தமிழ் திரையுலகில்
தங்களை நிலை நிறுத்திக் கொண்ட நடிகர்களுக்கு,முதல் மூன்று நாட்களில், திரையரங்குகளில்
கிடைக்கும் வரும் வசூலே, அவர்களுடைய படத்தின்
பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நிர்ணயிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
தனுஷ் 2002ல் அறிமுகமாகி
11 ஆண்டுகள் கடந்து விட்டன. அசாருதீன் முதல் மூன்று டெஸ்டுகளில் சதம் அடித்தது போல,
அவரும் முதல் மூன்று படங்களில் ஹேட்ரிக் வெற்றியை கொடுத்தார். இடையிடையே ஹிட்டுகள்.
தேசிய விருது வாங்கும் அளவுக்கு நடிப்புத்திறமை என தமிழ் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்
கொண்டார். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அறிமுகமான முகம். எனவே படம் லேட்
பிக்கப் ஆகும் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. ஓப்பனிங் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.
சமீபத்தில் வெளியான
நய்யாண்டி படத்துக்கு ஓப்பனிங் வெகு சுமாராகவே இருந்தது. மதுரை ஏரியாவில் பல தியேட்டர்களில்
முதல் நாள் காலை, மதிய காட்சிகளுக்கு 40 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கூட்டம் இருந்தது.
படம் சுமார் என்ற தகவல் வெளியே பரவியதும் சனி, ஞாயிறிலும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
அம்பிகாபதி (ராஞ்சனாவின்
டப்பிங்) வெளியான போது, மதுரை புறநகர் தியேட்டர்களில், அந்தந்த தியேட்டர்களில் வேலை
பார்ப்பவர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். சரி இந்திப்படம்
என்று சமாதானம் கொண்டாலும், அடுத்த வந்த மரியானுக்கும் இதே நிலைமைதான். முதல்நாளிலேயெ
பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இத்தனைக்கும் ரஹ்மான் இசையில் பாடல்கள்
ஹிட். ட்ரைலரும் நன்றாகவே இருந்தது.
திருடா திருடிக்குப்
பின்னர் அவர் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையை
கண்டேன், அது ஒரு கனாக் காலம், புதுப்பேட்டை வரை எதுவும் பெரிய கமர்ஷியல் ஹிட் கிடையாது.
திருவிளையாடல் ஆரம்பம் தான் தனுஷுக்கு அடுத்து கிடைத்த கமர்சியல் ஹிட். அதன் பின்னர்
வந்த பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன் மட்டுமே எல்லாத்தரப்புக்கும் நிம்மதியைக்
கொடுத்த படங்கள்.
2010க்குப் பின்னர்
வந்த எந்தப் படமும் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்த வில்லை. விமர்சகர்களால்
பெரிதும் பாராட்டப்பட்டு, இணையதள பயனாளர்களால் சிலாகிக்கப்பட்டு, தனுஷ்க்கு தேசிய விருது
வாங்கித்தந்த ஆடுகளம் கூட சில ஏரியாக்களில் சுமாராகவே போனது. (உடன் வந்த கார்த்தியின்
சிறுத்தையும், விஜய்யின் காவலனும் கமர்சியலாக தப்பித்தன).
குட்டி, உத்தம
புத்திரன், சீடன் (இதில் கௌரவ வேடம்), மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான்,
நையாண்டி என தொடர் பாக்ஸ் ஆபிஸ் பெயிலியர்கள் தான் தனுஷுக்கு.
இதில் சிங்கம்
படத்தின் வெற்றிக்குப் பின் ஹரி இயக்கிய படம் வேங்கை. ராஜ்கிரண், பிரகஷ்ராஜ், தமன்னா
என நல்ல ஸ்டார் காஸ்ட். இருந்தும் மதுரை புறநகர் ஏரியாக்களில் முதல் நாள் மாலை காட்சிக்கே
ஆவரேஜான கூட்டம் தான். மயக்கம் என்னவுக்கு செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷின் ஹிட்டான
பாடல்கள் இருந்ததால் ஓரளவு கூட்டம் வந்தது, ஆனால் இரண்டாம் நாள் படம் படுத்துவிட்டது.
கொலைவெறியால் 3 க்கு நல்ல கூட்டம் முதல் நாள் இருந்தது. ஆனால் அதுவும் இரண்டாம் நாளே
காலி.
எதிர் நீச்சல்
திரைப்படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயனுக்கு அதற்கு முன் நாயகனாக நடித்து மூன்று
சுமாரான படங்களே வந்திருந்தன. ஆனாலும் நல்ல ஓப்பனிங் இருந்தது, வருத்தப்படாத வாலிபர்
சங்கத்துக்கும் நல்ல ஓப்பனிங். இது ஏன் தனுஷுக்கு இப்போது சாத்தியம் ஆகவில்லை?
தனுஷின் காதல்
கொண்டேன் வெற்றிக்குப் பின்னர் வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குநரும் புதுமுகம்.
திருச்சியிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்கம் கலையரங்கம். அங்கேயே முதல் நாள்
காலை காட்சி ஹவுஸ்புல் ஆனது. அதன்பின்னர் தான் தனுஷுக்கென ஒரு மார்க்கெட் உருவானது.
ஆனால் 10 ஆண்டுகள் கழித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின்னரும் அவருக்கு ஓப்பனிங்
குறைந்து கொண்டே வருகிறது.
முதல் மூன்று நாள்களில்
அதிக எண்ணிக்கையில் படம் பார்ப்பவர்கள் கல்லூரி மாணவர்கள் (கல்லூரி மாணவிகளையும் சேர்த்துக்
கொள்ளலாம்), வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலைக்குச் சென்று திருமணம் ஆகாமல்
இருக்கும் வாலிபர்களே. சனி, ஞாயிறு மதியம், மாலைக் காட்சிகளுக்கு குடும்பத்தோடு வருபவர்கள்
கூட்டம் இருக்கும்.
இதில் சிறுவர்களுக்கு
தனுஷை அவ்வளவாக பிடிப்பதில்லை. விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரை பிடிக்கிறது.
ஏன் சிம்புவைக்கூட சிலருக்கு பிடிக்கிறது. கல்லூரி மாணவிகள் மத்தியிலும் தனுஷ்க்கு
கிரேஸ் இல்லை. தற்போதைய கல்லூரி மாணவர்களுக்கும் அவ்வளவாக தனுஷைப் பிடிக்க மாட்டேன்
என்கிறது. வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்கள் மட்டுமே தனுஷ் படங்களை முதலில்
பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களும் மாலை, இரவு காட்சிக்கு மட்டுமே வருகிறார்கள்.
இணையத்தில் தமிழில்
புழங்குகிறவர்கள் மத்தியில் தனுஷ்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர்கள் மொத்த தமிழ்
சமூகத்தில் மைனாரிட்டியே.
கே வி ஆனந்தின்
அனேகன் வந்து தனுஷ்க்கு பரந்து பட்ட ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தால் நல்லது. ஏனென்றால்
என்ன தான் நல்ல நடிகர் என்றாலும் தியேட்டருக்கு ஆள் வராவிட்டால் தயாரிப்பாளர் தயங்கத்தானே
செய்வார்