Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

May 31, 2017

சி ஏ படிப்பு

தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை. பை நிறையச் சம்பளம். இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவது கடினமான தேர்வு முறை.

இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே! என்ற பயம்.

அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.

முதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.

இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ. இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.

இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.

மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே, பெற்றோர்கள் மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.

ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.

சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.

இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.

சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.

சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?

அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.

May 31, 2016

விடுதியில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம்

பத்தாண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. –பெரும்பாலானவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடங்களில் இருந்து பேருந்தில் சென்று திரும்பும் தூரத்திலேயே கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதும் ஒரு காரணம். என்னைப் பொறுத்தவரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் சேர்ந்து படிப்பது நல்ல பலனைத் தரக்கூடிய ஒன்று.

நம்முடைய மூளையின் உள்வாங்கும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம் ஆகியவை 21 வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அதன்பின்னர் சற்று குறையத் துவங்கும். எனவே இந்த 21 வயதிற்குள் நேரத்தை வீணடிக்காது பாடங்களைக் கற்றுக்கொள்வது அந்தத்துறையில் விற்பன்னராவதற்கு உதவும். விடுதியில் இருந்தால் நாம் கற்றுக் கொள்வதற்கான நேரம் அதிகமாகக் கிடைக்கும்.

இப்பொழுது மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுவர சராசரியாக இரண்டு மணி நேரம் ஆகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமும் ஆகின்றது. இந்த பயண நேரத்தில் ஆக்கபூர்வமாக படிக்க முடியாது. இந்த பயணத்தினால் உண்டாகும் உடல் அலுப்பால் வகுப்பில் பாடங்களை கவனித்தலும் குறையும், மாலையில் கவனமாகப் படிக்கவும் முடியாது.

மேலும் இந்த வயதுதான் நன்றாகப் பசியெடுக்கும் வயதும் கூட. இதில் காலை வேளையில் அவசர அவசரமாக சாப்பிட்டு ஓடுவதாலும், மதியம் டப்பாவில் கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிடுவதாலும் மாலையில் பயங்கர பசியெடுக்கும். இந்த நேரத்தில் அதிகமான நொறுக்குத்தீனிகளை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் இரவில் அதிக அளவு உணவினைச் சாப்பிடுகிறார்கள். இது அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள். உடலை உறுதி செய்ய வேண்டிய வயதில் இதைச் செய்வது, நாற்பது வயதிற்கு மேல் அவர்களை நோயாளியாக்கி விடும். மாறாக விடுதியில் இருக்கும் போது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒழுங்கான கால வேளையில் சரியான உணவினைச் சாப்பிட்டு வருவது ஜீரண மண்டலத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து விடும்.

அடுத்ததாக பல வீடுகளில் பிள்ளைகள் அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்வது கூட இல்லை. என் பொண்ணு சாப்பிட்ட தட்டைக் கூட தூக்கி வைக்க மாட்டா என்பதை பெருமையாகக் கூட சிலர் சொல்லுகிறார்கள். சில விவாகாரத்தான திருமணங்களிலோ கணவன் ஒரு டம்ளர் தண்ணி கூட தானே பிடிச்சுக் குடிக்காத சோம்பேறி போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. விடுதியில் இருக்கும் போது நமக்கான சில வேலைகளையாவது நாமே செய்து கொள்ளும் படி இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு. அடிப்படை வேலைகளை செய்து, இந்த வயதில் முதுகு வளையாவிட்டால் பின் எந்த வயதிலும் முதுகு வளையாது.

விட்டுக் கொடுத்தல் என்பதும் இப்போது அருகிவரும் பழக்கமாக இருக்கிறது. நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்? என்ற மனப்பான்மையிலேயே பலரும் இருக்கிறார்கள். விடுதியில் ஒரே அறையில் இரண்டு மூன்று பேருடன் தங்கி இருக்கும் போது மற்றவர்களைப் பார்த்து விட்டுக் கொடுக்கும் மனோபாவம் வரும். மற்றவர்களின் குடும்ப நிலை, பழக்க வழக்கங்கள் தெரியவரும் போது அதனுடன் நம் குடும்பத்தை ஒப்பிட்டு நாம் எதில் பின் தங்கியிருக்கிறோம்? எந்த குணநலம் நம்மிடம் இல்லை என்ற ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளலாம். நாம் தனியே இருக்கும் போது நம் மூளை நம்மை அறியாமலேயே இதைச் செய்யும். இந்த சிந்தனைக்கான நேரம், வாய்ப்பு எல்லாம் டேஸ்காலராக இருக்கும் போது கிடைக்காது.

பையன்களுக்கு இன்னொரு வகையிலும் விடுதி வாழ்க்கை ஒரு நன்மையைக் கொடுக்கும். பதின்பருவத்தில் தந்தையின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு வரும். அது வளர்ந்து கொண்டே செல்லும். திருமணத்திற்குப் பின் மனைவி, என்ன உங்க வீட்டுல இப்படி பண்ணுறாங்க என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கும் போது அந்த வெறுப்பு இன்னும் அதிகமாகும். திருமணத்திற்கு முன்னால் பெற்றோரிடம் இருந்து சில ஆண்டுகள் பிரிந்திருப்பது நல்லது அது கல்லூரி காலகட்டமாயிருந்தால் இன்னும் நல்லது. ஏனென்றால் வேலை பார்க்கும்போது பிரிந்திருந்தால் கூட வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமை போன்றவற்றாலும் நம் காசில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் வருவதாலும் பெற்றோர்களைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்யமாட்டார்கள். ஆனால் கல்லூரி விடுதியில் இருக்கும் போது அவர்கள் மீதான புரிதல் வரும். எந்த உறவிலுமே சிறு பிரிதல்கள் உறவை வலுவாக்க அவசியம்.

எல்.கே.ஜி தொடங்கி பணி ஓய்வு பெறும் வரை கூட காலையும் மாலையும் ஒரு செவ்வகத்தின் வழியாகவே உலகைப் பார்த்துக் கொண்டு போகிறவர்கள் அதிகம். பள்ளி வேன் தொடங்கி, கல்லூரி பேருந்து, அலுவலகப் பேருந்து, பெரிய பதவிக்கு வந்த பின்னர் கார் என அந்த ஜன்னலின் வழியாகப் பார்த்தே நாம் பல ஆண்டுகளைத் தொலைத்து விடுகிறோம். சில ஆண்டுகளாவது பிரயாணம் இல்லாமல் நடந்து கொண்டு 360 டிகிரியிலும் சூழலை அனுபவித்துக் கொண்டு வாழ்வது நல்லதுதானே?

December 25, 2015

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பரொருவர் சொல்லுவார், ’என் ஒய்ஃப் கவர்மெண்ட் சர்வண்ட்டுங்க. தமிழ்நாட்டோட எந்த மூலைக்கு அவங்களை ட்ரான்ஸ்பர் பண்ணினாலும் கவலைப்படாம கிளம்பிடுவோம், ஏன்னா எப்படியும் அங்க ஒரு இஞ்சினியரிங் காலேஜ் இருக்கும்ல’. இது போன்ற சூழ்நிலை இல்லாத 80களில் எங்கள் ஊர் பையன்களுக்கு கனவே கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, மெஜுரா காலேஜ், தியாகராஜா கலை அறிவியல் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, திண்டுக்கலில் ஜிடி நாயுடு கல்லூரி, உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தா கல்லூரி, உத்தம பாளையம் காஜி கருத்த ராவுத்தர் கௌதியா கலைக் கல்லூரி, திருவேடகம் விவேகானந்தா கல்லூரி ஆகியவையே எங்கள் ஊரில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்த கல்லூரிகள். எங்கள் ஊர் பேஸ்கட்பால் விளையாட்டுக்கு புகழ்பெற்றது என்பதால் திருச்சி செயிண்ட் ஜோசப் போன்ற கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.

இவற்றுள் எந்த கல்லூரி கிடைத்தாலும் சேர்ந்துவிடும் எங்கள் ஊர்காரர்கள் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என்றால் மட்டும் மிகவும் யோசிப்பார்கள்.

அது ஏனென்றால்…..

எங்கள் ஊரில் சங்கு பிரியாணி ஸ்டால் என்னும் ஒரு கடை இருந்தது. தினமும் நண்பகல் 12 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக்கு அடைத்து விடுவார்கள். மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, தால்சா, கரண்டி ஆம்லெட், தயிர் வெங்காயம், கொஞ்சம் தயிர்சாதம் இதுதான் மெனு. இதை சாப்பிட்டாலும் பார்சல் என்றாலும் ஒரே பேக்கேஜாகத்தான் கொடுப்பார்கள். ஞாயிறுகளில் பிளாக்கில் கூட பார்சல் போகும். வெள்ளாட்டு கறி மட்டும் தான் உபயோகிப்பார்கள். ஆம்லெட்டுக்கு நாட்டுக்கோழி முட்டை, தால்சாவுக்கு நெஞ்செலும்பு மட்டும், வீட்டு எருமைத்தயிர் தான் சாதத்துக்கும், தயிர் வெங்காயத்துக்கும்.

