June 29, 2009

என்னமோ போடா மாதவா - ஜனகராஜ் - பகுதி 1

கதாநாயக கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்த ஆயிரக்கணக்கானோரில் ஜனகராஜும்
ஒருவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஒரு சிறுவேடத்தில் அறிமுகமாகி பின்னர் பாலைவனச்
சோலை திரைப்படத்தில் ஐந்து கதை நாயகர்களில் ஒருவராக வெளிச்சத்துக்கு வந்த ஜனகராஜ் ஒரு பன்முகக்
கலைஞன். தற்கால மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பதியவைத்துக் கொண்டிருக்கும்
ஜனகராஜ் என்ற பிம்பத்துக்கு முற்றிலும் மாறான திறமைகளைக் கொண்ட கலைஞன் ஜனகராஜ். எப்படி
மிமிக்ரிகாரர்கள் செய்யும் கமலின் நாயகன் அழுகையை மட்டுமே வைத்து இவ்வளவுதான் கமல் என்று
சொல்லிவிடமுடியாதோ அதுபோலத்தான் ஜனகராஜும். சில படங்களில் செய்த கோணங்கித்தனமான
உடல் மொழியையும், இழுத்துப் பேசும் பேச்சையுமே ஜனகராஜாக மீடியா கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
அதையும் தாண்டி பல பரிமாணங்களைத் தமிழ்திரையில் காட்டியவர்தான் ஜனகராஜ்.

82ல் தொடங்கிய கவுண்டமணியின் பொற்காலம் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதில் முதல் ஏழெட்டு
ஆண்டுகளில் கவுண்டமணிக்கு சவாலாக விளங்கியவர் ஜனகராஜே. முன்வரிசை கதாநாயகர்களின்
முதல் தேர்வாக ஜனகராஜே விளங்கினார்.

தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதிராஜா, அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியை ஒவ்வொரு
நிலையில் இருந்தும் அடுத்த நிலைக்கு உயர்த்திய படங்களில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்தார்.

நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள்,உன்னால் முடியும் தம்பி, குணா என கமலின் முக்கிய படங்களிலும்
ஜனகராஜின் பங்கு இருந்தது.

பாரதி ராஜா, பாலசந்தர், மணிரத்னம் ஆகியோரின் படங்களிலும் ஜனகராஜுக்கு தவறாமல் இடம்
கிடைத்தது. இயக்குநர்களில் இவருக்கு அருமையான பாத்திரங்களைக் கொடுத்த இன்னொருவர்
பாண்டியராஜன். கன்னிராசி, ஆண்பாவம், நெத்தியடி, கோபாலா கோபாலா,கும்பகோணம் கோபாலு
என பல படங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாச வேடங்களைக் கொடுத்தார்.

சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோரின் துணையாக கவுண்டமணி மாறியது 80களில் மிக இறுதியில்தான்.
அதுவரை ஜனகராஜே இவர்களின் உற்ற தோழன்.

இந்த தொடரில் ஜனகராஜ் ஏற்ற வித்தியாச வேடங்களை பார்க்கலாம்.

அண்ணாநகர் முதல் தெரு

தாய் மற்றும் தங்கையுடன் வசிக்கும் மிடில்கிளாஸ் மாதவன் ஜனகராஜ். கிராமத்தில் இருந்து வேலை
தேடி வந்து தன் வீட்டில் டேரா போட நினைக்கும் சத்யராஜை விரட்ட பல திட்டங்கள் போடுவதும்,
ஒவ்வோரு திட்டத்தையும் செயல்படுத்தி விட்டு “என்னமோ போடா மாதவா” என தன்னைத் தானே
பாராட்டிக் கொள்வதும், பின் அது பேக்பயர் ஆனதும் புலம்புவதுமாக அருமையாக செய்திருப்பார்.

நண்பனுக்காக கூர்க்கா வேலை வாங்கிக் கொடுப்பதும், அது நிலைக்க திருடன் வேடம் போடுவதும் என
புல் லெங்த் ரோலில் பின்னியிருப்பார் ஜனகராஜ்.


அக்னிநட்சத்திரம்


மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். மனைவி ஊருக்கு
கிளம்பும்போது அழுவதும் பின் “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று உற்சாக குரல் எழுப்புவதும்
” நோ தங்கமணி எஞ்சாய்” என்று ஆனந்தப் படுவதும் ஜனகராஜுக்கே அளவெடுத்த சட்டை.

மனைவி இல்லாதபோது புளுபிலிம்,காபரே என அனுபவிக்க வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கே
அறிவுறுத்திய வேடம். (இல்லாட்டி செய்யமாட்டமா என்ன?).

கன்னிராசி

தன் மாணவி ரேவதியை ஒருதலையாக காதலிக்கும் பாட்டு வாத்தியார் வேடம். டிவியில் பாட சான்ஸ்
கிடைத்ததும் ஊரெல்லாம் பில்டப் செய்வதும், பின்னர் பாட்டைக் கேட்டு அவதிக்குள்ளானவர்களுக்கு
பயந்து பம்முவதுமாய் கலக்கியிருப்பார்.

குரல் வளம் இல்லாத மாணவிக்கு இவர் சொல்லும் வைத்தியமான “ ஹார்லிக்ஸ் பாட்டில், சோடா புட்டி
எல்லாத்தையும் உடைச்சு முழுங்கு” என்னும் வைத்தியம் ராகிங் செய்யும் சீனியர்களுக்கு மிகவும்
உபயோகப்பட்டது.

பத்தினிப் பெண்

ஆர் சி சக்தி இயக்கி ரூபிணி,சித்ரா நடித்த பெண்ணுரிமை கோரும் இந்தப் படத்திலும் முழு நீள வேடமே.
கஷ்டப்படும் ரூபிணிக்கு துணையாக இருக்கும் வேடம். நகைச்சுவைக்கு அவ்வளவு வாய்ப்பில்லாவிட்டாலும்
தேர்ந்த நடிப்பைக் காட்டியிருப்பார்.


பறவைகள் பலவிதம்


ராம்கி,நாசர், நிரோஷா,சபிதா ஆனந்த் ஆகியோரும் நடித்த படம்.பெரிய இடத்தை அடைவோம் என்ற
கனவுகளுடன் விடைபெறும் கல்லூரி மாணவர்கள் இவர்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும்
சமுதாய பிரச்சினைகள் இவர்களை புரட்டிப் போடுகிறது. சில வருடங்கள் கழித்து சந்திக்கும் போது
தங்கள் நிலையை மறைத்து பொய்யாக நடிக்கிறார்கள். அவர்கள் உணமையைப் பேசி இருந்தால் கூட
அவர்களது நிலை மாறியிருக்கும். ஆனால் வீம்புக்காக பொய் சொல்லி மேலும் சிதைகிறார்கள்.
இதில் வேலை இல்லாமல் கல்யாண புரோக்கராக மாறும் ஜனகராஜ் இயல்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருப்பார்.

உன்னால் முடியும் தம்பி

மகனை வேலைக்கு அனுப்பும் குடிகாரன் பாத்திரம்.

இப்போ ஏம்பா குடிக்கிற?

எம்ஜியார் செத்துப் போயிட்டாரு

முன்ன குடிச்ச?

அப்போ காமராஜர் செத்துப் போயிருந்தாரு

என கலாய்ப்பதும், இந்த ஏரியாவில கொசுத்தொல்லை அதிகமா இருக்கு என்று புலம்பி வீட்டைக்
கயிறைக் கட்டி இழுத்துப் போக முயல்வது என அக்மார்க் குடிகாரனை முன்நிறுத்தியிருப்பார்.

நீ கல்யாணம் பண்ணிக்காத, அப்பத்தான் நாங்க குடிக்க மாட்டோம் என கமலிடம் சத்தியம் செய்வதும்,
பின்னர் எல்லோரும் குடிக்க கூடும் போது, நாம சோத்தைத்தான திங்கிறோம், குடிக்காதீங்கடா என
அனைவருடன் வெளியேறும் காட்சியிலும் அசத்தியிருப்பார்.

நெத்தியடி

சமையல்காரர் வேடம். இழவு வீட்டுக்கு வந்த உறவினரின் திருகாணி தொலைந்துவிட அவர்கள் புலம்புவதும்,

தன் மகன் பாண்டியராஜன் தான் அதை எடுத்திருப்பான் என்று நினைத்து, ”வேலுலுலு, நம்மப்
பத்தி என்னா நினைப்பாங்க” என்று இழுத்து வசனம் பேசுவதும், கை நடுங்காமல் இருக்க துண்டால்
அதை கட்டிக்கொண்டு பேசுவதும் அருமை.


கிழக்கு வாசல்


தன்னைத் தானே சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவனை வருத்ததுடன் பார்க்கிறாள் சிறு பெண். அவளை
தத்தெடுத்து வளர்க்கிறான். பின்னர் அந்தப் பெண் அடைக்கலமாவது ஒரு தாசியின் வீடு. தாசி இறக்க
சூழ்நிலையால் தாசியாகிறாள் அந்தப் பெண். அவளைக் காத்து நல்ல வாழ்க்கை கிடைக்க பாடுபடுகிறான்.
வண்டிக்கார தேவராக இந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் ஜனகராஜ். தன் வழக்கமான உடல்மொழியைத்
தவிர்த்து புதிதாய் நடித்திருப்பார் இந்தப்படத்தில்.

புதுப் புது அர்த்தங்கள்

வயலினிஸ்ட் ஜாலி. ஜாலியாகவே இருப்பவர் பல பெண்களைக் கவிழ்க்கிறார். இறுதியில் வலிப்பு நோய்
உள்ள பெண்ணை வீழ்த்தும்போது மனம் திருந்தி ராமனாகிறார். இதில் ஆரம்பக் காட்சிகளில் மிஸ்டர்
பீனை காப்பியடித்திருந்தாலும் பின்னர் தன் ஒரிஜினாலிட்டியைக் காட்டியிருப்பார்.


உரிமை கீதம்


வேலை இல்லாத பிரபுக்கு ஆதரவாய் இருக்கும் சலவைத் தொழிலாளி வேடம். ரத்த தானம் செய்து பணம்
கொடுப்பது, பிரபுவின் தாய் சவ அடக்கத்துக்கு உதவுவது என மனதைத் தொடும் வேடம்.

கேளடி கண்மணி

தான் காணூம் கனவுகள் பலிப்பதால் அவதிக்குள்ளாகும் ஒரு அச்சக உரிமையாளர் வேடம். ராதிகாவை
ஒரு தலையாக காதலிப்பதும், பின் தன் நண்பந்தானே மணக்கப் போகிறான் என ஆறுதல் படுவதுமாய் மிக
இயல்பாய் நடித்திருப்பார்.


ஒரு இடுகையில் அடங்குபவரா நம் ஜனகராஜ்? இன்னும் இருக்கு.

June 26, 2009

பள்ளிக்கூடம் போகலாமா?

அன்பு நண்பர் பதிவர் ஸ்டார்ஜான் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அவருக்கு நன்றிகள்.

நான் படித்த பள்ளி மற்றும் அந்த நினைவுகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சில முக்கிய நினைவுகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

பர்த் சர்டிஃபிகேட்

நான் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் ஊர் அறியாத ஒன்று. தலையின் மேற்புறமாக வலதுகையைக் கொண்டு சென்று இடது காதின் மேல் நுனியை தொட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் ஐந்து வயது ஆகிவிட்டது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 2ல் இருந்து தொடங்கி ஜுன் 30 வரை உள்ள தேதிகளில் ஒன்றை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டேட் ஆப் பர்த்தை அல்லகேட் செய்வார்கள்.

தமிழ்நாடு பென்சனர் பட்டியலில் என் தந்தையின் பென்சன் விபரங்கள் சரியாக இருக்கிறதா எனத் தேடியபோது, பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது.ஏதாவது புள்ளியியல் அறிஞர்கள் இதை ஆராய்ச்சி செய்து, இந்த மாதங்களில் பிறப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என கிளப்பிவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்து.


ஸ்கூல் பீஸ்


மூன்றாவது வரை மூன்று ரூபாய், பின் ஐந்தாவது வரை ஐந்து ரூபாய்.ஆறாவதில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 12 ரூபாய்.என்பது அப்போதைய நிலவரம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விகடன் 90 பைசா, குமுதம் 60 பைசா.

அப்போது அரசாங்க வேலை நாட்கள் வாரத்துக்கு ஆறு. இரண்டாம் சனி மட்டுமே விடுமுறை. சனிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வரும் என் தந்தை இரண்டு ரூபாய் கொடுப்பார். விகடன், குமுதம் போக மீத காசில் எங்கள் ஊரின் பிரபல லாலா கடையில் எனக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொள்வேன். இதில் ஒருவாரம் மட்டும் ஸ்னாக்ஸ் கட்டாகும். ஏனென்றால் மாலைமதி அப்போது மாதமொருமுறை.
அது 50 பைசா.

இப்போதைய விகடன் விலையோடு ஒப்பிட்டால் 75 ரூபாய் ஓராண்டு கல்விக்கட்டணம்.

கிளாஸ் லீடர்

கிளாஸின் பிரம்பு, டஸ்டர் ஆகிய பொருட்களின் சேப்டி லாக்கரை இப்படியும் சொல்லலாம்.அதைத் தவிர இன்னொரு முக்கிய வேலை பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியரின் தூதராகச் செல்வது.


