December 23, 2011

தமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு

இரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.



2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.

வானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.

விஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம் சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது.

தீனாவின் மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது.

கமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.



சுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார்.

மாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.

கல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை.

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம்.
ரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார்.

விவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது?

December 22, 2011

செகண்ட் ஷோ நிறுத்தப்படுகிறதா?

மற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள்.

பக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன் சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப
ளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.

மனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள்.

நாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை.

காலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது.

ஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.

சில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.

மதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த செகண்ட் ஷோக்கள் தான்.

கால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

மனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால், டேக் இட் ஈஸி

December 21, 2011

2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

விஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான்.

விஜயகாந்த்

சரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது.

அடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.

விவேக்

கிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார்.

ரஹ்மான்

தால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன.

பிரபு

ஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.

கமல்ஹாசன்

96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம்? படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன.

தெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும், ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.

இந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.

பாரதி

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.

என்னம்மா கண்ணு

துவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.

விஜய்

பாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது

அஜீத்

அறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.

வெற்றி கொடி கட்டு

வெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம். ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.

இந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.