August 09, 2021

காதலுக்கு மரியாதை

இயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர் குஞ்சாகோ போபன், ஷாலினியை வைத்து அவர் எடுத்த அனியத்திப் பிறாவு படத்தை இங்கே இயக்க வந்தார். ஹீரோயின் ஷாலினி என பிக்ஸ் ஆகிக் கொண்டார். சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரையும் பிக்ஸ் செய்து விட்டார். நாயகனாய் நடிக்க அவருக்கு ஒரு இளமையான ஹீரோ தேவைப்பட்டர். சிலர் சூர்யாவை சொன்னதாகவும், ஆனால் சிவகுமார் அப்பா-மகனாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள். அடுத்து விஜய்யை புக் செய்ய போனார்கள். அப்போது விஜயின் கால்ஷீட் சங்கிலி முருகனிடம் இருந்தது. விஷ்ணு படம் பி & சி செண்டரில் நன்கு ஓடியதைப் பார்த்து அவர் விஜய்யின் கால்ஷீட்டை எஸ் ஏ சந்திரசேகரனிடம் இருந்து வாங்கியிருந்தார். சங்கிலி முருகன் தயாரிப்பு, பாசில் இயக்கம், விஜய்-ஷாலினி ஜோடியில் காதலுக்கு மரியாதை உருவாகத் தொடங்கியது. இசை பாசிலின் மனம் கவர்ந்த இளையராஜா. பாசில் என்றாலே பட்டாசாக பாடல்களைப் போட்டுக் கொடுப்பார் இளையராஜா. சங்கிலி முருகனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தமே உண்டு. சங்கிலி முருகனின் நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு ஸ்ட்ராங். சங்கிலி முருகனுக்கு எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என பல ஆல்பம் ஹிட்களை கொடுத்தவர். அவர் ஆர்மோனியப் பெட்டியை சும்மா திறந்தாலே இனிமையான பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. மனதிற்குப் பிடித்தவர்களுக்கு என ஆர்மோனியத்தை திறந்தால்? கேட்கவா வேண்டும். படம் விரைவாக ஷூட்டிங் முடிந்தது. படத்திற்குப் பிண்ணனி இசை அமைக்க உட்கார்ந்த இளையராஜாவிற்குப் பொறி தட்டியது. இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என. உடனே தன் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்து விநியோக உரிமை வாங்குங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னவர்களில் தாணுவும் ஒருவர். ஆனால் தாணுவோ, அவர் பார்ம்லாம் போயிருச்சு. இப்படித்தான் கற்பூர முல்லைக்குச் சொன்னார். படம் தேறவே இல்லையே என தயங்கினார். தாணு சொன்னதிலும் நியாயம் உண்டு. பாசிலுக்கு அப்போது தமிழில் கடைசி கமர்சியல் ஹிட் வருசம் 16 தான். அதன்பின் அவர் எடுத்த அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா என தொடர்ச்சியாக வசூல் ரீதியாக சுமாரான படங்கள் தான். இளையராஜாவும் அப்போது கமர்சியலாக தன் முதல் இடத்தை ரஹ்மானிடம் இழந்திருந்தார். ரஹ்மான் பெயர் இருந்தாலே விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டி படத்தை வாங்கிய நேரம். காதலுக்கு மரியாதையில் அன்றைக்கு மார்க்கெட் வேல்யூ விஜய்க்கு தான் இருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக விஜய்க்கு பெரிய வெற்றி. ஆனால் அதற்கடுத்து வசந்த வாசல். மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என சுமாரான படங்களைக் கொடுத்து சறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து லவ் டுடே படம் வெளிவந்து அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதற்கடுத்து சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர், வசந்தின் நேருக்கு நேர் படங்களின் கமர்சியல் வெற்றி, விஜய்க்கு ஒரு மார்க்கெட் வேல்யூவை கொடுத்திருந்தது. இந்த நேரத்தில் தான் படத்தை ப்ரிவியூ பார்த்தார் என் எஸ் சி ஏரியாக்களின் முக்கிய விநியோகஸ்தரான என் எஸ் சி ரவி என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தும் பரவலாக அறியப்பட்டவர். அவருக்கும் இந்தப் படம் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. அன்றைய தேதிக்கு படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்பார்கள். அதற்கு மேல் ஒரு தொகையை வைத்து சங்கிலி முருகனிடம் இருந்து தமிழ்நாடு ஏரியா முழுவதையும் வாங்கினார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். சங்கிலி