பழுத்த வேலை நாளான
திங்கட் கிழமை காலை 10.30 மணி அளவில் மட்டுமே சலூனுக்குச் சென்று முடி வெட்டுபவர்களைப்
பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தக் காலத்தில் பெற்ற தாய் தந்தை இறந்தாலே மொட்டையடிக்க
யோசிக்கும் மகன்களுக்கு மத்தியில் அங்காளி பங்காளிகளோடு சேர்ந்து மொட்டையடிக்கும் பாசக்கார
உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ட்ராபிக் கான்ஸ்டபிளின் வாடையே இல்லாத சாதாரண
முட்டுச்சந்தில் டிவிஎஸ் 50யில் கூட ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இல்லையென்றால்,
இது உங்களுக்கானதுதான். மானா மூனா கூட்டம் என்று சொந்தபந்தங்களால் அழைக்கப்படுபடும்
கூட்டத்தைப் பற்றிய பதிவுதான் இது.
ம.முத்துச்சாமி
என்பவர்தான் இந்த கூட்டத்தின் எள்ளுத்தாத்தா. அவருடன் பிறந்த அண்ணன் தம்பிகள் எல்லோருமே
நல்ல முடிவளத்துடன் இருக்க இவருடைய ஜீனில் மட்டும் ஏதோ மியூட்டேசன் நடந்து இளவயதிலேயே முடிகொட்டத்துவங்கியது.
இளவயது என்றால் மிக இளவயதிலேயே. அந்த சாபம் அவருடன் நின்றுவிடாமல், அவர் பெற்ற பிள்ளைகளின் மூலம் ஐந்து தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.
15 வயது ஆகும்போது,
உச்சி மண்டையில் உள்ள சுழியில் இருந்து அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். கன்னியின்
தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும்.
ஒரு தேர்ந்த சமையல்காரர் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் போட்டு, கையை எடுக்காமல்,
சென்ற வழியிலேயே செல்லாமல், கரண்டியால் அழகான தோசை ஆக்குவாரே அதுபோல முடி சீராக கொட்டிக்கொண்டே
போகும்.
இது தரைப்படைத்
தாக்குதல் என்றால், முன் நெற்றி வகிடு வழியாக முடி கொட்டிக்கொண்டே செல்லும் விமானப்படைத்
தாக்குதலும் உண்டு. 17 வயதில் எல்லாம் இரண்டு வகிடின் வழியாகவும் முடி கொட்டிக்கொண்டே
சென்று தோசைவட்டத்துடன் இணையத் துடிக்கும். இரண்டு புருவங்களுக்கு மத்தியின் நேராக
நெற்றியில் இருக்கும் முடிக்கொத்து மட்டுமே 21 வயது வரை தாக்குப் பிடிக்கும். அதை மூன்றாகப்
பிரித்து, மூன்று புறமும் பரப்பி முடி இருப்பது
போல் டகல்பாஜி வேலை செய்து கொள்வார்கள். அதுவும் 25 வயதுக்கப்புறம் பெப்பே காட்டிவிடும்.
மானா மூனா கூட்ட
ஆண்வாரிசுகளுக்கு 25 வயது பூர்த்தி ஆகும் போது, காதின் மேல் ஒரு அங்குலம் மட்டுமே முடி
இருக்கும். காதை தாண்டிய உடன், பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் ஆகியோர் இடையழகிகளாக
இருந்த இளவயதில் லோஹிப் கட்டும் போது, ஜிலீரென ஒரு அழகு வளைவாக சேலை இறங்கி, தொப்புள்
தரிசனம் கிட்டுமே அதே மாதிரி வளைவில் பின் மண்டையின் நடுப்புறத்தை நோக்கி முடி பகீரென
இறங்கும். பின் நடுப்புறத்தில் இருந்து மறுபக்க காதை நோக்கி அதே வளைவில் மேலேறும்.
பொம்பளைப் புள்ளைய
பெத்து வச்சிருக்கோம், காலா காலத்துல ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துடணும்னு வயத்துல
நெருப்பக் கட்டிட்டி இருக்கோம்னு ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்களே. அதுபோல மானாமூனா
கூட்டத்தாரும் 22 வயசுக்குள்ள எப்படியாச்சும் மகன்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுரணுமே எனத் துடிப்பார்கள்.
