August 27, 2022
ஆணும் சமைக்கனும்
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் 23 வயது வரை வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தந்தை அரசு அதிகாரி. போஜனப் பிரியர். வாரத்தில் இரண்டு நாள் காலை சாம்பார் வடை ஹோட்டலில் வாங்குவோம், வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. இரண்டு நாள் இரவு புரோட்டாவுடன். புதன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம்.
சாமி கும்பிட கோவிலுக்குப் போவதாக இருந்தால் கூட, முதல் நாள் இரவு, புளிக்காய்ச்சல் தயாராகும்.தயிர் சுமாரா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பன்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே லாலா கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். முக்கு கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த கோவிலுக்கு என்ற கேள்வியே எழும்பும்.
எங்கள் வீடாவது பரவாயில்லை. என் அம்மாவின் அக்கா வீடு இன்னும் ஒரு படி மேல். என் அம்மாவின் தந்தை ஒரு நிலச்சுவான் தார். முதல் மகளுக்கு அரசு அதிகாரியாகவும் வேண்டும், நிலபுலன்களும் இருக்க வேண்டும் எனப் பார்த்து எக்கச்சக்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 10 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு அதிகாரி என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். கிராமத்தில் இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும். காப்பி பொடி அரைப்பது, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி அரைப்பது எல்லாம் விழா போல நடக்கும்.
என் பெரியம்மாவின் பையன், பெரும்பாலான ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தவர். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் பெரியப்பாவிற்கு சிகரெட் பழக்கம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு இரண்டு தெரு தான் தள்ளி இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் குடுகுடுவென ஓடிப்போய் அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும்.
சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார். டேய், நாளைக்கு கம்மாய்ல விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வராங்கடா. உங்க அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட சொல்லிட்டு வா என்பார்கள்.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் அவர்கள் வீட்டிற்குத்தான் போவேன். முறுகலாக இரண்டு நெய் தோசை, பில்டர் காபி மூத்த அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு எந்த வீட்டில் என முடிவு செய்வேன்.
திருவிழா சமயங்களில் பாட்டி ஊருக்குப் போனால், இன்னும் விசேஷம். பெரிய வீடு. மாமா அத்தைகள் என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும். நான் அன்னிய மாப்பிள்ளையின் பையன் என்பதால் என் தந்தைக்கு ஏதும் கோபம் வந்து விடக்கூடாதே என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டார்கள். அதில் தான் கையே கழுவுவார்கள். சமையல் கட்டுக்குள் யாரும் நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
திருமணத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். என் மனைவியும் சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் மாமனார்-மாமியார் இருவரும், அவர் என்ன சொன்னாலும் கேட்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என உருவேற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்தால் கூட அவர்கள் பார்த்து விட்டால் என் மனைவியைக் கோபிப்பார்கள்.
இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என் மூத்த மகன் ஹைபர் ஆக்டிவ். எனவே மாலை வேளைகளில் அவனை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது இதோடு என் கடமை முடிந்தது என இருப்பேன்.
பதினைந்து ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள் பையன்களுக்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் கூட சாப்பிடுற பசங்க கிண்டல் பண்றாங்கப்ப. நல்லாவும் இல்ல என்றார்கள்.எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட் போட்டு கொடுத்து விட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன். இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்றி மாற்றிக் கொடுத்து விட்டேன். சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில் மனைவி ஓரளவு குணமாகி நான் பார்த்துக்கிறேங்க என என்னை விடுதலை செய்தார். அப்பாடா தப்பிச்சோம்டா என வழக்கத்திற்குத் திரும்பினேன்.
அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமத்துவம் என்கிறோம். ஆனால் மனைவிக்கு சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று தோன்றியது.
ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் டீ போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு, கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். ஒரு வைர நெக்லஸ் வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே.
இப்போதெல்லாம் காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன்.
என் மனைவியிடம் மட்டுமல்ல. என் பாட்டி, பெரியம்மா மற்றும் அக்காக்கள், அம்மா, மாமியார் என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் இனி என் மகன்களை சமையலில் பயிற்றுவிப்பதுதான்.
