April 29, 2009

கமல்ஹாசன் கலக்கிய 1982

கமல்ஹாசன் கலக்கிய 1982

கமலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டு என்றால் அது 1982 தான். ஒரு நடிகருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி என்றால் அது தேசிய விருதைப் பெறுவது. ஒரு நட்சத்திரத்துக்கு சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி என்றால் படம் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடி வசூலித்துக் கொடுப்பது. இரண்டையும் கமல் சாதித்தது இந்த ஆண்டில்தான். மூன்றாம்பிறையில் ஏற்று நடித்த ஸ்ரீனிவாசன் வேடம் மூலம் தேசிய விருதும், சகல கலா வல்லவன் வேலு மூலம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியும் கமலுக்கு கிடைத்தது. இந்த இரு துருவங்களுக்கு மத்தியில் ராஜா என்னும் துருதுரு காதலன் வேடம் வாழ்வே மாயம் திரைப்படத்தில். இந்தப்படம் இப்போது தொலைக்காட்சியில் போடப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்களை கவர்கிறது.

தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் இந்த ஆண்டில் கமல் வெற்றி பெற்றார். சனம் தேரி கஸம் கமலுக்கு வெள்ளிவிழா படமாக அமைந்தது.

ரஜினிக்கு முக்கிய படமாக அமைந்த மூன்று முகம் இந்த ஆண்டு தான் வெளியானது. டி எஸ் பி அலெக்ஸ்பாண்டியன் இன்றும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. இதைத் தவிர போக்கிரிராஜா,தனிகாட்டுராஜா, ரங்கா என ரஜினி இந்த ஆண்டில் மிகப்பெறும் கமர்ஷியல் சக்தியாக மாறினார். இந்தப்படங்கள் மூலம் சேர்ந்த ரசிகர்கள்தான் இன்று நாம்காணும் ரஜினி என்னும் பிரமாண்டத்தின் அஸ்திவாரக் கற்கள்.

சங்கிலி படத்தின் மூலம் பிரபு அறிமுகமானது இந்த ஆண்டில்தான். ஆர் சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை மூலமும், மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை மூலமும், விசு மணல்கயிறு மூலமும், பின் பல மசாலா படங்களை இயக்கிய ராஜசேகர் அம்மா என்னும் படம் மூலமும் இந்த ஆண்டு இயக்குனர்களாக அறிமுகமானார்கள்.

கோழிகூவுது படத்தின் மூலம் கங்கை அமரன் இயக்குனராகவும், விஜி நாயகியாகவும் அறிமுகமானார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் இருந்து வந்து சொந்தமாக படமெடுத்து நாயகனாக நடிக்கும் பிரேம் தன் கன்னி முயற்சியை குரோதம் என்னும் படம் மூலம் இந்த ஆண்டில்தான் ஆரம்பித்தார்.

சகலகலா வல்லவன்

இந்தப் படம் எங்கள் ஊருக்கு வெளியாகி 200 நாட்கள் கழித்தே வந்தது. 20 பேர் நிற்கும் வசதி கொண்ட டிக்கட் கவுண்டரை 70 பேர் நிற்கும் அளவுக்கு சவுக்கு கட்டைகளைகளால் முதல் நாளே நீளப்படுத்தியிருந்தார்கள். 25 நாட்களுக்கு மேல் ஓடி தியேட்டர் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் அளவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம். இருபத்தேழு ஆண்டு ஆகியும் இளமை இதோ இதோ பாடல் இன்னும் புத்தாண்டுக்கு உபயோகப் படுத்தப்படுகிறது. இந்தப் படம் வெளியான சமயத்தில் நேத்து ராத்திரி யம்மா பாடலை வைத்து மட்டும் பத்திரிக்கைகளில் பல நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்தன. எம்ஜியார் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பின் வெளியான ஏராளமான கமஷியல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது.

மூன்று முகம்

காக்கிச் சட்டை அணிந்து ஒரு வெற்றி கொடுத்தால் தான் அவர் முழுமையான கமர்சியல் ஹீரோ என்பது தமிழ்சினிமாவின் கருத்தியல். தங்கப்பதக்கம் எஸ் பி சவுத்ரி, வால்டேர் வெற்றிவேல், ஆறுச்சாமி, அன்புச்செல்வன், ராகவன் என்னும் பலரக அதிகாரிகளை நாம் பார்த்திருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் தனிரகம். தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும் ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் போன்ற பன்ச் டயலாக்குகளும், அசத்தல் பாடி லாங்குவேஜும் தமிழ்சினிமாவின் முக்கிய போலீஸ் கதாபாத்திரமாக அலெக்ஸ் பாண்டியனை மாற்றின.

