எந்தக் கல்லூரியில்
தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம்? எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல்,
இஞ்சினியரிங் சீட் கிடைக்கும் என தமிழ்நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் நேனோ
அளவுகூட கவலைப்படாத ஒரு கூட்டம் சென்னையில் இருக்கிறது.
நன்றாக யோசித்துப்
பாருங்கள், உங்களுடன் கல்லூரியில் தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லாவகையான மாநில/மொழி/மத/இன/ஜாதிப்
பிரிவினர்கள் படித்திருப்பார்கள். ஆனால் மிக மிக அரிதாகவே வடசென்னைப் பகுதியில் (சேட்டு
என்று பொதுவாக அழைக்கப்படும்) வசிக்கும் வட மாநிலத்தவர் (குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள்)
படித்திருக்கக் கூடும்.
கலைக்கல்லூரிகளில்
ஆங்காங்கே தென்படும் அவர்கள், பொறியியல் கல்லூரிகளில் அருகிவரும் இனமாகவும், மருத்துவ,சட்டக்கல்லூரிகளில்
அழிந்துவிட்ட இனமாகவும் இருப்பார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்கள்,
அரசியல்வாதிகள் கூட தங்கள் பிள்ளைகளின் படிப்பில் காட்டும் அக்கறையை அவர்கள் காட்டாததேன்?
35 ரூபாய் கால்குலேட்டரை கையாளத்தெரிந்தால் போதும், காலத்துக்கும் அவனுக்கு கவலையில்லை.
என அவர்களை எண்ண வைப்பது எது?
15 ஆண்டுகளுக்கு
முன்னர் நான் சென்னையில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியபோது, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக,
ஒரு அங்குல தடிமன், ஒரு அடி விட்டமுடைய அலுமினிய வட்டுக்கள் சில தேவைப்பட்டன. அதை வாங்குவதற்காக
பாரிமுனை சென்றிருந்தேன். அங்கே இந்த உலோக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும்
வட மாநிலத்தவரே.
முதல் கடையில்
நான் கேட்ட அளவுகளில் அலுமினியம் இல்லை. இரண்டாவது கடையில் விலை அதிகம் எனத் தோன்றியது.
மூன்றாவது கடையில் நுழைந்த உடன் ஒன் இஞ்ச் திக் அலுமினியமா? என்று கடைக்காரர் கேட்டார்.
அறுந்து விழுந்த 22கேவிஏ மின்கம்பியை மிதித்த அதிர்ச்சி எனக்கு. அதற்குள் ஏரியா முழுவதும்
இந்த தகவல் பரவியிருக்கிறது. வேறுவழியில்லாமல் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கினேன்.
அதை கட் செய்து கொடுத்த தொழிலாளரிடம் பேசிய போது அவர் சொன்னது.
“வேற யாரும் இந்தத்
தொழில்ல இங்க நிக்க முடியாது. சார். ஒற்றுமையா இருந்து அவன நொடிக்க வச்சு விரட்டீருவாங்க”.
அதில் இருந்தே
அவர்கள் மீது ஒரு வெறுப்பு எனக்கு. பெரும்பாலும் பாரிமுனைப் பகுதிக்கு செல்வதையே தவிர்த்து
விடுவேன்.
அதன்பின் இரண்டு
ஆண்டுகள் கழித்து திருமணமான போதுதான் தெரிந்தது, நான் வாங்கும் சம்பளத்தின்படி, சென்னையைப்
பொறுத்தவரையில் வறுமைக்கோட்டிற்கு ஒரு சென்டிமீட்டர் மேலே இருக்கும் குடும்பங்களில்
என்னுடையதும் ஒன்று என்று.
குடும்பச்செலவுகள்
பற்றி வேலை செய்யும் இடத்தில் புலம்பிய எனக்கு, கிடைத்த அறிவுரைகளில் ஒன்று, தி,நகரில்
எந்தப் பொருளும் வாங்காதே, முக்கியமாக உடைகள். பாரிஸ்கார்னர், சௌகார் பேட்டை பகுதியில்
வாங்கினால் ஓரளவு விலை மலிவாக கிடைக்கும் என்பது.
