Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

May 05, 2016

ஸ்ரீகாந்த்

ஐபிஎல்-லில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டுகளுக்கு விலக்கப்பட்டதில் அந்த அணியின் உரிமையாளர், ஸ்பான்ஸர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களை விட மிக அதிகமாக கவலைப்பட்ட ஓர் ஆத்மா இருக்குமென்றால் அது சென்னை நகரின் கிரிக்கெட் ரசிக ஆத்மாவாகத்தான் இருக்க முடியும். கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்த விளையாட்டைப்பற்றி அதிகமான தகவல்களும், நுணுக்கங்களும் அறிந்த ஏராளமான ரசிகர்கள் ஒரு ஊரில் இருக்கிறார்களென்றால் அது சென்னையாகத்தான் இருக்கும்.

2001-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில், பாலோஆன் வாங்கி, டெஸ்ட் மட்டுமல்லாது சீரிஸையையே இழக்கும்நிலையில், விவிஎஸ் லக்ஸ்மன் 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்களும் குவித்து ஒருநாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்த நாளில்தான் சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் மகத்துவத்தை நான் புரிந்து கொண்டேன்.

அன்று வேலை நாள். இந்த அபார ஆட்டம் பற்றி கேள்விப்பட்ட, வேலைக்குச் சென்றிருந்த எல்லோரும் ஹைலைட்ஸ் பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தார்கள். நாங்கள் இருந்த மேன்சனில் டிவி பார்க்க பிளாக் டிக்கெட் கொடுக்கும் அளவுக்குக் கூட்டம். கிட்டத்தட்ட திருவல்லிக்கேணி மேன்சன் முழுவதும் இதே கதைதான். ஹைலைட்ஸ் முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே டீ குடிக்க கிளம்பினோம். அந்த ஏரியா முழுவதுமே அந்த ஆட்டத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். டீக்கடையில் இருந்த சிலர் இதற்குமுன் இதுபோல நடந்த நிகழ்வு, இம்மாதிரியான ஆட்டங்கள், லக்ஸ்மனின் ஷாட் செலக்ஷன் என சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்தநாள் வந்த எல்லா முன்னணி ஆங்கில நாளிதழ்களிலும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பழைய ஆட்டங்கள், நுணுக்கங்கள் எல்லாம் அப்படியே பிரபல ஆட்டக்காரர்கள்/நிபுணர்கள் எழுதும் பத்திகளில் வந்திருந்தது.

இந்த 20-20 மேட்சுகளை விட்டுவிடுங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பேச நேரமிருக்காது. கூச்சலும் அதிகம் இருக்கும். போதாக்குறைக்கு இசை, நடனம் வேறு. சேப்பாக்கத்தில் ஒருநாள் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் கண்களை ஆட்டத்துக்கும் காதுகளை அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து விடவேண்டும். எவ்வளவு தகவல்கள் கிடைக்கும் தெரியுமா? இந்த பிளேயர், எந்த ரஞ்சி அணிக்கு ஆடினார், அவரின் பலவீனம் என்ன? பலம் என்ன? என பேசிக் கொண்டே இருப்பார்கள். உலகின் அத்தனை பிளேயர்களின் ரெக்கார்டும் அத்துபடி அவர்களுக்கு.

அதுபோக பெரும்பாலான ஐபிஎல் டீம்களில் கோச்சிங் ஸ்டாப்பாக இருப்பது சென்னை பிளேயர்கள் தான். இதன்மூலம் சென்னை கிரிக்கெட் பிளேயர்களின் கிரிக்கெட் தொடர்பான அறிவை தெரிந்து கொள்ளலாம். டெல்லி அணிக்கு சேகர், பெங்களூரு அணிக்கு பரத் அருண், மும்பை அணிக்கு ராபின் சிங், ஐதரபாத் அணிக்கு கன்சல்டண்டாக ஸ்ரீகாந்த் என தங்கள் பங்கை ஆற்றிவருகிறார்கள். ஸ்ரீதரன் ஸ்ரீராம் டெல்லி அணிக்கு முன்பு துணை கோச்சாக இருந்தார். அது மட்டுமல்ல உலகுக்கே கோச்சுகளை சப்ளை செய்யும் ஆஸ்திரேலியா அணிக்கே பங்களாதேஷ் பயணத்திற்கு கோச்சாகவும், மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணியின் இந்திய பயணத்திற்கு கோச்சாகவும் இருந்த பெருமைக்குரியவர்.

இவ்வளவு இருந்தும் பெரும் சோகம் என்னவென்றால், சுதந்திரத்துக்குப் பின் சில ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்திய அணியில் தொடர்ச்சியாக ஆடும் வாய்ப்பை தமிழ்நாட்டின் சார்பில் பெற்றிருக்கிறார்கள். தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் வெங்கட்ராகவன், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த், ஆல்ரவுண்டர் ராபின்சிங், இப்போது அஸ்வின். லெக் ஸ்பின்னர் சிவராமகிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், குமரன் என அவ்வப்போது இடம்பெற்று காணாமல் போனவர்களும் அதிகம்.

இவர்களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஸ்ரீகாந்த் தனிரகம். பெரும்பாலானோர் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ஆடுவதை ஜெயசூர்யா - கலுவித்தரன இணை தொடங்கியதாகவே நினைப்பார்கள். அது 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை கேப்டன் ரணதுங்காவால் கட்டமைக்கப்பட்டது. கீழ்வரிசை ஆட்டக்காரரான ஜெயசூர்யாவை ஓப்பனிங் இறங்கி ஆட வைத்தார். அது 96 உலகக் கோப்பையில் வெற்றிகரமான வியூகமானது. ஆனால், அதற்கு முன்னரே 92 உலகக் கோப்பையில் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோ, மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் கிரேட் பாட்சை அதுபோல ஆட வைத்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருந்தார். நம் ஸ்ரீகாந்த் தான் இதற்கு முன்னோடி. அவர் 80-களிலேயே இந்தமுறையில் ஆடிவந்தார். அதை அப்போது ‘ஓவர் தி ஹெட்ஸ்’ ஆடுதல் என்று அழைப்பார்கள். ஓரிருவரைத் தவிர எல்லோரும் உள்வட்டத்தில் நிற்கும்போது, ஸ்ரீகாந்த் பந்துகளை அவர்களின் தலைக்கு மேல் அடித்து ஆடுவார்.

90-களில் எப்படி சச்சின் அவுட்டானால் டிவியை அணைத்து விடுவார்களோ, அதுபோல 80-களில் ஸ்ரீகாந்த் அவுட்டானால் பார்த்துக்கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசிப்பேர் எழுந்து வெளியே சென்று விடுவார்கள். அப்போது அவர்தான் பேட்டிங்கில் ஒரே எண்டர்டெயினர். அடுத்து மொஹிந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார், அசாருதீன், ரவிசாஸ்திரி என நிதானமான ஆட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள். கபில்தேவ் வேண்டுமானால் மக்கள் ரசிக்கும்படி அடித்து ஆடுவார். எனவே ஸ்ரீகாந்த் அவுட்டானால் டிவி ரூம் காலியாகிவிடும். சச்சின் தன் முதல் சில மேட்சுகளில் அடித்து ஆடும்போது அவரை அடுத்த ஸ்ரீகாந்த் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆஸ்திரேலிய பெர்த்தில் சச்சின் சதம் அடித்த பின்னர்தான் அடுத்த ரிச்சர்ட்ஸ், அடுத்த பிராட்மென் என படிப்படியாக நகர்ந்தார்.

ஸ்ரீகாந்த் ஸ்கொயர் கட் அடிப்பதில் கில்லாடி. கவர் ட்ரைவ், ஸ்ட்ரெயிட் ட்ரைவ், மிட் விக்கெட் திசையில் அடிக்கப்படும் புல் எல்லாம் சிறப்பாக ஆடுவார். அவரது பலமே அற்புதமான கண் மற்றும் கை ஒருங்கிணைப்புத்தான். ஆட்டத்தில் பெரிய டெக்னிக் எல்லாம் இருக்காது. ஆப் ஸ்டம்புக்கு சற்று தள்ளி விழுந்து அவுட்ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு திணறுவார். அதேபோல ஷாட் செலெக்ஷன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையில்லாத பந்துகளில் கூட அவுட்டாகி வெளியே சென்றுவிடுவார். சேவாக்கை ஸ்ரீகாந்தின் வாரிசு என்று கூடச் சொல்லலாம். ஸ்பின்னரை நன்கு ஆடக்கூடியவர் ஸ்ரீகாந்த். சென்னையில் விளையாட்டாகச் சொல்வார்கள், ‘இங்க ஒரு தாத்தா கூட வாக்கிங் ஸ்டிக்கால ஸ்பின்னரை ஆடிவிடுவார்’ என்று. சென்னைக்காரர் ஸ்ரீகாந்த் ஆடாமல் இருப்பாரா? 87 உலகக்கோப்பை பைனலில் கேட்டிங் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி அவுட் ஆகி கோப்பையை இழந்து புகழ்பெறுவதற்கு முன்னரே, அந்தத் தொடரில் நியுசிலாந்து ஸ்பின்னர் தீபக் பட்டேலுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் எல்லாம் ஆடியவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்பின்னர்கள் வரும்போது பெரும்பாலான மேட்சுகளில் அவர் இருக்கமாட்டார்.

களத்தில் ரிலாக்ஸாக இருக்கமாட்டார் ஸ்ரீகாந்த். தடுத்தாடுவதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகிக்கொண்டே இருந்தால்தான் அவரும் ரிதத்துடன் விளையாடுவார். பந்து வீச்சுக்கு இடையிலும் கூட ஸ்கொயர் லெக் திசையை நோக்கி நடப்பதும் திரும்புவதுமாக இருப்பார்.
பேட்ஸ்மென்களின் சொர்க்கமான இந்தியாவில் ஒரே ஒரு டெஸ்ட் செஞ்சுரிதான் ஸ்ரீகாந்த் அடித்திருக்கிறார் என்றால் அவரின் பொறுமையை நாம் அறிந்து கொள்ளலாம். இன்னொரு சதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில். அப்போதைய கிரிக்கெட் பீல்டிங் தரத்துக்கு அவர் ஒரு நல்ல பீல்டர், பார்வர்ட் ஷாட் லெக்கில் நின்று பல நல்ல கேட்சுகளைப் பிடித்துள்ளார். அவ்வப்போது பந்து வீசி விக்கெட் எடுக்கவும் செய்வார்.