முருகனும் படம் வெளிவரும் முன்னரே லாபம் வந்து விட்டதே என திருப்தியடைந்து விட்டார். படம் வெளியானது. விஜய்க்கான கூட்டம், பாசில் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு சிறு கூட்டம் படத்திற்கு வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல பீல்குட் படம், இனிமையான பாடல்கள், படம் முடிந்து வெளிவரும் போது மனசு லேசான உணர்வு. அவ்வளவு தான். முழுக்க முழுக்க வாய்மொழி விளம்பரத்தாலேயே படம் பற்றிக் கொண்டது. எப்படிப்பட்ட ஹிட் என்றால் நாகர்கோவில் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது, ஓரிரு மாதம் கழித்து வெளியான அருப்புக்கோட்டையிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கெல்லாம் ஐந்து மடங்கு வரை லாபம் என்றார்கள். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இனி நாமளும் படம் தயாரித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்தார். முதல் படமே விஜய்காந்த் – விக்ரமன் காம்போவில் வானத்தை போல, அடுத்தடுத்து பெரிய படங்கள் தான். ஷங்கரின் அந்நியன், கமல்ஹாசனின் தசாவதாரம் என. பாசிலுக்கு ஒரு ராசி உண்டு. அவர் படத்தின் மூலம் அறிமுகமாகும் / நடிக்கும் சில நடிகைகளுக்கு கிட்டத்தட்ட தேவதை ஸ்டேட்டஸ் கிடைத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் உள்ள வீடுகளுக்கும் சென்று சேர்ந்து விடுவார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஆர்க் அமைக்கக் கூடிய வல்லமை பாசிலுக்கு உண்டு. பூவே பூச்சுடவாவில் அவர் அறிமுகப்படுத்திய நதியா 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு ஸ்டேட்டஸோடுதான் இருக்கிறார். வருசம் 16 குஷ்பூ இத்தனை பொலிட்டிகல் ஸ்டேண்டுகளுக்கு அப்புறமும் ஒரு பெர்சனாலிட்டியாக முக்கிய படங்களில் நடிக்கிறார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு அப்படி ஒரு ஸ்டேட்டஸை கொடுத்தது. அவர்க்கு காதலுக்கு மரியாதையின் மூலம் கிடைத்த கிரேஸை அமர்க்களம் பட ஓப்பனிங் ஷோவில் கண்டு கொள்ள முடிந்தது. அமர்க்களம் படத்தில் முதல் காட்சியே ஷாலினியின் பாடல் தான். அதற்கு கிடைத்த கை தட்டல் வரவேற்பு ஹீரோக்களுக்கு இணையானது. காதலுக்கு மரியாதை, இளையராஜாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது எனலாம். திரையுலகமே ரஹ்மான் ரஹ்மான் என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த போது, என்னாலும் ஒரு கமர்சியல் ஹிட் படத்தைக் கொடுக்க முடியும் என காட்ட ஒரு வாய்ப்பாய் காதலுக்கு மரியாதை அமைந்தது. எக்கச்சக்க கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. விஜய்க்கு பூவே உனக்காக ஒரு மேக் ஓவர் கொடுத்தது என்றால் காதலுக்கு மரியாதை ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ஏராள பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள். பம்பாய் ரொட்டி சுக்கா ரொட்டி, தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்ட பரோட்டா என குத்துப் பாடல்களாய் பாடிக்கொண்டிருந்த விஜய்க்கு ஒ பேபி, ஓ பேபி என்ற பாடலை இளையராஜா பாடக் கொடுத்து இன்னும் விஜயை மெருகேற்றினார். பாசில் அதற்கடுத்து விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, ஸ்ரீகாந்தை வைத்து ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களை இயக்கினார். இரண்டும் சரியாகப் போகவில்லை. அதோடு இங்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யோசித்துப் பார்த்தால் தமிழில் பாசிலின் மிகப்பெரிய ஹிட் காதலுக்கு மரியாதை தான். வருசம் 16 கூட அதற்கடுத்து தான் வரும். காதலுக்கு மரியாதையின் வெற்றிக்கு படத்தின் கதை, இசை போன்ற அம்சங்கள் காரணமாய் இருந்தாலும் படத்தை தாங்கி நிற்க நல்ல இளமைத் துடிப்பான ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதை சிறப்பாக விஜய் செய்தார். அவருடைய கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது.

