April 20, 2013

சிவில் இஞ்சினியரிங் படிப்பு – ஒரு பார்வை

உழவு, நெசவு ஆகிய தொழில்கள், கலை, இலக்கியம் எல்லாம் மனிதன் சிந்திக்க ஆரம்பித்த உடன் தான் வந்திருக்கும். ஆனால் பொறியியலும், மருத்துவமும் மனித இனம் உருவான உடனேயே உருவான ஒன்று. பிரசவம், மருத்துவம் என்றால், மழை, மின்னல், வெள்ளத்துக்கு பயந்து மனிதன் குகைகளில் ஒதுங்கியது பொறியியல். குறிப்பாக சிவில் எஞ்சினியரிங்.

அனுபவ பாடமாக விளங்கிய இந்த படிப்பு, பரம்பரை பரம்பரையாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. கிரேக்க கட்டடக் கலை, காந்தாரக் கட்டட கலை, மொகலாய கட்டட கலை என  ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. கல்விச் சாலை ரீதியிலான படிப்பு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே நாலந்தா பல்கலைகழகத்தில் ஆர்க்கிடெக்சர் படிப்பு இருந்திருக்கிறது. 

தஞ்சை பெரிய கோயில், கல்லணை என பல அற்புத கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், இப்படிப்பு கலாசாலையாக அமைத்து நுட்பங்கள் சொல்லிக்கொடுக்கப்படாமல் அனுபவ மற்றும் பரம்பரை பாடமாகவே இருந்து வந்தது.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் அவர்கள் ஆட்சி புரிய ஏதுவாக இங்கே பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டன. அதில் ஒன்றுதான் நில அளவை துறை. அதற்கு ஆட்களை பயிற்றுவிப்பதற்காக “ஸ்கூல் ஆஃப் சர்வேயிங்” 1794ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1859ல் இது சென்னை பல்கழைகழகத்துடன் இணைக்கப்பட்டது. இதுவே “கிண்டி எஞ்சினியரிங் காலேஜ்” என்று இன்றளவும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

1919ல் தொடங்கப்பட்டு தற்போது ஐ ஐ டி வாரணாசி என தற்போது அழைக்கப்படும் “பனாரஸ் இந்து யுனிவர்சிடி” அதற்குப்பின், முன்னால் பாரத பிரதமர் நேரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஐ ஐ டி க்கள், என் ஐ டிக்கள்,  டாடா, பிர்லா ஆகியோர் தன்முனைப்பில் உருவாக்கிய ஐ ஐ எஸ் சி, பிட்ஸ் பிலானி,என எந்த உயர் கல்லூரி நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் சிவில் துறை பிரதான பங்கு வகிக்கும்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்,
1929ல் தொடங்கப்பட்டு, தற்போது தமிழக அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணாமலை பல்கழைகழகத்திலும் சிவில் இஞ்சினியரிங் படிப்பு பிரதானமாக இருந்து வந்திருக்கிறது. அதன்பின் 1950-60 களில் தொழில் அதிபர்களால் தொடங்கப்பட்ட கல்லூரிகளான பி எஸ் ஜி, சி ஐ டி, தியாகராஜா மற்றும் அரசால் தொடங்கப்பட்ட கோவை, சேலம், திருநெல்வேலி பொறியியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும் சிவில் துறை சிறப்பாக இயங்கி வந்தது

1984 ல் தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அனுமதி கொடுத்தபோது, உருவான எல்லா கல்லூரிகளிலும் இரண்டு துறைகள் நீக்கமற இருந்தன. அவை சிவில் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்.
இந்த இரண்டு துறைகளுக்கு சிறந்த பேராசிரியர்களும் கிடைத்தார்கள். அதற்கு காரணம் மேற்சொன்ன கல்லூரிகளின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்.

இப்படிப்பட்ட சிறப்பு இருந்தாலும், நல்ல பேராசிரியர்கள் இருந்தாலும், மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளில் சிவில் படிப்பை ஏற்கத் தயங்கினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் அருகியிருந்த வேலை வாய்ப்பு. அரசுத்துறைகளில் அப்போது போதிய அளவு ரெக்ரூட்மெண்ட் இல்லை. தொழிற்சாலைகளிலும் அனுபவமிக்க டிப்ளமோ பொறியாளர்களையே பயன்படுத்தினார்கள்.

தற்போது இருப்பது போல் கவுன்சிலிங்கில் துறையை தேர்வு செய்யும் முறை முன்னர் கிடையாது. கல்லூரியைதான் தேர்வு செய்ய முடியும். முதலாமண்டு (இரண்டு செமெஸ்டர்கள் இல்லாமல் – ஒரே பருவமாக பாடங்கள் நடத்தப்படும்) முடியும்போது, கல்லூரிகளில் விருப்பம் கேட்டு துறையை ஒதுக்குவார்கள். ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு முறை வைத்திருப்பார்கள். இதில் பெரும்பாலும் சிவிலை யாரும் விரும்பமாட்டார்கள். வேறுவழியில்லாமல் தான் எடுப்பார்கள்.

95க்கு பின்னர், சாப்ட்வேர் துறையின் வளர்ச்சிக்குப் பிறகு, வேலை வாய்ப்புகள் பெருக, ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.. அகில இந்திய தொழில்நுட்ப கழக விதிகளின் படி, கல்லூரி தொடங்கும் போது, மூன்று துறைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். ஒரு துறைக்கு 60 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலும் சிவில் துறை தொடங்கப்படவில்லை.

