August 25, 2014

சீனத் தொழில்நுட்பம் – ஒரு பார்வை

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி 10 வருடங்கள் ஆகப்போகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஏன் இங்தியாவில் அதன் பயன்பாடு  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் கூட அந்த பேட்டை இந்தியாவில் யாரும் தயாரிக்க முடியவில்லை. அதற்கான பேடண்ட் உரிமம் யாரிடம் இருக்கிறது? எந்த மாதிரி உரிமை? என்பது கூட பெரிய பிரச்சினை இல்லை. சில மாறுதல்களோடு நாம் தயாரிக்கலாம். சீனர்கள் எந்த கோர்ட்டுக்கும் போகப் போவதில்லை.

அந்த கொசு பேட்டானது, இங்கே 150 ரூபாய் முதல் கிடைகிறது. இரண்டு மூன்று நிறுவனங்கள் அதை தயாரிக்க முற்பட்டன. ஆனால் விலை ஐநூறு ரூபாயை நெருக்கி வந்தது. எனவே அதனை கைவிட்டு விட்டனர். கோவையில் உள்ள பல தொழிற்சாலைகள், வெளிநாட்டு பொருட்களை குறுக்கு வாக்கில் அறுத்து, அதன் பாகங்களையும், இயங்கும் விதத்தையும் காப்பியடித்து, இங்கே உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவார்கள். அவற்றின் விலை, அந்த வெளிநாட்டுப் பொருட்களின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ஆனால் சீனத் தயாரிப்புகளிடம் மட்டும் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.

தற்போது, சீனர்கள் கொசுவை இழுத்துப் பிடித்து கொல்லும் மெஷினை உருவாக்கி சந்தைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 1 கிலோ ரசகுல்லா டப்பா அல்லது பழைய பாமாயில் 1 லிட்டர் டப்பா போல இருக்கும் அந்த மெஷினின் பக்கவாட்டின் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். அதில் அல்ட்ரா வயலட் கதிரியக்கம் இருக்கும். கொசுக்கள் அந்த கதிரியக்கத்தால் இழுக்கப்பட்டு (பகலிலும் கூட) மெஷினின் திறப்பு அருகே வந்ததும்,  அடியில் உள்ள புளோயரால் விருட்டென உள்ளே இழுக்கப்பட்டு, சொர்க்கத்துகோ நரகத்துக்கோ போய்விடும்.  நாம் பொதுவாக உபயோகிப்பது மஸ்கிடோ ரிப்பல்லண்ட். இவை கொசுவை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு துரத்தவே செய்யும். துரத்தப்படும் கொசுவானது, தன்னுடைய வாழ்க்கையில் 10000 கொசுவாக இனப்பெருக்கம் அடையும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்முறையிலோ சந்ததி பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதால், நாளடைவில் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பொறி 500 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இதே போல் எலியை கொல்லும் எலெக்ட்ரானிக் இயந்திரமும் சந்தைக்கு வந்துள்ளது. நம்முடைய எலிப்பொறியைப் போன்றே இருக்கும் இதில், தேங்காய் சில்லோ, மசால் வடையோ வைக்க வேண்டியதில்லை. எலிகளுக்குப் பிடித்தமான வாசனையால் இழுக்கப்பட்டு உள்ளே வரும் எலி மின்னழுத்தத்தால் உயிரிழக்கும். இந்தியா தான் இதற்கு மிகப்பெரிய மார்க்கெட். எத்தனை ஆயிரம் மளிகைக் கடைகள் உள்ளன. ஆளுக்கு ஒன்று வாங்கினாலே போதும்.

இதுமட்டுமல்ல, தற்போது மிகப்பெரிய பில்டர்கள் எல்லோரும் சீனாவில் தான் பினிஷிங் செய்வதற்கான பொருட்களை வாங்கிகிறார்கள். கட்டிடத்திற்கு அடிப்படைத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் மட்டும் தான் இங்கே வாங்குகிறார்கள். மற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்துதான். சின்ன பில்டர்கள் கூட தங்கள் கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு சீனாவிற்கு செல்லுகிறார்கள். சுற்றிப்பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆங்காங்கே உள்ளவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். இந்தியா திரும்பிவந்து, அந்த விலாசங்களை கொடுத்துவிட்டால் போதும். ஏஜெண்டுகள், அந்தப் பொருட்களை வாங்கி, தேவைக்கேற்ப  கண்டெய்னர்களில் போட்டு சீனத் துறைமுகத்தில் கிளியரன்ஸ் வாங்கி அனுப்பிவிடுவார்கள். இங்கே சென்னைத் துறைமுகத்தில் இருந்து, நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. இவ்வளவு தூரம் அதை கொண்டுவந்தாலும், இங்கே வாங்கும் விலையை விட  குறைவாகவே இருக்கும்.

80களில் வெளிவந்த திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், பணக்காரராக சித்தரிக்கப்படுபவரின் வீட்டிலோ அல்லது கதாநாயகியின் அறையிலோ வால் பேப்பர்களை சுவற்றில் ஒட்டியிருப்பார்கள். சில அலுவலகங்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.  இப்போதும் அப்படிப்பட்ட வால் பேப்பர்கள் சென்னையில் கிடைக்கின்றன. ஒரு சதுர அடி 120 ரூபாய் விலை. ஆனால் சுவரில் பெயிண்டிங் செய்ய சதுர அடிக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் ஆகும். அதனால் எல்லோரும் பெயிண்ட் செய்யத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது சீன வால் பேப்பர்கள் சதுர அடி 10 ரூபாய்க்கு கிடைக்கும் தருவாயில் உள்ளன. 10 ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறார்கள். அந்த வால் பேப்பரை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஆட்கூலி சேர்த்து அதிகபட்சம் சதுர அடி 20 ரூபாய்க்குள் முடிந்துவிடும். எனவே தற்போது தங்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் உத்தேசத்துடன் இருப்பவர்கள் சற்று பொறுமை காக்கவும். விதவிதமான வண்ணங்களில், ஏராளமான டிசைன்களில் வால்பேப்பர்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே ஆஃபீஸ் பர்னிச்சர்களும். அருமையான மாடல்களில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எப்படி சீனர்களுக்கு இது கட்டுப்படியாகிறது?  எந்த சாதனமாய் இருந்தாலும், அதன் தயாரிப்பு விலையில் மூன்று காரணிகள் அடங்கியிருக்கும். ஒன்று அந்த சாதனத்தை கண்டுபிடித்ததற்கு ஆகும் ஆராய்ச்சி செலவு, இரண்டாவது அதை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை, மூன்றாவது அதை தயாரிக்க ஆகும் செலவு.