காதல் கோட்டை

1996 ஆம் ஆண்டு. ஜூலை மாதம்.எப்போதும் திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்கு மே முதல் ஜூலை வரை புது வரவு நிறைய இருக்கும். தமிழகம் முழுக்க கல்லூரி இறுதி ஆண்டு முடித்தவர்கள் சென்னைக்கு வேலை தேடி வந்து இந்த மாதங்களில் மேன்சனில் அடைக்கலம் புகுவார்கள். அந்நாட்களில் சனிக்கிழமை இரவுகள் மேன்சன் மொட்டை மாடிகள் களைகட்டும். சிகரெட், மதுபானம் என தங்கள் அலைவரிசைக்கு செட் ஆகிறவர்களுடன் இணைந்து ஜோதியில் ஐக்கியமாகி அரட்டை அடித்துக் கொண்டு கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்தவர்களும் தயக்கத்துடன் தங்களுக்கு ஏற்ற குரூப்பில் சேர்வார்கள். இல்லை புதுக் குழுக்களை உருவாக்குவார்கள். அந்த நேரத்தில் தான் எந்தப் படம் இப்போ செகண்ட் ஷோ போகலாம், நாளைக்கு என்ன படம் போகலாம் போன்ற பேச்சுக்களும் கிளம்பும். அந்த வார சனிக்கிழமை, கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் ஒரு படத்தின் பெயர்தான் அடிபட்டது. காதல் கோட்டை. படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்கடா, விகடன்ல கூட அட்டைப்படத்தில போட்டு அம்பது மார்க் கொடுத்த்கிருக்காங்க, வித்தியாசமான கதையாம் போலாமா என்று ஒருமித்த குரல்கள் கேட்டன. ஆசை, வான்மதில நடிச்சிருக்காப்லேல அந்த அஜீத் தான் ஹீரோவாம், இங்க தேவிகலால தான் போட்டிருக்கான். பொட்டி மாதிரி இருக்கும். டிக்கெட் கிடைக்குமான்னும் தெரியலை. அப்பிடியே ஒரே ரோடு, திருவான்மியூர் தியாகராஜாக்கு போயிடலாம் என்று ஒரு குரூப் கிளம்பியது. உடன் சென்றாயிற்று. தியேட்டர் நெருங்க நெருங்க திருவிழா கூட்டம். அவ்வளவு பைக்குகள். எல்லாம் 21-25 வயது வாலிபர்கள். இத்தனைக்கும் அது படம் வெளியாகி மூன்றாவது சனிக்கிழமை என நினைவு. அஜீத்தின் முதல் படமான அமராவதியையும் தியேட்டரில் பார்க்கவில்லை, அடுத்து அவர் சிறிய வேடங்களில் நடித்த பாசமலர்கள், பவித்ரா, விஜய்யுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படங்களையும் தியேட்டரில் பார்க்கவில்லை. ஆசை படம்தான் முதலில் தியேட்டரில் பார்த்த அஜீத் படம். மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம், பாடல்கள் ஹிட், எல்லாப் பக்கமும் நல்ல ரிவ்யூ வரவும் போய் பார்த்த படம். அதில் உடன் இருந்தது எல்லா வயதினரும் இருந்த கலவையான ஆடியன்ஸ். அடுத்து வந்த வான்மதி படம் மதுரை நாட்டியா திரையரங்கில் பார்த்தது. அதில் பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் என இரண்டு கேட்டகிரி மட்டும் இருந்தார்கள். பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா… லியோ கப்பாசா பாடலுக்கு செம ஆட்டம் போட்டார்கள். அடுத்தடுத்து ரெண்டு படம் இவருக்கு நல்லா போகுதே என நினைக்கும் போதே கல்லூரி வாசல் வந்தது. அதில் பிரசாந்த் ஹீரோ. அஜீத் இரண்டாம் நாயகன். படம் சொதப்பியது. அதைவிட மோசம் அடுத்து வந்த மைனர் மாப்பிள்ளை. இந்த நிலையில் தான் காதல் கோட்டை வந்திருந்தது. முழுக்க முழுக்க இளைஞர் கூட்டம். சரி. ஹீரோவா