இந்தியா வென்ற 83 உலகக் கோப்பையிலும் சரி, 85 உலகத் தொடர் கோப்பையிலும் சரி அவரின் சிறப்பான பங்கு இருந்தது. 1987 உலகக் கோப்பை போட்டியில், 83-ல் பெற்ற கோப்பையை தக்கவைக்க வேண்டுமென்ற முனைப்புடனும், சொந்த நாட்டில் விளையாடும் அனுகூலத்துடனும் விளையாடிய இந்திய அணி, செமி பைனலில் இங்கிலாந்துடன் தோல்வி அடைந்ததும் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார். மும்பையின் திலீப் வெங்சர்க்கார் அணித் தலைவரானார். அவரும் ஓரிரு வருடங்கள்தான் நீடித்தார். அதன்பின் அந்தப் பொறுப்பு ஸ்ரீகாந்த்துக்கு வந்து சேர்ந்தது.

ஸ்ரீகாந்த்துக்கு முதல் சோதனையாக வந்தது பாகிஸ்தான் சுற்றுப்பயணம். இம்ரான், வாசிம், வக்கார் யூனுஸ் என பந்து வீச்சாளர்களும், மியாண்டட், சலிம் மாலிக், இஜாஸ், ரமீஸ் என பேட்ஸ்மென்களும் நல்ல பார்மில் இருந்த அணி. இந்திய அணியில் 16 வயது நிரம்பியிருந்த சச்சின் ஆச்சர்யகரமாக சேர்க்கப்பட்டிருந்தார். நல்ல பவுலர்களும் இல்லை. மனோஜ் பிரபாகர்தான் முக்கிய பந்து வீச்சாளராக அந்த அணியில் ஆடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த டீமை வைத்துக் கொண்டு டெஸ்ட் தொடரை இழக்காமல் நாடு திரும்பினார் ஸ்ரீகாந்த். இது அந்தக் காலத்தில் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்குப் பின் பெரிய காரணம் ஏதுமின்றி ஸ்ரீகாந்த் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அசாருதீன் கேப்டன் ஆக்கப்பட்டார். அதன்பின் இரண்டாண்டுகள் ஆடி ஸ்ரீகாந்த் ஓய்வு பெற்றுக்கொண்டார். பின் இந்திய அணியின் செலக்டராக, மேனேஜராக பல பொறுப்புகள் வகித்து, தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் ஆடிய காலகட்டத்தில் தொடக்க ஆட்டக்காரருக்கு அவ்வளவு போட்டி கிடையாது. மத்திய வரிசையில் இடம்பிடிக்க பெரிய போட்டியே இருக்கும். தொடக்க ஆட்டத்தில் கவாஸ்கருக்கு ஓரிடம் நிரந்தரம். இன்னொரு ஆட்டக்காரருக்கு பெரிய போட்டி இல்லாமல் இருந்தது. சித்து, ராமன் லம்பா ஆகியோர் 80-களின் பிற்பகுதியில்தான் வந்தார்கள் என்றாலும் அவர்களும் மூன்றாம் இடத்துக்கும் கருத்தில் கொள்ளப்பட்டார்கள். இவ்வளவு ஏன் கவாஸ்கர் 87-ல் ஓய்வு பெற்றதும் தொடக்க ஆட்டக்காரருக்கு ஆள் இல்லாமல் அருண்லாலை எல்லாம் இறக்கிப் பார்த்தார்கள். அதன் பின்னரும்கூட பல ஆண்டுகள் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் நமக்கு அமையவே இல்லை. சேவாக் கூட மத்திய வரிசை ஆட்டக்காரராக நுழைந்து, பின் தொடக்க ஆட்டக்காரர் ஆனவர்தானே? ஏன், இன்றும் கூட டெஸ்ட்மேட்சுகளில் பலமான தொடக்க ஜோடி நமக்கு இல்லையே?

ஸ்ரீகாந்த்துக்குக் கிடைத்ததெல்லாம் அருமையான வாய்ப்புகள். இப்போது போல தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் காலமல்ல. இப்போது ஒரு பேட்ஸ்மெனின் டெக்னிக் தவறாக இருந்தால் அதை திருத்தக்கூட நேரமில்லாமல் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், அப்போது போட்டித் தொடர்களுக்கு இடையே நல்ல இடைவெளி இருக்கும். ஸ்ரீகாந்த் தன் பலவீனங்களை திருத்த முயற்சி எடுத்ததே இல்லை. சில நடிகர்கள் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் அவுட்டாகும் வரை நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதைப் போல ஆரம்பக் காலத்தில் இருந்த திறமையுடனேயே ஓய்வுபெறும் வரையில் இருந்தார்.

சென்னைக்காரர், ஆகையால் அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை. தேர்வாளராக, மேனேஜராக அதை அவர் நிரூபித்துள்ளார். நல்ல கவனிப்பாளர். பல பேட்டிகளில் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் பின்னர் நடந்துள்ளன. தன் இடத்துக்குப் பெரிய போட்டி இல்லாததாலோ என்னவோ தன் ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அவர் பெரிய கவனம் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

April 18, 2016

மொஹிந்தர் அமர்நாத்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு இப்போது கடுமையான போட்டி. ஒரு முறை அணியில் இடம்பிடித்து விட்டால் போதும், ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகை கிடைக்கும். அவர்களின் சொந்த மாநிலத்தில் ஏராளமான விளம்பர வாய்ப்புகள் கிட்டும். ஏதாவது ஒரு மேட்சில் குறிப்பிடும்படி ஆடிவிட்டால் அரசியல் காரணங்களுக்காக அந்தந்த மாநில அரசுகள் வீட்டு மனை ஒதுக்கும். பின்னர் அகடமி ஏதாவது ஆரம்பிக்கலாம். அவ்வளவு ஏன் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி,பள்ளி ஆண்டு/விளையாட்டு விழாக்களில் கலந்து கொண்டாலே ஒரு வசதியான வாழ்வை எட்டி விடலாம்.

ஆனால் 1970களில் இப்படி இல்லை. பட்டோடி,கவாஸ்கர் போன்ற சிலருக்கே விளம்பர வாய்ப்பு கிடைக்கும். 83 உலக்கோப்பையை வென்று கொடுத்த பின்னர் ஆனானப்பட்ட கபில்தேவுக்கே பாமோலிவ் ஷேவிங் கிரீம் விளம்பரம் தான் கிடைத்தது. பூஸ்ட் விளம்பரம்தான் கபில்தேவுக்கு விளம்பர உலகில் கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம். மிகவும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிக்காட்டினால் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட வாய்ப்புக்கிடைக்கும். இப்போது ஐபிஎல்லில் விளையாடவரும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவது போல் எல்லாம் தாங்கமாட்டார்கள். ஓரளவு சம்பளம்தான். இனப் பாகுபாடு வேறு வீர்ர்களின் ஓய்வறையில் இருக்கும்.

எனவே ஒரு கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் வாரியம் நிர்ணயிக்கும் சம்பளம் மட்டுமே கிடைக்கும். அதுவும் போட்டிகளில் விளையாடும் நாட்களுக்கு மட்டும்தான். ஆண்டுக்கு அதிகபட்சம் 12 டெஸ்ட் போட்டிகள் நடந்த காலம் அது. 80க்குப் பின்னரே ஒருநாள் போட்டிகள் அதிகரித்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளும், இந்தியன் ரயில்வே மற்றும் சில தொழிற்சாலைகளும் யாராவது ஒரு வீரரை தங்கள் நிறுவனத்தில் கௌரவ வேலை கொடுத்து குறிப்பிட்ட சம்பளம் கொடுப்பார்கள்.

எனவே வசதியான பின்புலத்தில் இருந்து வராத கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றதும், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பார்கள். அதனால் தான் கிரிக்கெட் வீரர் நலநிதி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கிடைக்கும் டிக்கெட் மற்றும் விளம்பர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவிகித தொகையைக் கொடுத்து போய் வா ராசா என்று அனுப்பிவிடுவார்கள்.

இது ஊடகங்களின் காலம். இப்போது ஒரு வீரர் ஏதாவது ஒரு மேட்சில் நன்றாக விளையாடிவிட்டாலே ஊடகங்களின் மூலம் எப்படியாவது பொதுமக்கள் வரை சென்று சேர்ந்து விடுகிறார். ஆனால் அப்போது டெஸ்ட் மேட்சுகளை எலைட் ஆடியன்ஸ் மட்டும் பார்ப்பார்கள். ரஞ்சி,துலிப் கோப்பை போட்டிகளை எல்லாம் ஸ்கோரர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். பெரிய ஆட்டக்காரர்கள் ஆடினால் மட்டும் சுமாராக கூட்டம் வரும். அம்பயர்களுக்கு கொத்தனார்களுக்கு கொடுக்கும் அளவுக்குத்தான் சம்பளம் இருக்கும். அம்பயர்கள் பெரும்பாலும் ஆட்டோவில்தான் மேட்சுகளுக்கு வந்து இறங்குவார்கள். ஒருமுறை மும்பையில் போக்குவரத்து நெரிசலால் ஆட்டோ கிடைக்காமல் ஒரு அம்பயர் தாமதமாக வந்து அரைமணி நேரம் ஆட்டம் தாமதமாக ஆரம்பித்தது எல்லாம் உண்டு.

1970களில் இந்திய அணித்தேர்வு என்பது வெளிப்படையாக இருக்காது. ஒருவர் உயிரைக்கொடுத்து அபாரமாக ஒரு போட்டியில் ஆடினாலும் கூட அது கவனிக்கப்படாமல் போக ஏராளமான சாத்தியங்கள் உண்டு. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு மட்டும்தான் இந்தியா முழுவதும் யார் யார் நன்றாக தற்போது விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் தங்களின் நலனுக்கு ஏற்பத்தான் அணியை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை பேர் என்ற கோட்டா சிஸ்டம் இருக்கும் (இப்பொழுதும்!!!!). கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இருக்கும் மாநிலத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்கும். சென்ற தொடரில் ஆடிய விதம், ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை போட்டிகளில் ஆடியவிதம் போன்ற காரணிகள் தான் தேர்வுக்கு அடிப்படை என மக்கள் நம்புவார்கள். ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் வலுவான பிண்ணனி கொண்ட மாநிலத்தில் இருத்தல், தேர்வாளர்களுடனான தொடர்பு போன்ற காரணிகள்தான் தேர்வுக்கு முக்கிய அடிப்படையாக அங்கே இருக்கும்.