சத்துணவு


அப்போது காமராஜரின் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. நான் மூன்றாம் வகுப்பில் இருக்கும் போது எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் அமலுக்கு வந்தது. உத்தியோகப் பூர்வமாக யோசிப்பவன் அதிகாரி, உணர்வுப் பூர்வமாக யோச்சிப்பவன் அரசன் என்று மெய்ப்பித்த நிகழ்வு இது. பல மாணவர்களின் இடை நிற்றலை நிறுத்திய நிகழ்வு இது. இந்த திட்டம் தொடங்கபட்டது எங்கள் ஊரில்தான். அன்னை தெரசா, எம்ஜியார் ஆகியோர் வந்து தொடங்கி வைத்தார்கள். அப்போது எங்கள் ஊர் மதுரை
மாவட்டத்தில் இருந்தது. கலெக்டர் ஆசிட் புகழ் சந்திரலேகா.
உணமையிலேயே வரலாறு காணாத கூட்டம். முதலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அமல் படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.

நேர வித்தியாசம்.

டிவி இல்லாக் காலம். எனவே எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி விடுவோம். காலை ஐந்து மணிக்கு இயல்பாக முழிப்பு வந்துவிடும். பள்ளி திறப்பது ஒன்பது மணிக்கு. பள்ளி வீட்டுக்கு மிக அருகில். எனவே காலையில் நான்கு மணி நேரம் கிடைக்கும். இதில் வயல் வெளி, கிணறு, தெரு ஆயா கடை ஆப்பம்,பனியாரம் என எல்லாச் சடங்கும் முடிந்தும் நேரம் கொட்டிக் கிடக்கும். இன்றைய குழந்தைகளை நினைத்தால்?. தூங்கி எழுந்தவுடன் அவர்கள் பள்ளிக்குச்
செல்வது போல் ஒரு பிரமை.


இந்தப் பதிவை தொடர பதிவர் சினேகிதன் அக்பர், தற்கால நிகழ்வுகளை செமையாக
கிண்டலடிக்கும் வலைமனை சுகுமார் சுவாமிநாதன், பதிவர் ஸ்ரீ ஆகியோரை அழைக்கிறேன்.

June 25, 2009

ராகுல் காந்தியுடன் விஜய், சிம்பு சந்திப்பு

தனித்து நின்றால் மற்ற மாநிலங்களில் கூட ஒன்றிரணடு எம்பி சீட் கிடைக்கும். தமிழ்நாட்டில் தனியாக
நின்றால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது என்ற வந்த உளவுத்துறை தகவலை அடுத்து
குலாம் நபி ஆஸாத்தை அழைக்கிறார் ராகுல்.

ராகுல் : கியா ஆஸாத்ஜி? தமிழ்நாட்டில கட்சி இவ்வளோ மோசமா இருக்கே? அங்க இருக்குற
தலைவர்களை உடனே வரச் சொல்லுங்க. நாளைக்கு இங்க மீட்டிங்.

ஆசாத் : ஜி, இந்த ரூம்ல எப்படி 10000 பேரை உட்கார வைக்குறது?

ராகுல் : ஓ மறந்துட்டேன். வழக்கம் போல சீட்டு குலுக்கிப் போட்டு நாலு பேரைக் கூப்பிடுங்க.


தங்கபாலு, வசந்த்குமார், சுதர்சனம், அன்பரசு ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள். ராகுல், சச்சின் பைலட்,
ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா சகிதம் ஆலோசனையை துவங்குகிறார்.

ராகுல் : என்ன நாலு பேருமே வயசான ஆளுகளா இருக்காங்க?

ஆசாத் : 4000 பேர கூப்பிட்டிருந்தாலும் வயசான ஆளுகதான் வருவாங்க.

ராகுல் : கட்சிய வளர்க்க ஏதாச்சும் ஐடியா கொடுங்க சுதர்சனம்ஜி.

சுதர் : நம்ம கட்சிக்கு ஒரு டிவி சேனல் வேணும்.

பாலு : ஏன் மெகா டிவி இருக்கே?

வசந்த் : ஏன் வசந்த டிவி இருக்கே?

அன்பு : உங்க நெஞ்சில கைவச்சு சொல்லுங்க. உங்க வீட்டில யாராச்சும் இதைப் பாக்குறாங்களா?

பைலட் : தமிழ்நாட்டில் டிவி செய்திகள் மீதான நம்பகத்தன்மை குறைஞ்சுக்கிட்டு வர்றதா சர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

சுதர் : சரி விடுங்க. ஒரு பேப்பராவது ஆரம்பிங்க.

பாலு : முதல் பக்கத்தில எங்க கோஷ்டி நியூஸ்தான் வரணும்.

அன்பு : எந்த பக்கத்தில வேணும்னாலும் வரட்டும். ஆனா 2 பக்கம் எங்களுக்கு ஒதுக்கணும்.

சிந்தியா : பேப்பார் படிக்கிறவங்க யாரும் தமிழ்நாட்டில ஓட்டுப்போடுறதில்லன்னே வர்மா கமிட்டி
அறிக்கை சொல்லுது.

பிரசாதா : தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார் சொன்னாத்தான் ஓட்டுப்போடுவாங்கண்ணு

அன்பு : ஏதாச்சும் குர்மா கமிட்டி அறிக்கை சொல்லுதா?

ராகுல் : கூல் கூல். சினிமா ஆளுங்கள நம்ம கட்சியில சேர்க்கப் பாருங்க.

வசந்த் : எம் பையன் கூட ரெண்டு படத்துல நடிச்சிருக்கான்.

பாலு : அப்போ அவன நீங்க இன்னும் கட்சியில சேர்க்கலை. இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்.

ஆஸாத் : உங்க சண்டையை விடுங்கய்யா. பாப்புலர் ஹீரோ யாராச்சும் இருந்தா சொல்லுங்கய்யா.

அன்பு : விஜய்னு ஒருத்தர் அரசியலுக்கு வரப்போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

பாலு : ஏன் சிம்புன்னு கூட ஒரு ஆளு இருக்காரே?


ராகுல் : கூப்பிட்டு வாங்க. பேசுவோம்.


விஜய் : பய்யாண்னா நமஸ்தேபய்யண்ணா

ராகுல் : ??????

அன்பு : அவர் எப்பவுமே அண்ணா வனக்கங்ணா ந்னு தான் ஆரம்பிப்பார். நீங்க இந்தில அதான்.

ராகுல் : உங்களுக்கு அரசியல் தெரியுமா?

விஜய் : பய்யாண்னா, நடிப்பே தெரியாம நான் நடிகன் ஆகலியா ?

ராகுல் : தமிழ்நாட்டில எத்தனை தொகுதி இருக்குன்னு தெரியுமா?

விஜய் : அந்தத் தொகுதி, இந்தத்தொகுதியில்ல ஆல் தொகுதியிலயும் அய்யா கில்லி

ராகுல் : பிரச்சாரம் எப்படி பண்ணுவீங்க?

விஜய் : ஆந்திராவில சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ஜுனியர் என் டி ஆர் போன தேர்தல்ல பண்ண
பிரச்சாரத்தையெல்லாம் எங்கப்பா வீடியோ எடுத்து வச்சுருக்குறார். அதை ரீமேக் பண்ணி
பேசிடுவேன்.

ராகுல் : சரி ஆட்சியைப் பத்தி உங்க கொள்கை என்ன?

விஜய் : தயாரிப்பாளர், வினியோகஸ்தர்லாம் நஷ்டம் ஆகக் கூடாது. படம் பார்க்குறவன்
மட்டும் தான் கஷ்டப்படணும்னு சினிமால நான் ஒரு கொள்கை வச்சிருக்கேன். அதுபோல
தொழிலதிபர், அமைச்சர் எல்லாம் நல்லாயிருக்கணும், ஓட்டுப் போடுற மக்கள் மட்டும் கஷ்டப்
படணும்கிறது என்னோட அரசியல் கொள்கை.

அன்பு : நம்ம கட்சிக் கொள்கையை ஒட்டி இருக்கே. சேர்த்துக்கிடுவோம் ராகுல்ஜி.

அப்போது கறுப்புப் பூனை படைகளை ஏமாற்றிவிட்டு எஸ் ஏ சி உள்ளே புகுகிறார்.

எஸ் ஏ சி : என் பையன் தான் தமிழ்நாட்டில சூப்பர் ஸ்டார். யூத் எல்லாம் அவன் பாக்கெட்ல. அவன்
தான் வருங்கால பி.எம். நான் தான் ஜனாதிபதி. நீங்கதான் புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை
அமைச்சர்.

ராகுல் : மிஸ்டர் விஜய், உங்களை சேர்த்துக்கிடலாம்னு இருந்தேன். ஆனா உங்க அப்பா பேசுற
பேச்சுக்கு இனிமே விஜய்ங்குற பேர்ல கூட யாரையும் கட்சியில சேர்க்க மாட்டோம். கெட் லாஸ்ட்.
அடுத்து யாருப்பா?

ராகுல் : சிம்பு, உங்களுக்கு அரசியல் அனுபவம்?

சிம்பு : பழனி, பர்கூர்ல ஆரம்பிச்சு கள்ளக்குறிச்சி வரை பிரச்சாரம் பண்ணியிருக்கேன்.

ராகுல் : அதுல எததன எலக்‌ஷன்ல ஜெயிச்சுருக்கீங்க?

சிம்பு : யாரு மொதோ வந்தாங்கங்கிறது முக்கியமில்ல. யாரு கடைசியில இருந்து மொதோ வந்திருக்காங்க
அப்படீங்கிறதுதான் முக்கியம்.

சுதர் : எங்க கட்சி ஏற்கனவே அப்படித்தான் இருக்கு. இதுல நீ வேறயா?

ராகுல் : சரி, பிரச்சாரம்லாம் எப்படி பண்ணுவீங்க?

சிம்பு : மந்திரா பேடி, ராக்கி சாவந்த எல்லோரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டு வருவேன்

மிலிந்த் : ஆனா எலெக்‌ஷன் தமிழ்நாட்டிலதானே?

சிம்பு : தமிழ்நாட்டுக்கு தான் படம் எடுக்குறோம். இவங்க இருந்தனாலதான நான் நடிச்சும் மன்மதன்
படம் ஓடுச்சு.

அன்பு : பய விவரமாத்தான் இருக்கான்.

ராகுல் : சரி ஆட்சிக் கொள்கை?

சிம்பு : பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அநியாயம்.

ஆசாத் : என்ன இவன் முலாயம், சரத் யாதவ் மாதிரி பேசுறான்? அங்க போயிடுவானோ?

சிம்பு : 66% கொடுக்கணும். அதிலயும் 20 வயசுப் பொண்ணுங்களுக்கு 90% உள் ஒதுக்கீடு
கொடுக்கணும்.

சிந்தியா : எம்பி எம் எல் ஏ வுக்கு நிக்க 25 வயசு ஆகியிருக்கணுமே?

சிம்பு : அப்போ 90% 25 வயசு பொண்ணுங்களுக்கு.

பாலு : மீதி 10%?

சிம்பு : அது 27 வயசுக்கு உள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு.

சுதர் : இதுவரைக்கும் நம்ம கட்சிய வயசானவங்க கட்சி, உதவாக்கரை கட்சின்னு தான் சொல்லிக்கிட்டு
இருந்தாங்க. இவன சேர்த்தோம்னா கட்சிக்கு வேற பேரு வந்துரும்.

ராகுல் : ஜிதின், சச்சின், மிலிந்த், சிந்தியா இந்த 40 சீட் இல்லாம நாம் தனி மெஜாரிட்டி வர
வேற வழி இருக்கான்னு பாருங்க.

June 23, 2009

28ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்பில் ஒரு புதுப்பதிவர்

நேரம் சரியில்லாத வாலிபர் ஒருவர் கேபிள் சங்கரின் ஜெயா டிவி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு
”கொக்கரகோ கும்மாங்கோ” என்னும் வலைப்பதிவைத் தொடங்குகிறார். பத்து பதிவு எழுதியும் பல
திரட்டிகளில் இணைத்தும் பின்னூட்டம் வராததால் சோர்வடைந்த அவர் 28 ஆம் தேதி சென்னை
தி நகர் நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பு நடைபெறுவதாக அறிந்து, சக பதிவர்களின் ஆலோசனையைப்
பெற அங்கு விரைகிறார்.

சந்திப்பு 5 மணிக்கு என்றாலும் ஆர்வக்கோளாறில் நான்கு மணிக்கே சென்று விடுகிறார். அங்கே பாலபாரதி
சந்திப்பு நடக்கும் இடத்தில் யாரும் அமர்ந்து விடாதவாறு காவல்காத்துக் கொண்டிருக்கிறார்.
புதுப்பதிவர் அவரை நெருங்கி பதிவர் சந்திப்பு என ஆரம்பித்தவுடன் வாய்யா வாய்யா என கட்டியணைத்து
காவல் பணியில் ஈடுபடுத்துகிறார்.

தொடர்ந்து பதிவர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். பதிவர் நர்சிம்மிடம் உரையாட ஆரம்பித்து தன்
பிரச்சினையை சொல்லுகிறார்.