பார்ம் ஆயிட்டாப்ல என தோன்ற வைத்தது. எப்படியோ டிக்கெட் வாங்கி உள்ளே போயாகி விட்டது. முதல் அரை மணி நேரம் படம் எதுவும் ஈர்க்கவில்லை. அதே சமயம் நெளியவும் வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் நுழைந்து, பின் கடைசி அரை மணி நேரம் கை நகத்தையெல்லாம் கடித்து, உலக கோப்பை இறுதிப்போட்டி இந்தியா சேஸிங்கைப் பார்ப்பது போல பரபரத்து இறுதியில் சுபமாய் முடிந்தது படம். படம் முடிந்து வெளியே வரும் போது, செட்டில் சிலர் அடுத்த வாரம் திரும்ப வரலாமா எனக் கேட்டனர். நிச்சயமா என்பதே பதிலாய் இருந்தது. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். படம் வெள்ளி விழா கொண்டாடியது. இத்தனைக்கும் அந்த வருடம் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் வந்தன. விஜய்யின் பூவே உனக்காக, கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித் தா, கமல்ஹாசனின் இந்தியன் என முக்கிய நடிகர்களின் மைல்கல் படங்கள் எல்லாம் அப்போது வந்திருந்தன. காதல் கோட்டை வெளியான பின் வந்த தீபாவளிக்கும் அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை என ஹிட் படங்கள் வந்தன. அத்தனையையும் மீறி தொடர்ந்து எங்காவது ஓடிக்கொண்டே இருந்தது காதல் கோட்டை. காதல் கோட்டை ஏராளமானவர்களுக்கு ஒரு திருப்பு முனையைத் தந்த படம். அஜீத்திற்கு ஏராளமான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றுத்தந்து இனி அவர் ஒரு நட்சத்திரம். அவரை நம்பி படம் எடுக்கலாம் என்ற அந்தஸ்தை வாங்கித் தந்தது. அந்நாட்களில் சென்னையில் பார்த்தால் சாப்ட்வேர் இளைஞர்களுக்கு இணையாக ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், மேக்ஸ்வொர்த் ஆர்சார்ட்ஸ், ஆர் பி ஜி செல்போன் விற்பனை பிரதிநிதிகள், பேஜர் விற்பனை பிரதிநிதிகள், மற்றும் அனைத்து மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள், மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்கள் என ஏராளமான விற்பனைப் பிரதிநிதிகள் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காதல் கோட்டை அஜீத்தின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் அவர்களிடையே இன்ஸ்டண்ட் ஹிட். அஜீத் அணிந்து வரும் வெள்ளை முழுக்கை சட்டை, க்ரீம் கலர் பேண்ட், ஷூ என அவர்களுக்கும் எளிதாக செட் ஆனது. அஜீத்தும் அப்போது புரசைவாக்கம் போன்ற ஏரியாக்களில் ரெடிமேட் ட்ரஸ் ஷோ ரூம்கள் திறக்க அழைக்கப் பட்டார். யோசித்துப் பார்த்தால் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி மூன்று படங்களும் அஜீத்திற்கு கொடுத்த இளைஞர் படை இன்று வரை அவரைக் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.