நம் நாட்டில் தான் ஆராய்ச்சி என்பது, குறைந்தது 25 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும் விஷயமாக இருக்கிறது. 17 வயது வரை பாடம் மட்டும். பி ஈ படிக்கும் போது கடைசி செமஸ்டரில் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஒரு காப்பியடிக்கப்பட்ட/விலைக்கு வாங்கப்பட்ட பிராஜக்ட், எம் ஈ யில் ஏதாவது ஒரு கான்பரன்ஸ்ஸில் பிரசண்ட் பண்ணும் அளவிற்கு, மேக்கப் செய்து விட்டால் போதும். பி எச்டி படிக்கும் போதுதான் ரிஸர்ச் மெதடாலஜியே தெரிய வரும். அங்கேயும் நான்கு கோர்ஸ், பின்னர் காம்பெரஹென்சிவ் வைவா என்று இரண்டு ஆண்டு ஓடிவிடும். பின்னர் ஒரு இண்டர்நேஷனல் ஜர்னலில் பேப்பரை அடித்துப் பிடித்து போட்டு விட வேண்டியது. பழைய சமன்பாட்டில் டெல்டா எக்ஸ் இப்போ நான் கண்டு பிடிச்சது டெல்டா எக்ஸ் பை ரூட் டூ. இதனால என்னய்யா பிரயோஜனம்னு? கேட்டா, அடுத்து பண்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு பதில் வரும்.

அடுத்து வர்றவன் இந்த லிட்டரேச்சரையெல்லாம் படிச்சிட்டு வழக்கமான சடங்கையெல்லாம் பண்ணிட்டு டெல்டா எக்ஸ் பை ரூட் டூ மைனஸ் 1 ந்னு தீஸிஸ் எழுதி முடிப்பான். கேட்டா ரிஸர்ச் எல்லாம் உடனே உலகத்தை தலைகீழா மாத்திடாது, சின்ன சின்ன சேஞ்ச் எல்லாம் சேர்ந்து தான் ரிசல்டண்ட் கிடைக்கும்னு வியாக்கியானம் பேசுவான்.
அன்றாட வாழ்க்கைக்கு என்ன தேவை? எப்படி நம்ம வாழ்க்கையை எளிமையாக்கலாம் என்று யோசித்தாலே ஏகப்பட்ட பிராடக்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். சீனர்கள்  அப்படித்தான் பிராக்டிக்கலாக யோசிக்கிறார்கள். இந்த தேவையை எப்படி சமாளிப்பது? அதற்கு என்ன தீர்வு? அவ்வளவுதான். நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஒரு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிந்திக்கிறார்கள். செயல்படுத்துகிறார்கள். பள்ளி அளவிலேயே சிந்தனையை தூண்டும்படி அங்கே பாடத்திட்டம் இருக்கிறது. சுற்றுப்புறத்திலும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலோ, படி,படி,படி. சுற்றுப்புறத்திலும், உறவு வட்டத்திலும் பெரும்பாலும் படித்து முன்னேறியவர்கள் பற்றியே சிலாகிக்கப்படும். இதனால் போட்டு வைத்த பாதையிலேயே நம் பயணம்.

சின்ன வயதில்தான் மூளை கட்டுப்பாடுகள் இல்லாமல் யோசிக்கும். முப்பது வயதுக்குப் பின்னர், பி எச் டி முடித்தபின்னர், எதை எடுத்தாலும் கன்ஸ்ட்ரயின்கள் தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது முடியாது, அது கஷ்டம் என்றேதான் ஆரம்பிப்போம்.எனவே யூஸ்புல்லான, வாழ்வுக்கு தேவையான பிராடக்ட் நம்மிடம் இருந்து உருவாகாது. பிராய்லர் கோழி இறக்கை பிய்க்கும் மெசின் ஒரு பி ஈ பிராஜக்ட்தான். மிக உபயோகமான கண்டுபிடிப்பு. ஆனால் இப்போதோ, பிராஜக்டை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் மலிந்துவிட்டது.

அடுத்த விஷயம், மூலப் பொருள். முன்னர் சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதி, இப்பொழுது மற்ற நாடுகளுக்கு பொருளாதார துயரத்தை கொடுக்கிறது. நதி நீர் இணைப்பை அவ்வளவு அருமையாக செயல்படுத்தி இருக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை, பெல்லாரி வெங்காயம், ராஜஸ்தான் மார்பிள் எல்லாம் கன்னியாகுமரிக்கு வந்து சேரும்பொழுது போக்குவரத்து செலவு, பொருளின் விலையில் முக்கிய அங்கமாய் மாறிவிடுகிறது. அங்கே மஞ்சள் நதி சீனாவின் முக்கிய நகரங்களை எல்லாம் இணைக்கின்றது. எரிபொருள் செலவு இல்லாமல், நதியின் போக்கிலேயே பொருட்களை கொண்டு செல்லும்படி நீர்வழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் பொருட்களை கொண்டு செல்லும் செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. முன்னர் சென்னையிலும் பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் பயன்பட்டது. இப்பொழுது காமெடி சீன் எடுக்க மட்டும்தான் பயன்படுகிறது.