காமாட்சி அவ்வா என்று ஒருவர். மதிய சாப்பாட்டை கணவனுக்கு பரிமாறிவிட்டு இரண்டரை மணியளவில் வீட்டிலேயே தன் வடைக்கடையைத் திறப்பார். ரெண்டே அயிட்டங்கள் தான். தவலை வடை மற்றும் பஜ்ஜி. சட்னி சாம்பார் எதுவும் கிடையாது. அவ்வளவு பக்குவமாக தவலை வடைக்கு எப்படி அரைப்பார் என்றே தெரியாது, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கூட ஈஸியாக வாங்கிவிடலாம் ஆனால் இந்த பார்முலாவை கடைசிவரை யாராலும் வாங்கமுடியவில்லை. மதியம் 2 மணியில் இருந்தே கையில் தூக்குச் சட்டி, பாத்திரங்களுடன் சிறுவர்கள் காத்திருப்பார்கள். இந்தக் கடையும் நான்கு மணிக்கு மூடப்படும்.

இது போல இன்னும் பல கடைகள். சரசவ்வா ஆப்பம், கோவிந்தம்மா பாட்டி பணியாரம், தாயார் அவ்வா காரச்சீயம் என வகைக்கொன்றாக ஸ்பெஷாலிட்டி கடைகள் இருக்கும். ராஜு ஆப்பக் கடையில் புரோட்டாவிற்கு மட்டும் ஆறு வகைகளில் குழம்பு சட்டிகள் இருக்கும். சாப்பிடுபவர் தேவைக்கேற்ப பல வித பெர்முடேசன் காம்பினேசன்களில் அதைக் கலந்து தருவார்கள்.

இப்படித் தின்றே பழகியவர்களுக்கு ஹாஸ்டல் சாப்பாடு என்பது தூக்கு தண்டனைக்குச் சமம். அதனால் மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே சேருவார்கள். ஏனென்றால் மாலை வேளைகளில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம். அப்படியும் சனி, ஞாயிறுகளில் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். திங்கட் கிழமை போகும்போதும் முறுக்கு,சீடை,இட்லிப் பொடி, பருப்புப் பொடி என அள்ளிக்கொண்டு போவார்கள். இத்தனைக்கும் ஹாஸ்டல் சாப்பாடு நன்றாகவே இருக்கும்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியானது சைவ மடத்தால் நடத்தப்படும் கல்லூரி. அங்கே கைக்குத்தல் அரிசி சாப்பாடுதான் போடுவார்கள். சிற்றின்ப ஆசையை தூண்டவல்ல லாகிரி அயிட்டங்கள் எல்லாம் சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சப்பென்றே சாப்பாடு இருக்கும். சுற்றி 5கிமீ தூரத்துக்கு கடையே இருக்காது. அதனால் இரண்டே நாட்களில் எங்கள் ஊர்ப் பையன்கள் சுவரேறி குதித்தாவது ஓடிவந்து விடுவார்கள்.

அதிகாலை எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிப்பதும் எங்களுக்கு ஒவ்வாமை. சித்திரை மாதத்தில் கூட வெந்நீர்தான். அதிலும் என்னைப்போன்ற சிலர் வெறும் வயிற்றில் பல் கூட துலக்க மாட்டோம். உமட்டிக்கிட்டு வருது என்று சொல்லி, காபி குடித்துவிட்டுத்தான் பல் விளக்குவோம். ஆனால் விவேகானந்தாவில் அதிகாலை எழுந்து பச்சைத்தண்ணியில் குளித்து பிரேயர் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும்.

அதுவும் எல்லோருக்கும் பரிமாறி முடித்த உடன் தான் சாப்பிட வேண்டும். ஆனால் எங்கள் மக்கள் அடுப்படியில் இருந்து வந்தால் கூட தோசை ஆறிவிடும் என்று சமையல்கட்டிலேயே சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள். சூட்டை விடுங்கள். உணவைப்பார்த்து விட்டால் ஏன், உணவு இருக்கிறது என்று தெரிந்தாலே தேடி எடுத்து தின்று விடுவார்கள். அமாவாசை போன்ற விரதங்களுக்கு கூட சுத்தபத்தமாக சமைக்க முடியாது. கொதிக்கும் வடைச்சட்டியில் கூட கைவிட்டு வடை எடுத்து விடுவார்கள், அவ்வளவு ஏன்? ,எங்கள் ஊரில் பெண்கள் அவ்வை நோன்பு என்று ஒன்று இருப்பார்கள். அதற்கு கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள். அந்தக் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிடக்கூடாது ஏன் பார்க்கவே கூடாது என ஒரு ஐதீகம். பார்த்தால் கண் போய்விடும் என அக்காக்கள் பயமுறுத்தி ஒளித்து வைப்பார்கள். ஆனால் எங்கள் பையன்களோ அந்த பாத்திரத்தை தேடி எடுத்து கொழுக்கட்டையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பையன்களுக்கு பசியோடு தட்டை முன்னால் வைத்து காத்திருக்கச் சொன்னால்?. மேலும் எங்கள் ஊரில் மூட்டிய கைலி மட்டும் தான் கட்டுவார்கள். வேஷ்டி எல்லாம் விசேஷங்களுக்குத்தான். அங்கே ஒற்றை வேஷ்டி கட்டவேண்டும். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு பள்ளிக்கூட பையன்களுக்கு ஒரு வைராக்கியமே பிறந்துவிடும். மதுரை காலேஜ்ல சீட் வாங்குற அளவுக்கு படிச்சிடனும்டா என களத்தில் இறங்கிவிடுவார்கள்.

சில பெற்றோர்கள் மட்டும் வற்புறுத்தி அங்கேயே படிக்க வைத்து விடுவார்கள். இப்போது கவனித்துப் பார்த்தால், அந்த குருகுல முறைக் கல்லூரியில் படித்ததால் கெட்ட பழக்கத்தை விட்டவர்கள் என்பது குறைவு. அங்கு செல்லும் முன் என்னவெல்லாம் செய்தார்களோ அதை திரும்பிவந்தும் செய்தார்கள், என்ன புதிதாக எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.

17 முதல் 20 வரையிலான வயது ஒரு மாதிரியான வயது. எதையும் செய்யாதே என்றால் செய்யத்துணியும் வயது. அலைபாய்வது, எதையும் முயற்சி செய்யத் துடிப்பது. அந்த வயதில் அதற்கான வாய்ப்புகளை குறைப்பது என்ற வகையில் விவேகானந்தா கல்லூரி நல்ல கல்லூரி.

மனத்திற்கான பிரீசர் என்று கூட சொல்லலாம். 17 வயதில் இருக்கும் கெட்ட பழக்கங்களோடே 20 வயதில் வெளிவருவார்கள். 20 வயதில் 17 வயதுக்கான தீய பழக்கங்களோடு இருப்பதும் ஒரு நல்லதுதானே?
மற்றவற்றை விடுங்கள். உடல்நலத்தை சீராக்கி விடுவதில் வல்லது இந்தக் கல்லூரி. எந்த பட்டை தீட்டலும் இல்லாத கைக்குத்தல் அரிசியில் தேவையான சத்துக்கள் இருக்கும். புரதச்சத்துக்காக அவித்த பயறு வகைகள், கொண்டைக்கடலை என உப்புக் குறைவாகப் போட்டு, எண்ணெய் குறைத்து தாளித்து தருவார்கள். காலை விரைவாக எழுதல், உடற்பயிற்சி, யோகா, தியானம் என உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் அங்கு பல உண்டு.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அங்கே கிடைக்கும் இன்னொரு நன்மை. பொதுவாக எல்லா ஹாஸ்டல்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சில இடங்களில் பிளெக்சிபிள் டைமிங் இருக்கும். இங்கே அதே நேரத்தில் பிரேயருக்கு அப்புறம் சாப்பாடு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிடுவார்கள்.

ஒரு பிரபலமான ஆய்வுச்சாலை சோதனை நிறையப்பேர் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சோதனைச் சாலையில் இருந்த விலங்குகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் ஒரு மணியை அடித்து விட்டு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் உணவுப்பொருளின் வாசனையை விட மணிச்சத்தத்திற்கே வயிற்றில் ஜீரணிப்பதற்கான என்சைம்கள் சுரக்கத் தொடங்கியதாம். அதுபோலவே விவேகானந்தா மாணவர்களுக்கும் பிரேயர் சாங்கை எங்காவது கேட்டாலே பசிக்கத் துவங்கிவிடும்.

