March 12, 2012

ஜெர்மானியத் தொழில்நுட்பம் – அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

“ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது”

எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?

அதற்கு அவர் சொன்னார்,

நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வோம். என்றார்.

அதாவது ஒரு பாலத்தில், 1000 டன் எடையுள்ள புகைவண்டி, 100கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 10 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.

பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.

பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும். என்றார்.


இதே போல ராணுவத்திலும் பேக்டர் ஆப் சேப்டி என்பது, குறைந்தது ஐந்துக்கு மேல் இருக்கும். அதை மில் (mil standard) ஸ்டேண்டர்ட் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் அந்த உபகரணம் 100% திறனுடன் செயல்பட வேண்டும் என்பதால்.

இந்திய ராணுவத்தில் வில்லிக்ஸ் (WILLYX) என்ற ஜீப் முன்னர் இருந்தது. (அமெரிக்கத் தயாரிப்பு) தன்னுடைய பணிக்காலம் முடிந்ததும், அது ஏலத்துக்கு வரும். மக்கள் அதனை போட்டி போட்டு வாங்குவார்கள். கோவை உட்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி மற்றும் அதன் உட்பகுதி கிராமங்களில் பண்ணையார்கள் இந்த வில்லிக்ஸ் ஜீப்பைத்தான் முன் பயன்படுத்துவார்கள். அதே போல ஆந்திரா ஜமீந்தார்கள், நிலச்சுவான்தார்கள் எல்லாம் இந்த ஜீப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

போலவே, வடமாநில கிராமங்களிலும் இந்த ஜீப்புக்கு பெரும் மவுசு உண்டு. பீகார் மாநில உயர்த்தப்பட்ட ஜாதியினர் தாங்கள் வைத்திருக்கும் பிரத்யேக படைகளுக்கு (ரன்வீர் சேனா போல) இந்த வாகனத்தைத் தான் பயன்படுத்துவார்கள். தங்கள் ஜாதிக்குரிய அடையாளம் அல்லது அரிவாள், கோடாலி, துப்பாக்கி போன்ற மாடல்களுடன் இந்த ஜீப்பை அலங்கரிப்பார்கள். பல திரைப்படங்களிலும் நாம் இதனைக் காணலாம். தயாரிப்பாளர் நிர்ணயித்த ஆயுட்காலம் முடிந்து பல ஆண்டு கழித்தும் சிங்கம் போல் கர்ஜிக்கும் திறன் கொண்டவை இவை.

இந்த ஜீப் வாங்கும் போதே, டெண்டருக்கு இன்னொரு ஜெர்மன் ஜீப்பும் வந்தது. வில்லிக்ஸை விட பெர்பார்மன்ஸ் அதிகம் கொண்ட ஜீப். ஆனால் அப்பேர்பட்ட ஜீப்பின் மைனஸ் எரிபொருள் சிக்கனம். வெயிலில் களைப்படைந்து வந்தவன் மண்பானைத்தண்ணீரை மடக் மடக் என்று குடிப்பதைப் போல எரிபொருளை விழுங்கும் இது.

இதற்கு காரணம் இந்த ஜீப்பின் எடை என்பதால், இந்திய ராணுவத்தினர் இதன் எடையைக் குறைத்து தங்களுக்கு வழங்குமாறு அதன் ஜெர்மானியத் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன், இந்த ஜீப்புக்கு ஐந்து கோட்டிங் பெயிண்ட் அவர்கள் அடிப்பார்கள். அதைக் குறைத்து ஒரு கோட்டிங் அடித்தாலே 50 கிலோ வரை எடை குறையும்.

ஆனால் அந்தக் கம்பெனி அதற்கு மறுத்துவிட்டது. இந்த தகவலை நான் கேட்டபோது, எனக்கு ஹென்றி போர்டின் ஞாபகம் வந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு காரணமான ட்ரான்ஸ்பர் லைன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவர் சொல்லுவார்.

“மக்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் நான் கறுப்பு நிறத்தைத் தான் அவர்களுக்கு கொடுப்பேன்”

என்று.