ஒரு காரணம் மாணவர் விருப்பச் சேர்க்கை குறைவு என்றாலும், இன்னொன்று இந்தப் பிரிவு தொடங்க ஆகும் செலவு. ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டிரியல்ஸ் லேப், புளுயிட் டைனமிக்ஸ் லேப், கான்கிரீட் லேப், சாயில் மெக்கானிக்ஸ் லேப், என்விரான்மெண்ட் லேப், கேட் லாப், சர்வே லேப் என அண்ணா பல்கழைகழக விதிமுறைப்படி பத்து லேபுகள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இவற்றின் உபகரணங்கள் விலையும் மிக அதிகம்.

ஆனால் கம்பியூட்டர் சைன்ஸ், ஐ டி போன்ற துறைகள் தொடங்க கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள், நெட்வொர்க் உபகரணங்கள் மட்டும் போதும். இவற்றின் விலை, சிவிலுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
1996ல் மு.கருணாநிதி முதல்வராய் ஆனவுடன் அரசாங்க வேலைகள் பலருக்கும் சிபாரிசு இன்றி கிடைத்தன, இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு வீட்டுக்கதவை தட்டி அப்பாயிண்மெண்ட் ஆர்டர்கள் கொடுத்தார்கள். அப்போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் ஏராளமான சிவில் இஞ்சினியர்கள் பலன் அடைந்தார்கள்.

காலம் செல்லச் செல்ல, பல தொழிற்சாலைகள் வந்தன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்தன. இந்தியாவை பொருளை உற்பத்தி செய்யும் நாடாக மட்டுமில்லாமல் பொறியியல் டிசைன்/கன்சல்டிங் நாடாகவும் மற்ற உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்தன.

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் சிவில் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றைச் சமாளிக்க மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேவை என்பதால் சிவிலுக்கு டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியது.

எனவே தற்போது பல கல்லூரிகளும் சிவில் பாடப்பிரிவை துவுக்கியுள்ளன. சிவில் பிரிவு உள்ள கல்லூரிகள் தங்கள் மாணவர் சேர்க்கை அனுமதியை (அப்ரூவ்ட் இன்டேக்) அதிகபடுத்தியுள்ளன.
ஆனால் இப்போது சிவில் துறைக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் சிவில் முதுகலை பட்டப்படிப்பில் சேர யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சில கல்லூரிகளின் வேலை வாய்ப்பு விளம்பரங்களில், சிவில் துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் தருவதாக கூட அறிவிப்பு தென்படுகிறது.

டி சி எஸ் போன்ற சாஃப்ட்வேர் நிறுவனங்களும் இத்துறையைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். மாநில அரசு, மத்திய அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை பணிகள், உள்ளாட்சி பணிகள், மேம் பாலங்கள், சேது சமுத்திர திட்டம், தங்க நாற்கர சாலை திட்டம் ரயில்வே துறை, மெட்ரோ ரயில் திட்டங்கள், தொழிற்சாலை கட்டுமானம், வணிகவளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என சிவிலுக்கு வாய்ப்புகள் எங்கும் உள்ளன.

இது போல் வளைகுடா நாடுகளிலும் நல்ல வாய்ப்புகள் தற்போது உள்ளன. கத்தார்,ஓமன், சவுதி அரேபியாவில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்தாரில் 2020ல் ஒலிம்பிக் பந்தயங்களும், 2022ல் உலக் கோப்பை கால்பந்து போட்டிகளும் நடக்கப் போவதால் ஏராளமான ஸ்டேடியங்கள், தங்குமிடங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன. துபாயிலும் 2008ல் இருந்த தேக்க நிலை மெதுவாக மாறிவருகிறது.
வளைகுடாவைப் பொறுத்த வரையில் இந்தியர்களால் நடத்தப்படும் கட்டுமான நிறுவனங்கள் அனுபவமில்லாதவர்களையும் பணியில் அமர்த்திக்கொள்கிறார்கள். அரபு நிறுவனங்கள் அனுபவத்தையும், ஐரோப்பியர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் கம்யூனிகேசன் ஸ்கில்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் சிவில் இஞ்சினியரிங் தொடர்புடைய ஸ்டேட்புரோ, எல் எஸ் டைனா, நாஸ்ட்ரான், பேட்ரான் போன்ற சாஃப்ட்வேர் கற்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

எனவே முன் எப்போதும் இல்லாத வரையில் இத்துறை எழுச்சி கண்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நான் சிவில்டா என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தரவுகள்
விக்கி பீடியா இணையதளம் (கல்லூரிகள் தொடர்பான விபரங்கள்)
பதிவர் வெங்கடேஷ் (வளைகுடா தொடர்பான விபரங்கள்)

April 19, 2013

பிளேபாய் கமல்


குழந்தை நட்சத்திரமாய் இருந்த கமல் 73 ஆம் ஆண்டு ”சொல்லத்தான் நினைக்கிறேன்” மூலம் இளவயது நடிகராகி 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 43 ஆண்டுகளும் அவரை விடாமல் துரத்தி வருவது பிளேபாய் இமேஜ். இதற்கு முக்கிய அடித்தளமாய் இருப்பது, அவர் முதல் சில ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களே. அதுவும் குறிப்பாக முதல் ஐந்து ஆண்டுகளில், தன் 24 வயது வரையில் ஏற்று நடித்த கேரக்டர்களே.