August 09, 2021
காதலுக்கு மரியாதை
இயக்குநர் பாசில் மலையாளத்தில் ஒரு படம் எடுப்பார். அது ஹிட்டான உடன் தமிழுக்கு அந்தப் படம் செட் ஆகுமா என யோசித்து, அதற்கேற்ற நடிகர்களை வைத்து இங்கே மீண்டும் எடுப்பார். பூவே பூச்சூட வா, பூ விழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் 16 என. அது போல மலையாளத்தில் அவர் குஞ்சாகோ போபன், ஷாலினியை வைத்து அவர் எடுத்த அனியத்திப் பிறாவு படத்தை இங்கே இயக்க வந்தார். ஹீரோயின் ஷாலினி என பிக்ஸ் ஆகிக் கொண்டார். சிவகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரையும் பிக்ஸ் செய்து விட்டார். நாயகனாய் நடிக்க அவருக்கு ஒரு இளமையான ஹீரோ தேவைப்பட்டர். சிலர் சூர்யாவை சொன்னதாகவும், ஆனால் சிவகுமார் அப்பா-மகனாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாகவும் சொல்வார்கள். அடுத்து விஜய்யை புக் செய்ய போனார்கள்.
அப்போது விஜயின் கால்ஷீட் சங்கிலி முருகனிடம் இருந்தது. விஷ்ணு படம் பி & சி செண்டரில் நன்கு ஓடியதைப் பார்த்து அவர் விஜய்யின் கால்ஷீட்டை எஸ் ஏ சந்திரசேகரனிடம் இருந்து வாங்கியிருந்தார். சங்கிலி முருகன் தயாரிப்பு, பாசில் இயக்கம், விஜய்-ஷாலினி ஜோடியில் காதலுக்கு மரியாதை உருவாகத் தொடங்கியது. இசை பாசிலின் மனம் கவர்ந்த இளையராஜா.
பாசில் என்றாலே பட்டாசாக பாடல்களைப் போட்டுக் கொடுப்பார் இளையராஜா.
சங்கிலி முருகனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தமே உண்டு. சங்கிலி முருகனின் நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு ஸ்ட்ராங். சங்கிலி முருகனுக்கு எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என பல ஆல்பம் ஹிட்களை கொடுத்தவர். அவர் ஆர்மோனியப் பெட்டியை சும்மா திறந்தாலே இனிமையான பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. மனதிற்குப் பிடித்தவர்களுக்கு என ஆர்மோனியத்தை திறந்தால்? கேட்கவா வேண்டும்.
படம் விரைவாக ஷூட்டிங் முடிந்தது. படத்திற்குப் பிண்ணனி இசை அமைக்க உட்கார்ந்த இளையராஜாவிற்குப் பொறி தட்டியது. இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என. உடனே தன் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்து விநியோக உரிமை வாங்குங்கள் என்று சொன்னார். அப்படி அவர் சொன்னவர்களில் தாணுவும் ஒருவர். ஆனால் தாணுவோ, அவர் பார்ம்லாம் போயிருச்சு. இப்படித்தான் கற்பூர முல்லைக்குச் சொன்னார். படம் தேறவே இல்லையே என தயங்கினார். தாணு சொன்னதிலும் நியாயம் உண்டு. பாசிலுக்கு அப்போது தமிழில் கடைசி கமர்சியல் ஹிட் வருசம் 16 தான். அதன்பின் அவர் எடுத்த அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா என தொடர்ச்சியாக வசூல் ரீதியாக சுமாரான படங்கள் தான்.
இளையராஜாவும் அப்போது கமர்சியலாக தன் முதல் இடத்தை ரஹ்மானிடம் இழந்திருந்தார். ரஹ்மான் பெயர் இருந்தாலே விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டி படத்தை வாங்கிய நேரம். காதலுக்கு மரியாதையில் அன்றைக்கு மார்க்கெட் வேல்யூ விஜய்க்கு தான் இருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக விஜய்க்கு பெரிய வெற்றி. ஆனால் அதற்கடுத்து வசந்த வாசல். மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என சுமாரான படங்களைக் கொடுத்து சறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து லவ் டுடே படம் வெளிவந்து அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதற்கடுத்து சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர், வசந்தின் நேருக்கு நேர் படங்களின் கமர்சியல் வெற்றி, விஜய்க்கு ஒரு மார்க்கெட் வேல்யூவை கொடுத்திருந்தது.
