January 02, 2012

2002 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

2001 ஆம் ஆண்டின் மொக்கைப் படங்களால் டயர்ட் ஆகி இருந்த தமிழ் சினிமா துறையையும், ரசிகர்களையும் ஆசுவாசப் படுத்தும்படி இந்த ஆண்டில் சில படங்கள் வெளியாகின.

அறிமுகங்கள்

இன்று பல கிராமியம் சார்ந்த, யதார்த்தக்கதை களன் கொண்ட படங்கள் வருவதற்கு அடித்தளமிட்ட படம் என்று அழகியைச் சொல்லலாம். வட மாவட்ட கதைக்களனை தமிழ் சினிமாவிற்கு வீரியமாக கொண்டுவந்த படம் இதுதான். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் தங்கர் பச்சான் தன் சிறுகதையையே அழகியல் ததும்ப படமாக்கினார். அன்று 30 வயதான பல ஆண்களை மூக்கு சிந்த வைத்த படம்.

இன்று சக போட்டியாளர்களாக விளங்கும் சிம்புவும், தனுஷ்ஷும் நாயகர்களாக அறிமுகம் ஆனது இந்த ஆண்டில்தான். எங்க வீட்டு வேலன் என்னும் படத்தை தன் சிறு வயதிலேயே அனாயாசமாக சுமந்திருந்தாலும், மோனிஷா என் மோனலிஷா வில் ஒரு பாட்டுக்கு வாலிப தோற்றத்தில் ஆடியிருந்தாலும், நாயகன் என்னும் முத்திரையுடன் சிம்பு அறிமுகமானது இந்த ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் தான். டி ஆர் தன் மகனுக்காக தமிழ் மக்களையும், பிரகாஷ் ராஜ், சீதாவையும் கடுப்படித்தார். இந்தப் பட அறிமுகம் சார்மி பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தார்.

செல்வராகனுக்கும் இதை அறிமுக ஆண்டு என சொல்லலாம். ஆனால் அபிசியலாக சொல்ல முடியாது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார். யுவனின் அருமையான பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு பலம் சேர்த்தது. ஷெரின்னின் கண் பார்வையில் வயசுப் பசங்கள் அனைவரும் சுருண்டார்கள். தனுஷ் இதில் அறிமுகமான போது யார் கணித்திருக்க முடியும், அவர் ரஜினியின் மாப்பிள்ளை ஆவார், தேசிய விருது பெறுவார். படங்களில் காண்பிப்பது போல் ஒரே பாட்டில் உலகப் பிரபலம் அடைவார் என்று. உண்மையான சிண்ட்ரெல்லா ஸ்டோரியை நாம் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே சமயத்தில் தான் இந்தி முதல்வன் ரீமேக்கில் கையைச் சுட்டுக்கொண்ட ஏ எம் ரத்னத்திற்காக பாய்ஸ் படத்தை ஷஙகர் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் மைய இழையும் ஒன்று தான். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததுடன் இல்லாமல் அவப் பெயரையும் பெற்றுத்தந்தது.

ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாமுராய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியன், சிட்டிசன் என முன் பிரதிகள் இருந்ததால் இது எடுபடாமல் போனது. ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குநரான வசந்த பாலனும் இந்த ஆண்டு ஆல்பம் மூலம் அறிமுகமானார். பின் இருவருமே முறையே காதல், வெயில் என தங்கள் குருவின் தயாரிப்பில் தங்களை நிரூபித்தார்கள்.

இன்று எஸ் பி முத்துராமன், ராஜசேகர், கே எஸ் ரவிகுமார் வரிசையில் மசாலா இயக்குநராக அறியப்படும் அருவா ஹரி இந்த ஆண்டு தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரை பேக் டிராப்பில் நடுத்தட்டு இளைஞன் வன்முறை பாதைக்கு பயணப்பட்டு பின் மீள்வதை வெற்றிகரமாக சொன்ன படம் இது.

நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகி விட்ட சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் ரெட். அஜீத், மதுரை பேக் டிராப் இருந்தும் படம் மரண அடி வாங்கியது.