சொல்லத்தான் நினைக்கிறேனில், நாயகன் சிவகுமார். அவரை மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள். கமலுக்கு மைனர் வேடம்.  கமலிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற மூவரில் இன்னொரு பெண், கமலை மணக்கிறார்.

இதே ஆண்டு வெளியான குமாஸ்தாவின் மகள் திரைப்படத்திலும் மைனர் வேடம். தன்னிடம் பணியாற்றும் குமாஸ்தாவின் மகளை, அவள் விருப்பத்திற்கு மாறாக மணக்கும் கதாபாத்திரம்.

74ல் வெளியான விஷ்ணு விஜயம் படத்தில் தன்னை விட வயதான ஷீலாவை காதலிக்கும் பாத்திரம்.

75ல் வெளியான பட்டாம்பூச்சியில் தன் உயர்வுக்கு காரணமான பெண்ணை காதலித்து கழட்டி விடும் பாத்திரம். அபூர்வ ராகங்களில் தன்னை விட பலவயது மூத்த ஸ்ரீவித்யாவை காதலிக்கும் பாத்திரம். இதே ஆண்டில், தெலுங்கில் வெளியான மற்றொரு சீதாவில் (மூன்று முடிச்சின் அசல்) இங்கு ரஜினி ஏற்றிருந்த, நண்பனின் காதலியை காதலித்து, அதற்காக நண்பனையே நட்டாற்றில் விடும் பாத்திரம்.

கமலின் அன்னியோன்ய நண்பர் ஆர் சி சக்தி எடுத்த உணர்ச்சிகள் படம் இங்கே வர தாமதமானது. ஆனால் அது ராசலீலா வாக மலையாளத்தில் வெளியானது 75ல். கிராமத்து வாலிபன், தன் பண்ணையாரின் மகளால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகிறான். பின் நகருக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறான். அங்கும் அவனுக்கு சில பெண்களால் பாலியல் தொந்தரவு. பின்னர் ஒரு விலைமாதுவை ரெய்டில் இருந்து காப்பாற்றி அவளுடன் நட்பாகிறான். இறுதியில் பாலியல் நோய்க்கு ஆளாகிறான்.

அடுத்து கமல் நடித்த படம், மோகம் முப்பது வருஷம். இதில் அவர் சுமித்ராவை காதலிக்கிறார். படாபட் ஜெயலட்சுமியின் கணவர் கிராமத்தான். அதனால் ஸ்டைலான கமல் மீது படாபட்டுக்கு ஆசை. நூல் விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீபிரியா வேறு. அவருக்கு கமல் மூலம் குழந்தை பெற ஆசை. எப்படி இந்த இருவரையும் தவிர்த்து விட்டு சுமித்ராவை கைப்பிடிக்கிறார் என்பதே கதை.

மன்மதலீலை. படத்தலைப்பே போதும். வக்கீல் மனைவி, குமாஸ்தா மகள், குடிகாரனின் மனைவி என கண்ணில் படுவோரையெல்லாம் கவிழ்க்கும் பிளேபாய் பாத்திரம். கடுப்பாகி, விவாகாரத்து கொடுத்துச் சென்ற மனைவியையே, காத்திருப்புக் காலத்தில் கர்ப்பமாக்கி விடும் பாத்திரம்.
லலிதா என்னும் படத்தில் சுமித்ரா கமலின் காலேஜ் சீனியராக வருவார். இருவருக்குமான காதல், பிரச்சினைகள் என பயணிக்கும் படம்.
அவர்கள் படத்தில் கமல் ஒரு வெண்டிரிலோக்விஸ்ட். சைக்கோ கணவனிடம் இருந்து விவகாரத்துப் பெற்ற சுஜாதவை காதலிக்கும் பாத்திரம்.

”ஊர்மகள் மரிக்குமோ” என்ற மலையாளப்படம் இதில் ஷோபாவை திருமணம் செய்து அவரை கொன்று விடும் பாத்திரம். பின் விதுபாலாவை திருமணம் செய்து கொள்வார். ஷோபாதான் விதுபாலா ரூபத்தில் வந்து பழிதீர்ப்பார்.

78ல் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது. கமலின் காதலியின் தோழி விதவை. திருவிழா பார்க்க தோழியின் கிராமத்திற்கு சென்றிருப்பார் காதலி. காதலியை பார்க்கப் போகும் கமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் விதவையின் விரகத்தை தீர்த்து வைப்பார்.

இதே ஆண்டு மலையாளத்தில் வெளியான “வயநாடான் தம்பன்” என்னும் படத்தில் இளம் பெண்களின் ரத்தத்தை குடித்து, நூறாண்டுகளுக்கு மேல் இளமையுடன் வாழும் பாத்திரம். பெண்களை மயக்கி சரசமாடி கொல்லும் வேடம்.  பின் பழிவாங்கப்படுவார்.

இதே ஆண்டு வெளியான “சிகப்பு ரோஜாக்கள்”. தன்னைவிட மூத்த பெண்ணால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, அவள் தப்புவதற்காக பழியை கமல் மேல் போட்டு விட, நகருக்கு விரட்டப்படுகிறார். அங்கு வேலைக்குச் சேரும் இடத்தில், முதலாளி அவருடைய மனைவியின் தவறான நடத்தையால் கொலைகாரர் ஆகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கிறார்கள், பின்னர் என்ன ஆனது என்பதே கதை.

