பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு
நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.
1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல்
கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும்
ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய
கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே? என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.
ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க்
எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள் என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை
தெரிவிக்கவே இந்த பதிவு.
இந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம்
வகுப்பில் 485/500 க்கு மேல்
எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம்,
விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால்
அல்லது இரண்டு பாடங்களில் செண்டம்
எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே
இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)
பின் 450க்கு மேல்
எடுப்பவர்களுக்கும் சலுகை உண்டு. இப்படி சேரும் மாணவர்களை முதல் முன்று செக்ஷன்களில் வைத்துக்
கொள்வார்கள். பின் இப்பள்ளிகளின் ரிசல்டால் கவரப்பட்டு சேரும் ஆயிரம் மாணவர்களை
பின் உள்ள பத்து பதினைந்து செக்ஷன்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள்.
பல ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு அந்த முதல் மூன்று செக்ஷன்களுக்கே.
அந்த பையன்களே பின் செய்திதாள் விளம்பரத்தையும் அலங்கரிப்பார்கள்.
மற்ற பையன்கள் அனைவரும் 100ல் இருந்து 160 வரை மட்டுமே கட்டாஃப் மார்க்
எடுப்பார்கள். பெற்றோர்கள் இந்த உண்மை அறியாமல் தங்கள் பையன்களை திட்டி
சித்திரவதைப் படுத்துவார்கள்.
இந்த ஆண்டு எனக்குத் தெரிந்த பையன்களே பத்து பேர் வரையில் நாமக்கல் பள்ளிகளில்
படித்து 800 மதிப்பெண்களுடன் திரும்பியிருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கிருந்தே எடுத்திருக்கலாம்.
சரி இந்தப் பள்ளிகள் எப்படி வளர்ச்சியடைந்தன?
இதற்கும் 84ல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தோற்றத்திற்கும் நெருங்கிய
சம்பந்தம் உண்டு. எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் தொழிற்கல்வி பயில இண்டர்வியு முறை
ஒழிக்கப்பட்டு நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப் பட்டது. அதன் பின்னரே மதிப்பெண்
மோகம் எல்லாருக்கும் பரவியது.
80களின் மத்தியில் பல மாவட்டங்களில் தலைசிறந்த பள்ளிகள் என்றால் மூன்று
நான்குதான் இருந்தன. அவை பெரும்பாலும் அரசு உதவி பெற்று வந்த பள்ளிகள். அவற்றில்
குறைந்த அளவே மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பிருந்தது. எனவே அவை பத்தாம் வகுப்பில்
400க்கு மேல் எடுத்தால் தான் பிளஸ் 1 முதல் குரூப் என்று அறிவித்தன. அதே பள்ளியில்
படித்து 399 எடுத்த பையன் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிக்கோ அல்லது வேறு தனியார்
பள்ளிக்கோ செல்ல வேண்டியிருந்தது. இவை மாணவர்களை மன ரீதியில்
பாதிப்புக்குள்ளாக்கியது.
இதன்பின் பல தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிளஸ் 1 படிப்பிற்கு இடங்களை
அதிகரித்தன. ஆனால் அவை அடிமாட்டு விலைக்கு ஆசிரியர்களை நியமித்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை
அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள்
ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், துணை விடுதி காப்பாளர் கூட மிக தகுதி வாய்ந்த
ஆசிரியர் என்று களமிறங்கின. போதாக்குறைக்கு விடைத்தாள் திருத்தக்கூட தனி
ஆசிரியர்கள். அவர்கள் பொதுத்தேர்வில் எம்முறையில் திருத்துவார்களோ அதே முறையில்
திருத்தி மாணவர்களின் சாதக பாதகங்களையும் எழுதித்தருவார்கள். இதனால் பலரும் தங்கள்
பிள்ளைகளை இங்கே சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.
சரி அவ்வளவு தானே? முடிஞ்சா மார்க்
எடுக்கட்டும். இல்லையின்னா நன்கொடை கொடுத்துக்குறோம். இதுக்கு ஏன் ஒரு பதிவு என்று
கேட்கலாம். இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கும் முறை ஆபத்தானது. அதனால் தான் இந்த
புலம்பலே.
நான் பனிரெண்டாம் வகுப்பு வரை சிற்றூரிலேயே வசித்து வந்தேன். கல்லூரியில்
முதலாமாண்டு படிக்கும்போது, என் தந்தையின் பணிஉயர்வு மற்றும் இட மாறுதல் காரணமாக
மாவட்டத்தலைநகர் ஒன்றிற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின்
உரிமையாளர் கீழ் வீட்டிலும், மாடியில் நாங்களும். ஓனரின் மகன் பிளஸ் ஒன் படித்துக்
கொண்டிருந்தான். ஒரு நாள் டியூசனில் இருந்து வந்தவன் 138 மார்க் எடுத்துட்டேன், என
வீட்டில் சலம்பிக் கொண்டிருந்தான்.
