April 10, 2014

கள்ள ஓட்டு

இந்த தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடப் போகிறவர்களுக்கும் 20களின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கும் வேண்டுமானால் கள்ள ஓட்டு என்ற சொற்றொடர் அன்னியமாகத் தோன்றலாம். ஆனால் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, எப்படி கோவா என்றதும் டூ பீஸ் ஞாபகம் வருமோ அப்படி தேர்தல் என்ற உடன் கள்ள ஓட்டுதான் ஞாபகம் வரும்.

தேர்தல் வரப்போவதற்கு முன், புதிய வாக்காளர் சேர்ப்பை தேர்தல் கமிஷன் அறிவித்த உடனேயே எங்கள் ஏரியா நிர்வாகிகள் பூத்துக்கு பத்து பதினைந்து போலி வாக்காளர்களைச் சேர்த்து விடுவார்கள். இப்போது போல போட்டோ உடன் கூடிய அடையாள அட்டை, இருப்பிடச் சான்று என்று ஆதாரம் எல்லாம் தேவையில்லை.   

ராமசாமி வயது 54, மூத்த மகன் சுப்பிரமணிக்கு 28 வயசு, அடுத்த பொண்ணு சுமதிக்கு 21 வயசு. நல்லதாப் போச்சு. 25 வயசுல ஒரு பையன் குமார்ன்னு சேர்த்துடுப்பா என்று பிளான் பண்ணி வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பத்தை நிரப்பி விடுவார்கள். இப்போதுதான் வாக்காளர் சேர்ப்பு என்பது, ஸ்டேட்டஸோ டிவிட்டோ போடாமல் முதல் நாள் முதல் காட்சி சினிமா பார்ப்பது போல் கஷ்டமாகி விட்டது.

தேர்தலுக்கு முதல் நாள் பூத் சிலிப் கொடுக்கும் போதே, எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, இறந்து போனவர்கள் யார் யார்?, மிலிட்டரி ஆட்கள் உண்டா என கணக்கெடுத்து விடுவார்கள்.

தேர்தல் முதல் நாள் இரவில், சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய், தின்னர் போன்றவற்றை சேகரித்து காலை ஏழு மணிக்கு பூத் அருகில் டேபிளைப் போட்டு உட்கார்ந்து விடுவார்கள்.

நாளெல்லாம் வீட்டாரை, காலையில சீக்கிரம் எந்தரிச்சு தலைக்கு எண்ணெய் கிண்ணெய் வைடான்னா கேக்குறானா  என புலம்ப வைக்கும் இளந்தாரிகள் தேர்தல் அன்று மட்டும் விரைவாக எழுந்தரித்து தலை, கை,கால்களில் எண்ணெயை அப்பிக் கொள்வார்கள். மை வைக்கும் விரலில் சின்ன வெங்காய சாறை பிழிந்துகொள்வார்கள். அடையாள மை வைத்த உடனேயே நேக்காக தலையிலோ, கையிலோ தேய்த்துக் கொள்வார்கள். ஓட்டு போட்டு வந்த உடன் தின்னரைத் தேய்த்துவிட்டால் மை அழிந்து விடும்.

திரைப்படங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்களே ஒரு கொள்ளைக் கூட்டத்திலோ, அல்லது மாபியா கும்பலிலோ அந்தக் கூட்டத்தை விட ஒரு வயசான ஆள் இருந்து ஐடியா கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வயசான ஆள் எப்படியும், அவர் செட் ஆட்கள் இளந்தாரிகளாக இருந்த போது, உதவாக்கரையாக, கூறில்லாதவராக இருந்திருப்பார். அவர் செட்டில் அவரை மதித்திருக்க மாட்டார்கள். மற்றவர்களெல்லாம் முன்னேறி வேறு இடத்துக்குப் போனபின், கிடைத்த அனுபவங்களை வைத்துக் கொண்டு, அடுத்த செட் ஆட்கள் தலை எடுத்த உடன் அவர்களுடன் ஐக்கியமாகி சிலபல யோசனைகளைச் சொல்லி ஒரு அங்கீகாரம் பெற்று அவர்களுடன் இருப்பார்.

அது போல இருக்கும் பெரிசு ஒருவர், டேய், இன்னும் 20 ஓட்டு போலாகட்டும், அப்புறம் நீ போடா, சட்டைய மாத்திக்க, தலை வகிடு மாத்தி எடுத்துக்க, கிறிஸ்டின் ஓட்டுடா, துண்ணூறை அழிச்சிட்டுப் போ என பல இன்ஸ்டரக்‌ஷன்களை கொடுத்துக் கொண்டிருப்பார். மதியம் 2 மணிக்குள், கட்சி ஓட்டுக்களையும், புதிதாக சேர்த்த ஒட்டுக்களையும், ஊரில் இல்லாதவர்கள், இறந்து போனவர்கள்,மிலிட்டரியில் இருப்பவர்கள் ஆகியோரின் ஓட்டுக்களைப் போட்டு விடுவார்கள்.