இந்த காலகட்டத்தில் மலையாளத்தில் வெளியான ஈட்டாவில் ஷீலாவுடன் பெரும்காதல் புரியும் பாத்திரம்.

மீண்டும் கோகிலா படத்தில்  மனைவி ஸ்ரீதேவி. நடிகையான தீபாவுக்கு வழக்கறிஞராகப் போய் அவரையும் கரெக்ட் செய்யும் பாத்திரம்.

இதன்பின் சகலகலா வல்லவனின் வெற்றி, மூன்றாம் பிறையில் கிடைத்த தேசிய விருது என கமலின் மன்மத அவதாரங்கள் குறைந்தன.

 சகலகலா வல்லவனிலும், மச்சினனை திருத்த, அவனுடன் தொடர்பில் இருக்கும் பெண்ணிடம் பழகும் வேடம். மூன்றாம் பிறையில் வயதான கணவனிடம் சுகம் கிடைக்காத சில்க் இடம் புரபோசல் வாங்கும் பாத்திரம்.

நம் ஆட்கள், இப்போது கூட திரை நடிப்பை அப்படியே நம்பும் அளவுக்கு நல்லவர்கள். 40 வருடத்துக்கு முன்னால். அப்போது ஆட்சியையே கொடுத்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் பிளேபாயாக நடித்ததால் அப்படி ஒரு இமேஜ் கமலுக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. அவரும் அதற்கேற்ப இரண்டு திருமணம், ஒரு விவாக முறிவு, பெரும்பாலான படங்களில் முத்தக் காட்சி என மக்களுக்கு தீனி போட்டுக்கொண்டேயிருந்தார்.
இந்த கால கட்டத்துக்கு மேல் வெளியான படங்களில் பெரும்பாலும் நல்ல காதலனாகவே நடிக்க ஆரம்பித்தார்.

இந்திரன் சந்திரனில் பெண் பி ஏ வுடன் தொடர்பு கொள்ளும் மேயர் வேடம், பஞ்ச தந்திரத்தில் பல நாட்டுப் பெண்களையும் மடக்கும் பைலட் வேடம் என அவ்வப்போது மட்டும் மன்மத அவதாரம் எடுக்கிறார் கமல்.

என் பள்ளி நாட்கள், கல்லூரி, வேலை, என பல காலங்களிலும் யாராவது ஒருவர், கமல் சரியான பொம்பளப் பொறுக்கிங்க எனறு கூறுவதை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் அந்த வேடத்தை அழகாய்ச் செய்து மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டார் என்றும் சொல்லலாம் அல்லவா?. ஒரு நடிகனாய் அது வெற்றிதானே?
 இப்படி குறை சொல்லும் பலர் ஒன்றை மட்டும் வசதியாய் மறந்து விடுகிறார்கள். பெண்களுக்கு இரண்டாம் திருமணத்துக்கு உரிமையுண்டு என பல படங்களின் மூலம் தொடர்ந்து நிறுவிவருபவர் கமல்ஹாசன் தான்.

சிப்பிக்குள் முத்துவில் குழந்தைகளுடன் இருக்கும் ராதிகா உடன் திருமணம், நாயகனில் விபச்சார விடுதியில் இருந்த சரண்யா உடன் திருமணம், வேட்டையாடு விளையாடுவில் குழந்தையுடன் இருக்கும் ஜோதிகா உடன் திருமணம், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போலிஸ் அதிகாரியின் கீப்பாய் இருந்தவருடன் வாழ்க்கை என மற்ற ஹீரோக்கள் ஏற்கத்தயங்கும் வேடங்களை ஏற்று ஒரு நம்பிக்கையூட்டுபவராக தொடருகிறார் இந்த பிளேபாய்.

April 18, 2013

பாக்யராஜும் வலுவான துணை பாத்திரங்களும்


பாக்யராஜ் இயக்கி, அவரே நடித்து வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் எல்லாமே ஸ்கிரிப்ட் ஓரியண்டட் படங்களாகத்தான் இருக்கும். இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு என எந்தப் படங்களுக்குமே எஸ்டாபிளிஷ்ட் ஹீரோவின் தேவை இருக்காது. ஒரு புதுமுகம் அந்த ரோலில் நடித்திருந்தாலும் படம் எடுபட்டிருக்கும். ஆனால் அதே காலகட்டத்தில் வெளியான பில்லா, மூன்றாம் பிறை போன்ற படங்கள் எல்லாம் பெர்பார்மன்ஸ் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் வகையைச் சார்ந்தவை. அதனால் தான் பில்லாவை, விமலை வைத்து ரீமேக் செய்யாமல் அஜீத்தை வைத்து ரீமேக் செய்தார்கள். மூன்றாப் பிறையை ரீமேக் செய்யவேண்டுமெனில் அட்லீஸ்ட் சூர்யாவாவது இப்போது தேவை.

