அன்றைக்கு எங்கள்
தெருவில் இருந்தவர்களிலேயே குணா அண்ணன் தான் தீவிர கமல் ரசிகர். மங்கம்மா சபதம் படத்தையே
17 தடவை பார்த்தவர் என்ற ஒன்றே அவரின் கமல் வெறியைச் சொல்லிவிடும்.
அபூர்வ சகோதரர்கள்,
வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன் என தொடர்ச்சியாக கமல் படங்கள் வெளிவந்து அவரை
சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த நேரம், அடுத்த படம் குணா என அறிவிப்பு வந்தது. அவருக்கு
அளவில்லா சந்தோஷம். அதுவரை தட்டிகளில் கமல்குணா என போட்டுக்கொண்டிருந்த குணா அண்ணன்
இந்தப் படத்துக்கு வைக்கப்படும் தட்டியில் எப்படி பெயர் போடுவார்? என நாங்கள் பேசிக்கொண்டோம்.
ஆனால் பத்திரிக்கைகளில்
வந்த தகவல்கள், எங்கள் ஆர்வத்தை குறைக்கத் தொடங்கியிருந்தன. சந்தான பாரதி இயக்கம்,
புதுமுகம்ரோஷினி, எஸ்,வரலட்சுமி,காகா ராதாகிருஷ்ணன் என பழைய ஆட்களின் மறு பிரவேசம்,
ரேகா போன்ற மார்க்கட் இழந்த நடிகை, இத்தனைக்கும் மேலாக கறுப்படித்த முகம்,முள்முள்ளான
தாடி என கமல்.
ஆனால் ரஜினியின்
தளபதியிலோ, மணிரத்னம், மம்முட்டி என வலுவான துணைகள். ஆர்வத்தை தூண்டும் ஸ்டில்கள்.
கேசட் வெளியான அன்றே படத்தின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. அப்போதுதான் குணா அண்ணனே
கலங்கிப் போனார்.
அதற்குக் காரணம்
இருக்கிறது. “என்னப்பா, எப்பவுமே படம் ரிலீஸாகி கொஞ்சநாள் கழிச்சுத்தான் வசன கேசட்
வரும்?, குணாவுக்கு ரிலீஸுக்கு முன்னாடியே வந்திருச்சே?” என ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்த்து
எடுத்து விட்டார்கள். ஒவ்வொரு பாடலுக்கு முன்னாலும் கமல்ஹாசன், இளையராஜா, சந்தான பாரதி
ஆகியோர் பாடல் குறித்துப் பேசி இசை மற்றும் பாடல் வரிகளை முடிவு செய்ததையும் பாடல்களுக்கு
முன்னால் சேர்த்திருந்ததால் வந்த வினை அது.
ஆனாலும் குணா என்னும்
படத்தலைப்புக்கு கீழே இருந்த திரிசூலம் எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. நிச்சயம்
ஆக்ஷன் அதிரடி இருக்கும் என. அதையும் ரிலீசுக்கு முன்னால் வந்த கமலின் பேட்டி தகர்த்தெறிந்தது.
இந்தப் படத்தை ”மதிகெட்டான் சோலை” என்னும் இடத்தில் எடுத்ததாகவும், குணா என்னும் பெயரைவிட
மதிகெட்டான் சோலை பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மற்றவர்கள் சம்மதிக்க
வில்லை என்றும் கூறியிருந்தார்.
வழக்கமாக கமல்
படத்திற்கு குணா அண்ணன் தலைமையில் தான் போவோம். ஆனால் நானும் சில நண்பர்களும் முதல்
காட்சி தளபதிக்கு சென்றுவிட்டோம். கவுண்டமணியின் காமெடி நல்லாயிருக்கு, பானுபிரியா,
குஷ்பூ, பாடல்காட்சிகள் என பிரம்மா பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அடுத்த நாள் அதற்குப்
போனொம். அன்றே கவுண்டருக்காக மீண்டும் தாலாட்டு கேட்குதம்மா.
என்னடா இன்னும்
நம்ம படம் நீங்க பார்க்கலை போலிருக்கே? என குணா அண்ணன் கேட்டபோது தலைகுனிந்தோம். சரி
வாங்கடா செகண்ட் ஷோ போவோம் என கூட்டிப் போனார், இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன்.