அதன்பின்னர் அப்பகுதிகளில்
உடை மற்றும் பொருள்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டேன். ஒருமுறை நான் உடை வாங்கிக்கொண்டிருந்த
போது, தி நகரில் உள்ள பிரபலமான கடைகளுக்கு அங்கிருந்துதான் சேலைகள் போகின்றன என்பதை
அறிந்து கொண்டேன்.
அதைப்பற்றிக் கேட்டபோது,
அவர் சாதாரணமாகச் சொன்னார், நாங்க சூரத்ல இருந்து நேரா வாங்கிடுவோம். எங்ககிட்ட
100 ரூபாய்க்கு வாங்கி, அவங்க 300 ரூபாய்க்கு விப்பாங்க என்றார்.
அந்தக்கணத்தில்
தான் அவர்கள் வெற்றியின் ரகசியம் பிடிபட்டது.
அந்தக்கடையில்
வாடிக்கையாளரைக் கவரும் எந்த அம்சமும் இல்லை. உட்கார ஸ்டூல் கூட இருக்காது. ஒரு டேபிள்
பேன் மட்டும். அதுவும் கடை உரிமையாளருக்கு. அலங்கார செல்ஃப்கள் இல்லை. ஒரே ஒரு டுயூப்லைட்.
கட்டப்பை, பர்ஸ் என கிப்ட்கள் கிடையாது. கடையில் பணியாளர்களும் அதிகம் கிடையாது. அவர்களிடம்
வாங்கும் பொருளுக்கு நாம் கொடுக்கும் விலையில் பொருளின் மதிப்பும், வியாபாரிகளுக்கான
லாபமும் மட்டுமே இருக்கும்.
அதனால்தான் அவர்களால்
அந்தத் தொழிலில் நிலைத்து நிற்கமுடிகிறது. கணக்கு மட்டும் பிள்ளைகளுக்கு தெரிந்தால்
போதும், பின்னர் வியாபாரத்தில் ஈடுபடுத்தி விடலாம் என நினைக்கிறார்கள்.அதனால் பெரும்பாலும்
பள்ளியோடு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் மாநகராட்சி மற்றும் குறைவான கல்விக்கட்டணம்
வாங்கும் பள்ளிகளில்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை,
நடுத்தர குடும்பங்களுக்கு பிள்ளைகளின் கல்விசார்ந்த செலவு என்பது வருமானத்தில் 20 சதவிகிதத்தில்
இருந்து 30 சதவிகிதம் வரை ஆகிறது. அது இவர்களுக்கு மிகக் குறைவு. மேலும் அவர்களின்
உணவுப்பழக்கமானது கோதுமை, உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் இனிப்பு வகைகளுக்குள்
அடங்கி விடுகிறது. உடை விஷயத்தில், அதுவும் ஆண்கள் உடை. மிகச் சிக்கனம். அழுக்கேறிய
உடையுடனேயே பெரும்பாலும் இருக்கிறார்கள்.
ஞாயிறு மாலையில்
ஈகா, மெலடி, ஜெயப்பிரதா தியேட்டர்களுக்கு அடிக்கும் கலரில் சட்டை அணிந்து, வெள்ளை ஷூ,
மாணிக்சந்த் சகிதம் இந்திப்படம் பார்ப்பதுதான் இந்த ஏரியா பையன்களின் உச்சகட்ட பொழுது
போக்காக இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் பரவாயில்லை. நகையில் செலவழிக்காவிட்டாலும்,
உடைக்கும் மேக்கப்புக்கும் கொஞ்சமாவது செலவழிக்கிறார்கள்.
சென்னை வாழ் வடநாட்டு
பெண்களைக் காதலிக்கும் தமிழ்ப் பையன்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த சேட்டுப்பையன்களை
காதலிக்கும் தமிழ்ப் பெண்களைக் கண்டதுண்டா? மிக மிக அரிது. ஏனென்றால் அவர்களிடம் பெண்களை
வசீகரிக்கும் எந்த அம்சமும் இருக்காது. அவர்களால் பணத்தைத்தாண்டி எதையும் பெரிதாக சிந்திக்க
இயலாது. பத்திரிக்கைகள், நாவல்கள் என எதையும் படிக்கமாட்டார்கள். அதனால் பெண்களைக்
கவரும்படி அவர்களால் எதையும் பேசமுடியாது. கொஞ்சம் பெரிய கடைகளில் போர்டபிள் டிவி வைத்திருப்பார்கள்.
அதில் ஷேர் நிலவரம், பொருட்களின் விலை விபரம் தரும் சானல் மட்டுமே பார்க்கப்படும்.
அவர்களின் வியாபார
சித்தாந்தம் எளிமையானது. அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எல்லாம் அதீத மார்க்கெட்டிங்
தேவைப்படாத பொருட்களே. அத்தியாவசியமாக தேவைப்படும் உடைகள், வளையல், ஜிமிக்கி முதலான
அழகுப்பொருட்கள், எலெக்ட்ரிகல் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் உலோகங்கள்,
ரசாயனங்கள் போன்றவைகளை மட்டுமே அவர்கள் பெரிதும் விற்பனை செய்கிறார்கள். தங்கள் சக
வியாபாரிகளுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.
இவற்றை தயாரிப்போரில்
இருந்து, விநியோகம் செய்பவர் வரை 80% வட மாநிலத்தவரே. எனவே பொருட்கள் எங்கிருக்கின்றன
எப்படி கொண்டுவரவேண்டும் என்பது அத்துப்படி. விற்பனை செய்யும் இடத்தில் ஒவர் ஹெட் எக்ஸ்பெண்டிச்சர்
எனப்படும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், செய்யப்படும் வசதிகள் ஆகியவற்றைக் குறைக்கிறார்கள்.
மேலும் குமாஸ்தா
வேலை, கடைநிலை பணிகளுக்கு மட்டும் குறைவான சம்பளத்தில் ஆட்களை எடுக்கிறார்கள். அந்த
பணியாளர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூட இடம் இருக்காது. இதனால் சென்னையிலேயே குறைவான
விலைக்கு நல்ல லாபத்துடன் அவர்களால் பொருட்களை விற்க முடிகிறது.
இதனால் அவர்கள்
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி கவலைப்படுவதேயில்லை. ஒரு மருத்தவர்/தணிக்கையாளர் சம்பாதிப்பதைவிட
எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் தந்தையின் கடைக்கு வந்துவிடும் தனயன் அதிகம் சம்பாதித்து
விடுவான். பெண்களை மட்டும் கலைக்கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். (அதுவும் நன்கொடை
வாங்காத கல்லூரிகள்).
சென்னையில் மட்டுமல்ல.
கோவை மற்றும் மதுரையிலும் இதே போலத்தான் வியாபாரம் செய்கிறார்கள். வாழ்க்கையும் நடத்துகிறார்கள்.
சென்றமுறை நான்
வழக்கமாக உடைகள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் வேலைபார்க்கும்
தமிழர் ஒருவர் தன் மகனை உயர்கல்வி படிக்க வைப்பதற்காக சிரமப்படுகிறார். முட்டாள். என
என்னிடம் கூறினார்.
அதற்கு நான், உங்களை
மாதிரி அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிட்டு, சப்பாத்திய சாப்பிட்டிட்டு, பத்துக்கு இருபது
கடையிலேயே காலம் கழிச்சு பெட்டி பெட்டியா பணம் பார்க்கணும்னு மட்டும் இந்த உலகத்துக்கு
நாங்க வரவில்லையென்று சொல்லலாம் என்று நினைத்தேன்.
எப்படி சுற்றுப்புறசூழல்
சமநிலை காக்கப்பட ஒவ்வொரு உயிரியும் தேவையோ, அதுபோல் பொருளாதார சமநிலை காக்கப்பட இம்மாதிரி
ஆட்களும் அவசியம் என்பதாலும், இன்னும் தி,நகருக்குச் சென்று குளிரூட்டப்பட்ட வளாகத்தில்
துணியெடுக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதாரம் வளராததாலும், வழக்கமான அசட்டுச்சிரிப்பை
அவருக்கு பதிலாகத் தந்து திரும்பினேன்.