December 26, 2014

ராம்கி

ராம்கி அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் பட்டயச் சான்று பெற்றவர். அவர் இண்டர்வியூவிற்கு சென்ற போது, மனோரமா அவர்கள் தான் அவரது திறமையை பரிசோதித்தவர். உனக்கு சீட் கிடையாதுப்பா என்று சொன்ன போது அவர் உடனே பொங்கி அழுது விட்டாராம். உடனே மனோரமா அவர்கள் இப்படி சென்சிட்டிவ்வாக இருப்பது ஒரு நடிகனுக்கு மிக அவசியம் என்று சொல்லி சீட் வழங்கினாராம்.  சின்னப்பூவே மெல்லப்பேசு படம் வெளியாகி பரவலான கவனிப்பை தமிழகம் முழுவதும் ராம்கி பெற்றிருந்த நேரம். எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அவரின் பேட்டி இருக்கும்.  அதில் இந்த சம்பவத்தை தவறாமல் கூறியிருப்பார்.

சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் கல்லூரி மாணவன் வேடம். படம் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர், முதல் படம் மாதிரியே தெரியலையே? நல்லா நடிச்சிருக்கானே! என்று ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து நாலு வருடங்கள் பலவிதமான கேரக்டர்களில் நடித்தார் ராம்கி. எல்லாமே தமிழக மக்கள் தங்கள் மனம் கவரும் நாயகனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலான கேரக்டர்களே.

பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தங்கை மேல் அளவிலா பாசம் கொண்ட அண்ணனாக “தங்கச்சி”,  ஆபாவாணன் உள்ளிட்ட திரைப்பட கல்லூரி மாணவர்களின்  தயாரிப்பில் உருவான ”செந்தூரப்பூவே”, அழகப்பன் இயக்கத்தில் உருவான “இரண்டில் ஒன்று”,  ஆர் சி சக்தி இயக்கத்தில் “அம்மா பிள்ளை”, ஆபாவாணனின் இணைந்த கைகள், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசு கதை வசனம் எழுதிய மருதுபாண்டி, மனோஜ்குமார் இயக்கத்தில் வெள்ளையத்தேவன், பாரதி மோகன் இயக்கத்தில் “ஒரு தொட்டில் சபதம், மனோ பாலா இயக்கத்தில் போலிஸ் அதிகாரியாக “வெற்றிப்படிகள்”, கவலையற்ற இளைஞனாக ஏவிஎம்மின் பெண்புத்தி முன் புத்தி என ஒன்றுக்கொன்று வித்தியாசமான வேடங்களில் நடித்தார் ராம்கி.
1992 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையின் அடிப்படையில் செல்வமணி இயக்கிய ”குற்றப்பத்திரிக்கை” படத்தில் ஒப்பந்தமானார். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் செல்வமணி இயக்கிய படம். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருமே ஏதாவது ஒருவகையில் தங்கள் கேரியரில் இறக்கத்தை சம்பாதித்தார்கள்.அதில் ஒருவர் ராம்கி. குற்றப்பத்திரிக்கை படம் வெளியாவதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக ஓராண்டிற்கு எந்தப் படமும் ராம்கிக்கு வெளிவராமல் போனது.

அதன்பின்னர் ஆத்மா, பாஸ்மார்க் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது புதிதாய் வந்திருந்த ரசிகர்கள் இது பழைய ஆளுடா என்ற கண்ணோட்டத்தில் ராம்கியைப் பார்த்தார்கள். ஓராண்டு இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றுதான். விக்ரம் போன்ற நடிகர்கள் இரண்டாண்டுகள் வரை ஒரு படத்திற்காக மெனக்கெடுகிறார்கள். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் மார்க்கட் இழந்து மீண்டும் ரீ எண்ட்ரி ஆனவரைப் போலவே ராம்கியை பலர் கருதினார்கள்.