கிரிக்கெட் அணி அறிவித்தால் பொதுமக்கள் ஓஹோ இவர்கள்தான் நல்ல ஆட்டக்காரகள் போல என நம்பிக்கொள்வார்கள். அடுத்து வரப்போகும் ஆட்டங்களுக்கான அணித்தேர்வானது ஓரிரு வாரம் முன்னதாக ஒரு சுபயோக சுபதினத்தில் ராகுகாலம்,எமகண்டம் இல்லா காலை வேளையில் நடக்கும். இப்போது போல உடனே தொலைக்காட்சிகளில், இணையத்தில் அந்த செய்திகள் குறுக்கும் நெடுக்குமாக பளிச்சிடாது. மாலை ஆறுமணி அகில இந்திய வானொலி ஆங்கிலச் செய்தி அறிக்கையில் அணி விபரத்தை அறிவிப்பார்கள். தொலைபேசி/அலைபேசிகள் அதிகமாக இல்லாத காலம் வேறு, எனவே வாய்ப்புள்ள பெரும்பாலான கிரிக்கெட் வீர்ர்களும் அந்த நேரத்தில் தங்களின் அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ள வானொலிப் பெட்டிமுன் தவம் கிடப்பார்கள்.

அப்போது டெல்லி கிரிக்கெட் மைதானத்திலும் ஒருவர் அந்த நேரத்தில் உட்கார்ந்திருப்பார். செய்திகளில் அவர் பெயர் சொல்லப்பட்டாலும் சரி இல்லாமல் போனாலும் சரி, செய்தி முடிந்ததும் இருக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு கிளம்புவார். அவர்தான் மொஹிந்தர் அமர்நாத். அவர்தான் இந்தியா வென்ற 1983 உலக கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயகன், அடித்த 11 சதங்களில் ஒன்பதை வெளிநாட்டு மைதானங்களில் அடித்தவர், சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய அணியின் முதல் கேப்டன் லாலா அமர்நாத்தின் மகன்.

அப்போதைய இந்திய ஆடுகளங்களில் ஒருவரின் முட்டிக்கு மேல் பந்து எழும்பியதாக கேள்விப்பட்டாலே அந்த ஆட்டக்காரர் மிகக் குள்ளமானவர் என்று பார்க்காமலேயே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, வீசப்படும் பந்தின் வேகத்தை உறிஞ்சிக்கொள்ளும் ஆடுகளங்கள் தான் அப்போது இருந்தன. அதற்கு நேர் எதிரானது ஆஸ்திரேலிய பெர்த் ஆடுகளம். வீசப்படும் பந்தின் வேகத்தை அதிகரிக்கும் கான்கிரீட் தளம். விக்கெட் கீப்பர்கள் எல்லாம் மற்ற மைதானங்களில் நிற்பதைவிட சற்று தூரம் தள்ளியே நிற்பார்கள். அவர்களை விடுங்கள். பீல்டர் முதல் ஸ்லிப்பில் நிற்கிறாரா இல்லை தேர்ட்மேனில் நிற்கிறாரா என குழப்பம் ஏற்படும் வகையில் தள்ளிளிளி நிற்பார்கள். இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர் என்று கபில்தேவ் ஒருவர்தான் இருந்தார். மற்றவர்கள் எல்லாமே மீடியம்தான். இப்போது போல வேகப்பந்து வீச்சிற்கு வலைப்பயிற்சி அளிக்கும் இயந்திரங்களும் கிடையாது. இந்த சூழ்நிலையில் பழகுவதால்தான் முன்னாளைய இந்திய ஆட்டக்காரர்களின் திறமை வெளிநாடுகளில் பல்லிளித்தது.

இந்த சூழ்நிலையில், அப்போதைய ஏன் இன்றுவரைக்கும் எனக்கூட சொல்லலாம். அதிவேக பந்துவீச்சாளர் என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சனை பெர்த ஆடுகளத்தில் சந்தித்து தன் முதல் சதத்தை அடித்தவர் மொஹிந்தர் அமர்நாத்.

இந்திய ஆட்டக்காரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாடச் சென்றாலே வைணவத்தின் முக்கிய தத்துவமான சரணாகதி, பாதாரவிந்தம் படிதலைத்தான் பின்பற்றுவார்கள். பந்து பிட்சின் மையத்தில் விழுந்தாலே கோவிந்தா எனச்சொல்லி உட்காந்து விடுவார்கள். ஆனால் மொஹிந்தர் அமர்நாத் அனாயாசமாக பவுன்சர்களை ஹூக் செய்து விளையாடுவார். நெஞ்சுக்கு வரும் பந்துகளை எளிதாக புல் செய்வார். அவர் நின்று கொண்டிருக்கும் ஸ்டைலைப் பார்த்தால் இவர் பந்துகளை எங்கே அடிக்கப்போகிறார் என்பது போலத்தான் தெரியும். அவ்வளவு சாத்வீகமாக பேட்டிங் கிரீஸில் நிற்பார். எல்கேஜி பையன்கள் மூக்குத்துடைக்க கர்ச்சீப்பை பாக்கெட்டின் வெளியே வைத்திருப்பது போல தன் சிகப்பு நிற கர்ச்சீப்பை பேண்ட் பாக்கெட்டில் வெளித்தெரியும் படி வைத்திருப்பார்.

80களின் ஆரம்பத்தில் அதிவேக பந்து வீச்சாளர்களாக விளங்கிய மால்கம் மார்ஷலும், இம்ரான்கானாலும் சிறந்த ஆட்டக்காரர் என புகழப்பட்டவர். தன் சகவயது ஆட்டக்காரர்களை புகழாத சுனில் கவாஸ்கராலேயே தனது சுயசரிதையில் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என புகழப்பட்டவர். அவ்வாறு வேகப்பந்தை சமாளித்து ஆடுவதாலேயே ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆடுகளங்களில் அவரல் சிறப்பாக ஆட முடிந்தது. வேகப்பந்து வீச்சை மட்டுமல்ல, சுழற்பந்துகளையும் கணித்து ஆடுவதில் வல்லவர். பொதுவாக இந்திய அணி வீர்ர்கள் என்றாலே சுழலை அனாயாசமாக ஆடத்தான் செய்வார்கள். ஆனால் மொஹிந்தர் கால்களை நேர்த்தியாக நகர்த்தி, சிறப்பாக தடுத்து ஆடுவார். கால் பட்டைகளில் பந்தைத் தடுத்தல், இறங்கி அடித்து பயம்காட்டுதல், பார்வர்ட் ஷாட் லெக், சில்லி பாயிண்ட், சில்லி மிடாபில் அருகில் நிற்கும் பீல்டர்களை பயமுறுத்துமாறு பேட்டை வீசுதல் எல்லாம் இருக்காது. சுழலை நன்கு கவனித்து, காலை முன்னரோ, பின்னரோ நகர்த்தி மட்டையின் மையக் கோட்டில் பந்து படுமாறு ஆடுவார். அதுவும் மிகவும் மென்மையாக, பந்து பிட்சைவிட்டு வெளியேறிச் செல்லாத வகையில். அடுத்த பால் போடுப்பா பார்ப்போம் என்ற செய்தி பந்துவீச்சாளருக்கு போய்ச்சேரும். அருகில் இருக்கும் பீல்டர்கள் என்ன இது நமது கைக்குகூட பந்து வரவில்லையே என அலுத்துக் கொள்வார்கள். இவ்வாறு சுழற்பந்து வீசப்பட்டால் எதிர் அணியை சோர்வடையச் செய்வதில் மொஹிந்தர் சமர்த்தர். ஆனால் அடிக்க வேண்டிய பந்துகளை விளாசி விடுவார். சுழற்பந்துகளை பிரண்ட் புட் கவர்ட்ரைவ் ஆடுவது அவருக்கு மிக எளிது.

மொஹிந்தர் மித வேகம் என்று சொல்லமுடியாத வேண்டுமென்றால் மென்வேகப்பந்து வீச்சாளர் என்று சொல்லக்கூடிய அளவில் பந்தும் வீசக்கூடியவர். 83 உலக்கோப்பையில் அரை இறுதி, இறுதிப்போட்டி ஆட்டநாயகன் விருது அவரது பந்துவீச்சுக்காகவே முக்கியமாக வழங்கப்பட்டது. அவரது பந்துவீச்சு இங்கிலாந்து,நியூசிலாந்து போன்ற ஸ்விங்கிற்கு சாதகமான பருவநிலை நிலவும் நாடுகளில் நன்கு எடுபடும். இந்தியா போன்ற நாடுகளில் அவ்வளவாக எடுபடாது. ஆனால் அவர் பேட்ஸ்மனை கணித்து அதற்கேற்றார்போல கண்ட்ரோலாக பந்து வீசக்கூடியவர். பந்தை சிறப்பாக கட் செய்யக்கூடியவர். அதனால்தான் கபில்தேவும் மூன்று ஸ்பின்னர்களுமே பந்து வீச்சாளர்களாக இருந்த, இந்தியாவில் நடந்த பல டெஸ்ட் மேட்சுகளில் மொஹிந்தர் அமர்நாத் இரண்டாவது ஓவரை வீசுவார்.

பந்துவீச்சாளர்கள் பொதுவாக பந்துவீச ஆரம்பிக்கும்போது மெதுவாக ஓட ஆரம்பித்து கிரீஸுக்கு வந்து சேரும் போது முழுவேகத்தை அடைந்து பந்தை வீசுவார்கள். சிலர் அம்பயரின் இடுப்பளவுக்கு கூட மேலெழும்பி பந்தை ஆக்ரோஷமாக வீசுவார்கள். ஆனால் மொஹிந்தரோ தலைகீழ். மெதுவாக ஓட ஆரம்பித்து, வேகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, கிரீஸை நெருங்கும் போது கிட்டத்தட்ட நின்று கொண்டு பந்தை வீசுவார். முதன்முதலாக அவர் பந்தை சந்திக்கும் பேட்ஸ்மென்கள் எதற்கு இவர் ஓடிவந்தார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டேதான் ஆடுவார்கள்.

