November 22, 2014

சந்திர சேகர்

மதுரை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த, இப்போது வாகை சந்திரசேகர் என்று பெயர்மாற்றம் செய்துகொண்ட சந்திரசேகர், தமிழ்சினிமாவில் முக்கிய நாயகன்களில் ஒருவராக வருவார் என்று அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் பலரும் எதிர்பார்த்தார்கள். தனது நடிப்புலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாமே அக்கால கட்டத்திற்கு புதுமையான களனைக் கொண்ட படங்கள். அவற்றில் பல வணிகரீதியான வெற்றியைப் பெற்றவை மற்றும் பொதுமக்களிடம் சென்று சேர்ந்தவை. ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் படங்களில் நடிப்பது படிப்படியாக குறைய ஆரம்பித்தது.  இப்படி எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் தமிழ்சினிமாவில் நிலைக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் சந்திரசேகருக்கு அவரின் மீது விழுந்த முத்திரைகள் முக்கிய காரணமாய் அமைந்தது.

தமிழ்சினிமாவில் ஒருவருக்கு முத்திரை குத்துவது என்பது சகஜமான ஒன்று. தங்கை வேடம், நண்பன் வேடம் ஆகியவற்றை ஏற்றவர்கள் அதிலிரிருந்து வெளியேற பிரம்ம பிரயத்னம் செய்யவேண்டும். நாயகன், சத்யா படங்களில் நடித்த ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டி அப்போது நடித்து வந்த படங்களில் எல்லாம் இறந்து போவதுபோலவே காட்சி அமைப்பு இருக்கும். ஒருமுறை அவர் ஷூட்டிங்கில் இருந்து திரும்பிவரும் பொழுது, அவருடைய மகன் “அப்பா, இந்தப் படத்தில் நீங்கள் எப்படி சாகப்போகிறீர்கள்” என்று கேட்டாராம். கமலா காமேஷ் என்றாலே வயதான ஏழைப் பெண், தலைவாசல் விஜய் என்றாலே குடிகாரர் என்று இயக்குநர்களே முன்முடிவுடன் தான் இங்கே சிந்திப்பார்கள்.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரை வாங்கியவர்கள் தமிழ்சினிமாவில் வெகு சிலரே. அவர்களுள் ஒருவர் சந்திரசேகர்.

70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் வந்த, அப்போதைய காலகட்டத்திற்கு புது முயற்சியான படங்கள் எல்லாவற்றிலும் சந்திரசேகர் பிரதான பாத்திரமாக இருந்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் புதிய வார்ப்புகளில் அறிமுகமான சந்திரசேகர் நிழல்கள், கல்லுக்குள் ஈரம், சுமை, ஒருதலை ராகம், பாலைவனச்சோலை, சிவப்பு மல்லி என தொடர்ந்து அந்த நேரத்தில் புது கதைக்களமாக இருந்த படங்களில் எல்லாம் அவர் நடித்தார்.

இந்த படங்களில் நடித்த போது, அவருக்கு மூன்றுவகையான முத்திரைகள் குத்தப்பட்டது. இதுபோக கலைஞரின் வசனத்தில் உருவான “தூக்கு மேடை” படத்தில் நடித்த போது இன்னுமொரு முத்திரை குத்தப்பட்டது. சோகம் என்றவென்றால் இந்த முத்திரைகளில் இருந்து இந்த 35 ஆண்டுகளாக அவரால் மீண்டுவரவே முடியவில்லை.
முதல் முத்திரை என்பது தியாகம்/உதவி செய்யும் நண்பன் என்னும் கேரக்டர்.  சந்திரசேகர் என்றாலே ஒரு சோகமயமான, உயிர்கொடுக்கும், உதவும் நண்பன் என்ற பிம்பம் இயக்குநர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கே உண்டு. அவர் நடிக்க ஆரம்பித்த காலம் தொட்டு, இப்போதுவரை அந்த கேரக்டர் அவருடனேயே தொடர்ந்து வருகிறது. ஊமை விழிகள், செந்தூரப்பூவே, ஜெய்ஹிந்த் என அது தொடர்கதையாகவே வருகிறது. இதற்கெல்லாம் மகுடமாக 2002ல் வெளிவந்த சார்லி, சந்திரசேகர் இணைந்து நடித்த ”நண்பா நண்பா” வில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசியவிருது கிடைத்தது. இந்தப் படத்திலும் நட்புதான் பிரதானம். ஒரே வித்தியாசம், சந்திரசேகருக்காக சார்லி நிறைய தியாகம் செய்வார்.