1994 ஆம் ஆண்டில் கேயார் இயக்கிய ”வனஜா கிரிஜா” வில் நெப்போலியனுடன் இணைந்து நடித்தார். கேயார் சற்று நவீனப்படுத்தப்பட்ட ராம நாராயணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டு நாயகர்களில் ஒருவராக அல்லது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் வாய்ப்புக் கிடைத்தது ராம்கிக்கு. கேயார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து ராம்கியைப் பயன்படுத்தினார். மாயாபஜார், எனக்கொரு மகன் பிறப்பான், இரட்டை ரோஜா ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ராம்கி தொடர்ந்து நடித்தார். கேயார், விஜயசாந்தியை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்று போன ஜான்ஸியிலும் ராம்கிதான் ஹீரோ. ஆனாலும் இடை இடையே கருப்பு ரோஜா, ராஜாளி என இன்ஸ்டியூட் மாணவர்களின் படங்களில் ஆக்‌ஷன் ரோல்களிலும் நடித்து வந்தார்.

ரங்கநாதன் இயக்கிய ”ஆஹா என்ன பொருத்தம்”, ரமேஷ் கண்ணன் இயக்கிய தடயம், களஞ்சியம் இயக்கத்தில் கார்த்திக்குடன் இணைந்து நிலவே முகம் காட்டு ஆகிய படங்களில் நடித்தாலும் மக்களின் கவனத்தை கவர முடியவில்லை.

2000 ஆவது ஆண்டில் கேயாரின் ஒரிஜினலான ராம நாராயணனின் “பாளையத்து அம்மன்” படத்தில் நடித்தார் ராம்கி. தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஷக்கலக்க பேபி ஆகிய நகைச்சுவை நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராம நாராயணன் இயக்கிய படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் கிட்டத்தட்ட செட் பிராப்பர்டி போலவே ராம்கி பயன்படுத்தப் பட்டார். ஒஹோ இவர் இப்போ இந்த மாதிரிப் படங்களில் தான் நடிக்கிறாரோ என்பதை உறுதிப்படுத்துவது போல புகழ்மணி இயக்கிய “படை வீட்டு அம்மன்” படத்திலும் நடித்தார். அத்தோடு சரி. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாசாணி, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.

முதல் படத்தில் நன்கு பெயர் வாங்கிய நடிகர், அடுத்தடுத்து வெரைட்டியான ரோலகளில் நடித்தவர், வெற்றி பெற்ற படங்களில் பங்கெடுத்த நடிகர், தொடர்ந்து தன்னை தக்க வைக்க முடியாமல் போக என்ன காரணம்? பின்னர் ஓரளவு வாய்ப்புகள் கிடைத்து நடித்துக் கொண்டு இருக்கும் போதே பத்தாண்டுகள் அளவிற்கு வாய்ப்பில்லாமல், திரைத்துறையினரால் மறக்கப் படுவதற்கு என்ன காரணம்?
முதற் காரணமாகத் தோன்றுவது சரியான மக்கள் தொடர்பு இல்லாமை. செந்தூரப் பூவே படத்தில் ராம்கியின் ஜோடியாக அறிமுகமானார் நிரோஷா. தொடர்ந்து சில படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் வந்த சினிமா பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் ராம்கி/நிரோஷாவைப் பற்றிய கிசு கிசு வராத வாரமில்லை. தாலி கட்டாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள், அடுத்த மாதம் கல்யாணம் என விதவிதமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்போதைய காலகட்டத்தில் இம்மாதிரி கிசுகிசுக்கள் நடிகர்களுக்கு பலத்த கவனிப்பை மக்களிடையே பெற்றுத்தருகின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் கன்சர்வேடிவ் மனநிலையில் இருந்த 80களின் இறுதியில் மக்கள் இதை ஒவ்வாமையுடன் தான் பார்த்தார்கள்.