மூன்றாவது தயாரிக்கும் முறை. முன்னர் இந்திய அணியில் வெங்கடபதி ராஜு என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். பீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகே நிற்பார். எந்த பக்கம் பந்து மிகக் குறைவாக வருமோ அந்தப் பக்கத்தில்தான் கேப்டன்கள் அவரை நிறுத்துவார்கள். ஏனென்றால், பந்தைக் கண்டதும் அவர், காதலில் விழுந்த கதாநாயகிகளைப் போல ஸ்லோ மோசனில் ஓடிச்சென்று, பந்தை எடுப்பார். ஒரு வேளை வலது கையில் பந்தை எடுத்து விட்டால், அதை மெதுவாக இடது கைக்கு கொண்டுவந்து, கையை வாகாக ஒரு சுழற்று சுழற்றி விக்கெட் கீப்பருக்கு எறிவதற்குள் இரண்டு ரன்களை எதிரணியினர் கூடுதலாக எடுத்து விடுவார்கள்.

ஆனால் சில பீல்டர்கள் பந்தை எடுக்கும் போதே, தங்கள் துரோயிங் ஆர்மால் தான் எடுப்பார்கள். எடுத்த உடனே பிக்கப் துரோ செய்து விடுவார்கள். இரண்டு ரன் எடுக்க நினைக்கும் எதிரணியினர் கூட ஒரு ரன்னுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். இடையில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஒரு பிராக்டீஸ் செய்து பார்த்தார்கள். இரண்டு கைகளாலுமே பிக் அப் துரோ செய்ய முடிந்தால், ரன்களை குறைக்கலாம், ரன் அவுட் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என. சீனர்கள் தங்கள் பொருட்களை தயாரிக்கும் போது, இப்படித்தான் நேரம் குறைவாகப் பிடிக்கும்படி வேலை செய்யும் பொசிசன்களை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்குத்தகுந்தபடி அதை மாற்றியும் கொள்கிறார்கள்.

வேலையை விரைவாக செய்து முடிக்கும் உபகரணங்களையும் அவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் வேலை நேரம் மிகவும் குறைகிறது. தற்போது கூட சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்கள். இரண்டு பில்லர்கள் அதில் இரண்டு பிரேம்கள் மேலும் கீழும் செல்லும். எந்த பொசிசன் வேண்டுமென்றாலும் எளிதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கீழே சிமெண்ட் கலவையை வைத்து விட்டால் போதும்.நாம் செட் செய்த ஏரியாவில் சீராக, விரைவாக கலவையை பூசி விடும். இப்போதைய அடக்க விலை 5 லட்ச ரூபாய் ஆகிறது. விரைவில் பில்டர்கள் இங்கே அதை கொண்டுவந்து விடுவார்கள். இப்போதைய கட்டடங்களில் ஆட்களுக்கு கொடுக்கப்படும் கூலி 30 முதல் 40 சதவிகதம் வரை ஆகிறது. அது இனி விரைவாக குறையும்.

மேலும் சீன அரசு சிறப்பு உறபத்தி மண்டலங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நல்ல ஐடியா உடன் இருப்பவர், பொருளுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்ப தொழிற்சாலை வசதிகளை லீசுக்கு எடுத்து உற்பத்தியை தொடங்கி விடலாம். தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு மற்ற நாடுகள் செலவழிக்கும் தொகை, அந்த சாதனத்தில் ஏறிவிடும். இங்கே குறைவான வாடகை மட்டுமே கொடுப்பதால், மூலப் பொருளின் விலை மட்டுமே சாதனத்தின் விலையில் பெரும்பங்காக இருக்கிறது.

நம் நாட்டில் பட்டாசு இறக்குமதிக்கு தடை இருப்பதால் சீன பட்டாசுகளை நேரடியாக இங்கே கொண்டுவர முடியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக பீகார், உத்திரப்பிரதேச இண்டீரியர் கிராமங்களில் சீனப் பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூட ஏகப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பட்டாசுகள் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் சிவகாசியினர் எல்லோரும் காசிக்கு செல்ல வேண்டியதாகி விடும். ஒரு சீனி வெடி விலைக்கு சீனாக்காரர்கள் ஒரு லட்சுமி வெடியே கொடுப்பார்கள். கண்டுபிடித்ததே அவர்கள் தானே.


பாதுகாப்பாக இருக்குமா என யோசிக்கலாம். மாவுக்கேத்த பனியாரம் என்பதற்கு சீனாதான் உதாரணம். ஒரே டிசைனில், ஒரே நிறத்தில் ஒரு லிட்டர் பெட் பாட்டில்களை தயாரிக்கிறார்கள், ஆனால் ஐந்து விதமான குவாலிட்டியில். முதல் தரமானவை, நார்த் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். அவர்கள் கொடுக்கும் விலைக்கு, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மூன்றாம் தரத்தைத் தான் தயாரிக்கமுடியும். நம் நாட்டில் உள்ள இறக்குமதி வணிகர்கள் பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே பெரும்பாலும் வாங்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அதனால்தான் பொது மக்களிடம் சைனா பீஸ் என்றாலே மட்டம் என்ற எண்ணம் நிலவுகிறது. சீனாவோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பத்தில் நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.

