாரை வைத்து “அசல்” படத்தை இயக்கினார். இந்தப்படமும் தோல்விப் பட்டியலில் இணைந்தது. அடுத்ததாக வினய் நடிக்க, ஆயிரத்தில் இருவர் என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சரண்.

சரண் இயக்கத்தில் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர், வசூல் சாதனைப்
படங்களும் கொடுத்தவர் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திணற என்ன காரணம்?

சரணின் படங்கள் எதுவுமே வலுவான கதையைக் கொண்ட படங்கள் இல்லை. ஆனால் எல்லாப் படங்களிலுமே ஒரு புதுமையான முடிச்சு இருக்கும். கதைப்
பிண்ணனியில் வலுவான சம்பவங்கள் இல்லாவிட்டாலும் சென்னைப் பிண்ணனியில் அதுவரை அவ்வளவாக திரையில் வராத சம்பவங்கள், உரையாடல்கள் இருக்கும்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாயிருக்கும். பட வெளியீட்டுக்கு முன்னதாக படம்
பற்றி ஒரு பாசிட்டிவ்வான ஹைப் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றை
எல்லாம் தாங்கிப்பிடிக்க ஒரு வலுவான ஹீரோவும் படத்தில் இருப்பார்.
இவற்றில் எது குறைந்தாலும் படம் நிச்சயம் தோல்வி அடையும்படிதான்
இருக்கும். அல்லி அர்ஜுனாவை எடுத்துக் கொண்டால் படத்தின் திரைக்கதையை வலுவாக்கும் காட்சிகள் மிக சாதாரணமாக அமைந்திருந்தன. அதற்கு காரணம் நாயகன் – நாயகி. ஒரு உணர்ச்சிமயமான ஈவ் டீசிங் தொடர்பான பகுதி இருந்தும் படம் மனதில் ஒட்டவில்லை.

இதயத்திருடனும் வட்டாரமும் அப்படித்தான். சரணின் சாதாரண காட்சி, வசனங்களை தூக்கி நிறுத்த ஜெயம் ரவியாலும், ஆர்யாவாலும் முடியவில்லை. மோதி விளையாடு வினய்யும் பெர்பார்ம் செய்யக்கூடிய அளவு பெரிய நடிகரில்லை. மேலும் இந்தப் படங்களில் சரணின் பலமான சென்னை பிண்ணனி ஏதும் சிறப்பாக அமையவில்லை. பார்வையாளர்களால் படத்தில் காட்டப்பட்ட பிண்ணனியுடன் ஒன்ற முடியவில்லை.

அசல் படம் இன்னும் மோசம். நல்ல தயாரிப்பாளர், பெரிய ஹீரோ இருந்தும் மிக சாதாரணமான கதையை தேர்ந்தெடுத்திருந்தார். சிவாஜியை மனதில் வைத்து எழுதப்பட்ட பாட்டு என வைரமுத்துவால் சிலாகிக்கப்பட்ட “என் தந்தை தான்” பாடல் ஒரு நியாயமான கடத்தல்காரருக்கு?! வைக்கப்பட்டது. சரணின் பலமே சென்னைப் பிண்ணையில் கதை அமைப்பதுதான். அசலில் சம்பந்தமில்லாத இடம், கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூட பரிச்சியமில்லாமல் வைத்திருந்தார்.

நல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்குவது, கேட்சியான வரிகளை பாடல் ஆசிரியரிடம் இருந்து வாங்குவது, என திறமைகள் கொண்ட சரண், கதைகளையும் நன்கு செலக்ட் செய்திருந்தால் இந்தக் கடைசி 11 ஆண்டுகளில் ஒரு படமாவது சொல்லிக் கொள்ளும்படி கொடுத்திருக்கலாம். காதல் மற்றும் தாதா சம்பந்தமான கதைகளையே தொடர்ந்து கையாண்டு வந்திருக்கார் சரண். எனவே சில படங்களுக்குப் பின்னர், தன் ஆரம்பகாலப் படங்களுக்கு ஏற்படுத்திய படம் பார்க்கும் ஆர்வத்தை மக்களிடையே அவரால் அதற்குப் பின்னர் ஏற்படுத்த முடியவில்லை.

சரண் இயக்கும் படங்களுக்கான பார்வையாளர்கள் என்று பார்த்தால் நகர
இளைஞர்களும், நடுத்தர வர்க்க மக்களும் தான். அவர்களுக்கு அப்பீலாகும்
கதைகளை விட்டு விலகி எடுத்த படங்களில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

மேலும் சென்னையின் அடையாளங்களும் விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளில் சென்னையின் அடையாளமாக கருதப்பட்ட பல இடங்கள் தங்கள் இடத்தை இழந்துவிட்டன. அதற்குப்பதிலாக பல புதிய இடங்கள் வந்துவிட்டன. வெங்கட் பிரபுவின் “சென்னை-28” மற்றும் பா.ரஞ்சித்தின் அட்ட கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்கள் சென்னையை பிண்ணனியாக மட்டும் கொள்ளாமல் சென்னையின் அசல் வாழ்க்கையையே இறங்கி காட்டி விட்டன.

சரண் தற்போது இயக்கி வரும் “ஆயிரத்தில் இருவர்” கூட ஹவாலா பிண்ணனியில் அமைந்த கதைதான் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. தாதாயிசம்,ஹவாலா கதைகளில் எல்லாம் இப்போது மிகவும் இறங்கி, அக்கு வேறு ஆணி வேறாக அலசி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சரண் தன் மேலோட்டமான பாணியில் இந்தப் படத்தை இயக்காமல் ஆழமான காட்சி அமைப்புடன் இயக்கினால் வெற்றி நிச்சயம் அவருக்கு.