மேலும் நாயகன் என்றால் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் அல்லது உதவி செய்வது போன்ற செய்திகளையாவது பத்திரிக்கையில் வரவைக்க வேண்டும். வெற்றிபெற்ற நடிகர்கள் அனைவருமே இதில் தனி சிரத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் ராம்கி இம்மாதிரி வேலைகளை எல்லாம் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கை படம் தாமதமான சமயத்தில் ஒரு அனுதாபம் ஏற்படுமாறு செய்திகளை வரவைப்பதில் ஏதும் ஆர்வம் காட்டவில்லை. முதல் படம் நடித்து  முடித்த நிலையில் தொடர்ந்து பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தவர் பின்னர் அதைக் கடைப் பிடிக்கவில்லை. அவ்வளவு ஏன்? 2000க்குப் பின்னர் செயற்கைக்கோள் தொலைக்காட்சி முதல் நிலை ஊடகமாக வளர்ச்சியடைந்த பின்னர் அதில் பங்கெடுப்பதில் ராம்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதனால் பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ராம்கிக்கு ஏற்பட்டது.

ஒரு நடிகனை, தமிழக மக்கள் கிராமத்து கதாபாத்திரத்தில்  ஏற்றுக்கொண்டாலோ அல்லது ஆக்‌ஷன் வேடத்தில் ஏற்றுக் கொண்டாலோ எளிதில் கைவிட்டு விட மாட்டார்கள். எஸ்,திருநாவுக்கரசு அவர்களில் கதையில் உருவான மருதுபாண்டி சி செண்டர் வரை நன்கு ஓடிய படம். ஒரு வீரமிக்க கிராமத்து இளைஞனாக ராம்கியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். மனோஜ்குமார் இயக்கிய வெள்ளைய தேவன் படத்திலும் வீரமான கிராமத்து இளைஞன் வேடம் தான். ராம்கிக்கு அவருக்கு கிடைத்த வரவேற்பை தக்க வைக்கும் கலை கைகூடி வரவில்லை.

எத்தனை வேடங்களில் நடித்திருந்தாலும், ராம்கி என்ற உடன் நினைவுக்கு வருவது ஒரு துறுதுறுப்பான, துடுக்குத்தனமான இளைஞன் தான். சின்னப்பூவே மெல்லப் பேசு, பெண் புத்தி முன் புத்தி, பாஸ்மார்க் ஆகிய படங்களில் அதை சிறப்பாக பிரதிபலித்திருப்பார். ஆஹா என்ன பொருத்தம் படம் வரையிலும் கூட அந்த சார்ம் அவரிடம் இருந்தது. அந்த வேடத்தை அவரைவிட சிறப்பாக செய்யும் இளமையான ஆட்கள் வந்த உடன் அவர் இடம் பறிபோனது.

ராம்கிக்கு இருந்த இன்னொரு பிரச்சினை, அவருடன் நடிப்பவர்கள் அவரைவிட ஸ்கோர் செய்து விடுவது. செந்தூரப்பூவேவில் விஜயகாந்த், விஜயலலிதா, கேயாரின் படங்களில் நடிக்கும் போது குஷ்பூ, ஊர்வசி. அவ்வளவாக பெர்பார்மன்ஸ் கொடுக்க இயலாத அருண் பாண்டியன் கூட “இணைந்த கைகள்” படத்தில் நடிக்கும் போது, ராம்கியைவிட அதிக கவன் ஈர்ப்பு பெற்றார்.

ராம்கி நடிக்க வந்த புதிதில் ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லோரும் ரசிகர்களை கவரும் வயதில் இருந்தார்கள். அவர்களுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு. ஓரளவு தாக்குப்பிடித்து வளர்ந்து வந்த நிலையில் ஒராண்டிற்குப் படங்கள் இல்லாமல் போனது பெரிய இழப்பு ராம்கிக்கு. மீண்டும் திரும்பி வந்த போது, அஜீத், விஜய் என ரசிகர்களை கவரும் அடுத்த செட் ஆட்கள் வந்துவிட்டார்கள். முந்தைய தலைமுறையோடு போட்டி போட்டு ரசிகர்களை கவரும் அளவிற்கு ராம்கியிடம் பெர்பார்மன்ஸ் இல்லை. அடுத்த தலைமுறையோடு போட்டி போட வயது தடையாகிவிட்டது.