அந்த காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டு பல விழுப்புண்களை வாங்கியவர் மொஹிந்தர். ரிச்சர்ட் ஹேட்லி அவர் மண்டையை உடைத்தார், இம்ரான் மயக்கமடையச் செய்தார், மார்ஷல் அவர் பல்லை உடைத்தார், தாம்சன் அவர் முகவாயை பெயர்த்தார். ஆனாலும் ஹூக் ஷாட் ஆட தயங்கியதேயில்லை மொஹிந்தர்.

இவ்வளவு சிறப்பு இருந்தும் ஒவ்வொரு முறையும் அவர் அணிக்குத் தேர்வாவது நிச்சயமில்லாமலேயே இருக்கும். 1969ல் அவர் அணிக்குத்தேர்வானார். ஆனால் சில காலம் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே போல 80களிலும் அவருக்கு வாய்ப்பு கண்ணாமூச்சியாகவே இருந்தது. வாய்ப்பு கிடைக்காவிட்டால் உள்நாட்டுப்போட்டிகளில் சிறப்பாக ஆடி, தன் திறமையை நிரூபித்து வேறு வழியில்லாமல் தேர்வாளர்களை தன்னை தேர்ந்தெடுக்கச் செய்து விடுவார். கிரிக்கெட் குடும்ப பாரம்பரியத்தில் வந்தும் அவருக்கு காட்பாதர் யாரும் இல்லை. அதற்கு காரணம் அவர் கேட்கும் நேர்மையான, நியாயமான கேள்விகள். அந்த நேர்மைக்குப் பயந்து அவரை ஒதுக்கி வைக்கவே பார்த்தது கிரிக்கெட் வாரியம். கடைசியாக அவர் கிரிக்கெட் வாரியத்தைப் பற்றி சொன்ன ”முட்டாள்களின் கூடாரம்” என்ற வார்த்தைப் பிரயோகம் அவருக்கு கதவுகளை நிரந்தரமாக மூடியது.

இந்திய அணியின் பீனிக்ஸ் பறவை என்று வர்ணிக்கப்பட்ட மொஹிந்தரின் கிரிக்கெட் கேரியர் சொல்வது ஒன்றுதான்.
நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்கள் வளைந்து போகா தன்மைக்காகவும், நேர்மையான கேள்விகளுக்காகவும் எந்த முக்கிய குழுவிலும் இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து போகாதீர்கள். உங்கள் திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருங்கள். வேறு வழியில்லாமல் உங்களை அவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குங்கள் என்பதுதான்.

March 28, 2016

விவியன் ரிச்சர்ட்ஸ்



மென்பொருள் துறையில், மனித வள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டேன்டெக்னிக்கல் இண்டர்வியூ ஓக்கே. ஆனா பர்சனல் இண்டர்வியூவில எப்படி ஆள செலக்ட் பண்ணுவீங்கஎன்று.
கிட்டத்தட்ட பாதி கேண்டிடேட்டுகள அவங்க உள்ள நுழையும் போதே செலக்ட் பண்ணிவிடுவோம் என்றார். எனக்கு அதிர்ச்சி. தொடர்ந்து அவர், சிலர் பரபரப்பாக உள்ளே நுழைவார்கள், வழியெல்லாம் இடித்துக் கொண்டு வருவார்கள், சிலர் வலிந்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கால்குலேட்டிவ்வாக அளந்து நடந்து வருவார்கள். ஆனால் யார் ரிலாக்ஸாக உள்ளே நுழைகிறார்களோ அவர்களை எங்களுக்கு உடனே பிடித்துவிடும் என்றார்.

தன் திறமைக்கு ஏற்ற இடம் இது, இதற்கான முன் தயாரிப்புகள் என்னிடம் உண்டு. இங்கே என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியும். என்னை எடுக்காவிட்டால் இழப்பு இவர்களுக்குத்தான் என்ற எண்ணம் உடையவர்களே ரிலாக்ஸாக இண்டர்வியூ அறைக்குள் நுழைய முடியும். உண்மையாகவே அப்படி இல்லாமல் நடித்துக்கொண்டு நுழைபவர்களை இரண்டு மூன்று கேள்விகளில் கண்டுபிடித்துவிடுவோம் என்றார்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பேட்ஸ்மெனின் ஞாபகம் மனதிற்குள் வந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மெனும் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் புகும் போது ஒவ்வொரு மாதிரி உள்ளே வருவார்கள். சிலர் பேட்டை கையால் சுழட்டி காற்றில் வட்டம் போட்டுக்கொண்டு வருவார்கள். சிலர் குடுகுடுவென ஓடி வருவார்கள். சிலர் பேட்பிடிக்கும் முன் பலவகையான உடற்பயிற்சிகளையும் செய்து காண்பிப்பார்கள். நமது ஸ்ரீகாந்த் சூரியனைப் பார்த்துவிட்டு வருவார். டே நைட் போட்டிகளின் சேஸிங்கில் அவர் எதைப்பார்த்து விட்டு வருவார் எனத் தெரியவில்லை.
ஆனால் அவரோ, வேலை ஏதுமில்லாத ஞாயிற்றுக்கிழமையில் மிக லேட்டாக எழுந்தரித்து பல் துலக்க பிரசுடன் ஒரு சோம்பல் நடை நடப்போமே அதுபோலத்தான் மைதானத்துக்குள் நுழைவார். என்ன எதிரணி கேப்டனுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும்தான் பதட்டமாய் இருக்கும். மைதானத்துக்குள் நுழைவதை விடுங்கள். அடுத்து விக்கெட் விழுந்த உடன் இறங்குவதற்கு தயாராக இருக்கும் பேட்ஸ்மென்கள் எல்லாவிதக் கவசங்களையும் அணிந்து ஸ்டிஃப்பாக உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவரோ மதிய சாப்பாடு முடிந்த கல்யாண வீட்டில் சேர்களை வட்டமாக எடுத்துப்போட்டு சோம்பலாக அரட்டையடித்துக் கொண்டிருப்பார்களே அது போல கேசுவலாகத் தான் உட்கார்ந்திருப்பார்.

அவர் அறிமுகமான நாள் துவங்கி ஓய்வு பெறும் வரையிலும் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆடுவதற்கு சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட்தில்லை. அவருக்கு பந்து வீச பவுலர்களும், பீல்டிங் வியூகம் அமைக்க கேப்டன்களும் தான் ஓவர்டைம் எடுத்து யோசித்தார்கள்.

அவர்தான்  இந்த நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் பிளேயர்களுள் ஒருவராக கிரிக்கெட் வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், விஸ்டனால் இந்த  நூற்றாண்டின் சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சர் பட்டம் பெற்றவரும், தன் அபார ஆட்டத்தால் முதல் இரண்டு ஒருநாள் உலக கோப்பை பைனல்களில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவரும், 50 டெஸ்டுகளுக்கு கேப்டனாக பணிபுரிந்து ஒரு தொடரைக் கூட இழக்காதவருமான சர் ஐசக் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ்.

உண்மையில் மேற்கூறிய பாரா ஏற்படுத்தும் பிரமிப்பை விட விவியன் ரிச்சர்ட்ஸின் ஒரு அருமையான ஆப் ட்ரைவ் ஏற்படுத்தும் பிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதே அவரின் சிறப்பு.

ரிச்சர்ட்ஸ் 1974ல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக களமிறங்கி ஓய்வு பெற சில ஆண்டுகள் இருக்கும் வரை கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மெனாக இருந்தார். 1975ல் நடைபெற்ற முதல் ஒருநாள் உலக்கோப்பை பைனலில் மூவரை ரன் அவுட் செய்தும், அடுத்த் 79 உலக கோப்பை பைனலில் சதமடித்தும் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 83 உலக்கோப்பையிலும் இந்தியாவின் 183 ரன்களை சேஸ் செய்யும் போது 33 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கும் போது அப்போதைய காலகட்டத்தின் சிறந்த கேச்சாக கருதப்பட்ட கபில்தேவி கேச்சால் ஆட்டமிழந்தார்.
ரிச்சர்ட்ஸின் பேட்டிங் ஸ்டைலானது மிக சிம்பிளானது. வெகு ரிலாக்ஸாக கிரீஸில் நிற்பார். பந்தைக் கணித்து அதற்கேற்ற கிரிக்கெட் ஷாட்டை ஆடுவார். ரிச்சர்ட்ஸின் உடல் வலு அபாரமானது. அந்த வலு கரெக்டான ஷாட்டுடன் இணையும் போது பந்து தெறித்துப் பறக்கும்.
ரிச்சர்ட்ஸ் பெரும்பாலும் ஸ்ட்ரெயிட் பாட்டால் தான் ஆடுவார். ரன் சேர்ப்பதற்காக அன் கன்வென்சனல் ஷாட்டுகளை ஆடியதில்லை. ஏன் ஸ்வீப் ஷாட்கூட ஆடமாட்டார். தான் ஆடிய எந்த மேட்சிலும் ஹெல்மெட் அணியாத ரிச்சர்ட்ஸ் துளிக்கூட தயங்காமல் புல் மற்றும் ஹூக் ஷாட்டுகளை ஆடுவார்.

அதுவும் ரிச்சர்ட்ஸ் ஆடிய காலத்தில் டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ஹேட்லி, இம்ரான் கான், போத்தம் என சிறப்பாக பவுன்சர்கள் வீசும் பவுலர்கள் இருந்தார்கள். அவர்கள் கூட ரிச்சர்ட்ஸ்க்கு பவுன்சர் வீச பயப்படுவார்கள்

ரிச்சர்ட்ஸ் ஸ்பின்னர்களை ஆடும் விதமும் சிறப்பாக இருக்கும். ஆப் ஸ்பின் எனில் பந்தை சுழலச் செய்து, உள்ளே வரும் போது லெக் ஸ்டெம்பிற்கு வெளியே பேக் புட்டில் கால்களை கொண்டு வந்து, பந்தை ஓங்கி ஒரு அறை அறைவார். அதற்கடுத்து சில்லி பாயிண்ட், சில்லி மிடாப் பீல்டர்கள் எல்லாம் தெறித்து ஓடி விடுவார்கள். லெக் ஸ்பின்னர்களை அழகாக ஆன் ட்ரைவ் ஆடுவார். ஷார்ட் ஆம் புல் ஷாட்கள் அவரது ஸ்பெசாலிட்டி.