நர்சிம் : குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம் இதெல்லாம்
படிங்க. அப்புறம் அதை தற்கால சிச்சுவேஷனோட கம்பேர் பண்ணி பதிவுபோடுங்க. 40
பின்னூட்டம் கேரண்டி.

புது : கொன்றைவேந்தன் நாலுவரி செய்யுளே மனப்பாடம் பண்ண முடியாம தமிழய்யாகிட்ட அடி
வாங்குனவன் நான். சாரி பாஸ்.

கேபிள் : கோபிகிருஷ்ணா, தேவி கருமாரி, கிருஷ்ணவேணி

புது : இவங்கள்ளாம் பதிவர்களா?

கேபிள் : ம்ஹும். இதெல்லாம் சிட்டி தியேட்டர்ஸ். திருட்டு விசிடி காரங்க கூட மதிக்காத படமெல்லாம்
இங்க வரும். அதப் பார்த்துட்டு விமர்சனம் எழுதினா 2000 ஹிட்டு கேரண்டி.

புது : டிரை பண்ணுறேன். அங்க ஒருத்தரு நாம பேசுறத எல்லாம் நோட் பண்ணுறாரோ? அவர் யாரு
உளவுத்துறையா?

கேபிள் : உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. அவர்தான் டோண்டு.

புது : வணக்கம் டோண்டு சார்.

டோண்டு : உங்க பிளாக் அட்ரஸ்ஸ சொல்லுங்க

புது : 8/3, நாலாவது குறுக்கு தெரு

டோண்டு : நான் கேட்டது உன் வலைப்பூ அட்ரஸ்.

புது : கொக்கரக்கோ கும்மாங்கோ. சார் எனக்கு யாரும் பின்னூட்டமே போடுறதில்ல.

டோண்டு : ஒன்னும் பிரச்சினையில்லை. நீங்க 40 வருஷத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அனுபவம்,
அப்பைக்கும் இப்போவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை பத்தி எழுதினா நெறையா கிடைக்கும்.

புது : எது?. எனக்கு வயசே 22 தான். இப்போதான் வேலைக்கே போறேன்.

டோண்டு : அப்பன்னா நீங்க 40 வருஷம் கழிச்சே வலைப்பூ ஆரம்பிங்க.

புது : வேற வழியே இல்லையா?

டோண்டு : ஜெயா டிவி ராத்திரி பாத்தீங்கண்னா

புது : எனக்கு பின்னூட்டமே வேண்டாம் சார்.

அப்போது அங்கே பதிவர் முரளிகண்ணன் வருகிறார். புது தன் பிரச்சினையை சொல்லுகிறார்.

முரளி : இப்போ உங்களை நாய் துரத்தினா என்ன செய்வீங்க?

புது : அலறியடுச்சு ஓடுவேன்.

முரளி : அதான். நீங்க ஓடக்கூடாது. அங்கேயே நின்னு யோசிக்கணும். எந்தெந்தப் படத்தில நாய்
துரத்துற சீன் வருதுன்னு. நாலஞ்சு தேறிச்சுன்னா பதிவா போட்டணும். 20 பின்னூட்டம் கேரண்டி.

புது : பின் னூட்டம் மட்டுமில்ல. ஊசி ஏத்தமும் கேரண்டி. அவர் யார் பாஸ்?
கையெல்லாம் வீங்கிப்போயி உட்கார்ந்திருக்காரு?

முரளி : அவர்தான் பதிவர் உண்மைத் தமிழன். இருங்க உங்களை அறிமுகப்படுத்துறேன்.

புது : என்ன சார் ஆச்சு?

உ த : முருகா

புது : சார். என் பேர் அதில்லை.

உ த : உன்னைச் சொல்லலை. எம்பெருமான் முருகன கூப்பிட்டேன். இந்த பிளாஸ்டிக் கீ போர்டு
எல்லாம் என் வேகத்த தாங்க மாட்டேங்குதுன்னு இரும்பு கீ போர்டு வங்குனேன். ராத்திரி
1000 பக்கம்தான் டைப் பண்ணுனேன். வீங்கிடுச்சு.

புது : ஆ!!! அவ்ளோ எதுக்கு சார் அடிச்சீங்க?

உ த : பதிவர் பைத்தியக்காரன் சிறுகதை போட்டி வச்சிருக்காருல்ல. அதுக்குத்தான்.

புது : அதுக்கு 1000 வார்த்தைதானே?

உ த : தம்பி, சிறுகதைன்னா என்னா தெரியுமா? கல்கியோட பொன்னியின் செல்வன், வெங்கடேசனோட
காவல் கோட்டம் இதெல்லாம் படிச்சிருக்கியா? ஜெயமோகன் முன்னாடி எழுதின விஷ்ணுபுரம், இப்போ
எழுதிக்கிட்டு இருக்குற அசோகவனம் எல்லாமே சிறுகதைகள் தான். குறைந்தது 1000 பக்கம்
இருந்தாத்தான் அது சிறுகதை. பாராவோட மாயவலை கூட சிறுகதை இல்ல. ஒருபக்கக் கதை.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பைத்தியக்காரன், அவசரம் அவசரமாக மறுக்கிறார்.

பைத்தியக்காரன் : உ த, 1000 வார்த்தைதான் நாங்க கேட்டிருக்கோம்.

உ த : அப்போ எஸ் எம் எஸ் போட்டின்னுல்ல நீங்க அறிவிச்சிருக்கணும்.

இதைகேட்டு புதுப் பதிவர் மயங்கி விழுகிறார். தராசு, ஸ்டார்ஜான் ஆகிய சக பதிவர்கள் அவரை
கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சோடா வாங்கிக் கொடுத்து தெளியவைக்கிறார்கள்.

இம்மாதியெல்லாம் நடக்காது. தைரியமா பதிவர் சந்திப்புக்கு வாங்க. உரையாடல் போட்டிக்கு கதை
அனுப்ப மறந்துடாதீங்க
.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இடம் : தி நகர் நடேசன் பூங்கா

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 28- 06 -2009. ஞாயிற்றுக்கிழமை

இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளர்களே.


சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

பாலபாரதி – 9940203132

லக்கிலுக் – 9841354308

அதிஷா – 9884881824

கேபிள் சங்கர் - 9840332666

முரளிகண்ணன் - 9444884964

June 20, 2009

தமிழ்சினிமாவில் உடையலங்காரம்

திரைப்படங்களின் உடை அலங்காரம் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்து இருந்தாலும், தமிழ்நாட்டில் சமூகத்தின் உடை அலங்காரத்தை நிர்ணயிப்பதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு இருந்துவருகிறது.

37ல் வெளிவந்த பாலயோகினியில் பேபி சரோஜாவின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. சரோஜாவின் பெயரில் உடைகள். அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்தன. நதியா புகழ்பெற்ற காலத்தில் நதியா சுடிதார்,கம்மல்,வளையல் என சக்கை போடு போட்டது. இப்போதும் தீபாவளிக்கு ஸ்ரேயா ஸ்கர்ட் சினேகா புடவை, திரிஷா மிடி என புது வரவுகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

எம்ஜியார் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அணிந்த பேகிஸ் மாடல் பெல்ஸ் வருகையால் வழக்கொழிந்தது. சிகப்பு ரோஜாக்கள், நான் போட்ட சவால் காலம் வரை கொடிகட்டி பறந்த பெல்ஸ் அதன் பின் டைட் பேண்டாக உருமாறியது. ராஜா சின்ன ரோஜா, ராஜாதி ராஜா காலத்தில் பேக்கிஸ் திரும்பவும் வந்தது. பேஷன் என்பது சகிக்க முடியாதது. அதனால்தான் அது ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறிக் கொண்டேயிருக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொன்னதை நிரூபித்தது.


புதிய பறவை படத்தில் சிவாஜி அணிந்த கை மடித்து விடப்பட்ட ஸீ துரு வெள்ளை சட்டையும், வெள்ளை பேகியும், அரை இன்ச் அகல கறுப்பு பெல்டும் பலரது கனவு உடைகளாயின. அதில் சிவாஜி பனியன் போடாமல் இருந்ததால், பனியன் போடாமல் இருப்பது அப்போது பேஷனாகியது என்றும் சொல்வார்கள்.

ராமராஜனின் பளிச் மஞ்சள்,பிங்க்,ஆரஞ்ச் நிற சட்டைகள் கிராமப்புறங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. 90ஆம் ஆண்டு வெளியான புதுவசந்தம் படத்தில் சித்தாரா தன் நண்பர்களுக்கு பரிசளிக்கும் மஞ்சள் நிற சட்டையும், கறுப்பு நிற பேண்டும் அந்த தீபாவளியைக் கலக்கின.




நான் வழக்கமாக தைக்கக் கொடுக்கும் டெய்லர் கடையில் திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் நிற சட்டைதான்.இதை வெட்டி வெட்டி மஞ்சள் காமாலையே வந்துரும் போலிருக்கு என அந்த டெய்லர் அலுத்துக் கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

காதல் தேசத்தில் அப்பாஸ் அணிந்து வந்த லைட்கலர் ஜீன்ஸ் மற்றும் பிளைன் சட்டைகளும் பலரைக் கவர்ந்தது. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் பிரசாந்த் அணிந்திருந்த செல்போன் வைக்கும் வசதியுள்ள பேண்ட் அப்போது பிரபலமாகாவிட்டாலும் பின் அதனை என்ஹான்ஸ் செய்து ரஜினி படையப்பாவில் அணிந்த நாலு பாக்கெட் பேண்ட் மிக பிரபலமானது. அணிந்து வருபவரும் ஒர காரணி என உணர்த்தியது.




தீனாவில் அஜீத்தும் மின்னலேவில் மாதவனும் அணிந்த சார்ட் ஷர்ட்களும் மிக பிரபலம் ஆகின. இவை எம்ஜியார் சபாஷ் மாப்பிள்ளை படத்தில் ஏற்கனவே அணிந்ததுதான். காக்க காக்கவில் சூர்யா அணிந்து வந்த சார்ட் குர்தாவும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் அணிந்து வந்த சட்டைக்குள் சட்டை மாடலும் பின்னர் பிரபலமானது.

தமிழில் இதுவரை வந்திருக்கும் படங்களை கதை இயங்கும் தளத்தை வைத்து சில பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.புராண/இதிகாச படங்கள்

சிவன், விஷ்ணு போன்றோரின் திருவிளையாடல்களை சொல்லும் படங்களும்,
ராமாயணம்,மகாபாரதம் போன்ற புராணங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்களும் (கர்ணன்,அபிமன்யூ,சம்பூர்ண ராமாயணம்,மாயாபஜார் போல) இந்த பிரிவில் வரும். மேலும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பாதாள பைரவி போன்ற மாயாஜால கற்பனைகளையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை நடந்த காலம் என்பது சர்ச்சைக்குள்ளாகும் விஷயம்.

கற்காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடையே உள்ள ஏதோ ஒரு காலத்தில்தான் இவை நடந்ததாக நாம் நம்பிக்கொள்கிறோம். படம் எடுப்பவர்கள் தங்கள் வசதிக்காக அதை உலோகங்களின் காலத்தில் நடந்ததாக சித்தரிக்கிறார்கள். எனவே வில்,அம்பு,வாள், ஈட்டி, கேடயம், கிரீடம் என உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களை நடிகர்களுக்கு அணிவிக்கிறார்கள்.

பாத்திரங்கள் குறிப்பிட்ட உடையைத்தான் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இந்த வகைப்படங்களுக்கு அதிகம். சிவன் என்றால் புலித்தோல்தான் அணியவேண்டும். புளூ கலர் ஜீன்ஸ் அணிந்தால் திரை கிழிந்துவிடும். அரசனுக்கு கிரீடம்,அரசிக்கு ஒட்டியாணம், மந்திரிக்கு தலைப்பாகை, குருவுக்கு குடுமி என விதிக்கப்பட்டுள்ள பாதையில்தான் உடையலங்கார நிபுணர் பயணிக்க வேண்டும். எனவே கற்பனை
அதிகம் சிறகடிக்க தேவையில்லை. வண்ண சேர்க்கை விகிதங்களை சரியாகக் கையாண்டால் போதுமானது.

2. வரலாற்று படங்கள்

குறிப்பிட்ட காலம், இடம் ஆகியவற்றுடன் வரும் படங்களை இந்தப்பிரிவில் சேர்க்கலாம். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், ராஜ ராஜ சோழன் போன்ற படங்கள் மட்டுமில்லாது, சுதந்திரத்திற்க்கு சற்று முந்தைய காலத்தை பிரதிபலித்த வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன் ஆகியவற்றையும், ஹேராம்,தசாவதார 12 ஆம் நூற்றாண்டு பகுதி, சுப்பிரமணியபுரம் போன்ற பீரியட் படங்களையும் இப்பிரிவில் சேர்க்கலாம். நமக்கு சற்று முந்தைய எதுவும் வரலாறுதானே?

இதில் காலம் சரியாக கணக்கிடப்படுவதால் மிக்க கவனம் தேவை. சோழர் காலத்தில் மூக்கு கண்ணாடி கிடையாது. தசாவதார 12 ஆம் நூற்றாண்டு காட்சியில் ஒரு வீரர் கண்ணாடி அணிந்திருந்தாராம். கடைசி நேரத்தில் இயக்குநர் ரவிகுமார் மானிட்டரில் பார்த்து அவரது கண்ணாடியை கழட்டச் சொன்னாராம்.

