January 20, 2015

பரம்பரை

10 நாட்கள் இருக்கும். முதுகை சற்று வளைத்து, குரலில் பவ்யம் கூட்டி, சார், மதியம் அரைநாள் லீவு வேணும் என்று கேட்ட போது, கண்ணைச் சுருக்கி, முகத்தில் ஒரு கடுமையைக் கொண்டுவந்து, எதுக்கு? என்று கேட்டுவிட்டு, நாளைக்கு ஆடிட் ஸ்டேட்மெண்ட் ஹெட் ஆபிஸ்ல சப்மிட் பண்ணனுமே என்றார் மேனேஜர்.

பையனோட ஸ்கூல்ல இன்னைக்கு கட்டாயம் வரணும்னு சொல்லி இருக்காங்க சார். போயிட்டு வந்து ராத்திரி முடிச்சுக் குடுத்துடறேன் சார் என்றேன். அரை மனதுடன் சம்மதித்தார்.

வேளச்சேரி சிக்னலில் நிற்கும் போது பையனின் டைரியில் அவர்கள் அடிக்கடி எழுதும் புவர், கான்செண்ட்ரேட் ஆன் மாத்ஸ், லோ பெர்சனல் ஹைஜீன் போன்ற வார்த்தைகள் மனதுக்குள் வட்டமிட்டன.
பேரண்ட்ஸ் மீட்டிங் நடக்கும் ஹாலில் என் பையன் படிக்கும் கிளாஸின் டீச்சரை நோக்கி சினேக பாவத்துடன் சென்றேன். அவரிடம் அதற்கு மதிப்பில்லை. எடுத்த எடுப்பிலேயே சார், “சொல்றோம்னு தப்பா நெனச்சுக்காதீங்க, உங்க பையன் இந்த ஸ்கூலுக்கு செட் ஆக மாட்டான் சார், அடுத்த வருஷம் வேற ஸ்கூல் பாத்துக்குங்க” என்றார்.
தொடர்ந்து “சரியாவே ஹோம் ஒர்க் பினிஷ் பண்ணுறதில்ல, கிளாஸ்ல கவனிக்கிறதே இல்ல, எந்த ஆக்டிவிட்டியும் டைமுக்கு சப்மிட் பண்ணுறது இல்ல, சுத்தமாவும் இருக்குறதில்ல, ஏதாச்சும் கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சுக்கிட்டே நிக்கிறான், பதிலே சொல்ல மாட்டேன்கிறான், சோசியல் தவிர இந்த டெஸ்ட்ல எல்லாப் பாடத்துலயும் பெயில் ” என்று அடுக்கினார்.

வகுப்பறையில் இருந்து வந்தவனைப் பார்த்தேன். தலையைக் குனிந்தவாறே வந்தான். ஷூ அழுக்கடைந்து போயிருந்தது, லேஸ் சரியாக கட்டப்படாமல் இருந்தது,  தலை கலைந்து, உடை கசங்கி தளர்ந்து நடந்து வந்தான்.

மேடம், இனி நல்லா கான்செண்டிரேட் பண்ணி பார்த்துக்கிறேங்க. என்றேன். இப்படித்தான் அடிக்கடி சொல்லுறீங்க என்று சலித்துக் கொண்டார். பள்ளி நேரம் முடிந்து விட்டதால், என் பைக்கிலேயே அழைத்துக் கொண்டு வீடு நோக்கி கிளம்பினேன். தலையை வலிக்க ஆரம்பித்ததால், வழியில் இருந்த டீக்கடையில் நிறுத்தினேன். எனக்கு வடை வேண்டும் என்றான். சுள்ளென்று கோபம் வந்தது. திங்க மட்டும் தெரியுது, ஆனா ஒழுங்கா படிக்க மாட்ட என்று கேட்க, தலையைக் குனிந்து கொண்டான். குடியிருக்கும் ஒண்டுக்குடித்தன காம்பௌண்ட் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அலுவலகத்துக்கு கிளம்ப எத்தனித்த போது, லேட்டாகுமா? சாப்பாடு வேணாமில்ல? என்று மனைவி கேட்டார். ஆமா லேட்டாகும், சாப்பிட்டு விட்டு வந்துடறேன் என்று பதிலளித்துவிட்டு கிளம்பினேன்.