காதல் கோட்டைக்கு அடுத்தே அவர் பல சுமார் படங்களைக் கொடுத்தாலும் அஜீத் என்ற பிராண்ட் அடி வாங்காமல் காதல் கோட்டை சில ஆண்டுகள் அவரைக் காத்தது. அகத்தியன் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் சொன்ன போது, அவர் நான் உங்களோட மதுமதி படம் வாங்கி இருந்தேன். நல்ல லாபம். அது போல ஒரு கதை சொல்லுங்க எனக் கேட்டு வான்மதி படம் எடுத்தார். வான்மதி கமர்சியல் ஹிட் ஆகவும், துணிந்து காதல் கோட்டைக்கு ஒப்புக் கொண்டார். பலரும் ஒப்புக்கொள்ளத் தயங்கிய கதை, என்னய்யா பார்க்காமலேயே லவ்வா என நிராகரிக்கப்பட்ட கதை அது. வான்மதியின் வெற்றியே சரி பார்ப்போம் என சிவசக்தி பாண்டியனை ஒப்புக் கொள்ள வைத்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அகத்தியனுக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித்தரவில்லை, அடுத்தடுத்து பெரிய தயாரிப்பாளர்களை அவரை நோக்கி வரச் செய்தது. சிவசக்தி பாண்டியனை ஒரு நல்ல தயாரிப்பாளராக நிலை நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானுக்கும் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. இலக்கியவாதியான தங்கர் பச்சான், அஜீத் பத்திரிக்கை படிப்பது போல் வரும் காட்சியில் “காலச்சுவடு” புத்தகத்தைப் படிப்பது போல் அமைத்திருப்பார். பின்னர் இன்னொரு படத்தில் அவரது “ஒன்பது ரூபாய் நோட்டு” புத்தகம் இருக்கும். கதாநாயகி தேவயானிக்கும் காதல் கோட்டை தான் மிகப்பெரிய ப்ரேக். இன்று வரை கமலி கதாபாத்திரம் பேசப்படுகிறது. இதற்கடுத்து தொடர்ந்து நிறைய பெரிய படங்கள் கிடைத்து சில ஆண்டுகள் ராசியான கதாநாயகியாக வலம் வந்தார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் கூட இந்தப் படம் ஒரு திருப்பு முனை. ரங்கீலா ஊர்மிளா தெரியாம வயசுப்பையன் இருக்கலாமாடா என சமுதாய கிண்டலுடன் கூடிய அவர் கேரக்டர் ஹிட்டாக, அதன்பின் ஏராளமான படங்களில் அதே பாணியில் வலம் வந்தார். தலைவாசல் விஜய், கரண் ஆகியோருக்கும் காதல் கோட்டையின் வெற்றி பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இதையெல்லாம் விட காதல் கோட்டை படத்தின் வெற்றியை அளக்கும் இன்னொரு கருவி இருக்கிறது. பார்க்காமலேயே காதலுக்குப் பின் காதலுக்காக நாக்கை அறுப்பது உள்ளிட்ட ஏராளமான வித விதமான காதல் படங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இறங்கிக் கொண்டே இருந்தன, அவ்வளவு ஏன் படத்தலைப்பிலேயே அத்தனை காதல்கள். காத்திருந்த காதல், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுக்கு மரியாதை, காதல் பள்ளி என. காதல் கோட்டை படத்தை 1996ன் காலப் பதிவு என்று சொல்லலாம். எஸ் டி டி பூத்கள், அப்போது பிரபலமாயிருந்த இரண்டே கார்களான மாருதி 1000, சியல்லோ, லேசாக ஊடுருவ ஆரம்பித்த செல்லுலார் என காட்சிப்படுத்தப்பட்ட படம். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் இந்தப் படத்தைப் பார்த்தால் இது சாத்தியமா எனத் தோன்றும். நிறைய காட்சிகள் ரெலவண்ட் ஆக இல்லாதது போல் தோன்றும். ஆனால் படத்தின் ஆன்மா, இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிவடையும் காதல். அது இக்காலத்திலும் சாத்தியம் தான். சமூக வலைதளங்களில் ஒருவரின் கருத்துக்களால் மட்டும் ஈர்க்கப்பட்டு பார்க்காமலும் காதல் வந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னர் நேரில் பார்த்து சுபமாகவும் முடிகிறது.