மேலும் முந்தைய கால உடைகளை சித்தரிக்கும் போது மிகுந்த கவனம் தேவைப்படும். இப்போது துணிகளுக்கு கிடைக்கும் பளீர் வெள்ளை நிறம் அப்போது கிடையாது. ஓரளவு பழுப்பு கலந்த வெள்ளை நிறத்திலேயே உடைகள் இருக்கும். மருதநாயகத்தின் உடையலங்கார நிபுணர் கௌதமி போர் வீரர்களுக்கான உடையை தயாரிக்கும் போது ஒரு உத்தி செய்தார். கிலோமீட்டர் கணக்கில் வெள்ளை காடாத் துணியை வாங்கி அதை தேநீர் டிக்காசனில் ஊறவைத்து பழுப்பு நிறம் வரச் செய்தார்.

3. விஞ்ஞானக் கற்பனைகள்


தமிழில் மிகச் சில படங்களே இப்பிரிவில் வந்துள்ளன. எம்ஜியாரின் ஜெனோவா, தக்காளி சீனிவாசன் தயாரித்த நாளைய மனிதன், அதிசய மனிதன் ஆகியவை இப்பிரிவில் வரும். கமலின் விக்ரத்தைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உடையலங்கார நிபுணரின் திறமைக்கு பெரும் சவால் இருக்கும்.
எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என கற்பனையை தூண்டிவிடவேண்டும்.

4.திரில்லர்/பேய்ப் படங்கள்

உடைகள் குறிப்பிட்ட மூடை தூண்டுவதாக இருப்பது அவசியம். இதில் விட்டலாச்சாரியார் டைப் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். விட்டலாச்சாரியாரின் குட்டிப் பிசாசு காஸ்ட்யூம் (ஜெகன் மோகினி உள்ளிட்ட பல படங்களில் உபயோகப்படுத்தியது) தான் ஜுஜுவாக மறு பிறவி எடுத்து ஐபிஎல் லைக் கலக்கியது.


5.கௌபாய் படங்கள்


இவற்றுக்கு பெரும்பாலும் தோலிலால் ஆன உடைகள் தான். தொப்பி,ஷூ எல்லாம் தோல்தான். பெண்களின்
உடையில் தான் கவனம் தேவை.

6. தற்கால சமூகப் படங்கள்

இவைதான் தமிழில் அதிகம் வருபவை. உடையலங்காரத்தில் அதிகம் சொதப்புவதும் இவ்வகைப் படங்களே. கிராமப் படமாயிருந்தாலும் சரி, நகரப் படமாயிருந்தாலும் சரி சில முன் முடிவுகளுடனே உடை அலங்காரம் செய்யப்படுகிறது. இப்போது நளினி ஸ்ரீராம், அனீஸ் ஜீவா,அனுவர்தன் போன்றோரின் வருகைக்குப் பின்னர் இதில் மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன.

எனவே தொடரும் பகுதிகளில் சமூகப் படங்களில் உடையலங்காரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்த மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், பிரபல உடையலங்கார நிபுணர்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

June 18, 2009

ரெண்டடி வீடு

கூந்தல் பராமரிப்பில் அக்கறையுள்ள பெண்களுக்கு அது செம்பருத்தி வீடு. சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டியவர்களுக்கு அது ரெண்டடி வீடு. தியாகி பென்சன் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது பெரிய வீடு. எட்டாம் வகுப்பு ஏ மாணவர்களுக்கு மட்டும் அது விஜி வீடு.

விஜி என்று எங்களால் அழைக்கப்பட்ட விஜயகுமார் அந்த வீட்டின் ஒரே வாரிசு. வீட்டின் வெளிப்புற சுவர்கள் இரண்டடி அகலத்திலும், உட்புறத்தில் அறைகளைப் பிரிக்கும் சுவர்கள் ஓரடி அகலத்திலும் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டைச் சுற்றிலும் செம்பருத்தி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரின் முக்கியஸ்தர்க கூட, நடக்க நடக்க மெருகேறும் கோட்டக்கல் பதிக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் வரவேற்பறையைத் தாண்டி சென்றதில்லை. வகுப்புத் தோழனானதால் என் கால்கள் மட்டும் அந்த மூன்று மாடி வீட்டின் பல அறைகளையும் மெருகேற்றியிருக்கின்றன.

உயரமாகக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் இடிதாங்கியோடு கட்டப்பட்டிருந்த அந்த வீடு இப்போது ஆண்டெனா கூட வைக்க வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் சகல அறைகளுக்கும் செல்லும் உரிமை இருந்தாலும் கிணற்றடியை ஒட்டியிருந்த அந்த பிரத்யேக அறைக்கு மட்டும் சென்றதில்லை.

ஒரு கோடை விடுமுறையில் விளையாட்டு சாமான்கள் பற்றாக்குறையாய் இருந்த மதியப் பொழுதில் அந்த அறையை திறந்தான் விஜி. உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப் பட்டுப் போனேன். அறைக்குள்ளே ஒரு திண்ணை. அதன் ஒரு பக்கத்தில் தலைவைத்துப் படுப்பதற்கேற்ப வளைவுகளுடன் கட்டப்பட்டு இருந்தது. சுவற்றில் ஏராளாமான ஓவியங்கள். நான்கைந்து மரப் பெட்டிகள், அதுபோக வெள்ளித்தட்டு, வென்னீர் விளாவி குளிப்பதற்கேற்ப வெண்கல பாத்திரங்கள்.

மரப் பெட்டிகளைத் திறந்தான் விஜி. ஒன்றில் அறுபதுகளில் வாரப் பத்திரிக்கைகளில் வந்த தொடர்களின் பைண்டிங்குகள். இன்னொன்றில் சந்தன கட்டையால் செய்யப்பட்ட மீன் வடிவ பல்லாங்குழி, அதில் போட்டு விளையாட குறைபாடுள்ள முத்து, பவளங்கள், வெள்ளியால் செய்த தாயக்கட்டை, தந்த பேன் சீப்பு, மர்பி டிரான்ஸிஸ்டர் என கலவையான பொருட்கள். நாங்கள் தேடிய பரமபத சோபன படம் கிடைத்ததும் கதவை மூடிவிட்டு வெளியேறினோம். சில ஆண்டுகளுக்குப் பின்னரே அந்த அறை எதற்கு என்ற அர்த்தம் எனக்கு விளங்கியது.

நண்பர்கள் செட்டில் முதல் திருமணத்திற்கு இருக்கும் சந்தோஷம், எதிர்பார்ப்பு கடைசி சில திருமணங்களுக்கு இருப்பதில்லை. வாழ்த்து போஸ்டர் ஒட்டுவது, மாப்பிள்ளை அழைப்பு காரை அலங்காரம் செய்வது, மண்டபத்தை கலகலவென ஆக்குவது எல்லாம் முதலிரண்டு திருமணங்களுக்குத் தான். குடும்பஸ்தன் ஆகி வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகியவுடன் நண்பனின் திருமணத்துக்கு, உறவுக்காரன் போல் நேரத்துக்குப் போய் கிப்ட் கொடுப்பதுடன் கடமை முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு திருமணத்துக்கு போய் அரட்டையடித்துக் கொண்டிருந்த போது விஜி என்னடா பண்றான் என பேச்சு வந்தது.

அவர்கள் வீட்டுச் செலவுக்கு கை கொடுத்து வந்த ரைஸ் மில்லும் நொடிக்கவே, அதை மொத்தமாக விற்று ஏனைய கடன்களையும் அவன் அப்பா அடைத்து விட்டாராம். வீடு மட்டும் பாக்கி. இப்போது அவன் ஒரு ஆடீட்டரிடம் நான்காயிரம் சம்பளத்துக்கு வேலை செய்வதாக பதில் வந்தது. இந்தக் காலத்தில நல்ல வேலை பார்க்கிறவனுக்கே பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. இவனுக்கு எப்படியோ? என்று நண்பர்கள் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழித்து விஜியின் கல்யாணப் பத்திரிக்கை வந்தது. பெண் வீட்டார் சார்பில் திருமணம். ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். பெண்ணின் அழகுக்கும் குறைவில்லை. ஆசிரியை பணி. போதாக்குறைக்கு ஐம்பது சவரனுக்கு மேல் நகை.

தெரிந்த தரகரை ஓரம்கட்டி விசாரித்த போது அவர் சொன்னார். “ நல்ல வேலையில இருக்குற நெறைய பையன்களை காமிச்சேன். பொண்ணோட அம்மா அதெல்லாம் வேணாம்னுட்டாங்க. காரணம் கேட்டா, “இந்தப் பசங்கள்ளாம் மிஞ்சிப் போனா அஞ்சு கிரவுண்டில வீடு கட்டுவாங்க, அதுல மாடி கட்டுனாலும் வாடகைக்கு விட்டுடுவாங்க. என் பொண்ணு காலம் பூராம் புறாக் கூண்டில வாழணுமா? ன்னு கேட்டாங்க.

இப்போது பெண்ணின் அம்மாவை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு ரெண்டடி வீட்டிலிருந்து புறாக் கூண்டுக்கு இடம் பெயர்ந்து போயிருந்த சோகம் கண்ணில் தெரிந்தது.

June 13, 2009

கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - அடுத்தது என்ன?

நான் தென்மாவட்டத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் எனக்கு தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நண்பர்கள் அதிகம். 90களின் இறுதியில் கோவையில் சில ஆண்டுகள் வசித்த பொழுது பலரின் நட்பு கிடைத்தது. அதன்பின்னர் பணிபுரிந்த இடங்கள், படித்த இடங்களில் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் நட்பானார்கள்.

99 என நினைக்கிறேன். அப்பொழுது ஆடிட்டர் குப்பமுத்து என்பவரின் படம் தாங்கிய பல சுவரொட்டிகள் கோவையெங்கும் ஒட்டப்பட்டன. என் நண்பர்களிடம் அதைப் பற்றி விசாரித்த போது, அவர்கள் சொன்னது இது,

“ எங்க ஆளுங்க இப்படித்தான் மூணு வருஷத்துக்கு ஒருதடவை இப்படி ஏதாவது செய்வாங்க. ஆனா அப்புறம் புஸ்ஸுன்னு போயிடும். கோவை செழியன் காலத்தில இருந்து இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு.”

அப்படியே ஆனது. பின்னர் இந்த தேர்தலை ஒட்டி கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையினர் ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்தப் போவதாக செய்திகள் வந்த போதும் பலரை விசாரித்தேன். அவர்கள் சொன்னது,

”இந்த தடவ எங்க ஆளுங்க ரொம்ப துடிப்பா இருக்காங்க” என்பதே.

ஆனால் மாநாடு முடிந்ததும் அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள் என்றதும் குழப்பமே ஏற்பட்டது.

பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படதும் அவர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. தேர்தலுக்கு ஒருவாரம் முன்னதாக கோவையிலும், ஈரோடு மாவட்ட கிராமம் ஒன்றிலும் நான்கு நாட்கள் தங்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது களத்தில் நான் அதிகம் கவனித்தது கொ மு பேரவையினர் எவ்வாறு வேலை செய்கிறார்கள்? என்பதையே.

உண்மையில் சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக பணக்காரர்களை தொண்டர்களாக கொண்ட கட்சி என்றால் அது கொ. மு. பே. தான். சாதாரண ஏரியா பொறுப்பாளர்களே கோடிக்கணக்கில்தான் சொத்து வைத்துள்ளார்கள். மாவட்ட அளவிலான நிர்வாகிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

மே 1 ஐ முன்னிட்டு கோவை வ உ சி பூங்காவில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள் கொ மு பே வினர். வந்த கூட்டம் ஜெயலலிதாவுக்கு கூட்டப்பட்ட கூட்டத்தை விட அதிகம். கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறைபட்டுக் கொண்டார்,

“ என்னப்பா ஏரியாவுக்கு 100 காருக்கு மேல வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.லிஸ்டுல எங்க
காரையெல்லாம் விட்டுட்டீங்க. நானும் என் மருமகனும் அடுத்தவங்க கார்ல ஏறி வரவேண்டியதாப் போயிடுச்சு. அடுத்த தடவை எங்க காரை விட்டீங்கண்ணா நடக்குறதே வேற”.

அதற்கடுத்த நாள் ஈரோடு மாவட்ட கிராமம். நண்பரின் வீட்டில் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, வேகமாக நண்பரின் பெரியம்மா வந்தார்.

அவர் நண்பரிடம் சொன்னது

“ ஏண்டா, நம்ம வீட்டில இவ்வளோ சின்னக் கொடியா கட்டியிருக்கீங்க, ஸ்டிக்கரும் ஒட்டலை.
என்னடா வேலை பார்க்குறீங்க?”

11 மணி அளவில் இளநீருக்காக அவர்களின் தோட்டத்தை நோக்கிய பயணம். வழியில் கிட்டத்தட்ட ஒரு கி மீ நீளத்திற்க்கு தோட்டத்துக்கான பாதுகாப்பு முள் வேலி. நான்கு மீட்டருக்கு ஒரு பட்டியக்கல். கல்லுக்கு ஒரு பேரவை கொடி.