இப்போதும் பி,காம் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பது அங்கு கடினம் தான். தன்னாட்சி பெற்று, NAAC அக்கிரிடிடேசன் பெற்று நன்கு நடந்து வரும் கல்லூரி. ஆனால் இந்த தலைமுறை நடுத்தர வகுப்பு மாணவர்கள் மிகவும் தயங்கும் அளவுக்கு சட்டதிட்டங்கள் இருக்கிறது.

December 13, 2015

பொறியியல் கல்லூரி அக்கிரிடேசன் - ஓர் அறிமுகம்



மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).
இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம் பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின் கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.
இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?

ஐஐடிகளில் பி எச் டி, எம் எஸ் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் வைவா முடிந்ததும் கொடுக்கும் தேநீர் விருந்து பிரசித்தி பெற்றது. தங்கள் ஆய்வுக்கு உதவிய பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அதனை அளிப்பார்கள். அப்போது அங்கு வரும் பேராசிரியர்கள் கலகலப்பாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அன்று விருந்து கொடுத்தவர், தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டு தற்போது பெரிய அளவில் இருக்கும் தனியார் பல்கலையில் வேலை பார்ப்பவர். அவர் அப்பொழுது ஐஐடியில் இல்லாத இன்பராஸ்ட்ரக்சர் கூட தன் பலகலையில் இருப்பதாகக் கூறினார்.

அப்போது அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?

இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.
இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன் பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.

தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்க்கவேண்டும்.
முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும் நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்கிறது. இது முழு கல்லூரிக்கும் அளிக்கப்படும் சான்றிதழ். ஆனால் பொறியியல், மேலாண்மை போன்ற புரபசனல் கல்லூரிகளுக்கு என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ் வழங்குகிறது. இது அந்தந்த கல்லூரிகளில் உள்ள துறைகளுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுவது.


இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.

நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical Education) இணைந்த ஒன்று. ஆனாலும் தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ் பாடி).

இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.
வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட், டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.
இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.

சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால் பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும். தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை இல்லையென்றே சொல்லலாம்)

டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.
நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.

இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து வருகிறோம்.

ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.
இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும். (இது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். வரும் ஆண்டுக்கான ரிப்போர்ட் கூட மாற்றத்துக்கு உள்ளாகுமாம்)

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர் அல்லது இருவருமே கல்விப்பணியாகவும் இருக்கலாம்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.
இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.

என் பி ஏ கமிட்டியின் எல்லைக்குள் வரும் உயர் படிப்புகள்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
மேலாண்மை
ஆர்க்கிடெக்சர்
மருந்தாளுமை [பார்மசி]
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங்
டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங்
அப்ளைடு ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ்

இந்த கமிட்டியானது கல்லூரிகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறது. Tier-1 என்னும் நிலையில் பல்கலைகழகங்களும், தன்னாட்சி (Autonomous) பெற்ற கல்லூரிளும் வருகின்றன. பல்கழைகழத்தின் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் (Affiliated) கல்லூரிகள் Tier-2 வகையில் வரும். டயர்-1 ல் எப்படி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.


எந்தத் துறையாக இருந்தாலும் சரி, +2 படித்து வரும் மாணவன் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணிப்பொறியியல் மட்டுமே படித்திருப்பான். அந்தத் துறையைப் பற்றிய அடிப்படைக் கல்வியை முதல் இரண்டு வருடங்கள் சிறப்பாக போதித்தால் மட்டுமே அவனால் துறையில் ஆழ்ந்த அறிவு பெற முடியும். அடிப்படைப் பாடங்கள் நூறாண்டு பழமை வாய்ந்ததே.

தற்போதைய அட்வான்ஸ்மெண்டுகளை அடுத்த இரண்டு வருடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளலாம். இந்த இடத்தில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் காலத்திற்கு ஏற்ப தங்கள் பாடத்திட்டங்களை அப்டேட் செய்து கொள்கின்றன. ஆனால் ஏராளமான இணைப்புக் கல்லூரிகளைக் கொண்ட பல்கலைகழகமானது அப்படி அடிக்கடி தன் பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்ள இயலாது. (மாணவனுக்கு அடிப்படை அறிவு இருந்தால் வேலையில் சேர்ந்த பின் கூட பிக்கப் செய்து கொள்ளலாம். ஆனால் வேலை கிடைக்க அப்போதைய தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகளுக்கு)

எனவே என் பி ஏ கமிட்டியானது டயர்-1ல் வரும் கல்லூரிகளில் பாடத்திட்ட உருவாக்கலுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குகிறது.

கல்லூரியின் முக்கிய கட்டமைப்பான ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வழங்கும்போது,

தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்கிறது.

ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?

தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?

புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?

போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.


இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு,
பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.

நூலகம்

பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் ரெபரன்ஸ் புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நூலகத்தில் இருக்க வேண்டும். அது போக ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கென டிபார்ட்மெண்ட் லைப்ரரியும் இருக்க வேண்டும். அதில் புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு, ஆராய்ச்சி கட்டுரைகளைத் தாங்கி வரும் சர்வதேச சஞ்சிகைகள் தேவை. அவை எவ்வளவு நூலகத்தில் உள்ளன என்பதும் ஒரு அளவுகோல். தற்போது ஆன்லைனில் எல்லாம் கிடைக்கின்றன. இதுபோக பெரிய பல்கலை, மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தப் செய்து கொண்டு அவர்கள் மூலம் எவ்வளவு புத்தகங்கள் பெறுகிறோம் என்று பார்ப்பார்கள். தற்போது ஐ ஐ டி, அண்ணா பல்கலை ஆகியவை இணையத்தில் தங்கள் பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளை வலையேற்றி வைத்துள்ளார்கள். இவற்றை கவனிக்க மல்டி மீடியா வசதி நூலகத்தில் உள்ளதா? என்றும் பார்ப்பார்கள்.


வேலைவாய்ப்பு

மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதே வேலை வாய்ப்புக்காகத்தான். எனவே மாணவர்களின் எம்ப்ளாயபிலிடிக்கு கல்லூரி என்ன செய்திருக்கிறது? என்று பார்ப்பார்கள்.

எத்தனை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன?. எந்தெந்த துறைக்கு? யாரால்? போன்றவற்றிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பயிற்சி முடிவுக்குப் பின் மாணவர்களிடம் இருந்து பீட் பேக் பெற்று தொகுத்து வைத்திருக்க வேண்டும்.

எத்தனை வளாகத்தேர்வுகள் நடந்தன?, அவற்றில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? அதிகபட்ச/குறைந்த பட்ச/ சராசரி சம்பளம் எவ்வளவு? ஆகிய விபரங்கள் கடைசி மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காப்பிகள் கூட சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

ஏனென்றால் உள்ளூர் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்து கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தனை விபரங்களும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் ஆய்வின் ஓர் அங்கமாக எம்ப்ளாயர் மீட் எனப்படும் கூட்டம் நடத்தப்படும். அதில் வேலை வாய்ப்பு அளித்தோர்களும், கமிட்டியினர் மட்டும் இருப்பார்கள். அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை, கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை விசாரித்து உறுதி செய்து கொள்வார்கள்.

September 27, 2015

காப்புரிமை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்

காப்புரிமை பெறுவது பற்றிய விழிப்புணர்வு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. காப்புரிமை அல்லது புதிய பொருட்கள்களை உருவாக்குவது என்பது நிலச் சொந்தக்காரர்களாய் இருப்பது போன்றது. அந்த தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பது என்பது விவசாயக் கூலிகளாய் வேலைபார்ப்பது போன்றது. கூலிகளுக்கு எவ்வளவு அனுபவம் இருந்தாலும் அதைப் பொறுத்து சம்பளம் கிடையாது. மேலும் வயதாக ஆக அவர்களுக்குரிய வாய்ப்பும் குறையும். ஆனால் நிலச் சொந்தக்காரருக்கு அப்படியில்லை. நாம் நம்மைச்சுற்றி கவனித்துப் பார்த்தாலே தெரியும், நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு காப்புரிமை வேறு நாட்டினரிடம் தான் இருக்கும். அந்தப் பொருட்களை இங்கே தயாரித்தாலும் நாம் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருக்கும்.

எனவே நாம் எந்தளவுக்கு காப்புரிமை பெறுகிறோமோ அந்த அளவுக்கு நாமும் நம் நாடும் பொருளாதார வளர்ச்சி அடையலாம்.