இந்த நேரத்தில் தான் படத்தை ப்ரிவியூ பார்த்தார் என் எஸ் சி ஏரியாக்களின் முக்கிய விநியோகஸ்தரான என் எஸ் சி ரவி என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தும் பரவலாக அறியப்பட்டவர். அவருக்கும் இந்தப் படம் ஹிட் ஆகும் எனத் தோன்றியது. அன்றைய தேதிக்கு படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்பார்கள். அதற்கு மேல் ஒரு தொகையை வைத்து சங்கிலி முருகனிடம் இருந்து தமிழ்நாடு ஏரியா முழுவதையும் வாங்கினார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். சங்கிலி முருகனும் படம் வெளிவரும் முன்னரே லாபம் வந்து விட்டதே என திருப்தியடைந்து விட்டார்.
படம் வெளியானது. விஜய்க்கான கூட்டம், பாசில் படம் என்பதால் எதிர்பார்ப்பில் ஒரு சிறு கூட்டம் படத்திற்கு வந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல பீல்குட் படம், இனிமையான பாடல்கள், படம் முடிந்து வெளிவரும் போது மனசு லேசான உணர்வு. அவ்வளவு தான். முழுக்க முழுக்க வாய்மொழி விளம்பரத்தாலேயே படம் பற்றிக் கொண்டது. எப்படிப்பட்ட ஹிட் என்றால் நாகர்கோவில் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது, ஓரிரு மாதம் கழித்து வெளியான அருப்புக்கோட்டையிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கெல்லாம் ஐந்து மடங்கு வரை லாபம் என்றார்கள். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இனி நாமளும் படம் தயாரித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்தார். முதல் படமே விஜய்காந்த் – விக்ரமன் காம்போவில் வானத்தை போல, அடுத்தடுத்து பெரிய படங்கள் தான். ஷங்கரின் அந்நியன், கமல்ஹாசனின் தசாவதாரம் என.
பாசிலுக்கு ஒரு ராசி உண்டு. அவர் படத்தின் மூலம் அறிமுகமாகும் / நடிக்கும் சில நடிகைகளுக்கு கிட்டத்தட்ட தேவதை ஸ்டேட்டஸ் கிடைத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் உள்ள வீடுகளுக்கும் சென்று சேர்ந்து விடுவார்கள். அப்படி ஒரு கேரக்டர் ஆர்க் அமைக்கக் கூடிய வல்லமை பாசிலுக்கு உண்டு. பூவே பூச்சுடவாவில் அவர் அறிமுகப்படுத்திய நதியா 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு ஸ்டேட்டஸோடுதான் இருக்கிறார். வருசம் 16 குஷ்பூ இத்தனை பொலிட்டிகல் ஸ்டேண்டுகளுக்கு அப்புறமும் ஒரு பெர்சனாலிட்டியாக முக்கிய படங்களில் நடிக்கிறார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு அப்படி ஒரு ஸ்டேட்டஸை கொடுத்தது. அவர்க்கு காதலுக்கு மரியாதையின் மூலம் கிடைத்த கிரேஸை அமர்க்களம் பட ஓப்பனிங் ஷோவில் கண்டு கொள்ள முடிந்தது. அமர்க்களம் படத்தில் முதல் காட்சியே ஷாலினியின் பாடல் தான். அதற்கு கிடைத்த கை தட்டல் வரவேற்பு ஹீரோக்களுக்கு இணையானது.
காதலுக்கு மரியாதை, இளையராஜாவுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது எனலாம். திரையுலகமே ரஹ்மான் ரஹ்மான் என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த போது, என்னாலும் ஒரு கமர்சியல் ஹிட் படத்தைக் கொடுக்க முடியும் என காட்ட ஒரு வாய்ப்பாய் காதலுக்கு மரியாதை அமைந்தது. எக்கச்சக்க கேசட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
விஜய்க்கு பூவே உனக்காக ஒரு மேக் ஓவர் கொடுத்தது என்றால் காதலுக்கு மரியாதை ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ஏராள பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள். பம்பாய் ரொட்டி சுக்கா ரொட்டி, தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்ட பரோட்டா என குத்துப் பாடல்களாய் பாடிக்கொண்டிருந்த விஜய்க்கு ஒ பேபி, ஓ பேபி என்ற பாடலை இளையராஜா பாடக் கொடுத்து இன்னும் விஜயை மெருகேற்றினார்.