நான் ஆச்சரியத்துடன் கேட்டேன், “யாருடா இவ்வளோ செலவு பண்ணுறது?”

நண்பர் சிரித்துக் கொண்டே, “எங்க சித்தப்பா தான்”.

சரி. அவர் என்ன பொறுப்புல இருக்காரு?

பதவியெல்லாம் இல்லை. உறுப்பினர் மட்டும் தான்.

அதோடு போகவில்லை ஆச்சரியங்கள்.

தொகுதி செலவுக்கு எங்க ஊர்ல இருந்து மட்டும் 10 லட்சம் டொனேஷன் கொடுத்திருக்கோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள். 40 ஓட்டு கூட இல்லாத தெருவுக்கு 50 பேர் போய் ஓட்டுக் கேட்கிறார்கள். அதில் ஓட்டுக் கேட்க வருபவர்களை உபசரிப்பதில் போட்டி வேறு.

நண்பரின் தாயார் வீரத்திலகமிடாத குறையாக அவனை ஒட்டு சேகரிக்க அனுப்பினார்கள். துணைக்கு நானும். ஆறேழு டம்ளர் காப்பி, ஐந்து வடை, நாலு கூல்ட்ரிங்ஸ் இரண்டு மணி நேரத்தில் எனக்கு மட்டும் கிடைதத்து.

சென்னை திரும்பியபின்னரும் நண்பர்களுடன் தொடர்ந்து இது குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு நண்பர் சொன்னார், அவர் தெருவில் ஓட்டுப் பதிவன்று 500 பிரியாணி பொட்டலங்களை வாங்கி ஒருவர் வினியோகித்தாராம். கொ மு பே சார்பாக. அவரும் உறுப்பினர்தான்.

பூத் ஸ்லிப் கொடுக்க உட்கார்ந்திருந்தவர்கள் தாகம் தணிக்க ரெண்டு கேஸ் அக்வா பினாவும்,
ஒரு கேஸ் பேண்டாவும் ஓட்டுப் போட வந்த ஒருவர் வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றாராம்.
அவர் உறுப்பினர் கூட இல்லை. அனுதாபி மட்டும்.

ஒருவழியாக தேர்தல் முடிந்து சொல்லக் கூடிய அளவில் ஓட்டும் கிடைத்தது. அவர்களின் வாக்கு வங்கியை பலரும் உணார்ந்து கொண்டார்கள்.

சரி. அடுத்தது என்ன?

கொ மு பேவின் இலக்கு என்ன? முதல்வர் பதவியா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. அண்டை மாநிலங்களில் எல்லாம் மெஜாரிட்டியாக உள்ள ஜாதியினரே முதல்வர் போட்டியில் இருப்பார்கள். இங்கே மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பு. இதில் தமிழர்களின் உளவியல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பெரும்பான்மையினர் என்று பார்த்தால் வடக்கே வன்னியர், மேற்கே கொங்கு வேளாளர்கள்,தெற்கே முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டவர்கள் பல கூறுகளாக பிரிந்து தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இந்த நான்கு பெரும்பான்மையில் இருந்து தமிழகத்திற்க்கு இன்றுவரை முதல்வர்கள் வரவேயில்லை. (ஓ பன்னீர் செல்வம் - தற்காலிக ஏற்பாடு).

தமிழகத்தின் முதல்வராக வரவேண்டுமெனில் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அறிமுகமான முகம் வேண்டும். கட்சித் தலைவரின் வாரிசாக இருப்பது ஒரு சௌகரியம். தமிழகம் முழுவதும் எளிதில் அறிமுகம் கிட்டும். அப்ப்டி இல்லாவிட்டால், ஒன்று ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் பிரகாசித்திருக்க வேண்டும் அல்லது சினிமா மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமாகி இருக்க வேணடும்.

திமுக,அதிமுக, தேதிமுக ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் இந்த பிரிவினை சாராதவர்களே.

கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களாக மேற்குறிப்பிட்ட பிரிவினர் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு அவர்களின் தொகுதிக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

சினிமாவில் பலர் இருந்தாலும் அவர்கள் அரசியல் ஆர்வம் இதுவரை காட்டவில்லை.

எனவே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்களில் இருந்து முதல்வர் வருவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஜாதிக்கட்சி என்ற வட்டத்தில் அடைபடும்பொது, மற்ற ஜாதியினர் இயல்பாகவே வாக்களிக்கத் தயங்குவார்கள்.

இம்மாதிரி கட்சிகள் வளர்ந்து சிறிது அதிகாரம் கிடைத்தாலும், பூசல்கள் தொடங்கி விடுகின்றன.

பா ம க வில் கூட கட்சி வளர்ந்தவுடன் பு தா அருள்மொழி, பு தா இளங்கோவன், தீரன் போன்ற பலர் வெளியேறியது கண்கூடு.

தெற்கில் கூட பார்வர்ட் பிளாக் (சந்தானம் பிரிவு, வல்லரசு பிரிவு), மூவேந்தர் முன்னேற்றக் கழகம், வாண்டையார் என பல குழுக்களாகவே இயங்கி வருகிறார்கள்.

எனவே கொ மு பே வினரே நிதர்சனத்தை உணர்ந்திருப்பார்கள். 2011 சட்டமன்றத்தேர்தலில் அவர்கள் வாக்கு வங்கியுள்ள தொகுதிகளில் (சுமார் 40-50 இருக்கும்) தனியாக நிற்பதா? இல்லை
பா ம க வழியில் செல்வதா என சிந்திக்க தொடங்கியிருப்பார்கள். தனியாக நின்றால் 5 சீட் வரை கிடைக்கக் கூடும். கூட்டணி என்றால் 10-15 நிச்சயம். பார்ப்போம்.

June 12, 2009

பெண்களின் பிரச்சனைகளை பேசிய 94 ஆம் ஆண்டின் திரைப்படங்கள்

பெண்களுக்கு கருவறையில் இருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்து விடுகின்றன. அவை கல்லறை வரை ஓய்வதில்லை. ஆச்சரியப்படும் வகையில், பெண்களின் அனைத்துப் பருவங்களிலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தான படங்கள் 94 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளன. அதைப் பற்றிய ஒரு பார்வை.

கருத்தம்மா

பாரதிராஜா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த படம்.ராஜஸ்ரீ, மகேஸ்வரி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமான படம். பொன்வண்ணனுக்கு நல்ல கேரக்டர் அமைந்து, அவர் பெயர் சொல்லும் நடிகராக மாறிய படம். பெரியார் தாசன் குணசித்திர நடிகராக அறிமுகமான படம். தென்மாவட்டங்களில் பெண்ணுக்கு கல்யாணத்தின் போது வரதட்சணை கொடுத்து, பின் கடைசிவரையிலும் (பொறந்த வீட்டுக் கோடி) செலவழிக்க வேண்டியிருப்பதால், பெண் குழந்தை பிறந்தஉடனேயே அதற்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் இருக்கிறது. (இப்போது குறைந்திருக்கிறது?)

இதை பதிவு செய்த படம்தான் கருத்தம்மா. மூன்றாவதும் பெண் குழந்தை என்று அறிந்ததும் அதை கொன்றுவிடச் சொல்கிறார் பெரியார் தாசன். அந்த ஊர் வாத்தியாரோ அந்தக் குழந்தையை காப்பாற்றி எடுத்துச் சென்று வளர்க்கிறார். பின் அந்தக்குழந்தை மருத்தவராகி, அந்த தந்தைக்கே வைத்தியம் செய்கிறாள். இடையில் முதல் பெண் குழந்தையை (சரண்யா) திருமணம் செய்து கொடுத்து படாத பாடு படுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பெண் குழந்தை (ராஜஸ்ரீ) தன் தந்தையை கஷ்டப்பட்டு கவனித்துக் கொள்கிறார். அவரது காதலர் அந்த ஊர் கால்நடை மருத்துவர் (ராஜா). பெண்கள் குடும்பத்தை தாங்குவதில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பதிவு செய்த படம்.

இந்தப் படத்தில் போறாளே பொன்னுத்தாயி, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற பாடல்கள் இருந்தாலும், எப்போது கேட்டாலும் மனதை அறுக்கும் பாடல் ஒன்றும் உள்ளது. பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் போது பாடுவதாக வரும்,

”அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பொறந்தா
பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியே ”

என தேனி குஞ்சரம்மா பாடும் பாடல்.

மகாநதி

தாயில்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் இரு குழந்தைகள். தந்தை எதிர்பாராத விதமாக சிறைக்குச் செல்ல நேரிட, ஆண் பையனோ ஒரு கழைக்கூத்தாடியிடம் தஞ்சம் அடைகிறான். பெண் குழந்தை? அது விபச்சார விடுதிக்குள் தள்ளப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த தந்தை அந்த பெண்ணை மீட்கிறார். மீட்புக்குப் பின்னரும் அந்தப் பெண் படும் வேதனை?


அரண்மனை காவலன்


அனாதையாக விட்டால் மட்டும்தானா பெண்ணுக்குப் பிரச்சினை? பெற்றோர்கள் இருந்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி தாளாளர், ஊர் பெரிய மனிதர். ஆனாலும் சின்ன புத்தி. பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்கிறார். ஊர் ஒன்று கூடி தண்டனை வழங்குகிறது. அதன் பின்னரும் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கு ஒரு மீட்பர் எனப் படம்.

பிரியங்கா

அடுத்த வீட்டில் வேலைக்குச் செல்லும் பருவ வயது பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையைச் சொல்லிய படம். ஒரு பெரிய பணக்கார வீட்டிற்க்கு வேலைக்குச் செல்கிறாள் ஒரு பெண். ஹோலி கொண்டாட்டங்களில் வீடே திளைத்திருக்க, அந்த வீட்டுப் பையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளை மானபங்கப் படுத்தி விடுகிறான். குடும்பமே சேர்ந்து அதை மறைக்கிறது. அந்த வீட்டு மருமகள்(ரேவதி), நியாயம் கேட்க புறப்படுகிறாள். கணவனின் (ஜெயராம்) குடும்பமே அதை எதிர்க்கிறது. நியாயத்திற்க்காக போராடும் ஒரு வழக்கறிஞர் (பிரபு) ரேவதிக்கு துணை நிற்கிறார். நியாயம் வெல்லுகிறது.

இந்தப் படம் முதலில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில், மீனாட்சி சேஷாத்ரி(மருமகள்),சன்னி தியோல் (வழக்கறிஞர்) வேடங்களில் நடிக்க இந்தியில் தாமினி என்ற பெயரில் வெளியானது. இந்தப்படத்திற்க்காக சன்னி தியோல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.


பதவிப்பிரமாணம்


ஒரு அரசியல்வாதி. அவர் முதல்வராக வேண்டுமெனில் குறிப்பிட்ட ஜாதகம் உள்ள பெண்ணை சுடுகாட்டில் திருமணம் செய்து, அங்கே முதலிரவு நடக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்கிறார். அப்படிப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறார்கள் அடிப்பொடிகள். அதற்கடுத்த நாள் அந்தப் பெண்ணுக்கு திருமணம். மண்டபத்தில் இருந்து சுடுகாட்டுக்கு பெண்ணைக் கடத்துகிறர்கள்.ஜோசியர் சொன்னது நடக்கிறது. அரசியல்வாதி முதல்வரும் ஆகப்போகிறார். இதை அறிந்த பெண்ணின் அண்ணன் (விஜயகாந்த்), அந்த
அரசியல்வாதியை கடத்தி, கொன்று அதை தடுக்கிறார்.

சரிகமபதநீ

வழக்கமான பார்த்திபன் பிராண்ட் படமென்றாலும், இதன் அடிநாதம் இன்னசெண்ட் வயதில் இருக்கும் பெண்ணை ஏமாற்றுவதால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையும், அதன் பின்விளைவுகளுமே. பார்த்திபன் குழுவினர் ஒரு திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கே வளையவரும் இளம்பெண் (சங்கீதா). தன் வழக்கமான பிளேபாய் வித்தைகளை அந்தப் பெண்ணிடம் காட்டுகிறார். இருவரும் சந்திப்பதைக் கண்டு (ஏதும் நடக்காவிட்டாலும்)மண்டபத்தில் வதந்தி பரவுகிறது. திருமணம் முடிந்ததும் பார்த்திபன் டாட்டா காட்டிவிட்டு செல்கிறார். வதந்தியால் குடும்பம் தீக்குளிக்கிறது. பெண்ணுக்கு சித்தப் பிரமை ஏற்படுகிறது. அவர்களின் உறவுப்பெண் (ரோஜா) அதற்கு பழிவாங்க வருகிறார்.


மே மாதம்

ஏழை, நடுத்தர பெண்ணுக்கு மட்டும்தான் பிரச்சினையா? வசதியான பெண்ணுக்கு?. இளம்பெண்ணுக்கு பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கிறார் தந்தை. பிடிக்காத ஆளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். பெண் தப்பித்து சென்னை வருகிறாள். ஒரு போட்டோ கிராபரை காதலிக்கிறாள். துரத்தல்கள்.