பின் அவனிடம் விசாரித்தபோது இயற்பியலுக்கு டியூசன் செல்வதாகவும், பிளஸ் டூ
பாடத்தை இந்த ஆண்டே படிப்பதாகவும் கூறினான். காலையில் நடந்த இயற்பியல் பொதுத்
தேர்வின் வினாத்தாளுக்கு மதியம் 2-5 தேர்வு எழுதியதாகவும் அதில் 138/150 என்றும்
கூறினான். பின்னர் இந்த விடுமுறையில் கணித டியூசன் என்றும், பள்ளி தொடங்கிய பின்
வேதியியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினான். இது எனக்கு 91ல் கடும்
அதிர்ச்சி. ஆனால் இன்று சர்வ சாதாரணம். அப்போது கிராமத்தில் பிளஸ் 1 பாடத்தை
மாங்கு மாங்கு என்று படிப்பவனின் கதி?
பின்னர்தான் தெரிந்தது 9ஆம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும், 11ல்
12ஐயும் முடிக்கும் வசதி.
இதனால் என்ன நஷ்டம்?
ஒன்பதாம் வகுப்பில் வேதியியல், இயற்பியல் பகுதிகளை நன்கு படித்தால் அது நல்ல
அடித்தளத்தைக் கொடுக்கும். அதே போலவே 11லிலும். அதைவிட முக்கியம் 11ஆம் வகுப்பில்
படிக்கும் கணிதம். இண்டக்ரேஷன், டிஃப்ரனிசியேஷன், பார்சியல் டிஃப்ரனிசியேஷன், மேட்ரிக்ஸ் போன்றவற்றில்
அடித்தளமே இருக்காது 11ஆம் வகுப்பை ஸ்கிப் செய்வதால்.
சரி அதாவது தொலையட்டும், பிளஸ் 2 பாடமாவது சரியாக படிக்கிறார்களா? என்று
பார்த்தால் அதுவும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் நோட்ஸ், மாதிரி
வினாத்தாள், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எந்தப் பகுதியில் இருந்து
கேட்கப்படும் என்பதைச் சொல்லும் புளு பிரிண்ட் இவற்றைக் கருத்தில் கொண்டே
படிக்கிறார்கள்.
திருக்குறள் படித்தால் நாலடியார் தேவையில்லை என்பது போன்ற பெர்முடேஷன்
காம்பினேஷனிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இயற்பியல், கணிதத்தில் இப்படி
குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பதால் இவர்களின் பேஸ்மெண்ட் படு வீக்காக
இருக்கிறது.
புளூபிரிண்ட் படி படித்து மார்க் எடுத்து வருபவர்களால் பொறியியலில் சிறப்பாக
படிக்க முடியாது. அங்கும் வந்து மார்க் எடுக்கும் படி படித்து ஏதாவது மென்பொருள்
நிறுவனத்தில் ஐக்கியமாகி விடுகிறார்கள். கோர் இண்ட்ஸ்ட்ரீஸ் என்று சொல்லப்படும் நிறுவனங்களில்
இவர்களின் பங்கு மிகக் குறைவே. நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை
இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
அதனால் தான் கேட், ஐ ஈ எஸ் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி
விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. டி ஆர்
டி ஓ, ஐ எஸ் ஆர் ஓ போன்றவற்றில் கேரள, ஆந்திர மாணவர்களின் பங்கு அதிகரித்துக் கொண்டே
வருகிறது.
எனக்குத் தெரிந்த பையன் ஒருவன், பத்தாம் வகுப்பில் 412 மதிப்பெண்கள்
எடுத்தான். அவன் பெற்றோரும் மூன்று லட்சம் வரை செலவு செய்து நாமக்கல்லில் படிக்க
வைத்தார்கள்.
தொடர்ந்து குறைவான மதிப்பெண்களியே அவன் பெற்று வந்தான். தேர்வு நேரத்தில்
டென்ஷன், உடல்நிலை சரியில்லை என காரணங்கள் சொல்லி வந்தான். பிளஸ் 2 அரையாண்டுத்
தேர்வில் நான்கு பாடங்களில் பெயில். காரணம் கேட்டு பெற்றோர் அங்கு விரைந்த போது,
அங்கே நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்களை அதே குறையுடன் அங்கே பார்த்தனர்.
அவன் 11 ஆம் வகுப்பு சேரும் போது தெருவே அவனை எதிர்பார்தது. பெற்றோர், உறவினர்
எதிர்பார்ப்பு அவன் சுமையைக் கூட்டியது. அங்கே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால்
அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச் சிதைவுக்கு
ஆளாக்கியது. பின் அந்த பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கே வாடகைக்கு
வீடு பிடித்து, அவனை அமைதிப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். 700 மதிப்பெண்களுடன்
அவன் திரும்பியிருக்கிறான். இப்போது அவன் வயது நண்பர்களுடன் பழக மனத்தடை. சிறிது
சிறிதாக இயல்பாகி வருகிறான்.
இப்படி எத்தனை பேரோ?