January 19, 2015

1970களில் தமிழ் சினிமா

தமிழ்சினிமாவைப் பற்றிப் பேசும் பெரும்பாலாவனர்கள் 1980களில் இருந்து தமிழ்சினிமாவைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள் இல்லையென்றால் . எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் கோலோச்சிய 1950 மற்றும் 60களைப் பற்றி பேசுவார்கள். ஏன் திரைப்படம் தொடங்கிய காலத்தில் இருந்து தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா ஆகியோர் சூப்பர்ஸ்டார்களாக வலம்வந்த 1940கள் வரை பேசுவார்கள். ஆனால் இந்த 1970களில் வந்த தமிழ்சினிமாக்களைப் பற்றி  குறைவாகவே பேசுவார்கள்.

சமீப காலங்களில் வந்த பீரியட் படங்களான சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசுபட்டி போன்ற திரைப்படங்களும் 1980களையே சித்தரித்தன. தற்போதைய படங்களின் கதை மாந்தர்களின் இளம்பருவ நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தும் போதும் அவை பெரும்பாலும் 1980களை ஒட்டியே இருக்கிறது. 1970களின் பிற்பகுதியில் வந்த திரைப்படங்களைப் பற்றிய பகிர்வுகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஏனோ 1980களுடன் சேர்த்தே பார்ப்பது தமிழரின் வழக்கமாக இருந்துவருகிறது.
முதலில் 1970களில் தமிழ்சினிமாவில் நிலவிய சூழலைப் பற்றிக் காண்போம்.

கதாநாயகர்கள்
70கள் ஆரம்பிக்கும் பொழுது எம்ஜியார்க்கு 53 வயது, சிவாஜி கணேசனுக்கு 42 வயது. எம்ஜியாராவது 72ல் தனிக்கட்சி ஆரம்பித்து, அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இயங்கி வந்தார். எனவே 1950 மற்றும் 60களுடன் ஒப்பிடுகையில் அவர் 70களில் நடித்த படங்களின் விகிதம் குறைவு. மேலும் 77ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றபின் புதிய திரைப்படங்களில் நடிக்கவில்லை. இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன், ரிக்‌ஷாகாரன், மாட்டுக்கார வேலன், நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, நீரும் நெருப்பும், உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். 

ஆனால் சிவாஜியோ 70களில் ஏராளமான படங்களில் ஏறத்தாழ 75 படங்களில் நடித்தார். 1972 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடித்த 7 படங்களில் 6 படங்கள் 100 நாட்கள் ஓடின. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவைக் கண்டன. 70களில் நடிகர் திலகம் தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு, கௌரவம், வசந்த மாளிகை, பாரதவிலாஸ்,உத்தமன், ராமன் எத்தனை ராமனடி, பாபு, அவன் தான் மனிதன், பைலட் பிரேம் நாத், ராஜபார்ட் ரங்கதுரை, பட்டிக்காடா பட்டணமா, டாக்டர் சிவா, ராஜா, சொர்க்கம்,சவாலே சமாளி, ஞான ஒளி, தியாகம், திரிசூலம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார் .மீதமுள்ள படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டாலும் வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. சொல்லப்போனால் ஏராளமான அட்வாண்டேஜ்களோடு 70களில் கால்வைத்த சிவாஜி கணேசன் எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கவில்லை. ஜெமினி கணேசன் 70களில் நுழையும் போது அவருக்கு வயது 50. இவரும் கூட குறிப்பிடத்தக்க படம் என்று எதையும் 70களில் நடிக்கவில்லை..

ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ஏவிஎம் ராஜன், சிவகுமார், ஜெய்கணேஷ் போன்றவர்கள் ஏராளமான படங்களில் நடித்தார்கள். அதில் சில படங்களும் வெற்றிபெற்றன. ஆனால் இவர்கள் நடிப்பால் அவை எதுவும் வெற்றி அடையவில்லை. 76 ஆம் ஆண்டுவரை இவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ஏராளம். ஆனால் எல்லாவற்றிலும் இவர்கள் இவர்களாகவே வந்தார்களே தவிர, எந்த கதாபாத்திரமாகவும் மாறவில்லை. ஜெய்சங்கர், துப்பறியும் நிபுணராக, கௌபாய் பட நாயகராக பல படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும்படி எதிலும் சோபிக்கவில்லை. சிவகுமாருக்கு ஆட்டுக்கார அலமேலு நன்றாக ஓடினாலும் அவரைவிட ஆட்டுக்குத்தான் அதிகப்புகழ் கிடைத்தது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி மட்டுமே 70களில் அவருக்கு பெயர்சொல்லும் படி வந்த படம்.

ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்கணேஷ் ஆகியோரை ஒருவிதத்தில் பாராட்ட வேண்டும். இரண்டு மூன்று நாயகர்களின் படங்களில் கூட இணைந்து நடித்தார்கள். 70களின் ஆரம்பத்தில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கு, திரையில் தங்களை அடையாளப்படுத்தும் இளவயது கதாநாயகனோ,  காதல் வித்தகனோ அல்லது சாகசக்காரனோ இல்லாமல் போனது. அதனால்தான் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 70களின் பிற்பகுதியில் அறிமுகமானபோது ஏராளமான ரசிகர்களைப் பெறமுடிந்தது.

கதாநாயகிகள்
60களில் அறிமுகமான கதாநாயகிகளே 70களிலும் தொடர்ந்தார்கள். மஞ்சுளா, லதா, ஸ்ரீபிரியா போன்றவர்கள் 70களில் புதிதாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர்கள். இந்த கதாநாயகிகள் அனைவருமே சற்று பூசினார்போலதான் இருந்தார்கள். இவர்களின் நடிப்பில் ஏதும் குறை இல்லாவிட்டாலும், இவர்களுக்கு ஏற்ற கதை அம்சமுடைய படங்கள் குறைவாகவே கிடைத்தன. வயது கூடிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டி இருந்ததால், ஒரு பெரிய மனுஷித்தோரணையே இவர்களின் பெரும்பாலான படங்களில் இருக்கும். இந்தக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட திருமண போட்டோக்களில் இருக்கும் மணப்பெண்ணின் அலங்காரத்தில் இவர்களுடைய சாயலே இருக்கும். ஸ்ரீதேவி, ரத்தி அக்னிஹோத்ரி ஆகியோர் 70கன் பிற்பகுதியில் அறிமுகமானபோது, தமிழகத்திலேயே ஒரு இளமை அலை அடித்ததைப் போல் இருந்தது.

இயக்குநர்கள்
60களில் வெற்றிநடை போட்ட பீம்சிங், பந்துலு ஆகியோர் தங்களின் பங்களிப்பை குறைத்திருந்த காலம். ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் சிறந்த படைப்புகளும் கூட 60களின் பிற்பகுதியில்தான் அதிகம். பாலசந்தர் மட்டும் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அபூர்வ ராகங்கள் என தன்னுடைய ஆற்றலை 70களிலும் இழக்காமல் இருந்தார். 70களின் முற்பகுதியில் ப.நீலகண்டன், கே.சங்கர் ஆகியோர் எம்ஜியாரின் ஆஸ்தான இயக்குநர்களாக இருந்தார்கள். ஏ சி திருலோக சந்தர், சி வி ராஜேந்திரன், பி.மாதவன், யோகானந்த் ஆகியோர் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களை இயக்கினார்கள். கே எஸ் கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பாணியில் தொடர்ந்து குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் படங்களை இயக்கிவந்தார்.

இந்த காலகட்டத்தில் வந்த பெரும்பாலான படங்கள், மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் வெற்றிகரமான நாடகங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே அந்தந்த மூல படங்களில் உபயோகித்த காட்சி கோணங்கள் மற்றும் நடிகர்களுக்கு வசதியான கோணங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டன. தனித்து அடையாளம் காணும்படி படைப்பாக்கம் இருக்கும்படியாக பல இயக்குநர்கள் இயங்கவில்லை.

இசை அமைப்பாளர்கள்
கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், கே ராமமூர்த்தி, வி குமார், டி ஆர் பாப்பா, வேதா, சங்கர் கணேஷ் ஆகியோர் 70களின் முற்பகுதியில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர்கள். இவர்களில் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் பெரிய நட்சத்திரங்கள். இயக்குநர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்கள். வி குமார் பாலசந்தரின் பெரும்பாலான படங்கள் மற்றும் புதிய இயக்குநர்களின் படங்களுக்கு இசை அமைத்தார், டி ஆர் பாப்பா, வேதா ஆகியோர் மார்டன் தியேட்டர்ஸ் மற்றும் ஜெய்சங்கரின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தார்கள். தேவர் பிலிம்ஸ் படங்கள் மற்றும் சிறு பட்ஜெட் படங்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். 50கள் 60கள் போல காலத்தை வெல்லும் ஏராளமான பாடல்களை இந்த காலகட்டத்தில் இவர்கள் தரவில்லையென்றாலும், சில படங்களின் பாடல்கள் இன்னும் நம்மை ரசிக்கவைக்கும் படியே இருக்கின்றன. இயக்குநர்கள் தானே இசை அமைப்பாளர்களுக்கு எஜமானாக இருந்து, பாடல்களை வாங்க வேண்டும். எம்ஜியார், ஸ்ரீதர் ஆகியோர் மட்டுமே இந்த காலகட்டத்தில் அப்படி நல்ல பாடல்களை வாங்கினார்கள்.