பேராவூரணி எம் எல் ஏ அருண் பாண்டியன் எம் எல் ஏ ஆகக் காரணமான படம் தேவன். ரேஷன் அரிசி கடத்தலை மையமாக வைத்து தன் நூறாவது படத்தை [உண்மையிலே அவ்வளோ நடிச்சிட்டாரா?] அவரே இயக்கினார். விஜயகாந்த், கார்த்திக் துணை நின்றார்கள்.

ரோஜா கூட்டம் மூலம் ஸ்ரீகாந்த்தும், பைவ் ஸ்டார் மூலம் பிரசன்னாவும், தமிழன் மூலம் பிரியங்கா சோப்ராவும் இந்த ஆண்டு தமிழுக்கு அறிமுகமானார்கள்.

திறமையை நிரூபித்தவர்கள்

இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் ஆசிட் டெஸ்ட். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கதை இருக்கும். அதை அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இயக்கி வெளியிட்டால் அது வெற்றிதான். ஆனால் இரண்டாம் படம்?. அதில் வெற்றி பெறுபவர்களைத்தான் கோடம்பாக்கம் அங்கீகரிக்கிறது.

தீனா படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ஏ ஆர் முருகதாஸுக்கு ரமணா பெரும் பெயரைத் தந்தது. விஜயகாந்த் அரசியலில் இறங்க முதுகெலும்பாக இருந்தது. இப்படம் வெளியான நேரத்தில் அரசுப்பணியில் இருந்த உறவினர் ஒருவரை சந்தித்த போது, “படத்தைப் பார்த்தா வாங்கவே பயமா இருக்குடா” என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுத்த படம் இது.

ஆனந்தம் படம் மூலம் கால் வைத்த லிங்குசாமி வேகமெடுத்தது ரன் படத்தின் மூலம். அருமையான பாடல்கள், விவேக் காமெடி, உணர்ச்சிகளை சரியாக காட்டத் தெரிந்த நாயகன், அழகான கதாநாயகி, போதுமான வில்லன் என மக்களைக் கவர்ந்தது இந்தப் படம்.

நகைச்சுவை படங்கள்

இந்த ஆண்டில் ஏராளமான முழு நீள நகைச்சுவைப் படங்கள் வந்தன. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விவரமான ஆளு, ஷக்கலக்க பேபி, சார்லி சாப்ளின், ஒன் டூ த்ரி, தென்காசிப் பட்டணம், சுந்தரா டிராவல்ஸ், நைனா, இதில் சார்லி சாப்ளின் இந்திக்கு நோ எண்ட்ரி என்ற பெயரில் சென்றது. பம்மலும், தந்திரமும் சன் டிவிக்கு விடுமுறை நாட்களில் காலை 11க்கு திரையிட உபயோகப் பட்டது.

ஏமாற்றங்கள்

99 படையப்பாவுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து வந்த படம் பாபா. மதுரையில் இப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கைச் சுற்றி அதிகாலை இரண்டு மணிக் காட்சி காண்பதற்காக
ஒரு கிமீக்கு ரசிகர் வெள்ளம். இரவு 9 மணியில் இருந்தே பட்டாசு சத்தமும், குரலோசையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இங்கயே கத்தி தீர்த்துடாதீங்கடா, படத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க என்று பில்லா காலத்து ஆட்கள் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். படம் ஆரம்பித்தது. ஏதோ நியூஸ் ரீல் போல புண்ணிய ஷேத்திரங்கள், சாமியார்கள் என போய்க் கொண்டிருந்தது. ரஜினி ஒரு டர்ன் செய்து ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லி அறிமுகமாக மொத்த கூட்டத்துக்கும் பியூஸ் போனது. அவர்கள் பிரகாசமான மீண்டும் மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.

கன்னத்தில் முத்தமிட்டால் என்று மணிரத்னம் வந்தார். ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என யாரும் அங்கே போகவில்லை.

