December 15, 2023

கலைஞர் பெண்ணுக்கு சொத்து

நாங்கள் திருமணமான புதிதில் சென்னையில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு பணிகள் செய்ய உதவியாக வந்தவர் குப்பம்மா. அப்போது அவர் மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்தவர் சொன்னார். அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வருவார். வேறு எதுவும் பேச்சுகள் எதுவும் இல்லாது பணிகளை முடித்து விட்டு, சென்று விடுவார். ஒரு ஞாயிறு மாலை அவர் வேலை முடித்து விட்டுச் செல்ல யத்தனிக்கும் போது பெரு மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கும் வரை இங்கே இருங்கள் எனச் சொல்லிவிட்டு டிவி பார்க்கத் துவங்கினோம். விளம்பர இடைவேளையில் சேனல் மாற்றும் போது ஒரு எம்ஜியார் பாட்டு வந்தது. அது வரை அசுவராசியமாகிய டிவி பார்த்தவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். நானும் எதுவும் கேட்காதவர் விரும்பி பார்க்கிறாரே என சேனல் மாற்றவில்லை. அது எங்களுக்குள்ளான ஒரு பாசப் பிணைப்பு துவங்க ஒரு புள்ளி எனச் சொல்லலாம். டிவியில் எம்ஜியார் படம் ஒளிபரப்புவதாக தெரிந்தால் எங்கள் வீட்டில் வந்து பார்ப்பார். எங்கள் முதல் குழந்தை பிறந்த போது அவராகவே பணிகளை எடுத்துப் போட்டு செய்தார். அதே போல அவருக்கு காபி தான் பிடிக்கும். மற்ற வீடுகளில் அப்போது என்ன செய்கிறார்களோ அதைத் தருவார்கள். எங்களிடத்தில் அவரே உரிமையாக காபி போட்டுக் கொள்வார். போதாக்குறைக்கு நான் பிறந்த ஊருக்கு அருகே தான் அவர் ஊரும்.இப்படியாக எங்களிடையேயான இறுக்கம் தளர்ந்த நாட்களில் தன் குடும்பக்கதையை பகிர்ந்து கொண்டார். அவர் நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் நான்கு அண்ணன்களுடன் பிறந்தவர். அவர் திருமணத்தின் போது அவருக்கு 5 பவுன், மாப்பிள்ளைக்கு 1 பவுன், ஒரு சைக்கிள், ஒரு வாட்ச், மற்றும் பாத்திர பண்டங்கள் கொடுத்து ஊர் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் கணவரும் தன்மையானவர். அவருடன் பிறந்தவர்கள் அக்கா, தம்பியென நால்வர். பெரிய வசதி இல்லாத குடும்பம். இவர்களுக்கு மணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. குப்பம்மாவின் திருமணத்திற்குப் பின் அவர் அப்பா, அம்மா இருவரும் நான்காண்டு கால இடைவெளியில் இறந்து போய் விட்டனர். பேரிடியாக அவர் கணவர் விவசாய வேலைக்குப் போன போது பாம்பு கடித்து இறந்து விட நிர்க்கதியானார் குப்பம்மா. புகுந்த வீட்டில் அவர் இருக்க முடியாத சூழல் நிலவியது. பிறந்த வீட்டிலும், அவரை ஏற்றுக் கொள்ள யாரும் விரும்பவில்லை. எனினும் சம்பளமில்லா வேலைக்காரியாக அங்கே தன்னை மாற்றிக் கொண்டார். அத்தனை வேலைகள் செய்தாலும், அத்தனை பேருக்கு சமைத்தாலும் கடைசியாக மிஞ்சும் உணவையே உண்ணும் நிலை. அதெல்லாம் கூடப்பரவாயில்லை தம்பி, எனக்கு என்னவோ சின்ன வயசில் இருந்தே எம்ஜியார் படம்னா பிடிக்கும். எங்க ஊர்ல எப்ப எம்ஜியார் படம் வந்தாலும் ரெண்டு மூணு வாட்டி பார்த்திடுவேன். என் வீட்டுக்காரருக்கும் எம்ஜியார்னா உசுரு. மதுரைக்கு போனா படம் பார்த்துட்டு கிளப் கடையில் ஒரு காப்பி சாப்பிட்டுத்தான் வருவோம் தம்பி. அப்படித்தான் எனக்கு