ரிச்சர்ட்ஸின் ஷாட்டுகளிலேயே பிடித்தமான ஷாட் என்றால் நடராஜா ஷாட் தான். ஷார்ட் பிட்ச்சாக விழுந்து இடுப்பு வரை எகிறும் பந்துகளை தன் வலதுகாலை தரையில் திடமாக ஊன்றி இடது காலை நடராஜரைப் போல மடக்கி முழு உடல் ஆற்றலையும் பேட்டிற்கு தோள்கள் மூலம் கடத்தி ஒரு வீசு வீசினார் என்றால், எங்கே பந்து உடைந்து விடுமோ என்று தோன்றும்.  

ரிச்சர்ட்ஸின் பலமே எந்த சூழ்நிலையிலுமே தன்னுடைய ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர சிச்சுவேசனுக்கு ஏற்றார் போல ஆடமாட்டார். இரண்டு ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி, 200 ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி பபுள்கம்மை மென்றுகொண்டே ரிச்சர்ட்ஸ் தன்னுடைய வழக்கமாக ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர ஓவர் டிபன்சிவ்வாகவோ, ஓவர் அக்ரசிவ்வாகவோ ஆடமாட்டார்

கிளைவ் லாயிட் கேப்டனாக இருந்த காலம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கடைசிக்கட்ட பொற்காலம் எனலாம். ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல் என அதி பயங்கர வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்வின் காளிச்சரன், கிரினீட்ஜ், ஹெய்ன்ஸ் என பேட்ஸ்மென்கள் ஜெஃப் துஜான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என ஜாம்பவான்களால் ஆன டீம். அந்த டீமிலேயே ரன் மெஷின் என அன்போடு அழைக்கப்பட்டவர் விவியன் ரிச்சர்ட்ஸ். கிளைவ் லாயிட் வைத்திருந்த ஆயுதங்களிலேயே வஜ்ராயுதம் ரிச்சர்ட்ஸ்தான்.
ரிச்சர்ட்ஸ் மேற்கு இந்திய தீவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அந்த அணி வெல்ல முடியாத அணியாக இருந்தது. மற்ற அணிகள் டெஸ்டில் ட்ராவுக்குத்தான் முயற்சி செய்யும். ஆனால் தொடர்ந்து அணியின் சிறந்த வீரர்கள் முக்கியமான கார்னர், ஹோல்டிங்,ராபர்ட்ஸ் ஆகியோரின் ஓய்வும் கிரினீட்ஜ் போன்றோரின் வயது முதிர்வும் அணிக்கு சற்று இறக்கத்தை ஏற்படுத்தியது. ரிச்சி ரிச்சர்ட்சன், கார்ல் ஹூப்பர், லோகி, வால்ஸ், பேட்ரிக் பேட்டர்சன் ஆகியோரது வருகை டெஸ்ட் அணியைத் தாங்கிப் பிடித்தது என்றாலும் ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு வெற்றி சதவிகிதம் குறையத் தொடங்கியது

இந்த காலகட்டத்தில் மேற்கிந்திய தீவிலிருந்து ஏன் முன்பு போன்று மிகச்சிறந்த பவுலர்கள் வரவில்லை என்பதற்கு காரணம் உண்டு. மேற்கிந்திய தீவுகளின் திறமைசாலிகள் எல்லாம் பணம் கொழிக்கும் விளையாட்டான பேஸ்பால் மற்றும் பேஸ்கட் பால் விளையாடப் போனார்கள். ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்புதான் கர்ட்லி அம்புரோஸ் என்ற மிகச்சிறந்த பவுலர் வெஸ்ட் இண்டீஸுக்கு கிடைத்தார்.
ரிச்சர்ட்ஸ் கேப்டனாக இருந்த 10 ஆண்டுகளில் அணி தேய்ந்து கொண்டே வந்தது. இன்றும் கூட அது தன்னுடைய 1960,70களிலும் 80களின் ஆரம்பத்திலும் அடைந்த சிறப்பை கனவு கூட காண முடியவில்லை. ஆனால் இன்றும் கூட அந்த அணியை வெறுப்பவர் யாருமில்லை. இதற்கு  பல ஆண்டுகளாகவே அந்த அணியினர் அரகண்டாக எதிர் அணிகளிடம் நடந்து கொள்ளாததும் ஒரு காரணம். ஸ்லெட்ஜிங் போன்றவற்றை அவர்களாக எப்போதும் ஆரம்பிப்பதில்லை. எங்கள் விளையாட்டை நாங்கள் அனுபவித்து விளையாடுகிறோம் என்ற உணர்வுடன் மட்டுமே அவர்கள் விளையாடி வந்தார்கள்.

அணி வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த போது கண்ணியமாக நடந்து கொள்வது ஒன்றும் பெரிதில்லை. ஆனால் இறங்குமுகத்தில் இருக்கும் போதும் அதே கண்ணியத்துடன் அவர்கள் நடந்து கொண்டார்கள். அந்தப் பாரம்பரியத்தைக் காக்கும் கண்ணியாக ரிச்சர்ட்ஸ் இருந்தார்.  விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்ப்போம். அதுதான் எங்கள் கொள்கை என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு ஒரு மிக முக்கிய எடுத்துக்காட்டு 1987 உலக கோப்பைப் போட்டிகள்.

அதில் பி பிரிவில் பாகிஸ்தான்,இங்கிலாந்து,மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு முக்கியமான போட்டியில் பாகிஸ்தானும் மேற்கு இந்திய தீவுகளும் மோதின. ஆட்டத்தின் கடைசி ஓவர். பாகிஸ்தான் வெற்றிபெற சில ரன்களே தேவை. ஆனால் அப்போது களத்தில் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் திறமைசாலியான அப்துல் காதிர் மறுமுனையில் இருந்தார். அவர் பந்து வீசும் முன்பே பல அடிகள் ஓடிவந்து விடுவார். கோர்ட்னி வால்ஸ் பந்து வீச வந்தபோது அப்துல் காதிர் கிட்டத்தட்ட பாதி பிட்ச் வரை ஓடி வந்துவிட்டார். வால்ஸ் நினைத்திருந்தால் அந்தப் பந்தை வீசாமல் எளிதாக ரன் அவுட் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் ஸ்போர்ட்மென் ஸ்பிரிட்டுடன் உள்ளே வந்து நில் என கண்ணால் சொல்லிவிட்டு அடுத்த பந்தை வீசினார். அதை ஆமோதித்தார் ரிச்சர்ட்ஸ். அந்தப் போட்டியில் இதனால் மேற்கு இந்தியத்தீவுகள் தோல்வி அடைந்து அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது. அப்போதும் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் சூயிங்கத்தை மென்று கொண்டே நிதானமாக களத்தை விட்டு வெளியேறினார் ரிச்சர்ட்ஸ்.   
எல்லோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்த அணியில் பகுதிநேர ஸ்பின்னராக இருந்தவர் ரிச்சர்ட்ஸ். ஆப் ஸ்பின் வீசுவார். தேவையில்லாமல் அம்பயரிடம் அப்பீல் செய்ய மாட்டார். அதே போல எல்பிடபிள்யூ தவிர, அவருக்கு அவுட் எனத் தெரிந்து விட்டால் களத்தை விட்டு வெளியேறி விடுவார்

வேலை/தொழிலைப் பொறுத்தவரை கட்டாயம் ஜெயிக்க வேண்டிய அவசியம் உண்டு. ஆனால் விளையாட்டில் வெற்றி முக்கியமா? ஆட்டம் முக்கியமா? வெற்றி மற்றுமே முக்கியம் எனும் போது நாளடைவில் அந்த விளையாட்டின் தனிப் பண்புகள் மாறிவிடும். எப்போதும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாலும் அந்த விளையாட்டே சலிப்புத் தட்டிவிடும். அது ஒரு சிக்கலான கேள்விதான். வெற்றியை மட்டுமே நோக்கிய ஆட்டம், சூதாட்டம் போன்றவை 90க்குப் பின்னால் கிரிக்கெட்டை ஆக்ரமித்தன. ரிச்சர்ட்ஸ் அந்த காலகட்டத்திற்கு முன்னரே ஓய்வு பெற்றுக்கொண்டார்

ஒரு ராஜாவுக்குரிய மரியாதையை அப்போதைய கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் ரிச்சர்ட்ஸ்க்கு கொடுத்து வந்தார்கள். இப்போதும் கூட கிரிக்கெட்டின் ராஜா என்றால் அந்த செட் மக்கள் அனைவருக்கும் ரிச்சர்ட்ஸ்தான் ஞாபகம் வருவார்.

March 23, 2016

இயன் போத்தம்

1987 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ரிலையன்ஸ் உலககோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது அந்த நாட்டு மக்களை விட அதிக வருத்தப்பட்டவர் எங்கள் ஏரியா கிரிக்கெட் டீம் கேப்டன் குமார் அண்ணன் தான். ஏனென்றால் அவர் இயன் போத்தமின் தீவிர ரசிகர். அந்நாள் வரை அவர் போத்தம் ஆடிய எந்த மேட்சையும் நேரடியாகவே தொலைக்காட்சியிலோ பார்த்ததில்லை. ஆனாலும் அவர் இங்கிலாந்து அணி ஆடிய ஆட்டங்களின் வர்ணனையை பிபிசி ரேடியோவில் கேட்டும், அது தொடர்பான செய்திகளையும் படித்தே போத்தத்தின் பெரிய ரசிகராய் மாறி இருந்தார்.

அப்போது லைப்ரரிக்கு வரும் காப்பி தவிர எங்கள் ஊருக்கு  மூன்றே மூன்று ஸ்போர்ட்ஸ்டார் புத்தகங்கள் தான் வரும். அதில் ஒன்றை குமார் அண்ணனும் இன்னொன்றை ஸ்டேட் பாங்க் மேனேஜர் ஒருவரும் வாங்குவார்கள். மூன்றாவது காப்பி பஸ்ஸ்டாண்ட் கடையில் தொங்கிக்கொண்டேயிருக்கும். வெளியூர் பிரயாணிகள் யாராவது அதை வாங்குவார்கள். இல்லையெனில் ரிட்டர்ன் தான். அந்த வாரம் குமார் அண்ணன் வெளியூர் சென்றுவிட்டார். பஸ்ஸ்டாண்டில் இருந்த 2 காப்பிகளை எப்போதாவது, பாலோ ஆன் வாங்கியும் ஜெயிக்கும் அணியைப் போல இரண்டு பேர் வாங்கிச் சென்று விட்டார்கள். குமார் அண்ணன் ஊரிலிருந்து வந்ததும் புத்தகம் இல்லையென தெரிந்து டென்சன் ஆகிவிட்டார், ஏனென்றால் அந்த வாரம் நடுப்பக்க நாயகன் போத்தம். அடுத்த பஸ்ஸிலேயே மதுரைக்குச் சென்று காலேஜ் ஹவுஸ் புத்தகக் கடையில் ஒன்றுக்கு இரண்டு காப்பியாக வாங்கி வந்தார்.

