May 25, 2017

அளவு ஜாக்கெட்

எங்கள் ஊர் ஸ்டைல்கிங் டெய்லரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அனேகமாக எல்லா ஊரிலும் இந்தக்கதை ஏதாவது ஒரு பெயரில் புழக்கத்தில் இருக்கும். வேறொன்றுமில்லை. ஸ்டைல்கிங் டெய்லரிடம் சட்டை தைக்க அளவுகொடுத்துவிட்டு வெளியே வந்த ஒருவர் நீண்ட நாள் சொத்து தகராறில் இருந்த பங்காளியை கடை வாசலில் சந்தித்தார். வாய்த்தகராறு முற்றி, கோபத்தில் கடைக்குள் புகுந்து அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து பங்காளியின் வயிற்றில் குத்திவிட்டார். பதினாலு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியேவந்தவர் சட்டை தைக்க கொடுத்தது ஞாபகம் வந்து அதை கேட்கப் போனார். உடனே கடைக்காரர் அஞ்சு நிமிசம் பொறுங்கண்ணே இந்தா காஜா வச்சா முடிஞ்சுச்சு என்றாராம்.

அப்போது இருந்த பெரும்பாலான டெய்லர்கள், கஸ்டமர் நான்கைந்து முறை வந்து கேட்டால் தான் துணியை டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற பாலிஸியை வைத்திருந்தார்கள். தீபாவளியும், பள்ளிச்சீருடை தைக்கும் காலமும் தான் சிற்றூர்களில் பீக் பீரியட்கள், இந்த காலங்களில் இவர்களைப் பிடிக்கவே முடியாது. ஸ்கூல் திறக்கப் போகுது, யூனிபார்ம் தைக்கக் குடுத்து நாலு வாரமாச்சு என்னான்னு கேட்டு வாடா என்று வீட்டில் சொன்ன உடன் அப்படியே கிளம்பி அங்கே போய் ஒரு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு, அங்கு ஒரு பாட்டையும் கேட்டுவிட்டு வரும்வழியில் அஞ்சு பைசாவுக்கு ஒரு கல்கோணாவை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டே வருவதை பெரும்பாலான பையன்கள் செய்திருப்பார்கள்.

தீபாவளி நேரங்களில் தான் இன்னும் விசேஷம். முதல் நாள் இரவு வரை துணியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். காலை நாலு மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்த உடம்போடு அரை ட்ராயரை மட்டும் போட்டுக்கொண்டு, குளிச்ச உடனே புதுசு போடணுமாம், சீக்கிரம் குடுங்க என்று கடைக்கு நாலுபேர் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, சில டெய்லர்கள் கல்யாணத்திற்கு தைக்க கொடுத்த துணியைக்கூட தாமதப்படுத்தி விடுவார்கள். ஊரிலேயே மண்டபம் இருந்தால் கூட பரவாயில்லை. ஒரு நச்சுப்பிடித்த ஆளை கடைக்கு அனுப்பி இரவில் கூட வாங்கிவிடலாம். வெளியூர் கோவில், மண்டபம் எனில் முதல்நாள் மதியமே கிளம்ப வேண்டி வரும். அப்போது மாப்பிள்ளை தனக்கு நம்பிக்கையான ஒரு ஆளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியிருக்கும். எப்படியாச்சும் முகூர்த்தத்துக்கு வாங்கிட்டு வந்து சேந்துற்ரா மாப்பிள்ள என்று கெஞ்சிவிட்டுப் போவார்கள்.