August 23, 2014

புகழ் தின்னி

கட்டப்படும் போது நகரின் எல்லையில் இருந்து, நகர் வளர்ந்தவுடன், தற்போது மத்தியில் அமைந்திருக்கும்  ஆண்களுக்கான மேல் நிலைப்பள்ளி அது. ஆறாம், ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர் சேர்க்கை. முதலிரண்டுக்கும் நுழைவுத் தேர்வு, பதினொன்றுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண். நுழைவுத்தேர்வுக்காக தனியார் நடத்தும் கோச்சிங் கிளாஸ்களில் சேரவே தனிப்பயிற்சி தேவைப்படும் அளவுக்கு பிரபலமான பள்ளியாக 25 ஆண்டுகளில் அது வளர்ந்து விட்டிருந்தது.

பள்ளியின் பிரதான நுழைவாயிலைக் கடந்த உடன் நிர்வாகக் கட்டிடம். அதில் பத்துக்கு ஆறு என்ற அளவில் ஒரு கரும்பலகை. ஆறில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவனின் பெயர் அதில் எழுதப்படும். பள்ளிக்குள் நுழையும் எவர் கண்ணிலிருந்தும் தப்பி விடாதபடி அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ராஜேஷ் ஆறாம் வகுப்பு அட்மிசனுக்காக பள்ளிக்குள் நுழைந்த போது, அவனைக் கவர்ந்தது அந்தப் பலகைதான். அதில் ஒருமுறையாவது தன் பெயர் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டான். பர்ஸ்ட் மிட் டெர்ம் டெஸ்டிலேயே ஆறு செக்சன் மாணவர்களிடையே முதல் மதிப்பெண் வாங்கி அவனுடைய பெயர் அந்த போர்டில் ஏறியது. மற்ற ஆண்டு மாணவர்களின் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்க, ராஜேஷின் பெயர் மட்டும் காலாண்டு,அரையாண்டு உள்ளிட்ட எல்லாத் தேர்வுகளிலும் மாறிலியானது. ஒன்பதாம் வகுப்பிற்கு ராஜேஷ் வந்தபோது, புது திறமை சாலிகள் எல்லாம் சேர்ந்து 10 செக்‌ஷன்கள். அதிலும் ராஜேஷே போர்டுக்கு வந்தான். பத்தாம் வகுப்பில் கல்வி மாவட்டத்தில் முதலிடம்.

பதினொன்றாம் வகுப்புகள் முதன் முதலாக ஆரம்பிக்கும் போது, தலைமை ஆசிரியர் நிகழ்த்திய சம்பிரதாய உரையின் போது, மருத்துவப் படிப்பின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, நம் பள்ளி மானவர்கள், மருத்துவக் கல்லூரியில் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1லேயே கற்பிக்கும் போக்கு இல்லாத காலகட்டம் அது. சில இடங்களில் அப்படி நடைபெறுவதாய் செய்திகள் கசிந்தாலும், நம் பள்ளி அப்படி இருக்கக் கூடாது என நிர்வாகம் உறுதியாய் இருந்தது. அப்போதெல்லாம் பதினொன்றாம் வகுப்பை, வெளிநாட்டிற்கு கிரிக்கெட் ஆடச்செல்லும் அணிகள், அங்குள்ள உள்ளூர் அணிகளோடு மோதுவது போலவே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அதிலும் ராஜேஷ் குறைவைக்கவில்லை. காலை நாலரை மணிக்கு எழுந்தரிப்பவன், குறைந்தது இரண்டு மணி நேரமாவது படித்து விட்டு, மேத்ஸ் டியூசன் போவான். மாலை பள்ளி முடிந்ததும் பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி டியூசன். டியூசன் முடிந்ததும் இரவு பத்தரை வரை இடைவிடாமல் படிப்பு. பயாலஜி அவனுக்கு தலைகீழ் பாடமானதால் அதற்கு மட்டும் டியூசன் இல்லை. ”பிடிச்சா ஸ்டெத் இல்லாட்டி டெத்” என்று பஞ்ச் டயலாக் மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி டாக்டராக வேண்டுமென்பது அவனது ஒவ்வொரு செல்லிலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. குளிக்கும் போதும் சாப்பிடும் போதும் கூட படித்த பாடத்தை அசை போட்டபடியேதான் இருப்பான். இவ்வளவு ஏன் அந்த ஆண்டு நடந்த அவனது அக்கா கல்யாணத்தில் கூட அமைதியாக உட்கார்ந்து பத்திரிக்கை கவர்களில் பார்முலாக்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனால் அவனுக்கும் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவனுக்கும் இடையேயான இடைவெளி முன் எப்பொழுதையும் விட இப்போது கூடியது.

அவனுடைய வீட்டில் அவனை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள். அவனுடைய தந்தை ஒரு அரசு ஊழியர். அந்த சமயம் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவனது அம்மா அவனை அவசரத்துக்கு ஒரு அனாசின் வாங்கக்கூட அனுப்பியதில்லை. ராஜேஸம்மாவை கொண்டு போக எமன் வந்தாக்கூட, கொஞ்சம் பொறுப்பா, பையன் பரிட்சை முடியட்டும்னு ஜாமீன் வாங்கிடும் என தெருவில் பேசிக் கொள்வார்கள். பிளஸ் டூ காலாண்டுத்தேர்வு வரை ராஜேஷை யாரும் நெருங்கமுடியவில்லை.