காரணம், தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் அவர்கள் கண்டறிந்தது, கறுப்பு நிறம் மற்ற நிறங்களை விட விரைவில் காயும் என்பதே.

பெயிண்ட் காய்வதற்காக நான் அதிக நேரம் என்னுடைய காரை தொழிற்சாலையில் நிறுத்தினால் அதன் விலை கூடிவிடும். பின் எப்படி சாமானியனும் வாங்கும் விலையில் அதைத் தர முடியும் என்பார்?

இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது ஜெர்மன் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏனென்றால் ஹிட்லர். ஆனால் ஒரு பொறியாளனாக என்னை ஜெர்மனி ஈர்த்தது என்றே சொல்லலாம்.

நாம் இந்திய, சீன, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மானிய பொருட்களை நம் வாழ்வில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நாடும், தங்களுக்குரிய ஐடியாலஜி படி தங்கள் பொருளைத் தயாரிக்கின்றன.

சீனா – உபகரணம் கொடுத்த காசுக்கேற்ப அந்த வேலையை செய்து விடும், குறைவாக காசு கொடுத்தால், தவறி விழுந்தால் கேட்கக் கூடாது. நீடித்து உழைக்குமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.மாவுக்கேற்ற பனியாரம் தான் அவர்கள் கொள்கை.

ஜப்பான் – இதை விட அதிக தரம் இந்த வேலைக்குத் தேவையில்லை (ஆப்டிமைசேஷன்). (குறிப்பிட்ட அளவு கேரண்டி)

அமெரிக்கா – வேலை செய்யும். தப்பு பண்ணினா வேற தர்றோம்.

ஜெர்மன் – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.


இந்த கொள்கைதான் அவர்கள் அடிநாதம்.

எல்லோருக்கும் தெரிந்த காரை எடுத்துக் கொள்வோம்.

கார்களுக்கு உள்ளே ஓடும் வயர்களின் தூரம் குறைந்தது 5 கி மீ இருக்கும். இதற்கு டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள், 2 மிமீ தடிப்பான இன்சுலேசன் மற்றும் மேற்புற உரை போதுமென்று தீர்மானித்தால் (ஆப்டிமைசேஷன்), ஜெர்மானிய பென்ஸ்,ஆடி, ஸ்கோடா, பி எம் டபிள்யூ போன்றவை 6 மிமீ திக்கான வயராக அதை தயாரிப்பார்கள். இதனால் செலவு கூடும், காரின் எடை அதிகரிக்கும் அதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கும். ஆனாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அதேபோல பெயிண்ட், முன்பு ஆர்மி டெண்டருக்கு வந்த ஜீப்புக்கு  சொன்னது போலத்தான், தாராளமாகச் செய்வார்கள். அதனால் தான். ஸ்கிராட்ச் ஆனாலும் உள்ளிருக்கும் பெயிண்ட் மானம் காக்கும்.

நம் இந்தியத் தயாரிப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு, அந்தப் பொருள் எல்லா காலநிலைக்கும் தாங்குமா என்று பார்க்கமாட்டார்கள். ஐடியா கிடைத்ததும், டிசைன் செய்து, தயாரிப்புக்கு அனுப்பி விடுவார்கள். ப்ராடக்ட் டெவலப்மெண்ட் சைக்கிள் கால அளவு மிக குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஜெர்மன் கம்பெனிகளில், தாங்கள் டிசைன் செய்த பாகங்களை புரோட்டோடைப் ரெடி செய்து கம்பெனியின் மேற்கூரையில் போட்டு விடுவார்கள். அது பனி, வெயில், மழை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். நான்கு பருவங்களும் முடிந்த பின்னர், அதனை எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அது அக்செப்டபிள் லெவலில் இருந்தால் மட்டுமே, அதனை அப்ரூவ் செய்வார்கள். எனவே அந்தப் பொருள் எந்தச் சூழலையும் தாங்கும்.

இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே விண்டர்,ஆட்டமன், சம்மர், ஸ்ப்ரிங் என்று நான்கு காலநிலைகள் உள்ளன. ஆனால் நமது விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. சம்மர் மற்றும் ஹாட்சம்மர். ஏப்ரல், மேயில் ஹாட் சம்மர் மற்ற மாதங்கள் சம்மர் என்று நண்பர்கள் கலாய்த்தார்கள்.

அதே போல பாக்டர் ஆப் சேப்டி. ஒருமுறை நான் உபயோகித்த லோட் செல் 400 டன் வரை உள்ள தாக்கும் எடையை அளக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்டது. பொதுவாக மற்ற நாட்டு தயாரிப்புகள் 300 டன் வரையே தாக்கும் எடையை நன்கு அளக்கும். அதன்பின் அதன் லீனியாரிட்டி குறையும். 400டன்னுக்கு மேல் எடை தாக்கினால் செயல் இழந்து விடும்.

சரியாக கணக்கிடாமல், 600 டன் வரை அதில் வேகமான எடை விழும்படி தவறு செய்து விட்டேன். ஆனாலும் அது அசரவில்லை. விழுந்த எடை 600 டன் என காட்டியது. அடுத்தடுத்தும் நன்கு இயங்கியது. ஏனென்றால் அது ஜெர்மானிய தயாரிப்பு.

சாதரணமான ஒரு டூல். ரின்ச்சஸ் (wrenches) எடுத்துகோங்க. நம்ம நாட்டிலே எது ஒசத்தின்னு கேட்டா "டபாரியா" மேக் தன் பெஸ்ட்ன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு டபாரியா ரின்ச் வச்சுகிட்டு பத்தாவது மாடில ஸ்கஃபோல்டிங்ல வேலை பார்க்கும் ஒருத்தன் அதை கீழே தவறி போட்டுட்டா அது ஒரு காண்ட்கிரீட் தரையில் விழுந்தா டமால் தான். ஆனா அதே ஜெர்மானியின் USAG, UPAK பிராண்டு வாங்கி புர்ஜ் கலீஃபாவின் 160 வது மாடில இருந்து கீழே போட்டுட்டு கீழே வந்து அவ்வை நெல்லிக்கனியை ஊதி எடுத்து சுருக்குப்பையிலே போட்டுகிட்டு போவது போல டூல் பாக்ஸ்ல போட்டு கிட்டு நடையை கட்டலாம்.  காரணம்  "பாக்டர் ஆஃப் சேஃப்டி".

அவர்கள் வாட்ச் சிலது பார்த்தா "22 மீட்டர் கெப்பாசிட்டி"ன்னு போட்டிருக்கும். ஆனா அது 40 மீட்டர் உயரத்தில் இருந்து போட்டாலும் ஒன்னும் ஆகாது. ஏன்னா அவங்களின் "பாக்டர் ஆஃப் சேஃப்டி" சதவிகிதம் பத்து முதல் 15 வரை.

உதாரணத்துக்கு ஒரு தராசு இருக்குன்னு வச்சுகுங்க. ஒரு நாளைக்கு ஒருவன் அந்த தராசில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு 500 முறை நிறுவை செஞ்சு போடுவான். அந்த தராசு ஒரு இரண்டு மாதத்தில் கன்ஸ்யூமருக்கு ஒரு கிலோ சரக்கு தருவதுக்கு பதில் ஒரு கிலோவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆகிடும். ஏன்னா அது உழைக்கும் உழைப்பு அப்படி. எதுனா நெளிஞ்சு போகும். எடையில் வேரியேஷன் இருக்கும். அதை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை காலிப்ரேஷன்க்கு அனுப்பினா அவங்க சர்வீஸ் செஞ்சு அதே ஒரு கிலோ மட்டும் சரியா இருப்பது போல மாத்தி தருவாங்க. (நான் இங்க தராசு - கத்தரிக்காய்னு சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே. )

ஆனால் ஜெர்மானிய டூல்ஸ் எல்லாம் விற்பனையின் போதே இதன் காலிப்ரேஷன் பீரியட் 6 மாதம் அல்லது ஒரு வருஷம் ஆனா 100 சதம் யூஸ் பண்ணினா மட்டுமே என்ற குறிப்போடு வரும். அப்படி 100 சதம் நாம அதை யூஸ் செஞ்சாலும் காலிப்ரேஷன் அனுப்பும் போது அதன் வேரியேஷன் என்பது 0.1 சதம் தான் இருக்கும் என்பது கண்கூடு. (மற்ற நாட்டு பொருட்கள் 5 முதல் 7 சதம் வரை வேரியேஷன் இருக்கும்)அப்படின்னா அதன் தரம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்க.

