August 27, 2022
ஆணும் சமைக்கனும்
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் 23 வயது வரை வளர்ந்தவன் நான். உணவோ, உடையோ, சினிமாவோ, புத்தகங்களோ எதுவுமே கேட்காமலே கிடைக்கும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தேன். அதுவும் ருசியான உணவுக்கு பஞ்சமேயில்லாத வாழ்க்கை. தந்தை அரசு அதிகாரி. போஜனப் பிரியர். வாரத்தில் இரண்டு நாள் காலை சாம்பார் வடை ஹோட்டலில் வாங்குவோம், வீட்டில் அரைக்கும் சட்னி தவிர்த்து. இரண்டு நாள் இரவு புரோட்டாவுடன். புதன், ஞாயிறு வீட்டில் நிச்சய அசைவம்.
சாமி கும்பிட கோவிலுக்குப் போவதாக இருந்தால் கூட, முதல் நாள் இரவு, புளிக்காய்ச்சல் தயாராகும்.தயிர் சுமாரா உறைஞ்சாப் போதும், காலையில பாலை சூடு பன்ணி ஊத்துவோம், அப்பத்தான் மதியம் சாப்பிட புளிக்காம இருக்கும் என்ற பக்குவங்கள் பகிரப்படும். இரவே லாலா கடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கப்பட்டிருக்கும். முக்கு கடையில் பருப்பு வடை வாங்குடா, உளுந்த வடை மதியம் தாங்காது என உத்தரவுகள் பறக்கும். காலையில் புதினா சட்னி அரைத்து புளியோதரை பேக் செய்த பின்னால் தான் எல்லாம் ரெடி, எந்த கோவிலுக்கு என்ற கேள்வியே எழும்பும்.
எங்கள் வீடாவது பரவாயில்லை. என் அம்மாவின் அக்கா வீடு இன்னும் ஒரு படி மேல். என் அம்மாவின் தந்தை ஒரு நிலச்சுவான் தார். முதல் மகளுக்கு அரசு அதிகாரியாகவும் வேண்டும், நிலபுலன்களும் இருக்க வேண்டும் எனப் பார்த்து எக்கச்சக்க நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அவர் உறவுக்காரரும் கூட. என் பெரியம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் 10 வயது வித்தியாசம். இடைப்பட்ட காலத்தில் விவசாயம் சற்று நொடிக்க, என் அம்மாவிற்கு அரசு அதிகாரி என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதனாலோ என்னவோ என் பெரியம்மாவிற்கு அம்மா மேல் கூடுதல் கரிசனம். அவருக்கு ஒரு பையன், இரண்டு பெண். வீடே விவசாய விளை பொருட்களாலும், விருந்தினர்களாலும் நிறைந்திருக்கும். கிராமத்தில் இருந்து ஊருக்கு வருபவர்கள் என் பெரியம்மா வீட்டிற்குத்தான் வருவார்கள். எல்லோரும் கூடும் மையமாக அந்த வீடு இருந்தது. தினமும் நான்கைந்து பேராவது காப்பி சாப்பிட வந்துவிடுவார்கள். மதிய சாப்பாடு ஒன்றிரண்டு பேருக்கு கூடுதலாகவே செய்யும் படி இருக்கும். காப்பி பொடி அரைப்பது, வத்தல் வடகம் போடுவது, சாம்பார் பொடி அரைப்பது எல்லாம் விழா போல நடக்கும்.
என் பெரியம்மாவின் பையன், பெரும்பாலான ஆண்டுகள் விடுதியில் தங்கிப் படித்தவர். அதனால் நான் தான் அந்த வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. கடை கண்ணிக்கு சலிக்காமல் போய் வருவேன். என் பெரியப்பாவிற்கு சிகரெட் பழக்கம் உண்டு, அதுவும் நான் தான் வாங்கிக் கொடுப்பேன். பெரியம்மாவின் வீடு இரண்டு தெரு தான் தள்ளி இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் என்ன செய்தாலும் குடுகுடுவென ஓடிப்போய் அங்கே கொடுத்துவிட்டு, அங்கே என்னவோ அதை எங்கள் வீட்டிற்கு வாங்கி வருவேன். அதனால் ஒவ்வொரு வேளை சாப்பாடும் வெரைட்டியாக இருக்கும்.