நகைச்சுவை நடிகர்கள்
70களின் முற்பகுதியில் நாகேஷ், வி கே ராமசாமி, கே ஏ தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் ஆகியோரே பிரதான காமெடியன்கள். தமிழ்சினிமாவிற்கு எந்த பஞ்சம் வந்தாலும் காமெடி நடிகர்கள் பஞ்சம் மட்டும் வந்ததில்லை. இவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட வாய்ப்பில் பிரமாதப் படுத்தினார்கள். ஆனால் அப்படி அதிகமான வாய்ப்புகளை இயக்குநர்கள் 60கள் போல் வழங்கவில்லை. காமெடி நடிகைகள் பஞ்சம் தமிழ்சினிமாவில் எப்போதுமே உண்டு. இந்த காலகட்டத்தில் மனோரமா, சச்சு ஆகியோர் மட்டுமே நகைச்சுவை நடிகைகளாக இருந்தனர். அதன்பின்னர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகியும் கோவை சரளா, ஆர்த்தி போன்ற மிக மிக குறைவான காமெடி நடிகைகளே தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் கலை இயக்கம்
கர்ணன் தான் ஒளிப்பதிவு செய்த படங்களில் புதிய கோணங்களை வைத்தார். காட்சியின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவும் செய்தார். கே எஸ் கோபாலகிருஷ்ணனின் படங்களுக்கும் கௌபாய் படங்களுக்கும் அப்படங்களின் போக்கு மாறாமல் ஒளிப்பதிவு செய்தார். மற்றபடி குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்கள் 70களின் முற்பகுதியில் உருவாகவில்லை. எடிட்டிங் துறையில் விற்பன்னர்கள் இருந்தாலும் அப்போது உருவான படங்களின் கதை அம்சம் அவர்கள் தங்கள் வழக்கமான பணியினைச் செய்யும்படியே இருந்தது. கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு ஆகியவையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பெரும்பாலும் ஸ்டுடியோவுக்குள் எடுத்த படங்கள், வ்ழக்கமான செட் பிராப்பர்டிகள் என புதுமையின்றியே இருந்தது.

எந்த வகையில் பார்த்தாலும் 70களின் முற்பகுதி என்பது தமிழ்சினிமாவிற்கு ஒரு சராசரி காலமாகத்தான் இருந்திருக்கிறது. எம்ஜியாரின் படங்கள், மற்றும் சிவாஜியின் சில படங்கள் தவிர மக்களை திரையரங்குக்கு இழுத்துவரும்படி படங்கள் வரவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் இளைஞர்களாக இருந்த காலகட்டம், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தினால் கல்வியறிவு பெற்ற மாணாக்கர்களின் விகிதம் அதிகம் இருந்த காலகட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அது சார்ந்த தேடல்களால், கூர்மையடைந்திருந்தவர்கள் இருந்த காலகட்டம், எனினும் சுமாரான படங்களை கொடுத்தாலும், நடித்தாலும் நிலைத்து நிற்க முடியும் என்று இருக்க என்ன காரணம்?

அப்போதிருந்த குறைவான பொழுது போக்கு வடிகால்களால் மக்கள் அனைவரும் வேறுவழியின்றி தங்களுக்கு அருகாமையில் வரும் படங்களை பார்க்க வேண்டிய நிலை இருந்தது.  சென்னையில் 1970ல் தேவி திரையரங்கமும், 74ல் சத்யம் திரையரங்கமும் துவங்கப்பட்டது. அதன்பின்னர் பெரும்பாலான திரை அரங்குகள் 80களிலேயே துவங்கப்பட்டன. சென்னை போலவே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், முக்கியமாக சிறு நகரங்களிலும். கிராமங்களிலும் 50களில் உருவான திரையரங்குகளே முக்கிய திரையரங்குகளாக இருந்துவந்தன. 80களுக்குப் பின்னரே இங்கெல்லாம் நல்ல வசதியுடைய திரையரங்குகள் உருவாகின.