காப்புரிமை (PATENT) என்பது என்ன?
காப்புரிமை என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் அறிவுசார் சொத்துரிமை ஆகும். இதன்மூலம் அந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பை உருவாக்க, விற்க அவருக்கு பிரத்யேக உரிமை அளிக்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கும், அதன்மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்தமுறை உதவுகிறது. இந்த முறையால் அவர்களின் உழைப்பு பாதுக்காக்கப் படுகிறது. தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த காப்புரிமை மூலம் நல்ல பொருளாதாரப் பயன்களைப் பெறமுடியும். பொதுவாக காப்புரிமையானது ஒரு நாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றொரு நாட்டிலும் காப்புரிமை பெற வேண்டுமானால் அந்த நாட்டில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

எவையெல்லாம் காப்புரிமை பெற தகுதியான கண்டுபிடிப்புகள்?
காப்புரிமை விதிகளின் படி, ஒரு கண்டுபிடிப்பானது, “ஒரு புதுமையை உள்ளடக்கிய, தொழில் துறைக்கு பயன்படும் சாதனம் அல்லது தொழில்நுட்பம்”. எனவே கண்டுபிடிப்பானது இயல்பாகவே தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும்
(i)       புதுமை : கண்டுபிடிப்பில் சொல்லப்படும் புது விஷயமானது நாம் காப்புரிமைக்கு விண்ணப்பித்த நாளுக்கு முன்னதாக இந்தியாவிலோ அல்லது வேறொங்கிலுமோ வெளியிடப்பட்டு இருக்கக்கூடாது.
(ii)      கண்டுபிடிப்பின் புது நுட்பம் : கண்டுபிடிப்பின் புது நுட்பமானது, குறிப்பிட்ட அந்த தொழில்துறையில் இருப்பவரால் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்
(iii)      தொழில்துறை பயன்பாடு : புது கண்டுபிடிப்பானது தொழில்துறையில் பயன்படும் படி இருக்க வேண்டும்.

எவையெல்லாம் காப்புரிமை பெற முடியாதவை?
(i)       நன்கு அறியப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள்
(ii)       பொதுமக்களின் உணர்வை காயப்படுத்தும், மற்றும் மக்கள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்
(iii)      இயற்கையிலேயே இருந்த, ஆனால் மற்றவர்கள் அறியாமல் இருந்த அறிவியல் கொள்கைகளை கண்டுபிடித்தல் (Discovery)
(iv)      ஏற்கனவே இருக்கும் ஒரு சாதனத்துக்கு/பொருளுக்கு புதிய உபயோகத்தை கண்டுபிடித்தல்.
(v)       சில பொருட்களை கலந்து, ஒரு புதிய பொருளை உருவாக்கினாலும், அந்த பொருளின் பண்புகள், அதில் உள்ள பொருட்களின் பண்புகளின் சேர்க்கையாக இருப்பது.
(vi)      ஏற்கனவே இருக்கும் சாதனங்களை இணைத்தோ, வரிசைப்படுத்தியோ புதிய சாதனம் உருவாக்குவது.
(vii)     விவசாயம் அல்லது தோட்டக்கலையில் புதுமுறையை உருவாக்குவது
(viii)     மருத்துவத்தில் புது முறையை கண்டுபிடிப்பது
(ix)      நுண்ணுயிரிகளைத் தவிர ஏற்கனவே இருக்கும் விதை அல்லது இனங்களைக் கொண்டு புது தாவரம் மற்றும் விலங்குகளை உருவாக்குவது.
(x)       புதிய வியாபார முறை அல்லது கணினி நிரல் (computer programme)
(xi)      இலக்கியம், நாடகம், இசை, ஓவியம் மற்றும் அழகுணர்வுடன் கூடிய கலை உருவாக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிப்பதிவுகள்.
(xii)     ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது விதியை உருவாக்கி விளையாட்டுகள் விளையாடுவது.
(xiii)     தகவல்களை தெளிவாக தெரிவித்தல்
(xiv)     வழிவழியாக வந்த அறிவை மேம்படுத்தி சாதனங்கள்/தொழில்நுட்ப முறைகள் உருவாக்கல்
(xv)     அணுசக்தி சம்பந்தமான மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்.
(xvi)     உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால் உருவாக்கும் முறைகளுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு மருந்து பொருளுக்கு காப்புரிமை கொடுக்கப்பட மாட்டாது, ஆனால் அந்த மருந்து தயாரிக்கும் முறைக்கு காப்புரிமை கொடுக்கப்படும். 

காப்புரிமை பெற்றவர்களின் உரிமைகள்
ஒரு சாதனத்துக்கான காப்பீடை ஒருவர் பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்தப் பொருளை தயாரிக்கக் கூடாது.
ஒரு தொழில்நுட்ப முறைக்கான காப்பீடை பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்த முறையில் பொருளை தயாரிக்கக் கூடாது.
காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் படிவங்கள்
(i)       விண்ணப்பம் (நகலுடன்)
(ii)      கண்டுபிடிப்பு பற்றிய தற்போதைய மற்றும் முழுமையான விபரம்
(iii)      தேவையான வரைபடங்கள்
(iv)      கண்டுபிடிப்பு பற்றிய சுருக்கமான குறிப்பு (Abstract)
(v)       விண்ணப்பிக்கும் நாள் மற்றும் வெளிநாடுகளில் இந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை
(vi)      முன்னுரிமை படிவம்
(vii)     தேவையான கட்டணம்

கண்டுபிடிப்பு பற்றிய முழுமையான விபரத்தில் இடம் பெற வேண்டியவை :

(i)       கண்டுபிடிப்பின் தலைப்பு
(ii)      கண்டுபிடிப்பின் துறை
(iii)      முந்தைய கண்டுபிடிப்புகளின் குறைபாடுகள்
(iv)      கண்டுபிடிப்பின் நோக்கம்
(v)       கண்டுபிடிப்பு பற்றிய சொற்குறிப்பு
(vi)      கண்டுபிடிப்பு பற்றிய முழுகுறிப்பு
(vii)     இணைக்கப்பட்டுள்ள வரைபடம் பற்றிய சிறு குறிப்பு
(viii)    உதாரணங்களுடன் கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம்
(ix)      நாம் உரிமை கோரும் விஷயங்கள்
(x)       சுருக்கக் குறிப்பு (abstract)

கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம் (Description)
கண்டுபிடிப்பு பற்றிய விளக்கமானது (Description) நல்ல ஆங்கிலம் அல்லது இந்தியில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட கண்டுபிடுப்பு சிறப்பாக செயல்பட என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவை மற்றும் எந்தெந்த சிறப்புகளை (Features) நாம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நீக்கிவிடலாம் (Choice) என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களால், இந்த கண்டுபிடிப்பை செயல்படுத்தும்படி தெளிவான விபரங்கள் இந்த விளக்கத்தில் (Description) கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. மேலும் இந்த கண்டுபிடிப்பு சிறப்பாக செயல்பட என்னென்ன தேவை?, எவற்றிற்கெல்லாம் இந்தக் கண்டுபிடிப்பை உபயோகிக்கலாம்? எப்படி உபயோகித்தால் சிறப்பாக செயல்படும் போன்ற விபரங்களும் இருக்க வேண்டும். உயிரியல் சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால், எதன் மூலம் (Source) அல்லது, எவ்விடத்தில் இருந்து (Geographical location) உயிரியல் பொருட்கள் கிடைத்தன என்பது பற்றிய விபரம் இருக்கவேண்டும்.

உரிமை கோரும் விஷயங்கள் (Claim)
நம்முடைய கண்டுபிடிப்பில் எவற்றையெல்லாம் நம்முடையது என உரிமை கோருகிறோம் (Claim) என்பதை நாம் தெளிவாக வரையறுத்து விண்ணப்பிக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்பிற்கும் குறைந்தது ஒன்றுமுதல் பல உரிமைகளை நாம் கோரலாம். முதல் உரிமையானது (first claim) முக்கிய உரிமை (Main claim) எனப்படும். அடுத்தடுத்த உரிமைகளானவை (subsidiary claims) முதல் உரிமையை தொடர்பு படுத்தி, என்னென்ன சிறப்புகளை சேர்க்கலாம் (optional features) என்பது பற்றி இருக்கலாம். அல்லது தனிப்பட்டும் உரிமை கோரலாம். எத்தனை உரிமைகள் கோரப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு கண்டுபிடிப்பைச் சார்ந்தே விண்ணப்பிக்கப் படவேண்டும். முக்கியமாக இந்த உரிமையானது, சட்டபூர்வமாக, எந்த அம்சம் நம்முடைய கண்டுபிடிப்பில் பாதுக்காக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் பொருளாதாரப் பயன்கள் அனைத்தும் நமக்கே கிட்டுமாறு தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் (Statement)

சுருக்கக் குறிப்பு (Abstatract)
நம்முடைய கண்டுபிடிப்பைப் பற்றிய சுருக்கக் குறிப்பானது (Abstratct) நம் கண்டுபிடிப்பின் பெயருடன் (Title) 150 வார்த்தைகளுக்குள் நம்முடைய கண்டுபிடிப்பைப் பற்றி தெளிவாக கூறுமாறு இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையை இது அணுகி இருக்கிறது, அதற்கான தீர்வை எப்படிச் சொல்லி இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.  மேலும் இதில் என்ன தொழில்நுட்பம் புதிதாக இருக்கிறது, இதன் உபயோகம் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இயந்திரவியல் சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால் வரைபடங்களையும் இணைக்கலாம். வேதியியல் சம்பந்தமான கண்டுபிடிப்புகளுக்கு வேதியியல் சமன்பாடுகளையும் இணைக்கலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்கள் நம் கண்டுபிடிப்பு முழுவதையும் அறிந்து அவர்கள் உபயோகிக்கா வண்ணம் நாம் கொடுக்க வேண்டும்.