அதனால் தான் ஹை பிரிசிசன் மெசின் என்றாலே ஆக ஒரு லெவல் மிஷின் ல அதாவது 100 மாடி, 150 மாடி கட்டிடம் கட்ட லெவல் மிஷின் என்பது எத்தனை துல்லியமாக இருக்க வேண்டும் தெரியுமா? கொஞ்சம் மாறினா கூட பில்டிங் பைசா நகரத்து சாய்ந்த பில்டிங் மாதிரி ஆகிடும். அப்படி இருக்கும் போது ஒரு கஸ்டமர் ஜெர்மன் மிஷின் வாங்குவானா? அல்லது விலை குறைவா இருக்குன்னு வேற மிஷின் வாங்குவானா?

ஆகா அவங்க தரத்தில் நோ காம்ப்ரமைஸ் என்பதால் வியாபாரம் பத்தி அதிகம் கவலைப்படாமல் தானாக விற்பனை ஆகிவிடும். ஆக அவங்க கொள்கையில் உறுதியா இருக்காங்க. அதனால நாம எல்லாம் அதை நம்பி வாங்கும் அளவும், அதை புகழும் அளவும் ஜெர்மானிய பொருட்கள் இருக்கு.

அதே போல ஜெர்மானியர்கள் ஒரு பொருளை தயாரிக்கும் போது தரம் என்பதை மட்டுமே கொள்கையா வச்சிருக்காங்களே தவிர அது எங்க தயாராகுது, எந்த நாடு, எவன் அதை தயாரிக்கிறான் என்பதை பார்ப்பதில்லை. உதாரணம் அப்போதே ஹிட்லர் கோவையில் இருந்த ஜி டி நாயுடு கிட்டே ஹாட்லைன் போன் செஞ்சு வாங்கி பயன் படுத்தியதோடு அதே போல அங்கயும் தயரிச்சார் என்பதும் இப்போதும் பி எம் டபில்யூ காருக்கு தேவையான ஒரு சின்ன ரப்பர் (சுண்டுவிரலில் மாட்டிக்கும் அளவிலான) ஓ ரிங் மாயவரத்தில் சுஜா ரப்பர் பேக்டரி என்னும் நிறுவனத்தில் இருந்து தான் போகுது என்பதெல்லாம் சின்ன உதாரணங்கள்.

சிவகாசி பிரிண்டிங் பிரஸ்களில் ஜெர்மன் மிசின்களுக்கு இருக்கும் மதிப்பே அலாதி.  ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் மிசின்கள் தான் அங்கே  பேவரைட். அதை செகண்ட் ஹேண்ட் என்ன போர்த் ஹேண்டில் கூட வாங்குவார்கள்.

ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பதைப் போல், ஜெர்மனியின் பென்ஸ்,ஆடி, பி எம் டபிள்யூ கார்களில் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அட்லீஸ்ட் அதில் ஒரு பயணமாவது ஏதாவது நண்பர்கள் தயவில் நடக்கும் என நினைக்கிறேன். என் அம்மா- தாத்தா வீட்டில் 60 ஆண்டுகளாக இன்றும் பாடிக்கொண்டிருக்கும் ஜெய்கோ ஜெர்மன் வால்வ் ரேடியோவையாவது ஒரு அமவுண்ட் கொடுத்து மாமாவிடம் இருந்து வாங்கி விட வேண்டும்.

25 comments:

சரவணகுமரன் said...

அருமையான தொழில்நுட்ப பதிவு. நீங்கள் எழுதும் சினிமா பதிவுகள் போலவே, இதுவும் சுவாரஸ்யம்.