சின்ன மகன் என்றுதான் என் பெரியம்மா என்னைக் குறிப்பிடுவார். டேய், நாளைக்கு கம்மாய்ல விரால் மீன் பிடிச்சுக் கொண்டு வராங்கடா. உங்க அம்மாவ சமைக்க வேணாம்னு சொல்லி என சொல்லி விடுவார். என் அம்மாவும் தன் பங்குக்கு, காலை சாப்பாடு நான் கொடுத்து விடுறேன். உங்க பெரியம்மாகிட்ட சொல்லிட்டு வா என்பார்கள்.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்த உடன் அவர்கள் வீட்டிற்குத்தான் போவேன். முறுகலாக இரண்டு நெய் தோசை, பில்டர் காபி மூத்த அக்கா போட்டுத் தருவார்கள். வெரைட்டியைப் பொறுத்தே இரவு உணவு எந்த வீட்டில் என முடிவு செய்வேன்.
திருவிழா சமயங்களில் பாட்டி ஊருக்குப் போனால், இன்னும் விசேஷம். பெரிய வீடு. மாமா அத்தைகள் என நிறைந்திருக்கும். கெடா, சாவ என்றுதான் பேச்சே இருக்கும். நான் அன்னிய மாப்பிள்ளையின் பையன் என்பதால் என் தந்தைக்கு ஏதும் கோபம் வந்து விடக்கூடாதே என இன்னும் சிறப்பாய் கவனிப்பார்கள். யோசித்துப் பார்த்தால் என் இளமைக்காலத்தில் ஒரு வேளை கூட பட்டினியாய் இருந்ததில்லை என்று சொல்வதை விட ருசியான சாப்பாடு இல்லாத வேளையே இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு சமையல் நடந்தாலும் எங்கள் வீடுகளில் ஆண்கள் சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்க மாட்டார்கள். அதில் தான் கையே கழுவுவார்கள். சமையல் கட்டுக்குள் யாரும் நுழைந்ததே இல்லை. பாசமாக இருப்பார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஹோட்டலில் வாங்கலாம் என்றுதான் நினைப்பார்களே தவிர தப்பித்தவறி கூட நாம் செய்து தருவோமே என நினைக்க மாட்டார்கள். தண்ணீர் குடிக்க நான் அடிப்படிக்குள் போனால் கூட, நீ ஏண்டா இங்க வர்ற, கொண்டு வர மாட்டோமா என்றுதான் அம்மா, பெரியம்மா கோபிப்பார்கள். இதனாலேயே என்னவோ எனக்குள் ஆண் சமையலறைக்குள் செல்லவே கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
திருமணத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். என் மனைவியும் சிறப்பாக சமைக்க கூடியவர். மேலும் என் மாமனார்-மாமியார் இருவரும், அவர் என்ன சொன்னாலும் கேட்கணும், எதிர்த்துப் பேசக்கூடாது என உருவேற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்தால் கூட அவர்கள் பார்த்து விட்டால் என் மனைவியைக் கோபிப்பார்கள்.
இதனால் இன்னும் என் சுக வாழ்க்கை நீடித்துக் கொண்டே போனது. சமையலில் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும் அதுவும் நம் கடமை என்ற எண்ணம் துளிக்கூட ஏற்படவில்லை. மேலும் என் மூத்த மகன் ஹைபர் ஆக்டிவ். எனவே மாலை வேளைகளில் அவனை சமாளிப்பது மட்டுமே என் வேலை என்றும் ஆகிவிட்டது. அவனை வெளியே விளையாட அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது இதோடு என் கடமை முடிந்தது என இருப்பேன்.