ஆனால் இதற்க்குப் பின் ரஜினி போலிஸ் வேடமணிந்த உன் கண்ணில் நீர் வழிந்தால், கொடி பறக்குது, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன் போன்ற படங்கள் சரியாகப் போகாததால் கடந்த 17 வருடமாக அவர் போலிஸ் வேடம் எதுவும் அணியவில்லை. எந்திரனுக்குப் பின் அந்த விரதத்தை முடித்து நமக்கு விருந்து படைப்பாரா என்று பார்க்கலாம்.

நான் குடித்துக்கொண்டே இருப்பேன்

குடியின் தீமைகளை விளக்குவதற்க்காகவே எடுக்கப்பட்ட படம் இது. தேங்காய் சீனிவாசன் கதாநாயகன், கே ஆர் விஜயா நாயகி. தொழிற்சாலை மேற்பார்வையாளராய், ஊரில் நல்ல பெயருடன் இருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு நண்பர்களின் வற்புறுத்தலால் குடிப் பழக்கம் ஏற்படுகிறது. பின் குடிகாரனாய் மாறும் அவர் ஊரில் தன் மரியாதையை இழக்கிறார். வீட்டில் அடுத்த வேளை சமையலுக்கு மட்டுமே இருக்கும் அரிசியைக் கூட விற்றுக் குடிக்கிறார். பின் அந்தக் குடும்பம் என்னவாகிறது என்பதே கதை. இந்தப் படத்தில் தான் முதன் முதலாக ஊருக்கு ஒதுக்குப் புறமாய் அமைந்திருக்கும் சாராயக் கடைகளை யதார்த்தமாக காட்டியிருந்தார்கள். அங்கே உபயோகிக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டம்ளர் முதல் பேச்சு வழக்கு வரை நன்கு சித்தரித்திருந்தார்கள்.

எங்கேயோ கேட்ட குரல்
ரஜினி கடைசி கடைசியாக ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதரண கேரக்டரில் நடிதத படம் என்று இதனைச் சொல்லலாம். இதன் பின் நடித்த எந்தப் படத்திலும் தன் ஹீரோ இமேஜுக்கு பங்கம் வரும்படி அவர் நடிக்கவில்லை. முதல் மனைவி அம்பிகா அவரை வெறுத்து இன்னொருவனுடன் ஓடிவிடுகிறார். பின் அம்பிகாவின் தங்கை ராதாவைத் திருமணம் செய்து கொள்ளுகிறார். பின் என்னவாகிறது?. இந்த ஆண்டில் ஏவிஎம் பலரகப் படங்களை தயாரித்தது. சகலகலா வல்லவன், போக்கிரிராஜா போன்ற மசாலா படங்களையும், ஏழாவது மனிதன், அம்மா,எங்கேயோ கேட்ட குரல் என கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் தயாரித்து சில உண்மைகளை உணர்ந்து கொண்டது.

பயணங்கள் முடிவதில்லை

வாழ்வே மாயம் படத்தின் கதையும், இந்தப் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று. ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு. இந்தப் படம் பாடல்கள், கவுண்டமணியின் நகைச்சுவை என கூடுதல் விசேஷங்களால் பெரிய வெற்றியைப் பெற்றது. கமலும் தன்னிடம் இருந்த மைக்கை மோகனிடம் ஒப்படைத்தார். முரளி வந்து அதைப் பிடுங்கும் வரை மோகனும் அதைப் பத்திரமாக பாதுகாத்தார். பாக்யராஜும், சுந்தர்ராஜனும் ஒன்றாக இருந்தவர்கள். ஆனால் பாக்யராஜ் பிரபலமானதும் சுந்தர்ராஜனை கண்டுகொள்ளவில்லையாம். அவன் எடுத்த படத்த விட அதிக நாள் ஓடுற படம் ஒன்னு எடுக்கணும் என்ற வெறியில் சுந்தர்ராஜன் இயக்கிய படம் இது. 526 நாட்கள் (ஒரு திரையரங்கில் மட்டும்) ஓடி அவர் சபதத்தை நிறைவேற்றியது இந்தப் படம்.

