June 09, 2014

திராவிட டெக்னீசியன்கள்

பல வருடங்கள் முன்பு, நான்  கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரசித்த பெற்ற ஒரு பம்ப் கம்பெனியின் சென்னைக் கிளையில் சர்வீஸ் எஞ்சினியராக நட்டையும் போல்ட்டையும் ராவிக் கொண்டிருந்தேன். சர்வீஸ் சம்பந்தமான ஒரு தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறையை கோவை தலைமை நடத்தியபோது, என் சீனியரும் நானும் அதில் கலந்து கொண்டோம். காலையில் சம்பிரதாய துவக்க நிகழ்ச்சி முடிந்ததும், சர்வீஸ் ஹெட் டையை இறுக்கிக் கொண்டு எழுந்தார். திரையில் பவர் பாயிண்ட்.

நிமிர்ந்து உட்கார்ந்த என் தோளில் தட்டிய சீனியர். ”டேய், இவரு நம்ம மேனுவல்ல இருக்கறத பாலிஷா சொல்லுவார் அவ்ளோதான்.. மதியம் இண்ட்ராக்சந்தான் மெயினு. இப்பயே கவனிச்சு டயர்ட் ஆகிடாத” என்றார்.   
மீறிக் கவனித்த என்னை, பயணக்களைப்பும்,நெய் வழிந்த கேசரியும், மிளகை விட முந்தரி அதிகம் இருந்த பொங்கலும், ஜோயல் கார்னர் கையளவு இருந்த உளுந்த வடையும் தூங்க வைத்துவிட்டன.
மதிய உணவு இடைவேளை. பஞ்சாப் சிங்கங்கள் சப்பாத்தி தட்டையும், டால் குண்டானையும், வெஜ் பிரியாணி தேக்சாவையும் ஓவர் டைம் பார்க்க வைத்துக் கொண்டிருந்தார்கள். காலை சாப்பிட்ட பொங்கல் கழுத்து வரை இருந்ததால், பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை நாசூக்காய் சாப்பிடுவது போல சாப்பிட்டுவிட்டு மதிய செசனுக்கு உள்ளே நுழைந்தேன்.

சிலர் எழுந்து, சந்தேகங்கள் கேட்டார்கள், ஒரு கிரிட்டிகலான பிரச்சினையைப் பற்றி ஒருவர் கேட்டார். நாங்களும் அந்தப் பிரச்சினையை சந்தித்து இருக்கிறோம். அந்தப் பிரச்சினை வந்தாலே, நாங்கள் ரீபிளேஸ்மெண்ட் கொடுத்து விடுவோம்.  அப்போதுதான் ஒரு சிங் எந்தரித்தார். தன் வயதளவு சப்பாத்திகளையும், கர்நாடகா பஞ்ச காலத்தில் காவிரியில் திறந்துவிடும் நீர் அளவுக்கு டாலையும் கலந்து வெளுத்திருந்த அவர், சற்று உறுமிவிட்டு, அந்தப் பழுதை எப்படி நீக்கலாம்? என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தார். சபையே மௌனமாகிவிட்டது. எல்லோரும் அதைக் குறித்துக் கொள்ள துவங்கினோம். அடுத்தடுத்த சந்தேகங்களுக்கும், அந்த சிங் மட்டுமல்லாது, பல சிங்குகள் பதில் கொடுத்தார்கள். இனி எந்தப் பழுது வந்தாலும் ஒண்டியா சமாளித்து விடலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தது அவர்களின் விளக்கம்.

பின்னர் சென்னை திரும்பும் போது, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்ல, குர்கான், புனே போன்ற நகரங்களில் இருக்கும் டெக்னீசியன்கள் எல்லாம் நல்ல திறமைசாலிகள் என்பதை அறிந்து கொண்டேன். வெளிநாட்டு இறக்குமதி மெஷின்களில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டு, உதிரிபாகம் கிடைக்கவில்லை என்றால், இவர்களிடம் அந்த பழுதான பாகத்தைக் கொடுத்தால் போதும்,  எப்படியாவது அதை தயாரித்துக் கொடுத்துவிடுவதில் இவர்கள் வல்லவர்கள். மேலும் மார்க்கட்டிற்கு வரும் எந்த இயந்திரத்தையும் ஒரிஜினல் போலவே தயாரிப்பதிலும் வல்லவர்கள்.