ரெடிமேட் சட்டை,பேண்ட்கள் அவ்வளவாக மார்க்கெட்டைப் பிடிக்காத 80களில் இந்த டெய்லர்கள் இப்படி ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வந்தார்கள். கடை வீதியில் டெய்லர் கடைகள் தான் முக்கிய லேண்ட்மார்க்காக இருக்கும். டீன் ஏஜ் மற்றும் கல்லூரி பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடங்களில் ஒன்றாகவும் டெய்லர் கடைகள் இருந்தது. கேசட் பதிவு செய்து தரும் மியூசிக்கல்ஸ், வாடகை சைக்கிள் கடை, சலூன், விளம்பர தட்டி போர்டுகள் எழுதும் கலைக்கூடங்கள், லெண்டிங் லைப்ரரி போன்ற இடங்களில் தங்கள் டேஸ்ட்க்கு ஏற்பவும், கடைக்காரருடனான கெமிஸ்டிரி மற்றும் நண்பர்கள் அமைப்பிற்கு ஏற்பவும் சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். கடைக்காரர்களும், புது கஸ்டமர்கள் கிடைக்க இவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக இருப்பதால் வரவேற்கவே செய்வார்கள். கூட்டமாக இருக்கும் நேரங்களில், சாப்பிடப் போகும் நேரங்களில் கூடமாட ஒத்தாசை, பாதுகாப்பு என இந்த அரட்டை செட்டால் கடைக்காரர்களுக்கும் லாபமுண்டு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு அரட்டை குரூப்பில் சங்கமமாகி டாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் லெண்டிங் லைப்ரரி மனதுக்குப் பிடித்த இடமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் அங்குதான் உட்கார்ந்திருப்பேன். என் முதல் சாய்ஸ் கேசட் கடை தான். அங்கு எனக்குப் பிடிக்காத குரூப்கள் ஆக்ரமித்து இருந்தன. டெய்லர் கடை எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத இடம். இந்த நேரத்தில் தான் மதுரையில் தொழில் கற்ற ஒருவர் “ஜெண்டில்மேன் டெய்லர்ஸ்” என்ற பெயரில் கடை துவங்கினார். அட்டகாசமாக தைத்த அவர் ஓரிரு மாதங்களிலேயே பிரபலமாகி நம்பர் ஒன்அந்தஸ்தை அடைந்தார். அக்ரஹாரத்தில் பெரும் தொப்பையுடன் மத்திய முப்பதுகளில் மூல நட்சத்திரத்தால் பேச்சிலராக இருந்த ஒரு பேங்க் மேனேஜருக்கு இவர் தைத்துக் கொடுத்த பெல்ட் போடாமலேயே நிற்கும் பிட்டான பேண்டும், தொப்பை அசிங்கமாகத் தெரியாத சட்டை பிட்டிங்கும் பிடித்துப் போய்விட்டது. டெய்லரின் ராசியோ என்னவோ உடனடியாக அவருக்கு திருமணமும் நிச்சயமானது. உடனே அவர் செய்ததுதான் டாக் ஆப் தி டவுன் சரி சரி ஊரின் பேச்சானது. அதுவரை எங்கள் ஊரில் கல்யாண மாப்பிள்ளைக்கு டி டி ஆர் கோட் என அழைக்கப்படும் கோட்டையே கல்யாணத்திற்கு அணிவார்கள், கறுப்பு சுபகாரியத்திற்கு ஆகாது என்று எல்லோருமே நீல நிற கோட்தான். இவர் திரி பீஸ் கோட்,சூட் வாங்க முடிவெடுத்தார். பெரும்பாலும் ரெடிமேட் கோட் தான் வாங்குவார்கள். இவர் துணி எடுத்து தைக்கச் சொல்லி ஜெண்டில்மேன் டெய்லரிடம் ஆர்டர் கொடுத்து விட்டார். எங்கள் ஊரில் முதன் முதலில் டெய்லர் கடையில் தைக்கப்படும் கோட் சூட் என அதற்கு ஒரு அந்தஸ்தும் கிடைத்தது.

சென்னை சென்று துணி எடுத்து வந்தார்கள். டெய்லரிங் சார்ஜ் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வேலைகளை எல்லாம் ஒரு வாரம் நிறுத்தி இதிலேயே கவனம் செலுத்தினார்கள், பல கேட்லாக்குகளை வேறு மதுரையில் இருந்து வாங்கி வந்தார்கள். அங்கு டாப் அடிக்கும் பையன்களும் அப்படி என்னதாண்டா ஆயிரம் ரூபாய் கூலி அளவுக்கு தைக்கப் போறாங்க என ஆவலுடன் அங்கேயே குழுமிவிட்டார்கள். சினிமா பாக்ஸ் டிக்கெட் மூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அல்லவா? பொதுவாக இம்மாதிரி கடைகளில் டீ வாங்கும் போது அங்கு இருப்போர்க்கும் சேர்த்துதான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய்ல பாதிகாசு டீக்கே போயிரும் போல இருக்கு என கிண்டலாக சொல்வார்கள். இம்மாதிரி கொண்டாட்டமான மனநிலை இருக்கும் இடங்களில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அங்கு நம்மை வித்தியாசம் காட்டாது ஏற்றுக்கொள்ளும் ஆட்களும் தேவை என்பதால் பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பேன். என் நண்பன் ஒருவன் அந்த ஜெண்டில்மேன் டெய்லர் டாப் குரூப்பில் இருந்தான். அவன் அப்பப்ப இங்கிட்டு வந்துட்டுப் போடா என்பான்.