பதினைந்து ஆண்டுகள் இப்படியே ஓடி விட்டன. வீட்டுப் பெரியவர்கள் எல்லோரும் தளர்ந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. இரண்டு மாதமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை. இரவு உணவு ஹோட்டலில் வாங்கி விடலாம் என்றாலும், காலை ஏழரைக்குள் பையன்களுக்கு காலை சாப்பாடும், மதிய சாப்பாடும் முடிக்க வேண்டிய சூழல். முதல் ஒரு வாரம் ஹோட்டலில் பூரி, பொங்கல் என மாற்றி மாற்றி வாங்கி கொடுத்து விட்டேன். அடுத்த வாரம் கூட சாப்பிடுற பசங்க கிண்டல் பண்றாங்கப்ப. நல்லாவும் இல்ல என்றார்கள்.எனக்குத் தெரிந்தது நூடுல்ஸ், ஆம்லேட், டீ போடுவது மட்டும். கஷ்டப்பட்டு சாதம் வைத்து, தயிர் சாதமாக்கி ஆம்லேட் போட்டு கொடுத்து விட்டேன். அடுத்த வாரத்தில் ரசம் பழகினேன். இரண்டு நாள் தயிர் சாதம், இரண்டு நாள் ரசம் சாதம், இரண்டு நாள் ஹோட்டல் என மாற்றி மாற்றிக் கொடுத்து விட்டேன். சரி சாம்பார் பழகுவோம் என முயற்சி செய்கையில் மனைவி ஓரளவு குணமாகி நான் பார்த்துக்கிறேங்க என என்னை விடுதலை செய்தார். அப்பாடா தப்பிச்சோம்டா என வழக்கத்திற்குத் திரும்பினேன்.
அதன்பின் ஓராண்டு ஆகியிருக்கும். எனக்குள் சில எண்ணங்கள். என்னடா இது, நாம் பெரியார் என்கிறோம், சமத்துவம் என்கிறோம். ஆனால் மனைவிக்கு சமையலில் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்வதில்லை. செய்தால் அவருக்கும் கொஞ்சம் இலகுவாக இருக்குமே என்று தோன்றியது.
ஒரு நாள் காலை அலாரம் அடித்த உடன் விழித்து, அவரை எழுப்பாமல் டீ போட்டு வைத்து விட்டு, இரண்டு டம்ளர் அரிசியை குக்கரில் போட்டு விட்டு, கொஞ்சம் வெங்காயம் உரித்து வைத்து விட்டு எழுப்பினேன். ஒரு வைர நெக்லஸ் வாங்கித்தந்திருந்தால் கூட அப்படி ஒரு சந்தோசத்தை அவரின் முகத்தில் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே.
இப்போதெல்லாம் காலை வேளையில் உடன் நின்று சமையலில் உதவி செய்கிறேன். ஞாயிறுகளில் நானே சமைக்கத் துவங்கியிருக்கிறேன். இத்தனை நாட்கள் உடன் உதவி செய்யாததை நினைத்து வருந்துகிறேன்.
என் மனைவியிடம் மட்டுமல்ல. என் பாட்டி, பெரியம்மா மற்றும் அக்காக்கள், அம்மா, மாமியார் என என்னை சமையலறைக்குள் விடாமல் என்னை சுகவாசியாக வளர்த்தவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். காலம் பூராவும் அடுக்களையில் நின்ற உங்களுக்கு கொஞ்சமாவது விடுதலை கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தித் தான் உறைத்திருக்கிறது. இன்னுமே உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை சமையலறைக்குள் அனுமதிக்கப் போவதில்லை தான். உணவு பரிமாற, எடுத்து வைக்கவாவது என்னை விடுங்கள். என்னால் முடிந்ததெல்லாம் இனி என் மகன்களை சமையலில் பயிற்றுவிப்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)