தயாரிப்பாளர் ஜீ வியை புதைகுழிக்குள் தள்ளிய படங்களில் இதுவும் ஒன்று. பாலு இயக்கத்தில் வினீத், சோனாலி நடித்த படம். ஏ ஆர் ரகுமான் இசை. என் மேல் விழுந்த மழைத்துளியே, மார்கழி பூவே போன்ற அருமையான பாடல்கள் இருந்தும் படுத்துக் கொண்ட படம்.

நிலா

வசதியான வீட்டுப்பெண் (வினிதா), ஒரு விபத்தால் சுய நினைவை இழக்கிறாள். குழந்தை தனமாக மாறி விடுகிறாள். குல்பி ஐஸ் விற்கும் ஜெயராம் அவளைக் காப்பாற்றி திருமணமும் செய்து கொள்கிறார். குழந்தை பிறக்கிறது. பெண்ணுக்கு சுய நினைவு திரும்புகிறது. அப்போது தான் தெரிகிறது, அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று. பல போராட்டங்களுக்குப் பின் தெளிவு பிறக்கிறது. ஜெயராமுடன்
சேர்ந்து வாழத் தொடங்குகிறாள்.

மகளிர் மட்டும்

சரி திருமணத்தோடு பெண்ணின் பிரச்சினை முடிந்து விடுமா? என்ன?. வேலைக்குப் போகும் பெண்ணிற்கு? வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பதிவு செய்த முக்கியமான படம் இது.சபல புத்தி மானேஜர் (நாசர்), சமத்துவப் பார்வை கொண்டவர் பெண்கள் விஷயத்தில். அது ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் சரி, அலுவல உதவியாளரானாலும் சரி, துப்புறவுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி. பெண் பெண்ணே என்னும் உயர்ந்த தத்துவத்தை கடைப்பிடிப்பவர். பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தொல்லை கொடுக்கிறார். வெகுண்டெழுந்த பெண்கள் அவருக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள். கிரேசி மோகன் வசனம், இளையராஜா இசை, கமல்ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம். தயாரிப்பாளர் தாணு தமிழ் ஆர்வலராக தலைகாட்டிய படம்.

பவித்ரா

நடுத்தர வயது பெண்ணுக்கு மட்டும் வராதா பிரச்சினை?. தன் மருத்துவமனையில் சேரும் நோயாளியை (அஜீத்) தாய்ப்பாசத்துடன் கவனிக்கிறார் நர்ஸ் (ராதிகா). கணவருக்கு (நாசர்) மனைவியின் நடத்தையில் சந்தேகம். வாழ்க்கை நரகமாகிறது.


இதைத்தவிர இந்த ஆண்டு வெளியான, அரவிந்த்சாமி, ரேவதி நடிக்க சுரேஷ் மேனன் இயக்கிய பாச மலர்கள் திரைப்படம் அனாதையாகும் பெண் குழந்தைகளை வளர்க்கும் தொழிலதிபர் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்த அனைத்துக் குழந்தைகளும் பெண்களுக்கு ஏற்படும் எல்லாக் கொடுமைகளையும் இன்றும் அனுபவிக்கிறார்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் அனைவரும் இன்றைய முண்னனி டிவி சீரியல் நடிகைகள். முக்கிய உதாரணம் மெட்டி ஒலி காயத்ரி.

பருவப் பெண்களுக்கு வரும் வயதுக் கோளாறு, அதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொன்ன படம் பிளே கேர்ள்ஸ். இதுவும் இந்த ஆண்டுதான் வெளியானது. சில்க் ஸ்மிதா நாயகி. இந்தப் படத்தில் தான் ஷகீலா, ஷீத்தல் ஆகியோர் அறிமுகமனார்கள்.

June 08, 2009

1984 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை.

இந்த ஆண்டு இந்திய அரசியலில் புயல் வீசிய ஆண்டு. இந்திராகாந்தி அவர்கள் தன்னுடைய
பாதுகாவலர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து ராஜீவ் பிரதமரானார். அவர் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு மக்களை சந்தித்தார். தமிழகத்திலோ எம்ஜியார் அவர்கள் உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டு போராடிக் கொண்டிருந்தார்.

அப்பல்லோ, புரூக்ளின், டயாலிசிஸ் போன்ற சொற்கள் அனைத்து தமிழர் நாவிலும் புழங்கிக்
கொண்டிருந்தன. வதந்திகளும் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. ராஜீவ் தேர்தலை சந்திக்க தயாரானதும், அப்போதைக்கு எம்ஜியாருக்கு நெருக்கமானவர்களாக இருந்த ஆர் எம் வீரப்பன்,பண்ருட்டி ராமசந்திரன் ஆகியோர் ஆட்சி மீதமிருக்கும் நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்ட மன்ற தேர்தலையும் நடத்தி விடலாம் என முடிவு செய்தனர். அவர்கள் இந்திரா, எம்ஜியார் அனுதாப அலை, ராஜீவின் வசீகரம் ஆகியவை வெற்றி தேடித்தரும் என்று நம்பினர். அது வீண்போகவில்லை.

இந்த தேர்தல் தான் ஜெயலலிதா முதன் முதலாக பிரச்சாரம் செய்த பொதுத் தேர்தல்.எம்ஜியாரின் மருத்துவமனைப் படங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட இரண்டாவது தேர்தல். அமெரிக்காவில் படுத்துக் கொண்டு ஆண்டிபட்டியில் எம்ஜியார் ஜெயித்த தேர்தல். முதன்முதலாக வீடீயோ பிரச்சாரம் அறிமுகமான தேர்தல்.(எம் ஜி யார் மருத்துவமனைக் காட்சிகள்).

ஆனால் தமிழ்சினிமா எந்த புற பாதிப்பையும் உட்கொள்ளாமல் தன் பாதையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. 117 திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன.15 படங்கள் 100 நாட்களை தொட்டன. அதைப் பற்றிய ஒரு பார்வை.

சிறை

ஆர் சி சக்தி இயக்கத்தில், அனுராதா ரமணன் கதையில் ராஜேஷ், லட்சுமி நடிப்பில் வெளிவந்த படம்.

இந்தப் படத்தின் கதை விகடன் மணிவிழா போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. (அப்போதே 50000
ரூபாய்). இந்த பணத்தில் நூறு பவுனுக்கு மேல் வாங்கலாம் என்று பலர் அப்போது பேசிக் கொண்டார்கள்.
இன்றைய கணக்குக்கு 10 லட்சத்தை தாண்டும். ஒரு சிறுகதைக்கு (அதுவும் தமிழில்) இவ்வளவு பெரிய பரிசு இதுவரை வந்ததில்லை.

ஒரு பிராமணரின் மனைவியை (லட்சுமி), ஊர் மைனர் (ராஜேஷ்) பாலியல் பலாத்காரம்
செய்து விடுகிறார். லட்சுமியின் கணவர் அதை தட்டிக் கேட்காமல் இருக்கிறார். ஆனால் குடும்பத்தார் லட்சுமியை புழுப் போல நடத்துகிறார்கள். பொறுத்துப் பார்த்த லட்சுமி, கடைசியில் அந்த மைனர் வீட்டுக்கே பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்.

அச்சமில்லை அச்சமில்லை


அரசியலை மையமாகக் கொண்டு தமிழில் வெளிவந்த சில படங்களில் இதுவும் ஒன்று. ராஜேஷ் வளரத் துடிக்கும் அரசியல்வாதி. சரிதா காதலியாயிருந்து மனைவியானவர். பின் ராஜேஷ் அரசியல் சூழ்நிலை களால் கெடுவதைப் பார்த்து பிரிகிறார். கதைக்களமாக உள்ளூர்,கிராமப்புற அரசியல் இருந்தது.

மேகத்தை தூதுவிட்டா போன்ற அருமையான மெலடிப் பாடல்கள் இருந்தாலும், அப்போது கையில காசு வாயில தோசை என்னும் பாடலே பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பாடப் பட்டது.

செத்தவனும் ஓட்டுப் போட வருவான், அந்த கடவுளும் வரிசையில நிற்பான் என்னும் வரிகள்
சிலாகிக்கப்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஊர் எப்படி மாறுகிறது என்பதை அருமையாக காட்சிப் படுத்தியிருப்பார்கள்.

நாளை உனது நாள்


புத்தாண்டுக் கொண்டாட்டம். கலந்து கொண்ட அனைவரது பெயரையும் சீட்டில் எழுதிப் போட்டு குலுக்கி (எடுப்பது அனுராதா, ஆடிக்கொண்டே) எடுக்கிறார்கள். வந்த அனைவருக்கும் வெளிநாட்டுக்கு விமானப்பயணம் பரிசு. விமானம் கிளம்பி, கோளாறு காரணமாக ஒரு தீவில் தரையிரங்குகிறது.

செல்போன் இல்லாத காலம். வெளியுலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பங்களா மட்டும் தட்டுப் படுகிறது. அங்கே ஒரு சமையல்காரி மட்டும், உணவுப் பொருள்களுடன். அவளுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. உணவு மட்டும் தயாரித்து தருகிறாள்.

இரவில் பெண் குரலில் அமானுஷ்ய பாடல். ஒவ்வொருவராக தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். யாரை சந்தேகப்படுகிறார்களோ அவர்கள்தான் அடுத்து இறக்கிறார்கள். முடிவு என்ன?. யார் இதை ஏற்பாடு செய்தது?

கடைசி வரை கிரிப்பாகச் செல்லும் இந்த திரில்லரை இயக்கியவர் ஏ ஜெகன்னாதன். விஜயகாந்த், ஜெய்சங்கர், மனோரமா,நளினி, சத்யராஜ் நடித்த இந்தப் படம் ஏன் எந்த டிவியிலும் வரவில்லை எனத் தெரியவில்லை.

விதி

மறைந்த பாலாஜி, வழக்கம் போல் தயாரித்த இந்தி ரீமேக். மோகன், பூர்ணிமா ஜெயராம் (பாக்யராஜ்), ஜெய்ஷங்கர், லட்சுமி, பூர்ணம் விஸ்வனாதன், மனோரமா நடித்த இந்தப் படத்துக்கு வசனம் ஆரூர் தாஸ். ஏமாற்றிய காதலனை கோர்ட் மூலம் காதலி கைப்பிடிக்கும் கதை.

மதிய நேர முடிதிருத்தகங்கள், டீக் கடைகள் போன்றவற்றில் இந்தப் படத்தின் வசன கேசட்தான் ஓடிக் கொண்டிருக்கும். தீபாவளி சமயங்களில் விடிய விடிய வேலை நடக்கும் டெய்லர் கடைகளில் இந்தப் பட வசனத்தைக் கேட்டுக்கொண்டுதான் பையன்கள் காஜா எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பராசக்தி, மனோகரா வுக்குப் பின்னர் வசனத்திற்க்காகவே ஓடிய படம் இது என்று கூட சொல்லலாம்.

நீங்கள் கேட்டவை


என் டேஸ்டுக்கு எடுத்தாத்தான் பார்க்க வரமாட்டேங்கிறங்க. சரி. நீங்க கேட்குறதயே தர்றேன் என்று பாலு மகேந்திரா களம் இறங்கிய படம்.

கனவு காணும், பிள்ளை நிலா, அடியே மனம், ஓ வசந்த ராஜா என வெரைட்டியான பாடல்கள்.

இந்த பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை அதிமுகவினர் ரீ மிக்ஸ் செய்து ரெட்டை இலை இரண்டும் பச்சை இலை என பாடி கேன்வாஸ் செய்தார்கள்.

இது தவிர இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாட்டுப்புற/கானா என வகைப்படுத்தும் படி இரண்டு பாடல்கள் வந்தன.

டி கே எஸ் நடராஜன் பாடிய என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி பாடல் வாங்க மாப்பிள்ளை வாங்க என்னும் படத்திலும்,

என் அத்தை பெத்த மல்லிகைப் பூவே, ஏன் ஆசைக்கேத்த முல்லைப் பூவே மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா என்னும் பாடல் பேய்வீடு என்னும் இடம்பெற்று வெளியானது.


ரஜினிகாந்த்

ரஜினி இந்த ஆண்டு தமிழில் மட்டும் ஐந்து படங்களில் நடித்தார். ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்றும் சொல்லலாம். தம்பிக்கு எந்த ஊரு படம் ரஜினியின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக்கூடியவை என்று அனைவர் மனத்திலும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. அடுத்து இதே ஆண்டில் வெளி வந்த நல்லவனுக்கு நல்லவனும் அதை உறுதி செய்தது. அன்புள்ள ரஜினிகாந்த்தில் ரஜினியாகவே
நடித்தார். சுமாரான ஓட்டமே. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கை கொடுக்கும் கையில் ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான வேடம். நான் மகான் அல்ல படம் மட்டுமே ரஜினியின் (அப்பொதைய)
டிரேட்மார்க படம்.

கமல்ஹாசன்

இந்த ஆண்டு கமலின் ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. எனக்குள் ஒருவன். இதில் ஷோபனா அறிமுகமாகி இருந்தார். படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியடையவில்லை. இந்த ஆண்டில் கமல் பெரும்பாலும் இந்தித் திரையுலகையே வட்டமிட்டுக் கொண்டிருந்தார். (சாகர் படப்பிடிப்பு).