ஆனால் அதே பாக்யராஜ், எப்போது தன் ஸ்கிரிப்டிலும் ஒரு ஹீரோவிற்கான தேவையை நுழைத்தாரோ அப்போதே அவர் படங்கள் தோல்வியடையத் துவங்கிவிட்டன. ஏனென்றால் அந்த ஹீரோவிற்கான ஜஸ்டிபிகேஷனை அவரால் செய்யமுடியவில்லை. மக்கள் அவரை எல்லாக் காலத்திலும் பாக்யராஜாகவே பார்க்கிறார்கள். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு ராஜகுமாரி நல்ல குணமுள்ள பாக்யராஜை காதலிக்கும் கதை. என்னதான் குணமானவராய் இருந்தாலும் ஒரு மினிமம் பர்சனாலிட்டி அந்தக் கதைக்கு தேவைப்பட்டது.அந்த வேடத்தில் கார்த்திக் போன்ற ஹீரோ நடித்திருந்தால் படம் தப்பித்து இருக்கும்.

மேலும் அவர் படங்கள் பின்னாட்களில் தோல்வி அடைய முக்கிய காரணம், தன் பழைய படங்களைப் போல வலுவான துணைப் பாத்திரங்களை உருவாக்காததே.

கல்லாப் பெட்டி சிங்காரம், குமரி முத்து, குலதெய்வம் ராஜகோபால், ஹாஜா ஷெரிஃப், இடிச்சபுளி செல்வராஜ், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், செம்புலி ஜெகன், முன்னர் மதிமுகவில் பேச்சாளராய் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கும் எங்க சின்ன ராசா சரஸ்வதி, இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியார், சுந்தர காண்டம் படத்தில் சம்முவமணி என அழைக்கும் பாக்யராஜின் கிளாஸ்மேட் என பல நடிகர்களுக்கும் அவர்கள் கேரியரிலேயே சிறந்த மூன்று படங்களைச் சொல்லுங்கள் என்றால் அதில் நிச்சயம் ஒரு பாக்யராஜின் படம் இடம் பிடித்துவிடும்.

இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் முதலில் படைக்கப்பட்ட கேரக்டரின் எதார்த்த தன்மை, இரண்டாவது பாக்யராஜ் அமைக்கும் காட்சிகளின் பலம், இதில் பலம் என்பது திரைக்கதை அமைப்பையும் சேர்ந்தது.

பாக்யராஜ் திரைப்படங்களை பார்த்தால் அதில் பல காட்சிகள் வெகு நீளமாக இருக்கும். ஆனால் நமக்கு அதன் நீளம் தெரியாத அளவு அவை சுவராசியமாக படமாக்கப்பட்டிருக்கும்.
இது நம்ம ஆளுவில் பாக்யராஜுக்கு, ஷோபனா உணவு பரிமாறும் காட்சியை எடுத்துக் கொண்டால்,குமரிமுத்துவும், மனோரமாவும் மருமகள் ஷோபனாவின் சமையலைப் பாராட்டுவதில் ஆரம்பித்து, ஷோபனா ஒவ்வொரு விலங்கும் சத்தம் போடுவதின் பிண்ணனியை விளக்கும் வரை ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு மேல் காட்சி இருக்கும்.

எங்க சின்ன ராசாவில், ராதா தன் கணவன் சின்னராசுவை அனைவரும் ஏமாற்றுவதை அவர் விளங்கிக்கொள்ளுமாறு நடத்தும் காட்சி. தோட்ட விளைச்சல் தீக்கிரையான கள்ளக் கணக்கில் ஆரம்பிக்கும் காட்சி, குலதெய்வம் ராஜகோபால் பணத்தை மெத்தையில் ஒளித்து வைத்திருப்பது வரை நீளும். அடுத்த காட்சி அவர்களுக்கு தோட்ட வேலை ஒதுக்கீடு வரை செல்லும். ஏறத்தாழ 20 நிமிடங்கள். 


நடிப்பதற்கு இப்படி நல்ல ஸ்கோப் கொடுப்பதோடு கேரக்டரையும் நன்கு செதுக்குவதால் பாக்யராஜின் படங்களில் துணைப்பாத்திரங்கள் நன்கு எடுபட்டன.

சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங் மற்றும் அந்த 7 நாட்கள் இவற்றில் கல்லாப் பெட்டி சிங்காரம் நடிப்பில் நன்கு கல்லா கட்டியிருப்பார்.

எங்க சின்ன ராசா மற்றும் பவுனு பவுனு தானில் குலதெய்வம் ராஜகோபால் அசத்தியிருப்பார். எ.சி.ராசாவில் வஞ்சகமான தாய்மாமன் வேடம் பவுனு பவுனுதானில் அப்பாவி தந்தை வேடம். கே எஸ் கோபால கிருஷ்ணனுக்குப் பிறகு பாக்யராஜ் தான் ராஜகோபாலுக்கு நல்ல வேடங்கள் தந்தார்.

ஹாஜா ஷெரிஃபுக்கு இப்போது 40 வயதுக்கு மேல் இருக்கும். இன்றும் நம் மனதில் எந்தா கோபி  என விளிக்கப்படும் பிம்பமே இருகிறது. மண்ணாங்கட்டி சுப்ரமணியத்தையும், செம்புலி ஜெகனையும் வேறு எந்த கேரக்டரிலும் நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாது.
இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியாரும் அப்படியே. அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் இ போ நா வாவில் இந்தி வாத்தியாரா வருவாரே அவர்தான் என்றே அடையாளப் படுத்தப் படுகிறார்.