அடுத்து யாரெல்லாம் ஒட்டுப் போடவில்லை என்று பார்ப்பார்கள். கடைவீதில பொடிக்கடை வச்சிருக்காரே சண்முகம், அவர் இன்னும் வரல்லை, வயசு 40 என்று தகவல் சொல்வார்கள். டேய் உங்க சித்தப்பன் கிட்ட அந்த பூத் சிலிப்ப குடுறா, போட்டுட்டு வரட்டும் என்பார்கள். பொடிக்கடை சண்முகம் அதற்கப்புறம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டில் போட்டோ என எதுவும் இல்லாத காலம். அம்பது ரூபாய்க்கு அண்டாவ அடகுவச்சு அதை திருப்ப முடியாம கிடக்குற ஆளுக எங்க பேங்க்ல அக்கவுண்ட் ஆரம்பிச்சு, பாஸ்புக் வாங்குறது? டிவிஎஸ் 50 வச்சிருக்கிறவன திருபாய் அம்பானி ரேஞ்சுக்கு பார்க்கிறவங்க இருக்கிற ஊர். அப்புறம் யார்கிட்ட டிரைவிங் லைசன்ஸ் இருக்கும்?

இப்படி,எப்படியும் பூத்துக்கு முப்பது, நாப்பது ஓட்டுக்களைப் போட்டு விடுவார்கள். பொதுத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது அப்போது அரிதான ஒன்று. 86 வாக்கில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் என் உறவினர் ஒருவர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். சாதகமான சூழல் நிலவியது. ஆனால் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார். காரணம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற ஒரு ஏரியா வாக்காளர்கள் சுமார் எண்பது பேருக்கு எதிர்த்து போட்டியிட்டவர் அந்தப் பகுதி ரைஸ்மில்லில் வைத்து காலை சாப்பாடு போட்டார். சாப்பாடு ஒன்றும் பிரமாதமில்லை. வெண் பொங்கலும் சாம்பாரும். கை கழுவிய இடத்தில் பூத் ஸிலிப்பைக் கொடுத்தார்கள். அத்தனை ஓட்டும் அவருக்கே.
விஷயம் தெரிந்தவுடன், ஐநூறு ரூபாய் செலவழிச்சு பொங்கல் போட்டிருந்தா இன்னேரம் நீ பிரசிடெண்டு என உறவினரின் தோழர்கள் அவரை கலாய்த்து விட்டார்கள்.

1984 சட்டமன்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஓட்டுக்கு 5 ரூபாய். அதுவும் சில குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் கொடுப்பார்கள். 1989 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு 10 அல்லது 20 ரூபாய் அதுவும் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் கொடுத்தார்கள்.

 2001ற்கு பின்னால் தான் ஓட்டுக்காக சகலருக்கும் அதிக அளவு பணம் கொடுக்கும் கலாச்சாரம் பரவியது. சாத்தான்குளம் இடைத்தேர்தல் தான் இதற்கான டிரெண்ட் செட்டர்.

நம் கட்சி ஓட்டு நமக்கு, எதிர்க் கட்சி ஒட்டு அவர்களுக்கு, மீத மிருக்கும் நடுநிலை ஓட்டுகள் பிச்சி பிச்சி விழுகட்டும், போடாதவங்க ஓட்ட நாம போட்டாப் போதும், லீடிங் வந்திடும் என்ற கான்செப்ட் ஒரு காலத்தில் இருந்தது. அதனால் ஓட்டுக்குப் பணம் என்பதை பெரிய அளவில் யாரும் செயல்படுத்த வில்லை.

என்னுடைய ஆராய்ச்சி வழிகாட்டி, அடிக்கடி ஒன்று சொல்வார். நாம் பிரச்சினைகளை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு தீர்க்க முனைகிறோம். ஆரம்பத்தில் அது தீர்வைக் கொடுத்தாலும், பின்னர் அந்த தீர்வு சில பிரச்சினைகளைக் கொண்டு வரும். பின்னர் அதைத் தீர்க்கும் தொழில் நுட்பத்தின் பின்னால் போவோம். மன/உணர்வு ரீதியான மாற்றம் மூலமே சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவே நிரந்தர தீர்வு என்பார்.

அதுபோலவே கள்ள ஓட்டைத் தடுப்பதற்காக கொண்டு வந்த அனைத்து விஞ்ஞான ரீதியிலான தீர்வுகளும் (வாக்காளர் அடையாள அட்டை, போட்டோ உடன் கூடிய பூத் ஸிலிப்) கள்ள ஓட்டு சதவிகிதத்தைக் பெருமளவு குறைத்தாலும், ஓட்டுக்கு பணம் என்னும் பிரச்சினையை பெருமளவு கொண்டு வந்து விட்டது.


நடுநிலை ஓட்டை சாதகமாக திருப்ப இருந்த வழியான கள்ள ஓட்டு அடை பட்டு போனதும், வேறு வழியில்லாமல் ஓட்டுக்கு பணம் என்ற அஸ்திரம் எடுக்கப்பட்டு விட்டது. இதைத் தடுக்கவும் இப்போது ஏராளமான அறிவியல்/தொழில்நுட்ப தீர்வை தேர்தல் கமிஷன் கொண்டு வருகிறது. இதன் மூலம் என்னென்ன பிரச்சினைகள் புதியதாய் வரும் என வரும் ஆண்டுகளில் தெரியவரும்.