அந்த பள்ளியின் ஏ ஹெச் எம் அழகு வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். பிளஸ் டூ லேசுப்பட்டதில்லடா. டென்த்ல கணக்குல நூறும்பான், ஆனா இங்க ஆறும்பான். சில பக்கிக பிளஸ் ஒன் வரைக்கும் மந்தமா இருக்குங்க. பிளஸ் டூவில சண்டமாருதம் பண்ணிடுங்க. வயசு மாறுதில்ல என்பார். அப்படி சண்டமாருதமாய் மாறியவன் சிவகுமார். மட்டமான கேரளா பென்சிலைக் கொடுத்தாலும் அதில் ஐந்தாறு திக்னெஸ்களில் கோடு இழுக்கக் கூடியவன். டைம்ஸ் நியூ ரோமன் 12 என்று செலக்ட் செய்தால் எப்படி டாக்குமெண்ட் பூராவும் ஒரே மாதிரி மாறுகிறதோ, அதே போல ஒரே அச்சாக எழுதத் தெரிந்த வித்தைக்காரன். தலைப்புக்கு ஒரு ஃபாண்ட், உப தலைப்புக்கு ஒரு ஃபாண்ட் என பேப்பர் முழுவதும் சீராக மெயிண்டைன் செய்யக் கூடியவன். ஆறாம் வகுப்பிலிருந்தே இங்கு படித்தவன். எப்போழுதும் ஐந்து ரேங்குக்குள் வருபவன்.

பிளஸ் 2 அரையாண்டு பேப்பர்கள் கொடுக்கப்பட்டது. மொத்தத்தில் சிவகுமார், ராஜேஷைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாய்ப் பெற்று போர்டில் இடம் பிடித்தான். ராஜேஷால் மட்டுமல்ல மொத்த பிளஸ் 2 மாணவர்களாலும் அதை முதலில் நம்பவே முடியவில்லை. அவனுடைய பேப்பர்களை வாங்கிப் பார்த்தான். டோட்டல்களை வெறியுடன் மீண்டும் மீண்டும் சரிபார்த்தான். மற்ற எல்லாவற்றிலும் இருவரும் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்கள். கணிதத்தில் சிவகுமார் முந்திவிட்டான். பள்ளியில் நுழையும் போதெல்லாம் அந்த போர்டை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் ராஜேஷ். கிட்டத்தட்ட ஏழாண்டுகள் இடைவிடாமல் பிடித்து வைத்திருந்த இடம்.

அவனுக்கு அந்த போர்டில் மீண்டும் இடம் பிடிக்க ஒரே வாய்ப்புதான் இருந்தது. பிளஸ் 2 விற்கு பர்ஸ்ட் ரிவிசன் டெஸ்ட். மற்ற வகுப்புகளுக்கு தேர்ட் மிட் டெர்ம். அதனுடன் அந்த ஆண்டு ரோல் ஆஃப் ஹானர் முடிந்துவிடும். கணிதத்தில் எப்படியாவது முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் போதும். போர்டில் மீண்டும் வந்துவிடலாம் என ராஜேஷ் எண்ணினான். கணிதத்தில் அசுர சாதகம் செய்ய ஆரம்பித்தான். தேர்வுக்கு முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து படித்து சிவந்த கண்களோடு தேர்வுக்கு வந்தான். முதல் கணக்கில், இண்டெகிரேசனில் மைனஸ் எக்ஸ்ஸை தவறாக பிளஸ் எக்ஸ் என வாசித்து செய்தான். ஆன்சர் வரவில்லை. பதட்டமானான். மீண்டும் மீண்டும் முயற்சித்து நேரத்தை வீணாக்கினான். கொஞ்சம் புத்தி வந்து, மற்ற கணக்குகளுக்குப் போனான். ஆனான் அவனின் ஆழ்மனதில் போர்டில் பேர் வராதே பேர் வராதே என்ற குரல் கேட்க கேட்க எந்த கணக்குக்கும் விடை வரவில்லை.

அந்த பேப்பரை வகுப்பில் கொடுக்கும் போது, யாருமே நம்பவில்லை. ராஜேஷ் பெயிலா என்ற ஆச்சரியம் பள்ளி முழுவதும் பரவியது. ”அழகு வாத்தியார் அவனை கவுன்சிலிங் செய்தார். மூணு நாலு லட்சம் பேர் தமிழ்நாடு பூராம் எழுதுறாண்டா. அதுல முன்னூறுக்குள்ள வந்திட்டாலே உனக்கு மெடிக்கல் சீட் நிச்சயம். நீ அசால்டா அப்படி வந்துடுவ. இங்க ரேங்க் வாங்குறது ஒரு விஷயமே இல்லை. இதத் தாண்டி உலகத்தில சாதிக்க எவ்வளவோ இருக்கு. எதைப் பத்தியும் கவலைப் படாம படி. ஸ்கூல்க்கு கூட வரவேண்டாம். எக்ஸாமுக்கு மட்டும் வா. என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு நாள் பள்ளிக்குள் நுழையும் போதும், நிமிர்ந்து அந்த போர்டை வெறித்துப் பார்ப்பான். பின் தலையை குனிந்தபடி வகுப்பிற்குச் சென்றுவிடுவான்.

தேர்வு முடிவுகள் வெளியானது. மெடிக்கலுக்கு வாய்ப்பில்லை. இஞ்சினியரிங் வாய்ப்பு இருந்தது. நான் கீழிறங்க விரும்பவில்லை. ஐ ஏ எஸ் ஆகி  யாரென்று காட்ட விரும்புகிறேன் என பெற்றோரிடம் சொல்லி விட்டான். இதுவரை எதுவும் வாய்விட்டு கேட்காத மகன், எந்த சொல்லையும் தட்டாத மகன், போட்ட எந்த சாப்பாட்டையும் புன்னகையோடு சாப்பிட்ட மகனின் சொல்லைத் தட்ட அவர்களால் முடியவில்லை.

அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ பொலிடிக்கல் சயின்ஸ் சேர்ந்தான். முதல் பருவத்தில் வைக்கப்பட்ட எல்லாத் தேர்வுகளிலும் அட்டகாசமான மதிப்பெண்கள். ஆனால் இரண்டாம் பருவத்திலேயே கீழிறங்கினான்.