பிரியாணி படத்தில் ராம்கியைப் பார்த்தவர்கள் ஆள் இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்கள். 50 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் நாயகன் வேடத்துக்கு பொருத்தமான ஒரு உடலமைப்புடன் தான் இருக்கிறார்.நாயகனாக இல்லாவிட்டாலும் நல்ல துணை கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிரூபிக்கலாம் சரியான மக்கள் தொடர்பு பணியினை மேற்கொண்டால்.


December 03, 2014

ஏ ஆர் ரஹ்மான்

இரண்டாம் ஆண்டில் கேரளா அல்லது கர்நாடகாவிற்கு ஒரு ஒரு வார டூர் நான்காம் ஆண்டில் ஒரு 15 நாள் ஆல் இந்தியா டூர் என்பது 90களில் பொறியியல் கல்லூரிகளில் எழுதப்படாத விதியாக இருந்த காலம். இரண்டாம் ஆண்டில் நுழைந்த உடனேயே முதலில் சிலபஸ் பார்க்கிறார்களோ இல்லையோ டூர் புரோகிராம் பிளான் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கேரளா செல்வது என்று முடிவானது. பேருந்தில் கேட்பதற்காக பாடல் கேசட் ரெடி செய்யும் பொறுப்பு என்னிடம் வந்தது. காலையில பிளசண்டா இருக்கணும், மதியம் குத்து சாயங்காலம் சோக மெலடி இந்த டைப்புல நாலஞ்சு கேசட் ரெடி பண்ணு என்று டூர் கோ ஆர்டினேட்டர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

அதன்படி செலக்ட் செய்து பதியக் கொடுத்திருந்த கேசட்டுகளை வாங்கப் போன போது, மணிரத்னத்தோட ரோஜா பாட்டு கேசட் வந்திருச்சு. நல்லா இருக்கு, வாங்கிக்குங்க என்றார் கடைக்காரர். இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அதிகாரி துரைச்சாமி கடத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட படம். தளபதியின் கலெக்டர் நாயகனாக நடிக்கிறார், புது இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார் என்ற அளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரம். மணிரத்னமுடைய படம் என்பதால் நம்பி வாங்கினேன்.

டூரில் முதல் நாள் பிரியாணி சாப்பிட்டவர்கள் மூன்றாம் நாளில் மீல்ஸுக்கும் ஐந்தாம் நாளில் தயிர்சாதத்துக்கும் மாறியிருந்த நேரம். மலம்புழா டேம் செல்லும் வழியில் மதிய நேரம் ஒரு ஆற்றின் கரையில் வண்டியை ஹால்ட் செய்தோம். ஆகஸ்ட் மாத கேரள ஜிலீர் கிளைமேட், குளிக்க பதமாக ஓடும் ஆறு, அருகிலிருந்த ஓலை வேய்ந்த நாயர் மெஸ்ஸில் சுடச்சுட சாப்பாடு. 5 மணிக்கு கிளம்புவதாக பிளான் என்பதால் அவரவர் செட்டுடன் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கள் குரூப் பஸ்ஸில் ரம்மி விளையாடத் துவங்கினோம். வேற கேசட்டே இல்லையாடா என்ற நண்பனின் வேண்டுகோளுக்காக ஒலிக்க விடப்பட்டது ரோஜா படப் பாடல்.

வாழ்வின் இனிமையான தருணங்களில் ஒன்றாகிப் போன நிகழ்வு அது. அந்த கிளைமேட்டிற்கும், நட்பு அரட்டைக்கும் பிண்ணனியாக ரோஜா பாடல்கள். நல்லா இருக்கில்ல என்று பேசிக் கொண்டோம். அதன்பின் சில நாட்களில் ஆகஸ்ட் 15 அன்று படம் ரிலீஸானது. ஏ சைடு பூராம் ரோஜா பாட்டு பதிஞ்சு வச்சிருக்கோம். பி சைடுல பெரும்பாலும் சூரியன், அண்ணாமலை, தெய்வவாக்கு இல்லையின்னா செம்பருத்தி போட்டு கொடுத்திடுவோம் என்பார் கேசட் கடைக்காரர். கல்லூரி விழாக்கள், விசேஷ வீடுகள் என ரோஜா பாடல்கள் மெல்ல ஊடுருவி ரஹ்மானின் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது.

ஒரு மனிதனின் வெயில் தாங்கும் திறமையை சோதிக்கும் பரிசோதனை களங்களில் ஒன்றான விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷம். 20 பேர் பிரயாணிக்கும் வசதி கொண்ட மெட்டடார் வேனில் நண்டு சிண்டுகளோடு முப்பதுக்கும் அதிகமானோர் மத்தியான உச்சி வெயிலில் வறண்ட கந்தகபூமியின் வழியே திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். இரவில்  ராட்சஷர்கள் பல்லாங்குழி  விளையாடுவார்களோ என்று நினைக்கும் அளவில் குழியும் சரளைக்கற்களும் நிறைந்த சாலை. ஆரத்திக்காக முன் யோசனையில் ஒரு குளிர்பான பாட்டிலில் மஞ்சள் குங்குமம் கரைத்து வைத்திருந்தார்கள். அதை குளிர்பானம் என்று நினைத்து ஒரு வாண்டு குடித்து, தான் காலையில் வெஜிடபிள் பிரியாணிதான் சாப்பிட்டேன் என்பதை வேனில் அனைவருக்கும் சந்தேகமின்றி நிரூபித்திருந்தான். சுற்றிலும் அவுங்க விசேஷத்துக்கு 101 ரூபாய் எழுதியிருந்தேன். இன்னைக்கு 51 ஓவாதான் எழுதியிருக்காங்க என்ற புலம்பல்கள் என ஐம்புலன்களும் சோதனைக்குள்ளான நேரம். அப்போது, வேன் ட்ரைவர் ஒரு பாடல் கேசட்டை ஒலிக்க விட்டார். அத்தனை சிரமங்களும் குறைந்தாற்போல ஒரு உணர்வு. வேனில் இருந்த பலரும் அதை அனுபவித்தனர். அதுதான் ஜெண்டில்மேன்.

அதன்பின் ஒரு மூன்று மாதங்கள் எல்லாப் பக்கமும் ஜெண்டில்மேன் பாடல்கள் தான். அந்தக்காலம் சிடி பிளேயர்களின் வருகைக்கு சற்றே சற்று முன்னாலான காலம். பிலிப்ஸ் நிறுவனம் டைனமிக் பேஸ் பூஸ்ட் அது இது என பல மாடல்களை இறக்கியிருந்த நேரம். அந்த டேப் ரிக்காடர்களின் டெமோவுக்கு எல்லாம் ஜெண்டில்மேன் ஒரிஜினல் காசட்டைத்தான் கடைக்காரர்கள் உபயோகப் படுத்துவார்கள். உசிலம்பட்டி பெண்குட்டியும், ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலும் ஒலிக்காத விழாக்கள் எதுவுமேயில்லை.

அதே ஆண்டு தீபாவளிக்கு மணிரத்னத்தின் திருடா திருடாவும், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலேவும். ரோஜா, ஜெண்டில்மேன் வரிசையில் திருடா திருடா எதிர்பார்த்த மெகா ஹிட். ஆனால் கிழக்கு சீமையிலே? டெண்டுல்கர் அறிமுகமாகி பலரையும் விளாசி பெயர் பெற்ற நேரத்தில் அவரை இன்னும் வெகுவாக நம்பலாம் என்ற மாற்றத்தை ஏற்படுத்தியது 92ல் பெர்த் டெஸ்டில் அவர் அடித்த சதம். எகிறும் பிட்ச்சில் ஆஸ்திரேலிய வேகங்களை அவர் ஆடிய விதத்தைக் கண்டபின்னர் அவரை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத்தான் கிழக்குச்சீமையிலே ரஹ்மானுக்கு. மானுத்து மந்தையிலேதான் இன்னும் மதுரையில் காதுகுத்துக்கு தாய் மாமன் சீர் பாடல். இது மாற வெகு காலமாகும். தென்கிழக்கு சீமையிலேவும், எதுக்கு பொண்டாட்டியும் இவன் இருப்பான்யா இருப்பான் என எல்லோர் மனதிலும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டில் டூயட், கருத்தம்மா மற்றும் காதலன். ரெக்கார்ட் எழுதணும்டா அந்த டூயட் கேசட்டைக் குடுடா, அலுப்பில்லாம எழுதலாம் என்று சகஜமாக ஹாஸ்டல் அறையில் பேச்சு கேட்கும். கருத்தம்மா அந்த அளவுக்கு இளைஞர்களை வசீகரிக்கவில்லையென்றாலும் போறாளே பொன்னுத்தாயியும், அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பிறந்தா பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியேவும் உலுக்கத்தான் செய்தது.

ஒரு அலை போல அப்போதைய கல்லூரி,பள்ளி மாணவர்களை கிறங்கடித்தது காதலன் தான். இரண்டாம் மாடி கடைக்கோடி ரூமில் இருந்து கிரவுண்ட் புளோர் மெஸ்ஸுக்கு வந்து சேர்வதற்குள் காதலன் படத்தின் எல்லாப் பாடல்களும் காதில் விழுந்துவிடும். என்னவளேவும் முக்காப்புலாவும் கேட்டிராத காது கேட்காத காது மட்டும்தான். எந்த கல்லூரி கல்சுரலுக்கு போனாலும் சோலோவுக்கு என்னவளே பாடுவார்கள், வெஸ்டன் டான்ஸுக்கு முக்காப்புலா, போக் டான்ஸுக்கு கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா. டேக் இட் ஈஸி ஊர்வசி எல்லாம் ஆத்திச்சூடி போல அனைவருக்கும் மனப்பாடம்.

ஊசி மூலம்
உடலில் பச்சை குத்துவது போல்
காது மூலம்
மனதில் பாட்டு குத்தும்
மாயக்காரன் நீ

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
உன் இசையோ
செவிப் பழக்கம்

என்று திடீர்க்கவிஞர்கள் உருவாகும் அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும் ரஹ்மானின் இசை கொடிகட்டிப் பறந்தது.


95ல் பம்பாய். பாஸ்கட் பால் விளையாட்டில் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் ஐந்து பத்து பாயிண்ட்களுக்குள் இருந்தால் அது நிலையான முண்ணனி கிடையாது. ஒரு தம் பிடித்தால் எளிதில் அதை எட்டிப்பிடித்து விடலாம். இருபத்தைந்து, முப்பது பாயிண்ட் முண்ணனி என்றால் துரத்திப் பிடிப்பது கடினம். இதை துண்டாகப் போய்விடுவது என்று சொல்வார்கள். திரைக்கலைஞர்களின் புகழும் அப்படித்தான். மக்களின் ரசனைக்கு கொஞ்சம் மேலே இருப்பவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் துரத்தி பிடிக்கப்பட்டு அமிழ்ந்து விடுவார்கள். தொடர்ச்சியாக சிறப்புகளை தருபவர்கள் தமிழ் சமுதாயத்தால் மறக்க முடியாதவர்கள் ஆவார்கள். ரஹ்மான் பம்பாய் பாடல்களின் வெற்றிக்கு பின்னால் துரத்தி பிடிக்க முடியாத அளவுக்கு சென்று தமிழர்களால் மறக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார்.