முரளிகண்ணன் said...

நன்றி சரவணகுமரன்.

Balakumar Vijayaraman said...

மிக எளிமையாகவும், அதே நேரம் ஆழமாகவும் தொழில்நுட்பத்தை விளக்கியுள்ளீர்கள். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி அண்ணே!

manjoorraja said...

தரமான பொருட்கள் என்றாலே அது ஜெர்மனி தான்.


அருமையான பயனுள்ள பதிவு.

நன்றி முரளி.

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

நன்றி மன்சூர்ராஜா

Indian said...

//இவ்வளோ நல்லா பண்ணுறாங்க. ஆனா சாப்ட்வேர் மற்றும் கணிணியில அவங்க ஒண்ணும் பெரிசா சாதிக்கலையே? என்றார்.
//

SAP?

முரளிகண்ணன் said...

இந்தியன்,

சாப், அது பெரும்பாலும் மெக்கானிக்கல் துறைக்கே பயன்படுகிறது.

விண்டோஸ் போலோ, யுனிக்ஸ் போலோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், கணிணி தயாரிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற ஏரியாக்களில் அவர்களின் பங்களிப்பு ஏன் இல்லை என்ற ஆதங்கத்தில் ஜாலியாக நண்பர்கள் அடித்த கமெண்ட் அது

தராசு said...

தலைவரே,

ஜெர்மனியின் இந்த தொழில் புரட்சியில் ஹிட்லருக்கு பெரும் பங்கு உண்டு.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், உலகம் முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற வெறி கொண்ட ஹிட்லர் நாட்டின் அனைத்து உற்பத்திகளையும் நிறுத்தி விட்டு வெறும் ஆயுதங்களும், ஆயுதம் சார்ந்த இயந்திரங்களும் மட்டுமே தயாரிக்க கட்டளையிட்டார்.

அப்படி தயாரிக்கப்படும் இயந்திரங்களில் பழுது என்ற சொல்லே இருக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்கினார். ஆகவே தான் இன்றும் ஜெர்மனிய பொருள்களில் பழுது என்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால் இது ஒரு விபரீத விளைவையும் ஜெர்மனியில் விளைவித்தது. தங்கள் நாட்டு இயந்திரங்கள் என்றுமே பழுதாவதில்லை என்ற இறுமாப்பு ஜெர்மானிய இன்ஜினியர்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அவர்கள் இன்னும் அந்த இரண்டாம் உலகப் போர் கால உற்பத்தி நிபுணங்களின் போதையில் கண்முடி திளைத்திருக்க, மற்ற நாடுகளெல்லாம் சந்தடியின்றி சந்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல டெக்னிக்குகளை களமிறக்கி விட்டன.

ஜெர்மனி கண் திறந்து பார்த்த பொழுது உலகம் எங்கேயோ போய் விட்டிருந்தது. இன்னும் என்னோடு பணி செய்யும் பல ஜெர்மனிய இன்ஜினியர்கள் அந்த பழைய போதையிலிருந்து வெளி வரவில்லை.

அதனால்தான் அவர்கள் எதையும் தாங்கும் (Robust) இயந்திரங்களை உருவாக்கினாலும் இன்னும் சந்தையில் அதை விற்க முடியாமல் திணறுகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறை ஜெர்மானியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாயையிலிருந்து வெளி வருகிறார்கள் என்பது உண்மை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நிறைய தகவல் நிறைந்த களஞ்சியமாய் இந்த பகிர்வு. மோட்டார் தொழில்நுட்பத்தில் ஜெர்மனி நம்பர் ஒன்னு என்று இந்த பகிர்வின் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி முரளி.. தொடருங்க‌

குறை ஒன்றும் இல்லை !!! said...
This comment has been removed by the author.
குறை ஒன்றும் இல்லை !!! said...

பல நல்ல விசயங்களை தெரிந்து கொண்டேன்.. அடுத்த முறை செல்லும் போது இன்னமும் கவனித்து பகிர்கிறேன்..

நன்றி அண்ணே !