போத்தம் ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம், ஆனால் அந்த உயரம் சட்டென தெரியாதபடி சற்று பருமனான உடல்வாகு. ஹாலிவுட் ஹீரோ போன்ற முகவெட்டு. அந்த நடுப்பக்கப் படத்தில் நீல நிற ஜீன்ஸும், சிவப்பு சட்டையும் அணிந்து அதற்கு மேல் ஜீன்ஸால் ஆன சட்டையை ஜெர்கின் போல பட்டன் போடாமல் அணிந்திருப்பார். சீரான தாடி, கூலிங் கிளாஸ், கழுத்தில் தொங்கும் கேமரா உடன் ஒரு மலைப்பாறையில் ஸ்டைலாக அவர் உட்கார்ந்திருக்கும் அந்த போஸ்  யாரையும் வசீகரித்துவிடும்.

அந்த போஸ்டரை வீட்டில் ஒட்டி தினமும் சூடம் காண்பிக்காத குறை தான். அந்த அளவுக்கு போத்தமின் மீது பிரியம் கொண்டிருந்த குமார் அண்ணனுக்கு உலக கோப்பை போட்டிக்கு போத்தம் வராதது பெரிய மன வருத்தம் கொடுத்தது. 

இதுவரை இங்கிலாந்துக்கு விளையாடிய ஆல் ரவுண்டர்களில் போத்தமின் இடத்தை நிரப்ப இன்று வரை ஆள் இல்லை. பொதுவாகவே எந்த துறையிலும் எதிர் எதிர் துருவங்களாக இருமுனைப் போட்டிதான் பெரிதும் பேசப்படும். சினிமா மற்றும் கிரிக்கெட்டில் இது அதிகம். கிரிக்கெட்டில் சச்சின்லாரா, வார்னேமுரளிதரன் என பல உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேர் ஒரே துறையில் ஒரே சமயத்தில் போட்டியாளர்களாக இருந்தது எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் கபில்தேவ் தான். இந்த ஆல்ரவுண்டர்களை ரீ பிளேஸ் செய்ய அந்த அந்த நாட்டில் யாரும் உருவாகவில்லை. ஏன் உலக அளவில் கூட யாரும் உருவாகவில்லை.

குமார் அண்ணன் போத்தமை பற்றி சொல்லும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் 81 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரைப் பற்றித்தான். அந்த தொடருக்கு போத்தம் தான் கேப்டன். ஒரு டெஸ்டில் தோல்வியும், ஒன்றில் டிராவையும் செய்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. சில சூழ்நிலைகளால் போத்தம் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார்.  மைக் பியர்லி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்றாம் டெஸ்டில் சோதனையாக பாலோ ஆன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. பேட்ஸ்மென்கள் அனைவரும் பெவிலியன் திரும்பி விட்டனர். பந்து வீச்சாளர்களுடன் இணைந்து போத்தம் ஒரு 145 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. பின் ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த 2 டெஸ்டுகளையும் போத்தமின் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கிட்டத்தட்ட தனி ஒருவனாக நின்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டினார் போத்தம். இதே போலத்தான் ட்ராவிட்டும் லக்‌ஷ்மணனும் இணைந்து கல்கத்தாவில் பாலோ ஆன் வாங்கிய அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிராய் ஜெயிக்க வைத்தார்கள்.

போத்தமின் பேட்டிங் ஸ்டைலானது மிகவும் சிம்பிளானது. ஸ்டைலான பேட்ஸ்மென் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவரது அணி சக வீரர் டேவிட் கோவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு பக்கத்தில் கூட அவரால் வரமுடியாது. ஆனால் எஃபெக்டிவான பேட்ஸ்மென். பந்தை சரியாக கணித்து போர்ஸாக அடிக்கக்கூடியவர், பெரும்பாலும் மிட் ஆன் மற்றும் மிட் ஆப் திசையில் பவர் ஷாட் ஆடுவார். நல்ல லெங்தில் வீசப்படும் பந்தைக்கூட அந்த திசையில் பறக்க விட்டு விடுவார். ஹூக் அண்ட் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடி. கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் ஸ்டைலிஷாக இருக்காது ஆனால் ஸ்கொயர் கட் பொறி பறக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ரிவர்ஸ் சுவீப்பை அப்போதே ஆடியவர். அதை வேகப்பந்து வீச்சாளரிடமே ஆடுவார் என்பது இன்னும் விசேஷம்.

மார்ஷல், தாம்சன் போல போத்தம் அதி வேக பந்து வீச்சாளர் கிடையாது. ஆனால் பந்தை அருமையாக சுவிங் செய்யக்கூடியவர். செட்டிலான பேட்ஸ்மென்களையே எளிதில் திணறடித்து விடுவார். 70களில் நல்ல வேகத்தில் வீசிக்கொண்டிருந்த போது, பந்தையும் சுவிங் செய்வதால் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 80களின் மத்திக்குப் பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறமை சற்று குறையத் தொடங்கி இருந்தது.

போத்தமின் பீல்டிங்கும் சிறப்பான ஒன்று. ஒருமுறை அவர் ஆப் அண்ட் மிடிலில் வீசிய பந்தை பேட்ஸ்மென் ரன்னரின் தலைக்கு மேலே அதி வேகத்தில் அடித்தார். பந்தை  வீசி விட்டு  லேண்ட் ஆகி கண் இமைப்பதற்குள் தன் வலது கைப்பக்கம் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிப்பார். போத்தமைத் தவிர அதை யாருமே நம்பவில்லை. ஒரு அதிசயம் போலவே அதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒரு வழியாக குமார் அண்ணன் 91ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பை நேரடி ஒளிபரப்பில் தான் போத்தமைக் கண்டார். அந்த தொடரில் கேப்டன் கூச்சுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் போத்தம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து 53 ரன்களையும் அடித்தார். இத்தனைக்கும் அது அவரின் அந்திமக்காலம். இந்தியாவுடன் ஆடிய மேட்சிலும் நல்ல பார்மில் ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கரை திணறடித்து அவுட் ஆக்கி வெற்றிக்கு வழி வகுத்தார். தெண்டுல்கர் அவுட் ஆன உடன் அவர் ஆடிய ஸ்டைலான ஆட்டம் அந்த கோப்பையின் சிறந்த வெற்றி ஆட்டங்களில் தலையாயது. இங்கிலாந்து பைனல் வரை போக முக்கிய காரணமாக இருந்ததே  போத்தமின் ஆல் ரவுண்டர் திறமைதான். ஆனால் பைனலில் இறுதிச் சிரிப்பு அவரது சக ஆல்ரவுண்டர் போட்டியாளரான இம்ரான் கானுக்கே வாய்த்தது.

அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து போத்தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கடுத்து யாராவது நன்கு பந்து வீசி, நாலு மேட்ச் ஒழுங்காக பேட்டிங் ஆடிவிட்டாலே வந்து விட்டார் புதிய போத்தம் என்று இங்கிலாந்து  பத்திரிக்கைகள் கூக்குரலிடும். அப்படித்தான் டொமினிக் கார்க் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு ஹேட் டிரிக் எடுத்து 50 ரன்கள் எடுத்தவுடன் அடுத்த போத்தம் என்றார்கள். பிளிண்ட் ஆப் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கிட்டத்தட்ட போத்தம் போலவே பெர்பார்ம் செய்து பெரிய பெயர் பெற்றார். வந்து விட்டார் புது போத்தம் என்றார்கள், அவராலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

போத்தம் ஒரு சண்டைக்கோழி டைப் கேரக்டரும் கூட. ஒரு முறை ஆசியர்களை வம்பிழுத்த போது, இம்ரான்கான் அதற்கு பதிலடியாக “நீங்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதே வடிகால் வசதிகளுடன் நாகரீக வசிப்பிடங்கள் கட்டி வாழந்தவர்கள் நாங்கள்’ என பதிலடி கொடுத்தார். இப்போது ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறார் போத்தம்.

ஆளையே பார்க்காமல், செய்திகள் வர்ணனைகள் மூலமே போத்தமின் மீது பெரும் அபிமானம் கொண்டவர்கள் இந்தியாவில் அப்போது அதிகம் இருந்தார்கள். அப்படியென்றால் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட ஹீரோவாய் அவர் அப்போது இருந்திருப்பார்?.

March 21, 2016

இம்ரான் கான்

1992ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தை பிரித்த நிகழ்வு எனச் சொல்லலாம். 1970களுக்கு பின்னர் அறிமுகமான நட்சத்திர வீரர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை நிறுத்தி அல்லது குறைத்துக் கொண்ட காலம் அது. பல அணிகள் தங்கள் அணிவரிசையை இந்த போட்டிக்குப் பின்னர் மாற்றிக்கொண்டார்கள். புதிய ஹீரோக்கள் உருவானார்கள். இந்த போட்டியின் இன்னொரு சிறப்பு, பங்கேற்ற ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடனும் ஒரு முறை மோதும் படி அமைக்கப்பட்டிருந்தது. செமிபைனலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கோப்பையை வெல்ல எல்லா தகுதிகளுடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஆகிய அணிகளின் மீதுதான் ஆரம்ப கவனம் இருந்தது. பாதி போட்டிகள் முடிந்த நிலையில் 20 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிகளை குவித்து கவனம் ஈர்த்தது, நியூசிலாந்து, கேப்டன் மார்ட்டின் குரோவ்வின் வியூகங்களால் வெற்றிப்பாதையில் சென்றது. ஆஸ்திரேலியாவோ தோல்வி முகத்தில் இருந்தது, இங்கிலாந்து தன் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது,


இந்நிலையில் நான்காவது அணியாக யார் தேர்வு பெறுவார்? யார் கோப்பையை வெல்வார் போன்ற ஹேஸ்யங்களை பலரும் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். அப்போது கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தார் “எந்த அணி வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், பாகிஸ்தான் அணியைத் தவிர என்று சொல்லி இருந்தார்,


அது அன்றைய நிலைமைக்கு சத்தியமான உண்மை. ஆடிய ஐந்து ஆட்டங்களில் ஒரே வெற்றி. மூன்று தோல்வி, ஒரு ட்ரா. அந்த ட்ராவும் எப்படி? பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்கள் ஆடி 70 சொச்சம் ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இங்கிலாந்து எத்தனை ஓவர்களில் வெல்லும் என்பது பற்றி மட்டும் பெட்டிங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் வந்தது மழை. தப்பித்தோம் பிழைத்தோம் என மூன்றாவது பாயிண்டை எடுத்திருந்தது பாகிஸ்தான்.


