July 14, 2014

ராமராஜன் எழுச்சியும் வீழ்ச்சியும்

1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நாட்டியால தான் போட்டிருக்கான். நாலு தடவ பார்த்துட்டேன். சலிக்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்பேன். இதெல்லாம் விக்காட்டி உன்கிட்ட கொடுத்துடுறேன். ஆறு மணி ஆட்டத்துக்கு போகணும்”  அந்தப் பெண் குறிப்பிட்ட படத்தை நீங்கள் யூகித்திருக்கலாம். கரகாட்டக்காரனேதான்.  

1991 ஆன் ஆண்டு. கரகாட்டக்காரன் ஓராண்டு ஓடிய காம்ப்ளக்ஸில் இருக்கும் நர்த்தனா தியேட்டரில் ராஜ்கிரண் நடித்த ”என் ராசாவின் மனசிலே” பார்ப்பதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அது ஒரு முகூர்த்த நாள். நல்ல கூட்டம். பேருந்து முழுக்க கிராம மனிதர்கள். அதில் ஒருவர், அருகிலிருந்த நண்பரிடம், ராசாவின் மனசிலே பாட்டுல்லாம் நல்லாயிருக்கு போகலாமா? என கேட்க, ராமராஜன் படமா? மூஞ்சிய மாத்தாம ஞொய ஞொயன்னு பேசிக்கிட்டு இருப்பான். எனக்குப் பிடிக்காது என்றார். ஏய் இல்லப்பா இது இன்னொரு ஆளு நடிச்சிருக்கான் என்று அவரின் நண்பர் விளக்க, எனக்கு மிக ஆச்சரியம்.

இரண்டே ஆண்டுகளில்  எப்படி இப்படி ஒரு மாற்றம்.? (கி)ராமராஜன் என முண்ணனி பத்திரிக்கைகளால் சிலாகிக்கப்பட்ட ஒருவர் இரண்டாண்டுகளில் ஒதுக்கப்பட என்ன காரணம்?

சரியாக சொல்வதென்றால், ஐந்து வருடங்கள் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் முதலாளிகள் அனைத்துக்கும் மேலாக பி&சி என்று அப்போது அழைக்கப்பட்ட சிறுநகர, கிராமிய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒருவர், ஆறாம் ஆண்டில் விரும்பப்படாமல் போக என்ன காரணம்?

பாரதிராஜா ஓரளவு யதார்த்த கிராமத்தை சினிமாவுக்குள் 77ல் கொண்டு வந்தார். அதன்பின்னர் பல கிராமக்கதைகள் வந்தாலும், கிராமத்து இளைஞர்கள் தங்களை ஐடெண்டிஃபை செய்து கொள்ளும் அளவுக்கு ஒரு கதையோ, நாயகனோ வரவில்லை. ரஜினி,கமல், விஜயகாந்த் ஆகியோர் சில கிராமிய கதைகளில் அப்போது நடித்தாலும், அவர்கள் நகரத்துக்கதைகளிலேயே அதிகம் நடித்ததால் எளிய கிராமத்து இளைஞர்களை அவர்கள் ஈர்க்கவில்லை.

இந்நிலையில், ராம நாராயணனிடம் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த ராமராஜன், 85ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு படத்தை இயக்கினார். படம் வெற்றி. அதன் பின்னர் ஹலோ யார் பேசுறது? மருதாணி ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்களை இயக்கும்போது, பாரதிராஜாவின் கண்ணில் பட்டிருந்தார். இயக்குநர் அழகப்பன், தான் இயக்கவிருந்த கிராமத்துக் கதைக்காக நாயகன் தேடிக்கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட பாரதிராஜா, உங்க ஆபிஸ்க்கு அடிக்கடி வருவாரே? அவர் இந்த கதைக்கு செட்டாவார் என்றார். அவர் குறிப்பிட்டது ராமராஜனைத்தான்.  இப்படி வாய்ப்புக் கிடைத்து, ராமராஜன் நடித்து வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றி பெற்றது.

அந்நேரத்தில் ராமராஜன், அடுத்த ஐந்து ஆண்டுகள் தான் ஹீரோவாக கொடிகட்டி பறப்போம் என்றோ, பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவோம் என்றோ நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். அடுத்த ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் பெரிய வெற்றி. பின்னர் என்னை விட்டு போகாதே, என்னப் பெத்த ராசா என வெற்றிப் படங்கள். பொங்கி வரும் காவேரி, எங்க ஊரு காவக்காரன் என மீடியம் வெற்றிப்படங்கள். உச்சமாக கரகாட்டக்காரன்.