இந்த காலகட்டத்தை டூரிங் டாக்கீஸ்களின் காலம் என்று கூட சொல்லலாம். புரஜெக்டர் வைக்க மண்ணாலான ஒரு அறையும், இரண்டு ட்ராக்டர்களில் ஏற்றிச் செல்லும்படியான கூரை வேயும் பொருட்களும், மர பெஞ்சுகளும் கொண்டு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றினாலும், மாறிச்சென்ற பின்னரும் பேருந்து நிறுத்தமாக அறியப்பட்ட பெருமை வாய்ந்தவை இவை. வார நாட்களில் இரண்டு காட்சியும், சனி, ஞாயிறுகளில் மூன்று காட்சியும் படங்கள் திரையிடப்பட்டாலும், பெரும்பாலும் இரவுக்காட்சிகளுக்கே அரங்கம் நிரம்பி வழியும். கட்டணம் குறைவு என்பதால் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்தார்கள். எனவே பட முதலீடு செய்தவர்களுக்கு பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இதுவே தரம் குறைந்த படங்கள் அதிகம் வரவும் காரணமாய் இருந்தது.

ஆனால் இதே காலகட்டத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தன. சோபன்பாபு, கிருஷ்ணா போன்றோர் நடித்த கரம் மசாலா படங்கள், விட்டலாச்சார்யாவின் மந்திர தந்திர படங்கள் ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டின. குறிப்பாக சிறுநகரங்கள், கிராமங்களின் டூரிங் தியேட்டர்களில் இவை நன்கு ஓடின. சிவாஜி கணேசன் கூட இரண்டு மூன்று படங்கள் இந்தப் பாணியில் நடித்தார். ஆனால் அவை பெரிய அளவில் எடுபடவில்லை. இம்மாதிரியான மசாலா படங்களில் நடிக்க துடிப்பான கதாநாயகன் தேவை. 70களின் முற்பகுதியில் அப்படி ஒரு கதாநாயகன் நம்மிடம் இல்லை. அப்படி கிடைத்திருந்தாலும் தமிழ்சினிமா அந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆந்திரா காரம் நமக்கு ஒத்துக்கொள்ளாது. சிறிது நீர்த்த ஆந்திர காரமே நமக்கு ஒத்துக்கொள்ளும்.

இவற்றிற்கு மாறாக 70களின் பிற்பகுதியில் தமிழ்சினிமா தேர்ந்தெடுத்த பாதை, யதார்த்த,மண் சார்ந்த கதைகள். திரைப்படத்துறையின் உள்ளே வருபவர்களுடைய வெற்றி விகிதம் என்பது மற்ற துறைகளோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவு.  ஐயாயிரம் பேர் முயற்சி செய்தால் ஐந்து பேர்தான் வெற்றி பெறுவார்கள். இன்னும் பத்தாயிரம் பேர் மனதளவில் மட்டும் முயன்றிருப்பார்கள். 70களின் பிற்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றார்கள், எனவே அப்போது ஏராளமானோர் முயன்றிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.
இதற்கு காரணம் அப்போதைய தமிழின் முண்ணனி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் பரவலாக்கப்பட்ட கல்வியறிவு. இதனால் படைப்பூக்கம் கொண்டு பலர் படையெடுத்தார்கள். சிலர் வெற்றி பெற்றார்கள். தேவராஜ்  மோகன், ருத்ரய்யா, மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, துரை போன்ற இயக்குநர்கள் புதுவெள்ளமென தமிழ்சினிமாவில் புகுந்தார்கள்.

