November 29, 2016

சிந்தாமணி தியேட்டர்எம் கே தியாகராஜர்-பி.யூ சின்னப்பா காலம் தொடங்கி, எம்ஜியார்-சிவாஜி கணேசன், ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜீத்-விஜய் காலம் வரை அவர்களின் முக்கிய படங்களையும், அந்தந்த காலத்தின் சூப்பர் ஹிட் படங்களையும் தொடர்ந்து திரையிட்ட தியேட்டர்கள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும். அவற்றில் உடனடியாக நினைவுக்கு வருவது   தியேட்டர் மதுரைசிந்தாமணியாகத்தான் இருக்கும். தமிழகத்தின் வேறு எந்த தியேட்டரும் இந்த நான்கு காலகட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கியதாகத் தெரியவில்லை.  எம் கே தியாகராஜா பாகவதர் காலகட்டத்தில் துவங்கப்பட்ட பல தியேட்டர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் காலம் வரையே இயங்கின. எம்ஜியார் காலத்தில் கட்டப்பட்ட பல திரையரங்குகள் மட்டும் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிந்தாமணி தியேட்டர் கட்ட காரணமாய் இருந்த சிடிசினிமா தியேட்டரும் ரஜினி-கமல் காலம் வரையே இயங்கியது. சிடிசினிமா திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தால் கிடைத்த லாபத்தில் தான் எம்.எம்.ஆர் கிருஷ்ண மூர்த்தியால்  இந்த திரையரங்கம் கட்டப்பட்டது.

இந்தத் திரையரங்கில் பின்புறம் சாயமுடியாத வகையிலான பெஞ்ச், பேக் பெஞ்ச் ஆகியவை தரைத்தளத்தில் இருக்கும். இதில் அனைவரும் சேர்ந்து அமரும்படியாகத்தான் இருக்கும். ஆண், பெண் தனித்தனியே அமரும் படி நடுவே தடுப்பு அமைத்திருப்பார்கள். இந்த பெஞ்சுகள் முழுவதும் தேக்கில் செய்யப்பட்டவை. முதல் மாடியில் மக்கள் தனித்தனியாக  அமரும்படி சோபா அமைக்கப்பட்டிருக்கும். 1000 பேர் அமரக்கூடிய திரையரங்கம் என்றாலும் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகும் போது மக்கள் நெருக்கி அடித்து உட்கார்ந்து 1200 பேர் வரை கூட பார்ப்பார்கள். பெண்களுக்கான டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் தியேட்டரின் உள்புறத்தில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும். ஆண்கள் பகுதியில் அதற்கு பதிலாக சைக்கிள் நிறுத்துவதற்கான இடமாக அது இருக்கும். ஆண்கள் டிக்கெட் கவுண்டர் தியேட்டரின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.  

சிந்தாமணி தியேட்டர் அமைந்திருப்பது மதுரையின் பெரும்பாலான பேருந்துகள் செல்லும் முக்கிய சாலையில்.  மதுரை பின்கோடு 1ல் அமைந்திருந்த தியேட்டர் அது. எல்லா பேருந்துகளும் நிற்கும் முக்கியமான நிறுத்தம் வேறு. எனவே டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும் போது அந்தப் பகுதியே கூட்டத்தால் திணறும். எம்ஜியார்,சிவாஜி,ரஜினி,கமல் ஆகியோரது படங்கள் வெளியாகும் நேரத்திலும், திருவிழா நாட்களிலும் போலிஸ் துணையில்லாமல் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவே முடியாது

இந்தத் திரையரங்கில் ஏராளமான எம்ஜியார் படங்கள் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளன. மன்னாதி மன்னன், அரசிளங்குமரி, அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரகசிய போலிஸ் 115, அன்பே வா போன்ற ஏராளமான படங்கள் எம்ஜியாருக்கு என்றால் சிவாஜி கணேசனுக்கு காத்தவராயன், தங்கப் பதக்கம், திரிசூலம் போன்ற மெகா பிளாக் பஸ்டர் படங்கள். திரிசூலம் சிந்தாமணியில் ஓடிய ஓட்டத்தில் வந்த லாபத்தில் அவர்கள் திரிசூலம் என்னும் பெயரில் இன்னொரு தியேட்டரே கட்டி இருக்கலாம் என்பார்கள். கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா முதல் ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம், விருமாண்டி வரை படங்கள் அங்கே வந்துள்ளன. மின்னலே, தூள், ரன்,பாய்ஸ், கஜினி,போக்கிரி வரை புதிய படங்கள் அங்கே திரையிடப் பட்டுள்ளன.