முன்னர் சொல்லியது போல் இந்த பாத்திரங்களின் நிலைத்தன்மைக்கு காரணம் சராசரி வாழ்க்கையில் இருந்து இந்தப் பாத்திரங்களை எடுத்ததுதான். இவை 100% நல்லவர்கள் இல்லை. தங்களுடைய சர்வைவலுக்காக சில தில்லாலங்கடி வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். வேறெந்த உயரிய லட்சியமோ அல்லது கொடூர நோக்கமோ இருக்காது.

எ.சி.ராசாவில் வரும் மண்ணாங்கட்டியும், ராசுக்குட்டியில் வரும் செம்புலி ஜெகனும் அடிப்படையில் ஒரு பண்ணையாரின் எடுபிடிகள். மண்ணாங்கட்டி முட்டாள், செம்புலி காரியக்காரன், முதலாளியை வளைத்து மடக்கும் திறமையுள்ளவன். இப்படிப்பட்ட ஆட்களை கிராமங்களில் பண்ணையாட்களாகவும், நகரங்களில் மேனேஜரின் பியூன்களாகவும் நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது பாக்யராஜின் மிகப்பெரிய தோல்விப் படமான ஞானப்பழம் படத்தை எடுத்துக் கொண்டால், அதில் பாக்யராஜின் தந்தை ஒரு கிரிமினலான அமைச்சர். கிரிமினல் அமைச்சர் என்பது யதார்த்த பாத்திரம் என்றாலும், மக்களால் ஒன்ற முடியாத அளவுக்கு படைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜின் மச்சினனாக கவுண்டமணி. மிகப் பெரிய கோடீஸ்வரர், அவருக்கு சுகன்யா தங்கை என நம்ப முடியாத பாத்திரமாக அது இருக்கும்.

வீட்ல விசேஷங்க படத்தில், மருத்துவர் ஜனகராஜ், சக பிரஸ் முதலாளி விஜி போன்றோரின் கேரக்டர்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்காது.
தன் மகன் சாந்தனுவை வைத்து அவர் இயக்கிய சித்து பிளஸ் 2 வில் கதாநாயகியின் அப்பா, வீட்டு வேலைக்காரி பாத்திரங்களும் அப்படியே.

இப்பொழுது கூட சின்ன பட்ஜெட்டில், அவரின் எதார்த்த கதை அமைப்புடன், வலுவான துணை கதாபாத்திரங்களுடன் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்காவெல்லாம் ஓடும் போது அவர் படம் ஓடாதா? என்ன?.

April 15, 2013

தமிழ்நாட்டு கான்ஸ்டபிள்கள்


தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள்ளி செல்லும் காலத்தில், ஏதாவது ஒரு கட்டத்தில் பெரும்பாலான பையன்களின் கனவாக போலிஸ் வேலை இருக்கும். சினிமாக்களாலோ அல்லது குடும்பம், நட்பு, உறவுகளாலோ அந்த பிம்பம் அவன் மனதில் உருவாக்கப்பட்டு இருக்கும். அந்தக் கனவுடன் இருக்கும் போது, யாராவது ஒரு நடிகர் போலிஸ் வேடத்தில் கலக்கினால் அந்த நடிகரின் ரசிகராக அவன் மாறவும் வாய்ப்பு அதிகம்.

அதிகாரியாகத்தான் அவன் விரும்புவானே அன்றி, எந்தப் பையனும் கான்ஸ்டபிளாக விரும்ப மாட்டான். திரைப்படங்களில் கூட நாயகன் பெரும்பாலும் மினிமம் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் தான் இருப்பார். மருதமலை போன்ற படங்களில் ஹீரோ கான்ஸ்டபிளாக வந்தாலும், அவர் சப் இன்ஸ்பெக்டர் எக்ஸாம் எழுதியிருப்பார்.

மலைக்கள்ளன் காலம் தொடங்கி தங்கப்பதக்கம், வாழ்க்கைச்சக்கரம், உள்ளே வெளியே, சிங்கம் வரை ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழ்சினிமாவில் ஏட்டுகளுக்கும், கான்ஸ்டபிளுக்கும் காமெடி, குணச்சித்திர வேடங்களே வழங்கப்படுகின்றன. அதிலும் நேர்மையாக இருந்தால் அவரை காலி செய்து விடுவதாகவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.  இதனால் எந்த பையனும் கனவிலும் கூட கான்ஸ்டபிள் வேலைக்கு ஆசைப்படுவதில்லை.

தற்போது தமிழ்நாட்டில் கான்ஸ்டபிள் வேலை என்பது நிச்சயம் மரியாதைக்குரியது அல்ல, நாம் ஏதாவது சிக்கலில் மாட்டாத வரை. நாம் சிக்கலில் இருக்கும் போது கான்ஸ்டபிளும் கமிஷனராகத்தான் நம் கண்ணுக்கு தெரிவார்.

வாழ்க்கைச் சக்கரம் படத்தில் கவுண்டமணி சொல்வார், “ அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மட்டும் வாங்கினால் லத்தியைக் கூட தூக்க முடியாது” என்று. அது இன்றளவும் உண்மை. கான்ஸ்டபிளுக்கு 10ஆம் வகுப்பு தகுதியாக இருப்பதால், அவர்களுக்கு கிரேட் பே மிகவும் குறைவு. ரேஷனில் சிறப்பு ஒதுக்கீடு, போலிஸ் கேண்டின் ஆகியவை இருந்தாலும் அரசு சம்பளத்தில் ஒருவர் மட்டும் வேலை பார்த்து குடும்பத்தை மரியாதையாக நடத்த முடியாது.