ராமராஜன் ஏற்று நடித்த வேடங்கள் எல்லாமே எளிய, யதார்த்த, பாஸிட்டிவ் அப்ரோச் உடைய, குடும்பப் பாசம் கொண்ட கேரக்டர்களே. அந்த கேரக்டருடன் கிராம இளைஞர்கள் ஒன்றிப்போனதே அவரின் அப்போதைய வெற்றிக்கு காரணமானது.

ராமராஜன் கதாநாயகனாக அறிமுகமான காலத்தில் தான் மௌனராகம், நாயகன் போன்ற படங்கள் வந்தன. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படங்களும் வந்தன. பாரதிராஜாவின் கிராமியப் படங்களும் வந்து கொண்டிருந்தன. இருந்தாலும் எளிய, பொழுது போக்கு அம்சம் கொண்ட கிராமத்துப் படங்களுக்கு ஓரிடம் இருந்தது. அதில் ராமராஜன் சரியாகப் பொருந்திக் கொண்டார். மேலும் அப்போது சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் தொலைக்காட்சி என்பது ஆடம்பரப் பொருளாக இருந்த நேரம். முக்கிய பொழுது போக்கு என்பது சினிமாதான். குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தால் யாருக்கும் தர்ம சங்கடம் கொடுக்காமலும், போரடிக்கவும் செய்யாமல் இருந்தால் படம் ஓடிவிடும் என்ற நிலை. ராமராஜன் தன் படங்களில் தாய்க்கு அன்பானவராகவும், பொறுப்பானவராகவும், பெண்களிடம் கண்ணியம் காப்பவராகவும், தீய பழக்கங்கள் இல்லாதவராகவும் நடித்தது குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களை கவர்ந்தது.

இளையராஜா எப்படியும் நல்ல பாடல்களைக் கொடுத்து விடுவார். கவுண்டமணி அவர் பங்கை செய்து விடுவார். மையக் கதை மட்டும் சுமாராக இருந்து விட்டால் போதும் படம் நஷ்டமில்லாமல் கரை சேர்ந்து விடும். கங்கை அமரன், டி கே போஸ், ரங்கராஜன், டி பி கஜேந்திரன் போன்ற ஓரளவு கதை சொல்லும் திறமையுள்ள இயக்குநர்களுடன் படங்கள் செய்ததால் எப்படியும் படம் மோசமாக போய் விடாது. எனவே ராமராஜனுக்கு என தனியாக ஒரு மார்க்கட் உருவானது.

ஆனாலும் ராமராஜன் வக்கீலாக, துப்பறியும் போலிஸாக, நிலபிரபுத்துவத்தை எதிர்க்கும் புரட்சியாளனாக நடித்த படங்கள் எல்லாம் சுத்தமாக எடுபடவில்லை. அவர் கோட் சூட் அணிந்தாலோ, கொள்கை பேசினாலோ யாருக்கும் பிடிக்கவில்லை. சாதாரண கிராமத்து வாலிபன் வேடம் மட்டுமே அவர்க்கு கைகொடுத்தது.

ராமராஜனின் 100 நாள் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் கை விரல்களுக்குள் எண்ணிக்கை அடங்கிவிடும். ஆனால் பெரும்பாலான படங்கள் 50 நாள் படங்கள், மற்றவை நான்கு வாரப் படங்கள். ராமராஜன் திரைப்படங்களின் தயாரிப்புச் செலவு என எடுத்துக் கொண்டால் அப்போது மிகவும் குறைவு. பெரும்பாலும் இளையராஜாவின் இசை. பத்துக்கு மிகாத குரூப் டான்சர்கள், எதையும் தவறிக்கூட உடைத்து விடாத ஒன்றிரண்டு சண்டைக் காட்சிகள், அதிக சம்பளம் வாங்காத கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், ரேகா, கவுதமி, கனகா என அதிகம் டிமாண்ட் செய்யாத நாயகிகள், கண்ணைப் பறிக்கும் நிறத்தில் நாலைந்து மீட்டர் சட்டைத்துணி, ரோஸ் பவுடர், உதட்டுச் சாயம். கவுண்டமணி செந்தில் ஆகியோர் அப்போது உச்சத்தில் இருந்ததால் அவர்களுக்கு  மட்டும் நாள் கணக்கில் சம்பளம். 
தயாரிப்பு செலவு குறைவு என்பதால் நாலுவாரப் படங்கள் கூட எல்லோருக்கும் லாபம் கொடுத்தன. அதனால் தான் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் அவரை மொய்த்தனர்.