இன்னொரு முத்திரை இவர் ஒரு கம்யூனிசவாதி என்பது. இவர் ஆரம்பத்தில் நடித்த சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் ஆகியவற்றால் இந்த முத்திரை கிடைத்தது. சுமை படத்தில் ஏழைக் குடும்பத்தை காப்பாற்ற போராடும் மூத்த மகன், சிவப்பு மல்லியில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் மில் தொழிலாளி, பட்டம் பறக்கட்டும் படத்தில் வேலை இல்லா பட்டதாரி. இந்த படங்கள் கொடுத்த பாதிப்பால், அநியாயத்துக்கு எதிராக போராடி அநியாயமாக அடிவாங்கும்/சாகும் கேரக்டர்களில் எல்லாம் சந்திரசேகருக்கு இயக்குநர்கள் வாய்ப்பளித்தார்கள். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம், கோமல் சுவாமிநாதனின் கதையில், சிவகுமார் நடித்த “இனி ஒரு சுதந்திரம்” போன்ற படங்களில் நடித்தார். சிவப்பு மலர்கள், சிவப்பு நிலா என அவர் நடித்த படங்களின் டைட்டில் கூட சிவப்பாகவே இருந்தது.
ஒண்ணு படத்துல சிவப்பு இருக்கும் இல்லையின்னா அவர் உடம்புல இருந்து சிவப்பு ரத்தம் வெளிய வரும் என்று என்னும் அளவுக்கு அவரின் பெரும்பாலான படங்கள் இருந்தன.

இவையெல்லாம் கூட பரவாயில்லை. மூன்றாவது முத்திரைதான் அவரை இன்றுவரை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் நடுத்தர வர்க்க/ஏழை கேரக்டர். நண்பனின் கேரக்டரில் கூட பணக்கார நண்பன் என்னும் வெரைட்டியில் சிலர் தப்பி விடுவார்கள். பணக்காரராய் இருந்து கம்யூனிசம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சந்திர சேகருக்கு தமிழ்சினிமா முத்திரை குத்திய இந்த கேரக்டர், அதுவும் லோ-பட்ஜெட் படங்களுக்கே செதுக்கி வைத்தாற்போன்ற கேரக்டர், அது அவருக்கு மட்டுமே செப்புப் பட்டயத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. இந்த முத்திரையால், அவர் சிறு/குறு முதலீட்டுப்படங்களிலேயே நடிக்க முடிந்தது.

எத்தனை படங்கள்?. இதுவரை சந்திர சேகர் நடித்துள்ள படங்களில் 99 சதவிகிதம் படங்கள் சிறு/குறு முதலீட்டுப் படங்கள் தான். ராம நாரயணன். விசு, சங்கிலி முருகன் என 80களில் சிறு முதலீட்டுப் படங்களை எடுத்து குவித்தவர்கள், முதலில் பிலிம் வாங்குவார்களோ இல்லையோ சந்திரசேகரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். ஊமை விழிகள், செந்தூரப் பூவே தவிர்த்துப்பார்த்தால் எல்லாமே சிறு முதலீட்டுப் படங்கள் தான். அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் ஒரு மீடியம் பட்ஜெட் படம். கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த “மகராசன்” கூட ஒரு லோ-பட்ஜெட் படம்தான்.

சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான், சகல கலா சம்மந்தி, பெண்கள் வீட்டின் கண்கள் என விசுவின் படங்கள், சுமையில் தொடங்கி சிவப்பு மல்லி, நாகம் (தயாரிப்பு : இராம நாராயணன், இயக்கம் : சோழ ராஜன்) துர்கா வழியாக ராம நாராயணனின் 100 வது படமான “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” வரை  ராம நாராயணனின் பெரும்பாலான படங்கள். சங்கிலிமுருகன் தயாரித்த படங்கள், ஏன் இப்பொழுதுகூட மாஞ்சா வேலு வரை சிறு முதலீட்டுப் படங்கள்தான்.
சந்திரசேகரும் வெவ்வெறு கேரக்டர்களும் அவ்வப்போது முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவை அவ்வளவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சந்திரசேகர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளில் சேனா படத்தில் அப்படி ஒரு கேரக்டரிலும், மாஞ்சா வேலு படத்தில் பிரதான வில்லனாக நடித்தார். கரகாட்டக்காரனில் நெகட்டிவ்வாக இருந்து திருந்திவிடும் பாத்திரம். சந்திர சேகரை வில்லனாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல சந்திரசேகரை காதலன் கேரக்டரிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலவனச் சோலை வரை அவரது முகத்தில் ஒரு ஷைனிங் இருந்தது. அது நாளாக நாளாக குறைந்துவிட்டது. இல்லம் படத்தில் ஒரு ரொமாண்டிக் இன்ஸ்பெக்டர் வேடம். அமலாவை காதலிப்பது போல். அவர் முகத்தில் காதலைத் தவிர எல்லா உணர்ச்சிகளும் வந்தன.