சிந்தாமணி தியேட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் இம்மாதிரி மாஸ் ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்லாமல் அந்தக் கால சாரதாவில் தொடங்கி ஒரு தலை ராகம், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, வைகாசி பொறந்தாச்சு போன்ற எல்லாத் தரப்பு மக்களும் சென்று பார்க்கும் படங்களும் அங்கே பெருமளவு வந்திருக்கின்றன. சிந்தாமணி தியேட்டருக்கு 1990களின் ஆரம்பக் கட்டம் வரை பெண் பார்வையாளர்கள் மாலை மற்றும் இரவு காட்சிக்கு அதிக அளவில் வருவார்கள். மதுரையின் சிறப்புகளாகச் சொல்லப்படும் ரோட்டோர இட்லிக் கடைகள் மற்றும் பூக்கடைகளுக்கு மாவு அரைத்து கொடுக்கும் மற்றும் பூ கட்டிக் கொடுக்கும் பெண்கள் அந்தப் பகுதியில் ஏராளம். அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு மாலை அல்லது இரவு காட்சிக்கு வந்து விடுவார்கள். எல்லோரும் பார்க்கும் வகையில் 80களின் இறுதிவரை பெஞ்சு ரூ 1.10, பேக் பெஞ்சு ரூ 2,20 மற்றும் பால்கனி ரூ 3.00 என்னும் வகையிலேயே டிக்கெட் விலை இருந்தது. எனவே அவர்கள் தினமும் சம்பாரிக்கும் காசில் தாராளமாக 1.10 டிக்கெட்டில் படம் பார்க்கலாம். பிடித்துப் போய்விட்டால் நான்கைந்து முறை கூடப் பார்ப்பார்கள். வேறு பொழுது போக்குகள் இல்லாத காலகட்டம் வேறு.
சிந்தாமணி தியேட்டருக்கு எதிரே நின்றோமானால் இடப்பக்கம் மொத்த ஜவுளி வியாபாரம் களைகட்டும் விளக்குத்தூண் பகுதி, வலப்பக்கம் நெல்பேட்டை எனப்படும் நெல் போன்ற விவசாயப் பொருட்கள் கொள்முதல் பகுதி மற்றும் விவசாய இடுபொருட்கள், உரம், பூச்சி மருந்து விற்கும் கடைகள். தியேட்டருக்கு எதிரே சற்றுத்தள்ளி காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகள். எனவே மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வணிகம் புரிய வருபவர்கள் எல்லோரும் தங்கள் பணி முடிந்த உடன் காலைக் காட்சியோ, மதியக் காட்சியோ பார்த்து விட்டுச் செல்வார்கள்.  இதனால் இப்பகுதியில் ரிக்ஷாக்காரர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அதிகம். அவர்கள் மாலை மற்றும் இரவுக்காட்சிக்கு வந்து விடுவார்கள்.

தியேட்டர் ஆரம்பித்த காலத்தில் இருந்து 1970கள் வரை சிந்தாமணி, செல்வந்தர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் படம் பார்க்கும் உயர் வர்க்க தியேட்டராக இருந்தது.  நாளடைவில் புதிய தியேட்டர்கள் வருகைக்குப் பின்னர் நடுத்தர வர்க்கத்துக்கான தியேட்டராக மாறியது. நெரிசல் மிகுந்த அந்த ஏரியாவில் கார், பைக் நிறுத்துவதற்கான வசதிக் குறைபாடு ஒரு காரணமாக இருந்தது. மேலும் ரோட்டில் வெயிலில் நின்று டிக்கெட் எடுப்பது போன்ற அமைப்பும் அவர்களை சங்கடப்படுத்தியது

சிந்தாமணி தியேட்டர் லண்டன் ஒடியன் தியேட்டர் அமைப்பில் கட்டப்பட்டது என்று சொல்வார்கள். ஏராளமான திரையரங்கங்கள் பின்னாளில் இம்மாதிரியான கட்டமைப்பில் கட்டப்பட்டது. இம்மாதிரியான கட்டமைப்பில் பால்கனி பகுதியில் கழிவறைப் பகுதி மிக குறுகியதாக இருக்கும். பின்னர் பாக்ஸ், பால்கனி என்ற அமைப்பில் 70களுக்குப் பின்னர் திரையரங்குகள் கட்டப்பட்டன. இந்த அமைப்பில் கழிவறை வசதி ஓரளவு விசாலமாக இருக்கும். இம்மாதிரியான தியேட்டர்களுக்கே செல்வந்தர்கள், கல்லூரி மாணவர்கள் செல்லத் துவங்கினர். மாப்பிள்ளை விநாயகர், சினிபிரியா, அம்பிகா,நடனா ஆகியவை மக்களை இழுக்கத் தொடங்கின.
90களில் ரூ 6.50, ரூ 9.00 என்ற அளவில் டிக்கெட் விலை இருந்தது. ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட நிர்வாகத்தினர் வசதிகளை சற்று மேம்படுத்தினார்கள். மின்னலே, தூள் என இளைஞர்களை கவர்ந்திழுக்கும் படங்கள் 2000ல் இருந்து தொடர்ந்து வெளியாகத் துவங்கின. ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல ஒலி அமைப்புடன் விளங்கிய திரையரங்கம் சிந்தாமணி. 2000 வாக்கில் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினார்கள். அப்போது டிக்கெட் விலை ரூ 20 மற்றும் 30 என இருந்தது. மற்ற தியேட்டர்களில் சரியாக கேட்காத லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட விருமாண்டி படத்தின் சில ஒலிகள்    இங்கே துல்லியமாக கேட்டது. பின்னர் பாய்ஸ், கஜினி, போக்கிரி ஆகிய படங்கள் திரையிடப்பட்டு 2008 வரை இயங்கியது. பின்னர் ஒரு பிரபல துணிக்கடையால் வாங்கப்பட்டு குடோனாக உபயோகப் படுத்தப்பட்டது. இப்போது ஏதோ ஒரு கட்டுமானத்திற்காக இடிக்கப்பட்டு வருகிறது.

சிந்தாமணி தியேட்டரின் முதல் சரிவு 90களில் துவங்கியது எனலாம். அத் திரையரங்கிற்கு வரும் பெண்களின் முதல் பொழுது போக்கு சாதனமாக தொலைக்காட்சி மாறியது. போக்குவரத்து வசதிகள் அதிகமானதால் சுற்றுப் பட்டு ஊர்களில் இருந்து வரும் மக்கள் வேலை முடிந்ததும் உடனடியாக திரும்பத் தொடங்கினார்கள். மேலும் நடுத்தர வர்க்கத்தின் சுய மரியாதையும் கூடியது. வெயிலில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கத் தயங்கினார்கள். கைகளில் குச்சியோடு, திட்டி அவ்வப்போது அடித்து கூட வரிசையை ஒழுங்கு படுத்தும் பணியாளர்கள் அவர்கள் ஈகோவை காயப்படுத்தினார்கள். 600 ரூபா சம்பளம் வாங்குகிறவரிடம் நாம் திட்டும் அடியும் வாங்குவதா என்ற எண்ணம் வந்தது. குடும்பத்தோடு வரும் பொழுது மரியாதை இல்லாமல் வா, போ எனப் பேசும் பணியாளர்கள் அவர்களை கோபப்படுத்தினார்கள். எந்த குடும்பத்தலைவன் தான் தன் மனைவி முன்பும் குழந்தைகள் முன்பும் அவமானப்பட விரும்புவான்? 80கள் வரை மத்திய தர வர்க்க வீடுகளில் மின் விசிறி, கழிவறை வசதிகள் முன்னே பின்னே தான் இருக்கும். ஆனால் 90களில் இருக்கை வசதி, மின் விசிறி வசதி, நல்ல கழிப்பறை ஆகியவை  பெரும்பாலான வீடுகளுக்கு வந்தன. நம் வீட்டில் இருக்கும் வசதி கூட இங்கில்லையே என்ற எண்ணம் பெரும்பாலோனோருக்கு தோன்றியது. இதனால் டிவியில் பார்ப்போம், குறுந்தகடில் பார்ப்போம் என்ற எண்ணம் வந்தது

இந்த நிலை சிந்தாமணியை மற்றும் குறித்தல்ல. பெரும்பாலான திரையரங்குகள் இந்நிலையைச் சந்தித்தன. எனவே தங்கள் வசதியை மேம்படுத்த தொடங்கின. அவ்வாறு மேம்படுத்தப்படா திரையரங்குகள் வணிக வளாகங்கள் ஆகின. சிந்தாமணி இந்த நிலையை கடந்து சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி 2008 வரை இயங்கியது. ஆனால் அது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால் வெகுவாக மேம்படுத்த முடியவில்லை. அதற்கு ஆகும் செலவை திருப்பி எடுக்க முடியுமா என்ற நிலை வேறு

