October 26, 2013

தண்ணி மீனாட்சி


செக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. காரணம் 80களில் திண்டுக்கல்லில் நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சம். பொண்ணு கொடுத்தா தண்ணி தூக்க வச்சே கொன்னுபுடுவாங்கப்பேய் என்று சுற்று வட்டார மக்கள் எல்லாம் பேசிக்கொள்வார்கள். நல்ல தண்ணி என்று சொல்லப்படும் தண்ணீர் வாரத்துக்கொருமுறை நகராட்சி பொதுக் குழாயில் வரும். அதற்கு இப்போது மண்ணெண்ணெய்க்கு வரிசை போடுகிறார்களே கேன்களை, அது போல குடங்களை வரிசையாய் வைத்திருப்பார்கள். ஆளுக்கு நாலு குடத்துக்கு மேல் பிடிக்க விட மாட்டார்கள். சில சமயம் சண்டை வந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த பேச்சு வாங்கி  தண்ணி பிடிக்கிறதுக்கு பதிலா பூச்சி மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோடு போய்ச் சேர்ந்துடலாம் என்று நினைக்கும் அளவுக்கு வைது தீர்த்து விடுவார்கள்.


இப்போது போல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திராத காலம் அது. வீட்டுக்கொரு குழாய் போடவும் முடியாது. கனெக்‌ஷன் வாங்குவதும் லேசு பட்ட பாடில்லை. மோட்டார் பம்ப் வைத்து தண்ணீர் எடுப்பதெல்லாம் பெரும் லக்சுரியாக கருதப்பட்ட காலம். மேலும் போர் போடவும் இடம் வேண்டுமே. வரிசையாக இடைவெளி இல்லாமல் வீட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.


இந்த நாலு குடம் நல்ல தண்ணி, குடிக்கவும் சாம்பார் வைக்கவும் மட்டும்தான். மற்றதுக்கெல்லாம் உப்புத்தண்ணி எனப்படும் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான். நாலைந்து தெருவுக்கு பொதுவாக அப்படி ஒரு கிணறு அமைந்திருக்கும். வடுகமேட்டுராசா பட்டிக்கும் யாதவ மேட்டுராசா பட்டிக்கும் நடுவே அப்படி அமைந்த கிணறுதான் ராணி மங்கம்மா கிணறு. மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது தோண்டிய கிணறு என்று சொல்வார்கள். 20 ஆள் மட்டம் என்று ஆழத்தைச் சொல்வார்கள். அறுவதுக்கு நாப்பது என நல்ல அகலம் சகலமாக இருந்த கிணறு. பக்கத்துக்கு பத்து பேர் நின்று தண்ணீர் இறைக்கலாம்.
அந்த ஏரியாவில் இருந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே அந்தக் கிணற்றில் நீர் இறைத்திருப்பார்கள். ஆளுக்கு 10 நடை எடுத்தாத்தான் பொழப்பு ஓடும். இளந்தாரிகள் அருகாமையில் நல்ல தண்ணி கிடைக்கும் இடத்துக்கு சைக்கிளின் இரண்டு பக்கமும் குடங்களை வைத்து சைக்கிள் டியுபால் கட்டி நாலு நடை போய்வருவார்கள். தண்ணீர் எடுப்பதிலேயே தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் உண்டு. நதிக்கரை நாகரீகத்தால் கலைகள் செழித்து வளர்ந்தன என்பார்கள். திண்டுக்கல்லில் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நாகரீகம் தான் குறைந்தது.


இந்த விதிக்கும் மீறிய ஒரு வீடு அந்தப் பகுதியில் இருந்தது. அதுதான் லாரி செட்டுக்காரர் வீடு. பெயர் சுந்தரம். சுந்தரத்தின் வசதி அப்போது குறைவு என்றாலும் பழைய மெதப்பிலேயே இருப்பவர்.
அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. சமையல் மட்டும் எப்படியாவது தட்டித்தடுமாறி செய்து விடுவார். ஒரு மகன் அடுத்து இரண்டு மகள்கள். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.அதில் மூத்தவள் தான் தங்க மீனாட்சி.

இந்த மீனாட்சிதான் அந்த வீட்டில் தண்ணீர் எடுக்க நேர்ந்து விடப்பட்டவள். அவள் அண்ணனும் தங்கையும் ஒரு பாத்திரத்தைக் கூட நகட்டி வைக்க மாட்டார்கள். காலையில் 20 நடை பின் பள்ளிக்குப் போய் வந்து 20 நடை மீனாட்சிதான் மாங்கு மாங்கென்று தண்ணீர் எடுப்பாள். அந்தக்காலத்தில் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் பால்காரர்களுக்கு சைக்கிளை மிதித்து மிதித்து தொடை சிறுத்து, முழங்காலுக்கு கீழ்  பகுதி வலுவேறி காணப்படுமே, அதுபோல, தங்க மீனாட்சிக்கு தண்ணீர் இறைத்து இறைத்து கையெல்லாம் காய்ப்பு காய்த்திருக்கும். புஜங்கள் எல்லாம் வலுவேறி இருக்கும். பாவாடையின் மேல் அப்பா அல்லது அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு, பர பர வென்று நடந்து போவாள்.
நம் நாட்டில் தான் ஒரு பழக்கம் இருக்கிறதே. யாராவது ஒருவர் ஒரு வேலையை பங்கமின்றி செய்து விட்டால், அவர் தலையிலேயே அந்த வேலையை கட்டி விடுவது என்று, அதுபோல அவர்கள் வீட்டிலும் தண்ணி எடுக்க மீனாட்சி என்று ஆகிப்போனாள். பள்ளிக்கு போக, தண்ணி எடுக்க, வீட்டு வேலைகளையும் செய்ய என நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பாள். தலையை சீவக்கூட நேரமிருக்காது அவளுக்கு. உண்மையில் அந்தத் தெருவிலேயே அவள்தான் அழகி ஆனால் வேலைகளால் நைந்து நளினம் இழந்து போனவள் அவள்.


