குறைந்தபட்ச தகுதிகளோடு
இருக்கும் ஒரு தொழிலதிபரின் வாரிசு மிக எளிதாக அந்த நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்துவிடலாம்.
ஆனால் அந்த நிறுவனம் சரியாமல் காக்கவும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும்
கடின உழைப்பு தேவை. நாள் தோறும் மாறும் வணிக நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அரசியல்வாதியின் வாரிசிற்கும் அரசியலில் நுழைவது எளிது, அதன்பின்னர் அவரது நடவடிக்கைகளே
அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதைப் போலவே திரைத்துறையிலும் வாரிசுகளுக்கு அறிமுகம்
எளிதில் கிடைத்துவிடும். ஆனால் அவர்களின் திறமையை வைத்தே அதை தக்க வைக்க வேண்டும்.
ஒரு தொழில் அதிபரின்
மகனை தொழில் அதிபராக ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசியல்வாதியின்
வாரிசையும், குறைந்த பட்ச தகுதிகள் இருந்தாலே ஒப்புக் கொள்கிறார்கள். ”ராஜாவின் மகன்
ராஜா” என்ற மனப்பாவம் நம்மிடம் இருந்து மறைய நாளாகும். ஆனால் கலைஞனின் மகன் கலைஞன்
அல்ல, தன்னை நிரூபித்தாலொழிய.
1930களில் இருந்து
படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் 50களில் இருந்துதான் அதிகமாக படங்கள் வெளியாகின.
இந்த 50களில் சினிமாவில் இருந்தவர்களின் வாரிசுகள் பலரும் பல்வேறு காலகட்டங்களில் அறிமுகமானார்கள்.
இந்த போக்கு இன்றுவரை நீடித்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 80களில்
இருந்துதான் இது அதிகரித்தது. 1960 மற்றும் 70களில் தமிழகத்தை தன் நகைச்சுவை நடிப்பால்
மகிழ்வித்த நாகேஷ், 80கள் தொடங்கிய உடன் தன் இடத்தை இழந்தார். பிரதான காமெடியன் வேடம்
மிகச் சில படங்களில் மட்டுமே கிடைத்தது. குணசித்திர வேடங்கள் மட்டுமே அவருக்கு நிறைய
கிடைத்தது. இந்த காலத்தில் தான் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு 1983ல் தங்கைக்கோர் கீதம்
படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த வாரிசுகளில்
கூட கதாநாயகனின் மகன், இயக்குநரின் மகன், தயாரிப்பாளரின் மகன் என்றால் அவனை சற்று நாயக
கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் நகைச்சுவை நடிகரின் மகன் என்றால் தமிழர்களின்
மனது, அவனை முழு நாயகனாக ஒப்புக்கொள்வதில்லை.
நம்மால் முடியாததை நம் வாரிசாவது செய்யட்டும் என்பது பெற்றோர்களின்
ஆசை. டாக்டருக்குப் படி, ஐ ஏ எஸ் ஆகு என அப்படி ஆக முடியாத தகப்பன்கள் தன் மகனிடம்
சொல்வார்கள். தன் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் மிக கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட
பெண்கள், தங்கள் மகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். எந்த நடிகனுக்கும் ராஜபார்ட்
போட வேண்டுமென்பதுதான் கனவாக இருக்கும். அதனால்தான் எல்லோரும் தங்கள் வாரிசுகளை நாயகனாகவே
அறிமுகப்படுத்துகிறார்கள்.
ஆனந்த்பாபு, அவர்
அறிமுகமான காலகட்டத்தில் தமிழ்சினிமாவிற்கு ஏற்ற மெட்டீரியல்தான். அப்போதைய நாயகர்களில்
கமல் மட்டும்தான் நன்கு நடனம் ஆடுபவர். மற்றவர்கள் நடனம் ஆடுவதைப் போல் பாவனை செய்து
வந்தார்கள். ஆனந்த்பாபு, தன்னுடைய தந்தை நாகேஷின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான மேற்கத்திய
தாக்கம் உடைய ஒரு நடன அசைவை கற்று வைத்திருந்தார்.