ஆனால் ஒரு வகையில்
இந்த சாபம் இந்தக்கூட்ட ஆண்வாரிசுகளுக்கு ஒரு மோட்டிவேஷனாக மாறியது. பிளஸ் 2 வில் படிச்சதப்
போலவே காலேஜிலும் படிச்சா நம்ம வாழ்க்கை எங்கேயோ போயிரும்ணு பெரியவங்க சொல்லுவாங்க.
மானா மூனா கூட்டம் பிளஸ் 2 வரைக்கும் சரியாப் படிக்காட்டியும், காலேஜ்ல நுழைஞ்ச உடனே,
வெறித்தனமா படிக்க ஆரம்பிப்பாங்க. 21 வயசுல எப்படியும் ஒரு வேலைக்குப் போயிடணும், தலை
சஹாரா ஆகுறதுக்குள்ள, சிம்லாக்கு ஹனிமூன் போயிடணும்னு துடிப்பாய்ங்க.
ஒருத்தனுக்கு சரியாப்
படிக்காம 25 வயசுலதான் வேலை கிடச்சது. அவன் பொண்ணு கிடைக்காம அலைஞ்சு, ஒரு பால்வாடி
டீச்சருக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டான். அதுல இருந்து உஷாராயிட்டாங்க. இதெல்லாம்
எப்படி டீடெயிலாத் தெரியும்னு கேக்குறீங்களா? நானும் அந்தக் கூட்டத்துல ஒருத்தந்தேன்.
ஒரு பெரியப்பா
பையனுக்கு 23 வயசாச்சு. தரகர் கேக்குறாரு, தம்பி பொண்ணு சிவப்பா வேணுமான்னு? யானைச்
சிகப்பா இருந்தாக்கூட சரிதான். ஏன் யானையா இருந்தா கூடச் சரிதான். ஆனா அவங்க வீட்டில
அப்பா, அண்ணன் தம்பி எல்லாம் கரடியாட்டம் இருக்கணும்னான். ஏண்டான்னா?, தலை, உடம்பு
பூராம் முடியா இருக்கிற ஜீன் உள்ள குடும்பப் பொண்ணா இருந்தா, என் பிள்ளையாச்சும் வழுக்கை
இல்லாம பிறக்கட்டும்ணான். கரடி மாதிரி இருக்கிற குடும்பம் இல்ல, கரடியவே நீ கட்டுனாலும்
பையன் சொட்டையாத்தான் போவான்னு தரகர் பார்வை சொல்லாம சொல்லுச்சு.
ஆனாலும் இந்தப்
பொண்ணுங்களுக்கு நுண்ணறிவு அதிகம்தான். பொண்ணு பார்க்கப்போனா, கூட வர்ற ஆளுகள வச்சு,
பையன் முக அமைப்ப வச்சு இவன் சீக்கிரம் சொட்டையாயிருவான்னு ரிஜக்ட் பண்ணிடுறாங்க. அவ்வளவு
ஏன்? காலேஜ் படிக்கும் போது, பாவமேன்னு ஒரு லுக்கு கூட விடுறதுல்ல. அதுமட்டுமில்லாம
“ஆகாயச் சூரியனை உச்சந்தலையில் சூடியவன்னு” நக்கல் பாட்டு வேற.
ஆனா இந்தப் பசங்களுக்கு
அவ்வளவு பத்தாது. சில வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவுக்கு ஒரு பேங்க் மேனேஜர் குடி
வந்தாரு. அவங்க நிச்சயம் சிண்டெக்ஸ் கம்பெனியோட சொந்தமாவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கணும்.
மேனேஜர் சம்சாரமும், அவங்களோட ரெண்டு மூத்த பொண்ணுங்களும் அப்படி ஒரு சைஸூ. மூணாவது
பொண்ணு மட்டும் ஒல்லியா இருக்கும். அந்த ஒல்லிக்கு நெறையா கில்லிங்க, ஜல்லிங்க புரபோஸ்
பண்ணினாங்க. அவங்க குடிவந்த ஒரு மாசத்துல லோக்கல் கிரிக்கெட் டோர்ணமெண்ட் பைனல். ரெண்டு
மணிக்கு மேட்ச். ரோலர்லாம் போட்டு பிட்ச்ச ஒரு மாதிரி செட் பண்ணி இருந்தாங்க. ஒரு மணி
வாக்குல லேசான தூறல். விழாக்கமிட்டி பரபரபாயிட்டாங்க.