கமர்சியல் ஹிட்டுகள்

ஏ வி எம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரம், சரண் காம்பினேஷனில் எடுத்த ஜெமினி நல்ல வசூலைக் குவித்தது. கலாபவனின் மிருக மிமிக்ரி, சேட்டுப் பொண்ணு, ஓ போட்ட பாடல் என கலவை சரியாக அமைந்து வெற்றி பெற்ற படம் இது. இதே ஆண்டு வந்த சாமுராயும், கிங்கும் விக்ரமுக்கு தோல்வியைத் தந்தன.

ரெட், ராஜா என படு தோல்விகளுக்குப் பின் அஜீத்துக்கு வாழ்வு தந்தது வில்லன். யூகி சேதுவின் கதை, கே எஸ் ஆரின் திரைக்கதை, அஜீத்தின் நடிப்பு வெற்றிக்குப் போதுமானதாய் இருந்தது.

சூர்யா


உன்னை நினைத்து, ஸ்ரீ என அடிவாங்கினார்.

விஜய்

தமிழனில் சறுக்கினாலும் யூத்தில் நிலை கொண்டார்.

14 comments:

CS. Mohan Kumar said...

2011/ 2012-க்கு எப்ப வருவீங்கள் தலைவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு லேட்டா 2002 வந்திருக்கு....?

முரளிகண்ணன் said...

மோகன் குமார் வருகைக்கு நன்றி. சீக்கிரம் வந்துடறேன்.

ராமசாமியண்ணே வாங்க. நான் 1936ல இருந்து ராண்டமா ஒவ்வொரு வருஷமா எழுதிக்கிட்டு வர்றேன். வருகைக்கு நன்றின்னே

கார்க்கிபவா said...

youth. விஜயின் ஜாலியான படங்களில் முக்கியமானது. பாட்டு எல்லாம் செம செம :)

kanagu said...

அருமையான தொகுப்பு அண்ணா :) :)

பாபா பற்றிய செய்திகள் அருமை :)

உண்மையிலேயே தனுஷ் இவ்வளவு தூரம் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

முரளிகண்ணன் said...

நன்றி கார்க்கி. ஆல் தோட்ட பூபதியையும், சக்கரை நிலவையும், ஆனந்தம் பாட்டையும் எப்படி மறக்க முடியும்?. பதிவின் நீளம் கருதி சொல்லாமல் விட்டு விட்டேன். இனி இரண்டு பாகமாக போடுகிறேன்


நன்றி கனகு

chennaivaasi said...

Hi Murali,

Thanks for a very good post. A couple of things... Kunal acted in the most # of movies as hero in this year (if not in 2001). I strongly condemn this bias :-)))

Monal committed suicide. Villan was released in 2004 based on his performance in Ramana. Vijayan (Uthiripookal) made a comeback this year in Ramana.

முரளிகண்ணன் said...

நன்றி சென்னைவாசி

மேலதிக தகவல்களுக்கு நன்றி. குணால் மோனல் இருவரும் தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்

Karaikudiyaan said...

Block Burster Baasha2 Bagavathi?

Karaikudiyaan said...

Block Burster Baasha2 Bagavathi?

Thava said...

இதுதான் தங்களது வலைப்பூவுக்கு வருவது முதல் முறை என்று நினைக்கிறேன்,
இண்டிரஸ்டிங்கான தலைப்பு..படிக்கவே ஆர்வமாக இருக்கிறது..இந்த மாதிரி கடந்தக்கால சினிமா அலசல்கள் மிக முக்கியம்.நாம் பார்த்தவற்றை நாமே மீண்டும் அலசி பார்க்கலாம்/நன்றி.

Bruno said...

//Villan was released in 2004 based on his performance in Ramana//

வில்லன், பைவ் ஸ்டார் இரண்டும் 2002 வருட இறுதியில் வெளியான படங்கள்

அத்துடன் கதிர் இயக்கத்தில் ஷாலினின் அண்ணன் நடித்த படம் ஒன்று வந்த ஞாபகம்

Bruno said...