☼ வெயிலான் said...

// விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. சம்மர் மற்றும் ஹாட்சம்மர். ஏப்ரல், மேயில் ஹாட் சம்மர் மற்ற மாதங்கள் சம்மர் //

:)

வினையூக்கி said...

//இவ்வளோ நல்லா பண்ணுறாங்க. ஆனா சாப்ட்வேர் மற்றும் கணிணியில அவங்க ஒண்ணும் பெரிசா சாதிக்கலையே?// They did, SAP is an example :)

அபி அப்பா said...

ஜெர்மானியர்கள் "செய்வன திருந்தச்செய்" ரகம். அங்க புரடக்ஷன் இஞினியரை விட தரக்கட்டுப்பாடு இஞினியருக்கு சம்பளமும் அதிகம் என்பதை நான் கண்கூடா கண்டவன். அவங்க கூட ஒரு மூன்று வருஷம் குப்பை கொட்டியவன் என்பதால் எனக்கு அது தெரியும். அப்படின்னா அவங்க "மோட்டோ" என்ன? வியாபாரம் என்பதை விட நாட்டின் பெயர் முக்கியம்... தரம் முக்கியம் என நினைக்கும் மனோபாவம் தான் இப்படி ஒரு பதிவு நம்ம சயிண்டிஸ் போடும் அளவு காரணம்.

சாதரணமான ஒரு டூல். ரின்ச்சஸ் (wrenches) எடுத்துகோங்க. நம்ம நாட்டிலே எது ஒசத்தின்னு கேட்டா "டபாரியா" மேக் தன் பெஸ்ட்ன்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு டபாரியா ரின்ச் வச்சுகிட்டு பத்தாவது மாடில ஸ்கஃபோல்டிங்ல வேலை பார்க்கும் ஒருத்தன் அதை கீழே தவறி போட்டுட்டா அது ஒரு காண்ட்கிரீட் தரையில் விழுந்தா டமால் தான். ஆனா அதே ஜெர்மானியின் usag, upak பிராண்டு வாங்கி புர்ஜ் கலீஃபாவின் 160 வது மாடில இருந்து கீழே போட்டுட்டு கீழே வந்து அவ்வை நெல்லிக்கனியை ஊதி எடுத்து சுருக்குப்பையிலே போட்டுகிட்டு போவது போல டூல் பாக்ஸ்ல போட்டு கிட்டு நடையை கட்டலாம். என்ன காரணம்னு யோசிச்சு பார்த்தா இந்த பதிவிலே மு.க. சொன்னது போல "பாக்டர் ஆஃப் சேஃப்டி" என்கிற ஒத்தை வார்த்தை தான் அவர்களின் பிரதானம்.

அவர்கள் வாட்ச் சிலது பார்த்தா "22 மீட்டர் கெப்பாசிட்டி"ன்னு போட்டிருக்கும். ஆனா அது 40 மீட்டர் உயரத்தில் இருந்து போட்டாலும் ஒன்னும் ஆகாது. ஏன்னா அவங்களின் "பாக்டர் ஆஃப் சேஃப்டி" சதம் பத்து முதல் 15 வரை.

உதாரணத்துக்கு ஒரு தராசு இருக்குன்னு வச்சுகுங்க. ஒரு நாளைக்கு ஒருவன் அந்த தராசில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு 500 முறை நிறுவை செஞ்சு போடுவான். அந்த தராசு ஒரு இரண்டு மாதத்தில் கன்ஸ்யூமருக்கு ஒரு கிலே சரக்கு தருவதுக்கு பதில் ஒரு கிலோவுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆகிடும். ஏன்னா அது உழைக்கும் உழைப்பு அப்படி. எதுனா நெளிஞ்சு போகும். எடையில் வேரியேஷன் இருக்கும். அதை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை காலிப்ரேஷன்க்கு அனுப்பினா அவங்க சர்வீஸ் செஞ்சு அதே ஒரு கிலோ மட்டும் சரியா இருப்பது போல மாத்தி தருவாங்க. (நான் இங்க தராசு - கத்தரிக்காய்னு சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே. )