இந்த முத்திரை மட்டும் குத்தப்படாமல் இருந்தால், விஜயகாந்த்துக்கு அடுத்த நிலையில் ஒரு மினிமம் கேரண்டி கமர்சியல் ஹீரோவாக சந்திரசேகர் வந்திருக்கலாம்.

80களில் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் ராஜ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் டென்னிஸ் விளையாடிய காலங்களில் ஒரு வெளிநாட்டு விளையாட்டு விமர்சகர் சொன்னார், “இந்தியர்கள் ஒரு நல்ல போர் ஹேண்ட் ஷாட்டோ அல்லது நல்ல  பேக் ஹேண்ட் ஷாட்டோ அடித்துவிட்டால் போதும். ஒரு நாற்காலி போட்டு அதைத் தாங்களே ரசித்துவிட்டுத்தான், அடுத்த ஷாட் விளையாடுவார்கள். ஆனால் மற்ற நாட்டினரோ அடுத்த ஷாட்டை எப்படி ஆடுவது என்ற சிந்தனை மற்றும் செயலில் இறங்கிவிடுவார்கள்.” இதனால் தான் இந்தியர்களால் அதிகமான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பார். அந்த கால கிரிக்கெட் அணி, ஏன் ரசிகர்கள் கூட அப்படித்தான். செமி-பைனல் போனா போதும் என்பார்கள். இந்த மனநிலை பெரும் பாலோனோர்க்கு அவ்வாறே இருந்தது.

சந்திரசேகரும் அப்போதைய இந்த மனநிலைக்கு விதிவிலக்கு பெற்றவர் அல்ல. கிராமத்தில் இருந்து நடிப்பதற்காக வந்தோம். கஷ்டப்பட்டு நாடக வாய்ப்பு பெற்றோம், பாரதிராஜா மூலம் அறிமுகமானோம், நான்கைந்து வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துவிட்டோம். இது போதும் என்று நினைத்திருக்கக் கூடும். தொடர்ந்து சிறு முதலீட்டுப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவும், கதை, தன்னுடைய வேடம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேட்டவர்களுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். தன்னுடைய அடுத்த கட்ட உயர்வு என்னவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே.

மருமகளே வாழ்க, இனிமை இதோ இதோ, வீட்டுக்காரி, பூம் பூம் மாடு, அர்ச்சனைப் பூக்கள் என குறு/சிறு முதலீட்டுப் படங்களிலேயே நடித்தார். மூன்றே வருடங்களில் ஒரு ஹீரோ என்ற அந்தஸ்தை இழந்து துணை நடிகர் என்ற கேட்டகிரிக்கி மாறினார். சந்திரசேகர் துணை வேடங்களில் நடித்த சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதால் துணை நடிகர் என்ற முத்திரை அழுத்தம் திருத்தமாக விழுந்தது.

ஹீரோவாக இருந்து, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸாக மாறியபின்னர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த வாய்ப்புகளும் அவருக்கு குறையத் தொடங்கின. அரசியலில் ஏதாவது ஒரு நிலையை நாம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.ஆனால் சினிமாவில் எல்லாத்தரப்பிலும் இருப்பதே கேரக்டர் ஆர்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் கொடுக்கும். சந்திரசேகர், கருணாநிதி வசனத்தில் தூக்குமேடை படத்தில் நடித்தபிறகு பரவலாக திமுக சார்புடையவராக அறியப்பட்டார். கட்சியிலும் இணைந்தார்.

நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக போட்டியிட்டார். உண்மையில் அந்த 20 ஆண்டுகளும் அவர் திமுககாரராகவே பார்க்கப்பட்டார். திமுக சார்பு திரைப்படங்கள், திமுக பிரமுகர்கள் தயாரித்த/இயக்கிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்தார். இதனால் மாற்றுக் கட்சியினர் தயாரிக்கும்/பங்குபெறும் படங்களில் அவருக்கு ஏற்ற நல்ல வேடங்கள் இருந்தாலும் அதைப் பெறும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை.
சந்திர சேகரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான அம்சம், அவர் தொடர்ந்து சிலருடன் பணியாற்றியதுதான். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்களுடனும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் போன்ற ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். இது சாதகமான அம்சம் என்றாலும், மற்ற புதிய இயக்குநர்கள்/நடிகர்கள் இவரை அழைப்பதில் மனத்தயக்கம் உண்டாக காரணமாகவும் இது அமைந்தது. 

