May 10, 2012

சச்சினை ஏன் பிடிக்கும்?

பொதுவாகவே நான் இணைய மக்களுக்குத் தீனி போடும்

ரஜினி-கமல், அதிமுக-திமுக, ஆரிய-திராவிடம், ரஹ்மான் – ராஜா, டெண்டுல்கர்-கங்குலி+இதர ஆட்டக்காரர்கள் விவாதங்களில் பங்கெடுப்பதே இல்லை.


 அதற்கான வாதிடும் திறமை, தரவுகளை சாமர்த்தியமாக அடுக்குதல் போன்றவற்றில் கொஞ்சம் வீக் என்றாலும் முழு முதல் காரணம் அதனால் என்ன பயன்? என்பது தான் .


 இந்த 35 ஆண்டுகால பொதுவாழ்க்கையிலும் சரி, 10 ஆண்டுகால மண வாழ்க்கையிலும் சரி, 5 ஆண்டுகால இணைய வாழ்க்கையிலும் சரி நான் உணர்ந்து கொண்டது யாருடைய அபிப்பிராயத்தையும் வாதத்தால் மாற்ற முடியாது என்பதே. (முக்கியமாக என்னால்).

 ஆனால் ஏன் நான் அதை விரும்புகிறேன் என்று சொல்வதற்கு அல்லது ஒரு நிகழ்வு எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை பகிர்வதற்கு முழு உரிமையும் எனக்கு உண்டு. அந்த உரிமையிலே பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவு.



 அது 1986ஆம் வருடம். அப்பொழுதுதான் தொலைக்காட்சி வழியாக கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதல் இரண்டு ஆண்டுகள் வெறித்தனமாக பார்த்த எனக்கு 89 ஆம் ஆண்டில் கிரிக்கெட் பார்க்கவே பிடிக்கவில்லை. 87 உலகக் கோப்பை தோல்விக்கு பின் பொறுப்பேற்றுக் கொண்ட வெங்சர்க்கார் தலைமையில் அணி இன்னும் சொதப்பியது. ஒருவருடைய ஆட்டம் மட்டுமே பார்க்கும் படி இருந்தது. அவர் ஸ்ரீகாந்த். ஆனால் அவருக்கு கன்சிஸ்டென்ஸி கிடையாது மேலும் எல்லாவிதமான ஷாட்டும் ஆட மாட்டார். குவாலிட்டி சுவிங் பவுலிங் முன் அவர் ஒரு கைப்பிள்ளை. அசார், வெங்கி, அமர்நாத் எல்லாம் பொறி பறக்க ஆட மாட்டார்கள். சாஸ்திரி கால்குலேட்டட் ரிஸ்க் மட்டுமே எடுப்பார். கபில்தேவ் தன் வசந்த கால இறுதியில் இருந்தார். நல்ல பிளேயர் கிடைக்காமல் கல்லறையில் இருந்த அன்சுமான் கெயிக்வாட் என்பவரை யட்சினியை வைத்து எழுப்பி கூட்டி வந்து விளையாட விட்டார்கள். டபிள்யூ வி ராமன், அஜய் சர்மா என ரஞ்சி கிங்குகளையெல்லாம் கூட்டி வந்தார்கள். அவர்களும் சோபிக்கவில்லை. பவுலிங் அதை விட மோசம். கோபால் சர்மா என்றெல்லாம் கூட ஒரு ஆப் ஸ்பின்னர் இருந்தார், வேகப் பந்து வீச்சாளரே கிடைக்காமல் சஞ்சீவ் சர்மா என்பவரை வைத்து ஒப்பேற்றினார்கள்.