உண்மையில் ராஜேஷுக்கு படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கிளறியது அவன் மீது விழுந்த பெருமித, ஆச்சரிய, பாராட்டிய, பொறாமை கொண்ட பார்வைகள் தான். அந்தப் பார்வைகள் படப்பட அவனுடைய சக்தி வளர்ந்து கொண்டே போனது. சாதகப் பறவைக்கு இசை, சக்கரவாகத்திற்கு மழை, ராஜேஷுக்கு புகழ், புகழ்ப்பார்வை. வீட்டில், தெருவில், பள்ளியில், டியூசனில் அவன் மீது விழுந்த புகழ்ப்பார்வைகளை உண்டு வளர்ந்தவன் அவன். எப்பொழுது அந்தப் பார்வைகள் இரக்க, பச்சாதாப, கேலிப் பார்வைகளாக மாறியதோ அப்போதே அவனுடைய சக்தி குறையத் தொடங்கியது.

அவனுடைய கல்லூரி வகுப்பு எந்த நாளிலும் நிறைந்திருந்ததில்லை. சிலர் விளையாட்டுப் போட்டிகளுக்கு, சிலர் கல்சுரல்ஸ்களுக்கு, சிலர் சினிமாக்களுக்கு என அறுபது சதவிகிதம் பேர் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். முதல் பருவத் தேர்வு முடிவு வெளியானவுடன் தன் மீது மீண்டும் புகழ்ப் பார்வை படியும் என எதிர்பார்த்தவனுக்கு, யாரும் அதைப் பொருட்படுத்த வில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது. இண்டர் காலேஜ் வோக்கல் சோலோ பர்ஸ்ட் பிரைஸ்க்கு இருந்த புகழ்ப்பார்வையில் ஒரு சதவிகதம் கூட எல்லா சப்ஜெக்ட்களிலும் எஸ் கிரேட் எடுத்த ராஜேசுக்கு கிட்டவில்லை.

புகழைத் தின்னாத ராஜேஸ் வெகு சாதாரணன் ஆகிப் போனான். ஒரு வழியாக டிகிரியை முடித்தவனை அவனுடைய தந்தை வற்புறுத்தி குடிமைப் பணிகளுக்கான ஒரு கோச்சிங் செண்டரில் சேர்த்து விட்டார். இரண்டு மணி நேர கிளாஸ் போக மீத நேரம் வீட்டில் படிக்க ஆரம்பித்தான் ராஜேஸ். வகுப்பிலும், யாரையும் சுட்டாமல் பாடம் எடுப்பார்கள். தேர்வு பேப்பர்களையும் மூன்றாம் நபர் அறியாமல்தான் கொடுப்பார்கள். உண்மையில் ராஜேஷின் காலிபருக்கு அந்த தேர்வுகள் எல்லாம் சாதாரணம். ஆனால் வீட்டில் அவன் படிக்கும் போது, பெற்றோரின் பச்சாதாப பார்வை, தெருவில் கிடைத்த கிண்டல், கேலி பார்வைகள் அவனுடைய கீழே இறக்கவே செய்தன.

கடைசியில் அவனுடைய தந்தையின் சிபாரிசில் சில இடங்களுக்கு வேலைக்குப் போனான். அவன் வளர்த்திருந்த திறமைக்கும், அவர்கள் புகழ்ப்பார்வை பார்க்க நினைத்தால் தேவைப்படும் திறமைக்கு ஒரு பெரிய இடைவெளி இருந்தது. பத்தோடு பதினொன்றாகவே பணி புரிந்தான்.
விடுமுறை நாட்களில் தான் படித்த பள்ளிக்கு வெளியே நின்று, அந்த போர்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருமுறை பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது, உள்ளே புகுந்து சாக்பீஸால் அந்த போர்டில் தன் பெயரை எல்லா வகுப்புக்கும் நேராக எழுத ஆரம்பித்தான்.


இப்போது அந்த பள்ளிக்குச் சென்றால் நீங்கள் கவனிக்கலாம். போர்டு இருந்த இடத்தில் புத்தனின் பொன்மொழி ஒன்று இருப்பதை.

August 21, 2014

நிலைக்க முடியாத நாயகர்கள்

தமிழ்சினிமாவில்  கதாநாயகனாக அறிமுகவாவது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். தயாரிப்பாளர்கள், வெற்றிகரமான இயக்குநர்கள், முண்ணனி நடிகர்களின் வாரிசு என்றால் கோடம்பாக்கத்தின் கதவு எளிதாக திறந்து கொள்ளும். அதுவும் முதல் படத்திற்கு மட்டும்தான். அரசியல்வாதி மற்றும் பெரும் பணக்காரர்களின் வாரிசுகளுக்கும் முதல் பட வாய்ப்பு எளிதுதான்.
தமிழ்சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை கவனித்துப் பார்த்தால், கதாநாயக வாய்ப்பு பெறுவது என்பது எளிதாகிக் கொண்டே வருகிறது. பாடவும் நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் கூடுதலாக முக லட்சணமும் வேண்டும் என்பது பாகவதர் காலகட்ட தகுதிகள். நாடக மேடை அனுபவமும் முகலட்சணமும் இருக்க வேண்டும் என்பது எம்ஜியார்-சிவாஜி காலகட்டம். எல்லிஸ் ஆர் டங்கனிடம் எம்ஜியார் வாய்ப்பு வாங்க கஷ்டப்பட்டார். சிவாஜி கணேசனும் பராசக்தியில் கிடைத்த வாய்ப்புகூட பறிபோகும் நிலைக்குச் சென்று தயாரிப்பாளரின் ஆதரவால் தப்பித்து பின்னர் சகாப்தம் படைத்தவர்.