(அடுத்த பகுதியில் தொடருகிறேன்)

April 22, 2009

லிப்கோ பாலாஜி

தெருவிலோ,பள்ளியிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பட்டப் பெயர் இல்லாதவர்களைப் பார்ப்பது அபூர்வமான ஒன்று. ஆனால் தன் பதினேழு வயதுவரை பட்டப்பெயர் இல்லாமல் தன் சொந்தப் பெயராலேயே அழைக்கப்படும் பாக்கியம் பெற்றவன் பாலாஜி.

அவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.

கப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான்.

முக்கியமாக நான் அப்படி இப்படி என்ற பீலாவும் இருக்காது. இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்.

அது குஷ்பூ, கவுதமி, பானுப்பிரியா என்ற முப்பெரும் தேவியர் தமிழக இளைஞர்களின் கனவில் ஆட்சி செய்த காலம். நாங்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு காலை மதியம் கிரிக்கெட், மாலை சினிமா, இரவு அரட்டை என திரிந்த காலம். அரட்டையில் அதிகம் அடிபடுவது தெருப்பெண்களே. அதிலும் எங்கள் தெருவில் இருந்த கங்கா மரண கட்டை கேட்டகிரியில் இருந்ததால் அவளைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும்.

அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்குணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.

ஒருமுறை இம்மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது பாலாஜி சொன்ன விஷயம், பெரியாரே பெருமாள் கோவிலுக்கு போகச் சொன்னதைப் போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவன் சொன்னது இதுதான் “ நான் இந்த தெருவில லவ் பண்ணறது வாணியதாண்டா”. அதிர்ச்சிக்கு காரணம் வாணி இரண்டாம் வகுப்பு. அதற்கு அவன் சொன்ன காரணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழில இருந்து பத்து வயசு வரைக்கும் வித்தியாசம் இருந்தாத் தாண்டா நல்லா இருக்கும். அதனாலதாண்டா அந்தக் காலத்தில எல்லாம் அது மாதிரி பண்ணியிருக்காங்க. எனக்கு முப்பதாகும் போது வாணிக்கு இருபதாகும். நான் நல்லா செட்டில் ஆயிருப்பேன். லைப் சூப்பரா இருக்கும். அவன் சொன்னது லாஜிக்கலாக இருந்தாலும் எங்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.

செட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். என்னடா இவன் சரியான அகராதியா இருப்பான் போலிருக்கே என்று ஒருவன் சொல்ல, ஆகா கிடைச்சதுடா பாலாஜிக்கு ஒரு பட்டப் பெயர் என்று துள்ளிக் குதித்தேன். நேரடியாக அகராதி என்று சொல்ல முடியாததால் அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கில அகராதியான லிப்கோவின் பெயரையே அவனுக்குச் சூட்டினேன்.

ரோஜா, மீனா, நக்மா முப்பெரும் தேவியராக இருந்த காலம். கல்லூரி இறுதியாண்டு நேரம். வழக்கம் போல நடந்த அரட்டையில் ஒருவன் சொன்னான். “ நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.

உடனே பாலாஜி, நான் கட்டுற பொண்ணுக்கு ஒரு கல்யாணமான அக்காவும், அண்ணனும் இருக்கணும் என்றான். அவன் சொன்ன காரணம்,

ஏற்கனவே அக்காகாரி தன் புகுந்த வீட்டிலே இப்படி கொடுமை அப்படி கொடுமைன்னு புலம்பி, ரெண்டாவது பொண்ணு புகுந்த வீட்டு பிரச்சினக்கு மனசளவில தயாரா இருப்பா.

அண்ணனுக்கு கல்யாணாமாகி இருந்து அண்ணி வீட்டில இருந்தா இன்னும் விசேஷம். முணுக்குண்ணா கண்ணக் கசக்கி, மூக்கைச் சீந்தி, பெட்டிய தூக்கிட்டு கிளம்பாம. நம்ம வீட்டிலேயே இருப்பாங்க என்று முடித்தான். எல்லோருக்கும் தலையைச் சுற்றியது.