ஆனால் ஜெர்மானிய டூல்ஸ் எல்லாம் விற்பனையின் போதே இதன் காலிப்ரேஷன் பீரியட் 6 மாதம் அல்லது ஒரு வருஷம் ஆனா 100 சதம் யூஸ் பண்ணினா மட்டுமே என்ற குறிப்போடு வரும். அப்படி 100 சதம் நாம அதை யூஸ் செஞ்சாலும் காலிப்ரேஷன் அனுப்பும் போது அதன் வேரியேஷன் என்பது 0.1 சதம் தான் இருக்கும் என்பது கண்கூடு. (மற்ற நாட்டு பொருட்கள் 5 முதல் 7 சதம் வரை வேரியேஷன் இருக்கும்)அப்படின்னா அதன் தரம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்க. ஆக ஒரு லெவல் மிஷின் ல அதாவது 100 மாடி, 150 மாடி கட்டிடம் கட்ட லெவல் மிஷின் என்பது எத்தனை துள்ளியமாக இருக்க வேண்டும் தெரியுமா? கொஞ்சம் மாறினா கூட பில்டிங் பைசா நகரத்து சாய்ந்த பில்டிங் மாதிரி ஆகிடும். அப்படி இருக்கும் போது ஒரு கஸ்டமர் ஜெர்மன் மிஷின் வாங்குவானா? அல்லது விலை குறைவா இருக்குன்னு வேற மிஷின் வாங்குவானா?
ஆகா அவங்க தரத்தில் நோ காம்ப்ரமைஸ் என்பதால் வியாபாரம் பத்தி அதிகம் கவலைப்படாமல் தானாக விற்பனை ஆகிவிடும். ஆக அவங்க கொள்கையில் உறுதியா இருக்காங்க. அதனால நாம எல்லாம் அதை நம்பி வாங்கும் அளவும், அதை புகழும் அளவும் ஜெர்மானிய பொருட்கள் இருக்கு.

அதே போல ஜெர்மானியர்கள் ஒரு பொருளை தயாரிக்கும் போது தரம் என்பதை மட்டுமே கொள்கையா வச்சிருக்காங்களே தவிர அது எங்க தயாராகுது, எந்த நாடு, எவன் அதை தயாரிக்கிறான் என்பதை பார்ப்பதில்லை. உதாரணம் அப்போதே ஹிட்லர் கோவையில் இருந்த ஜி டி நாயுடு கிட்டே ஹாட்லைன் போன் செஞ்சு வாங்கி பயன் படுத்தியதோடு அதே போல அங்கயும் தயரிச்சார் என்பதும் இப்போதும் பி எம் டபில்யூ காருக்கு தேவையான ஒரு சின்ன ரப்பர் (சுண்டுவிரலில் மாட்டிக்கும் அளவிலான) ஓ ரிங் மாயவரத்தில் சுஜா ரப்பர் பேக்டரி என்னும் நிறுவனத்தில் இருந்து தான் போகுது என்பதெல்லாம் சின்ன உதாரணங்கள்.

ஆக தரம் சரியா இருக்கனும் என்பது அவர்களின் ஒரே தாரக மந்திரம்.

முரளிகண்ணன் said...

நன்றி தராசு

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி குறைஒன்றும் இல்லை

நன்றி வெயிலான்

நன்றி வினையூக்கி

நன்றி அபிஅப்பா

muthukumaran said...

அருமையான பதிவு.. தொடர்ந்து தொழில் நுட்ப பதிவு எழுத வாழ்த்துக்கள்.

@அபி அப்பா: உங்க கமெண்ட் ம் அருமை!!

sriram said...

சைண்டீஸ் மு க வுக்கும் சின்ன சைண்டீஸ் தொல்ஸுக்கும் நன்றி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முரளிகண்ணன் said...

நன்றி முத்துகுமரன் தேவதாஸ்

நன்றி ஸ்ரீதர் நாராயணன்

Sankar said...

ஜெர்மானியர்கள் மென்பொருள் துறையிலும் பெரிய ஆட்கள் தான். SAP உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று. ஜெர்மனியைச் சேர்ந்தது.