காப்பி பழக்கம் வந்துச்சு. அது என்னமோ காப்பி எனக்கு பிடிச்சுப் போச்சு. இவங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். எப்பவாச்சும் எம்ஜியார் படம், என்னைக்காச்சும் அர வாய் காப்பி. மூளியா வந்தவ மூலையில உட்காராமா என்ன படம் வேண்டிக்கிடக்கு? நாக்கு ருசி கேட்குதோன்னு நாத்தனார் காரிக கரிச்சுக் கொட்டுவாங்க. அண்ணன்களும் ஏதும் சொல்ல மாட்டாங்க. ஏன் எனக்குன்னு என்னதான் அப்புறம்னு ஒரு நாள் பஸ் ஏறி இங்க வந்துட்டேன். இங்க பொழைச்சுக்கிலாம்னு. மகராசனை நேரில பார்க்கனும்னு ஒரு ஆசையும் இருந்துச்சு. நான் வந்து கொஞ்சநாள்ல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்படியே இங்க மிச்ச காலத்த கழிச்சிருவோம்னு இருந்துட்டேன். மனசு சரியில்லன்னா பீச்சுக்கு போயி அவர் சமாதியைப் பார்த்துட்டு வருவேன். அப்ப என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லுவேன், பாருய்யா உன் கூட வாழவும் எனக்கு கொடுத்து வைக்கல, நீ வாழ்ந்த இடம், உன்னைய பொதச்ச இடம் எதுக்குமே நான் போய் பொழங்க கொடுத்து வைக்கல, என் மூலமா உனக்குப் பிடிச்ச எம்ஜியாரைப் பாருன்னு. ஆற்றாமையில் கொட்டிவிட்டு, சொன்னார், எங்க அப்பாக்கு எங்க ஊர் சாமிக்கு பூ அலங்காரம் விசேசத்துக்கு செய்யனும்னு ஆசை. அவர் இருந்தவரைக்கும் திருவிழா தவறாம கொடுத்துடுவார். இப்ப அண்ணன்க செய்யுறாங்களான்னு தெரியாது, நீங்க உங்க ஊருக்குப் போகும் போது, ஒரு எட்டுப் போயி, எங்க ஊர் கோயில்ல எங்க அப்பா பேரைச் சொல்லி பூ அலங்காரத்துக்குன்னு நான் கொடுக்கிறத கொடுங்க என்பார். அதன்படி அவ்வப்போது கொடுப்பேன். 2006 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. திமுக வெற்றி பெற,பெற மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருந்தேன். ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது குப்பம்மா வீட்டுக்கு வந்தார். அம்மா ஸ்வீட் சாப்பிடுங்க என்ற உடன் என்ன இவ்வளோ சந்தோஷம் என்றார்? எங்க கட்சி ஜெயிச்சிருச்சு என்றேன். அவர் முகம் களை இழந்தது. என்ன தம்பி, நீங்க கலைஞர் கட்சியா என்றார். ஆமா அவரை ரொம்ப பிடிக்கும் என்றேன். அவருக்கு நிறைய சம்சாரம், எங்க எம்ஜியாருக்கு அவரைப் பிடிக்காதே என்றார். சம்சாரம் அவங்க குடும்ப பிரச்சினை. மக்களுக்கு நல்ல நல்ல திட்டம்லாம் கொண்டு வந்திருக்கார் என்றேன். எனக்கு என்னவோ அவரைப் பிடிக்காது தம்பி என முடித்துக் கொண்டார். ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என கலைஞரின் திட்டங்கள் குப்பம்மாவுக்கும் நன்மை அளித்தன. பார்த்தீங்களா எங்க ஆட்சியை?, இப்ப எம்ஜியார் படத்தை நீங்க எப்ப வேணுமுன்னாலும் பார்க்கலாம் என கிண்டலடித்தேன். அவரோ போங்க தம்பி, எங்க அம்மா வந்திருந்தாலும் கொடுத்திருக்கும் என முடித்துக் கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழல். எங்க கூட வந்திருங்க என்று சொல்லிப் பார்த்தோம். அவருக்கோ சென்னை தான் மனதுக்கு உகந்ததாய் இருந்தது. என் மனைவிக்கு குப்பம்மாவை விட்டு பிரியவே மனம் இல்லை. நான் எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்க இருந்தேன் உங்கனால