வரைபடங்கள் (Drawings)

நம்முடைய கண்டுபிடிப்பை விளக்க நாம் சமர்ப்பிக்கும் வரைபடமானது (Drawing) A4 தாளில் தெளிவாக நகலுடன் இருக்க வேண்டும். A4 தாளின் இடப்பக்கமும், மேற்புறமும் நான்கு செண்டி மீட்டர் (4 cm) இடமும், வலப்பக்கமும் கீழ்ப்புறமும் மூன்று செண்டி மீட்டர் (3 cm) விடப்பட்டிருக்க வேண்டும். படமானது எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மேலிருந்து கீழாக வரையப்பட்டிருக்க வேண்டும். போதுமான அளவில் பெரிதுபடுத்தப்பட்டோ அல்லது சுருக்கப்பட்டோ (Appropriate Scale) படம் வரையப் பட்டிருக்க வேண்டும். தாளின் இடது மேல்மூலையில் விண்ணப்பிப்பவரின் பெயரும், விண்ணப்ப எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எத்தனை பக்கங்கள் மற்றும் பக்க எண்ணும் வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தாளின் வலது கீழ் மூலையில் விண்ணப்பிப்பவரின் கையொப்பமும், பெயரும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விளக்கக்குறிப்பில் (Description) எவ்வாறு இந்த பாகம் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதோ அதே போல (Reference) அந்த குறிப்பிட்ட எண் வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். வரைபடத்தில் விளக்கமாக நம் கண்டுபிடிப்பைப் பற்றி எதுவும் எழுதி இருக்கக்கூடாது. ஆனால் வேதி சமன்பாடுகள் (Chemical Equations), படி நிலை வரைபடம் (Flow chart) ஆகியவை குறிப்பிடப் பட்டிருக்கலாம்.

August 23, 2014

புகழ் தின்னி

கட்டப்படும் போது நகரின் எல்லையில் இருந்து, நகர் வளர்ந்தவுடன், தற்போது மத்தியில் அமைந்திருக்கும்  ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி அது. ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர் சேர்க்கை. முதலிரண்டுக்கும் நுழைவுத் தேர்வு, பதினொன்றுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண். நுழைவுத்தேர்வுக்காக தனியார் நடத்தும் கோச்சிங் கிளாஸ்களில் சேரவே தனிப்பயிற்சி தேவைப்படும் அளவுக்கு பிரபலமான பள்ளியாக 25 ஆண்டுகளில் அது வளர்ந்து விட்டிருந்தது.

பள்ளியின் பிரதான நுழைவாயிலைக் கடந்த உடன் நிர்வாகக் கட்டிடம். அதில் பத்துக்கு ஆறு என்ற அளவில் ஒரு கரும்பலகை. ஆறில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவனின் பெயர் அதில் எழுதப்படும். பள்ளிக்குள் நுழையும் எவர் கண்ணிலிருந்தும் தப்பி விடாதபடி அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ராஜேஷ் ஆறாம் வகுப்பு அட்மிசனுக்காக பள்ளிக்குள் நுழைந்த போது, அவனைக் கவர்ந்தது அந்தப் பலகைதான். அதில் ஒருமுறையாவது தன் பெயர் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டான். பர்ஸ்ட் மிட் டெர்ம் டெஸ்டிலேயே ஆறு செக்சன் மாணவர்களிடையே முதல் மதிப்பெண் வாங்கி அவனுடைய பெயர் அந்த போர்டில் ஏறியது. மற்ற ஆண்டு மாணவர்களின் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்க, ராஜேஷின் பெயர் மட்டும் காலாண்டு,அரையாண்டு உள்ளிட்ட எல்லாத் தேர்வுகளிலும் மாறிலியானது. ஒன்பதாம் வகுப்பிற்கு ராஜேஷ் வந்தபோது, புது திறமை சாலிகள் எல்லாம் சேர்ந்து 10 செக்‌ஷன்கள். அதிலும் ராஜேஷே போர்டுக்கு வந்தான். பத்தாம் வகுப்பில் கல்வி மாவட்டத்தில் முதலிடம்.

பதினொன்றாம் வகுப்புகள் முதன் முதலாக ஆரம்பிக்கும் போது, தலைமை ஆசிரியர் நிகழ்த்திய சம்பிரதாய உரையின் போது, மருத்துவப் படிப்பின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, நம் பள்ளி மானவர்கள், மருத்துவக் கல்லூரியில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1லேயே கற்பிக்கும் போக்கு இல்லாத காலகட்டம் அது. சில இடங்களில் அப்படி நடைபெறுவதாய் செய்திகள் கசிந்தாலும், நம் பள்ளி அப்படி இருக்கக் கூடாது என நிர்வாகம் உறுதியாய் இருந்தது. அப்போதெல்லாம் பதினொன்றாம் வகுப்பை, வெளிநாட்டிற்கு கிரிக்கெட் ஆடச்செல்லும் அணிகள், அங்குள்ள உள்ளூர் அணிகளோடு மோதுவது போலவே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அதிலும் ராஜேஷ் குறைவைக்கவில்லை. காலை நாலரை மணிக்கு எழுந்தரிப்பவன், குறைந்தது இரண்டு மணி நேரமாவது படித்து விட்டு, மேத்ஸ் டியூசன் போவான். மாலை பள்ளி முடிந்ததும் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி டியூசன். டியூசன் முடிந்ததும் இரவு பத்தரை வரை இடைவிடாமல் படிப்பு. பயாலஜி அவனுக்கு தலைகீழ் பாடமானதால் அதற்கு மட்டும் டியூசன் இல்லை. ”பிடிச்சா ஸ்டெத் இல்லாட்டி டெத்” என்று பஞ்ச் டயலாக் மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி டாக்டராக வேண்டுமென்பது அவனது ஒவ்வொரு செல்லிலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. குளிக்கும் போதும் சாப்பிடும் போதும் கூட படித்த பாடத்தை அசை போட்டபடியேதான் இருப்பான். இவ்வளவு ஏன் அந்த ஆண்டு நடந்த அவனது அக்கா கல்யாணத்தில் கூட அமைதியாக உட்கார்ந்து பத்திரிக்கை கவர்களில் பார்முலாக்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனால் அவனுக்கும் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவனுக்கும் இடையேயான இடைவெளி முன் எப்பொழுதையும் விட இப்போது கூடியது.

அவனுடைய வீட்டில் அவனை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அவனுடைய தந்தை ஒரு அரசு ஊழியர். அந்த சமயம் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவனது அம்மா அவனை அவசரத்துக்கு ஒரு அனாசின் வாங்கக்கூட அனுப்பியதில்லை. ராஜேஸம்மாவை கொண்டு போக எமன் வந்தாக்கூட, கொஞ்சம் பொறுப்பா, பையன் பரிட்சை முடியட்டும்னு ஜாமீன் வாங்கிடும் என தெருவில் பேசிக் கொள்வார்கள். பிளஸ் டூ காலாண்டுத்தேர்வு வரை ராஜேஷை யாரும் நெருங்கமுடியவில்லை.

அந்த பள்ளியின் ஏ ஹெச் எம் அழகு வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். பிளஸ் டூ லேசுப்பட்டதில்லடா. டென்த்ல கணக்குல நூறும்பான், ஆனா இங்க ஆறும்பான். சில பக்கிக பிளஸ் ஒன் வரைக்கும் மந்தமா இருக்குங்க. பிளஸ் டூவில சண்டமாருதம் பண்ணிடுங்க. வயசு மாறுதில்ல என்பார். அப்படி சண்டமாருதமாய் மாறியவன் சிவகுமார். மட்டமான கேரளா பென்சிலைக் கொடுத்தாலும் அதில் ஐந்தாறு திக்னெஸ்களில் கோடு இழுக்கக் கூடியவன். டைம்ஸ் நியூ ரோமன் 12 என்று செலக்ட் செய்தால் எப்படி டாக்குமெண்ட் பூராவும் ஒரே மாதிரி மாறுகிறதோ, அதே போல ஒரே அச்சாக எழுதத் தெரிந்த வித்தைக்காரன். தலைப்புக்கு ஒரு ஃபாண்ட், உப தலைப்புக்கு ஒரு ஃபாண்ட் என பேப்பர் முழுவதும் சீராக மெயிண்டைன் செய்யக் கூடியவன். ஆறாம் வகுப்பிலிருந்தே இங்கு படித்தவன். எப்போழுதும் ஐந்து ரேங்குக்குள் வருபவன்.