அண்ணாமலை

90களில் ரஜினிகாந்தின் தளபதியும், மன்னனும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதும், தளபதிக்கு அடுத்து பெரிய ஆளு மன்னன், அப்போ மன்னனுக்கு அடுத்த படம் சக்கரவர்த்தியான்னு? எல்லோரும் கேட்ட போது, இல்லை அதுக்கும் மேல அப்படின்னு கடவுளின் பெயரை டைட்டிலாகக் கொண்டு வந்த படம் தான் அண்ணாமலை. பாலசந்தரின் மூலம் அறிமுகமானதால் ரஜினிக்கு அவரின் மீது பெரும் மதிப்பு. ஒரு கட்டத்தில் ரஜினி மிகப்பெரிய வியாபார அந்தஸ்துள்ள நடிகரான பின்னர் பாலசந்தர் அவரை இயக்குவதை நிறுத்தினார். பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் தில்லு முல்லு தான். அதற்குப்பின் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிற்கு அவ்வப்போது படங்கள் நடித்துக் கொடுப்பார் ரஜினிகாந்த். வேலைக்காரன், சிவா ஆகிய படங்களை 1980களில் அப்படி நடித்துக் கொடுத்தார். அதுபோல 1992ல் அறிவிக்கப்பட்ட படம் அண்ணாமலை. கே பாலசந்தரின் சிஷ்யரான வசந்த் இயக்கிய கேளடி கண்மணி பெரிய வெற்றி. ஆனால் அதன்பின் வந்த நீ பாதி நான் பாதி சரியாகப் போகவில்லை. ஆனாலும் அவரின் மீதான நம்பிக்கையால் பாலசந்தர், வசந்த் இயக்கத்தில் படத்தை தயாரிக்க நினைத்தார். இளையராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்போது பாலசந்தரின் படங்களுக்கு மரகதமணி இசை அமைத்து வந்தார். வைகாசி பொறந்தாச்சு பட வெற்றிக்குப் பின்னர் இசை அமைப்பாளர் தேவாவிற்கு நல்ல பெயர் ஏற்பட்டது. அவரை அண்ணாமலைக்கு அழைத்து வந்தார்கள். இந்நிலையில் வசந்த் தன் சுதந்திரம் குறித்து சந்தேகம் கொண்டு படத்தில் இருந்து விலக, பாலசந்தரின் மற்றொரு சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு இயக்குநரானார். அவர் ராகேஷ் ரோஷனின் குத்கர்ஸை தழுவி ரஜினிகாந்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்தார். 91ல் ஆட்சிக்கு வந்திருந்த அதிமுக அரசின் முதல்வர் ஜெயலலிதாவும்,ரஜினிகாந்தும் ஒரே ஏரியாவில் இருந்ததால் பாதுகாப்பு சோதனைகளுக்காக ரஜினியின் கார் செக்போஸ்டில் நிறுத்தப்பட, அதை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தின. மேலும் அப்போது சென்னை மாநகர சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஒரு சட்டமும் அமலுக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய சில பிரச்சினைகளால் ரஜினிக்கு ரெட் கார்ட் போடப்போவதாக விநியோகஸ்தர்களும் அப்போது சொல்லி வந்தார்கள். ஆனால் தளபதி, மன்னன் படங்களின் வெற்றி ரஜினி படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்த நிலையில் இந்தக்கால பர்ஸ்ட் லுக்,மோஷன் போஸ்டர்,டீசர் உத்திகளுக்கு முன்னோடியாக ஒரு விளம்பர யுக்தியை கவிதாலயா நிறுவனம் கையாண்டது. அதுதான் அப்போது தமிழக மக்கள் பார்ப்பதற்கு இருந்த ஒரே தொலைக்காட்சி சானலான தூர்தர்ஷனில் சிறு விளம்பரம் வெளியிடுவது. அதற்கு முன்னர் வாராவாரம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் தங்கள் புதுப்பட பாடல்களை பணம் கொடுத்து ஒளிபரப்பி விளம்பரம் தேடினார்கள் தயாரிப்பாளர்கள். கவிதாலயா நிறுவனம் எப்படி வானொலியில் விளம்பரம் போடுவார்களோ அது போல இங்கும் செய்யலாம் என ஒரு குறு விளம்பரத்தை தயாரித்தது. “வணக்கம், நான் தான் அண்ணாமலை” என ரஜினி நீதிமன்ற குற்றவாளி கூண்டில் இருந்து சொல்லும் சில வினாடி காட்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது (இந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று). இது மக்களிடையே பெரிய ஆர்வத்தைத் தூண்டியது. படம், பண்டிகை விசேசம் ஏதும் இல்லாத ஒரு ஜூன் மாத நாளில் வெளியானது. ரஜினி படம் வெளியாகும் நாளே விசேஷம் தானே?. முதல் காட்சி பார்த்தபோது, தளபதி, மன்னனோடு ஒப்பிட்டால் அவ்வளவு விசேஷமில்லையே என்று தோன்றியது. ஆனால் சில நாட்களிலேயே படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படும் படி இருந்தது. ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக வந்தார்கள். சொல்லப்போனால் இந்தப் படத்துக்குப் பின்னர் ரஜினி ரசிகர் வேறு, பொது மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தப் படம் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. ரஜினியின் வளர்ச்சி ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை, அதனால் இடையூறு செய்கிறார் என்ற செய்தி பத்திரிக்கைகள் மூலம் ரஜினி ரசிகர்களின் மனதில் அப்போது ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப்படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அதற்கேற்றார்போல சில வசனங்களும் படத்தில் வைத்திருந்தார்கள். பொதுமக்களுக்கோ, நம்மை ஏமாற்றியவர்களை நாம் நன்கு வாழ்ந்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல நம் எதிரிகள் உதவி கேட்டாலும் காலரைத் தூக்கிக்கொண்டு உதவவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கும். இதற்கு தீனி போட்டது போல் இந்தப்படம் அமைந்திருந்தது. அதற்கடுத்து வந்த எல்லா ரஜினி படங்களுமே ஏறக்குறைய இதே டெம்பிளேட்டில்தான் அமைந்தன. ரஜினிக்கு என்று இந்த ஏரியாவில் ஒரு தொகை வசூலாகும் என்ற கணக்கு இருக்குமே, அந்தக் கணக்கை உடைத்து புதுக்கணக்கு எழுத வைத்தது அண்ணாமலை. எந்த விநியோகஸ்தரும் எதிர்பார்க்காத லாபத்தை தந்தது. அண்ணாமலைக்குப் பின் ரஜினி இந்த 29 வருடங்களில் நாயகனாக 20 படங்கள் தான் நடித்திருப்பார். ஆனால் ரஜினி அறிமுகமானதில் இருந்து அண்ணாமலை வரை இருந்த 17 வருடங்களில் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்திருப்பார். இதே போலத்தான் முரட்டுக்காளை படமும். அதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் ரஜினி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தார். ஆனால் முரட்டுக்காளைக்குப் பின்னர் அவர் வருடத்துக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு படங்களில் மட்டுமே நடித்தார். அந்த அளவுக்கு அவர் படங்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாகிவிட்டது. அண்ணாமலைக்குப் பின்னர் இன்னும் புதுப்புது ஏரியாக்களில் ரசிகர்கள் பெருகியவண்ணம் இருந்தார்களே தவிர குறையவே இல்லை. பாட்ஷா,படையப்பா எல்லாம் அதனுடைய கண்டெண்ட் வேல்யூவால் ரிப்பீட் ஆடியன்ஸ் பெற்று வசூல் சாதனை புரிந்த படங்கள். 2000க்குப் பின் சிவாஜி,எந்திரன் என உலகம் முழுவதும் வசூல் பெருகினாலும் அது எல்லாவற்றுக்குமே ஒரு ஆரம்பப் புள்ளி அண்ணாமலை தான். முரட்டுக்காளைக்குப் பின்னர் ரஜினிக்காகவே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டார்கள் என்றால், அண்ணாமலைக்குப் பின்னர் திரையுலகமே, தங்கள் படங்களின் வெளியீட்டுத் திட்டங்களை ரஜினிக்காக வகுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. ரஜினி எண்பதுகளில் தன்னை ராகவேந்திரர் பக்தனாக அடையாளப் படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ராகவேந்திரர் படம் பதிந்த செப்புக் காப்பை அணியத் துவங்கினார்கள். நிறையப் பேர் ராகவேந்திரர் பக்தர்களானார்கள். திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மீக ஸ்தலம் என்றாலும் பொதுவாக வட மாவட்டத்தினர் மட்டுமே அங்கு குவிவார்கள். ஆனால் இளையராஜா சில திருப்பணிகள் அங்கே செய்து அது பற்றி தொடர்ச்சியாக செய்திகள் வந்தது, ரஜினிகாந்தின் அண்ணாமலை படம், அதைத் தொடர்ந்து அவரும் அண்ணாமலை பற்றி பேசியது, தமிழகம் முழுவதும் அண்ணாமலையாருக்கு பக்தர்களை கூட்டியது எனலாம். 1990க்கு முன் அண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த கூட்டம், 1990க்குப் பின் அங்கே வரும் கூட்டம் பற்றிய ஒப்பீட்டை திருவண்ணாமலையினர்தான் சொல்ல வேண்டும்.