என கண்ணீர் சிந்தினார். மகன் கூட பாட்டி நம்ம கூட வரல்லையா எனக் கேட்டான். அவர் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த வீட்டுக்காரர்களின் எண்களை வாங்கிக் கொண்டேன். தீபாவளி போன்ற விசேச நாட்களில் அவருக்கு பேசுவோம். ஊருக்குப் போகும் போது அவர் அப்பா பெயர் சொல்லி பூ அலங்கார காணிக்கையும் அவ்வப்போது கொடுப்பதுண்டு. திடீரென ஒரு நாள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். குப்பம்மாவின் உறவினர்களாம். கோவில் பூசாரி மூலம் நான் குப்பம்மா தந்தை பெயரில் பூவுக்கு காசு கொடுப்பது அறிந்து என் ஊரில் விசாரித்து இங்கே வந்துவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் தந்தை இறந்த உடன் வீடு, சொத்துக்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரிடம் அப்போது இருந்த நாப்பது ஏக்கர் நஞ்சை, நாலு வீடுகளை சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த இரண்டரை ஏக்கர் வானம் பார்த்த பூமியை பேச்சு வார்த்தை சரி வராமல் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதில் உடனடி வருமானமும் இல்லாததால் அப்படியே போட்டு வைத்து விட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வர, அது அப்படியே பொதுச் சொத்தாக இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்தப் பக்கம் ஒரு மேம்பாலம், நான்கு வழிச் சாலை, ஏராள கேட்ட் கம்யூனிட்டி குடியிருப்புகள் வர வர அந்தப் பகுதியின் நில மதிப்பு விண்ணைத் தொட்டது. புகழ்பெற்ற ஒரு கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் கால் பதிக்க இவர்களின் இடத்தை தேர்வு செய்தது. 500 கோடிக்கும் மேற்பட்ட பிராஜக்ட் எனவே பத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டுமென அவர்கள் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பீனியன் கொடுக்க, உள்ளூரில் விசாரித்தது அவர்கள் டீம். ஒரு பெண் வாரிசு இருக்கிறார். அவர் கையெழுத்து இருந்தால் தான் அது செல்லும் என கலைஞர் 1989ல் போட்ட பெண்ணுக்கு சொத்தில் உரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி சொல்ல. அவரைத் தேட ஆரம்பித்து என்னிடம் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பகுதியில் இப்போதைய செண்ட் மதிப்பு பத்து லட்சம். ரெண்டரை ஏக்கருக்கு 25 கோடி வரும். ஐந்தாகப் போட்டு 5 கோடி கொடுங்கள் எனக் கேட்டேன். இதை குப்பம்மாவிடமும் தெரிவித்தேன். அவரோ அதிர்ச்சி அடைந்தே விட்டார். பின்னர் ஊர்காரர்கள், அவங்க கொடுக்குறத வாங்கிக் கொடு தம்பி, இல்லேன்னா வண்டி ஏத்தி தூக்கி விட்டுருவாங்க அவங்க அண்ணன் பிள்ளைக என்றார்கள். இறுதியில் 3 கோடி என முடிவானது. பத்திரப்பதிவு நாளும் வந்தது. கம்பெனி பணத்தை, நேரடியாக குப்பம்மாவிடம் கொடுத்தது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நானும் அவருடன் சென்றேன். சார்பதிவாளர் முன்னிலையில் போட்டோ எடுத்து கையெழுத்து இடும்போது தான் கவனித்தேன் குப்பம்மாவின் உண்மையான பெயர் குபேர லட்சுமி. சார்பதிவாளரின் தலைக்கு மேல் மஞ்சள் சால்வை அணிந்த கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார்.