80களின் பிற்பகுதி தொடங்கி 90களின் இறுதிவரை வந்த படங்களைப் பார்த்தோமேயானால் பெரும்பாலும் பணக்கார வீடுகளை மையப்படுத்தியே கதைக்களம் இருக்கும். அந்த சூழலுக்கு சந்திரசேகர் மிக அன்னியமாகத் தெரிந்தார். கிழக்கு கரை, பெரிய குடும்பம், பெரிய தம்பி,பாண்டவர் பூமி போன்ற கிராமிய படங்களில்கூட  அவர் ஒட்டாமல்தான் தெரிவார்.
ஆடுமேய்க்கும் கீதாரிப்பாக அவர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் மட்டும் அசலாக பொருந்தியிருந்தார்.

பணக்காரத் தோரணை என்பது தோற்றத்தால் மட்டும் வருவதல்ல. சில பாடி லேங்வேஜில், கண் பார்வையில் அதை எளிதாக கொண்டுவந்து விடலாம். அதுவும் முடியாவிட்டால்வாய்ஸ் மாடுலேஷனிலேயே கொண்டுவந்து விடலாம். சந்திரசேகருக்கு அந்த பணக்காரத் தோரணை வரவேயில்லை. அவரின் ஒரு தோள்பட்டை லேசாக கீழிறங்கியே இருக்கும்.சிரிப்பு ஒரு அப்பாவித்தனமான சிரிப்பாகவே வெளிப்படும். தமிழ் உச்சரிப்பு சரியாக இருந்தாலும் கிராமியத் தனமாக இருக்கும். இதனால் அவருக்கு நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னால் அவர்  மிகச் சில படங்களிலேயே நடித்துள்ளார். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி, மணிவண்ணன்  போன்ற இயக்குநர்களும், சங்கிலி முருகன் போன்ற தயாரிப்பாளர்களும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் என அவருடன் இணைந்து நடித்த முக்கிய நடிகர்களும் தங்கள் படங்களைக் குறைத்துக் கொண்டதால் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தனியார் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களின் வருகைக்கு முன்னால், மிமிக்ரி என்பது பொதுவாக ஆர்கெஸ்ட்ரா குழுக்களின் பாடல்களுக்கு இடையேதான் இடம்பெறும். கல்லூரி விழாக்களிலும் கூட கலை நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெறும். ஒருவர் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறார்/அனைத்து தரப்பிலும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்  என்பதை உணருவதற்கு இருக்கும் அளவுகோல்களில் ஒன்று, அவருடைய குரல் மிமிக்ரி நிகழ்ச்சிகளில் இடம்பெறுவது.

பெரும்பாலும், தனித்துவமான குரல்களையே அப்போதெல்லாம் மிமிக்ரி கலைஞர்கள் தேர்ந்து எடுத்துக்கொள்வார்கள். தனித்துவமான குரல்களில் சந்திரசேகரின் குரலும் ஒன்று. ஆனால் அந்த குரலை/மாடுலேசனை பெரும்பாலும் யாரும் கையாண்டதில்லை. இத்தனைக்கும் அவர் நிறைய வெற்றிப்படங்களில் இருந்திருக்கிறார். அவர் ஏற்று நடித்த கேரக்டர்களை பகடி செய்வதும் எளிது. பின்னர் தனியார் தொலைக்காட்சிகளில் பொழுது  போக்கு அம்சமாக உருவெடுத்த ரியாலிட்டி ஷோக்களில், தங்களுடைய தனித்தன்மையை காட்டுவதற்காக மக்கள் மறந்து போயிருந்த குரல்களை எல்லாம் போட்டியாளர்கள் மிமிக்ரி செய்தார்கள்.


கர்ணனில் சல்லியனாக நடித்து, கரகாட்டக்காரனில் கனகா தந்தையாக. கிழக்கு வாசலில் குஷ்புவின் தந்தையாக நடித்து, சென்ற தலைமுறைவரை நன்கு அறியப்பட்ட சண்முகசுந்தரம், சிறந்த டப்பிங் கலைஞர். பல மொழிமாற்றுப் படங்களுக்கு குரல் கொடுத்தவர். அவருடைய கரகாட்டக்காரன் வசனம் ஒன்றைக்கூட ஏராளமான மிமிக்ரி கலைஞர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் சந்திரசேகரை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது ஆச்சரியம். 1998க்குப் பிறகு அவர் திரைத்துறையில் இருந்து பெருமளவு விலகியிருந்தது ஒரு காரணம். மேலும் பொது மக்களிடம் சந்திரசேகர் நடிகராக சிறிதளவுகூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ? என யோசிக்க வைத்த விஷயம் இது. தமிழ்சினிமா குத்தும் முத்திரைகள் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி வாய்ந்தது மட்டுமல்ல, ஒருவரை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது போலும்.