அது மட்டுமல்ல, அந்த அணியில் அறிமுகமான உடனேயே நட்சத்திரப்பந்து வீச்சாளராக மாறி, வாசிம் அக்ரமுடன் இணைந்து டபுள் டெவில்ஸ் எனப் பெயர் பெற்ற வக்கார் யூனிஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அருமையான ஸ்ட்ரோக் மேக்கரான சயீத் அன்வரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இம்ரான்கானால் அடுத்த தலைமுறையின் சூப்பர் பேட்ஸ்மென் என ஆரவாரமாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்த இன்சமாம் ஒற்றைப்படையைத் தாண்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அணியின் பீல்டிங் மகா மோசம். இன்னும் சொல்லப்போனால் அந்த உலக கோப்பைத் தொடரிலேயே பீல்டிங்கில் மோசமான அணி பாகிஸ்தான் தான்.


ஒரு கிரிக்கெட் அணியினுடைய கேப்டனுக்கு எவ்வளவு திறமைகள் தேவைப்படுமோ அதைவிட அதிகமான திறமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு தேவை. நிலையில்லாத அரசியல் சூழல் நிலவும் நாடு. கிரிக்கெட் வாரியத்தலைமை, உறுப்பினர்கள் எல்லாம் அட்-ஹாக் முறையிலேயே பெரும்பாலும் நியமிக்கப் படுவார்கள். கேப்டனை மாற்றுவது எல்லாம் சாதாரணம். ஆஸ்திரேலியா அணியில் கடந்த 30 ஆண்டுகளில் பார்டர், டெய்லர் ,ஸ்டீவ் வாவ், ரிக்கிபாண்டிங், கிளார்க்,ஸ்மித் என விரல்விட்டு எண்ணும்படியான கேப்டன்கள்தான். கேப்டன் பதவியை விட்டு இறங்கிவிட்டால் அணியிலேயே இருக்க மாட்டார்கள். ரிக்கி பாண்டிங் விதிவிலக்கு. ஆனால் பாகிஸ்தான் அணி, அதிகபட்சம் ஆறு முன்னாள் கேப்டன்களுடன் கூட விளையாடி இருக்கிறது.

அணியில், ஒரு கேப்டனுக்கு சமமான திறமை உள்ளவர், முக்கியமாக முன்னாள் கேப்டனாகவோ, அல்லது அடுத்த வாய்ப்பில் உள்ள ஒருவராகவோ இருப்பின் அவரைச் சமாளிப்பது கேப்டனுக்கு சிக்கலான விஷயம். அணியே இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும். அவர்கள் மனம் கோணாமல் ஒருங்கினைக்க வேண்டும், சரியாக ஆடாதவர்களை திறமையாக கையாள வேண்டும்.


இம்ரான் கானுக்கு அடுத்து அணியில் நுழைந்தவர்தான் ஜாவித் மியாண்டாட். ஆனால் தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கால் மிளிர்ந்து 79-80களில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவர் ஸ்டீரிட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்ல. ஸ்டீரீட் பைட்டரும் கூட. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் டென்னிஸ் லில்லியை பேட்டால் அடிக்கச் சென்று பிரச்சினையை உண்டாக்கினார். அதனால் அணியின் மற்ற வீரர்கள் அவர் தலைமையில் விளையாட மறுத்தார்கள். எனவே இம்ரான் கான் அணிக்கு கேப்டன் ஆனார். அந்த நேரத்தில் தான் அவர் தன் பந்து வீச்சு பொற்காலத்தில் இருந்தார். டெஸ்டில் அந்த இரண்டாண்டுகளில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்னுக்கு குறைவாகவே கொடுத்துக் கொண்டிருந்தார். இம்ரான் தலைமையில் அணி தலை நிமிரத் தொடங்கியது. இருந்தாலும் மியாண்டாட்டை சமாளிப்பது ஒரு தலைவலியாகவே இருந்தது இம்ரானுக்கு. போதாக்குறைக்கு இன்னொரு சீனியர் பேட்ஸ்மென் ஜாகிர் அப்பாஸ் வேறு, இந்த நேரத்தில் இம்ரானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மியாண்டாட், ஜாகிர் அப்பாஸ் என கேப்டன் பதவி மாறி மாறிச் சென்று கொண்டு இருந்தது.


ஆனாலும் இம்ரான் அணியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். மிட் ஆனில் நின்று கொண்டு பந்து வீச்சாளர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார். வாய் வார்த்தைகள் குறைவுதான். இம்ரானின் சின்ன கண்கள் அவர் உணர்ச்சியை துல்லியமாக காட்டிவிடும். ஒயிட், நோபால் வீசினால், பீல்டிங் மிஸ்டேக் செய்தால் ஒரு முறை முறைப்பார். அந்த கண்ணில் புலியின் சீற்றம் தெரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்போது இன்னொரு பிரச்சினை சம்பள விவகாரம். மற்ற நாட்டு வீர்ர்களைவிட குறைவான சம்பளம் தான். இந்திய அணி வீரர்கள் பலரும் ஸ்டேட் பாங்க், தனியார் நிறுவனங்களில் கௌரவ சம்பளம் பெற்று வந்தார்கள். விளம்பர வாய்ப்புகளும் உண்டு. பாகிஸ்தான் வீர்ர்களுக்கு அது கூட கிடையாது. எனவே அவர்களை வேறு எந்த வழிக்கும் சென்றுவிடாமல் மோட்டிவேசன் செய்ய வேண்டிய வேலை வேறு.


இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நட்த்திய 87 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெற்றி பெற எல்லாவித சாத்தியங்களோடும் அணியை உருவாக்கியிருந்தார் இம்ரான். அதோடு ஓய்வு பெறும் திட்டமும் வேறு, ஆனால் அரை இறுதியில்ஆஸ்திரேலியாவோடு தோற்று வெளியேறியது. இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார் இம்ரான். அடுத்ததாக அணியில் மியாண்டாட்டுக்கும் ரமீஸ் ராஜாவுக்கும் பிரச்சினை உண்டாக அணி தொடர்ந்து பல தோல்விகளைக் கண்டது. மக்கள் இம்ரானே மீண்டும் கேப்டனாய் வரவேண்டும் என போராட்டம் நடத்தாத குறை. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கே இம்ரானை அழைத்து மீண்டும் கேப்டனாக்கினார்.


அதன்பின்னர் நேரு கோப்பை வெற்றி, மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் வெற்றி என பீடு நடை போட்டார். கடைசியாக 92 உலக கோப்பை. இம்ரானுக்கும் 41 வயது ஆகியிருந்தது. கடைசி உலக கோப்பை வேறு.


இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்துத்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை. எந்த கேப்டனும் துவண்டு போவார். ஆனால் இம்ரான் துவளவில்லை. மூலையில் சிக்கவைக்கப்பட்ட புலியைப் போல் நாம் எதிர்வினை காட்டவேண்டும் என்று அணியினரை உற்சாகப் படுத்தினார்..

இம்ரான் கேப்டன்ஷிப் பன்முகத்தன்மை கொண்டது என்றால் அதில் ஒரு முகம் பிரச்சினைகளை சந்திக்க தளபதிகளை அனுப்பாமல் தானே களத்தில் இறங்குதல். பாகிஸ்தானுக்கு நிலையில்லாத பேட்டிங்தான் அந்த உலக்கோப்பையில் பிரச்சினை. பொதுவாக மத்திய வரிசையில் இறங்கும் இம்ரான் முதல் விக்கெட் விழுந்த உடன் இறங்கத் துவங்கினார். காரணம் பந்து ஸ்விங் ஆகும். மற்றவர்கள் சொதப்பி விடுவார்கள் என. எல்லாப் பந்துகளையும் பிரண்ட் புட்டில் ஆடி ஸ்விங் எஃபெக்ட்டை குறைத்தார். நல்ல உயரமான வீரர் ஆகையால் அதை எளிதாக செய்ய முடிந்தது. அடுத்து ஏதாவது விக்கெட் விழுந்தால் மியாண்டாட் வருவார். இருவரிம் சேர்ந்து 40 ஓவர் ஆடிவிடுவார்கள். பின்னர் கடைசி 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் தான்.


இதே இம்ரான் தான் முன்னாட்களில் பின்ச் ஹிட்டர் என்னும் கான்செப்டை திறம்பட கையாண்டவர். முக்கியமான மேட்சுகளில் வாசிம் அக்ரமை ஒன் டவுன் இறக்கி கன்னா பின்னாவென சுத்தச் சொல்வார். ஆனால் நிலைமையை அனுசரித்து பாஸிவ் ஹிட்டர் என்பதை 92 உலக்கோப்பையில் கொண்டுவந்தவரும் இவர்தான்.

இம்ரானின் இந்த அணுகுமுறையால் மீதமிருந்த அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். இன்சமாம், மியாண்டாட், அக்ரம் எல்லோரும் தேவையான போது பெர்பார்ம் செய்த்து முக்கிய காரணம் என்றாலும் அந்த எபர்டை வெற்றியாக மாற்ற இம்ரான் தேவையாக இருந்தார்.


கேப்டன்ஷிப், பந்துவீச்சு, பேட்டிங் இதுதான் அவரின் தர வரிசை எனலாம். இம்ரான் தன் இளமையில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர், பின்னர் அபாரமான இன்ஸ்விங்கர், பின்னர் ஆபத்தான ரிவர்ஸ் ஸ்விங்கர். இன்சுவிங் யார்க்கரும் போடுவார், முட்டி அளவு வரும் இன்சுவிங் புல்டாஸும் போடுவார், நெஞ்சுக்கும் பந்தை எகிறவிடுவார். ரிவர்ஸ் சுவிங்கின் ஸ்தாபகர்களில் ஒருவர். இவரும் சர்பராஸ் நவாஸும் சேர்ந்துதான் இதை பிரபலப்படுத்தினார்கள். ஆரம்ப காலங்களில் இது பந்தை சேதப்படுத்தியதால் ஆகிறது என குற்றம் சாட்டப்பட்டாலும் பின்னர் ஒரு கலையாகவே பரிமளித்தது.