விஜயகாந்த்

இந்த ஆண்டு விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள் வெள்ளி விழா கொண்டாடியது.நூறாவது நாள், நாளை உனது நாள் ஆகியவை 100 நாட்களைக் கடந்தன.

சத்யராஜ்

அதுவரை துணை நடிகர் அளவில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த சத்யராஜை நம்பர் 1
வில்லன் ஆக்கியது இந்த ஆண்டுதான். இந்த ஆண்டில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரில் கூட ஒரு சிறு வேடம் தான். ஆனால் நூறாவது நாளும், 24 மணி நேரமும் அவரை தூக்கி விட்டன.


மோகன்


நூறாவது நாளில் ஆண்டி ஹீரோ, 24 மணி நேரம், நான் பாடும் பாடல் ஆகியவற்றில் நல்ல வேடம் என மோகனின் வண்டி வழக்கம் போல ஓடியது.


முரளி/அர்ஜூன்


முரளி பூவிலங்கு மூலமும், அர்ஜூன் நன்றி படத்தின் மூலமும் அறிமுகமானார்கள். பூவிலங்கில் அறிமுகமான பூவிலங்கு மோகனும், குயிலியும் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.

June 06, 2009

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

அருமை நண்பர் ஜாக்கி சேகர் மற்றும் வந்தியத்தேவன் ஆகியோர் இது பற்றி சில கேள்விகளை
எழுப்பியிருந்தார்கள். அவர்களின் கேள்வியில் நியாயமான ஒரு கருத்து இருந்தது.

முதலில் தமிழகத்திற்க்கு பின்னர் தேசிய அளவில் என்று இருந்திருக்கலாமே? என்று.

என் மனதிற்க்குத் தோன்றிய சில காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1. சிறந்த திரைக்கதை அமைப்புடைய பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது நாம் பல படிகள் பிந்தங்கியே இருக்கிறோம். பல படங்கள் தேவையில்லாத காட்சிகள், லாஜிக் மீறல்களுடன் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. பல திரைக்கதை உத்திகள் இங்கு இன்னும் பரீட்சித்து பார்கப்படவே இல்லை. எனவே ஒரு உத்தியைச் சொல்லி, அதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமெனில் நாம் பிற நாட்டு படங்களையே சொல்ல வேணடியிருக்கிறது. அவை சரியான
ஆங்கில சப் டைட்டில்களுடன் எளிதில் கிடைக்கின்றன.

2. தமிழில் திரைக்கதையை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். தவறில்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதில் சந்தேகமே இருக்கக் கூடாது. இது போன்று வகுப்பு எடுக்கும் அனுபவம் உடையோர் இங்கு குறைவு. பாலு மகேந்திரா (இங்கு வகுப்பெடுத்தார்) போன்ற சிலரே
உள்ளனர். இனி அதிகமோனோர் உருவாவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. எனவே வேறு மொழி ஆட்களை அழைத்து வரும் போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகப் படுத்தப்படுகிறது.

3. திரைக்கதை சம்பந்தமாக குறிப்புகள் அடங்கிய மெட்டீரியல்ஸ் (ஆங்கிலம்) கொடுக்கப்பட்டது. இதை தமிழில் மாற்ற பெரு முயற்சி தேவை.

4.இந்த நிகழ்வானது சென்னை ஐ ஐ டியின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக
நடத்தப் பட்டது. இரண்டு மாதம் முன்னர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடத்திய திரைக்கதை
புரிதல் அமர்வும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப் பட்டது. அதுவும் தேசிய அளவிலேயே நடத்தப்பட்டது.

ஐஐடி மத்திய அரசு நிறுவனம். அதில் மாநிலம் சார் நிகழ்ச்சிகள் மிக அரிது. எல்லாமே தேசிய கண்ணோட்டம்தான்.

5. இட வசதி, ஆசிரியர் மாணவர் விகிதம், மாணவர்களிடம் கல்வி சென்று சேரும் விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால் 250 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய அளவில் உதவி இயக்குநர்கள் எவ்வளவு? எனவே சினிமாவைப் பற்றிய ஓரளவு அடிப்படைப் புரிதல் உள்ளவர்களையும்,சினிமாவை தொழிலாக கைக்கொள்ளப் போகிறவர்களையும் மட்டும் முதல் கட்டமாக அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அவர்களை இனம் காணவே தங்களுக்குப் பிடித்த படத்தைப் பற்றிய அப்ஸ்ட்ராக்ட் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் புரிதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

6. தமிழிலும் இது நடைபெறும்.ஆனால் சில காலம் கழித்து.

(இதற்க்குமுன் அவ்வை சண்முகி பட தயாரிப்பின் போது, வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களைக் கொண்டு ஒரு பயிற்சிப்பட்டறை தமிழ் கலைஞர்களுக்காக கமல் நடத்தினார்.

மேலும் ஆளவந்தான் பட சமயத்திலும்
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வகுப்பு நடத்தப் பட்டது.

மேலும் முழுக்க முழுக்க தமிழிலும் நடத்த பின்னாட்களில் வாய்ப்பு இருக்கிறது.)




நிகழ்வு பற்றிய சில உதிரி தகவல்கள்


மதிய உணவு பெரும்பாலும் சீன முறைப்படி இருந்தது. கமல்ஹாசன் அடிக்கடி பிளாக் டீ,
முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்துக் கொண்டார் என கேட்டரிங்காரர்கள் கூறினார்கள்.

இளைஞர்கள் அதிகம். கேரளா, வங்கம், மும்பை அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது.
தமிழ் உதவி இயக்குநர்கள் நான் பார்த்த வரையில் 20க்கும் அதிகமானோர் இருந்தனர்.

வகுப்பு நடக்கும் போதும், கலந்துரையாடலின் போதும் கமல் அரங்கின் உள்ளேயே இருந்தார்.
நல்ல மாடரேட்டராக செயல்பட்டார்.

ஆனால் படம் திரையிடப்படும் போது, வெளி அரங்கில் சுற்றிவந்து பணிகளை கவனித்தார்.
தன்னார்வலர்கள்,பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரின் சினிமா பற்றிய கேள்விகளுக்கும்
பதிலளித்தார்.

கமலின் செல்போன் அவர் உதவியாளரிடமே இருந்தது. முக்கிய அழைப்புகள் மட்டுமே கமலிடம் தரப்பட்டன.

June 04, 2009

பாஸ்கட் பால்

இந்த முறையும் டிராபியை எடுத்துவிடுவோம் என்றே நம்பியிருந்தேன். இரண்டாம் பாதியில் பையன்கள் சொதப்பி விட்டார்கள். ரன்னர் அப் என்பது பரவாயில்லைதான். ஆனால் எங்கள் கல்லூரி சேர்மன் எதிலும் முதலிடம்தான் வரவேண்டும் என்று உடும்புப்பிடியாய் நிற்பவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

விளையாட்டுகளில் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் தன் நிறுவனத்தின் இமேஜை உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு செலவு செய்கிறார்.

நாங்கள் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறோம். நேற்றோடு முடிவடைந்த ஒரு வார டோர்ணமெண்டின் களைப்பு எல்லோரிடமும். மற்ற பையன்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இருக்கையில் இருந்து எழுந்து சற்று முன்னால் நடந்து சென்றேன்.

நாலு பேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் ஒரு ஐபாடில் ஆளுக்கொரு ஹெட் போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.இரண்டு பேர் நல்ல தூக்கத்தில். ஒருவன் கல்லூரி ரப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப் பட்ட பாலை தன் ஆள்காட்டி விரலால் சுழற்றி எதிர் சீட் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தான்.

”ஆமா இதை மட்டும் பண்ணு. மேட்சுல கோட்டை விட்டுடு” என்று அவனது சகா அவனை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

வண்டியின் வேகம் குறைந்து கொண்டு வந்தது. விழுப்புரத்துல எஞ்சின் மாத்துவாங்க. இருபது நிமிசமாவாது நிற்கும் என்று அடிக்கடி அதில் பயணம் செய்யும் இரு நடுத்தர வயதினர் பேசிக்கொண்டார்கள்.

வண்டி நின்றது. ”பாய்ஸ் வாங்க, ஏதாவது சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தேன்.இறங்கி கும்பலாக நடந்து வந்தார்கள். அவர்கள் கடையை மொய்க்கத் தொடங்கினார்கள். நான் சற்று ஒதுங்கி மொபைலை எடுத்து கல்லூரி தலைமை பி டி யிடம் எப்போது வந்து சேர்வோம் என்ற தகவலைச் சொன்னேன்.

மாணவர்கள் ஆண்டின் அடிப்படையில் குழுக்களாக பிரிந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புதிதாக அணியில் சேர்ந்திருந்த முதலாமாண்டு மாணவன் மட்டும் அகதியைப் போல தனித்து நின்று கொண்டிருந்தான்.இந்த ஆண்டு எப்படியும் நான்கைந்து முதலாமாண்டு மாணவர்களைச் சேர்த்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஆட்டத்துக்கு பத்து, பன்னிரெண்டு வயதிலேயே பாலைத் தட்டி பழகியிருக்க வேண்டும். ரத்தத்தில் அப்போதே ஊறினால்தான் உண்டு. பதினெட்டு வயதில் சொல்லிக் கொடுப்பது கஷ்டம். ஸ்கூல் லெவலில் ஓரளவு ஆடியிருந்த இவன் மட்டும்தான் தேறியிருந்தான்.

அவனை சைகை காட்டி அழைத்தேன்.

என்ன கார்த்தி, ”தோத்துட்டமேன்னு பீல் பண்றியா” என்றேன்.

”கொஞ்சம் கஷ்டமாத்தான் சார் இருக்கு,அடுத்த டோர்ணமெண்ட் எல்லாம் விட்டுறக்கூடது சார்” என்று பதிலளித்தான்.


மனதுக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. ஆர்வமான பையன்.

சார், எனக்கு ஒரு சந்தேகம். ஏன் சார் மத்த டீமில ஆடுற பசங்களோட சொந்த ஊரு, ஸ்கூல் எல்லாம் விசாரிச்சுக்கிட்டே இருந்தீங்க?

கார்த்தி, அதுல ஒரு விஷயம் இருக்கு. இப்ப புட்பால்ல பார்த்தயின்னா இத்தாலி டீம் டிபெண்சுல நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும். பிரேசில் அட்டாக்கிங்லதான் கான்சண்டிரேட் பன்ணுவாங்க. ஜெர்மன் என்ன பிளானோட இறங்குனாங்களோ அத எக்ஸிகியூட் பண்னத்தான் பார்ப்பாங்க.

அதுபோல இங்கயும் சில ஸ்டைல் இருக்கு. மதுரை,திண்டுக்கல் டீம் பார்த்தியின்னா அதுல வத்தலகுண்டு பசங்களோட இன்புளூயன்ஸ் இருக்கும். டிரிபிள் பண்ணும் போது கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தாலும் பாலை நம்ம கிட்ட இருந்து பிடுங்கிடுவாங்க. ஷூட் பண்ணும்போது கேர்லெஸ்ஸா இருந்தா அவன் அடிக்கிற டேப்ல பால் காலரியில போய் விழும். திருநெல்வேலி, நாகர்கோயில் பசங்க ஸ்டெமினா தூக்கலா இருக்கும்.நாப்பது நிமிசமும் அதே எனர்ஜியோட விளையாடுவாங்க.

இதுமாதிரி அறந்தாங்கி,கரூர், உடுமலை, கோவைன்னு ஏரியாக் கேத்த ஸ்டைல் இருக்கு. நம்ம சென்னை பசங்க கிட்ட கில்லர் இன்ஸ்டின்க்ட் கொஞ்சம் கம்மியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி நாம பிளான் பண்ணி ஆடணும். அதுக்குத்தான் விசாரிக்கிறது என்று முடித்தேன்.


சார், இது அப்படியேவா வரும்? என்று சந்தேகத்துடன் கேட்டான்.

கார்த்தி, நான் டிஸ்ட்ரிக்ட், ஜோனல்,அண்டெர் 17,19, யுனிவர்சிட்டி அப்புறம் ஸ்டேட் வரைக்கும் விளையாடி, வந்த அப்சர்வேஷன் இது. அப்போ என்கூட விளையாடுனவங்களோட லெகஸீ அடுத்த செட்டுக்கு அப்படியே வரும். அதுபோக அங்க கோச்சாவும் இருக்குறவங்க முந்தைய செட் ஆளுங்கதானே. நீ இன்னும் ரெண்டு மூணு டோர்ணமெண்ட் வந்தா உனக்கும் பிடிபட்டுடும் என்றேன்.

அணி கேப்டன் மகேஸ், என்னைப் பார்த்து தயங்கி தயங்கி வருவதைப் பார்த்தேன். எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ வாங்கிட்டு வா என்று கார்த்தியை அனுப்பி வைத்தேன்.

மகேஸ் அருகில் வந்தான்.

என்னா மகி, எனி பிராப்ளாம்? என்றேன்.

நீங்க மெயின் பைவ்ல இறக்காம விட்டூட்டிங்கன்னு ரொம்ப அப்செட்ல இருக்கான் சார் நந்தா என்றான்.

நந்தா ஆறடி இரண்டங்குலம். அருமையான பீவட் பொசிஷன் பிளேயர்.