August 12, 2023

சேது மாமா

ஞாயிறு மாலை 5 மணி. மதுரை சென்ட்ரல் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். அலை பேசி ஒலித்தது. மகன். வரும் போது தெற்கு வாசல்ல உன் பிரண்ட் கடையில் பரோட்டா வாங்கிட்டு வந்துருப்பா. ரொம்ப நாளாச்சு. லாக்டவுன் போட்டதில் இருந்து மதுரைக்கே நீங்க போகலைல என்றான். ஆறேழு மாதம் கழித்து இன்று தான் மதுரைக்கு வந்திருக்கிறேன். மகனும் என்னைப் போலவே பரோட்டா பிரியன். எத்தனை ஊர், எத்தனை கடைகள். எத்தனை விதமான பரோட்டாக்களை சாப்பிட்டாயிற்று. ஆனால் முதன் முதல் பல நாள் ஏக்கமாக ஏங்கி பரோட்டா சாப்பிட துடித்த போது வாங்கித் தந்தவர் சேது மாமா தான். எத்தனையோ சிறப்புகள், சுகங்கள் வாழ்வில் அனுபவித்தாலும் அது கிடைக்காதா என ஏங்கிய போது, அதைக் கொடுத்தவர்களை மறக்க முடியுமா? அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டுமென்று பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறேன். அவருக்காகத்தான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்று சென்ட்ரல் தியேட்டரில் சிவாஜி படம். ஞாயிறு மாலைக் காட்சிக்கு வழக்கமாக சிவாஜியின் ரசிகர்கள் வந்து கூடுவார்கள் என்பதால் இன்றாவது சேது மாமா வந்து விடுவாரா என்று ஆவலுடன் நின்று கொண்டிருக்கிறேன். சேது மாமா ஒரு தீவிர சிவாஜி கணேசன் ரசிகர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திரிசூலம் என்ற தி வரிசை சூப்பர் ஹிட்களானாலும் சரி, பாசமலர், பாவ மன்னிப்பு, பாகப் பிரிவினை போன்ற பா வரிசைப் படங்களானாலும் சரி. எதையுமே 20 முறைக்கு குறைந்து அவர் பார்த்ததே இல்லை. எங்கெல்லாம் சிவாஜி படம் ஓடுகிறதோ அங்கெல்லாம் அவர் இருப்பார். அது திருவிழா திரையிடலாக தெருவில் இருந்தாலும் சரி, தீபாவளி ரிலீஸாக இருந்தாலும் சரி. சிவாஜியின் உடைகள், சிவாஜியின் மேனரிசங்கள், அவரின் வசனங்கள் என்ரே வாழ்வார். பாசக்காரர். என் அம்மாவுடன் பிறந்தது 5 ஆண்கள், இரண்டு பெண்கள். என் அம்மா ஆறாவது. அவருக்குப் பின் பிறந்த இரண்டு தம்பிகளில் ஒருவர் தான் சேது மாமா. இன்னொருவர் சிவா மாமா. அப்போது எங்கள் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த காலகட்டம். ஊர் திருவிழாவிற்கு வரக்கூட என் தந்தை தயங்குவார். நானும் என் அம்மாவும் மட்டும் போவோம். உள்ளே நுழைந்ததும் பெரிய மாமா பசங்களும், பெரியம்மா பசங்களும் கூட கறிக்கு வந்துட்டாங்களா என்று நக்கல் அடிப்பார்கள். அப்போது அதற்கு கோபப்படும் அளவுக்கு கூட கூறில்லை. அசட்டு சிரிப்புடனேயே வளைய வருவேன். என் தாத்தா அப்போது இல்லை. பாட்டி மட்டும் தான். மூத்த மகன்களுக்கும், மகள்களுக்கும் நல்ல படிப்பு, திருமணம் என செய்து கொடுத்து விட்டு, வசதி குறைந்த நாளில் என் தந்தைக்கு மணம் செய்து கொடுத்திருந்தார்கள். எனக்கும் நல்லா செய்யலாம்ல எனக் கேட்க கூட தெளிவில்லாத பெண்ணாகவே அம்மா இருந்திருக்கிறார். இன்னும் இரண்டு மகன்களுக்கு வேறு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் அது பற்றி வேறு யாரும் கூட யோசிக்கவில்லை. சேது மாமா என் அம்மாவிற்கு இரண்டு வயது குறைவு. அவருக்கு அடுத்த சிவா மாமா அவரை விட இரண்டு வயது குறைவு. சேது மாமா தன் தாய் மாமா பெண்ணை