 ஆனால் இதே சமயத்தில் பாகிஸ்தானில் இம்ரான், வாஸிம், வக்கார், காதர் என்று ஜாம்பவான்கள் இருந்தார்கள். பேட்டிங்கிலோ சலிம் மாலிக், மியான் டாட் போன்ற பெருங்கைகளும் இருந்தன. இலங்கையில் டி சில்வா,ரணதுங்கா, மகனாமா போன்றவர்கள் அபாரமாக ஆடினார்கள். மேலும் ரிச்சர்ட்ஸ், மார்டின் குரோவ், அலன் லாம்ப், டீன் ஜோன்ஸ் எனப் பல அதிரடி ஆட்டக்காரர்கள் (அந்நாளைய கணக்கிற்கு) மற்ற அணிகளில் இருந்தார்கள். என்னடா நம்மாளுக இப்படி மழுமட்டயா விளையாடுறாங்களேன்னு ஆதங்கத்தில் இருந்த போதுதான் அந்த செய்தி வந்தது.



 டெண்டுலகர்ன்னு ஒருத்தண்டா, 16 வயசு, 13 பால்ல ஆப் சென்சுரி, அதுவும் அப்துல் காதிர் ஒவர்ல தொடர்ந்து நாலு சிக்ஸ் என்று.

 சிறு நகரங்களில் அந்நாளில் வசித்த டீன் ஏஜ் பையன்களுக்கு என்ன பொழுது போக்கு இருந்தது? வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், தாவணி போட்டு டைப்பிங் போகும் பெண்கள், மாதத்துக்கு ஒரு படம், பிளஸ் டூ மார்க்கை நோக்கிய பயணம்.


 இந்த சூழ்நிலையில் மோட்டிவேட் செய்ய, நம்மாளும் உலக தரத்துக்கு நிற்க முடியும் என்று காட்ட, தொடர்ந்து ஆர்வத்துடன் கிரிக்கெட்டை பார்க்க உதவியது சச்சின் தான். நான் அவரை மற்ற பிளேயர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதில்லை, ரெக்கார்ட் வைத்து அளப்பதில்லை. இன்று வரை யார் கேட்டாலும் எனக்குப் பிடித்த நடிகை ரோஜா என்றுதான் சொல்லுவேன். எத்தனை உலக அழகி வந்தாலும் எனக்கு ரோஜாதான் அழகு. கிரிக்கெட் தவிர எதுவும் தற்போது டிவியில் பார்க்காத நான் இன்றும் கூட ஜீ தமிழில் லக்கா கிக்கா பார்க்கிறேன்.

 எனக்கு சச்சின், மோகன் தாசுக்கு பாண்டிங், கார்க்கிக்கு கங்குலி எனக்கு கமல், கிரிக்கி ரஜினி, கார்க்கிக்கு விஜய் எனக்கு இளையராஜா புருனோக்கு ரஹ்மான் அது அவர் அவர் கால கட்டம், சூழ்நிலை, ஆல்டர்நேட் இல்லாமல் இருத்தல் குறித்தது. எனக்கு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும், மத்ததுவும் பிடிக்கும் என்பதே என் நிலைப்பாடு.

2 comments:

Balakumar Vijayaraman said...

"தன் இளமைப் பருவத்தின் கடைசி காலங்களில் ஒருவனுக்கு எந்த ரசனை பிடிக்கிறதோ, அதுவே அவன் வாழ்க்கை முழுமைக்கும் தொடரும்”

சொன்னது ஒரு சயின்ஸ்ட்.

உண்மை தான் :)

Arun Kumar said...

மகானாமா, ரணதுங்கே எல்லாம் 96 உலககொப்பைக்கு பிறகு தான் பார்க்முக்கு வந்தார்கள், மகானாமா மரண மொக்கை ஆள்.

ஓபனிங்க் ஆடி வரிசையாக கபில்தேவின் இன்சுவிங்கில் LBW வாங்கிய ஆள். அப்புறம் காலப்போக்கில் மிடில் ஆர்டர் ஆடி காணாமல் போனார்.

மகானாமா நல்ல பீல்டர்.ஆனா பிட்னெஸ் ரொம்ப மோசம். அதை அவர் கேரியர் ரிகார்டே சொல்லும்

ரணதுங்க.. பிட்னஸே இல்லாத உடம்பை வைத்து இருந்து இவர் சாதித்தது பெரிய மேட்டர் தான்.