பிளஸ் 2 அரையாண்டு பேப்பர்கள் கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் சிவகுமார், ராஜேஷைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாய்ப் பெற்று போர்டில் இடம் பிடித்தான். ராஜேஷால் மட்டுமல்ல மொத்த பிளஸ் 2 மாணவர்களாலும் அதை முதலில் நம்பவே முடியவில்லை. அவனுடைய பேப்பர்களை வாங்கிப் பார்த்தான். டோட்டல்களை வெறியுடன் மீண்டும் மீண்டும் சரிபார்த்தான். மற்ற எல்லாவற்றிலும் இருவரும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள். கணிதத்தில் சிவகுமார் முந்திவிட்டான். பள்ளியில் நுழையும் போதெல்லாம் அந்த போர்டை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் ராஜேஷ். கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இடைவிடாமல் பிடித்து வைத்திருந்த இடம்.

அவனுக்கு அந்த போர்டில் மீண்டும் இடம் பிடிக்க ஒரே வாய்ப்புதான் இருந்தது. பிளஸ் 2 விற்கு பர்ஸ்ட் ரிவிசன் டெஸ்ட். மற்ற வகுப்புகளுக்கு தேர்ட் மிட் டெர்ம். அதனுடன் அந்த ஆண்டு ரோல் ஆஃப் ஹானர் முடிந்துவிடும். கணிதத்தில் எப்படியாவது முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும். போர்டில் மீண்டும் வந்துவிடலாம் என ராஜேஷ் எண்ணினான். கணிதத்தில் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தான். தேர்வுக்கு முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து சிவந்த கண்களோடு தேர்வுக்கு வந்தான். முதல் கணக்கில், இண்டெகிரேசனில் மைனஸ் எக்ஸ்ஸை தவறாக பிளஸ் எக்ஸ் என வாசித்து செய்தான். ஆன்சர் வரவில்லை. பதட்டமானான். மீண்டும் மீண்டும் முயற்சித்து நேரத்தை வீணாக்கினான். கொஞ்சம் புத்தி வந்து, மற்ற கணக்குகளுக்குப் போனான். ஆனான் அவனின் ஆழ்மனதில் போர்டில் பேர் வராதே பேர் வராதே என்ற குரல் கேட்க கேட்க எந்த கணக்குக்கும் விடை வரவில்லை.

அந்த பேப்பரை வகுப்பில் கொடுக்கும் போது, யாருமே நம்பவில்லை. ராஜேஷ் பெயிலா என்ற ஆச்சரியம் பள்ளி முழுவதும் பரவியது. ”அழகு வாத்தியார் அவனை கவுன்சிலிங் செய்தார். மூணு நாலு லட்சம் பேர் தமிழ்நாடு பூராம் எழுதுறாண்டா. அதுல முன்னூறுக்குள்ள வந்திட்டாலே உனக்கு மெடிக்கல் சீட் நிச்சயம். நீ அசால்டா அப்படி வந்துடுவ. இங்க ரேங்க் வாங்குறது ஒரு விஷயமே இல்லை. இதத் தாண்டி உலகத்தில சாதிக்க எவ்வளவோ இருக்கு. எதைப் பத்தியும் கவலைப் படாம படி. ஸ்கூல்க்கு கூட வரவேண்டாம். எக்ஸாமுக்கு மட்டும் வா. என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு நாள் பள்ளிக்குள் நுழையும் போதும், நிமிர்ந்து அந்த போர்டை வெறித்துப் பார்ப்பான். பின் தலையை குனிந்தபடி வகுப்பிற்குச் சென்றுவிடுவான்.

தேர்வு முடிவுகள் வெளியானது. மெடிக்கலுக்கு வாய்ப்பில்லை. இஞ்சினியரிங் வாய்ப்பு இருந்தது. நான் கீழிறங்க விரும்பவில்லை. ஐ ஏ எஸ் ஆகி  யாரென்று காட்ட விரும்புகிறேன் என பெற்றோரிடம் சொல்லி விட்டான். இதுவரை எதுவும் வாய்விட்டு கேட்காத மகன், எந்த சொல்லையும் தட்டாத மகன், போட்ட எந்த சாப்பாட்டையும் புன்னகையோடு சாப்பிட்ட மகனின் சொல்லைத் தட்ட அவர்களால் முடியவில்லை.

அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ பொலிடிக்கல் சயின்ஸ் சேர்ந்தான். முதல் பருவத்தில் வைக்கப்பட்ட எல்லாத் தேர்வுகளிலும் அட்டகாசமான மதிப்பெண்கள். ஆனால் இரண்டாம் பருவத்திலேயே கீழிறங்கினான்.

உண்மையில் ராஜேஷுக்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கிளறியது அவன் மீது விழுந்த பெருமித, ஆச்சரிய, பாராட்டிய, பொறாமை கொண்ட பார்வைகள் தான். அந்தப் பார்வைகள் படப்பட அவனுடைய சக்தி வளர்ந்து கொண்டே போனது. சாதகப் பறவைக்கு இசை, சக்கரவாகத்திற்கு மழை, ராஜேஷுக்கு புகழ், புகழ்ப்பார்வை. வீட்டில், தெருவில், பள்ளியில், டியூசனில் அவன் மீது விழுந்த புகழ்ப்பார்வைகளை உண்டு வளர்ந்தவன் அவன். எப்பொழுது அந்தப் பார்வைகள் இரக்க, பச்சாதாப, கேலிப் பார்வைகளாக மாறியதோ அப்போதே அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.

அவனுடைய கல்லூரி வகுப்பு எந்த நாளிலும் நிறைந்திருந்ததில்லை. சிலர் விளையாட்டுப் போட்டிகளுக்கு, சிலர் கல்சுரல்ஸ்களுக்கு, சிலர் சினிமாக்களுக்கு என அறுபது சதவிகிதம் பேர் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முதல் பருவத் தேர்வு முடிவு வெளியானவுடன் தன் மீது மீண்டும் புகழ்ப் பார்வை படியும் என எதிர்பார்த்தவனுக்கு, யாரும் அதைப் பொருட்படுத்த வில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது. இண்டர் காலேஜ் வோக்கல் சோலோ பர்ஸ்ட் பிரைஸ்க்கு இருந்த புகழ்ப்பார்வையில் ஒரு சதவிகதம் கூட எல்லா சப்ஜெக்ட்களிலும் எஸ் கிரேட் எடுத்த ராஜேசுக்கு கிட்டவில்லை.

புகழைத் தின்னாத ராஜேஸ் வெகு சாதாரணன் ஆகிப் போனான். ஒரு வழியாக டிகிரியை முடித்தவனை அவனுடைய தந்தை வற்புறுத்தி குடிமைப் பணிகளுக்கான ஒரு கோச்சிங் செண்டரில் சேர்த்து விட்டார். இரண்டு மணி நேர கிளாஸ் போக மீத நேரம் வீட்டில் படிக்க ஆரம்பித்தான் ராஜேஸ். வகுப்பிலும், யாரையும் சுட்டாமல் பாடம் எடுப்பார்கள். தேர்வு பேப்பர்களையும் மூன்றாம் நபர் அறியாமல்தான் கொடுப்பார்கள். உண்மையில் ராஜேஷின் காலிபருக்கு அந்த தேர்வுகள் எல்லாம் சாதாரணம். ஆனால் வீட்டில் அவன் படிக்கும் போது, பெற்றோரின் பச்சாதாப பார்வை, தெருவில் கிடைத்த கிண்டல், கேலி பார்வைகள் அவனுடைய கீழே இறக்கவே செய்தன.

கடைசியில் அவனுடைய தந்தையின் சிபாரிசில் சில இடங்களுக்கு வேலைக்குப் போனான். அவன் வளர்த்திருந்த திறமைக்கும், அவர்கள் புகழ்ப்பார்வை பார்க்க நினைத்தால் தேவைப்படும் திறமைக்கு ஒரு பெரிய இடைவெளி இருந்தது. பத்தோடு பதினொன்றாகவே பணி புரிந்தான்.
விடுமுறை நாட்களில் தான் படித்த பள்ளிக்கு வெளியே நின்று, அந்த போர்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருமுறை பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளே புகுந்து சாக்பீஸால் அந்த போர்டில் தன் பெயரை எல்லா வகுப்புக்கும் நேராக எழுத ஆரம்பித்தான்.