ஆனால் 90கள் ஆரம்பமான உடனேயே எதுவெல்லாம் அவரின் பலமாகக் கருதப் பட்டதோ, அதெல்லாம் பலவீனமாகியது. அதனால்தான் ஒரே ஆண்டில் உச்சத்தில் இருந்து, தரைக்கு இறங்கினார்.   

90களுக்குப் பின்னர் பெரும்பாலான ஏன் எல்லாப் படங்களுமே சினிமாஸ்கோப்பில் தான் திரையிடப்பட்டன. பாலு மகேந்திரா போன்ற சிலர் மட்டும்தான் விடாப்பிடியாக 35 எம் எம் மிலேயே படமாக்கினர்.
80களின் கடைசியில் வந்த புது இயக்குநர்கள் பலர் பாடல் காட்சிகள் படமாக்குவதிலும், சண்டைக் காட்சிகளிலும் அதீத கவனம் செலுத்தினர். பாடல் காட்சிகள் நல்ல பொருட்செலவில், வேகமான நடன அசைவுகளோடு படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளும் உக்கிரமாக, அடி எங்கே நம் மீது விழுந்து விடுமோ என்னும் அளவுக்கு படமாக்கப்பட்டது. கவர்ச்சியான கதாநாயகிகளும் அவர்களின்  நடனமும் பார்வையாளரைக் கவரும் அம்சமாக மாறியது.

ராமராஜனும் ஒரு கதாநாயகியும் மட்டும் சினிமாஸ்கோப் திரையில் நடந்து கொண்டே பாடல் காட்சியில் தோன்றுவதை 90களின் இளைஞர்கள் எப்படி பார்ப்பார்கள்? பிரபுதேவா, ராஜு சுந்தரம் பாணி ஆட்டம் ராமராஜனுக்கு எப்படி ஒத்து வரும்? சரத்குமார், ராஜ்கிரண் என முரட்டு அடி அடிக்கும் நாயகர்கள் மத்தியில் ராமராஜனுக்கு என்ன இடம் இருக்கும்? காட்சியின் தன்மைக்கேற்ற கேமரா கோணங்கள்,ஒளிப்பதிவு தரம் எல்லாமே 80களின் இறுதியில்   முன்னேறியது. ராமராஜன் படங்களுக்கு கேமராவை ஒரு இடத்தில் பிக்ஸ் செய்திருந்தால் போதும். வேறு வேலை இருக்காது. அது பார்வையாளனுக்கு சலிப்பூட்டத்துவங்கியது.

மற்ற இடங்களில் எப்படியோ? ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வேகம் கூடிவருவதை உணரலாம். மதுரையில் இருந்து சென்னைக்கு பயணநேரம் குறைந்து கொண்டே வருகிறது. நாலு சக்கர, இரு சக்கர வாகனங்களின் வேகம், மனிதர்களின் நடை வேகம், பாடல்களிலும் வேகமான பீட்டுகள் ஏன் சராசரி சாப்பிடும் நேரம் கூட குறைந்து வருகிறது, மக்கள் வேகமாக சாப்பிட பழகிக் கொண்டார்கள்.
திரைக்கதையிலும் அப்படித்தான். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைக்கதையின் வேகம், காட்சிகள் மாறும் வேகம் அதிகரித்து வருகிறது. ஆற அமர துவங்கி இடைவேளையின் போது ஒரு முடிச்சு விழுந்து, பின் அது மெல்ல மெல்ல இறுக்கமாகிக் கொண்டே போய், கடைசியில் அவிழ்வதையெல்லாம் மக்கள் பொறுமையாக பார்க்க தயாரில்லை.
ராமராஜனின் கதையோட்டப் பாணியானது, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்ஜியார் படங்களின் கதையோட்டத்தை ஒட்டியிருக்கும். நல்ல குணமுடைய நாயகனுக்கு வரும் ஒரு பிரச்சினை, அதன் தீர்வு அவ்வளவுதான். குறைந்த செலவு, காதில் வார்த்தை விழுகும் பாடல், எளிய நகைச்சுவை,பார்க்கச் சகிக்கும் வகையில் ஒரு நாயகி. இது 70,80 களில் வெற்றிக்கான பார்முலா. ஆனால் 90களுக்கு?
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அட என்று சொல்லி நிமிரும் படி திரைக்கதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். தொடர்ச்சியாக வெளிவந்த நல்ல கதை அம்சம், கமர்சியல் அம்சம் கொண்ட திரைப்படங்களால் மக்களின் ரசனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த சிறு முன்னேற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ராமராஜன் படங்கள் இல்லையென்பதும் முக்கிய காரணம்.