பாசில் அதற்கடுத்து விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, ஸ்ரீகாந்தை வைத்து ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களை இயக்கினார். இரண்டும் சரியாகப் போகவில்லை. அதோடு இங்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யோசித்துப் பார்த்தால் தமிழில் பாசிலின் மிகப்பெரிய ஹிட் காதலுக்கு மரியாதை தான். வருசம் 16 கூட அதற்கடுத்து தான் வரும். காதலுக்கு மரியாதையின் வெற்றிக்கு படத்தின் கதை, இசை போன்ற அம்சங்கள் காரணமாய் இருந்தாலும் படத்தை தாங்கி நிற்க நல்ல இளமைத் துடிப்பான ஒரு நாயகன் தேவைப்பட்டார். அதை சிறப்பாக விஜய் செய்தார். அவருடைய கேரியரில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது.
காதல் கோட்டை
1996 ஆம் ஆண்டு. ஜூலை மாதம்.எப்போதும் திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்கு மே முதல் ஜூலை வரை புது வரவு நிறைய இருக்கும். தமிழகம் முழுக்க கல்லூரி இறுதி ஆண்டு முடித்தவர்கள் சென்னைக்கு வேலை தேடி வந்து இந்த மாதங்களில் மேன்சனில் அடைக்கலம் புகுவார்கள். அந்நாட்களில் சனிக்கிழமை இரவுகள் மேன்சன் மொட்டை மாடிகள் களைகட்டும். சிகரெட், மதுபானம் என தங்கள் அலைவரிசைக்கு செட் ஆகிறவர்களுடன் இணைந்து ஜோதியில் ஐக்கியமாகி அரட்டை அடித்துக் கொண்டு கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்தவர்களும் தயக்கத்துடன் தங்களுக்கு ஏற்ற குரூப்பில் சேர்வார்கள். இல்லை புதுக் குழுக்களை உருவாக்குவார்கள்.
அந்த நேரத்தில் தான் எந்தப் படம் இப்போ செகண்ட் ஷோ போகலாம், நாளைக்கு என்ன படம் போகலாம் போன்ற பேச்சுக்களும் கிளம்பும்.
அந்த வார சனிக்கிழமை, கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் ஒரு படத்தின் பெயர்தான் அடிபட்டது. காதல் கோட்டை. படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்கடா, விகடன்ல கூட அட்டைப்படத்தில போட்டு அம்பது மார்க் கொடுத்த்கிருக்காங்க, வித்தியாசமான கதையாம் போலாமா என்று ஒருமித்த குரல்கள் கேட்டன. ஆசை, வான்மதில நடிச்சிருக்காப்லேல அந்த அஜீத் தான் ஹீரோவாம், இங்க தேவிகலால தான் போட்டிருக்கான். பொட்டி மாதிரி இருக்கும். டிக்கெட் கிடைக்குமான்னும் தெரியலை. அப்பிடியே ஒரே ரோடு, திருவான்மியூர் தியாகராஜாக்கு போயிடலாம் என்று ஒரு குரூப் கிளம்பியது. உடன் சென்றாயிற்று.
தியேட்டர் நெருங்க நெருங்க திருவிழா கூட்டம். அவ்வளவு பைக்குகள். எல்லாம் 21-25 வயது வாலிபர்கள். இத்தனைக்கும் அது படம் வெளியாகி மூன்றாவது சனிக்கிழமை என நினைவு. அஜீத்தின் முதல் படமான அமராவதியையும் தியேட்டரில் பார்க்கவில்லை, அடுத்து அவர் சிறிய வேடங்களில் நடித்த பாசமலர்கள், பவித்ரா, விஜய்யுடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படங்களையும் தியேட்டரில் பார்க்கவில்லை. ஆசை படம்தான் முதலில் தியேட்டரில் பார்த்த அஜீத் படம். மணிரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்கம், பாடல்கள் ஹிட், எல்லாப் பக்கமும் நல்ல ரிவ்யூ வரவும் போய் பார்த்த படம். அதில் உடன் இருந்தது எல்லா வயதினரும் இருந்த கலவையான ஆடியன்ஸ்.