ரம்பாவின் மவுசு குறைந்து சிம்ரன், ஜோதிகா கனவை ஆக்ரமித்த காலம். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு காலம் தள்ளிய காலம். நல்ல வசதியான வீட்டில பொண்ணக் கட்டணும் என்று ஒரு குரூப்பும், வசதியில்லாத வீட்டில பொண்ணக் கட்டினா நமக்கு அடங்கி இருப்பாங்க என்று ஒரு குரூப்பும் வாக்குவாதத்தில் ஈடு பட்டிருந்தபோது பாலாஜி வாயைத் திறந்தான்.

“பரம்பரை பணக்காரங்க நமக்கு பொண்ணு தரமாட்டாங்க. புது பணக்கார வீட்டு பொண்ணுக தான் அதிகமா ராங்கி பண்ணும். வசதி இல்லாத வீட்டு பொண்ணு அடங்கி இருக்கும்னு சொல்லுறதெல்லாம் தப்பு. பொண்டாட்டிங்கிற பதவி கிடைச்சுட்டாலே எந்தப் பொண்ணா இருந்தாலும் ஆட்டம் காண்பிப்பாங்க. இவள்ளாம் நம்மளை அதிகாரம் பண்ணுறாளேன்னு நமக்கு கடுப்புதான் அதிகமாகும்.

அப்ப நீ என்னதாண்டா சொல்ல வர்றே என்று கடுப்பாக கேட்டோம்.

வாழ்ந்து கெட்ட குடும்பத்துப் பொண்ணத் தாண்டா கட்டனும் என்றவன் அதற்க்கு சொன்ன காரணம். “ அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.

அசின்,திரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா,பாவனா என பல தேவதைகள் இருந்தாலும் யாரும் கனவில் வராத காலம். செட்டில் பாலாஜியைத் தவிர அனைவரின் குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காதுகுத்து முடிந்திருந்த காலம். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்த காலம். எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் தற்போது பாலாஜிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

என்ன சொல்றான் பாலாஜி? என்றேன் அவரிடம்.

அவர் புலம்பத் தொடங்கினார். கல்யாணம்கிறதே ஒரு காம்பிரமைஸ்தான். மாப்பிள்ளை வீட்டில மொதோ ஆரம்பிக்கும் போது, பொண்ணு ஒல்லியா,சிவப்பா,களையா,வசதியா இருக்கணும்னு ஆரம்பிப்பாங்க. அதேபோல பொண்ணு வீட்டிலயும் மாப்பிள்ளைக்கு நல்ல வேளை இருக்கணும், அக்கா தங்கச்சி இருக்கக்கூடாதுன்னு ஆரம்பிப்பாங்க.

ஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்கி வந்துருவாங்க. ஆனா உங்க பிரண்டு சரியான அகராதிப்பா. ஒவ்வொருதடவை பார்க்கும் போதும் ஒரு படி மேல ஏறிக்கிட்டே இருக்கான். என்ன பண்ணுறதன்னே தெரியல என சலித்துக் கொண்டே முடித்தார்.

அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மனசு துடித்தாலும், அலுவலக,வீட்டு வேலைகள் கழுத்தைப் பிடிப்பதால் சின்னத் திரையில் பார்த்து மனசை தேற்றிக் கொள்ளும் காலம். அடுத்த வாரம் ஊரில் என் இரண்டாவது குழந்தைக்கு காதுகுத்து. பாலாஜியை நேரில் சந்தித்து அழைக்க சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்ன சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் சொன்னபிறகு அப்டேட் செய்கிறேன்.

April 03, 2009

மகேஸ்

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அத்தைப் பெண்ணான மகேஸ் என அழைக்கப்படும் மகேஸ்வரி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். என் அம்மாவுக்கும், அத்தைக்கும் பனிப்போர் நிலவி வந்ததால் அடுத்த தெருவில் இருந்தாலும் அவர்கள் வீட்டுடன் இரண்டு மூன்று வருடங்களாக போக்கு வரத்து இல்லாமல் இருந்து வந்தது.