அந்த நடனமே அவரது
உடனடி அடையாளமாக அவர் மீது ஒரு கவனக் குவிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆரம்பகால கட்டங்களில்
அவரை அரவணைத்தது டி ராஜேந்தர் மற்றும் இராம நாராயணன். டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதமில்
”தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது” என்ற துள்ளலிசைப் பாடல் மற்றும் நடனத்தின்
மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனந்த்பாபு நாயகனாக நடித்த “நியாயம் கேட்கிறேன்” சுமாராகவே ஓடியது. இராம நாராயணன் ஜெய்சங்கர்,ஸ்ரீபிரியா,
ஆனந்த்பாபு, அர்ஜூனை வைத்து இயக்கிய ”கடமை” பி மர்றும் சி செண்டர்களில் நன்கு ஓடி,
ஆனந்த்பாபுவுக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது.
1982ல் இந்தியில்
பப்பிலஹரி இசையில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்த டிஸ்கோ
டான்சர் படத்தை “பாடும் வானம்பாடி” என தமிழில் ஆனந்த்பாபுவை வைத்து 1985ல் ரீமேக் ஆனது.
படம் தமிழ்நாடு முழுவதும் நன்கு ஓடியது. சில செண்டர்களில் 100 நாட்கள் என்ற மைல்கல்லையும்
தொட்டது. ரங்கராஜன் இயக்கத்தில் மோகன், ரேவதி, ஆனந்த்பாபு நடித்த “உதயகீதம்” படமும்
தமிழகம் முழுவதும் ஆனந்த்பாபு ரீச்சாக உதவியது.
அதன்பின்னர் அடுத்தடுத்த
ஆண்டுகளில் அவர் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், ராமநாராயணின்
இளமை, சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்த பந்தம், கார்த்திக் உடன் நடித்த அர்த்தமுள்ள
ஆசைகள், சுரேஷுடன் நடித்த மௌனம் கலைகிறது என எல்லாமே தோல்விப்படங்கள். இதனுடன் அவரை
மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். வெற்றி இருக்கும் இடத்தில் இல்லாவிட்டால் யாருக்கும் வரும் நிலைமைதான். ஆனந்த்பாபுவின்
இந்த கால கட்டத்தில் அவருடன் இணைந்து நடித்தவர்கள் எல்லாமே ஆரம்ப நிலையினர் அல்லது
தங்கள் பொற்காலத்தில் இல்லாதவர்கள். தனியாக ஒரு படத்தை தன் நடிப்பால் தாங்கும் அளவுக்கு
அவர் அப்போது வளர்ந்திருக்கவில்லை. பெரிய இயக்குநர்களும் அவருக்கு தங்கள் படங்களில்
வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆர் பி சௌத்ரியின்
சூப்பர்குட் பிலிம்ஸால் நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்வு பெற்றார்கள். அவர்களில்
ஆனந்த்பாபு முக்கியமானவர். சூப்பர்குட்டின் முதல் தயாரிப்பான விக்ரமனின் புது வசந்தம்
ஆனந்த்பாபுவுக்கும் ஒரு வசந்தத்தை கொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையில்
இருந்து காணாமல் போயிருந்த ஆனந்த்பாபு இந்த படத்தின் மூலம் மறு அறிமுகமே ஆனார். தொடர்ந்து
கே எஸ் ரவிகுமாரின் புரியாத புதிரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாலசந்தரின் உதவி இயக்குநராகவே பல ஆண்டுகள் இருந்து
பெரும் திறமை கொண்டிருந்த, கமல்ஹாசனின் ஆசான்களில் ஒருவராக இருந்த அனந்து முதன் முதலாக
இயக்கிய “சிகரம்” படத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட
ஆனந்த்பாபுவின் கேரக்டர் என்றே சொல்லலாம். இதன் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு பெரிய
பிரேக் தந்த “சேரன் பாண்டியன்” படத்தில் நாயகன் மாதிரியான வாய்ப்பு. அடுத்த ஆண்டு கே பாலசந்தர் இயக்கித்தில் வெளிவந்த
”வானமே எல்லை”யில் நாயகர்களில் ஒருவராக வாய்ப்பு.
தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த
அஷ்ரப் இயக்கிய ”எம்ஜியார் நகரில்” கே எஸ் ரவிகுமாரின் “புத்தம் புது பயணம்”, விக்ரமனின்
“நான் பேச நினைப்பதெல்லாம்” என ஓரளவு ஓடிய படங்களில் எல்லாம் அவர் நாயகனாகவே, நாயகர்களில் ஒருவராகவோ இருந்தார்.
இதன் மூலம் லோ பட்ஜெட் படங்களின் நாயகனாக அவருக்கு ஒரு முகம் கிடைத்தது.
அடுத்து வந்த ஆண்டுகளில்
சூரியன் சந்திரன், மணி-ரத்னம், பட்டுக்கோட்டை பெரியப்பா, வாட்ச்மேன் வடிவேலு ஆகிய படங்களில்
நடித்தார். ஆனால் இவை எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் பலத்த சரிவு. இக்காலகட்டத்தில்
சில தெலுங்குப் படங்களில் நடித்தார். பின் தமிழுக்கு திரும்பிவந்து 1998ல் செந்தமிழன்
இயக்கத்தில் ரஞ்சித், வடிவேலு உடன் இணைந்து “சேரன் சோழன் பாண்டியன்” படத்தில் நடித்தார்.
இவரது சமகால நாயகனான மோகனின் மறு பிரவேசமான “அன்புள்ள காதலுக்கு” படத்திலும் ஒரு கேரக்டர்
செய்தார். அத்துடன் தமிழகமும் இவரை மறந்து போனது.
கே எஸ் ரவிகுமாருக்கும்
இவருக்கும் பூர்வ ஜென்ம பந்தமோ என்னவோ பத்தாண்டுகள் கழித்து “ஆதவன்” படத்தில் இவருக்கு
ஒரு வேடம் கொடுத்தார்.
ஆனந்த்பாபு நாகேஷின்
மகன் என்பதற்காக அறிமுகத்தை தவிர வேறு எந்த சலுகையும் யாரிடமும் பெறவில்லை என்பதே உண்மை.
எல்லோரும் அவர் அவர்களின் தேவைக்கேற்ப வாய்ப்பைக் கொடுத்தார்கள். அது அவர்களின் தவறும்
அல்ல. 1980களில் தங்கள் படங்களில் நடனம் ஆடும் ஒரு ரோலுக்கு ஏற்ற நடிகராக அவருக்கு
வாய்ப்பளித்தார்கள். 1990களில் சில நாயகர்கள் சேர்ந்து நடித்த படங்களுக்கு, நடிப்பில்
மிகவும் சொதப்பாத, மக்களுக்கும் அறிமுகமான நடிகர் வேண்டுமன்பதற்காக அவரை தேர்ந்தெடுத்தார்கள்.
விக்ரமன் “பெரும்புள்ளி” படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த
“நான் பேச நினைப்பதெல்லாம்” படத்தில் நாயகன் வாய்ப்பையே கொடுத்தார்.
கே எஸ் ரவிகுமாரைத்
தவிர வேறு யாரும் தாங்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆனந்த்பாபுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
80களின் பிற்பகுதியில் முன்வரிசை கதாநாயகர்களாக விளங்கியவர்கள், இயக்குநர்கள் எல்லோருமே
நாகேஷிடம் பெரு மதிப்பு கொண்டிருந்தவர்கள். இவ்வளவு ஏன்? எண்ணற்றவர்களுக்கு தொடர் வாய்ப்புகள்
கொடுத்து தூக்கிவிட்ட கே பாலசந்தர், தன் உற்ற
துணையாக விளங்கிய நாகேஷின் மகனுக்கு பிற்காலத்தில் தான் வாய்ப்பு கொடுத்தார், அதுவும்
அவருக்கு தேவைப்பட்டதாலேயே.