அவள் மீது அக்கறை கொண்ட சில தெருப்பெண்கள், அவளின் அம்மாவிடம் , அதான் ஓரளவு வசதியா இருக்கீங்கல்ல, தண்ணி எடுக்க ஒரு ஆளக்கூட போடலாமில்ல, சின்னவ மெழுமையா இருக்கா, பாவம் மீனாட்சி உருக்குலைஞ்சு போயிட்டா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

எங்க வீட்டுக்காரரப் பத்தித்தான் தெரியுமில்ல. வேத்தாளு உள்ள வரக்கூடாதும்பாரு. எங்க ஆளுகள்ள யாரு தண்ணியெடுக்க வருவா? முடியாட்டியும் நீதான் சமைக்கணும்னு என்னயவேற பாடாப் படுத்துறாரு என்று அவளாலும் புலம்பத்தான் முடிந்தது.

மீனாட்சியின் சோட்டுப் பெண்களும், என்னடி இப்படி இளிச்சவாச்சியா இருக்க? உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா? உங்கண்ணன் சைக்கிள்ல போயி பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நீ நாலு நாளைக்கு தண்ணி எடுக்காத என்றும் சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு இரண்டு நாள் தண்ணி எடுக்காமல் இருந்தாள் மீனாட்சி. ஆனால் அவளின் அண்ணனும் தங்கையும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மீனாட்சியின் அம்மா தண்ணி எடுக்க வந்து, கிணற்றில் வழுக்கி விழுந்தது தான் மிச்சமாயிற்று.
சில தெருப்பெண்கள், இந்த நிகழ்வுக்குப் பின், பொட்டச்சிக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுடி, வீட்டுக்கு தண்ணியெடுத்தா குறைஞ்சா போயிடுவ? என்றும் பேசினார்கள்.

மீண்டும் தண்ணிக்குடம் மீனாட்சியின் இடுப்பில் ஏறியது. காலம் ஓடியது. மீனாட்சியின் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. மீனாட்சியின் படிப்பு பிளஸ் 2 உடன் நிறுத்தப்பட்டது. சுந்தரத்தின் மிச்சமிருந்த சொத்துக்களும் கரையத் தொடங்கி இருந்தது. மீனாட்சியின் தங்கை அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தாள். பின் ஒருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். நான் மட்டும் மட்டமா என்ன, என்று மீனாட்சியின் அண்ணனும் ஒரு வேற்று சாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.

சுந்தரத்துக்கு, மகன் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்டது பெரும் வருத்தத்தை தந்தது. இவள்லாம் எனக்கு காரியம் செஞ்சு, அமாவாசை சாப்பாடு சாப்பிடணுமா என்று புலம்புவார். என்னமோ பெரிய மகராஜா போல.

தொடர் சோகங்களால் மீனாட்சியின் அம்மாவும் காலமானார். ஆனால் மீனாட்சி தண்ணீர் எடுப்பது மட்டும் நிற்கவில்லை. எழவுக்கு, காரியத்துக்கு கூட அவள்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது. அவள் சோட்டுப் பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போன பின்னர், அந்தக் கிணறுதான் அவளின் தோழியாகிப் போனது. இறைக்கும் போது கிணற்றுடன் பேசிக் கொண்டேயிருப்பாள்.

சுந்தரம் திவாலாகும் நாளும் வந்தது. இருந்த வீட்டை கடனுக்கு கொடுத்து விட்டு நாலுதெரு தள்ளி ஒரு லைன் வீட்டுக்கு குடி போனார்கள். தன் மெதப்பில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். ஒரு நடைப்பிணமாகத்தான் அவரின் செயல்பாடுகள் இருந்தது. மீனாட்சிக்கு இப்போது நாலு நடையோடு வேலை முடிய ஆரம்பித்து இருந்தது.

கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும். மீண்டும் மீனாட்சி தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள். இம்முறை பேய் மாதிரி. காலை முதல் மாலை வரை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். ராத்திரி ஆனால் பேய்த்தீனி தின்பாள். தண்ணீர் ஊற்றும் கடைகளில் இருந்து சாப்பாடை வாங்கி வந்து கிணற்றடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருளில் இது நடப்பதால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. பின் சில பெண்கள் விவரம் அறிந்து விசாரித்த போது காரணம் சொல்ல மறுத்தாள். தண்ணி எடுத்து ஊற்றுவதால் தண்ணி மீனாட்சி என்றே அவள் பெயர் அங்கே மாறிப்போனது.
சில மாதம் கழித்து, அவளின் நெருங்கிய தோழியை சந்தித்த  போது மட்டும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்தக் காலத்தில் லைன் வீடுகளில் வாடகைக்கு விடும்போது ஒரு சின்னக் குழந்தை இருப்பவர்களுக்கோ அல்லது புது மணத்தம்பதிகளுக்கோ தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி மீனாட்சியின் வீட்டுக்கு இரண்டு பக்கமும், புது மணத்தம்பதிகள். பொது சுவர் என்பதால் அவர்கள் சரசம் இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனை காலம் அடக்கி இருந்த உணர்ச்சிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கவும் அவளால் தாங்க முடியவில்லை. தூக்கம் தொலைந்திருந்தது. அதனால் பகல் முழுவதும் பேயாய் உழைத்து, ராத்திரியில் அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு தூங்கி விரகத்தை கட்டுப்படுத்த பழகிக் கொண்டாள்.


ஏண்டி, உன் தந்தையிடம் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லலாமிலே என்று தோழி கேட்டதற்கு, அப்பனிடம் எப்படி இதைக் கேட்க முடியும்? நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார். சொந்தம்னு இருக்கிற  அவரையும் விட்டுட்டு நான் என்ன செய்யுறது என்று விரக்தியுடன் பதிலளித்தாள்.

பின் ஒரு நாளில், ஹோட்டல்கள், வீடுகள் எல்லாம் மோட்டர் பம்ப்செட் புகுந்து, வேலை கிடைக்காத நேரத்தில், தன் தோழியாய் இருந்த ராணி மங்கம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போதும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வடுக மேட்டுராசா பட்டி போய் தண்ணி மீனாட்சி கிணறு என்று கேட்டால், யாராவது வழி காட்டுவார்கள்.

9 comments:

Cheliyans said...

உண்மையான வரிகள் : "நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார்"

King Viswa said...

அண்ணே,

பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும்.

சமீபத்தில் சிவகாசி சென்றபோது நம்ம டெக்ஸ் வில்லர் அட்டைப்படம் அச்சிடப்பட்டுக்கொண்டு இருந்ததை நீங்கள் கண்டதாக லக்கி சொன்னார்.

நீங்கள் சென்ற அச்சுக்கூடம் எது? நம்ம பிரகாஷ் பப்ளிஷர்ஸா?

முரளிகண்ணன் said...

கிங் விஸ்வா

சிவகாசியில் இருக்கும் பொன்னன் என்னும் டிசைனர்தான் லயன்காமிக்ஸ் இதழ்களுக்கு அட்டைப்பட டிசைனராக இருந்து வருகிறார். எங்கள் நிறுவன பாம்லெட் டிசைனுக்காக அவர் அலுவலகம் சென்றபோதுதான் டெக்ஸ்வில்லர் தீபாவளி இதழுக்காக அட்டைப்பட டிசைன் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.அவரைப் பற்றி லயன் காமிக்ஸ் ஸ்பெஷல் ஒன்றிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரத்தப்படலம் மற்றும் சில வாங்காத புத்தகங்களை பிரகாஷ் பப்ளிசர்ஸ் சென்று அடுத்த வாரத்தில் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

நன்றி செழியன்

mohamed salim said...

அருமையான ஆக்கம் !! welcome back.!! உண்மையிலே எல்லோர் வீடுகளிலும் மீனாட்சி போல ஒருவர் உண்டு!!. நான் மதுரை மாநகராட்சி தண்ணி லாரியில் வீட்டிற்கு தண்ணிர் பிடித்த நினைவுகள் மனகண்ணில் தோன்றி மறைந்தன!! நன்றி

”தளிர் சுரேஷ்” said...

முதிர் கன்னியின் வேதனையை சொல்லும் அருமையான படைப்பு!நன்றி!

Ganesh kumar said...

அண்ணே... யதார்த்தத்தை ரொம்ப இயல்பா எழுத்தில் வடித்து விட முடிகிறது உங்களால்..திண்டுக்கலின் தண்ணீர் கொடுமையை இதை விட எழுத முடியாது. திண்டுக்கல் எனது தாய்/மனைவியின் ஊர். இந்த நேரத்தில் ஆத்தூரில் டேம் கட்டி திண்டுகல்லின் தண்ணீர் பஞ்சத்தை போக்கிய கர்மவீரர் காமராஜர் அய்யாவை நினைத்து பார்க்கிறேன்....

Nat Sriram said...

ரொம்பவே அருமை முரளி..முதிர்கன்னி அக்காக்களை நாம் அனைவரும் பார்த்தே வளர்ந்திருக்கிறோம்..

முரளிகண்ணன் said...

நன்றி மொகமது சலிம்

நன்றி சுரேஷ்

நன்றி கணேஷ்குமார்

நன்றி ரசனை