காப்புரிமை பெறுவது
பற்றிய விழிப்புணர்வு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. காப்புரிமை
அல்லது புதிய பொருட்கள்களை உருவாக்குவது என்பது நிலச் சொந்தக்காரர்களாய் இருப்பது போன்றது.
அந்த தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பது என்பது விவசாயக் கூலிகளாய் வேலைபார்ப்பது போன்றது.
கூலிகளுக்கு எவ்வளவு அனுபவம் இருந்தாலும் அதைப் பொறுத்து சம்பளம் கிடையாது. மேலும்
வயதாக ஆக அவர்களுக்குரிய வாய்ப்பும் குறையும். ஆனால் நிலச் சொந்தக்காரருக்கு அப்படியில்லை.
நாம் நம்மைச்சுற்றி கவனித்துப் பார்த்தாலே தெரியும், நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான
பொருட்களுக்கு காப்புரிமை வேறு நாட்டினரிடம் தான் இருக்கும். அந்தப் பொருட்களை இங்கே
தயாரித்தாலும் நாம் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருக்கும்.
எனவே நாம் எந்தளவுக்கு
காப்புரிமை பெறுகிறோமோ அந்த அளவுக்கு நாமும் நம் நாடும் பொருளாதார வளர்ச்சி அடையலாம்.
காப்புரிமை (PATENT) என்பது என்ன?
காப்புரிமை என்பது
ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தால்
வழங்கப்படும் அறிவுசார் சொத்துரிமை ஆகும். இதன்மூலம் அந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பை
உருவாக்க, விற்க அவருக்கு பிரத்யேக உரிமை அளிக்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கும், அதன்மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்தமுறை
உதவுகிறது. இந்த முறையால் அவர்களின் உழைப்பு பாதுக்காக்கப் படுகிறது. தனிநபரோ அல்லது
நிறுவனமோ இந்த காப்புரிமை மூலம் நல்ல பொருளாதாரப் பயன்களைப் பெறமுடியும். பொதுவாக காப்புரிமையானது
ஒரு நாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றொரு நாட்டிலும் காப்புரிமை பெற வேண்டுமானால்
அந்த நாட்டில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
எவையெல்லாம் காப்புரிமை பெற தகுதியான கண்டுபிடிப்புகள்?
காப்புரிமை விதிகளின்
படி, ஒரு கண்டுபிடிப்பானது, “ஒரு புதுமையை உள்ளடக்கிய, தொழில் துறைக்கு பயன்படும் சாதனம்
அல்லது தொழில்நுட்பம்”. எனவே கண்டுபிடிப்பானது இயல்பாகவே தொழில்நுட்பம் சார்ந்ததாக
இருக்க வேண்டும். மேலும்
(i) புதுமை
: கண்டுபிடிப்பில் சொல்லப்படும்
புது விஷயமானது நாம் காப்புரிமைக்கு விண்ணப்பித்த நாளுக்கு முன்னதாக இந்தியாவிலோ அல்லது
வேறொங்கிலுமோ வெளியிடப்பட்டு இருக்கக்கூடாது.
(ii) கண்டுபிடிப்பின்
புது நுட்பம் : கண்டுபிடிப்பின்
புது நுட்பமானது, குறிப்பிட்ட அந்த தொழில்துறையில் இருப்பவரால் எளிதில் புரிந்து கொள்ளும்படி
இருக்க வேண்டும்
(iii) தொழில்துறை
பயன்பாடு : புது கண்டுபிடிப்பானது
தொழில்துறையில் பயன்படும் படி இருக்க வேண்டும்.
எவையெல்லாம் காப்புரிமை பெற முடியாதவை?
(i)
நன்கு
அறியப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள்
(ii)
பொதுமக்களின்
உணர்வை காயப்படுத்தும், மற்றும் மக்கள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு
தீங்கு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்
(iii)
இயற்கையிலேயே
இருந்த, ஆனால் மற்றவர்கள் அறியாமல் இருந்த அறிவியல் கொள்கைகளை கண்டுபிடித்தல்
(Discovery)
(iv)
ஏற்கனவே
இருக்கும் ஒரு சாதனத்துக்கு/பொருளுக்கு புதிய உபயோகத்தை கண்டுபிடித்தல்.
(v)
சில
பொருட்களை கலந்து, ஒரு புதிய பொருளை உருவாக்கினாலும், அந்த பொருளின் பண்புகள், அதில்
உள்ள பொருட்களின் பண்புகளின் சேர்க்கையாக இருப்பது.
(vi)
ஏற்கனவே
இருக்கும் சாதனங்களை இணைத்தோ, வரிசைப்படுத்தியோ புதிய சாதனம் உருவாக்குவது.
(vii)
விவசாயம்
அல்லது தோட்டக்கலையில் புதுமுறையை உருவாக்குவது
(viii)
மருத்துவத்தில்
புது முறையை கண்டுபிடிப்பது
(ix)
நுண்ணுயிரிகளைத்
தவிர ஏற்கனவே இருக்கும் விதை அல்லது இனங்களைக் கொண்டு புது தாவரம் மற்றும் விலங்குகளை
உருவாக்குவது.
(x)
புதிய
வியாபார முறை அல்லது கணினி நிரல் (computer programme)
(xi)
இலக்கியம்,
நாடகம், இசை, ஓவியம் மற்றும் அழகுணர்வுடன் கூடிய கலை உருவாக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மற்றும் ஒளிப்பதிவுகள்.
(xii)
ஒரு
குறிப்பிட்ட திட்டம் அல்லது விதியை உருவாக்கி விளையாட்டுகள் விளையாடுவது.
(xiii)
தகவல்களை
தெளிவாக தெரிவித்தல்
(xiv)
வழிவழியாக
வந்த அறிவை மேம்படுத்தி சாதனங்கள்/தொழில்நுட்ப முறைகள் உருவாக்கல்
(xv)
அணுசக்தி
சம்பந்தமான மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்.
(xvi)
உருவாக்கப்பட்ட
பொருட்களுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால் உருவாக்கும் முறைகளுக்கு
காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு மருந்து பொருளுக்கு காப்புரிமை
கொடுக்கப்பட மாட்டாது, ஆனால் அந்த மருந்து தயாரிக்கும் முறைக்கு காப்புரிமை கொடுக்கப்படும்.
காப்புரிமை பெற்றவர்களின் உரிமைகள்
ஒரு சாதனத்துக்கான
காப்பீடை ஒருவர் பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்தப் பொருளை தயாரிக்கக்
கூடாது.
ஒரு தொழில்நுட்ப
முறைக்கான காப்பீடை பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்த முறையில் பொருளை
தயாரிக்கக் கூடாது.
காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும்
படிவங்கள்
(i) விண்ணப்பம் (நகலுடன்)
(ii) கண்டுபிடிப்பு பற்றிய தற்போதைய மற்றும் முழுமையான
விபரம்
(iii) தேவையான வரைபடங்கள்
(iv) கண்டுபிடிப்பு பற்றிய சுருக்கமான குறிப்பு
(Abstract)
(v) விண்ணப்பிக்கும் நாள் மற்றும் வெளிநாடுகளில்
இந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை
(vi) முன்னுரிமை படிவம்
(vii) தேவையான கட்டணம்
கண்டுபிடிப்பு
பற்றிய முழுமையான விபரத்தில் இடம் பெற வேண்டியவை :
(i) கண்டுபிடிப்பின் தலைப்பு
(ii) கண்டுபிடிப்பின் துறை
(iii) முந்தைய கண்டுபிடிப்புகளின் குறைபாடுகள்
(iv) கண்டுபிடிப்பின் நோக்கம்
(v) கண்டுபிடிப்பு பற்றிய சொற்குறிப்பு
(vi) கண்டுபிடிப்பு பற்றிய முழுகுறிப்பு
(vii) இணைக்கப்பட்டுள்ள வரைபடம் பற்றிய சிறு குறிப்பு
(viii) உதாரணங்களுடன் கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம்
(ix) நாம் உரிமை கோரும் விஷயங்கள்
(x) சுருக்கக் குறிப்பு (abstract)
கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம் (Description)
கண்டுபிடிப்பு
பற்றிய விளக்கமானது (Description) நல்ல
ஆங்கிலம் அல்லது இந்தியில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட கண்டுபிடுப்பு
சிறப்பாக செயல்பட என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவை மற்றும் எந்தெந்த சிறப்புகளை
(Features) நாம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நீக்கிவிடலாம் (Choice) என்பது பற்றி
தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட துறையில் ஏற்கனவே
பணியாற்றியவர்களால், இந்த கண்டுபிடிப்பை செயல்படுத்தும்படி தெளிவான விபரங்கள் இந்த
விளக்கத்தில் (Description) கொடுக்கப்பட்டிருக்க
வேண்டும்.. மேலும் இந்த கண்டுபிடிப்பு சிறப்பாக செயல்பட என்னென்ன தேவை?, எவற்றிற்கெல்லாம்
இந்தக் கண்டுபிடிப்பை உபயோகிக்கலாம்? எப்படி உபயோகித்தால் சிறப்பாக செயல்படும் போன்ற
விபரங்களும் இருக்க வேண்டும். உயிரியல் சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால், எதன் மூலம்
(Source) அல்லது, எவ்விடத்தில் இருந்து (Geographical location) உயிரியல் பொருட்கள்
கிடைத்தன என்பது பற்றிய விபரம் இருக்கவேண்டும்.
உரிமை கோரும் விஷயங்கள் (Claim)
நம்முடைய கண்டுபிடிப்பில்
எவற்றையெல்லாம் நம்முடையது என உரிமை கோருகிறோம் (Claim) என்பதை நாம் தெளிவாக வரையறுத்து
விண்ணப்பிக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்பிற்கும் குறைந்தது ஒன்றுமுதல் பல உரிமைகளை
நாம் கோரலாம். முதல் உரிமையானது (first claim) முக்கிய உரிமை (Main claim) எனப்படும்.
அடுத்தடுத்த உரிமைகளானவை (subsidiary claims) முதல் உரிமையை தொடர்பு படுத்தி, என்னென்ன
சிறப்புகளை சேர்க்கலாம் (optional features) என்பது பற்றி இருக்கலாம். அல்லது தனிப்பட்டும்
உரிமை கோரலாம். எத்தனை உரிமைகள் கோரப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு கண்டுபிடிப்பைச்
சார்ந்தே விண்ணப்பிக்கப் படவேண்டும். முக்கியமாக இந்த உரிமையானது, சட்டபூர்வமாக, எந்த
அம்சம் நம்முடைய கண்டுபிடிப்பில் பாதுக்காக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் பொருளாதாரப்
பயன்கள் அனைத்தும் நமக்கே கிட்டுமாறு தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்
(Statement)
சுருக்கக் குறிப்பு (Abstatract)
நம்முடைய கண்டுபிடிப்பைப்
பற்றிய சுருக்கக் குறிப்பானது (Abstratct) நம் கண்டுபிடிப்பின் பெயருடன் (Title) 150
வார்த்தைகளுக்குள் நம்முடைய கண்டுபிடிப்பைப் பற்றி தெளிவாக கூறுமாறு இருக்க வேண்டும்.
எந்தப் பிரச்சினையை இது அணுகி இருக்கிறது, அதற்கான தீர்வை எப்படிச் சொல்லி இருக்கிறது
என்பதை யாரும் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். மேலும் இதில் என்ன தொழில்நுட்பம் புதிதாக இருக்கிறது,
இதன் உபயோகம் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இயந்திரவியல்
சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால் வரைபடங்களையும் இணைக்கலாம். வேதியியல் சம்பந்தமான
கண்டுபிடிப்புகளுக்கு வேதியியல் சமன்பாடுகளையும் இணைக்கலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்கள்
நம் கண்டுபிடிப்பு முழுவதையும் அறிந்து அவர்கள் உபயோகிக்கா வண்ணம் நாம் கொடுக்க வேண்டும்.
வரைபடங்கள் (Drawings)
நம்முடைய கண்டுபிடிப்பை
விளக்க நாம் சமர்ப்பிக்கும் வரைபடமானது (Drawing) A4 தாளில் தெளிவாக நகலுடன் இருக்க
வேண்டும். A4 தாளின் இடப்பக்கமும், மேற்புறமும் நான்கு செண்டி மீட்டர் (4 cm) இடமும்,
வலப்பக்கமும் கீழ்ப்புறமும் மூன்று செண்டி மீட்டர் (3 cm) விடப்பட்டிருக்க வேண்டும்.
படமானது எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மேலிருந்து கீழாக வரையப்பட்டிருக்க வேண்டும்.
போதுமான அளவில் பெரிதுபடுத்தப்பட்டோ அல்லது சுருக்கப்பட்டோ (Appropriate Scale) படம்
வரையப் பட்டிருக்க வேண்டும். தாளின் இடது மேல்மூலையில் விண்ணப்பிப்பவரின் பெயரும்,
விண்ணப்ப எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எத்தனை பக்கங்கள் மற்றும் பக்க எண்ணும்
வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தாளின் வலது கீழ் மூலையில் விண்ணப்பிப்பவரின்
கையொப்பமும், பெயரும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விளக்கக்குறிப்பில்
(Description) எவ்வாறு இந்த பாகம் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதோ அதே போல
(Reference) அந்த குறிப்பிட்ட எண் வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். வரைபடத்தில்
விளக்கமாக நம் கண்டுபிடிப்பைப் பற்றி எதுவும் எழுதி இருக்கக்கூடாது. ஆனால் வேதி சமன்பாடுகள்
(Chemical Equations), படி நிலை வரைபடம் (Flow chart) ஆகியவை குறிப்பிடப் பட்டிருக்கலாம்.
No comments:
Post a Comment