இதேபோலத்தான் மக்களின் ரசனையில் சிறு முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு ஈடு கொடுக்க முடியாத இயக்குநர்கள், நடிகர்கள் பின் தங்கி விடுவார்கள். சமாளித்து ஈடு கொடுப்பவர்கள் அடுத்த ரசனை மாற்றம் வரும் வரையில் தாக்குப்பிடிப்பார்கள். மக்களின் எதிர்பார்ப்பைவிட அதிக தகுதி கொண்டிருப்பவர்களே காலத்தை வென்று தாக்குப்பிடிப்பார்கள்.

ராமராஜனின் ஏழெட்டு படங்கள் மட்டுமே அப்போதைய வெற்றி எல்லையான 100 நாட்களை தாண்டியவை. கடைசிப் வெற்றிப்படம் கொடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் இன்றும் எவ்விதத்திலாவது உச்சரிக்கப்படுவதாக ராமராஜனின் பெயர் இருக்கிறது. அரசியல் பிரச்சாரம் செய்கிறார். அடுத்து ஒரு படம் வரும் என்று கூட சொல்கிறார்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வசீகரித்து வைத்திருந்த கூட்டம் இப்போது வெகுவாக சிறுத்திருந்தாலும் அவர் படத்தை பார்க்க வருகிறது.


இப்போது சிவகார்த்திகேயன் கூட அப்படித்தான். சராசரி இளைஞனுக்காக உருவான காலியிடத்தில் நடித்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறார். ரசனை மாற்றம் ஏற்படும்போது, தன்னை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால் இன்னொரு ராமராஜன் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.





15 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அலசல்! ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் ஆறு! தேங்கிவிட்டால் குட்டை! அருமையாகஎழுதி உள்ளீர்கள்! நன்றி!

முரளிகண்ணன் said...

நன்றி சுரேஷ்

Nat Sriram said...

நல்ல அலசல் முரளி, as usual..கூடுதலாய் ஒரு கருத்து சொல்லனும்னா, அவர் தன் தோற்றப்பொலிவை மெல்ல இழந்துகொண்டே வந்தார். எங்க ஊர் பாட்டுக்காரன், கரகாட்டக்காரனில் இருந்த இயல்பான களையான முகம் போய் அதீத ஒப்பனை, வரைந்தது போன்ற மீசை, களையவே விடாத செயற்கை ஹேர்ஸ்டைல், அதிகரித்துக்கொண்டே வந்த எடை என அவர் தோற்றப்பொலிவை இழந்துகொண்டே வந்ததும் ஒரு காரணம். ரஜினி மாவீரனுக்கு பிறகு மாற்றிக்கொண்ட ஹேர்ஸ்டைல், விஜயகாந்தின் அம்மன் கோவில் கிழக்காலேக்கு பிறகான நடுவகிடு, கமலின் காதல் பரிசுக்கு பிறகான make over போல் ராமராஜனுக்கும் தேவைப்பட்டது. அட சத்யராஜே விக்கை மாத்திக்கிட்டே வந்தது போல இவரும் மாத்திட்டிருக்கலாம்..

செங்கதிரோன் said...

superb analysis

தருமி said...

சில கருத்துகள் ’உதைக்குதே’!

//அந்த கேரக்டருடன் கிராம இளைஞர்கள் ஒன்றிப்போனதே அவரின் அப்போதைய வெற்றிக்கு காரணமானது.//
அட … போங்க சார். என்னமோ ஓடிச்சி!
இன்னொண்ணு சொல்லுவாங்க. அப்பா சிவாஜி கணேசனின் ‘பட்டணமா, பட்டிக்காடா’ என்ற படம் எப்படி ஓடிச்சின்னு தெரியாது; அதே மாதிரி மகன் பிரபுவின் ’சின்னத் தம்பி’ படம் எப்படி ஓடிச்சின்னு தெரியாது என்பார்கள். அது மாதிரி ராமராஜன் என்ற ‘சகாப்தம்’ ஒரு பெரிய கேள்விக்குறி. (ஆனால் இதுமாதிரி கேள்விக்குறிகள் தமிழ்த் திரையுலகில் நிறைய உண்டு.)
//ராமராஜன் தன் படங்களில் தாய்க்கு அன்பானவராகவும், பொறுப்பானவராகவும், பெண்களிடம் கண்ணியம் காப்பவராகவும், தீய பழக்கங்கள் இல்லாதவராகவும் நடித்தது குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களை கவர்ந்தது.//
போங்க சார் … அப்புறம் எப்படி அந்தக் காலத்தில இருந்து ‘சூப்பர் இஸ்டார்’ மக்களுக்கு பிடிச்சிப் போச்சு?