ஏதாச்சும் லாரி
ஷெட்டுல போயி, தார்ப்பாய் கிடைச்சா தூக்கிட்டு வாங்கடா, பிட்ச கவர் பண்ணனும்னு ஆர்டர்
போடுறாய்ங்க. அப்ப எங்க தெருக்காரன், பாங்க்
மேனெஜர் வீட்டுல போயி நாலு நைட்டி வாங்கிட்டு
வாங்கடா, மொத்த கிரவுண்டையுமே கவர் பண்ணிடலாம்னான். ஆனாலும் அந்த ஒல்லி பொண்ணு மேல
யாருக்கும் கிரேஸ் போகலை.
ஆனா எங்களுக்குத்
தெரியும்டா வம்சக்கூறு. நாலு வருசத்துல அந்த ஒல்லிக்கு பாட்டியாலா பேண்டே லெக்கின்ஸ்
ஆயிடும்னு மானா மூனா கூட்டம் மட்டும் சிரிச்சுக்கிட்டோம்.
ஆனா எங்க கூட்டத்தப்
பார்த்து ஊர் சிரிக்கிறது எங்களுக்கு மரத்துப்போச்சு. பின்னாடி அசிங்கமா கசகசன்னு தொங்குற
முடிய வெட்டணும்னா கூட யாருமே இல்லாத நேரத்துல சலூனுக்குப் போக வேண்டியிருக்கு.
இப்படித்தான் எங
நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்துல, மண்டப மானேஜர், இந்த தலை பால்டா இருக்குமே அவர்கிட்டதாங்க
ஸ்டோர் ரூம் சாவிய குடுத்தேன் என்று சொல்ல,
எங்கள் மாமா “நாமக்கல் முட்டையில கூட ஒரு முட்டையை தனியா கண்டுபிடிச்சிடலாம், இந்த
சொட்டைங்க கூட்டத்துல கண்டுபிடிக்கிறது கஷ்டம்னு” பஞ்ச் அடிச்சாரு.
மொதல்ல இவிங்க
தலைல எருவா மேட்டின தேச்சு பார்க்கணும்டா, முடி வளர்ந்திருச்சுன்னா கந்து வட்டிக்கு
கடன் வாங்கி கூட அதை வாங்கலாம்டா என வியாக்கியானம் செய்யும் நண்பர்கள் வேறு.
பொதுவா மத்த வீடுகள்ல
இருக்குற சண்டையோட சேர்த்து எங்க வீடுகள்ல இன்னொரு சண்டையும் நடக்கும். வழுக்கைய மறைச்சு
ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு மருமகள்கள்ளாம் குமுறுவாங்க. என் மனைவி கூட இது போர்ஜரி கேஸில் வருமா என அவர்கள்
வீட்டாருடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஆலோசனை நடத்திவந்தார். கையில் காலில் விழுந்து, கெஞ்சிக் கதறி என்னை விட
சிறப்பான அடிமை உனக்கு கிடைக்கமாட்டான் என்பதை புரிய வைத்து காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறேன்.
இன்னும் கூட வெளியிடங்களுக்குச் கூட்டிச்செல்ல வேண்டுமென்றால், விக் வைச்சுக்கிட்டு
வாங்க என்கிறார்.
என்னோட இன்னொரு
சித்தப்பா பெரிய உஷார் பார்ட்டி. தன் மகனுக்கு இது மாதிரி நேர்ந்திடக்கூடாதுன்னு ஒரு
ட்ரிக் பண்ணுனார். அவன் பிறந்ததுல இருந்து, கோயில் கோயிலா போயி மொட்டை அடிக்க ஆரம்பிச்சார்.
ஒண்ணு விட்ட பாட்டிக்கு ஒத்த தலைவலின்னாக் கூட, தன் மகனுக்கு மொட்டை அடிப்பதாய் நேர்ந்து
கொள்வார். தினமும் அவனுக்கு நெல்லிக்காய் ஜூஸ். நல்ல சுத்தமான கொழும்பு தேங்காய் எண்ணெய்
வாங்கி, அதில் முடி வளர உதவும் பல மூலிகைகளை காய்ச்சி ஊற்றி, அந்த எண்ணையை தினமும்
அவன் தலையில் தேய்த்து வந்தார். அந்த எண்ணெயின் வீரியத்தால் அந்த பாட்டிலுக்கு கூட
முடி முளைத்ததாக கேள்வி.