காதலித்து வந்தார். அவர் அப்போது ஒரு உரக்கடையின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். எந்த ஊருக்குப் போனாலும் தன் மாமன் மகளுக்கு ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார். மாமன் மகளுக்கு மட்டுமல்ல யாருக்கு எது தேவையோ கேட்காமலேயே வாங்கிக் கொடுப்பார். அது போக ஊர் விசேஷமாய் இருந்தாலும் சரி, வீட்டு விசேசமாய் இருந்தாலும் சரி முன்னால் நிற்பார். இந்த திருவிழாவிற்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு கூட முன் கூட்டியே திட்டமிட்டு எல்லாவற்றையும் செய்து வைப்பார். சிவா மாமா அப்படியே எதிர். தான் உண்டு. தன் வேலை உண்டு. ஒரு தனியார் போக்குவரத்து அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். எதிலும் பட்டும் படாமல் இருப்பார். இறங்கிச் செய்ய மாட்டார். வீட்டு பொது செலவுகளுக்கு கூட காசு கொடுக்காமல் சேர்த்து வைப்பதாக கேள்வி. சரி. பரோட்டாவிற்கு வருவோம். எங்கள் தெருவில் சாயங்காலம் ஆனால் சில வீடுகளில் பரோட்டா பார்சல் வாங்கி வருவார்கள். அது பற்றி தெருவில் விளையாடும் போது பசங்கள் பேசிக் கொள்வதுண்டு. அப்போது முதலே பரோட்டா மீது ஆசை. வீட்டில் ரேசன் அரிசி சாப்பாடு தான். அதுவே அரை வயிற்றுக்கு. தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்த மில் ஒன்று கைமாறி அவருக்கு வேலை இழப்பு. எந்த வேலையும் அமையாமல் சில மாதம் அலைந்து, பின்னர் ஒரு சைக்கிள் கடையில் வேலை. அம்மா அப்போது தான் டெய்லரிங் பழகிக் கொண்டிருந்தார். இந்த சூழலில் தான் ஊர் திருவிழாவிற்குச் சென்றிருந்தோம். மாமா, பெரியம்மா பசங்கள் எல்லோரும் தத்தம் பெற்றோரிடம் காசு வாங்கிச் சென்று இரவு பரோட்டா சாப்பிட்டது கேள்விப்பட்டு வருத்தம்.அதை நினைத்து அடுத்த நாள் வருத்தமாய் இருந்த போது, சேது மாமா வந்தார். எப்படி யூகித்தார் எனத் தெரியவில்லை. வாடா, சைக்கிள்ள உட்காரு என கூட்டிச் சென்று கடையில் உட்கார வைத்து, நல்லா சாப்பிடுறா மருமகனே என பரோட்டா வாங்கிக் கொடுத்தார். அன்றிலிருந்து மாமா மனதுக்கு மிக நெருக்கமானவர் ஆகி விட்டார். மாமாவின் கல்யாணப் பேச்சு வந்தது. அவரின் தாய் மாமா, சிவாவுக்கு வேணா பொண்ணக் கொடுக்கிறேன், சேதுவுக்கு வேணாம் என்றார். எல்லோருக்கும் அதிர்ச்சி. அதற்கு அவர், உங்க வீட்ல பொதுவா இப்ப எதுவும் இல்ல, ஆள் ஆளுக்கு பிரிச்சு கொண்டு போயிட்டீங்க. சேது கருத்தாவே இல்ல. இன்னும் சினிமா பார்த்துக்கிட்டு, வீட்டுல எல்லாத்துக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கான். அவனை கட்டினா என் மக கஷ்டப்படும். சிவா தான் கருத்தான ஆளு. மக கஷ்டப்படக் கூடாதுல்ல என்றார். அதாவது தந்தையின் கோணம். ஆனால் அதற்கு மாமா பெண்ணும் ஒத்துக் கொண்டது எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் சேது மாமா யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்டார். தன் காதலி, தம்பி மனைவியாக இருக்கும் வீட்டில் எப்படி இருப்பது என. சரி. ஏதோ கோபத்தில் போய் விட்டார். வந்து விடுவார் என சில நாட்கள் நினைத்தார்கள். அது சில வருடம் ஆனது. இதில் மற்றவர்கள் யாரும் அவரைத் தேடக்கூட நினைக்க வில்லை. பாட்டியும் என் அம்மாவும் தான் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை இருவரும் சேர்ந்து, என் தந்தையிடம் சொல்லி, நாளிதழில் ஒரு விளம்பரம் கூட கொடுத்துப் பார்த்தார்கள். உபயோகம் இல்லை. பாட்டி இயற்கை எய்தினார். இரண்டாம் நாள் சடங்கில் இடுகாட்டில் காக்கைக்கு சாப்பாடு வைத்து, அது எடுத்த பின்னர் தான் சடங்கு முடிந்து, வீட்டிற்குப் போய் சாப்பாடு போடுவார்கள். ஒரு காக்காய் கூட அன்று வரவில்லை. ஒரு உறவினர் கூட கிண்டலடித்தார். நாலு பிள்ளைக தாண்டா வந்திருக்கீங்க, ஒன்ன காணோம்ல. அதான் அந்த அம்மாக்கு உங்க சாப்பாட வாங்க மனசில்ல போல என்று. எங்கயாச்சும் போய் பிடிச்சுட்டாவது வாங்கய்யா என உறவில் வயதானவர்கள் அலுத்துக் கொண்டார்கள். இது நடந்து, சில நாட்கள் கழித்து என் அம்மா, என்னை அழைத்து, சேதுக்கு நான் எதுவுமே பண்ணலைடா. நீ வயித்தில இருந்தப்ப, யாருமே என்னைக் கவனிக்கலை. தாத்தா வேற அதுக்கு முன்னதான் இறந்திருந்தார். பாட்டி இருக்கிறத செய்யும். வாய் எல்லாம் நம நமன்னு இருக்கும். சேது தான் அப்பவே அவன் சம்பாதிச்ச சொற்ப காசுலயும் எனக்கு பார்த்து பார்த்து வாங்கித் தந்தான். அவனுக்கு என் கையால நல்லது பொல்லது ஆக்கிப் போடனும்னு நெனைப்பேன், நாம தலை நிமிர்ற நேரம், கல்யாணப் பிரச்சினையால ஊர விட்டே போயிட்டான். எனக்கு ஒரே ஆசை தாண்டா. அவன எப்படியாச்சும் தேடிக் கண்டுபிடிச்சு, அவனுக்காக ஒரு அக்கா அழுதுக்கிட்டு இருக்கான்னு சொல்லி நல்ல சாப்பாடு அவனை சாப்பிட வைடா என்று சொல்லி தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்தார். இது நான் தச்சு சம்பாதிச்ச காசுடா. இதுல தான் அவனுக்கு நீ செய்யனும் என்றார். அதன் பின் நானும் பல முயற்சிகள் எடுத்து விட்டேன். பண்பலைகளில் நேயர் விருப்பம் பேசும் போது சேது மாமாவை பற்றி குறிப்பிடுவேன். வாங்க என்பேன். மியூசிக் தொலைக்காட்சிகளின் நேரலையில் நேயர்கள் பேசும் போதும் சரி, வாழ்த்து தெரிவிக்கும் ஸ்குரோலிலும் சரி அவரைப் பற்றிச் சொல்லி வரச் சொல்கிறேன். சமூக வலை தளத்தில் கணக்கு தொடங்கிய நாள் முதல் அவர் புகைப் படத்தை அடிக்கடி போட்டு வருகிறேன். பயனங்களில் யாருடைய அலை பேசியிலாவது சிவாஜி பாடல் ரிங் டோனாக ஒலித்தால் குதித்தெழுந்து அதை நோக்கி விரைகிறேன். அவர் வெளிநாட்டில் இருக்கலாம், இல்லை வேறு மாநிலத்தில் கூட இருக்கலாம், தமிழ்நாட்டில் வேறு ஏரியாவில் கூட இருக்கலாம். எந்த நம்பிக்கையில் நான் அவர் மதுரையில் இருப்பார், சிவாஜி படத்திற்கு வருவார் என நம்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. வேறு வழி ஏதும் புலப்படாத நிலையில் கிடைத்த வழியை நம்பி நடப்போமே அது போலத்தான் நான் சென்ட்ரல் தியேட்டரருக்கு வந்து கொண்டிருக்கிறேன். மணி ஆறரை ஆகி விட்டது. பெல் அடித்து படம் துவங்கிய சத்தம் கேட்டது. இன்றும் அவர் வரவில்லை. அம்மா கொடுத்த காசு பல ஆண்டுகளாக பத்திரமாய் இருக்கிறது. பெயர் சேதுராமன், ஐந்தே முக்கால் அடி உயரம் இருப்பார். இப்போது 65 வயது இருக்கும். அவர் மொபைலில் ரிங் டோனாக ஏதாவது சிவாஜி பாட்டோ, இல்லை அவர் படிக்கும் பத்திரிக்கையில் சிவாஜி படம் போட்டிருந்தாலோ நீங்கள் சேதுராமனா, பெரியகுளமா எனக் கேளுங்கள். ஆமாம் என்றால் நீங்கள் இதில் தெரிவியுங்கள்.