கன்னத்தில் முத்தமிட்டால்

2002 பிப்ரவரி 14ஆம் தேதி அந்த படம் வெளியிடப்பட்டது என்று நினைக்கிறேன். அப்பொழுது எங்கள் வகுப்பு மருத்துவக்கல்லூரி இளங்கலை (MBBS) படிப்பை முடித்து பதிவு செய்து விட்டு வந்திருந்தோம். எங்களுக்கு அடுத்த வகுப்பு மாண்வர்களுக்கு தேர்வு முடிவு வந்த நேரம் என்று ஒரு பெரிய கும்பலே பயங்கர உற்சாக திருநெல்வேலி பாம்பே திரையரங்கிற்கு சென்றது.

அதற்கு முன் 2000ல் வந்த மணிரத்னம் படம் அலைபாயுதே காதல் கதை என்பதும், அப்பொழுது உச்சத்தில் இருந்த சிம்ரனும் மாதவனும் நடித்த படம் என்பதும் பிப்ரவரி 14 வெளியிடு என்பதால் கல்லூரி கூட்டத்தின் உற்சாகத்திற்கு குறைவில்லை

படம் ஆரம்பித்த போது இருந்த ஊ ஊ, ஏ, ஓ கூப்பாடுகள் சில நிமிடங்களிலேயே அடங்கி “அடப்பாவி 'உயிரே' போலிருக்கு” என்ற சில கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.(உயிரே அலையாயுதேவிற்கு முன்னர் 1998ல் வந்த மணிரத்னம் படம்)

மேலும் சில நேரம் கழித்து அரங்கம் முழுவது நிசப்தம்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகூடங்களில் இலங்கை தமிழர்கள் படிப்பது வழக்கம். அவர்கள் உபயோகிக்கும் பேனா மற்றும் பிற பொருட்களையும், விடுமுறைக்கும் இலங்கைக்கு விமானத்தில் சென்று வருவதையும் பார்த்த எங்களுக்கு அங்கு இருக்கும் அனைவரும் வசதியானவர்கள் என்ற எண்ணம் தான் (பள்ளி காலங்களில்) இருந்தது.

உயிரை பணயம் வைத்து தோனியில் வருபவர்களையும், இங்குள்ள முகாம்களின் நிலையும் எனக்கு மாணவ நாட்களின் தெரிந்திருக்க வில்லை

என்னுடம் படம் பார்த்த பலரும் அதே நினைப்புடன் தான் படத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர்களும் யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் அறைசாத்தியது நிஜம்

வழக்கமாக இடைவேளை வந்த உடன் அவசரமாக வெளியில் ஓடி முதலில் பாப்கார்ன் வாங்கும் அவசரத்தில் ஓடுபவர்கள் கூட அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள்

அந்த படம் குறித்து பல விமர்சணங்கள் இருக்கலாம். உதாரணமாக சுதந்திர போராட்டத்தை வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என்று கொச்சை படுத்தும் சுஜாதாவின் வசனங்கள்

ஆனால் தமிழகத்தில் ஈழ்ப்பிரச்சனை குறித்த புரிதல் / ஆர்வம் இல்லாதவர்களை கூட அந்த பக்கம் திருப்பிய படம் அது.

பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா என்ற வரிகளின் பின்னிருக்கும் வலி நீண்ட நாட்களுக்கு மனதை விட்டு அகலவில்லை

இந்த படத்தின் மற்றொரு பாடலான வெள்ளைப்பூக்கள் மிகச்சிறந்த பாடல். தேசிய விருது பெற்ற பாடல் என்று நினைக்கிறேன். நேர்மறை எண்ணங்களையும் சுபிட்சத்தையும் வேண்டும் வரிகள்

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

எங்கு சிறு குழந்தை - தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே.

பாடல் வரிகள் ஆயில்யன் அவர்களின் பதிவில் இருந்து (அவரது அனுமதியின்றி !!) எடுக்கப்பட்டது. அவருக்கு நன்றி :) :)

மாதவன் சிம்ரன் காதல் காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கும். அதிலும் அந்த குழந்தையை தத்து எடுக்கும் காட்சி “டாப் க்ளாஸ்”

குழந்தையின் வளர்ப்பு தாத்தா தான் அந்த குழந்தை பிறந்த போது அந்த முகாமில் இருந்த அதிகாரி என்பதை எத்தனை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

Bruno said...

2003 குறித்து நானும் எழுதியுள்ளேன்