அவனுக்கு 15 வயது
ஆனபோது சித்தப்பா வீடு கட்டத்தொடங்கி இருந்தார். பால் காய்ச்சும்வரை மொட்டை அடிக்கக்கூடாது
என்று ஒரு சாஸ்திரத்தைக் கேள்விப்பட்டு அவனுக்கு தற்காலிகமாக மொட்டை அடிப்பதை நிறுத்தியிருந்தார்.
இரண்டு மாதத்தில் அவனுக்கு முடி கருகருவென வளர்ந்து வெயிலுக்கு அரிக்கத் தொடங்கியது.
அதனால் முதன் முறையாக அவன் சலூனுக்கு போகவேண்டிய
நிலை ஏற்பட்டது.
ஒரு வழியாக பால்
காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார். பையனும் பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக
தேறியிருந்தான். ரெட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்தவர், மானா மூனா கூட்டத்தின் முக்கிய
சம்பிரதாயத்தை மறந்து விட்டார். எல்லோருமே பத்தாம் வகுப்பு முடிக்கும் போது, எங்களுக்கும் ஒரு காலத்தில் முடி
இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஸ்டியோவுக்குச் சென்று போட்டோ எடுத்து வைத்துக் கொள்வோம்.
அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.
சில நாட்கள் கழித்து, மாடியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருக்கும் போது, அவர் பையன் சைக்கிளில் வந்து வாசலில் இறங்குவதைப் பார்த்தேன். அவன் உச்சந்தலையில் மானா மூனா கூட்டத்தின் உறுப்பினர் படிவம் பிரசுரமாகத் தொடங்கி இருந்தது.
15 comments:
சூப்பர் முரளி..இதே டாபிக்ல நான் பாதி எழுதி வெச்சுருந்தேன்..வட போச்சே..:D
நன்றி ஸ்ரீராம். உங்க ஆங்கிள்லயும் எழுதுங்க. முன்னர் பிளாக்ல எழுதுவோமே, ஒரே டாபிக்கை நாலஞ்சு பேர், பின்னர் அதுக்கு எதிர் பதிவுன்னு. அதுமாதிரி.
கலக்கல்.... நான் கூட நீங்க சய்ண்டிஸ்ட்னால உங்களுக்கு மட்டும் பிரத்யேகமா இருக்குனு நினைச்சேன். இது பரம்பரை சொத்தா... பத்திரமா பார்த்துக்கங்கண்ணே !
படிச்சு முடிக்கிறப்போ சிரிப்ப அடக்கமுடியலலை// ம்ம்ம் ... எல்லாம் தலையிலே முடி இருக்கிற கொழுப்பு உங்களின் மைண்ட் வாய்ஸ்
என்ன பெரிய ---ர் பிரச்சினைன்னு விடமுடியலையே... கவரிமான் பரம்பரை தான் இந்த மானா முனா கூட்டம்... :)
Super super ji...
கன்னியின் தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும்.
கன்னியின் தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும்.
நன்றி பினாத்தல் சுரேஷ்.
நன்றி பாலகுமார்
நன்றி முகமது சலீம்
நன்றி கதாசிரியர்
பெயர் தெரியா நண்பருக்கு நன்றி
நன்றி ஷாஜஹான்
இதுபோல் குறைபாடு உள்ளவர்களை "நகைச்சுவை" என்கிற அவமானப்படுத்துவது அநாகரிகம்னு நான் சொன்னால்...
நீ ஒரு ரசனை இல்லாதாவன்னு சொல்லுவாங்க இங்கே உள்ள மு ர கூட்டம். இல்லையா?
I must say, this post is very offensive, Murali. Sorry I could not appreciate your "wonderful write-up"!
I am sure, so many feels like me but they are just being "polite" and keeping quiet because they do not want to offend you!
அன்புள்ள வருண்
இது என்னைக் கிண்டல் செய்து நான் எழுதிய பதிவு. யாரையும் வருத்தமடையச் செய்ய வேண்டுமென்று செய்ததில்லை.:-)))
என்ன வர்ணனை.. என்ன வர்ணனை.. தொப்புள் ரேஞ்சுக்கு கிளுகிளுப்பா :-))))))))))
நன்றி யாத்ரீகன்
Post a Comment