திரைப்படங்களில் எல்லாம் காட்டுவது போல செலக்‌ஷன் முடிந்த உடன் நேரடியாக போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட முடியாது. அதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர். அப்பொதெல்லாம் ட்ரைனிங் முடிந்த உடன் போலிஸ் வாகனத்தில் அழைத்து வந்து ஸ்டேஷனில் விட்டுச் செல்வார்கள். இப்போது முதலில் ஒரு ஆண்டு ட்ரைனிங். பின்னர் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஏதாவது ஒரு பட்டாலியனில் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 23 இடங்களில் இது போன்ற பட்டாலியன்கள் உள்ளன. பின்னர்  மூன்று ஆண்டுகள் ஆயுதப் படை பிரிவு. சில பிரைட்டான கேண்டிடேட்களை ட்ரைனிங் முடிந்ததும் நேரடியாக ஆயுதப் படை பிரிவுக்கு ரெக்ரூட் செய்வதும் உண்டு. அதன்பின் காவல் நிலையங்களில் உண்டாகும்  காலியிடங்களுக்கு ஏற்ப கான்ஸ்டபிளாக போஸ்டிங் போடப்படுவார்கள்.

எனவே சாதாரணமாக ஒருவர் கான்ஸ்டபிளாக ஏழாண்டுகள் பிடிக்கும். பின்னர் ஹெட் கான்ஸ்டபிள் ஆகி, சிறப்பு எஸ் ஐ ஆக மாறி எஸ் ஐ ஆவதற்குள் ரிட்டயர்மெண்ட்டே ஆகிவிடும்.

இந்த காலகட்டத்தில் எது கடினமான கால கட்டம் என்றால், மிளகாய் எந்த இடத்தில் உறைக்கும் என்று கேட்பதைப்போல.
ட்ரைனிங்கில் கலோக்கியலாகச் சொல்வதென்றால் நுங்கைப் பிதுக்கி விடுவார்கள். போலிஸ் பயிற்சி கல்லூரி என்பதே தண்டணை போஸ்டிங் என்பதால் உயர் அதிகாரியில் இருந்து கடைநிலை வரை கர்புர் என்றே இருப்பார்கள். முதலில் சிறப்பாக பெர்பார்ம் பண்ணி பின்னர் நொண்டியடித்தால் டார்ச்சர் செய்து விடுவார்கள். இங்கு ஆரம்பத்தில் மங்குனி போல் இருப்பதே சாலச் சிறந்தது.

அடுத்த கட்டம், பட்டாலியன். இவர்களின் வேலை எங்காவது ஜாதி, மதக் கலவரம் நடந்தால் பந்தோபஸ்துக்குப் போவது, முதல் அமைச்சர், கவர்னர், பிரதமர் விசிட்டின் போது பந்தோபஸ்து, ஏதாவது சிலைகள் தாக்கப்பட்டால் பல நாட்கள் அந்த ஏரியாவில் தேவுடு காப்பது, சித்திரை, வைகாசி கிராமத் திருவிழா பந்தோபஸ்து, எலெக்சன் டியூட்டி போன்றவை.

இங்குதான் இவர்களின் கெட்டகாலம் கொடிகட்டிப் பறக்கும். இயற்கை அழைப்புக்கு கூட ஒதுங்க முடியாது. அந்த நேரத்தில் வரும் உயர் அதிகாரி சார்ஜ் மெமோ கொடுத்துவிட்டால் எஸ் ஐ ஆவது சிரமமாகி விடும். எனவே ஐம்புலன்களையும் மட்டுமல்ல சில துவாரங்களையும் அடக்கியே வாழப் பழக வேண்டும்.

இன்னொரு பிரச்சினை,  உள்ளாடை அணிந்து, இறுக்கமான பேண்ட் அணிந்து, இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கடுமையான வெயிலில் பணிபுரிவதால்  இவர்களுக்கு தொடை இடுக்கில்வேர்வை தங்கி படை வந்துவிடும். உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடையும் கொண்டு செல்ல முடியாது. படைப்பிரிவு என்று அந்தக் காலத்தில் அனுபவித்து தான் பெயர் வைத்திருப்பார்கள் போலும்.  கேண்டிட் பவுடர், லிச்சென்ஷா போன்றவை இல்லாமல் காலம் தள்ள முடியாது. மேலும் இவர்களுக்கு ஒதுக்கப்படும் கழிவறைகளும் அவ்வளவு சுத்தமாய் இராது. எனவே இன்ஃபெக்‌ஷனும் எளிதில் வந்து விடும்.

ஆண்களுக்கே இப்படியென்றால் பெண்களுக்கு எப்படி இருக்கும்?. அவர்களால் சிறுநீரை பல மணி நேரம் அடக்க முடியும். ஆனால் அவர்களின் சிறுநீர்பாதை ஆணை விட சிறியது என்பதால் இன்பெக்‌ஷனுக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பெரும்பாலான கான்ஸ்டபிள்கள் காலைக் கடனை அடக்கி அடக்கி பழகுவதால் அவர்களுக்கு இயற்கை அழைப்பு செயற்கை அழைப்பாகவே மாறிவிடும். இரவில் நான்கு வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் பல் விளக்கி, நிறையத் தண்ணீர் குடித்து, சிலபல டம்ளர்கள் தேநீர் குடித்தால்தான் அவர்களுக்கு சுமுகமாகப் போகும்.