வேலை முடிய தாமதமாக, மானேஜர் வார்த்தைகளில் விஷம் தடவினார். சகித்துக் கொண்டு, முடித்துவிட்டு வெளியே வந்த போது மணி 10. பழக்கமான நடைபாதை வண்டிக் கடைக்குச் சென்று நாலு இட்லி என்று சொல்லிவிட்டு, மனைவி ஏதும் அழைத்திருக்கிராறா என்று சைலண்ட் மோடில் போட்டிருந்த செல்லில் பார்த்தேன். ஏமாற்றம். கடைக்காரரின் 10 வயதுப் பையன் சுறுசுறுப்பாக தட்டுக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். எட்டு மணிவரை அங்கேயே உட்கார்ந்து அவன் ஹோம் ஒர்க் செய்வதையும் பார்த்திருக்கிறேன். முதல் இட்லியை முடித்த போது, என் அலுவலக சக பணியாளர்கள் இருவர் வந்தனர். எனக்கும் அவர்களுக்கும் 20 வயது வித்தியாசம். நக்கலாக என்னை ஒரு பார்வை பார்த்தபடி, கடைக்காரரிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.

வீட்டுக்கு திரும்பிய உடன், பையனின் டைரியைப் பார்த்தேன். எங்க செஞ்ச ஹோம் ஒர்க்க காட்டு என்றதற்கு, மீண்டும் தலையைக் குனிந்து நின்றான். இருந்த ஆத்திரத்தையெல்லாம் திரட்டி கண் மண் தெரியாமல் அடித்து விட்டேன். ஊமை அழுகை அழுதவாறே அப்பொழுதும் தலையைக் குனிந்தே நின்றான். விரக்தியுடன் படுத்தால், தூக்கம் வரவில்லை.

படிக்காவிட்டால் கூட பரவாயில்லை. 12 வயதாகிறது. இன்னும் சரியாக பல் விளக்க வரவில்லை, டாய்லெட் போனால் கையை வளைத்து பின்புறம் சென்று கழுவ வரவில்லை, பனியன் போடத் தெரியவில்லை, ஷூ – லேஸ் கட்ட இன்னும் 5 ஆண்டுகளாவது ஆகும் போலிருக்கிறது.
விரக்தி அதிகமாக அதிகமாக புத்திக்கு சட்டென்று ஒன்று உறைத்தது. நீ மட்டும் சரியா? என்று. 45 வயதில், 25 வயது ஆட்களோடு, அவர்கள் செய்யும் அதே வேலையை, அதே சம்பளத்துக்குத் தானே செய்கிறாய்? நீ 12 வயதில் எப்படி இருந்தாய்? கோபால் பல்பொடியை ஒன்றுக்கு இரண்டாக பல்லில் தேய்த்துவிட்டு, சில சமயம் தின்று விட்டு திரிந்தவன் தானே?, ஆற்றங்கரையோரம் காலைக் கடன் கழித்ததால் எளிதில் சுத்தம் செய்து கொண்டாய். கல்லூரி வரும் வரை பனியன் போட்டதில்லை, இன்றுவரை ஷூவே அணியவில்லை. உனக்கென்ன நியாயம் இருக்கிறது அவனை அடிக்க? என்று மனது உலுக்க ஆரம்பித்தது.

மகனைப் பார்த்தேன். கோணல் மானலாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அடிக்கடி இரவில் படுக்கையை நனைக்கும் பழக்கமும் அவனுக்கு உண்டு. எழுப்பி சிறுநீர் கழிக்க வைத்தேன். தொடரும் நாட்களை நினைத்து பயம் வந்தது.

மறுநாள் காலை செல் கூவ, விழித்தேன். ஊரில் இருந்து சித்தி. “என்னப்பா ஏதும் விசாரிச்சியா” என்றார். பார்த்துக்கிட்டு இருக்கேன் சித்தி என்று பதில் சொல்லிவிட்டு, பையனை பள்ளிக்கு கிளப்ப ஆரம்பித்தேன்.
அலுவலக உணவு இடைவேளையில், சாப்பிடப் பிடிக்காமல், சோற்றை அளைந்து கொண்டே இருந்தபோது, சித்தியின் ஞாபகம் வந்தது. என் சித்தப்பா, திருமணமான சில வருடங்களில் இறந்து விட, தன் ஒரே பையனை கஷ்டப்பட்டு வளர்த்தவர் சித்தி. இப்போது அவனுக்கு  34 வயது. ஊரில் ஒரு தனியார் மில்லில் ஆபிஸ் அசிஸ்டெண்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. அது விஷயமாகத்தான் சித்தி அடிக்கடி போனில் பேசுவார்.

15 வருடங்களுக்கு இருந்ததை விட பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது. அப்போதே எனக்கு பெண் கிடைக்க வில்லை. நான்கு வருட காத்திருப்பின் பின்னர், பெண் கிடைத்தது. வறுமை, சரியில்லாத ஜாதகம் போன்ற அவருடைய நெகடிவ்கள் எனக்கு பாஸிட்டிவ் ஆகி எங்கள் கல்யாணம் நடந்தது. எத்தனை ஹீரோக்கள், எத்தனை வசதியான வாழ்க்கையை அவர் கனவு கண்டிருந்தாரோ, அது அவருக்குத்தான் தெரியும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பது, அவர் முகத்தில் உறைந்து விட்ட சோகக்களையில், யார் எப்படி இருந்தா எனக்கென்ன என்ற விட்டேத்தியான மனோபாவத்தில், என்னிடம் குறைந்து விட்ட பேச்சுகளில், சமையலில், மையலில் எனக்கு தெளிவாகத் தெரிந்தது. சித்தி பையனுக்கு பெண் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை எனத் தோன்றியது.

எனக்கு 45 ஆண்டுகளும், பல அவமானங்களும், உதாசீனங்களும் தேவைப்பட்டது, நான் இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஆட்கள் இந்த உலக வாழ்க்கைக்கு லாயக்கு கம்மியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள. ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொள்வதற்குள் திருமணம் செய்து இன்னொரு வாரிசையும் உருவாக்கி விடுகிறோம். ஒவ்வொரு முறை மகனை அடிக்கும் போதும், வார்த்தையால் காயப்படுத்தும் போதும், இனி இப்படி செய்யக் கூடாது என நினைப்பேன். அதெல்லாம் நீர்க்குமிழி. எங்கள் ஆட்கள் இனிமேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும், முக்கியமாக என் மகன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூட நினைப்பேன். இன்னொரு கோணத்தில் யோசித்தால், லாயக்கானவர்கள் மட்டும் தான் இங்கு வாழ வேண்டுமா? மனிதனை, மனிதனாக மதிக்காதவர்கள், அயோக்கியர்கள் எல்லாம் இங்கு வாழவில்லை? என்ற கேள்வியும் உடனே வந்து விடுகிறது.
டப்பாவை கழுவி பையில் வைத்து விட்டு, நிமிர்ந்தபோது மானேஜர் அழைத்தார். ஸ்டேட்மெண்ட்ல நிறைய தப்பு இருக்குங்கிறாங்க, அடுத்த வாரம் டெட்லைன். என்ன செய்வீங்களோ தெரியாது, பக்காவா ரெடி பண்ணனும் என்று சொல்லிவிட்டு, மானிட்டரை நோக்கி திரும்பிக் கொண்டார்.

ஆயிற்று ஒரு வாரம். மேனேஜர் எதிர்பார்த்தபடி வேலை முடியும் தருவாயில்  , ஆச்சரியமாக மனைவியிடம் இருந்து போன். அவர் வழி உறவினர் ஒருவர் இறந்து விட்டதாகச் சொல்லி, வர முடியுமா என்று கேட்டார். நான் நிலைமையைச் சொல்லவும், சரி நான் மட்டும் போறேன். பக்கத்து வீட்டுல சொல்லிட்டுப் போறேன். பையன் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். இந்த விஷயத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வாரோ என கலக்கத்துடன், வேலையைத் தொடர்ந்தேன். மேனேஜர் வேறு ஜாடை மாடையாக ஏழு கழுதை வயசாச்சு, வேலையும் கழுதை மாதிரிதான் இருக்கு என போனில் பேசுவது போல் ஒரு குத்து குத்தினார்.
இரவு வீட்டுக்கு வரும் போது பதினோரு மணி. பக்கத்து வீடுகளில் எல்லோரும் தூங்கியிருக்க, மகன் இன்னும் யூனிபார்மைக் கூட கழட்டாமல் பழைய பேப்பரை கிழித்துக் கொண்டு இருந்தான். ஹோம் ஒர்க் செய்துவிட்டாயா என்று கேட்டு, இல்லை எனத் தெரிந்ததும் செருப்பை எடுத்து ஆக்ரோசமாக அடித்து விட்டேன்.