November 12, 2022

கமல்ஹாசனின் கேரக்டர் ஆர்க்

தமிழ்சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். கல்லூரி மாணவன், இள வயது காதலன், நல்லது செய்யும் ஊர் பெரிய மனிதர், சோதனைகளை எதிர்கொண்டு அதை சாதனைகளாக்கும் நல்லவன், போலீஸ் அதிகாரி, டான் என சில டெம்பிளேட்களிலேயே தமிழ்சினிமா ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் அடங்கிவிடும். கமல்ஹாசன் தன் ஆரம்பகால கட்ட படங்களில் இருந்தே இந்த டெம்பிளேட்டிற்குள் அடங்காமல் தன் ஹீரோ கேரக்டர் ஆர்க் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கு முக்கிய காரணம் கே பாலசந்தர் மற்றும் கமலுக்கு கிடைத்த மலையாள பட வாய்ப்புகள். அது போக அவரது இலக்கிய பரிச்சியமும் அவருக்கு பல கேரக்டர்களை பரீட்சித்துப் பார்க்க உதவியது. சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பிறகு ஏன் அவர் ஏற்காத கேரக்டர்களைக் கூட கமல்ஹாசன் ஏற்று நடித்திருக்கிறார். அப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டர்களில் முக்கியமான ஒரு பிரிவு மனநிலை பாதிக்கப்பட்ட, மூளை வளர்ச்சி குறைந்த கேரக்டர்கள். ஒரு நிகழ்ச்சியில் கமல் சொல்வார், நானும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை என் படங்களில் சித்தரித்து இருக்கிறேன். அவர்களை கேலிப் பொருளாக அல்ல. நாயகர்களாக என்று சொல்வார். அந்த கேரக்டர்களை திரையில் கொண்டு வந்து அவர்களின் வலியை பார்வையாளனுக்கு கடத்துவது கடினமான ஒன்று. அதை கமலால் எளிதாகச் செய்ய முடிந்ததற்கு காரணம் அவருக்குள் இருந்த திரைக்கதை ஆசிரியன். இரண்டரை மணி நேரப் படத்தில் நான்கைந்து பாடல்கள், ஒரு காமெடி ட்ராக் எனப் போய்விட்டால் 70-80 காட்சிகளே தேறும். அவற்றை புதிதாக, க்ளிஷே இல்லாமல் எழுதினால் தான் புதிதான ஒரு கேரக்டரை நம் மனதில் நிறுத்த முடியும். இல்லாவிட்டால் அது பத்தோடு பதினொன்றாய் போய் நம் மனதில் எந்த ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தாமல் போய் விடும். கமல் நடித்த பல கேரக்டர்கள் பலர் மனதில் இருந்தும் அகலாமல் இருக்கக் காரணமே அந்த கேரக்டர்களுக்குத் தேவையான எழுத்துப் பின்புலமும் அதை நேர்த்தியாக திரையில் பிரதிபலித்ததும்தான். அது போல கமல் நடித்த சில மன நலம், மூளை வளர்ச்சி தொடர்பான கேரக்டர்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மறக்க முடியாதவை. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். சிகப்பு ரோஜாக்கள் பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனால் சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். தனக்கு ஆதரவளித்தவரும் பெண் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட இன்னும் வீறு கொண்டு எழுகிறது அந்த மிருகம். இரையைத் தேடும் புலி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பதுங்கியே இருப்பது போல அந்த மிருகத்தை ஒளித்து வைத்து விட்டு சமூகத்தில் இயல்பாக உலா வரும் வேடம். அந்த வேடத்தை மிசச்சிறப்பாக செய்திருப்பார். ஒரு எலைட் பிஸினஸ் மேனாக, பின் பெண்களை பாலியல் துன்புறுத்தி கொல்பவனாக, தவறு