ஒருவழியாய் கான்ஸ்டபிள் ஆகி ஸ்டேஷனில் நுழைந்தவுடன் அல்லறை சில்லறை வேலைகளை ஒதுக்குவார்கள். இரவு பாரா, கோர்ட் டூட்டி என பார்த்து, பழகவேண்டும். பின்னர் எஃப் ஐ ஆர் எழுதுவது. இது ஒரு கலை. சிலருக்கு இதைப் போன்ற டாக்குமெண்டுகள் எழுதுவது நன்றாக வரும். அவர்கள் ஸ்டேசனின் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். இப்போது உள்ளவர்கள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது பொதுவான கருத்து. எனவே சில இடங்களில்  ரிட்டயரான எஸ் ஐக்கள் ஸ்டேஷன் டாக்குமெண்டுகள் எழுதிக் கொடுத்து வருகிறார்கள். சிக்கலான கேஸ்களுக்கு கேஸ் டயரிகளை ரிட்டயரான டி எஸ் பிக்கள் வந்து எழுதிக் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்தே இந்த துறையில் நிலவும் திறமைப் பற்றாக்குறையை அறியலாம்.

இந்தக் கான்ஸ்டபிள்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை “நல்லதுங்க அய்யா”. தங்களை விட ஒரு படி மேலான அதிகாரிகளிடம் இவர்கள் இந்த வார்த்தையைத்தான் உச்சரிக்க வேண்டும். சார் என்று அழைத்தால் கூட அவ்வளவுதான். அதிகாரிகள் சவட்டி எடுத்து விடுவார்கள். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, மன அழுத்தத்தின் காரணமாக மது அருந்துவது, இரவு நேரத்தில் நிறைய சாப்பிடுவது போன்ற காரணங்களால் தொப்பை இவர்களுக்கு சீக்கிரம் வந்துவிடும். இலவச இணைப்பாக சுகர், பிபி. எப்பொழுதாவது அப்பிராணிகள் சிக்கும்போது போலிஸ் வெளுத்து வாங்க ஒரு முக்கிய காரணம் அவர்களின் மன அழுத்தமே.

நேர்மையாக இருந்தால் பந்தாடப்பட்டு பைத்தியக்கார பட்டம் கிடைக்கும். லஞ்சம் வாங்க பழகிவிட்டால் ஒக்கே. சிலர் இரண்டுக்கும் இடையில் இருப்பார்கள். அவர்கள் மங்குனி/மசையாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். கொடுக்கும் வேலைகளை உடனே ஏற்றுக் கொண்டு சொதப்பிக் கொண்டேயிருந்தால் அவர்களின் ஸ்கீம் ஆஃப் திங்ஸில் சொதப்பல் கேஸை சேர்க்க மாட்டார்கள். தப்பித்துக் கொள்ளலாம்.
போலிஸுக்கு ஜாக்பாட் என்பது திருட்டு கேஸ் பிடிபடுவது, பெண்களின் அனாதைப்பிணங்கள் சிக்குவது போன்றவை. கள்ளக் காதலில் ஓடி வரும் பெண்கள் நிறைய நகை போட்டிருப்பார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டு கண்காணாத இடங்களில் கிடந்தால் கிடைக்கும் நகைகளை ஸ்டேஷனில் பங்கிட்டுக் கொள்வார்கள். தற்காலத்தில் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரு கான்ஸ்டபிள் இப்படி 50 பவுனுக்கு மேற்பட்ட நகையுடன் பிணத்தைக் கண்டவர், அதை ஓப்பன் மைக்கில் சொல்லிவிட்டார். சரகத்தில் உள்ள அனைத்து ஸ்டேசனுக்கும் விஷயம் பரவிவிட்டது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ் ஐ கொதித்துப் போய்விட்டார். அவனே கூட வச்சிக்கிட்டு போயிருக்கலாமே. யாருக்கும் பிரயோஜனம் இல்லாம பண்ணிட்டானே என பல நாள் புலம்பிக் கொண்டேயிருந்தார்.

போக்குவரத்து பிரிவு இன்னும் மோசம். வெயிலில் காய வேண்டும். சிறைத்துறை தனி ரெக்ரூட்மெண்ட். கியூ பிராஞ்ச், புட் செல், மதுவிலக்கு பிரிவு, சிபிசிஐடி பிரிவு ஆகியவற்றில் மேலதிகாரியை அனுசரித்துக் கொண்டால் எளிதில் காலம் தள்ளி விடலாம். சைபர் கிரைமில் தற்போது அதிகாரிகளாகத்தான் உள்ளார்கள். கான்ஸ்டபிள் ஆகி இணையதள கண்காணிப்பு பணி என்றால் குஜாலாக இருக்கும்.

ஆனால் லா அண்ட் ஆர்டரில் நேர்மையாக இருக்கும் அதிகாரி அல்லது கான்ஸ்டபிள் என்பது கனவுதான். நானும் பள்ளியில் படிக்கும் போது, என்பீல்ட் புல்லட்டில் போய் சமூக விரோதிகளை அடித்து உதைப்பது போல் கனவு கண்டேன். பொதுவாக கனவு நிறைவேறாமல் போனால் துக்கமாய் இருக்கும். ஆனால் இந்த கனவு நிறைவேறாததில் ஆனந்தமே.