January 16, 2025
இதயத்தை திருடாதே
"ஓடிப் போயிடலாமா' என்னும் வார்த்தையை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்த படம்.
இந்தப் படத்தின் நாயகி கிரிஜாவின் தந்தை ஒரு இன்கம்டாக்ஸ் அதிகாரி.
இதயத்தை திருடாதே பாடல்கள் A சைடிலும், கரகாட்டக்காரன் பாடல்கள் B சைடிலும் பதிந்த கேசட்டுகள் கணக்கில்லாமல் விற்பனை ஆகின.
1989 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து ஏகப்பட்ட ஹிட் படங்கள். வருஷம் 16, ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரன் என.
அபூர்வ சகோதரர்கள் கரகாட்டக்காரன் படங்கள் இரண்டும் திரையரங்கில் இருந்தபோது இந்த படமும் வந்தது.
இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மணிரத்னம் வித்தியாசமாக செய்தார். இரண்டு முகங்கள் மட்டும் இருக்கும். இதயத்தை திருடாதே, இளையராஜா அவ்வளவுதான். யார் அந்த முகங்கள் என்று ரிலீஸ் ஆகும் நாள் வரை காட்டவில்லை.
நாயகன்,அக்னி நட்சத்திரம் எடுத்த டைரக்டர் என்று கல்லூரி இளைஞர்கள் அவர்களாகவே குவிந்தார்கள். பார்த்தவர்கள் இந்த படத்தின் விஷுவலில் மயங்கி ஹாஸ்டலில் இருந்த எல்லோரையும் படம் பார்க்க விரட்டி விட்டார்கள்.
ஒவ்வொரு சீனையும் சிலாகித்து சொல்வார்கள். நாகார்ஜுனா தண்ணீரிலிருந்து இறங்கி வரும்போது ஷூ காலை அழுத்த அதிலிருந்து வெளிவரும் தண்ணீர், எந்நேரமும் பிரேமில் இருக்கும் பனிப்புகை.
ஓ பாப்பா லாலி, ஓம் நமஹா, காவியம் பாடவா தென்றலே பாடல்கள்...
எத்தனை எத்தனை நினைவுகளை இந்த படம் அள்ளிக் கொடுத்தது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய நாகார்ஜூனா படங்கள் டப் ஆகி வந்தன.
சில விஷயங்களை அந்தந்த காலத்தில் அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள்.
அதுபோல மேல்நிலைப்பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது இந்த படத்தை நல்ல சவுண்ட் சிஸ்டம் உடைய குளிர்சாதன அரங்கில் அப்போது பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ரட்சகன்
கே டி குஞ்சுமோன், கேரளாவில் விநியோகஸ்தராகவும் சில படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் தமிழில் பவித்ரனை இயக்குநராக வைத்து வசந்தகால பறவைகள் என்னும் படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் ஷங்கர் இணை இயக்குனர். படம் வெற்றி அதற்கடுத்து சூரியன் படத்தை எடுத்தார் அது பிரம்மாண்ட வெற்றி.
அதன் பின் குஞ்சுமோனுக்கும் பவித்ரனுக்கும் சண்டை வர, குஞ்சுமோன் ஷங்கரை வைத்து ஜென்டில்மேன் எடுத்தார். பவித்ரன் விஷாலின் அப்பா ஜி கே ரெட்டியுடன் இணைந்து சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா எடுத்தார்.
ஜென்டில்மேனின் அபார வெற்றிக்குப் பிறகு ஷங்கரை வைத்து காதலன் எடுத்தார் குஞ்சுமோன். அதுவும் பிரம்மாண்ட வெற்றி. அதே சமயத்தில் கலக்கப்போவது ராமரால் தற்போது புகழடைந்த ஆத்தாடி என்ன உடம்பி பாடல் இடம் பெற்ற சிந்துநதிப் பூ படத்தையும் தயாரித்தார்.
காதலனின் வெற்றிக்குப் பிறகு குஞ்சுமோனுக்கும் ஷங்கருக்கும் சண்டை. ஷங்கர் இந்தியன் படத்திற்கு போய்விட்டார்.
குஞ்சுமோன் என்ன செய்வது என்று யோசித்தார். அவருக்கு ஜென்டில்மேன் படத்திலிருந்து தெரிந்துவிட்டது. பிரம்மாண்டம் என்பது ஒரு பெரிய விசிட்டிங் கார்டு. அந்த பிரம்மாண்டத்தை அப்போதைய சூழ்நிலையில் தரக்கூடிய ஒரே ஆள் ஏ ஆர் ரகுமான் தான்.
அப்போது ஏ ஆர் ரகுமான் ஒரு படத்தில் கையெழுத்து இட்டார் என்றாலே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் எகிறிவிடும்.