அடுத்து வந்த வான்மதி படம் மதுரை நாட்டியா திரையரங்கில் பார்த்தது. அதில் பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் என இரண்டு கேட்டகிரி மட்டும் இருந்தார்கள். பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா… லியோ கப்பாசா பாடலுக்கு செம ஆட்டம் போட்டார்கள். அடுத்தடுத்து ரெண்டு படம் இவருக்கு நல்லா போகுதே என நினைக்கும் போதே கல்லூரி வாசல் வந்தது. அதில் பிரசாந்த் ஹீரோ. அஜீத் இரண்டாம் நாயகன். படம் சொதப்பியது. அதைவிட மோசம் அடுத்து வந்த மைனர் மாப்பிள்ளை. இந்த நிலையில் தான் காதல் கோட்டை வந்திருந்தது. முழுக்க முழுக்க இளைஞர் கூட்டம். சரி. ஹீரோவா பார்ம் ஆயிட்டாப்ல என தோன்ற வைத்தது.
எப்படியோ டிக்கெட் வாங்கி உள்ளே போயாகி விட்டது. முதல் அரை மணி நேரம் படம் எதுவும் ஈர்க்கவில்லை. அதே சமயம் நெளியவும் வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் நுழைந்து, பின் கடைசி அரை மணி நேரம் கை நகத்தையெல்லாம் கடித்து, உலக கோப்பை இறுதிப்போட்டி இந்தியா சேஸிங்கைப் பார்ப்பது போல பரபரத்து இறுதியில் சுபமாய் முடிந்தது படம். படம் முடிந்து வெளியே வரும் போது, செட்டில் சிலர் அடுத்த வாரம் திரும்ப வரலாமா எனக் கேட்டனர். நிச்சயமா என்பதே பதிலாய் இருந்தது. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். படம் வெள்ளி விழா கொண்டாடியது. இத்தனைக்கும் அந்த வருடம் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் வந்தன. விஜய்யின் பூவே உனக்காக, கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித் தா, கமல்ஹாசனின் இந்தியன் என முக்கிய நடிகர்களின் மைல்கல் படங்கள் எல்லாம் அப்போது வந்திருந்தன. காதல் கோட்டை வெளியான பின் வந்த தீபாவளிக்கும் அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை என ஹிட் படங்கள் வந்தன. அத்தனையையும் மீறி தொடர்ந்து எங்காவது ஓடிக்கொண்டே இருந்தது காதல் கோட்டை.
காதல் கோட்டை ஏராளமானவர்களுக்கு ஒரு திருப்பு முனையைத் தந்த படம். அஜீத்திற்கு ஏராளமான இளைஞர்களை ரசிகர்களாக பெற்றுத்தந்து இனி அவர் ஒரு நட்சத்திரம். அவரை நம்பி படம் எடுக்கலாம் என்ற அந்தஸ்தை வாங்கித் தந்தது. அந்நாட்களில் சென்னையில் பார்த்தால் சாப்ட்வேர் இளைஞர்களுக்கு இணையாக ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், மேக்ஸ்வொர்த் ஆர்சார்ட்ஸ், ஆர் பி ஜி செல்போன் விற்பனை பிரதிநிதிகள், பேஜர் விற்பனை பிரதிநிதிகள், மற்றும் அனைத்து மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள், மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ்கள் என ஏராளமான விற்பனைப் பிரதிநிதிகள் சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காதல் கோட்டை அஜீத்தின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் அவர்களிடையே இன்ஸ்டண்ட் ஹிட். அஜீத் அணிந்து வரும் வெள்ளை முழுக்கை சட்டை, க்ரீம் கலர் பேண்ட், ஷூ என அவர்களுக்கும் எளிதாக செட் ஆனது. அஜீத்தும் அப்போது புரசைவாக்கம் போன்ற ஏரியாக்களில் ரெடிமேட் ட்ரஸ் ஷோ ரூம்கள் திறக்க அழைக்கப் பட்டார். யோசித்துப் பார்த்தால் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி மூன்று படங்களும் அஜீத்திற்கு கொடுத்த இளைஞர் படை இன்று வரை அவரைக் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.காதல் கோட்டைக்கு அடுத்தே அவர் பல சுமார் படங்களைக் கொடுத்தாலும் அஜீத் என்ற பிராண்ட் அடி வாங்காமல் காதல் கோட்டை சில ஆண்டுகள் அவரைக் காத்தது.