முகலட்சணமும் சிகப்பு நிறமும் தகுதியாகப் பார்க்கப்பட்டது ஸ்ரீதர்-பாலசந்தர் காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் இயக்குநர்க்கு பிடித்திருந்தால் போதும் கதாநாயகன் வேடம் கிடைத்துவிடும் என்ற நிலைமை வந்தது. பாரதிராஜாவிற்கு பிந்தைய காலகட்டத்தில்தான் நாயகனாக நடிக்க தகுதி,நிறம் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ரஜினி நாயகன் வாய்ப்பு பெற்றது இதன்பின்னர்தான்.

தொண்ணூறுகளில் தொலைக்காட்சி  முக்கிய ஊடகமாக அறியப்பட்ட நேரத்தில், மாடலாக இருப்பவர்கள் திரையுலகுக்கு வரும் வழி உருவாகியது. புதிய இயக்குநர்கள் சிலர் தங்கள் படங்களுக்கான நடிகர்,நடிகைகளை விளம்பர ஏஜென்ஸிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும், மாடலிங் ஷோக்கள் மூலமும் தேர்ந்தெடுத்தனர்.
எனவே 80களில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வரை கூட இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையே நிலவியது. தன்னுடைய தேவையை விட அதிகமாக பணம் வைத்திருப்பவரே ஒரு படத்தை தயாரிக்க முன்வருவார். சில லட்சியவாதிகள் மட்டும் விதிவிலக்கு. எனவே ஒருவர் இயக்குநர் ஆவதற்கு நிச்சயம் ஒரு பணக்காரரை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும்.  இந்தக் காலகட்டத்தில் ஒருவர் அவ்வளவு பணத்தை வைத்திருந்தால் நிச்சயம் அவரிடத்தில் ஒரு தெளிவு இருக்கும். மது,மாது,சூது, கூடா நட்பு என பலவற்றிடமிருந்து தப்பித்து அதிகப்படியான பணத்தை பாதுகாத்து வைத்திருப்பவர் ஒரு சமநிலையில் தான் இருப்பார். அவரது பணத்தை ஒரு நிச்சயமில்லாத தொழிலில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க எவ்வளவு திறமை வேண்டும்?. அந்த அளவு திறமை உள்ளவர்களே இயக்குநர் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் படத்திற்கு புது கதாநாயகன் தேடும்போது எவ்வளவு மெனக்கெடுவார்கள்?. ஏனென்றால் படத்தின் வெற்றிதானே அவர்களை திரையுலகில் நிற்க வைக்கும்?

டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதி மற்றும் குறும்படம் மூலம் வாய்ப்பு பெறும் வசதியால் அதிக அளவு படங்கள் குறைந்த முதலீட்டில் தயாராவதால் கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தொலைக்காட்சி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் முகம் கூட பொதுமக்களின் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்களின் முகம் ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருகிறவர்களால் கூட சில நடிகர்களை அடையாளம் காண முடிவதில்லை.

இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்தாலே வீதியில் சுதந்திரமாக நடக்க முடியாத நிலை இருந்த நாட்களில் இயக்குநரை திருப்திசெய்து நாயகனாக அறிமுகமானவர்கள், அதிர்ஷ்டவசமாக இயக்குநர்களின் கடைக்கண் பார்வைபட்டு கதாநாயகன் ஆனவர்கள், குக்கிராமங்கள் வரை சென்று மக்கள் மனதில் சேர்ந்த பின்னரும் சோபிக்காமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்த கட்டுரை.
பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன் போன்றோர் தங்கள் படங்களில் பெரும்பாலும் தாங்களே நடித்துக் கொண்டார்கள். பாரதிராஜா, பாலசந்தர், டி ராஜேந்தர், மணிரத்னம் ஆகியோர் அப்படிச் செய்யமுடியவில்லை. வீர தீரம், சிறந்த நடிப்பு தேவைப்படாத தாங்கள் படைத்த பாத்திரங்களுக்கு  சில  கதநாயகர்களை அறிமுகப்படுத்தினார்கள். டி ராஜேந்தர் சில படங்கள் கழித்து தானே களத்தில் குதித்துவிட்டார்.

அப்படி பாரதிராஜா அறிமுகப்படுத்திவர்களில் கிழக்கே போகும் ரயில் சுதாகர் பல படங்களில் நாயகனாக தொடர்ந்து நடித்தார். அதில் இரண்டு மூன்று மட்டுமே வெற்றிப்படங்கள். பின்னர் அவர் தனது பூர்வீகமான ஆந்திரத்துக்குச் சென்று காமெடியனாக வெற்றி பெற்றார். நிழல்கள் ரவி, ராஜா ஆகியோர் கதாநாயக வேடத்தில் நடித்தாலும் அவர்களை நாயகனாக யாரும் பார்க்கவில்லை. பாரதிராஜாவின் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் பாண்டியன்.

பாண்டியன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வரிசையில் வளையல் மற்றும் அழகு பொருட்கள் கடை உரிமையாளராக இருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு மண்வாசனை பட நாயகனானார். அதற்கு முன்னால் ஜாதி சார்ந்த பேச்சு வழக்குகள், சம்பிரதாயங்களை வைத்து படம் எடுத்திராத பாரதிராஜா, காதல் ஓவியம், வாலிபமே வா வா போன்ற படங்களின் தோல்வியை அடுத்து தேவர் இன முறைமாமன், தாய்மாமன் சீர் ஆகிய சம்பிரதாயங்களைச் சரணடைந்து இயக்கிய படம் மண்வாசனை.  ஒரு வகையில் பார்த்தால் தேவர் இனத்தை தூக்கிப்பிடித்து வந்த முதல் படம் இது என்றும் சொல்லலாம். (சிவாஜி கணேசனின் பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் ஜாதி சொல்லப்பட்டாலும் சம்பிரதாயங்கள் டீடெயிலாக காட்சிப்படுத்தப் பட்டிருக்காது).  படமும் வெற்றி பெற்றது. பாண்டியன் தமிழகம் அறிந்த நடிகராக மாறினார்.
அதன் பின் மண்சோறு, நேரம் நல்லாயிருக்கு, பொண்ணு பிடிச்சிருக்கு,தலையணை மந்திரம், கடைக்கண் பார்வை, கோயில் யானை, ஆண்களை நம்பாதே போன்ற படங்களில் நடித்தார். இவை எதுவும் கலை ரீதியாகவும், வணிக ரீதியாகவும் எடுபடாத படங்கள். பாரதிராஜாவின் புதுமைப் பெண், பாண்டியராஜனின் ஆண்பாவம், மணிவண்ணனின் முதல் வசந்தம், ராமராஜனின் மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்தார். வெற்றி பெற்ற படங்களில் அவ்வப்போது நடித்திருந்தாலும், நான்கு ஆண்டுகளிலேயே ஊர்க்காவலன், குரு சிஷ்யன், பூந்தோட்ட காவல்காரன்  போன்ற படங்களில் துணை நடிகர் போல நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் எம்ஜிஆர் நகரில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடிக்க வேண்டி வந்தது.