காலையில் எழுந்தபோது காய்ச்சலை உணர முடிந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பையனை பள்ளிக்கு அனுப்பும் போது தாங்க முடியாத உடல் வலியும். மேனேஜர்க்கு போன் செய்து லீவ் சொல்லிவிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் சொல்லி ஒரு மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டேன்.  தூங்கி எழும்போது, அகோரப் பசி எடுத்தது. கடிகாரம் 9 மணியைக் காட்டியது. சிரமப்பட்டு எந்தரித்தேன். தட்டில் நாலு இட்லி வைத்து பையன் கொடுத்தான். குழப்பத்துடன் சாப்பிட்டது நினைவிருக்கிறது. உடல்வலி தாங்காமல் அனத்தியது நினைவுக்கு இருக்கிறது, அவன் என் கை,கால்களை பிடித்து விட்டது லேசாக நினைவில் இருக்கிறது.  

மறுநாள் காலை உடல்நிலை இயல்பாக இருந்தது. அம்மா நேத்து பேசினாங்கப்பா, இன்னைக்கு சாயங்காலம் வந்துடுறாங்களாம் என்றான். பக்கத்து கடையில் அவனுக்கு டிபன் வாங்கி, லஞ்ச் பாக்சிலும் அதையே அடைத்துக் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்து விட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினேன். சாயங்காலம் மனைவி, வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தகவல் சொன்னார். ட்ராவல் டய்ர்டா இருக்கும், பார்சல் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு, வேலையை சீக்கிரம் முடித்து கிளம்பினேன்.

வழக்கமாக பார்சல் வாங்கும் நடைபாதை வண்டிக்காரர், “நேத்து உங்க பையன், எங்கப்பாவுக்கு காய்ச்சலா இருக்கு, நாலு இட்லி பார்சல் கொடுங்கன்னு வந்து கேட்டான், அப்புறம் உங்க வீடு தூரமாச்சே எப்படிடா வந்தேன்னு? கேட்டேன். நடந்துதான் வந்தேன்னான். நாலு கிலோமீட்டருக்கு மேல இருக்குமே எப்படிடா போவேன்னு, தெரிஞ்ச கஸ்டமர் வந்தா பைக்ல ஏத்தி அனுப்பலாமுனு நெனச்சேன். சோதனைக்குன்னு யாரும் வரல்லை. வேணாங்க நான் நடந்தே போயிடுறேன்னு விசுக் விசுக்குன்னு வேகமா நடந்து போயிட்டான் என்றார்.


கடவுள் என்னிடம், இதுக்கு மேல என்னடா எதிர்பாக்குற உன் வாழ்க்கையில? என்றார்.

11 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கதை
இயல்பாகச் சொல்லிப் போனவிதம்
கதையுடன் ஒன்றவைத்தது
இறுதி வரி அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

நன்றி ரமணி.

King Viswa said...

அட்டகாஷ்!!!

முரளிகண்ணன் said...

நன்றி விஸ்வா

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் அருமையான கதை! கடைசியில் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

Unknown said...

கதை போலவே தெரியவில்லை . காலையில் பேஸ்புக்கில் படித்து விட்டு உண்மை சம்பவம் என்றே நினைத்தேன்

கடைசி வரியை படித்த உடன் ஒரு கனம கண்ணீர் சிந்திவிட்டேன்

ILA (a) இளா said...

நெகிழ வைத்துவிட்டது. இனிமேல் வாரிசுகளைத் திட்ட யோசிக்க வேண்டும்

விமல் ராஜ் said...

அருமை.... நல்ல கதை...

முரளிகண்ணன் said...

நன்றி தளிர்சுரேஷ்

நன்றி ஹாஜா மொகைதீன்

நன்றி இளா

நன்றி விமல்ராஜ்

Natraj said...

wonderful narration and a great message to every father

தமிழ் பையன் said...

அருமை.