ஆண்டிராஇடு, கூகுல், பேஸ்புக் போன்ற தளங்களை இயங்கச் செய்யும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எழுதுபவர்களில் பெரும்பான்மையானோர் ஜெர்மானியர்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி சங்கர்

Thamira said...

1. நல்ல போஸ்ட். நன்றி முரளி.

2. //ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.// இது ரொம்ப ஓவரா இருக்கு. 1.10 லிருந்து அதிகபட்சம் 2.00 மடங்கு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கலாம்னு படிச்சா மாதிரி ஞாபகம்.

எளிய உதா: பொதுவாக தயாரிப்பில் டிஸைன் டாலரன்ஸ் தேவைப்படுவதை விட 2/3 ஆகவோ அதிகபட்சம் 1/2 வாக தருவதையோ சொல்லலாம்.

3. ஜெர்மன் மெகானிகல் துறையில் குறிப்பாக பெரிய்ய்ய்ய சைஸ் எந்திரங்கள் (ஹிஹி.. எனக்கு எதுல அனுபவமோ அதில்தானே கருத்து சொல்லமுடியும்?) செய்வதில் சாதனை செய்தவர்கள். சைஸ், லைஃப், குவாலிடி என எல்லாவற்றிலும் பெஸ்ட் தருவார்கள். சும்மா பத்து ஆனை தண்டிக்கு ஒரு மெஷின தூரத்திலிருந்து பார்த்தா ‘என்னா ஜெர்மன் மேக்கா?’னு தைரியமா கேட்கலாம். பெரும்பாலும் சரியா இருக்கும். தப்பா இருந்தாக்கூட தப்பா நினைக்காம விசியம் தெரிஞ்சவனா இருப்பான்னு நினைப்பாங்க. இது வெறும் ‘மித்’தா? அல்லது நிஜமா? இப்போ எப்படி?னு சொல்ற அளவு வரலாற்று அறிவு இல்லை. இருப்பினும் சீனியர்ஸ் கற்றுத்தந்தது இது.

4. ஒவ்வொரு நாட்டின் ஐடியாலஜி என்று நீங்கள் சொல்லியிருப்பது படிக்க சுவாரசியம்.
//ஜெர்மன் – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.// ஆனாலும் கொஞ்சம் உயர்வு நவிற்சி எனலாம். ஜெர்மனே ஆனாலும் கஸ்டமர் ரிக்கொயர்மெண்ட்தான் முக்கியம்.

எனக்கு ஒரு SPMல 0.2 பேஸவுட் வந்தா பரவால்லன்னா, இல்ல நான் பெஸ்ட் குவாலிடி 0.02தான் தருவேனு சொல்லி மெஷினுக்காக 2 மடங்கு தயாரிப்பு செலவுக்கு போக ஜெர்மன்காரன் மட்டும் லூசு அல்ல.

kanagu said...

அருமையான பதிவு அண்ணா.. மிகவும் ரசித்தேன்... :)

தொழில்நுட்பத்தை பத்தியும் சினிமா அளவுக்கு சுவாரஸியமா சொல்றீங்க :)

Bruno said...

இது குறித்து நாம் நேரில் உரையாடிய போது விவாதித்ததாக நினைவு

தற்சமயம் கோர்வையாக எழுதியுள்ளீர்கள்

ஹிட்லர் என்று இல்லை

அதற்கு முன்னரே அவர்கள் Physicsல் வெகு Strong

கண்டுபிடிப்புகளின் பட்டியலை பார்த்தாலே தெரியுமே :) :)

Vetirmagal said...

பொதுவாகவே தொழில் நுட்ப்ம், இயந்திரங்கள் பற்றி, பெண்களுக்கு , தெரிந்து கொள்ள, விருப்பம் இருக்காது. ஆனால், பதிவை படிக்கும் போது, பல செய்திகளை மதன்முறையாக மெரிந்து கொள்ளும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

ஜெர்மானியத் தொழில்நுட்பம்

பழுதுபடாத உயரிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..