இவர்கள் தங்கள் முந்தைய தலைமுறை இயக்குநர்களைப் போல் இல்லாமல் தங்கள் வாழ்வில் இருந்தும், நல்ல எழுத்தாளர்களின் கதைகளில் இருந்தும் தங்கள் படைப்புகளை உருவாக்கினார்கள். இவர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல முந்தைய காலகட்டத்தில் இருந்த எந்த நடிகர், நடிகை, இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவார்கள் ஏன் காமெடி நடிகர்களை கூட தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. விதிவிலக்காக சிலரை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
நடிகர்கள் என்றால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிகைகள் என்றால் ஷோபா, ஸ்ரீதேவி, ரத்தி, ராதிகா, இசைக்கு இளையராஜா, காமெடியன்கள் என்றால் சுருளிராஜன், கவுண்டமணி, ஒளிப்பதிவிற்கு நிவாஸ், பாலுமகேந்திரா, அசோக்குமார், என புதியவர்களின் கூடாரமாய் விளங்கியது 70களின் பிற்பகுதி. தமிழ்சினிமாவின் டாப் 10 படங்கள் என யார் பட்டியல் இட்டாலும் அதில் 70களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட இரண்டு, மூன்று படங்களாவது இடம் பெறும் என்பதே இந்த காலகட்டத்தின் சிறப்பு. இந்தப் படங்களைத்தவிர கோவி மணிசேகரன் இயக்கத்தில் வந்த தென்னங்கீற்று, சண்முகம் இயக்கத்தில் வந்த பாப்பாத்தி போன்ற படங்கள் யாரும் தொடாத பிரச்சினைகளைப் பற்றி பேசியது.

80களில் கட்டப்பட்ட புதிய திரை அரங்குகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், அதிகப் படுத்தப்பட்ட காட்சிகள் ஏராளமான பார்வையாளர்களை திரையரங்குக்கு கொண்டு வந்ததால் அவர்களுக்கு தீனி போடும் விதமாக ஏராளமான கமர்சியல் படங்கள் தயாரிக்கப்பட்டன. இருந்தாலும் அவ்வப்போது காலம் கடந்து நிற்கும் திரைப்படங்களும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

1970களில் தமிழகத்தில் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற்றன. தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பொது உடைமை ஆக்கப்பட்டது, பி யூ சி படிப்பு ஒழிக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளிகள் உருவாகி பிளஸ் டூ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது போன்றவை இன்றளவும் நீடிப்பதைப் போல, தமிழ்சினிமாவில் 70களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்றளவும் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கு காரணியாய் இருந்து வருகிறது. அந்தக் கால கட்ட படங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த இயக்குநர்களின் கலை வாரிசுகளாய் வந்தவர்கள் தமிழ்சினிமாவை தாங்கிப் பிடித்து வருகிறார்கள்.

ஆனால் 70களின் பிற்பகுதி சினிமாக்களைப் பற்றி ஒரு வருத்தம் உண்டு. ஜூன் 75 முதல் மார்ச் 77 வரை இந்தியாவில் அவசர கால சட்டம் அமலில் இருந்தது. அதைப்பற்றிய பதிவுகள் திரைப்படத்தில் வரவேயில்லை. கோடிட்டு காட்டும் படியான காட்சிகள் கூட வைக்கப்படவில்லை. எமெர்ஜென்சி காலத்துக்கு பின்னால் வந்த ஜனதா அரசில் தணிக்கை செய்தவர்கள் நிச்சயம் அதை எதிர்த்திருந்திருக்க வாய்ப்பில்லை.


போகட்டும். இப்போதைய இயக்குநர்களாவது இனி எடுக்கப்போகும் தங்கள் பீரியட் படங்களில் 70களை களமாகக் கொண்டால் நன்றாக இருக்கும். அவசர கால சட்டம் அமலில் இருந்த நேரத்தில் நடப்பது போல் காட்சிகளை அமைத்தால் இன்னும் நலம்.

2015 ஜனவரி மாத காட்சிப்பிழை இதழில் வெளியான கட்டுரை - நன்றி காட்சிப்பிழை ஆசிரியர் குழு.

4 comments:

காரிகன் said...

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எழுபதுகள் அதிகம் தொடப்படாத காலகட்டமாக இருக்கிறது என்பது உண்மையே. துரித உணவு சாப்பிட்ட உணர்வு வருகிறது. எழுபதுகளில் இன்றளவும் செழுமையாக மக்கள் மனதில் இடம்பெற்றிருப்பது எழுபதுகளின் பாடல்கள் மட்டுமே. நான் எனது பதிவுகளில் எழுபதுகளை விவரித்து எழுதியிருக்கிறேன்-குறிப்பாக அந்த காலகட்டத்தின் இசையை. இன்னும் பல கட்டுரைகள் இந்த 70கள் குறித்து வரவேண்டும். அப்படி எழுதப்பட்ட உங்களின் இந்தக் கட்டுரைக்கு ஒரு சபாஷ்.

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி காரிகன்

Paranitharan.k said...

கலக்கல் சார் ....அருமை ...

முரளிகண்ணன் said...

நன்றி பரணிதரன்.