அது அவர் அவர்களின்
சொந்த விருப்பு வெறுப்பு. ஆனால் ஆரம்ப காலத்திலேயே ஒரு நூறு நாள் படம் கொடுத்தும் சுதாரிக்காமல் போனது
யார் குற்றம்? ஆனந்த்பாபுவுக்கு ஆக்ஷன் ஹீரோவாக ஆகும் அளவுக்கு ஆகிருதியான உடல்வாகு
இல்லை. கனவுக் கண்ணனாக ஆகும் அளவுக்கு கவர்ச்சியான தோற்றம் இல்லை. உயரமும் சற்றுக்
குறைவு. ஆனால் அவரிடம் நடனம் ஆடும் திறமையும், ஓரளவுக்கு உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரும்
நடிப்புத்திறமையும் இருந்தது. அதைக் கொண்டு
மோகன் போல சில ஆண்டுகள் நாயகனாக கோலோச்சியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு துணை கதாபாத்திரமாகத்தான்
மக்கள் மனதில் பதிய முடிந்தது.
உவமைக் கவிஞர்
சுரதா ஒரு கவியரங்கிற்கு தலைமை வகித்திருந்த போது, பங்கேற்ற ஒரு கவிஞர் ஒரே வரியை திரும்ப திரும்ப வாசித்தாராம். அப்போது சுரதா
தன் அருகில் இருந்தவரிடம், இவன் ஏன் ஒற்றைப் பல்லை வைத்தே சிரிக்கிறான் என்றாராம்.
ஆனந்த்பாபுவும் அது போலத்தான். தன்னுடைய நடனத்தில் சில ஸ்டெப்புகளை மட்டுமே தொடர்ந்து
ஆடிவந்தார். நான்கைந்து படங்களிலேயே அது சலித்துவிட்டது. ஒரு இடைவெளிக்குப் பின் புதுவசந்தத்தில்
ஆடியபோது மீண்டும் ரசிக்கப்பட்டது. பின்னர் அதுவும் அலுத்தது.
சினிமா துறை என்பது,
அரசாங்க அலுவலக வேலை அல்ல. பணியில் சேரும்போது இருக்கும் திறமை போதுமானது. மேலும் வளர்த்துக்
கொள்ள தேவையில்லை, சீனியாரிட்டி அடிப்படையில் பிரமோஷன் கிடைக்கும் என்பதைப் போல. தொடர்ந்து
தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கவேண்டும். இப்போது அரசு அலுவலகங்களில் கூட தன்னை வளர்த்துக்
கொள்ளாதவர்கள் பின் தங்க நேரிடுகிறது. இந்நிலையில் ஆனந்த்பாபு தன் திறமையை வளர்க்க
தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். மேலும் அவருடைய தனிப்பட்ட வாழ்வும் சிறப்பாக இல்லை.
ஒரு துறையில் ஈடுபடுபவர் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டுமெனில் தனிப்பட்ட வாழ்வின்
தவறுகள், சோகங்கள் வேலையில் இருக்கும் போது தலைகாட்டக் கூடாது. ஆனந்த்பாபுவின் சில தனிப்பட்ட பழக்கங்கள் அவருடைய
முன்னேற்றத்துக்கு தடையாய் இருந்தது.
தற்போது, ஆனந்த்பாபுவின்
மகன் கஜேஷ் நாயகனாக “கல்கண்டு” என்னும் படத்தில் அறிமுகமாகிறார். நகைச்சுவை நாயகனின்
மகனைத்தான் ஏற்றுக்கொள்ள மக்கள் யோசிப்பார்கள். பாலையா முதல் சிங்கமுத்து வரை அதற்கு
உதாரணங்கள் உண்டு. கஜேஷ் நாயகனின் மகனாகத்தான் அறிமுகமாகிறார். அவருடைய தந்தை போல்
இல்லாமல் தாத்தா போல் அழியாப்புகழ் பெற வாழ்த்துக்கள்.