தயாரிப்பாளராக ஏ ஆர் ரகுமானிடம் மிகுந்த பழக்கம் இருந்தாலும், அவரை சம்மதிக்க வைக்க ஒரு இயக்குநர் தேவைப்பட்டார். அப்போது ஏ ஆர் ரகுமானின் நண்பர் கதிர் கிடைத்தார். காதல் தேசம் உருவானது. அந்தப் படம் வெளியானபோது முதல் சில நாட்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இல்லை. எனவே எடிட்டர் லெனினை வைத்து காட்சிகளை மறுசீரமைப்பு தியேட்டர்களுக்கு கொடுத்து படம் பிக்கப் ஆனது. அதோடு கதிருடனும் சண்டை.
அடுத்து அவருக்கு கிடைத்த ரகுமானின் நண்பர் பிரவீன் காந்தி.
எனவே அவரை இயக்குனர் ஆக்கி ரகுமானை இசையமைக்க வைத்து ரட்சகன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது படத்திற்கு இன்னும் ஹைப் கூட்டுவதற்காக பெரிய ஹீரோ தேடினார். (காதல் தேசத்தில் அப்பாஸ் அறிமுகம், வினித் அதற்கு முன் ஆவாரம்பூ படத்தில் ஒரு வெள்ளந்தி கேரக்டரில் நடித்தவர் தபுவுக்கு கிளாமர் அப்பீல் கிடையாது). தெலுங்கில் இருந்து நாகார்ஜுனாவை பிடித்தார்.
மிஸ் இந்தியா ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் இருவர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்னை இந்தப் படத்திற்குப் பிடித்தார். உடன் வடிவேலுவும் கிடைத்தார்.
அப்போது இந்த படத்தின் பட்ஜெட் 15 கோடி. அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். ஒரு வேற்றுமொழி நாயகர் புது இயக்குனர் இவ்வளவு செலவா என்று.
அந்த சமயத்தில் எங்கள் உறவில் ஒரு அண்ணன் இருந்தார். எனது அத்தை அவருக்கு பெண் கொடுக்க மிகவும் யோசித்தார். ஆள் பார்க்க சுமாராக இருக்கிறார் என்பதுதான் ஒரே காரணம். அப்போது, நாங்கள் எங்களுக்குள் கிண்டல் அடிப்போம். ஆமா 15 கோடி போட்டு படம் எடுக்க போகுது இந்த அத்தை. ஹீரோ தேடுது என்று.
படத்தின் பாடல்கள் வெளியானதும், இன்னும் ஹைப் ஏறியது. சோனியா சோனியா பாடலும் சரி சந்திரனை தொட்டது யார் மெலடியும் சரி இன்ஸ்டன்ட் ஹிட்.
அப்போது இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காரணத்தால் ஸ்டில்லும் போட்டோவும் மட்டுமே ஒரு படத்தின் கதையை கடத்தும் காரணிகளாக இருந்தது. ஸ்டில்லில் நாகார்ஜுனாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு சின்ன வீடு ஸ்கூட்டரில் உட்கார்ந்து இருப்பார்கள். படத்தின் டைட்டில் ரட்சகன். துப்பாக்கி சிம்பல்.
எனவே, இந்தப் படத்தில் நாட்டிற்கு ஒரு பெரிய ஆபத்து. அதைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதை என இளைஞர்கள் தங்கள் மனதில் ஃபிக்ஸ் செய்து கொண்டார்கள்.
படம் வெளியானது. தமிழ்நாட்டில் ஒரு வேற்று மொழி நடிகர் கதாநாயகனாக தமிழ் படத்தில் நடித்து கிடைத்த மிகப்பெரிய முதல் ஓப்பனிங் அது. மதுரை குரு தியேட்டரில் காலை காட்சிக்கு வந்திருந்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் மதிய காட்சி வரை அங்கேயே நின்றது பெரிய ஆச்சரியம்.
அது ஹீரோவுக்காக அல்ல இயக்குனருக்காக அல்ல தயாரிப்பாளருக்காகவும் அவரது ப்ரொடக்ஷன் டிசைனுக்காகவும். கிட்டத்தட்ட காதல் தேசமும் அப்படித்தான். இயக்குனர் கதிர் கூட அதற்கு முன் உழவன் என்னும் தோல்வி படம் கொடுத்தவர்.
ஆனால் படம் ரசிகர்களை ஏமாற்றியது. ஒரு தனிமனிதனின் கோபம். அவன் குடும்பக்கதை என்னும் அளவில் அது சுருங்கி போனது.
படம் முடித்து வெளியே வந்த மதுரை ரசிகர் ஒருவர், பூராத்தையும் போட்டு உடைக்கிறாங்கய்யா.. படம் முடிஞ்சதும் டயர் இருக்கான்னு கீழ தேடி பார்க்க வச்சுட்டாங்க என்றார்.