வேண்டுதல் காரணமாக நாங்கள் திருப்பதி சென்று வந்த பின்னர், என் தந்தை என்னை அழைத்து அரை லட்டையும், நாலு கருப்புக் கயிறையும் கொடுத்து மகேஸ் வீட்டில் போய் கொடுத்து விட்டுவா என்று அனுப்பி வைத்தார். அவர்கள் வீட்டிற்க்குள் நுழைந்ததும், வாடா மருமகனே எங்க அதிசயமா இந்தப் பக்கம் வந்துருக்கே என்று அத்தை வரவேற்றாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மகேஸ், ஏம்மா இப்படி கிண்டல் பண்ணுறே என்று அவள் அம்மாவிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள். அப்போதுதான் அவள் முகத்தை முழுதாக பார்த்தேன். என்ன ஒரு சாந்தமான முகம்? வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு அமைதி அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்குப் பின் அவள் வீட்டிற்குள் அடிக்கடி தலை காட்டத் தொடங்கினேன்.

பள்ளியில் இன்ஸ்பெக்‌ஷன் நடைபெறப் போவதாகவும், எல்லா நோட்டு, புத்தகங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுமாறு கிளாஸ் டீச்சர் அறிவித்து விட்டு சென்றார். எனக்கு உடனே என் டிராயிங் நோட்டை நினைத்து பயம் வந்தது. ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ அந்த அளவுக்கு கஷ்டம் எனக்கு டிராயிங்.

மகேஸும் ராமதாஸைப் போலத்தான். அவர் எப்படி இருக்கும் ஆறு சதவீத ஓட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டணி உதவியுடன் தேவையான சீட்களை ஜெயிக்கிறாரோ அதுபோல மகேஸும் தன் சுமாரான படிப்பை வைத்துக்கொண்டு அழகான ஹேண்ட் ரைட்டிங், படம் வரையும் திறமையைக் கொண்டு பாஸ் மார்க்கை வாங்கி தப்பித்து விடுவாள்.

அன்று சாயங்காலம் டிராயிங் நோட்டைத் தூக்கிக் கொண்டு அவளைச் சரணடைந்தேன். எப்போதும் எங்கள் சந்திப்பு வீட்டு ஹாலில் தான் நடக்கும். அது போக இருக்கும் ஒரு ரூம் அவளுக்கென பிரத்யேகமாக அவள் வீட்டாரால் ஒதுக்கப் பட்டிருந்தது. மகேஸின் அண்ணன் கல்லூரி விடுதியில் படித்துக் கொண்டிருந்தான். வாடா டேபிள்ல வச்சு படம் வரைஞ்சு தர்றேன் என ரூமுக்குள் அழைத்துச் சென்றாள். சாதாரண டேபிள், சிங்கிள் காட் பெட், ஒரு பேன் இவை மட்டுமே அங்கிருந்த மதிப்பான பொருட்கள். ஆனால் அவற்றை வைத்து அந்த ரூமையே நந்தவனமாக மாற்றியிருந்தாள். ஏராளமான கை வேலைப்பாடுகள். அவள் ஆர்ட் டைரெக்டர் ஆனால் தோட்டா தரணி, சாபு சிரில் எல்லோரும் பீல்ட் அவுட்தான். அவள் பாட புத்தகங்களின் அட்டையில் கூட பூக்களின் படங்களை வைத்து அதன் மேல் ட்ரான்ஸ்பரண்ட் பாலித்தின் ஷீட்டால் அட்டை போட்டு ஸ்டேப்ளர் பண்ணியிருந்தாள்.

கடவுள் பக்தியிலும் அவள் சளைத்தவள் இல்லை. வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி, சனிக்கிழமை ஹயகீரிவர் என படிப்புக்கான ஸ்பெஷலிஸ்ட் கடவுள்களின் தீவிர பக்தை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. அதுவரை மேக்கப் போடாமல் வெளியே வராத எங்கள் தெருப் பெண்கள்கூட பொதுத் தேர்வு என்றதும் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள். யூனிபார்மை மாட்டி, பரபரவென தலையை சீவி, அவதி அவதியாக சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு ஓடினார்கள். அப்போது நினைத்துக் கொண்டேன், நாம் யாரையாவது காதலிக்க நினைத்தால் சாதரண நேரத்தில் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டென்த்தோ, டுவெல்த்தோ எக்சாமுக்கு அவங்க போகும் போது பார்த்து விட்டுத் தான் முடிவு செய்யவேண்டும் என்று.