அகத்தியன் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் சொன்ன போது, அவர் நான் உங்களோட மதுமதி படம் வாங்கி இருந்தேன். நல்ல லாபம். அது போல ஒரு கதை சொல்லுங்க எனக் கேட்டு வான்மதி படம் எடுத்தார். வான்மதி கமர்சியல் ஹிட் ஆகவும், துணிந்து காதல் கோட்டைக்கு ஒப்புக் கொண்டார். பலரும் ஒப்புக்கொள்ளத் தயங்கிய கதை, என்னய்யா பார்க்காமலேயே லவ்வா என நிராகரிக்கப்பட்ட கதை அது. வான்மதியின் வெற்றியே சரி பார்ப்போம் என சிவசக்தி பாண்டியனை ஒப்புக் கொள்ள வைத்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அகத்தியனுக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித்தரவில்லை, அடுத்தடுத்து பெரிய தயாரிப்பாளர்களை அவரை நோக்கி வரச் செய்தது. சிவசக்தி பாண்டியனை ஒரு நல்ல தயாரிப்பாளராக நிலை நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானுக்கும் நல்ல பெயர் பெற்றுத் தந்தது.
இலக்கியவாதியான தங்கர் பச்சான், அஜீத் பத்திரிக்கை படிப்பது போல் வரும் காட்சியில் “காலச்சுவடு” புத்தகத்தைப் படிப்பது போல் அமைத்திருப்பார். பின்னர் இன்னொரு படத்தில் அவரது “ஒன்பது ரூபாய் நோட்டு” புத்தகம் இருக்கும். கதாநாயகி தேவயானிக்கும் காதல் கோட்டை தான் மிகப்பெரிய ப்ரேக். இன்று வரை கமலி கதாபாத்திரம் பேசப்படுகிறது. இதற்கடுத்து தொடர்ந்து நிறைய பெரிய படங்கள் கிடைத்து சில ஆண்டுகள் ராசியான கதாநாயகியாக வலம் வந்தார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் கூட இந்தப் படம் ஒரு திருப்பு முனை. ரங்கீலா ஊர்மிளா தெரியாம வயசுப்பையன் இருக்கலாமாடா என சமுதாய கிண்டலுடன் கூடிய அவர் கேரக்டர் ஹிட்டாக, அதன்பின் ஏராளமான படங்களில் அதே பாணியில் வலம் வந்தார். தலைவாசல் விஜய், கரண் ஆகியோருக்கும் காதல் கோட்டையின் வெற்றி பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
இதையெல்லாம் விட காதல் கோட்டை படத்தின் வெற்றியை அளக்கும் இன்னொரு கருவி இருக்கிறது. பார்க்காமலேயே காதலுக்குப் பின் காதலுக்காக நாக்கை அறுப்பது உள்ளிட்ட ஏராளமான வித விதமான காதல் படங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இறங்கிக் கொண்டே இருந்தன, அவ்வளவு ஏன் படத்தலைப்பிலேயே அத்தனை காதல்கள். காத்திருந்த காதல், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுக்கு மரியாதை, காதல் பள்ளி என.
காதல் கோட்டை படத்தை 1996ன் காலப் பதிவு என்று சொல்லலாம். எஸ் டி டி பூத்கள், அப்போது பிரபலமாயிருந்த இரண்டே கார்களான மாருதி 1000, சியல்லோ, லேசாக ஊடுருவ ஆரம்பித்த செல்லுலார் என காட்சிப்படுத்தப்பட்ட படம்.
இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் இந்தப் படத்தைப் பார்த்தால் இது சாத்தியமா எனத் தோன்றும். நிறைய காட்சிகள் ரெலவண்ட் ஆக இல்லாதது போல் தோன்றும். ஆனால் படத்தின் ஆன்மா, இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிவடையும் காதல். அது இக்காலத்திலும் சாத்தியம் தான். சமூக வலைதளங்களில் ஒருவரின் கருத்துக்களால் மட்டும் ஈர்க்கப்பட்டு பார்க்காமலும் காதல் வந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னர் நேரில் பார்த்து சுபமாகவும் முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)