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்ரீராம்

நன்றி செங்கதிரோன்.

நன்றி தருமி அய்யா. சூப்பர்ஸ்டார் 85க்குப் பிறகு நடித்த பாத்திரங்கள் எல்லாமே பெரும்பாலும் பாஸிட்டிவ்வாகத்தான் இருக்கும்.

Bala said...

சிறந்த அலசல். என்னைப் பொறுத்தவரை ராரா எம்ஜிஆர் என்ற திரைபிம்பத்தின் நீட்சி மட்டுமே. எப்போதிது அவர் கருத்து/கொள்கை என்று ஆரம்பித்தாரொ அவர் ரசிகர்கள் அப்போதே விலக்கிவிட்டனர்.

முரளிகண்ணன் said...

நன்றி பாலா

சண்டியர் கரன் said...

அடுத்த ராமராஜன் இன்றைய சிவகார்த்திகேயன் என்பதில் மாற்றம் இருக்காது.... கிராமத்து வ.வா.ச படத்தில் அவரை ரசித்தவர்களால் நகரத்து மான் கராத்தேயில் ரசிக்க முடியவில்லை...

கிரி said...

பாலா கூறியது போல "எப்போதிது அவர் கருத்து/கொள்கை என்று ஆரம்பித்தாரொ அவர் ரசிகர்கள் அப்போதே விலக்கிவிட்டனர்." இது ரொம்ப முக்கியமான கருத்து.

நீங்கள் கூறியது போல காலம் மாறியதும் மக்கள் ரசனை மாற்றத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒன்று அவரது உடலமைப்பு இரண்டாவது மக்கள் ரசனை மாறியது.

விஜயகாந்த் இவருக்கு அடுத்த கட்டத்தில் வருவார். இவருக்கு உடலமைப்பு, மற்ற தகுதிகளில் பிரச்சனை இல்லை ஆனால், காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளாமல் வைத்த வசனங்களும் தேர்வு செய்த கதைகளுமே அவரை கீழிறக்கி விட்டது. இப்பவும் ரமணா படம் போல நடித்தால் அதே அளவு பெரிய வெற்றி இல்லை என்றாலும் 80% வெற்றியை அவர் பெற முடியும். இதை ராமராஜனால் செய்ய முடியாது.

சுருக்கமாக விஜயகாந்த் வாய்ப்பு இருந்தும் சரியான கதையை திரைக்கதையை தேர்வு செய்யாமல் வீணடிக்கிறார். காமெடியான வசனங்கள் அவரை குப்புற தள்ளி விட்டது. கரண்டுக்கே ஷாக் கொடுப்பவன்டா இந்த நரசிம்மா! சொன்னது போல செயலிலும் காட்டி தன்னை தானே குப்புற தள்ளிக்கொண்டார்.

ராமராஜன் இனி மீண்டு வர வாய்ப்பே இல்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய.. அது கூட ஒரு படத்திற்கு வேண்டும் என்றால் நடக்கலாம்.

ரஜினி கமல் இருவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதே இன்றும் நிலைத்து இருக்க முக்கியக் காரணம்.

முரளிகண்ணன் said...

நன்றி சண்டியர் கரண்

நன்றி கிரி

Unknown said...

அருமையான பதிவு, உங்களிடம் இருந்து இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்கிறேன். சினிமா விமர்சன் - சின்ன தம்பி , தளபதி ,சகலகலா வல்லவன் போன்றும்(எதிர்பார்ப்பது - நாயகன், அண்ணாமலை, ரோஜா, இந்தியன்,வாலி,காதலுக்கு மரியாதையை .....), தனி மனித விமர்சனம் -மயில் சாமி – ஒரு பார்வை,ராமராஜன் எழுச்சியும் வீழ்ச்சியும்(எதிர்பார்ப்பது - மணிரத்தினம்,பாலச்சந்தர்,ஷங்கர்,பாலா,.....). தலைவர்கள் - நேதாஜி,பசும்பொன் முத்துராமலிங்கம்,காமராஜர் ,எம்.ஜி.ஆர் .......

முரளிகண்ணன் said...

நன்றி ராஜேஷ் ஆனந்த்

m.a.Kather said...

உண்மை

m.a.Kather said...

உண்மை