ஆனால் மகேஸ் கிளம்பிப் போன அழகு இருக்கிறதே?. தினமும் எப்படி நேர்த்தியான இரட்டை சடை போட்டு, நெருக்கமாக கட்டிய மல்லிகைப்பூவை சூடி பதறாமல் நடந்து போவாளோ அதே மாதிதான் போனாள். எந்த வித அனாவசிய பரபரப்பும் இல்லை. என் பெரியப்பா பையன் கூட அவளை கிண்டல் செய்வான். அவ நடந்து போகும் போது பக்கத்துல இடி விழுந்தாக்கூட அலட்டிக்காம லேசா தலையைத் திருப்பி ஓரக்கண்ணுல தான் பார்ப்பா என்று.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தது. ராமதாஸ் எப்படி தனக்கு சாதகமான தொகுதியில் மட்டும் நிற்பாரோ அதுபோல தனக்கேற்ற வொக்கேஷனல் குரூப்பை தேர்ந்தெடுத்து படிப்பைத் தொடர்ந்தாள் மகேஸ். தட்டின் நடுவில் சாப்பாட்டை வைத்து சாப்பிட வேண்டும், நடக்கும் போது அடுத்தடுத்த எட்டு ஒரே நேர்கோட்டில் வரவேண்டும் என என்னை திருத்திக் கொண்டே இருப்பாள்.

நான் கல்லூரி முதலாமாண்டு நுழைந்த நேரத்தில் அவள் படிப்பை முடித்திருந்தாள். உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றில் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மதிய சாப்பாட்டுக்குப் பின் பெண்கள் அனைவரும் சேர்களை எடுத்து வட்டமாகப் போட்டுக் கொண்டு அல்லி தர்பார் நடத்திக் கொண்டிருந்தார்கள்.


என்னை கவனித்திருந்த அத்தைப்பாட்டி ஒருத்தி என்னை அழைத்து, “என்னடா அவ பின்னாடியே சுத்திக்கிட்டிருக்க” என்று விசாரணையை ஆரம்பித்தாள். எனக்கு உதவிக்கு வந்த என் பெரியம்மா, “அவ இவனைக்காட்டிலும் மூப்பு, சும்மா பேசிக்கிட்டு இருக்கான்” என பதிலளித்தாள்.

அப்போது என் பாட்டி ”அதனாலென்ன, பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த, கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்.

பின்னர் மகேஸுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வந்தது. எழுத்தறிவில்லாத ஊமை கண்ட கனவாக என் காதல் இருந்தது. மகேஸ் திருமணத்திற்கு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன்.

இப்போது எனக்கும் திருமணம் ஆகி விட்டது. பொருளாதார பற்றாக்குறையாலும், ஈகோவாலும் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் செய்வது ஒன்றுதான். ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு பார்க்கிலோ, பார்க் மூடியிருந்தால் ஏதாவது பஸ் ஸ்டாப்பிலோ அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.

அந்த சமயங்களில் நினைப்பதுண்டு “பேசாம மூணு முத்த முழுங்கியிருக்கலாம்”

April 01, 2009

வானம் பார்த்த செந்தில்

செந்தில் நான்காம் வகுப்புவரை நார்மலாகத்தான் இருந்தான். ஐந்தாம் வகுப்பில் அவனது அதி வளர்ச்சி ஓரளவு தெரிந்தது. டவுண் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது தான் அவனுக்கும் வகுப்பு மாணவர்களுக்குமான வித்தியாசம் உறைத்தது. பெரும்பாலான மாணவர்கள் அவனது இடுப்புக்கே இருந்தனர்.

அந்த பள்ளியில் ஒன்பதாவது வகுப்பிலிருந்து தான் மாணவர்கள் தான் பேண்ட் அணியவேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதி செந்திலின் வாழ்வில் விளையாடியது. அவன் உயரத்திற்கு அரைக்கால் சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது நீச்சலுடை அணிந்து பெண்கள் தெருவில் நடப்பதற்க்கு ஒப்பாக இருந்தது. எனவே வீட்டில் இருந்து கிளம்பும்போது வேஷ்டி கட்டி கொண்டு வருபவன், பள்ளி எல்லைக்குள் நுழைந்தவுடன் அதை மடித்து தன் மஞ்சப் பைக்குள் வைத்துக்கொள்வான். வகுப்புக்கு வந்த ஆசிரியர்களும் அவனை கிண்டல் செய்தார்களே தவிர பிரச்சினையை தீர்க்க நினைக்கவில்லை.

ஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் சங்கரி தான் அந்த பிரச்சினையைத் தீர்த்தார். ”சார், இவ்வளோ உயரமான பையன் அரைட்ராயர் போட்டு பக்கத்தில நிற்கிறது சங்கோஜமா இருக்கு” என அவர் ஹெட் மாஸ்டரிடம் சிணுங்க செந்திலுக்கு விதி தளர்த்தப்பட்டது.

இவன் அசாத்திய உயரத்திற்கும் ஆகிருதிக்கும் காரணம் அவனது பரம்பரை தான். அந்த ஊரில் எல்லோரும் பழைய லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டித்தான் குளிக்க உபயோகப் படுத்துவார்கள். ஒரு கையால் முழு சோப்பை பிடித்து வாகாக குளிக்க முடியாது. ஆனால் செந்திலின் அப்பா கைக்கு அந்த முழு சோப்பே, சாம்பிள் சோப்பு போலத்தான் இருக்கும். பொதுவாக 11 ஆம் நம்பருக்கு மேல் செருப்பு கிடைப்பது கடினம் என்பதால் அவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர் செருப்பில் தான் வலம் வருவார். கோவில், திருமண விழா எங்கும் துணிந்து செருப்பை அவிழ்த்து வைப்பார். அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்கள் அந்த கிராமத்துக்கு எதுக்கு வரப்போகிறார்கள்?

கிராமத்தில் கிடா வெட்டிப் போடப்படும் விருந்துகளில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில்தான் அமர்ந்து கொள்வார். சேவாக் மாதிரி, சாப்பிட்டமா எந்திரிச்சு போனமான்னு இருப்பார்னு நினச்சுறாதீங்க. அவர் டிராவிட் மாதிரி. அங்க பந்து வீச்சாளர்கள் களைத்துப் போவதுபோல இங்கு பரிமாறுபவர்கள் களைத்துப் போவார்கள். அங்கு எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி திரும்புவது போல, இங்கு சக பந்தியாளர்கள். அங்கு டெயில் எண்ட் பேட்ஸ்மென்கள் வரும் வரை டிராவிட் நிற்பது போல சமையல்காரர்கள் சாப்பிடும் கடைசிப் பந்தி வரை இவர் ஈடு கொடுப்பார்.

ஒருமுறை எலும்புக் குழம்பின் ருசியால் ஏழெட்டு ரவுண்டு போய்க் கொண்டிருந்தார். இலையின் ஓரத்தில் கடிபட்ட எலும்புகள் மலையாய் குவிந்திருந்தன. நீண்ட இன்னிங்ஸின் விளைவால் கால் மரத்துப் போக இருவர் சேர்ந்து அவரை தூக்கிவிட்டார்கள். ஆனால் அவர் சாப்பிட்ட இலையைத் தூக்க நாலுபேர் தேவைப்பட்டது.

பின்னர் செந்திலின் ஆகிருதிக்குக் கேட்கவா வேண்டும்?. அவன் கல்லூரியில் சேர்ந்த போது முதல் சில நாட்கள், சீனியர்கள் அவனை புது லெக்சரர் என்று நினைத்து வந்தார்கள். சில நாட்களில் குட்டு வெளிப்பட்டாலும் அவ்வளவாக ராக்கிங் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஆனால் சக வகுப்பு மாணவர்கள் சும்மா விடுவார்களா?

எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல எந்த டாபிக் பற்றிப் பேசினாலும் செந்திலைக் கிண்டல் செய்தே முடித்தார்கள். உடன் இருக்கும் நண்பர்கள் ராக்கிங் செய்தாலும், ஆண்டு விழாவில் கலாட்டா செய்தாலும் இவனது தனித்த உருவம் காரணமாக எளிதில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டான். டவுன் பஸ்ஸில் உட்கார இடம் இருந்தாலும் கடைசிப் படியில் நின்று கொண்டுதான் வருவான் ஏனென்றால் முன் சீட்டில் முட்டி வலுவாக இடிக்கும். எம் எல் ஏ மகனாக இருந்தாலும் உள்ள வந்து நில்லு என்று அதட்டும் கண்டக்டர்கள் கூட, பாவம் இவன் உள்ள நின்னா டாப் இடிக்குமே என்று விட்டு விடுவார்கள்.