சூப்பர் ஹீரோ கதையாக இருந்திருந்தால் ஓடி இருக்கும்.
96 ஆம் ஆண்டு தீபாவளி
குருதிப்புனல் திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் துரோகி. ஹிந்தியில், கோவிந்த் நிகலானி இயக்கிய துரோகால் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். துரோகி என்பது இந்த படத்திற்கு சரியான பெயர் தான்.
ஆனால் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள், தங்களது பெயருக்கு முன்னால் படப் பெயர்களையும் போட்டுக் கொள்வார்கள், நற்பணி மன்றத்திற்கும் அந்த பெயரை வைப்பார்கள், பனியன்களிலும் அந்த படப் பெயரை அச்சிட்டு கொள்வார்கள்.
அவர்களுக்கு துரோகி என்ற டைட்டில் கேள்விப்பட்டதும் துரோகி கமல்ஹாசன் நற்பணி மன்றம், துரோகி குமார் என்றெல்லாம் எப்படி போட்டுக் கொள்வது என ராஜ்கமல் ஆபீசுக்கு பல கடிதங்களை எழுதினார்கள்.
அதனால் கமல்ஹாசன் படத்தலைப்பை குருதிப்புனல் என மாற்றினார். பி சி ஸ்ரீராம் இயக்கம் கமலஹாசனின் நண்பர் மகேஷ் இசை.
இன்னொரு பக்கம் பாட்ஷா தந்த அதிரடியுடன் ரஜினிகாந்த், நாட்டாமை தந்த வெற்றியுடன் கே எஸ் ரவிக்குமார், இவர் தங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டாரா என அப்போது எல்லோரும் ஏங்கிய ஏ ஆர் ரகுமான் என எதிரே வலுவான கூட்டணி.
95 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் பாட்ஷாவுடன் சதிலீலாவதி மோதியது. பல திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்தாலும் பாட்ஷா வெற்றியுடன் ஒப்பிடும்போது கமல் ரசிகர்களுக்கு மனக் குறை. இப்போதும் அந்தப் பக்கம் வலுவான கூட்டணி.
பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசினார். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. அமைச்சர்கள் ரஜினிகாந்தை எதிர்த்து அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள். பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆரம் வீரப்பன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். இந்த காரணங்களால் முத்து படத்தின் மேலான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.
முத்து படத்தின் பாடல்கள் வெளியாகின. ரஜினி ஸ்டைலாக வெள்ளை முழுக்கை சட்டையை மடித்து விட்டு சாட்டை கம்போடு வந்த கேசட்கள் விற்றுத் தீர்ந்தன.
ஆமா நம்ம கேசட் எப்போ என்று கேட்டதற்கு பாடல்களே இல்லை என்ற பதில் வந்தது.
அந்த சமயத்தில் விருதுநகரில் இருந்தோம். காலைக்காட்சி ராஜலட்சுமி தியேட்டரில் முத்து படம். ஒரே ஆரவாரம். படம் முடிந்ததும் அருகில் இருந்த கடைகளில் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு நேராக அப்சரா தியேட்டரில் குருதிப்புனல். முதல் 10 நிமிடம் கத்தி விட்டு பிறகு படத்தில் ஆழ்ந்து போனோம்.
வீரம்னா என்னன்னு தெரியுமா?
எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்
உன் கண்ணுல கலாச்சார பலம் தெரியுது..
போன்ற வசனங்களை அசை போட்டுக் கொண்டே நடந்து சென்று மாலை காட்சி அமிர்தராஜ் தியேட்டரில் மக்களாட்சி.
உண்மையில் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் மக்களாட்சி தான். ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தோம். அப்போதைய அரசியல் நிகழ்வுகளை நேரடியாகவும் சர்காசமாகவும் கலாய்த்து எடுத்து இருப்பார் செல்வமணி. அப்போது வைகோ திமுகவில் இருந்து வெளியேறி இருந்தார். அவரை கலாய்த்து சைதாப்பேட்டை கோவிந்தசாமி (சைகோ) என்னும் கேரக்டர், வால்டர் திருவாசகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்த நாள் காலை சுலோச்சனா தியேட்டரில் (இப்போது இடிக்கப்பட்டு விட்டது) சரத்குமாரின் ரகசிய போலீஸ். விஜய்யின் சந்திரலேகா திரைப்படமும் அப்போது வெளியாகி இருந்தது. குருதிப்புனலை இன்னொருமுறை பார்க்க வேண்டும் என்று அதற்கு போகவில்லை. கிடைத்த தீபாவளி காசு அவ்வளவுதான்.
Subscribe to:
Posts (Atom)