உணர்ந்து வாடுபவனாக ஒரு முழுமையான சுற்றாக அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதை அனாயாசமாக கையாண்டிருப்பார். உல்லாசப் பறவைகள் காதலி தீ விபத்தில் இறந்து விட அதனால் மனநலம் பாதிக்கும் இளைஞனின் வேடம் கமலுக்கு. பின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று, குணமாகித் திரும்பும் வேடம். கல்யாண ராமன் மூளை வளர்ச்சி குறைந்த பாத்திரம். இன்னொரு கேரக்டர் வழக்கமான கேரக்டர். இரண்டிற்கும் நடை,உடை பாவனைகள் மட்டுமில்லாது, எத்துப்பல், வாய்ஸ் மாடுலேசன் என மெனக்கெட்டிருப்பார். மூளை வளர்ச்சி குறைந்தவனுக்கு வரும் காதல், அது தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள், ஏன் அவனுக்கு ஒரு நல்லது நடக்கக்கூடாது என்ற கேள்வி வரும் வகையில் அந்தக் கேரக்டர் அமைக்கப்பட்டு இருக்கும். சுவாதி முத்யம் இந்தப் படம் இன்னும் ஸ்பெஷல். மூளை வளர்ச்சி குறைந்த ஒருவன், அவன் கணவனை இழந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணின் துன்பத்தை நீக்க அவளை மணக்கிறான். கடைசி வரை அவளை ஒரு ராணியாக உணரவைத்து தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். கமல் நடித்த ஏராள வித்தியாச கேரக்டர்களில் இந்தப்படத்திற்கு தனி இடம் உண்டு. குணா ஒரு ஆணுக்கு மிகப்பெரிய வலியைத்தரும் வசவு வார்த்தை பாலியல் தொழிலாளி மகன் என்பது. அதுவே வாழ்க்கையாக இருந்தால் எவ்வளவு சிதைவு அடையும் அவன் மனது? அந்த சிதைவை, அதனால் அவன் அனுபவிக்கும் வேதனையை திரையில் கொண்டு வந்திருப்பார் கமல். அதில் இருந்து வெளியில் வர அவன் என்ன முயற்சிகளை எடுக்கிறான், அதில் வெற்றி பெற்றானா? என அந்தச் சூழலில் வளர்ந்த ஒருவனின் சித்திரம் தான் குணா. தெனாலி இலங்கையில் இருந்த போர்ச்சூழலால் மன பாதிப்படைந்த ஒருவனின் கதை. நகைச்சுவைப் படம் என்றாலும் அவன் வேதனை, அவன் பக்க நியாயங்கள், அவன் மீண்டு வருவது என தேவையற்ற மன பயம் கொண்டவர்களின் உருவமாக கமல் இருப்பார் இந்தப் படத்தில். ஆளவந்தான் தாய் இறந்து விட, தந்தையாலும், சித்தியாலும் கொடுமைக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு ஆளாகும் வேடம். தாய் தவிர மற்ற பெண்கள் எல்லாமே கொடுமைக்காரிகள் என்கிற சித்திரம் மனதில் படிந்து விட, தன் உடன்பிறந்தவனின் மனைவியையே கொல்ல முயற்சிக்கிறான். அந்த முயற்சிக்கு தன் உடன்பிறந்தவனே தடையாய் வர அவனையும் கொல்ல முயற்சிக்கும் சிக்கலான மன சிதைவு கொண்ட வேடம். இது போன்ற கேரக்டர்கள் தவிர மூன்றாம் பிறை படத்தில் விபத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி குணப்படுத்தும் வேடம், நாயகன் படத்தில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகன் ஒரு மூளை வளர்ச்சி குறைந்தவன் என அறிந்து அவனை பரிவுடன் பார்த்துக் கொள்வது என காட்சி அமைத்திருப்பார். மனநிலை பாதிக்கப்படுவது ஒரு நோய். அதற்கு சிகிச்சையும் பரிவும் தான் தேவையே தவிர கிண்டல் அல்ல. போலவே மூளை வளர்ச்சி குறைபாடும். அது அவர்களின் தவறு அல்ல. சமூகம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தி அவரின் படங்களில் இருக்கும்.