இப்போது அந்த பள்ளிக்குச் சென்றால் நீங்கள் கவனிக்கலாம். போர்டு இருந்த இடத்தில் புத்தனின் பொன்மொழி ஒன்று இருப்பதை.

July 28, 2014

கிரிக்கெட்டும் கல்லூரிப் படிப்பும்


கல்லூரிப் படிப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேசிங் செய்வதைப் போல.

எப்படி பவுலிங்& பீல்டிங் நன்றாக இருந்தால் நாம் சேஸ் செய்யவேண்டிய ரன் குறையுமோ அதுபோல கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைக் கவனித்தால்  நாம் படிக்க வேண்டிய நேரமும் வெகுவாகக் குறையும்.

லைன் அண்ட் லெங்த் – தினமும் கல்லூரிக்கு ஒழுங்கான நேரத்தில், தேவையான புத்தகங்கள், நோட்டு, கருவிகளுடன் செல்வது. எப்படி லைன் அண்ட் லெங்த்தில் பௌலிங் போட்டால் பேட்ஸ்மென்னால் அதிக ரன் அடிக்க முடியாதோ? அதேபோல் நாம் ஒழுங்காகச் சென்றுவிட்டால் நம்மால் படிக்க முடியாத அளவுக்கு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியாது.

நோ பால் – கல்லூரிக்குச் செல்லாமல் லீவு போடுவது. ஒரு ரன்னும் கொடுத்து, இன்னொரு பாலும் கொடுப்பதால் நாம் அதிக நேரம் படிக்கும் அளவுக்கு பாடம் குவிந்துவிடும்.

வைடு – கல்லூரி உள்ளே வந்துவிட்டு வகுப்புக்குச் செல்லாமல், கேண்டீன் செல்வது, மதியம் கட் அடித்து விட்டு சினிமா செல்வது. இதனாலும் நாம் படிக்க வேண்டிய நேரம் கூடும்.

பைஸ் – கிளாஸில் உட்கார்ந்து கொண்டு சுத்தமாக கவனிக்காமல் கற்பனையில் மிதப்பது.

கேட்ச் மிஸ் – எப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு காட்ச்சை விட்டால் அவர் வீறு கொண்டு எழுந்து அதிக ரன்னை குவிப்பாரோ அதுபோல, சில ப்ராப்ளமாட்டிக் சப்ஜெக்ட்களின் அடிப்படைகளை சொல்லித்தரும் போது, கவனிக்காமல் விட்டுவிட்டால் படித்துப் புரியவேண்டியது மலை போல குவிந்துவிடும்.

ரன் அவுட்/ஸ்டம்பிங் – சரியான நேரத்தில் பந்தை எறிந்து அவுட்டாக்குவது போல அசைன்மெண்டுகள்/செமினார்களை குறித்த நேரத்தில் முடித்துவிடவேண்டும்.

கிரவுண்ட் பீல்டிங் – இது சிறப்பாக இருந்தால் எப்படி நம்மால் 30-40 ரன்களை எதிரணியின் ஸ்கோரில் இருந்து குறைத்து விட முடியுமோ, அது போல கிளாஸில் ஆக்டிவ்வாக கவனித்துக் கொண்டேயிருந்தால் நாம் மாலையில் வீட்டில் படிக்க வேண்டியது மிகக் குறைந்து விடும்.

நாம் படிக்கும் போது (நம்ம பேட்டிங்)

ரன்ரேட் - கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பே கூடாது. கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் டீம் கொலாப்ஸ் ஆவதைப் போல காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் வந்தால் நாம் காலி. எனவே சீராக ரன்ரேட் மெயிண்டெயின் செய்வதைப் போல தினமும் படிக்க வேண்டும்.

ஸ்ட்ரைக் பவுலர்கள் – எல்லா டீம்களிலும் ஸ்ட்ரைக் பவுலர்கள் இருப்பது போல எல்லா செமெஸ்டரிலும் சில கில்லர் சப்ஜெக்ட்கள் இருக்கும். அதைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

ஆவரேஜ் பவுலர்கள் – இவர்கள் ஓவரில்தான் நாம் ரன்களைக் குவிக்க முடியும், அதுபோல இவற்றை நன்கு படித்து சிஜிபிஏ வை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

பார்ட் டைம் பவுலர்கள் – இவர்கள் வீச்சில் ஒரு பந்தையும் வீணாக்கக் கூடாது. இது பிராக்டிக்கலை போன்றது. எஸ் கிரேடுக்கு குறைந்து விடக் கூடாது.

கேட்ச் – நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத பாலை தூக்கி அடித்து அவுட்டாவது போல, எதிர் பாலிடம் மயங்கி படிக்காமல் விட்டு விடுவது.

ரன் அவுட் – தேவையில்லாத ரன்னுக்கு ஓடுகிறேன் பேர்வழி, என்று அவுட்டாவதைப் போல, சக மாணவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படிக்கும் நேரம் குறைந்து போவது.

ஹிட் விக்கெட் – தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து காலை எக்ஸாம் ஹாலில் தூங்கி விழுந்து கோட்டை விடுவது.

மெய்டன் ஓவர் – தீபாவளி, பொங்கல், பூஜா ஹாலிடேஸ் என பல்க்காக லீவு வரும் போது படிக்காமல் விட்டு விடுவது. இதனால் நாம் படிக்க வேண்டிய ரன்ரேட் எகிறிவிடும்.

சிங்கிள்ஸ் – சேசிங்கில் முக்கியமே சிங்கிள்ஸ்தான். தினமும் குறைந்த அளவு நேரமாவது புத்தகத்தை திறப்பது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது போல இரண்டு மூன்று சம்ஜெக்ட்களை தொட்டுப் பார்த்து விடவேண்டும்.

பவுண்டரிகள் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து படிப்பது.

பவர்பிளே – தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ். விக்கெட் இருந்தால் தான் இதில் அதிரடியாக ஆடமுடியும். அதுபோல முன்னர் இருந்தே படித்து சப்ஜெக்ட்களின் அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் விரைவாக எல்லாவற்றையும் படித்து முடித்து விட முடியும்.


இன்னும் சில நாட்களில் கல்லூரிகளில் கால் பதிக்கப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 

May 14, 2014

சேட்டு கணக்கு

எந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம்? எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தமிழ்நாடே அல்லோலகல்லோலப்  பட்டுக்கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் நேனோ அளவுகூட கவலைப்படாத ஒரு கூட்டம் சென்னையில் இருக்கிறது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுடன் கல்லூரியில் தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லாவகையான மாநில/மொழி/மத/இன/ஜாதிப் பிரிவினர்கள் படித்திருப்பார்கள். ஆனால் மிக மிக அரிதாகவே வடசென்னைப் பகுதியில் (சேட்டு என்று பொதுவாக அழைக்கப்படும்) வசிக்கும் வட மாநிலத்தவர் (குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள்) படித்திருக்கக் கூடும்.

கலைக்கல்லூரிகளில் ஆங்காங்கே தென்படும் அவர்கள், பொறியியல் கல்லூரிகளில் அருகிவரும் இனமாகவும், மருத்துவ,சட்டக்கல்லூரிகளில் அழிந்துவிட்ட இனமாகவும் இருப்பார்கள்.

மிகப்பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் கூட தங்கள் பிள்ளைகளின் படிப்பில் காட்டும் அக்கறையை அவர்கள் காட்டாததேன்? 35 ரூபாய் கால்குலேட்டரை கையாளத்தெரிந்தால் போதும், காலத்துக்கும் அவனுக்கு கவலையில்லை. என அவர்களை எண்ண வைப்பது எது?

15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியபோது, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, ஒரு அங்குல தடிமன், ஒரு அடி விட்டமுடைய அலுமினிய வட்டுக்கள் சில தேவைப்பட்டன. அதை வாங்குவதற்காக பாரிமுனை சென்றிருந்தேன். அங்கே இந்த உலோக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவரே.

முதல் கடையில் நான் கேட்ட அளவுகளில் அலுமினியம் இல்லை. இரண்டாவது கடையில் விலை அதிகம் எனத் தோன்றியது. மூன்றாவது கடையில் நுழைந்த உடன் ஒன் இஞ்ச் திக் அலுமினியமா? என்று கடைக்காரர் கேட்டார். அறுந்து விழுந்த 22கேவிஏ மின்கம்பியை மிதித்த அதிர்ச்சி எனக்கு. அதற்குள் ஏரியா முழுவதும் இந்த தகவல் பரவியிருக்கிறது. வேறுவழியில்லாமல் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கினேன். அதை கட் செய்து கொடுத்த தொழிலாளரிடம் பேசிய போது அவர் சொன்னது.

“வேற யாரும் இந்தத் தொழில்ல இங்க நிக்க முடியாது. சார். ஒற்றுமையா இருந்து அவன நொடிக்க வச்சு விரட்டீருவாங்க”.