மீண்டும் பாரதிராஜா நாடோடி தென்றலில் ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்தார். பின்னர்  கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன்களில் ஒருவராக நல்ல வேடம் கொடுத்தார். ஆனால் அவரால் எதிலும் பிரகாசிக்க முடியவில்லை.  அடுத்த சில ஆண்டுகள் கழித்து குரு தனபால் இயக்கிய “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக கூட நடிக்க நேர்ந்தது. கடைசியாக அவரது வாழ்க்கையிலேயே ”ஆண்பாவம்” மூலம் பெரிய ஹிட் கொடுத்த பாண்டியராஜனின் “கை வந்த கலை” யில் நடித்தார். பின்னர் தீராத குடிப்பழக்கத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.  

பாண்டியனின் சினிமா வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். அது இந்த நடிகரால் தான் இந்தப் படம் ஓடியது என்று ஒருபடத்திலாவதுதான் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகனுக்கு இங்கே மரியாதை. அப்படி நிரூபிக்காவிட்டால் எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும், ஒரு சில சறுக்கலிலேயே காணாமல் போக நேரிடும். நமக்கு என்ன நடிக்க வரும் என்பதை ஒருமுறை நிரூபித்து விட்டால் போதும், நமக்காக இயக்குநர்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள், நாம் தொடர்ந்து பீல்டில் நிலைக்கலாம்.
தமிழகம் முழுக்க அறிமுகமாகி இருந்தாலும், வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், சிலருக்காவது, நடிகனின் மீது அபிமானம் வர வேண்டும். நடிகனுக்கு அழகு,ஸ்டைல் இதையெல்லாம் விட நல்ல ஆண்மையான குரல் இருக்க வேண்டும். அந்த குரலே அவர்களுக்கு ரசிகர்களைச் சேர்க்கும். துரதிஷ்டவசமாக பாண்டியன் குரலில் ஆளுமை இல்லை. தன் கடைசி காலம் வரை மாடுலேசனை மாற்றாமல் ஒரே மாதிரி பேசிவந்தார். அதுவும் ரசிக்க முடியாத குரலில். இப்போது விமலும் அப்படித்தான் பேசி வருகிறார். ரேவதி,சீதா, ரம்யா கிருஷ்ணன்,இளவரசி என இவருடன் கதாநாயகியாக நடிகைகள் எல்லாம் இன்றும் வெள்ளித்திரை/சின்னத்திரையில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சுரேஷ்

பன்னீர் புஷ்பங்களில் பள்ளி மாணவனாக அறிமுகமாகிய சுரேஷ், அடுத்த ஆண்டிலேயே சில வெற்றிப்படங்களில் நடித்தார். அதில் முக்கியமானது இளஞ்சோடிகள். இராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக்கும் சுரேஷும் இணைந்து நடித்த இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். ஆனால் அதற்கடுத்து கோழி கூவுது. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் இரண்டாம், மூன்றாம் நாயகனாகவும், ராம நாராயணன் இயக்கிய உரிமை போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். பின் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தில்  நதியா உடன் இணைந்து நடித்தார். அப்போதைய முண்ணனி நாயகிகளான ரேவதி, நதியா உடன் சில படங்களில் நடித்தார். நதியாவுக்கு ஏற்ற ஜோடி எனவும் சிலாகிக்கப்பட்டார்.  சில ஆண்டுகள் தான் ஆளே காணவில்லை. பின் புது வசந்தம் படத்தில் சிறிய நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். 94ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் சிறிய வேடம். இப்போது தெலுங்கு திரையுலகில் சில வேடங்களில் நடித்து வருகிறார். காதல் சொல்ல வந்தேன், தலைவா ஆகிய படங்களிலும் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டு ஷோக்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.


பொதுவாகவே தமிழர்களுக்கு சிவப்பான நாயகனைப் பிடிக்காது என்று சொல்வார்கள். எம்ஜியார் கூட கறுப்பு வெள்ளை காலத்தில் அறிமுகமாகி மக்களின் அபிமானத்தைப் பெற்றதால் தப்பித்தார். கமல்ஹாசன் கஜகர்ணம் போட்டாலும் பெருவாரியான மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் தான் இது மாறியுள்ளது. முதல் சில ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாத அஜீத் இப்போது மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால் 2000 வரையிலும் நல்ல சிகப்பான, பர்சனாலிட்டி உள்ளவர்கள் சாக்லேட் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மனம் கவர் நாயகனாக சினிமாவை அதிகம் பார்க்கும் இளவயது ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுரேஷுக்கு நல்ல பர்சனாலிட்டி, குரலும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெரைட்டியான வேடங்கள் செய்யவில்லை. நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்பது அவரின் சரிவுக்கு காரணமாய் அமைந்து விட்டது.