இம்ரான் ஒரு முறை, தான் சோடா மூடியால் பந்தைத் தேய்த்து ரிவர்ஸ் சுவிங் செய்த்தாகவும், ஆனால் அது ஒரு நல நிதி மேட்ச், மேட்சை சுவராசியமாக்க அப்படி செய்ததாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல 360 டிகிரியிலும் காமிரா வைக்க மாட்டார்கள். இரண்டே காமிரா தான். அதுவும் அம்பயரின் தலைக்கு நேர் மேலே வைத்திருப்பார்கள். பேட்ஸ்மென் பேட்டை டொக் டொக் என தட்டிக்கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். திடீரென பவுலர் வந்து பந்தை வீசுவார். அதை பேட்ஸ்மென் அடிப்பார். கிரிக்கெட் தெரிந்த காமிராமேன் என்றால் காமிராவை பந்தை நோக்கி திருப்புவார். சில கேமிராமேன்கள் பேட்ஸ்மென் அருமையான கவர் ட்ரைவ் அடிக்கும் போது மிட் விக்கெட்டை நோக்கி காமிராவை திருப்பி நம்மை நோகடிப்பார்கள். இதாவது பரவாயில்லை. சில மேட்சுகளில் ஒரே ஒரு காமிரா மட்டும் இருக்கும். ஒரு ஓவரில் பேட்ஸ்மென்னை முன்னாலும், அடுத்த ஓவரில் பின்னால் இருந்தும் தரிசிக்கலாம்.


எனவே பந்தை யார் கண்ணிலும் படாமல் சேதப்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால் இதே வாய்ப்பு எல்லா அணிகளுக்கும் தான் இருந்த்து. ஆனால் அவர்களால் ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியவில்லையே? கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு அணியினர் கூட பல ஆண்டுகள் கழித்தே ரிவர்ஸ் சுவிங்கை பாகிஸ்தானிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். இன்றுவரை பாகிஸ்தான் ஒரு சவால் மிக்க அணியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர்களின் வேகப் பந்துவீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தான். அதற்கு விதை போட்டவர்களில் ஒருவர் இம்ரான்கான்.


இம்ரான்கானுக்கும் சத்யம் சிவம் சுந்தரம் ஜீனத் அமனுக்கும் காதல் என அப்போது பாலிவுட் பத்திரிக்கைகளில் பலமான கிசுகிசு அடிபட்டுக் கொண்டிருந்த்து. இம்ரானும் அந்நாட்களில் ஒரு செக்ஸ் சிம்பலாக விளங்கியவர்தான். ஆனால் உலக கோப்பையை வென்றபிறகே தன் 42ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். தன் தாய் புற்று நோயால் இறந்ததால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். பின் அரசியலுக்கு வந்தார். இயல்பாகவே அவரிடம் இருக்கும் தலைமைப் பண்பு அதற்கு கை கொடுத்தது.


நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பேசிக்கொள்வோம் “நாங்கள்ளாம் பாகிஸ்தான் டீம் மாதிரி. முதல்ல படிக்க மாட்டோம், எக்ஸாமுக்கு கடைசி நாள் படிச்சு தட்டி தூக்கிடுவோம்” என்று. உண்மை. அந்நாட்களில் ஏராளமான மேட்சுகளை கடைசி நேர பேட்டிங்காலோ, பௌலிங்காலோ அந்த அணி ஜெயித்தது. அதன்பின்னால் இம்ரானின் எதையும் செய்யலாம் என்ற மன உறுதி இருந்தது.


இன்றும் கூட நாட்கள் கடந்து விட்டது. ஒன்றும் சாதிக்க வில்லையே? தோற்று விடுவோமோ என்கின்ற நினைப்பு வரும்போதெல்லாம். ஐந்து மேட்சுகளின் முடிவில், டோர்னமெண்டை விட்டு வெளியேறும் நிலையில் இம்ரான் கான் காட்டிய அந்த தைரியமும் நிதானமும் மனதில் தோன்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

September 30, 2015

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம்.   முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.

ஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.

வெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.

ஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.
ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.

பெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.

பந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.
ஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.
நான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.
.
நினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்?.

டெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்,

ஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள்.  ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.

89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.

அந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.

தர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும்.  அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு.  அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.

90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. 

கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.
94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம்  பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.

வாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.


கிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்?.      

July 28, 2014

கிரிக்கெட்டும் கல்லூரிப் படிப்பும்


கல்லூரிப் படிப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேசிங் செய்வதைப் போல.

எப்படி பவுலிங்& பீல்டிங் நன்றாக இருந்தால் நாம் சேஸ் செய்யவேண்டிய ரன் குறையுமோ அதுபோல கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைக் கவனித்தால்  நாம் படிக்க வேண்டிய நேரமும் வெகுவாகக் குறையும்.

லைன் அண்ட் லெங்த் – தினமும் கல்லூரிக்கு ஒழுங்கான நேரத்தில், தேவையான புத்தகங்கள், நோட்டு, கருவிகளுடன் செல்வது. எப்படி லைன் அண்ட் லெங்த்தில் பௌலிங் போட்டால் பேட்ஸ்மென்னால் அதிக ரன் அடிக்க முடியாதோ? அதேபோல் நாம் ஒழுங்காகச் சென்றுவிட்டால் நம்மால் படிக்க முடியாத அளவுக்கு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியாது.

நோ பால் – கல்லூரிக்குச் செல்லாமல் லீவு போடுவது. ஒரு ரன்னும் கொடுத்து, இன்னொரு பாலும் கொடுப்பதால் நாம் அதிக நேரம் படிக்கும் அளவுக்கு பாடம் குவிந்துவிடும்.

வைடு – கல்லூரி உள்ளே வந்துவிட்டு வகுப்புக்குச் செல்லாமல், கேண்டீன் செல்வது, மதியம் கட் அடித்து விட்டு சினிமா செல்வது. இதனாலும் நாம் படிக்க வேண்டிய நேரம் கூடும்.

பைஸ் – கிளாஸில் உட்கார்ந்து கொண்டு சுத்தமாக கவனிக்காமல் கற்பனையில் மிதப்பது.

கேட்ச் மிஸ் – எப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு காட்ச்சை விட்டால் அவர் வீறு கொண்டு எழுந்து அதிக ரன்னை குவிப்பாரோ அதுபோல, சில ப்ராப்ளமாட்டிக் சப்ஜெக்ட்களின் அடிப்படைகளை சொல்லித்தரும் போது, கவனிக்காமல் விட்டுவிட்டால் படித்துப் புரியவேண்டியது மலை போல குவிந்துவிடும்.

ரன் அவுட்/ஸ்டம்பிங் – சரியான நேரத்தில் பந்தை எறிந்து அவுட்டாக்குவது போல அசைன்மெண்டுகள்/செமினார்களை குறித்த நேரத்தில் முடித்துவிடவேண்டும்.

கிரவுண்ட் பீல்டிங் – இது சிறப்பாக இருந்தால் எப்படி நம்மால் 30-40 ரன்களை எதிரணியின் ஸ்கோரில் இருந்து குறைத்து விட முடியுமோ, அது போல கிளாஸில் ஆக்டிவ்வாக கவனித்துக் கொண்டேயிருந்தால் நாம் மாலையில் வீட்டில் படிக்க வேண்டியது மிகக் குறைந்து விடும்.

நாம் படிக்கும் போது (நம்ம பேட்டிங்)

ரன்ரேட் - கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பே கூடாது. கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் டீம் கொலாப்ஸ் ஆவதைப் போல காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் வந்தால் நாம் காலி. எனவே சீராக ரன்ரேட் மெயிண்டெயின் செய்வதைப் போல தினமும் படிக்க வேண்டும்.

ஸ்ட்ரைக் பவுலர்கள் – எல்லா டீம்களிலும் ஸ்ட்ரைக் பவுலர்கள் இருப்பது போல எல்லா செமெஸ்டரிலும் சில கில்லர் சப்ஜெக்ட்கள் இருக்கும். அதைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

ஆவரேஜ் பவுலர்கள் – இவர்கள் ஓவரில்தான் நாம் ரன்களைக் குவிக்க முடியும், அதுபோல இவற்றை நன்கு படித்து சிஜிபிஏ வை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

பார்ட் டைம் பவுலர்கள் – இவர்கள் வீச்சில் ஒரு பந்தையும் வீணாக்கக் கூடாது. இது பிராக்டிக்கலை போன்றது. எஸ் கிரேடுக்கு குறைந்து விடக் கூடாது.

கேட்ச் – நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத பாலை தூக்கி அடித்து அவுட்டாவது போல, எதிர் பாலிடம் மயங்கி படிக்காமல் விட்டு விடுவது.

ரன் அவுட் – தேவையில்லாத ரன்னுக்கு ஓடுகிறேன் பேர்வழி, என்று அவுட்டாவதைப் போல, சக மாணவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படிக்கும் நேரம் குறைந்து போவது.

ஹிட் விக்கெட் – தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து காலை எக்ஸாம் ஹாலில் தூங்கி விழுந்து கோட்டை விடுவது.

மெய்டன் ஓவர் – தீபாவளி, பொங்கல், பூஜா ஹாலிடேஸ் என பல்க்காக லீவு வரும் போது படிக்காமல் விட்டு விடுவது. இதனால் நாம் படிக்க வேண்டிய ரன்ரேட் எகிறிவிடும்.

சிங்கிள்ஸ் – சேசிங்கில் முக்கியமே சிங்கிள்ஸ்தான். தினமும் குறைந்த அளவு நேரமாவது புத்தகத்தை திறப்பது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது போல இரண்டு மூன்று சம்ஜெக்ட்களை தொட்டுப் பார்த்து விடவேண்டும்.

பவுண்டரிகள் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து படிப்பது.

பவர்பிளே – தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ். விக்கெட் இருந்தால் தான் இதில் அதிரடியாக ஆடமுடியும். அதுபோல முன்னர் இருந்தே படித்து சப்ஜெக்ட்களின் அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் விரைவாக எல்லாவற்றையும் படித்து முடித்து விட முடியும்.


இன்னும் சில நாட்களில் கல்லூரிகளில் கால் பதிக்கப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.