December 05, 2019

அடுப்பு லட்சுமி


மனநல வளர்ச்சி குன்றி இருப்பது, மனச்சிதைவுக்கு ஆளாகி இருப்பது என்பது அவர்களின் தவறல்ல சூழலின் தவறே என்பது புரியாத வயதில் நானும் அப்பாதிப்புக்கு உள்ளானோரை இகழ்ந்தே வந்திருக்கிறேன். நான் சிறுவனாக இருந்த 1980களில் எங்கள் ஊரில் அப்படிப்பட்டோர் சிலர் இருந்தனர். மத்திய வயதில் இருந்த டப்பா என்று அழைக்கப்பட்ட ஒருவர். அவர் பாட்டிற்கு சிவனே என்றிருப்பார். யாராவது டப்பா என்றால் கோபப்பட்டு அடிக்க ஓடி வருவார். அவரால் விரைவாக ஓடிவர முடியாது என்பதால் சிறுவர்கள் தூர நின்று டப்பா என்று கத்திவிட்டு ஓடிவிடுவார்கள். நானும் அப்படி பலமுறை அவரை ரண சித்திரவதை செய்திருக்கிறேன். 

அவரைத் தவிர இன்னும் இரண்டு பெண்மணிகள் அப்படி பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். ஒருவரை கிறுக்கு லட்சுமி என்றும் இன்னொருவரை அடுப்பு லட்சுமி என்றும் அழைப்பார்கள். இருவருமே தலைமுடியெல்லாம் சிக்குப் பிடித்து, கந்தலாடை உடுத்தி, உடல்முழுவதும் கரி பூசப்பட்டது போல் கறுத்து இருப்பார்கள். யாராவது கொடுப்பதை சாப்பிட்டு விட்டு இருப்பார்கள். கிறுக்கு லட்சுமியை சிறுவர்கள் ஏதாவது துன்புறுத்தினால் பெருங்குரலெடுத்து கத்துவார். சிறுவர்கள் அங்கிருந்து அகலும்வரை தன்னால் முடிந்தவரை கதறுவார். அப்போது பெரியவர்கள் யாராவது பார்த்து பையன்களை விரட்டி விடுவார்கள். 

அடுப்பு லட்சுமி என்பவர் மிக அமைதியானவர். ஊரில் உள்ள குட்டிச்சுவர்களில் கரிக்கட்டையால் அடுப்பு படங்களை வரைவார். சுவரில்லாத இடம் எனில் மண்ணில் சிறு குச்சியால் நேர்த்தியாக அடுப்பு படங்களை வரைவார். யாராவது அடுப்பு லட்சுமி என்றாலோ எதையாவது தூக்கி வீசினாலோ கண்ணீர் உகுத்து அழுவார், சிறு சிறு கேவல்கள் மட்டுமே வெளிப்படும். 

நான் ஏழாவது படிக்கும் போது நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சிறுவர் புத்தகங்களில் தொடங்கி பத்தாம் வகுப்பில் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். கு அழகிரிசாமி போன்றோரின் சிறுகதைத் தொகுப்பகளையும் அப்போது படித்தேன். அதிலிருந்துதான் மனச்சிதைவுக்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுந்தது. தெருவில் என் அடுத்த செட் பையன்கள் மனச்சிதைவுக்கு உள்ளானோரை துன்புறுத்துவதை தடுக்கத் துவங்கினேன். 

இந்த சமயத்தில் அடுத்த மாவட்டத்தைச் சேர்ந்த நூலகர் ஒருவர் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வந்தார். நான் பள்ளி விட்டு வந்ததும் மாலை ஏழு மணி வரை நூலகத்தில் இருந்துவிட்டு, நூலகம் மூடும் போதுதான் கிளம்புவேன். ஏழே கால் மணி பேருந்தை நூலகர் பிடித்தால்தான் அவர் ஊருக்கு செல்ல வசதி. இல்லையேல் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் அடுத்த பேருந்துக்கு. நான் அவர் நூலகத்தை விரைவாகப் பூட்ட உதவுவேன். பூட்டிய உடன் பேருந்து நிறுத்தம் வரை உடன் செல்வேன். எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்குத்தான் அவர் முதலில் கொடுப்பார். இப்படியாக எங்கள் பழக்கம் அதிகரிக்கத்துவங்கியது.

ஒரு நாள் நானும் அவரும் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லும் போது அவர் அடுப்பு லட்சுமியைப் பார்த்தார். அவர் மன வேதனைப் பட்டதை முகம் சொல்லியது. அருகிலிருந்த கடையில் இரண்டு பன்களையும் ஒரு டீயும் வாங்கிக் கொடுத்தார். லட்சுமி பன்னை மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாகச் சென்று விட்டார். 