ஆண்களுக்கான டெய்லர்கள் இப்படி என்றால் பெண்களுக்கான டெய்லர்கள் ஒரு ரகம். அப்போது பெண்களுக்கான டெய்லர் என்றாலே இரண்டே வேலைகள் தான். ஜாக்கெட் தைப்பது, சேலைகளுக்கு ஓவர்லாக் அடிப்பது மட்டும். ஜாக்கெட்டும் இந்தக்காலம் போல் ஜன்னல், நிலை, வாசல்படி இத்யாதிகள், அலங்கார தோரணம் போல் கயிறுகள், ஊசி பாசி மணிகள் இல்லாமல் சாதாரணமாகத்தான் இருக்கும். அந்த டெய்லர்களும் கொஞ்சம் மந்தமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அம்மாதிரி இருக்கும் ஆட்களிடம் தான் ஊர்ப் பெண்களும் ஜாக்கெட் தைக்க குடுப்பார்கள், தியேட்டரில் கூட பெண்கள் பக்கம் முறுக்கு, கடலை மிட்டாய் விற்க கொஞ்சம் விவரமில்லாத, மந்தமான பையன்களைத்தான் தியேட்டர்காரர்கள் அனுமதிப்பார்கள், ஒரு ரூபா, ரெண்டு ரூபா கணக்கில விட்டாலும் பரவாயில்லை. நம்ம சொந்தம், ஊர்கார பொண்ணுங்க வந்து போற இடம். அவங்க நிம்மதியா பார்த்துட்டுப் போகணும்யா என்பார்கள்.

இந்த லெண்டிங் லைப்ரரியில் பொழுதுபோகாத நேரத்தில் உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னேன் அல்லவா? அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி, ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என் ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் தாசில்தார். மூன்று பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர் சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட் கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப் போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே? மொதோ ஜாக்கெட் எப்படி தச்சீங்கன்னு கேளு. அடுத்து உன்னைய கிட்டவே சேர்க்க மாட்டாங்க, அப்புறம் இந்த லைப்ரரி,லேடீஸ் டெய்லர்லாம் விட்டுட்டு எங்க கூட டாப்புக்கு வந்திடலாம் என்றான். நானும் அதை நம்பி நடுப்பெண்ணான பத்மினியிடம் அவ்வாறு கேட்க ம்ம். எங்க அக்கா ஜாக்கெட் போட்டுப் பார்த்து அளவு சொல்லி விட்டோம் என்று இயல்பாக சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்கள்.

மாமா டெபுடி கலெக்டராகி வேறு ஊருக்கு மாற்றலாகி அவர்கள் சென்றுவிட்டார்கள். மூவருக்கும் திருமணம் முடிந்து சென்னை, பெங்களூர் என செட்டில் ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் பத்மினியை சந்தித்தேன். மகள் கல்லூரியில் படிப்பதாகவும் உன் பையன் என்ன செய்கிறான் என்று கேட்டாள். எட்டாம் வகுப்பு என்று சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக மனதில் தங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன். ஆமா, அன்னைக்கு நான் வேணுமின்னேதான் அப்படி கேட்டேன். ஏன் கோபப்படலை என்று?. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா ஆணோட பார்வை? அதுவுமில்லாம நீ வில்லங்கமாவா கேட்ட ஏதோ வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி அதைக் கேட்ட. எத்தன நாள் அதை வச்சி உன்னைய கிண்டல் அடிச்சி சிரிச்சிருக்கோம் தெரியுமா எனச் சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டி நகன்றாள்.

No comments: