திரையுலகில் எந்தப்
பின்புலமும் இல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்து நடிக்க வந்த ஒருவர் இரண்டே ஆண்டுகளில்
நான்கைந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பது, பல வித்தியாசமான கதைகளில் நடிப்பது என்பது
எல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அந்த இரண்டே ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்
கண்காணாமல் போய்விடுவதும், யாரும் அவரைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதும் சற்று
ஆச்சரியமான விஷயம்தான்.
சுதாகர் 1979 ஆம்
ஆண்டு பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலில் நாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்தின் அபார வெற்றியினால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறியப்பட்டார்.
தொடர்ந்து பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமான “சுவரில்லாத சித்திரங்கள்”, பாரதிராஜாவின்
“நிறம் மாறாத பூக்கள்”, தேவராஜ் மோகன் இயக்கத்தில் அம்பிகா அறிமுகமான “சக்களத்தி”,
பி மாதவன் இயக்கத்தில் “குருவிக்கூடு” , ஜி என் ரங்கராஜனின் ”ருசி கண்ட பூனை” என முக்கிய
இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.
சுதாகர் நடித்த
படங்களின் தலைப்புகளைப் பார்த்தால் படத்தின் தலைப்பே கதையைச் சொல்லும் அளவுக்கு தனித்துவமாக
இருக்கும். ஒருத்தி மட்டும் கரையினிலே, நதி ஒன்று கரை மூன்று, தரையில் வாழும் மீன்கள்,
நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், கரை கடந்த ஒருத்தி,
பெண்ணின் வாழ்க்கை, கல்லுக்குள் ஈரம், கரும்புவில், அழைத்தால் வருவேன்,அன்னப் பறவை
என அழகிய தமிழ் தலைப்புகள்.
சுதாகர் தன்னுடன்
கிழக்கே போகும் ரயிலில் அறிமுகமான ராதிகாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ராதிகா
நடிக்கிறார் என்றாலே சுதாகர் மெயினா? என்று அக்காலத்தில் கிராமப்புறங்களில் கேட்பார்கள்.
நிறம் மாறாத பூக்கள், சின்னஞ் சிறு கிளியே, எங்க ஊர் ராசாத்தி, தை பொங்கல், ஆயிரம்
வாசல் இதயம், நதி ஒன்று கரை மூன்று, இனிக்கும் இளமை, சந்தன மலர்கள், எதிர் வீட்டு ஜன்னல்
என பல படங்களில் இணைந்து நடித்தார்கள்.
அப்பொழுது மிகப்
பிரபலமாக விளங்கிய, வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பபடும் பாடல்களில் பெரும்பான்மை சுதாகர்
நடித்த படங்களில் இருந்து இருக்கும். கிழக்கே போகும் ரயிலில் இருந்து மாஞ்சோலை கிளிதானோ,
நிறம் மாறாத பூக்களில் இருந்து ஆயிரம் மலர்களே மலருங்கள், சுவரில்லாத சித்திரங்களில்
இருந்து “காதல் வைபோகமே”, கரும்புவில்லில் இருந்து ”மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்” எங்க ஊரு ராசாத்தியில் இருந்து ”பொன் மானைத் தேடி நானும் ஊர்கோலம்
வந்தேன்” ஆகிய பாடல்கள் சுதாகர் தமிழ்ப்படங்களில் நடிப்பதை விட்டுச் சென்ற பின்னும்
ஒலித்துக்கொண்டிருந்தன.
அதிலும் குறிப்பாக
மீன் கொடித் தேரில் பாடலின் புகழ்பெற்ற ஹம்மிங்கான ஓலா ஒலா ஓலலல்லா ஒலிக்கத் தொடங்கிய
பின்னர், கரும்புவில் படத்தில் இருந்து உங்கள் அபிமான பாடல் என தொகுப்பாளர் சொல்வதற்குள்
மக்கள் பாடல் வரிகளை முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இவற்றை விட கிராமப்புற
பகுதிகளில் பெரும் ஹிட்டான பாடலென்றால் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம்பெற்ற ஓரம்போ
ஒரம்போ ருக்குமணி வண்டி வருது பாடல்தான். சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்
போதும், இளம் பெண்கள் சைக்கிளில் வரும் போது கிண்டல் செய்யவும் இந்தப் பாடல் பயன்பட்டது.
ஒரு பெண் சைக்கிளில் வரும் போது பையன்கள் இந்தப் பாடலைப் பாடினால் அது ஈவ் டீசிங்கிற்கு
இணையாக கருதப்பட்டது.
ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது. இப்படி பட்டி தொட்டி எங்கும் அறிமுகமான நடிகர் திடீரென்று திரையுலகில்
இருந்து காணாமல் போவதும் அதை யாரும் பொருட்படுத்தாமல் இருப்பதும். சுஜாதா திரையில்
எழுதிய வசனங்களில் முக்கியமான “மரணத்தை விட கொடுமையானது, மறக்கப்படுவது” தான் ஞாபகம்
வருகிறது. தமிழை விட்டு தன் தாய் மாநிலமான ஆந்திராவிற்குச் சென்ற சுதாகர் மிகச் சில
படங்களில் நாயகனாக நடித்துவிட்டு முழுநேர காமெடியனாக மாறினார். ரஜினியின் அதிசயப்பிறவியிலும்,
90களின் ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து டப்பாகி வந்த படங்களிலும் சுதாகரைப் பார்க்க
முடிந்தது. அதில் எல்லாம் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேசன்களை கொண்டு காட்சிகளை சுவராசியப்படுத்துவார்.
சுதாகர் நடிக்க
வந்த காலகட்டம் புதிய கிராமம் சார்ந்த கதைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த காலகட்டம்.
அந்த கதைகளுக்கு திராவிட முகமும் உருவமும் கொண்ட சுதாகர் பொருத்தமாக இருந்தார். அப்போதைய
கிராமங்களில் இரண்டு விதமான இளைஞர்களைப் பார்க்கலாம். ஒன்று கடுமையான உடல் உழைப்பைக்
கோரும் விவசாயம் சார்ந்த பணிகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவர்கள். இன்னொன்று கடின
உடல் உழைப்பு தேவைப்படாத சிறு கடைகள் நடத்துவோர், சிறு தொழில்கள் செய்வோர், படித்து
விட்டு அரசு/தனியார் வேலைக்குச் செல்லும்/எதிர்பார்த்திருக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள்.
இந்த இரண்டாவது வகையறா இளைஞர்களைப் பிரதிபலிக்கும் முகமாக சுதாகர் இருந்தார்..
அப்பொழுது வந்த
படங்களும் இம்மாதிரியான இளைஞர்களை பாத்திரமாகக் கொண்ட கதைகளாக இருந்தன. அவற்றிற்கு
ஏற்ற வகையில் சுதாகர் பொருந்தினார். கிழக்கே போகும் ரயிலில் பாடலாசிரியனாக விரும்பும்
நாவிதர் மகன், நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியேவில் அப்பாவி இளைஞன் என பெரும்பாலும்
கிராமத்து இளைஞன் வேடம்தான். சுவரில்லாத சித்திரங்கள், ருசி கண்ட பூனை போன்ற சில படங்களில்
தான் நகரத்து இளைஞனாக நடித்தார்.
சுவரில்லாத சித்திரங்களில்
வசதியான சிறு நகர இளைஞன் கதாபாத்திரம். தான் காதலிக்கும் பெண்ணைக் கவர அந்தத் தெருவில்
இருக்கும் தையல் கடையில் டேரா போடும் இளைஞன். அந்தக் கடையில் நுழைய தயக்கம், பின்னர்
அங்கு செட்டிலாவது என நுணுக்கமாக பாக்யராஜ் காட்சிப் படுத்தலுக்கு ஏற்ப நன்கு நடித்திருப்பார்.
சுதாகர் நடித்த
படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான். அதை அவரது படங்களின் தலைப்பில்
இருந்தே அறியலாம். கதை இருந்தால்தான் நல்ல தலைப்பே வைக்க முடியும். அப்படி கதையிருந்த,
சிறு முதலீட்டுப் படங்கள் உருவான காலகட்டத்தில் அவருக்கான இடம் தமிழில் இருந்தது.
80களுக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் பாதிப்பில் நாயகன் தொடர்பாக
திரை உலகம் மாறிய போது சுதாகருக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆக்ரோசமாக சண்டை போடத்
தெரிந்திருக்க வேண்டும் அல்லது நளினமாக ஆடுவது போல் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
என்ற தேவை ஏற்பட்ட போது சுதாகரிடத்தில் அதற்கான பதில் இல்லை.
இப்போதைய விமலை
இந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாம். சுதாகர் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர், விமல் கூத்துப்
பட்டறைக்காரர். சுதாகருக்கு கதை அம்சமுள்ள கிராமியப் படங்கள் என்றால் விமலுக்கு காமெடி
அதிகமுள்ள சிறு நகரப் படங்கள். இருவருமே குறுகிய இடைவெளியில் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்கள்,
சிறு முதலீட்டுப் படங்களின் நாயகர்கள், சம்பள விஷயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள்
மேலும் தங்களால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாதவர்கள். இப்படி
படமெடுக்கும் போக்கு மாறும் போதோ அல்லது இவர்களை விட நல்ல சாய்ஸ் கிடைக்கும் போதோ இவர்களின்
வாய்ப்புகள் திடீரென காலாவதியாகிவிடும். அதனால்தான் சுதாகர் தமிழில் இருந்து தெலுங்குக்கு
ஒதுங்கினார்.
சுதாகர் நடித்த
”மாந்தோப்பு கிளியே” சுருளிராஜனின் லேண்ட் மார்க் படம். இன்றளவும் காமெடிக்காக பேசப்படும்
படம். கஞ்சத்தனம் என்றால் என்ன? என்பதற்கு வரையறையாய் சுருளிராஜன் வாழ்ந்து காட்டிய
படம். அப்போது வானொலி ஒலிச்சித்திரங்களில் அடிக்கடி இந்தப் படத்தின் காமெடி காட்சிகள்
ஒலிபரப்பப்படும். அந்தப் படத்தில் சுதாகர்,
பின்னாளில் ஒரு காமெடி நடிகராக பரிமளிப்பார் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லாமல்
பிரேமில் வருவார்.
முழுநேர காமெடி
நடிகராக நடிக்க வந்து பின்னாட்களில் நாயகர்களாக மாறியவர்கள் தமிழில் அதிகம். ஆனால்
ஒரு வெற்றிப்பட நாயகனாக அறிமுகமாகி நான்கு வருடங்களுக்குள் முழு நேர காமெடி நடிகனாக
மாறியது சுதாகராகத்தான் இருக்கும். மக்கள் அவரை மறந்து விட்டிருந்த நிலையில் திடீரென
ரஜினிகாந்தின் அதிசயப்பிறவி படத்தில் காமெடியனாக தோன்றினார். ஏய் இவர் சுதாகருல்ல?
என்றே பலரின் புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்ந்தன. ”இதுதாண்டா போலிஸ்” திரைப்படம்
வெளியாகி பெரிய வெற்றி பெற்ற உடன் ஏராளமான தெலுங்கு மசாலாப் படங்கள் டப்பாகி தமிழுக்கு
வந்தன. அப்பொழுதுதான் அவர் தெலுங்கின் முக்கிய காமெடியனாக மாறி இருந்தது பெரும் பாலோனோர்க்கு
தெரிய வந்தது.
நன்றாக வாழ்ந்த
இடத்தில் அதை விட சுமாரான வாழ்க்கையை வாழ்வது யாருக்குமே மனச் சங்கடத்தைத் தரும். அதனால்
சம்பளம் குறைவாகக் கிடைத்தால் கூட வேறு ஊருக்குச் சென்று வாழ்வை பலர் அமைத்துக் கொள்வார்கள்.
புகழ் போதையும், அது தரும் ஈகோவும் நிறைந்த சினிமா உலகில் இது அதிகமாகவே இருக்கும்.
எனவே வாய்ப்பில்லாத போது, உடனடியாக தங்கள் நிலையை விட்டு இறங்காமல் சில காலம் கழித்து, எல்லா வித ரோல்களையும் ஏற்றுக் கொள்வார்கள். சுதாகர்
ஆந்திராவிற்குச் சென்று தன்னை காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்டார். அதியசப் பிறவியின்
ஒரிஜினலான ”யமுடுக்கி மொகுடு” படத்தின் தயாரிப்பாளர்களில் சுதாகரும் ஒருவர். அதனால்
தான் அந்தப் படத்தில் தலை காட்டினார். அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்க எந்த முயற்சியும்
அவர் செய்யவில்லை.
காலம் தனக்கேற்றவனை
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பதைப் போல திரை உலகமும் தன் போக்கிற்கு ஏற்ப சிலருக்கு
வாய்ப்பை அளிக்கிறது. அந்த வாய்ப்பைப் பெறுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதுடன், அடுத்த
கட்ட போக்கை உன்னிப்பாய் கவனித்து, அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டால் நிலைக்க
முடியும். இல்லையென்றால் விலக்கப்பட்டு நினைவுகளாகத்தான் தங்கி இருக்க முடியும் என்பதற்கு
சுதாகர் ஒரு உதாரணம்.