அடுத்த நாள் அவரிடம், யார் சார் இவங்க? என்னாச்சு எனக்கேட்டேன். லட்சுமியின் இயற்பெயர் செல்வ நாயகி. மிகப்பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டு அண்ணன்கள். இவர் கடைசி. செல்வ நாயகியின் தாயார் அவரின் சிறுவயதிலேயே மார்பக புற்றுநோயால் இறந்து விட்டார். பொதுவாகவே பெண் என்றால் தந்தைக்குப் பிடிக்கும், கடைசிப் பிள்ளை என்றால் இன்னும், தாயை இழந்த பிள்ளை என்றால் இன்னும். எனவே அத்தனை செல்லத்தையும் செல்வ நாயகியின் மேல் கொட்டி வளர்த்தார். கணவனை இழந்த தன் அக்காவையும் அவர் தன் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். 

செல்வ நாயகி வகுப்பில் முதல் மாணவி. அவரின் தந்தைக்கு தன் மகளை எப்படியும் ஐ ஏ எஸ் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை. அதற்கேற்ப செல்வ நாயகியும் எப்பொழுதும் புத்தகமும் கையுமாகவும், பொது அறிவுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என பரிசுகளை குவிப்பதுமாகவும் இருந்திருக்கிறார். சமையல் கட்டுப்பக்கமே வந்தது கிடையாது. அவரின் அத்தை, தன் தம்பியிடம், சமையல் பழகிக்கச் சொல்லுடா என்று பலமுறை வற்புறுத்துவார். ஆனால் செல்வ நாயகி படித்தால் போதும் என மறுத்து விடுவார்.

ஆனால் செல்வநாயகி, படித்த நேரம் போக அத்தைக்கு ஒத்தாசையாய் சமையல் கட்டில் வேலை செய்வார். ஒரு முறை தன் தந்தைக்கு குளிக்க போட்ட வெந்நீர் பாத்திரத்தை அவசரத்தில் துணியில்லாமல் எடுக்க, கை பொத்துப்போய் சிரமப்பட்டார். இதனால் அடுப்புக்கிட்ட மட்டும் போகாத, மத்த வேலை பார் என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் செல்வநாயகியின் மூத்த அண்ணனுக்கு திருமணமானது. ஒரு நாள் செல்வநாயகியின் அத்தையும் அண்ணியும் சமைத்துக் கொண்டிருக்கும் போது, சமையலறை ஈரம் வழுக்கி அத்தை கீழே விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக தலையில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் செல்வ நாயகிக்கு சமையலறைக்குள் செல்வது என்றாலே பயம் எடுக்கத் துவங்கியது.

அக்காவின் மரணம், செல்வ நாயகியின் அப்பாவை மிகவும் பாதித்தது. நாம தெம்பா இருக்கும் போதே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடவேண்டும் என்று எண்ண வைத்தது. செல்வ நாயகியின் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினார். அந்தஸ்துக்கு ஏற்ற இடமாகப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார். செல்வ நாயகி புகுந்த வீட்டில் அவரின் மாமியார், ஓரகத்தி இருவரும் நன்கு சமைப்பவர்கள். அதனால் இவர் மேல் வேலைகள் மட்டும் செய்து கொடுத்து சிறிது காலம் தள்ளினார்.

 ஓரகத்தி இரண்டாவது பிள்ளைக்காக கருவுற, சமையல் வேலைகளில் பாதி இப்போது செல்வநாயகிக்கு வந்தது. புதிதாகச் செய்வதால் அவர்களின் வேகத்திற்கு இவரால்   ஈடு கொடுக்க முடியவில்லை. என்னத்த பிள்ள வளர்த்தாங்க, தாயில்லா வீட்டுல பெண்ணெடுத்தது தப்பாப் போச்சு என ஆளாளுக்கு கரித்துக் கொட்ட சமையலறைக்குள் நுழைய இன்னும் பதட்டமானார். கணவர் கொஞ்சம் அனுசரனையாக இருந்தாலும் அந்நாட்களில் மாமியாரை மீறி என்ன செய்து விட முடியும்? செல்வ நாயகி யாரையும் எதிர்த்துப் பேசி பழகாதவர். அதற்கான வாய்ப்பே கிடைக்கப் பெறாதவர். மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி அடிக்கடி பிரமை பிடித்தாற்போல் இருக்கத் துவங்கினார். மாமியார், தன் தந்தையை ஏக வசனத்தில் பேசுவது அவருக்கு பெரும் மன உளைச்சலை அளித்தது. இதனால் அவருக்கு ஒரு முறை கருச்சிதைவும் ஏற்பட்டது. அதனால் உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

என்னால் தனியாகப் பார்க்க முடியவில்லை. இன்னொரு மருமகளும் கைக்குழந்தையோட இருக்கா என செல்வ நாயகியின் பிறந்த வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்துவிட்டார் மாமியார். இப்படி வீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டா எப்படி அடுத்த பையனுக்கு பொண்ணு பார்ப்பீங்க என்பது போல் ஜாடை மாடையாக செல்வநாயகியின் அண்ணி பேச மனமுடைந்து போனார் செல்வநாயகியின் தந்தை.