மகி, நீதான் பார்த்தேயில்ல செமீஸ்ல முதல்ல அவனதான் இறக்கிணோம். ரொம்ப கேர்லெஸ்ஸா ஆடுனான். 10 பாயிண்ட் ட்ரெயில் ஆயிட்டோம். அதுக்கப்புறம் ஆதியை இறக்கி எவ்வளோ கஷ்டப்பட்டு ஜெயிச்சோம்.

நானே உன்கிட்ட இதுபத்தி தனியா பேசணூம்னு நினைச்சேன்.நீதான் அவன் கூட எப்பவுமே இருக்குறியே. அவனுக்கு என்ன பிராப்ளம்? இந்த டோர்ணமெண்ட்ல அவன் ஆட்டிடியூட் ரொம்ப புவர் மகி என்றேன்.

ஆமா சார். அவன் மட்டுமில்லே சிவா,வெங்கட்டும் கூட ரொம்ப பீல் பண்ணுறாங்க சார். நம்ம கிரிக்கெட் டீம பார்த்து.

ஏம்பா, எல்லோரையும் ஒரே மாதிரி தானே ட்ரீட் பண்ணுறோம்?.

சார், கிரிக்கெட் டீம்ல ஆடுறவங்களுக்கு இந்தியா சிமெண்ட்ஸ், ஸ்பிக்,டிவிஎஸ்ன்னு ஏகப்பட்ட ஆபர் வருது சார். நம்ம பசங்களுக்கு ஒண்ணும் கிடைக்கலை. போன மாசம் நம்ம ஏரியாவில மட்டும் 20 சம்மர் கிரிக்கெட் கேம்ப் நடந்திருக்கு. காலேஜ் டீம் பசங்க எல்லோரையும் கேம்ப் நடத்துறவங்க அள்ளிட்டுப் போயிட்டாங்க. சின்னப் பசங்களுக்கு பவுலிங் போட,கத்துக் கொடுக்கன்னு. விண்டர் கேம்புக்கு கூட இவனுகள வரச்சொல்லியிருக்கங்களாம்.

ஐபிஎல் லயும் டீமுக்கு பத்து,இருபது ஸ்டாக் பிளேயர் எடுக்குறாங்க. ஒரு லெவெல் கூட விளையாடினாலே பிரைட் பியூச்சர் இருக்கு. இத விளயாடி என்ன ஆகப் போகுதுன்னு கேக்குறாங்க சார்?

சரி சரி நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். நீ ரிலாக்ஸா இரு என்று அனுப்பி வைத்தேன்.

காலேஜ் பி டி யும் இதே மாதிரிதான் சொன்னார். புட்பால்,ஹாக்கி டீம தேத்துறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு என்று புலம்பினார்.

கிரிக்கெட் மட்டும் ஆடினாப் போதுமா? அப்போ மத்த விளையாட்டெல்லாம்?


கார்த்தி டீ வாங்கிக் கொண்டு அருகில் வந்தான். இன்னும் பத்து நிமிஷத்துல வண்டி கிளம்பிடுமாம் சார் என்றான்.

இவனுக்கும் இந்தப் பேச்சுகள் எட்டியிருக்குமா? என்று யோசனையுடன் டீயை வாங்கினேன்.

அவனே ஆரம்பித்தான். நீங்க, ஸ்டேட்டுக்கு அப்புறம் நேஷனல் ஆடலியா சார்? என்றான்.

இல்லப்பா. ஸ்டேட் ஆடுன டீமில அப்போ எல்லோருக்கும் நல்ல வேலை கிடைச்சது. ரயில்வே,கஸ்டம்ஸ்,என் எல் சின்னு. எல்லா ட்ரான்ஸ்போர்ட் கார்பரேசன்னிலயும் அப்போ டீம் இருந்தது. எனக்கும் ஒரு ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்ல கிடச்சது. மூணு வருஷம் நல்லாப் போச்சு. அப்புறம் வந்தவங்க நிர்வாக சீர்திருத்தம் பண்றேன்னு, டீமெல்லாம் வேணாம்.அவங்களும் ஆபிஸ் வேலையை முழு நேரமாப் பார்க்கட்டும்னு சொல்லிட்டாங்க.

இருபத்தஞ்சு வயசெல்லாம் இந்த ஆட்டத்துக்கு பீக்கான வயசு. அப்பப் போயி பாலத் தட்டாம பேப்பரா புரட்டுறதான்னு குழப்பம். வேலையை ரிசைன் பண்ணீட்டு நார்த் சைட் போயிட்டேன். அங்க சில வருசம் பிரைவேட் கம்பெனி டீம்கள்ல ஆடுனேன். நம்ம காலேஜ் பிடி என்னோட சீனியர்தான். அவர்தான் இங்க கோச்சா வந்துடுன்னு கூப்பிட்டாரு.

எனக்கும் அதுதான் சரின்னு பட்டது. அடுத்த தலைமுறையை உருவாக்கணும்ல.

கார்த்தி இடைமறித்தான். ”நாம் எப்படி ஆடினாலும் இண்டர்நேஷனல் லெவெல்ல பின்தங்கி தான இருக்கோம். புரபஷனலா இத ஆடமுடியாதுன்னு சீனியர்ஸ் எல்லாம் பேசிக்கிறாங்க சார்” என்றான்.

அப்ப்டி இல்ல கார்த்தி. அமெரிக்கா,ஆப்ரிக்கா,யூரோப்ல நம்மளை விட பிசிக்கலா சுப்பீரியரா இருக்காங்க.அவ்வளவுதான். நம்ம நாட்டிலயும் கிராமப்புறங்கள்ல அது மாதிரி நிறைய ஆளுக இருக்காங்க. ஐடெண்டிஃபை பண்ணி ட்ரைனிங் கொடுத்தா போதும். கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற இம்பார்ட்டன்ஸ் மத்த ஆட்டத்துக்கும் கிடைச்சா நாமளும் சாதிக்கலாம்.

அப்படி கிடைக்கிறப்போ, கோச்,பிளேயர், இன்ஃபிராஸ்டிரக்சர் இல்லாம இருந்துச்சுனா, இந்த கேமே இங்க அழிஞ்சிடுமே. நாம அப்படி விட்டுடலாமா? வாய்ப்பு வரும். நாம அதுக்குரிய தயாரிப்புகளோட எப்பவும் இருந்துக்கிட்டேதான் இருக்கணும்.

நீ, எதுவும் மனசில வச்சிக்காத. நல்லா விளையாடு. நல்லது நடக்கும்.என்று அவனுக்கு பதிலளித்தேன்.

சேர்மன சமாதானப் படுத்தணும், நந்தா குரூப்ப மோட்டிவேட் பண்ணனும்,பக்கத்து கிராமங்களுக்கு ஞாயித்துக் கிழமை போயி பார்க்கணும் என மனதுக்குள் பல எண்ணங்கள். முடியுமா என ஒரு கணம் தோன்றியது.

எத்தனை மேட்ச் இருபது பாயிண்ட் ட்ரெயிலிங்ல போயி ஜெயிச்சிருக்கோம். இதையும் பார்ப்போம் என்று நினைத்தபடியே வண்டியில் ஏறினேன்.



உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் போட்டிக்கான சிறுகதை

June 02, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி தொடர்பாக தி.நகரில் ஒரு எதிர்பாராத பதிவர் சந்திப்பு

டயரிக்குறிப்புகள் எழுதி எழுதி டைரி தீர்ந்து விட்டதால் புது டைரி வாங்க டி நகர் வருகிறார்
அப்துல்லா. சாந்த சக்கு பாய் பட டிவிடி தி நகர் பிளாட்பார்மில் கிடைப்பதை அறிந்து அதை
வாங்க வருகிறார் முரளிகண்ணன். கிருஷ்ணவேணி திரையரங்கில் பகல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறார் கேபிள் சங்கர். தி நகரில் ஒரு கடையில் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் படவில்லை எனக் கேள்விப்பபட்டு அதை தட்டிக் கேட்க வருகிறார் டாக்டர் புருனோ. எதிர்பாராமல் அனைவரும் ஒரு டீக்கடையில் சந்திக்கிறார்கள்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சு, பதிவர் பைத்தியக்காரன் அறிவித்திருக்கும் உரையாடல் சிறுகதைப் போட்டியை நோக்கி திரும்புகிறது.

புருனோ : என்ன முரளி எழுதியாச்சா?

முரளி : டாக்டர் விளையாடுறீங்களா?. ஒரு பரிசு இல்ல ரெண்டுன்னா நிறைய
ஜாம்பவான்கள் கலந்துக் கிட்டாங்க, போட்டி கடுமை அதான் கிடைக்கலைன்னு
சமாளிக்கலாம். இல்லைன்னா பாலிடிக்ஸ்னு கதை உடலாம். இங்க 20 பரிசு.
இருபதுக்குள்ள கூடவா நீ இல்லன்னு எல்லாரும்
கலாய்ச்சிட்டாங்கண்ணா?

அப்துல் : ஏன்னே போட்டி அவ்வளவு கடுமையாவா போட்டியிருக்கு?

முரளி : நீங்க வேற. அந்தக் கால பதிவர் பினாத்தலார்ல இருந்து நாளைக்குத்தான்
பிளாக்கையே ஆரம்பிக்கப் போறவர் வரைக்கும் களத்துல இருக்காங்க. இப்பவே
இருபது, முப்பது கதை வந்துருச்சாம். இன்னும் இந்த மாச கடைசி வரைக்கும்
டைம் இருக்கு.

புருனோ : டி என் பி எஸ் சி எக்சாம் ரெண்டு லட்சம் பேரு எழுதுறாங்க. அதுக்கு கைடு
வருது. ஆனா இந்த போட்டிக்கு ஆதிமூலகிருஷ்ணன் கைடு போட்டுருக்காருன்னா
எவ்வளவு பேரு கலந்துக்கிருவாங்கண்ணு கணக்குப் பண்ணிக்குங்க.

அப்துல் : கேபிள், புருனோ அந்த பிகர கணக்குப் பண்ண சொல்லல.

கேபிள் : ஹி ஹி. ஹீரோயினுக்கு சூட் ஆகுமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முரளி : யாரெல்லாம் நடுவரா இருப்பாங்கண்ணு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.

அப்துல் : ஏன்னே போட்டி முடியிறவரைக்கும் டெய்லி 10 பின்னூட்டம் அவங்க பதிவில
போட்டு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?

புருனோ : சே சே பைத்தியக்காரன் வேற லெவல்ல்தான் யோசிப்பாரு. பிரபல எழுத்தாளார்
யாராச்சும் இருக்கும்.

கேபிள் : அப்ப அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதி அனுப்பிச்சுடுவோம். யாராயிருக்கும்
டாக்டர்?

புருனோ : நாஞ்சில் நாடன்

கேபிள் : அப்போ நாகர்கோயில் ஏரியாவில ஒரு சமூகப் பிரச்சினையை டச் பண்ணுவோம்.

புருனோ : சாரு நிவேதிதா

கேபிள் : ஜெயமோகனைத் திட்டி நாலு வரி எழுதிடுவோம்.

புருனோ : ஜெயமோகன்

கேபிள் : அப்போ கதையில சாருவையும் ரெண்டு வரி திட்டி வச்சுடுவொம்.

புருனோ : எஸ் ராமகிருஷ்ணன்

கேபிள் : ஒரு பயணக்குறிப்ப புகுத்திடுவோம்.

புருனோ : ச தமிழ்செல்வன்

கேபிள் : கொஞ்சம் கரிசல கரைச்சு ஊத்திடுவோம்.

புருனோ : பா ராகவன்

கேபிள் : நாலஞ்சு கோயிஞ்சாமிய தூவிடுவோம்.

புருனோ : நாகார்ஜூனன்

முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.

அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.

முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?

அப்துல் : அதில்லண்ணே. நாம அகநாழிகை,வடகரை வேலன் மாதிரி ஆளுங்களப் பிடிச்சு
இதே மாதிரி போட்டி நடத்துறோம். முடிவு இந்தப் போட்டிக்கு அப்புறம் அறிவிக்கப்
படும்னு சொல்லுறோம். 200 பேருக்கு பரிசு. ஆளுக்கு ரூபாய் 15,000. ஒரே கண்டிசன்
உரையாடலுக்கு கதை அனுப்பிச்சவங்க இதுக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிடுவோம்.

புருனோ : அப்படியும் சில பேர் மசியமாட்டாங்களே.

கேபிள் : நாம் வேணா பெங்குவின் பதிப்பகத்துல, ஹார்ட் பவுண்டுல ஸ்பெசல் எடிசனா
உங்க கதையெல்லாம் வரும். அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்போடனு ஆபர்
கொடுப்போம். அங்க கதை போட்ட எல்லாரும் வாபஸ்
வாங்கிட்டு இங்க கதைய கொடுத்துடுவாங்க.

முரளி : சரி, இதுக்கெல்லாம் ஆகிற செலவு?

அப்துல் : இன்னும் பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே. நம்ம பதிவுலகத்தப் பத்தி
தெரியாதா?

நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.

முரளி,கேபிள், புருனோ : சூப்பர். கலக்கிடுவோம் என்று மகிழ்ந்தபடியே கலைகிறார்கள்.

June 01, 2009

நானும் கமல்ஹாசனும்

நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார். கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்க்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?