இப்பொழுது ஒரு விழா நாளில் இரண்டு மூன்று திரைப்படங்கள் வந்தால், சினிமா மீது ஆர்வமிருப்பவரோ அல்லது இளைஞர்களோ தான் எல்லாப் படங்களையும் பார்க்க முடிகிறது. குடும்பஸ்தர்கள் ஒரு படத்தைத்தான் பார்க்க முடிகிறது. ஏன் என்றால் நான்கு பேர் கொண்ட குடும்பம் திரையரங்கிற்குச் சென்றால் டிக்கெட் கட்டணம், போக்குவரத்து, சிற்றுண்டி என 1000 ரூபாய் ஆகிவிடுகிறது. மதுரையில் 20 சதவிகித்தினர் 15,000க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களே. 60 சதவிகிதம் 15,000ல் இருந்து 25,000 வரை சம்பாதிப்பவர்கள். எனவே இவர்களால் ஏதாவது ஒரு திரைப்படத்தை மட்டுமே மாதமொருமுறையோ அல்லது காலாண்டுக்கொருமுறையோ பார்க்க முடிகிறது

முன்னர் எல்லாம் ஹிட், ஆவரேஜ், தோல்வி என படத்தின் ரிசல்ட் மூன்று வகையில் இருக்கும். இப்போது ஹிட் அல்லது தோல்விதான். ஏனென்றால் 80 சதவிகிதம் பேர் வருபவற்றில் ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் பார்த்துவிட்டு மற்றொன்றை ஓரளவு நன்றாக இருந்தாலும் சாய்ஸில் விட்டு விடுகிறார்கள்.   எனவே திரையுலகத்தினரும் கமர்சியல் படங்களை எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். புது முயற்சிகளை மிகக் குறைந்த முதலீட்டில் மட்டுமே செய்கிறார்கள். எனவே ஓரளவு நல்ல பட்ஜெட்டில் பரீட்சார்த்த ரீதியிலான படங்கள் எடுப்பது மிகக்குறைந்து வருகிறது.

சிந்தாமணி போன்ற திரையரங்குகள் மூன்று வகுப்புகளையும், சில திரையரங்குகள் நான்கு வகுப்புகள் வரையும் வைத்திருந்தன. எனவே பொருளாதார வசதிக்கேற்ப நாம் தேர்வு செய்யும் வசதி இருந்தது. இப்பொழுது 120 ரூபாய் டிக்கெட் மட்டுமே கொடுக்கிறார்கள். அரசாங்க கொள்கையின் படி குறைந்த விலையில் கொடுக்க வேண்டிய  10 சதவிகித டிக்கெட்டுகளை கொடுப்பதேயில்லை. எனவே ரிப்பீட் ஆடியன்ஸ் என்ற கருத்தாக்கமும் குறைந்து கொண்டே வருகிறது

நியாயமான கட்டணத்தோடு, அடிப்படை வசதிகளுடன் திரையரங்குகள் இயங்கினால் பார்வையாளர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். பன்முகத்தன்மையிலும் திரைப்படங்கள் வெளிவரும். இல்லையென்றால் வணிக வளாகம் ஆகும் நிலை வரும் என்பதே சிந்தாமணி திரையரங்கம் நமக்குச் சொல்லும் செய்தி.

1 comment:

King Viswa said...

செம. அப்படியே மதுரையில் இப்போது (சமீப ஆண்டுகளில்) வந்திருக்கும் மால்களில் படம் பார்ப்பது பற்றிய எண்ணவோட்டத்தையும் அறிய விரும்புகிறேன்.

ஏனென்றால், எப்படி 600 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவனால் தான் ஒழுங்கு செய்யப்படுவதை, அல்லது அவமானப்படுத்துவதை குடும்பத் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ, அதைப்போலவே, இப்போதெல்லாம் இந்த மால்களில் சென்று படம் பார்ப்பதை ஒரு பழக்கமாக்கி அதையும் ஈகோ சார்ந்த ஒரு விஷயமாக்கி வருகிறார்களோ? என்று எனக்கு ஒரு சந்தேக் உண்டு.

எமது சந்தேகத்தை நிவர்த்தி செய்பவருக்கு ஆயிரம் காசுகள் (பொற்காசு கொடுக்க ஆசைதான்) பரிசு உண்டு.