குணா அண்ணனுக்கு
அந்த நாட்களில் எல்லாம் பயங்கர கோபம் வரும். டேய் குணாவோட சேர்த்து 9 படம் ரிலீஸாயிருக்கு.
இதுல தளபதி வேணுமின்னா பரட்டைக்காகவும், பாட்டுக்காகவும் எல்லாத்துக்கும் ஞாபகம் இருக்கும்.
மத்த படமெல்லாம் மறந்து போயிடும். எழுதி வச்சுக்கங்கடா, இன்னும் 20 வருசம் ஆனாலும்
இந்தப் படத்தைப் பத்தி யாராச்சும் பேசிக்கிட்டே இருப்பாங்கடா என்றார். அந்த தீபாவளிக்கு
வெளியான விஜய்காந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பாக்யராஜின் ருத்ரா, ராமராஜனின்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டுக்கு போன தெருக்காரர்கள் குணாவை கண்டு கொள்ளாததில் அவருக்கு
அவ்வளவு வருத்தம்.
சில ஆண்டுகள் கழித்து
ஒரு கல்லூரியின் வகுப்பறைச் சுவற்றில் “குயிலே எனக்கு கப்ப குடுத்துட்டாங்க குயிலே”
என்ற வாசகம் கிறுக்கி இருந்ததைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. அதற்கடுத்த ஆண்டு வைகுண்ட
ஏகாதசிக்கு தியேட்டரில் நடுநிசி 1.30 மணிக்காட்சியாக திரையிடப்பட்ட குணாவுக்கு ரசிகர்களின்
ஏகோபித்த ஆதரவு.
நாங்கள் அந்த ஊரில்
இருந்து சில ஆண்டுகளில் வேலை காரணமாக வேறு ஊருக்குச் செல்ல நேரிட்டது. குணா அண்ணனுடனான
தொடர்பும் குறைந்து போனது. அதன்பின்னர் லோக்கல் டிவி சானல்களில், பேருந்து பயணங்களில்,
கடந்த சில ஆண்டுகளாக கேடிவியில் குணாவைப் பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள், படத்தை
சிலாகிக்கும் போதெல்லாம் குணா அண்ணனின் நினைவு வரும்.
சில முயற்சிகளுக்குப்
பின்னர் அவர் தொலைபேசி எண்ணைப் பெற்று பேசியபோது, நாங்கள் வீடு மாறிய சில மாதத்திலேயே
திருமணமாகிவிட்டதாகவும், தற்போது கடைத்தெருவில் ஸ்டேசனரி கடை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இரண்டு பையன்கள் என்றும் தெரிவித்தார். முன்னர் போன்றே மன்றப்பணிகளில் தீவிரமாக இருப்பதையும்
அறிந்து கொண்டேன்.
இப்போது சமூக வலைத்தளங்கள்
மூலம் ஊரில் இருந்த பள்ளி நண்பர்களின் தொடர்பு வலுப்பெற்ற பின்னர், குணா அண்ணன் தன்
எனர்ஜியை இழக்காமல் இன்னும் விஜய், அஜீத் ரசிகர்களுக்குப் போட்டியாக போஸ்டர் அடித்துக்
கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வந்து சேர்ந்தது.
சென்ற மாதம், ஒரு
திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். குணா அண்ணனை சந்திப்பதற்காகவே முதல் நாளே
சென்றேன். ஸ்டேசனரி கடையை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார். நம்மவர் தான் சொல்லியிருக்காரே,
”கக்கூஸ் கழுவுனாக்கூட பரவாயில்லை, அதுல நாமதான் பெஸ்ட்னு பேரெடுக்கணும்னு”. பின்ன?
என்றார்.
இரவு உணவுக்கு
அவர் வீட்டிற்குச் சென்றோம். ஹாலை ஒட்டிய அறைக்கதவில் ஆளுயர விஜயின் துப்பாக்கி பட
ஸ்டில் ஒட்டப்பட்டிருந்தது. மகன் ரூம், காலேஜ்
பர்ஸ்ட் இயர் என்றார்.