அதில் இருந்தே அவர்கள் மீது ஒரு வெறுப்பு எனக்கு. பெரும்பாலும் பாரிமுனைப் பகுதிக்கு செல்வதையே தவிர்த்து விடுவேன்.

அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணமான போதுதான் தெரிந்தது, நான் வாங்கும் சம்பளத்தின்படி, சென்னையைப் பொறுத்தவரையில் வறுமைக்கோட்டிற்கு ஒரு சென்டிமீட்டர் மேலே இருக்கும் குடும்பங்களில் என்னுடையதும் ஒன்று என்று.
குடும்பச்செலவுகள் பற்றி வேலை செய்யும் இடத்தில் புலம்பிய எனக்கு, கிடைத்த அறிவுரைகளில் ஒன்று, தி,நகரில் எந்தப் பொருளும் வாங்காதே, முக்கியமாக உடைகள். பாரிஸ்கார்னர், சௌகார் பேட்டை பகுதியில் வாங்கினால் ஓரளவு விலை மலிவாக கிடைக்கும் என்பது.

அதன்பின்னர் அப்பகுதிகளில் உடை மற்றும் பொருள்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டேன். ஒருமுறை நான் உடை வாங்கிக்கொண்டிருந்த போது, தி நகரில் உள்ள பிரபலமான கடைகளுக்கு அங்கிருந்துதான் சேலைகள் போகின்றன என்பதை அறிந்து கொண்டேன்.
அதைப்பற்றிக் கேட்டபோது, அவர் சாதாரணமாகச் சொன்னார், நாங்க சூரத்ல இருந்து நேரா வாங்கிடுவோம். எங்ககிட்ட 100 ரூபாய்க்கு வாங்கி, அவங்க 300 ரூபாய்க்கு விப்பாங்க என்றார்.

அந்தக்கணத்தில் தான் அவர்கள் வெற்றியின் ரகசியம் பிடிபட்டது.
அந்தக்கடையில் வாடிக்கையாளரைக் கவரும் எந்த அம்சமும் இல்லை. உட்கார ஸ்டூல் கூட இருக்காது. ஒரு டேபிள் பேன் மட்டும். அதுவும் கடை உரிமையாளருக்கு. அலங்கார செல்ஃப்கள் இல்லை. ஒரே ஒரு டுயூப்லைட். கட்டப்பை, பர்ஸ் என கிப்ட்கள் கிடையாது. கடையில் பணியாளர்களும் அதிகம் கிடையாது. அவர்களிடம் வாங்கும் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலையில் பொருளின் மதிப்பும், வியாபாரிகளுக்கான லாபமும் மட்டுமே இருக்கும்.

அதனால்தான் அவர்களால் அந்தத் தொழிலில் நிலைத்து நிற்கமுடிகிறது. கணக்கு மட்டும் பிள்ளைகளுக்கு தெரிந்தால் போதும், பின்னர் வியாபாரத்தில் ஈடுபடுத்தி விடலாம் என நினைக்கிறார்கள்.அதனால் பெரும்பாலும் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் மாநகராட்சி மற்றும் குறைவான கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளில்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நடுத்தர குடும்பங்களுக்கு பிள்ளைகளின் கல்விசார்ந்த செலவு என்பது வருமானத்தில் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை ஆகிறது. அது இவர்களுக்கு மிகக் குறைவு. மேலும் அவர்களின் உணவுப்பழக்கமானது கோதுமை, உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் இனிப்பு வகைகளுக்குள் அடங்கி விடுகிறது. உடை விஷயத்தில், அதுவும் ஆண்கள் உடை. மிகச் சிக்கனம். அழுக்கேறிய உடையுடனேயே பெரும்பாலும் இருக்கிறார்கள்.

ஞாயிறு மாலையில் ஈகா, மெலடி, ஜெயப்பிரதா தியேட்டர்களுக்கு அடிக்கும் கலரில் சட்டை அணிந்து, வெள்ளை ஷூ, மாணிக்சந்த் சகிதம் இந்திப்படம் பார்ப்பதுதான் இந்த ஏரியா பையன்களின் உச்சகட்ட பொழுது போக்காக இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் பரவாயில்லை. நகையில் செலவழிக்காவிட்டாலும், உடைக்கும் மேக்கப்புக்கும் கொஞ்சமாவது செலவழிக்கிறார்கள்.

சென்னை வாழ் வடநாட்டு பெண்களைக் காதலிக்கும் தமிழ்ப் பையன்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த சேட்டுப்பையன்களை காதலிக்கும் தமிழ்ப் பெண்களைக் கண்டதுண்டா? மிக மிக அரிது. ஏனென்றால் அவர்களிடம் பெண்களை வசீகரிக்கும் எந்த அம்சமும் இருக்காது. அவர்களால் பணத்தைத்தாண்டி எதையும் பெரிதாக சிந்திக்க இயலாது. பத்திரிக்கைகள், நாவல்கள் என எதையும் படிக்கமாட்டார்கள். அதனால் பெண்களைக் கவரும்படி அவர்களால் எதையும் பேசமுடியாது. கொஞ்சம் பெரிய கடைகளில் போர்டபிள் டிவி வைத்திருப்பார்கள். அதில் ஷேர் நிலவரம், பொருட்களின் விலை விபரம் தரும் சானல் மட்டுமே பார்க்கப்படும்.

அவர்களின் வியாபார சித்தாந்தம் எளிமையானது. அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எல்லாம் அதீத மார்க்கெட்டிங் தேவைப்படாத பொருட்களே. அத்தியாவசியமாக தேவைப்படும் உடைகள், வளையல், ஜிமிக்கி முதலான அழகுப்பொருட்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உலோகங்கள், ரசாயனங்கள் போன்றவைகளை மட்டுமே அவர்கள் பெரிதும் விற்பனை செய்கிறார்கள். தங்கள் சக வியாபாரிகளுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.
இவற்றை தயாரிப்போரில் இருந்து, விநியோகம் செய்பவர் வரை 80% வட மாநிலத்தவரே. எனவே பொருட்கள் எங்கிருக்கின்றன எப்படி கொண்டுவரவேண்டும் என்பது அத்துப்படி. விற்பனை செய்யும் இடத்தில் ஒவர் ஹெட் எக்ஸ்பெண்டிச்சர் எனப்படும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், செய்யப்படும் வசதிகள் ஆகியவற்றைக் குறைக்கிறார்கள்.
மேலும் குமாஸ்தா வேலை, கடைநிலை பணிகளுக்கு மட்டும் குறைவான சம்பளத்தில் ஆட்களை எடுக்கிறார்கள். அந்த பணியாளர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூட இடம் இருக்காது. இதனால் சென்னையிலேயே குறைவான விலைக்கு நல்ல லாபத்துடன் அவர்களால் பொருட்களை விற்க முடிகிறது.

இதனால் அவர்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி கவலைப்படுவதேயில்லை. ஒரு மருத்தவர்/தணிக்கையாளர் சம்பாதிப்பதைவிட எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் தந்தையின் கடைக்கு வந்துவிடும் தனயன் அதிகம் சம்பாதித்து விடுவான். பெண்களை மட்டும் கலைக்கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். (அதுவும் நன்கொடை வாங்காத கல்லூரிகள்).

சென்னையில் மட்டுமல்ல. கோவை மற்றும் மதுரையிலும் இதே போலத்தான் வியாபாரம் செய்கிறார்கள். வாழ்க்கையும் நடத்துகிறார்கள்.
சென்றமுறை நான் வழக்கமாக உடைகள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் வேலைபார்க்கும் தமிழர் ஒருவர் தன் மகனை உயர்கல்வி படிக்க வைப்பதற்காக சிரமப்படுகிறார். முட்டாள். என என்னிடம் கூறினார்.

அதற்கு நான், உங்களை மாதிரி அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிட்டு, சப்பாத்திய சாப்பிட்டிட்டு, பத்துக்கு இருபது கடையிலேயே காலம் கழிச்சு பெட்டி பெட்டியா பணம் பார்க்கணும்னு மட்டும் இந்த உலகத்துக்கு நாங்க வரவில்லையென்று சொல்லலாம் என்று நினைத்தேன்.


எப்படி சுற்றுப்புறசூழல் சமநிலை காக்கப்பட ஒவ்வொரு உயிரியும் தேவையோ, அதுபோல் பொருளாதார சமநிலை காக்கப்பட இம்மாதிரி ஆட்களும் அவசியம் என்பதாலும், இன்னும் தி,நகருக்குச் சென்று குளிரூட்டப்பட்ட வளாகத்தில் துணியெடுக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதாரம் வளராததாலும், வழக்கமான அசட்டுச்சிரிப்பை அவருக்கு பதிலாகத் தந்து திரும்பினேன்.