பெண்கள் தலைகுனிந்து நடப்பார்கள். சில புதுமைப் பெண்களும், ஆண்களும் நேர்கொண்ட பார்வையுடன் இருப்பார்கள். இப்போது எல்லாப் பெண்களும் புதுமைப் பெண்களாகிவிட்டார்கள். நம் செந்தில் மேல் நோக்கி பார்த்து நடப்பான். அவன் கழுத்து அமைப்பு அப்படி. அவன் உயரத்தின் காரணமாகவும், வானத்தைப் பார்த்து நடப்பதாலும் அவனுக்கு நண்பர்கள் வைத்த பெயர் தான் வானம் பார்த்த செந்தில்.


இரண்டு முதலாமாண்டு மாணவர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.

எந்த குரூப்கிட்ட வேணுமின்னாலும் மாட்டிக்க. வானம் பார்த்த செந்தில் குரூப்கிட்ட மட்டும் மாட்டிக்கிடாத.


அவன எப்படிடா கண்டுபிடிக்கிறது?


அது ரொம்ப ஈஸி. அவனப் பார்த்தாலே உனக்குத் தெரிஞ்சிடும்.



இம்மாதிரி பேச்சுக்களால் கூட அவன் மனம் உடையவில்லை. ஒருமுறை மூன்றாம் ஆண்டு மாணவி ஒருத்திக்கு ஒருவன் லவ் லெட்டர் எழுதிவிட, அவள் பிரின்சிபாலிடம் போவேன் என மிரட்டத் தொடங்கினாள். ”தெரியாம பண்ணிட்டான். இனி இதுமாதிரி செய்ய மாட்டான், இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுடு” என அவனின் நண்பர்கள் தூது போனார்கள். அவள் கெஞ்சினால் மிஞ்சும் டைப். ஒரு கட்டத்தில் கடுப்பான ஒரு ஷார்ட் டெம்பர் பார்ட்டி, வானம் பார்த்த செந்தில்தான் உன் புருஷனா வரணும்னு கேரளா போயி செய்வினை  வச்சுடுவேன் என மிரட்ட, அவள் பயந்து போய் தற்கொலை முயற்சி வரை சென்று விட்டாள். இந்த சம்பவம் அவன் மனதை வெகுவாக பாதித்து விட்டது.

ஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்தது. மத்த செட்டு மாதிரி இல்லாம நாம் அடிக்கடி மீட் பண்ணி டச்சிலேயே இருக்கணும்டா என தேர்தல் வாக்குறுதி கொடுத்து அனைவரும் கலைந்தோம்.

பணியிடத்தில் கிடைத்த புது நண்பர்களும், திருமணத்தின் மூலம் கிடைத்த புது உறவுகளும், குழந்தைகளும் கல்லூரி நட்புகளை மறக்கடித்திருந்தன.

ஆறாம் வகுப்பிற்காக பையனை புது பள்ளியில் சேர்த்திருந்தேன். அங்கே  யூனிபார்மில் பேட்ச் தைத்திருந்த டையையும் சேர்த்திருந்தார்கள்.  ஜூன் மாசம்னு பேரு, இப்படி வெயில் அடிக்குது, இதுல டையும் வேறயா என புலம்பிக் கொண்டே, ஏண்டா உங்க ஸ்கூலுக்கு டை இல்லாம போனா என்னவாம்? என்றேன்.

ஐயையோ, எங்க ஸ்கூல்ல வெளியே நிப்பாட்டீருவாங்க. எங்க கிளாஸில எஸ்.பிரபுவுக்கு மட்டும் தான் டை இல்லாம வரலாம்னு சொல்லி இருக்காங்க என்றான்.

ஏன்? என்றதற்கு

எங்க ஸ்கூல்லயே அவன் தான் ஹைட்டு. அவன் சைஸுக்கு டை தனியா தைக்கணுமாம். அது வர்றவரைக்கும் அவனுக்கு மட்டும் அலோவ்டு என்றான்.

அந்த எஸ்,  செந்திலாக மட்டும் இருந்து விடக்கூடாது என மனம் நினைத்தது.