கூடப்பிறந்த அக்கா, கணவனை இழந்து வந்த போதும் அவருக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை, நம்பி வந்த மனைவியையும் நோயில் இருந்து காப்பாற்ற முடியவில்லை, மகளும் மன வேதனையில் அல்லல் படுகிறாள் என்ற கவலையில் இரவு உறங்கியவர் காலையில் கண்விழிக்க வில்லை. இன்னும் மனமுடைந்து போனார் செல்வ நாயகி. சமையல் அறைக்குள் நுழைந்தாலே அத்தை, அப்பா இருவரின் ஞாபகம், புகுந்த வீட்டாரின் தூற்றல்கள் மனதுக்குள் சுழல அப்படியே உட்கார்ந்து விடுவார்.
என் பையனுக்கு இன்னொரு ஆளா வந்து காலத்துக்கும் சமைச்சுப் போட முடியும்? போய் சரியாகிட்டு வா என மாமியார் துரத்த, அண்ணன்கள்,அண்ணி புகுந்த வீட்டிற்குத் துரத்த, செல்வ நாயகியின் மனச்சிதைவு அதிகமாகிக்கொண்டே போனது. கணவனின் பாராமுகம் அதை அதிகப்படுத்தியது. ஒரு மழை நாளில் செல்வ நாயகி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். உடலெல்லாம் சேறுடன் ஒரு குட்டிச் சுவரின் அருகில் உட்கார்ந்து அடுப்பு படத்தை வரையத்துவங்கியவள் அடுப்பு லட்சுமியாக அழைக்கப்படலானாள்.

இதைக் கேட்டதிலிருந்து, செல்வநாயகியைப் பார்க்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்கத் துவங்கினேன். தினமும் ஒரு வேளை எப்படியும் சாப்பாடு கொடுத்து விட வேண்டும் எனத் தேடிச் சென்று கொடுக்கத்துவங்கினேன். ஒரு தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்களுடன் தேடிச் சென்று அக்கா சாப்பிடுங்க என்று சொல்லி கொடுத்தேன். ஒரு சில மாதங்களில் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு அவர் சென்று விட்டார். 

இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். அதன்பின் வேலை, திருமணம், சொந்தத்தொழில் எனப் போய் நொடித்து மிகுந்த சிக்கலில் இருந்தேன். மீண்டும் மாத சம்பளத்திற்கு வேலைக்குப் போக துவங்கியிருந்தேன். ஒரு நாள் கையிருப்பாக ஒரு ரூபாய் கூட இல்லை. தெரிந்தவர் எல்லோரிடமும் கடன் வாங்கியாகி விட்டது. அடுத்த வாரம் சம்பளம் வந்து விடும். வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. இன்றைய இரவு கடந்து விட்டால் கூட போதும், நாளை வீட்டில் இருந்த இரண்டு பானைகளை கடையில் விற்று தப்பித்து விடலாம் என்ற நிலையில் இருந்தேன். மகன் பசியாக இருந்தது தான் கஷ்டமாக இருந்தது.

திடீரென கதவைத்தட்டும் சத்தம். பயந்து கொண்டே கதவைத்திறக்க பால்யகால நண்பன். சிறு வயதிலேயே வேறு ஊருக்குச் சென்ற குடும்பம். அப்புறம் தொடர்பேயில்லை. பக்கத்து ஊர்ல தாண்டா மாமியார் வீடு, விசேசத்துக்கு வந்தேன். குமார தற்செயலாப் பார்த்தேன். அதாண்டா அவன் சைக்கிள நமக்கே வாடகைக்கு குடுப்பானே, அவன் தான்.உன்னையக் கேட்டேன். இங்க இருக்கேனு சொன்னான். விசேசத்துக்குத்தான் கூப்பிட முடியலை. சாப்பாடாவது கொண்டு வருவோம்னு கொண்டு வந்தேன் என இரண்டு வாளி நிறைய விசேஷ சாப்பாட்டை கொடுத்து விட்டுச் சென்றான்.
மகனுக்கு முதலில் சாப்பாடை வைத்து விட்டு, நானும் மனைவியும் சாப்பிடும் போது, மனைவி என்னிடம், நானும் கல்யாணம் ஆனதில இருந்து பார்க்கிறேன், எவ்வளோ பிரச்சினை இருந்தாலும் நீங்க ஒரு வேளை கூட பட்டினியா இருந்ததா ஞாபகமே இல்லை. அதெப்படி? என்றார்.
ஒரு புண்ணியவதிக்கு கொஞ்ச நாள் நான் சாப்பாடு கொடுத்திருக்கேன். அவங்க கொடுத்த வரம் அது என்றேன்.