ஓராண்டுக்கு பின்னர், நான் கோவை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கே எங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பவர்களை ஒருங்கிணைக்கும் வேலை. அப்போது, எங்கள் காஸ்டிங்குகளை மெஷினிங் செய்யும் ஒரு லேத் பட்டறைக்கு போயிருந்தேன். அந்த டெக்னீசியன் ஒவ்வொரு கேஸ்டிங்காக எடுத்து மெஷினிங் செய்து கொண்டிருந்தார். திடீரென ஒரு பீஸை எடுத்து தனியே வைத்தார். நான் ஏன்? எனக் கேட்க, இதுல டிபக்ட் இருக்கு என்றார். பின் அதை எடுத்துக் கொண்டுபோய் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் உள்ளே காற்றுக் குமிழால் சிறு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது, தெரிய வந்தது. மிஞ்சிப் போனால் ஒரு 20 கிராம் எடை மாறுபாடு இருக்கும். அதை சாதாரணமாக கையில் எடுத்துப் பார்த்தே கணித்து விட்டாரே என ஆச்சரியம்.

அவரிடம் கேட்டபோது, அதான் ஆயிரக் கணக்கில பண்ணுறோம்ல, எடுக்கும்போதே தெரிஞ்சிடும் என்றார். அதன்பின்னர் நம் மாநில டெக்னீசியன்கள் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. கோவைப் பகுதியில் பட்டறை வைத்திருப்பவர்கள், கொடுத்த வேலையை மட்டும் செய்ய மாட்டார்கள். அதன் தரத்தை எப்படி மேம்படுத்தலாம், எப்படி உற்பத்தி செலவைக் குறைக்கலாம் என டிசைனர்களுக்கு ஐடியா கொடுக்கும் அளவுக்கு தெளிவானவர்கள்.

அதன்பின் ஆராய்ச்சிப்படிப்பிற்காக மீண்டும் சென்னைக்கு திரும்பினேன். விடுதி பக்கத்து அறையில், சீனியர் ஒருவர் எஞ்சின் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்தார். தியரிட்டிக்கலாக அவர் ஒரு  சமன்பாட்டை தருவித்திருந்தார். அதை நிரூபிக்கும் மாடலுக்கு அதிக வெப்பம் தாங்கக்கூடிய ஒரு நாஸில் தேவைப்பட்டது. ஆறுமாதமாக அலைந்தும் அந்த ஸ்பெசிபிகேசனில் எங்கும் நாஸில் கிடைக்கவில்லை. அவர் சமன்பாட்டில் உபயோகித்திருந்த டிசைன் சிக்கலானது. அவர் குறிப்பிட்டிருந்த உலோகமும் மிகக் கடினமான ஒன்று. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் ஆகி, ஸ்டைபண்ட் இல்லாமல் கஷ்டத்தில் இருந்தார். மாடல் செய்து, அதில் ரீடிங் எடுத்தால்தான் அவர் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்து படிப்பை முடிக்கமுடியும்.

ஒருநாள், அவர் இதைப்பற்றி புலம்பிக்கொண்டு இருந்தபோது, இன்னொரு நண்பர் வந்தார். நாளைக்கு திருப்போருர் போவோம் ஒரு வழி கிடைக்கும் என்றார். நான் அவரிடம், “என்ன பாஸ், முருகன் கிட்ட சரணா? என்றேன். அவர் சிரித்தவாறே, நாளைக்கு நீயும் வா என்றார்.

அடுத்த நாள் திருப்போரூர். நாலைந்து லேத் ஷாப்புகள் வரிசையாக இருந்தன. ட்ராயிங்கைக் காட்டி, மெட்டீரியலையும் சொன்னதும், ஒருவர் செய்து தர ஒப்புக்கொண்டார். கஷ்டமான ஜாப்புங்க, அஞ்சாறு டூல்பிட்டு காலியாயிடும். மெட்டீரியலும் வேஸ்டாகும், டைமும் ஆகும், சுகுறா பண்ணித்தந்துடுறேன், பீஸ் ரேட்ட விட கூட குடுத்துறங்க என்றார்.
நான்கே நாளில் செய்து கொடுத்தார். ரீடிங் எடுத்து ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார் சீனியர். வைவா முடிந்ததும், அந்த டெக்னீசியனுக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்தார்.   

 அதற்கடுத்த ஆண்டில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடைபெற்ற  தேசிய அளவிலான கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். என் ஆராய்ச்சி வழிகாட்டி, அங்குள்ள ஒரு பேராசிரியரிடம், உள்ள இம்பாக்ட் மெஷினில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டு வருமாறு சொல்லியிருந்தார். அவர் அறைமுன் தேவுடு காத்து, சந்தித்தபோது, இப்போது அந்த மெஷின் உபயோகத்தில் இல்லை என்று அல்சர் வந்த வயிற்றில், மீந்து போன பாமாயிலில் சுட்ட பஜ்ஜியைப் போட்டார்.

என்ன காரணம்? எனக் கேட்ட போது, சில அட்டாச்மெண்டுகள் பழுதாகி விட்டன. இங்கே அதை சரி செய்ய நல்ல டெக்னீசியன்கள் இல்லை. சென்னையில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளதால், போட்டி போட்டு பல சப் காண்டிராக்டர்களும், டெக்னீசியன்களும் உருவாகிவிட்டனர். ஆனால் இங்கே பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்கள். தனியார் கனரக தொழிற்சாலைகள் சமீபத்தில் உருவாகவில்லை. மென்பொருள் நிறுவனங்கள்தான் அதிகம் வந்தது. எனவே டென்கீசியன்களின் ஸ்கில் லெவல் குறைந்து விட்டது. அரசு பணிகள் செய்வதால் இங்கே ஆட்கள் மந்தமாகிவிட்டார்கள் என்றார்.

கேரள டெக்னீசியன்கள் வேறுவகை. அவர்கள் தெளிவாக வேலை பார்ப்பார்கள். ஆனால் குறைவாகப் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் வீடு கட்ட வேலைக்கு வரும் பணியாட்கள் வந்த உடனேயே வேலையை ஆரம்பித்து விடுவார்கள். வேலை நேரம் முடிந்த பின்னால் தான் தங்களையும், தங்கள் கருவிகளையும் சுத்தம் செய்வார்கள். ஆனால் கேரள பணியாளர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு பீடியைப் பற்றவைத்து ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். பின்னர் வேலை நேரம் முடிவதற்கு அரைமணி நேரம் முன்னரே தங்கள் கருவிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து டாண் என கிளம்பிவிடுவார்கள். இதனால் தான் அங்கே தனியார் தொழிற்சாலைகள் குறைவு. மத்திய அரசு தொழிற்சாலைகள் மட்டும் சில உள்ளன. கம்யூனிஸ தாக்கம் உள்ளதால் அவர்கள் நாம வேலை பார்த்து, இவன் சம்பாதிக்கணுமா என என்ணுவார்கள். எனவே திறமை இருந்தாலும், அவர்களை நம்பி வேலை கொடுக்க முடியாது.

இதேபோல் ஆந்திராவில் உள்ள சில டெக்னீசியன்களையும் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் யாவரும் தமிழக டெக்னீசியன்களின் திறமைக்கு அருகில் வர மாட்டார்கள். பதிவர் பலாபட்டறை ஷங்கர், திரைப்பட வசனகர்த்தா கார்க்கி ஆகியோர் ஆந்திராவில் உள்ள டெக்னீசியன்களிடம் பழகியவர்கள். அவர்களிடம் நான் இதைப்பற்றி கேட்டபோது, அவர்களும் இதே கருத்தைக் கூறினார்கள்.
ஆந்திராவில் நிலபிரபுத்துவம் இன்னும் உள்ளது. அவர்கள் தொழிலாளிகள் மேலே வருவதை விரும்புவதேயில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள தூரம் குறைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவே என்னதான் உழைத்தாலும், திறமையை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கைத்தரம் உயராது, என்ற நிலையில் அவர்களின் வேலைத்தரம் குறைந்துவிடுகிறது.

நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது, படிப்பு முடித்திருந்த எங்கள் சீனியர்கள் எல்லாம், என்ன படிச்சாலும் வேலை கிடைக்காது, வேஸ்டுடா என்பார்கள். அது எங்களை மனதளவில் சோர்வடையச் செய்து பல நாட்கள் படிக்க விடாமல் செய்திருக்கிறது. ஆனால் சிலவருடம் முன்பு, ஏராளமான கேம்பஸ் இண்டர்வியூக்கள் எங்கள் கல்லூரியில். அது ஜூனியர் மாணவர்களை இன்னும் அதிகம் படிக்கத் தூண்டியது.

இதேதான் தமிழ்நாட்டிலும். இங்கே ஒரு தொழிலை சிறப்பாக, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செய்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம் என்ற சூழல் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது. ஒரு லேத், ஒரு ட்ரில்லிங் மெஷின், ஒரு ஆர்க் வெல்டிங் யூனிட் இருந்தாப் போதும், ஜாப் ஆர்டர் எடுத்து மார்க்கட்டுல நின்னுடலாம் என்ற நினைப்பே, டெக்னீசியன்களை மோட்டிவேட் செய்கிறது. கற்றுக்கொள்ள வைக்கிறது.

சமீபத்தில் ஒரு பெரிய காம்போசிட் பாகத்தை மெஷினிங் செய்ய வேண்டி இருந்தது. சென்னை ஈக்காடு தாங்கலில் உள்ள பட்டறைகளில் முயற்சிக்கலாம் என்று அங்கே சென்றிருந்தேன்.  பெரிய லேத் இருந்த ஒரு பட்டறையில் கேட்டபோது, ”நீங்க சொல்லுற அளவில நம்மகிட்ட சக் இல்லையே” என்றபடி சிலரிடம் போனில் பேசினார். பின்னர், வாங்க சார் என்று அழைத்து தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பட்டறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் கேட்ட அளவில் சக்கும் லேத் பெட்டும் இருந்தது. அந்த ஒரு மெசின் தான் மொத்தமே அங்கு இருந்தது. அடுத்த நாள் வேலையை ஆரம்பித்த போது, மெசினிஸ்டிடம் பேச்சுக் கொடுத்தேன்.

என்னங்க அவர், இவ்ளோ ஹெல்ப் பண்ணுறாரு எனக் கேட்டேன். உடனே அவர், எங்ககிட்ட இல்லாதத கேட்டு பார்ட்டி வந்தா நாங்களும் சொல்லி அனுப்புவோம். அதில்லாம அடுத்த வாட்டி ஏதும் ஜாப்புன்னா நம்பி அவராண்ட போவிங்கல்ல” அதான். என்றார்.

பன்னாட்டு கார் கம்பெனிகள் எல்லாம், துறைமுகத்தையும் உள்கட்டுமானத்தையும் மட்டும் நம்பி இங்கே வரவில்லை. முன்னேற வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட ஆயிரக்கணக்கான சப் காண்டிராக்டர்களை நம்பியும் தான்.  அவர்களுக்கு, உழைத்தால் முன்னேறிவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு சூழல் அமைத்துக் கொடுத்த திராவிட அரசியலுக்கு நன்றி.


இந்தப் பதிவு எழுத தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பலாபட்டறை ஷங்கர் மற்றும் கார்க்கிக்கு நன்றிகள்.

31 comments:

ILA (a) இளா said...

அருமையான பதிவு!!!!

Suresh said...

interesting read

முரளிகண்ணன் said...

நன்றி இளா

நன்றி சுரேஷ்

வடகரை வேலன் said...

முரளி,

நல்லா கவனிச்சு எழுதி இருக்கீங்க.

கோவைல பட்டேல் ரோட்டுல நீங்க எந்த பார்ட்டக் குடுத்தாலும் ஓரிரு நாளில் அதற்கான ஸ்பேரைச் செய்து கொடுத்து விடுவார்கள்.

போலவே சிவகாசியில் இருக்கும் தொழில் நுட்ப நபர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஹைடல் பெர்க் போன்ற ஜெர்மன் பிரிண்டிங் மெசின்களுக்குக்கூட அனாயசமாக் உள்ளூரிலேயே பாகங்களைக் கடைந்து பொருத்தி விடுவார்கள்.

வவ்வால் said...

நம்ம ஊரில 'அதிகம் படிக்காம" ஜாப் ஒர்க் செய்யும் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் பலரும் நீங்க சொல்றாப்போல தான் "கண்ணுப்பார்த்தா" கை வேலை செய்யும் என அசால்ட்டாக வேலைய முடிப்பார்கள்!

தொழில் நுட்ப அறிவை விட விட அனுபவ அறிவு அதிகம் இருக்கும்.

Unknown said...

மிக அருமையான பதிவு ..வாழ்த்துகள் சார்

Sukumar said...

Inspiring...!!!!

Kasthuri Rengan said...

சில நாட்களுக்கு முன்பு ஒரு எழுத்தாளர் வலைப்பூக்கள் அவற்றின் பதிவர்களின் சூழலை பதிவு செய்வதோ அவர்களின் தொழில் பிரச்சனைகளின் குறுக்கு வெட்டை காண்பிப்பதோ இல்லை என்று வருந்தியிருந்தார்.

பதில் உங்கள் பதிவில் இருக்கு..

ஒரு முழு நாவலே இந்தப் பதிப்பின் விளைவாக வரும் என்று தோன்றுகிறது..

நன்றி முரளி

தொடர்க
http://www.malartharu.org/2014/06/rural-children.html

குலவுசனப்பிரியன் said...

அருமை. படிக்கப் பெருமையாக இருக்கிறது.

டிப்ளமா படிப்பில் ஆரம்பித்த எனது நண்பர்களில் ஒருவர் இப்போது உயர்தர நுட்பியல் தானியங்கள் சுத்திகரிப்பு செய்யும் (http://www.orangesorter.com/) எந்திரங்களை தயாரிக்கிறார்.

இவரைப்போல இன்னும் பலர் உருவாகக் காரணமானது நிச்சயம் திராவிட அரசியல்தான்.

ப.கந்தசாமி said...

கோயமுத்தூர்ல இவ்வளவு விசயம் இருக்கா? படிக்கப்போய் ஒண்ணுமே தெரியாத முட்டாளா வாழ்க்கையைக் களிச்சுட்டனே?

Kalai said...

Very uplifting post-makes us all proud. Thanks

Kalai said...

Very uplifting post-makes us all proud. Thanks

முரளிகண்ணன் said...

நன்றி வடகரைவேலன்

நன்றி வவ்வால்

முரளிகண்ணன் said...

நன்றி தங்கம் தென்னரசு சார்.

முரளிகண்ணன் said...

நன்றி சுகுமார் சுவாமிநாதன்

நன்றி மது

நன்றி குலவுசனப்பிரியன்

நன்றி பழனி கந்தசாமி

நன்றி கலை

Bruno said...

முரளி

நீங்கள் இதில் எழுதியிருப்பது மிக முக்கியமான வரி

//ஆந்திராவில் நிலபிரபுத்துவம் இன்னும் உள்ளது. அவர்கள் தொழிலாளிகள் மேலே வருவதை விரும்புவதேயில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள தூரம் குறைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவே என்னதான் உழைத்தாலும், திறமையை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கைத்தரம் உயராது, என்ற நிலையில் அவர்களின் வேலைத்தரம் குறைந்துவிடுகிறது.//

சொல்லப்போனால் இந்த ஒரு வரியைத்தான் கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்ற புத்தகத்தில் விரித்து எழுதியுள்ளார்

-oOo-

முதலாளித்துவம் என்பது தொழிலாளியின் திறனை குறைத்து விளம்பரம் செய்பவனின் திறனை அதிகரிக்கிறது

அதாவது

கிராமத்தில் ஒரு தச்சர் / தையல்காரர் இருக்கிறார் என்றால் அவரது சம்பாத்தியம் அவரது திறமை - கை நேர்த்தியை வைத்து

எனவே அவர் திறமையை வளர்த்துக்கொள்வார்

ஆனால்

200 தச்சர்கள் வேலைசெய்யும் தொழிற்சாலையில் அல்லது 200 தையல்காரர்கள் வேலை செய்யும் ரெடிமெட் உடை தொழிற்சாலையில் திறமையாக வேலை செய்யும் தச்சருக்கோ, அல்லது திறமையாக வேலை செய்யும் தையல்காரருக்கோ என்ன பலனும் இல்லை

அந்த முதலாளிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருபவர் விளம்பரம் செய்பவரே

இது தான் முதலாளித்துவத்தின் கேடு

இது தான் பெரிய நிறுவனங்களில் கேடு

-oOo-

இதை அப்படியே மருத்துவத்துறைக்கும் பொருத்தலாம், கல்வித்துறைக்கும் பொருத்தலாம்

டியூசன் வாத்தியார் ஏன் திறமையாக எடுக்கிறார்
நாமக்கல் பள்ளிகள் ஏன் விளம்பரத்தில் (அவர்களின் விளம்பரம் என்பது 200/200 எடுத்த 100 மாணவர்கள் - தொலைக்காட்சி விளம்பரம் அல்ல) கவனம் செலுத்துகிறார்கள் என்றும் புரியும்

-oOo-

ஒரு டெக்னீசியனை வேலைக்காரன் ஆக்குவது தான் முதலாளித்துவத்தின் கேடு !!!

-oOo-

//
இதேதான் தமிழ்நாட்டிலும். இங்கே ஒரு தொழிலை சிறப்பாக, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செய்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம் என்ற சூழல் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.
//

அதற்கு காரணம்

இங்கு fuedal structure உடைந்து (அதாவது பிற மாநிலங்களை காட்டிலும்) உள்ளது

யார் வேண்டுமானாலும் தொழிலதிபர் ஆகலாம். அதாவது தனது திறமை மற்றும் உழைப்பை வைத்து ஒரு தையல்கடை, லேத், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை ஆரம்பிக்கலாம்

-oOo-

இப்பல்லாம் தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலப்பா

என்ற வசனம்

ஒரு சமூக மாற்றத்தை வெளிப்படுத்திய வசனம்

Bruno said...

முரளி

நீங்கள் இதில் எழுதியிருப்பது மிக முக்கியமான வரி

//ஆந்திராவில் நிலபிரபுத்துவம் இன்னும் உள்ளது. அவர்கள் தொழிலாளிகள் மேலே வருவதை விரும்புவதேயில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள தூரம் குறைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவே என்னதான் உழைத்தாலும், திறமையை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கைத்தரம் உயராது, என்ற நிலையில் அவர்களின் வேலைத்தரம் குறைந்துவிடுகிறது.//

சொல்லப்போனால் இந்த ஒரு வரியைத்தான் கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்ற புத்தகத்தில் விரித்து எழுதியுள்ளார்

-oOo-

முதலாளித்துவம் என்பது தொழிலாளியின் திறனை குறைத்து விளம்பரம் செய்பவனின் திறனை அதிகரிக்கிறது

அதாவது

கிராமத்தில் ஒரு தச்சர் / தையல்காரர் இருக்கிறார் என்றால் அவரது சம்பாத்தியம் அவரது திறமை - கை நேர்த்தியை வைத்து

எனவே அவர் திறமையை வளர்த்துக்கொள்வார்

ஆனால்

200 தச்சர்கள் வேலைசெய்யும் தொழிற்சாலையில் அல்லது 200 தையல்காரர்கள் வேலை செய்யும் ரெடிமெட் உடை தொழிற்சாலையில் திறமையாக வேலை செய்யும் தச்சருக்கோ, அல்லது திறமையாக வேலை செய்யும் தையல்காரருக்கோ என்ன பலனும் இல்லை

அந்த முதலாளிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருபவர் விளம்பரம் செய்பவரே

இது தான் முதலாளித்துவத்தின் கேடு

இது தான் பெரிய நிறுவனங்களில் கேடு

-oOo-

இதை அப்படியே மருத்துவத்துறைக்கும் பொருத்தலாம், கல்வித்துறைக்கும் பொருத்தலாம்

டியூசன் வாத்தியார் ஏன் திறமையாக எடுக்கிறார்
நாமக்கல் பள்ளிகள் ஏன் விளம்பரத்தில் (அவர்களின் விளம்பரம் என்பது 200/200 எடுத்த 100 மாணவர்கள் - தொலைக்காட்சி விளம்பரம் அல்ல) கவனம் செலுத்துகிறார்கள் என்றும் புரியும்

-oOo-

ஒரு டெக்னீசியனை வேலைக்காரன் ஆக்குவது தான் முதலாளித்துவத்தின் கேடு !!!

-oOo-

//
இதேதான் தமிழ்நாட்டிலும். இங்கே ஒரு தொழிலை சிறப்பாக, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செய்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம் என்ற சூழல் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.
//

அதற்கு காரணம்

இங்கு fuedal structure உடைந்து (அதாவது பிற மாநிலங்களை காட்டிலும்) உள்ளது

யார் வேண்டுமானாலும் தொழிலதிபர் ஆகலாம். அதாவது தனது திறமை மற்றும் உழைப்பை வைத்து ஒரு தையல்கடை, லேத், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை ஆரம்பிக்கலாம்

-oOo-

இப்பல்லாம் தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலப்பா

என்ற வசனம்

ஒரு சமூக மாற்றத்தை வெளிப்படுத்திய வசனம்

ammuthalib said...

இன்றைய காலை அழகான பதிவுடன் துவங்கியுள்ளது. Feel good & Motivating Sir.

இராஜராஜேஸ்வரி said...

முன்னேற வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட ஆயிரக்கணக்கான சப் காண்டிராக்டர்கள்,
உழைத்தால் முன்னேறிவிடலாம் என்ற எண்ணம் ஏற்படுத்தும் வலிமையான சிந்தனை -என அருமையாக பதிவு செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள்..!

தருமி said...

’நாமல்லாம்’ இம்புட்டு கெட்டிக்காரங்களா ...? கேக்கவே நல்லா இருக்கு.

Balakumar Vijayaraman said...

very in-depth analysis. good work. congrats !

Thomas Ruban said...

அருமையான நல்ல பதிவு..
இப்பொது தொழிலை விட பணத்தை மட்டுமே நேசிப்பவர்களே அதிகமாகிக் கொண்டே வருவது வருத்தமளிக்கும் விசியம்.

ramiahjayapal said...

நன்று !
ஆர்வமுள்ளவர்களுக்கு முயற்சியைத் தூண்டும் அற்புதமான கட்டுரை !
மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் !

Anonymous said...

நன்றி புருனோ சார். எனது விருப்பமான சினிமா பதிவரின் ஒரு முக்கியமான் பதிவை தவற விட்டிருப்பேன்.

srikanth said...

nice article as usual.

srikanth said...

nice article

முரளிகண்ணன் said...

நன்றி டாகடர். பதிவுக்கு வலு சேர்க்கும் வாதங்களை கொடுப்பதற்கும், கொடுத்ததற்கும், கொடுக்கப் போவதற்கும்.

முரளிகண்ணன் said...

நன்றி அம்முத்தலிப்

நன்றி ராஜராஜேஸ்வரி

நன்றி தருமி அய்யா

நன்றி பாலகுமார்

முரளிகண்ணன் said...

நன்றி தாமஸ் ரூபன்

நன்றி ராமையா ஜெயபால்

நன்றி ராமன் பக்கங்கள்

நன்றி ஸ்ரீகாந்த்

செல்வமகராஜன் கணேசன் said...

அருமையான பதிவு நண்பரே.,

முரளிகண்ணன் said...

நன்றி செல்வமகராஜன் கணேசன்