November 05, 2013

மிஸ்டரி பீவர்

திடீரென பூபாலனுக்கு விழிப்பு வந்தது. எழ முயற்சித்தான். முடியவில்லை. பத்துபேர் கைகளையும், கால்களையும் பிடித்து அமுக்குவது போல் ஒரு உணர்ச்சி. பிரயத்தனப்பட்டு எழுந்தரித்துப் பார்த்தான். மருத்துமனையில் இருப்பது புரிந்தது. அருகில் யாருமில்லை. குரல் எழுப்ப யத்தனித்தும் பலவீனமானமாகவே எழும்பியது. அப்படியே விழித்தவாறே படுத்திருந்தான். கை,காலெல்லாம் தளர்ந்து தனக்கு நூறு வயது கூடியிருந்ததைப் போல் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த செவிலிப்பெண் அவன் விழித்திருந்தைக் கண்டு, வியந்து இண்டர்காமில் மருத்துவருக்கு தகவல் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து சிறு மருத்துவர்கள் குழு ஒன்று வந்தது. பூபாலனைப் பரிசோதித்த பின்னர், தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள். சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு, உளவியல் ஆலோசனை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

பூபாலன் உளவியல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். அங்குதான் அவனுக்குத் தெரியவந்தது, தான் ஒரு கோமா நோயாளியாக 40 வருடங்கள் மருத்துவமனையில்  இருந்து வந்தது. ஒரு விபத்தில் சுயநினைவை இழந்திருந்த பூபாலனுக்கு  அப்போது 25 வயது. திருமணம் ஆகியிருக்கவில்லை. அவனது பெற்றோர்களும் 25 வருடம் அவனை கோமா நிலையிலேயே பராமரித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இறப்புக்குப் பின் அவனது கேர் டேக்கராக இருந்து வருபவன் அவன் நண்பன் சிவானந்தன். மாதமொருமுறை அவனை வந்து பார்த்து தேவையானவற்றை செய்து வருபவன். அவன் தற்போது வேறு ஊரில் வசித்து வருவதாகவும், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். பின் அவனது பல கேள்விகள்,சந்தேகங்களுக்கு பதிலளித்து, படிப்படியாக சாந்தப்படுத்தினார்.

அவனை கவனித்து வந்த மருத்துவர், படிப்படியாக பேச, நடக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். ஒரு வாரம் கழித்து மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் சிவானந்தனும் வந்து சேர்ந்தான். அவனின் முதிய தோற்றத்தைக் கண்டதும் தான் பூபாலனுக்கு சமாதானம் ஆனது. ஒரு வாரம் கழித்து பூபாலனை தன் வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும், ஓரிரு மாதங்களில் பூபாலனின் பழைய வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் கூறினான்.

மாலை நேரங்களில் மருத்துவமனை வளாகத்தை பூபாலன் சுற்றி வரும்போது, அது அரசு பொது மருத்துவமனை என்று அறியவந்தது. மிக குறைவான நோயாளிகளே இருப்பதும், அவர்களும் விபத்து, வயதானதால் வரும் பிரச்சினைகள் என்றே இருப்பதும் தெரியவந்தது. பிரசவத்துக்கு வந்தவர்களையும் பார்க்க நேர்ந்தது.  கேண்டீன் என்ற ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பூபாலன் நினைவு வந்த பின் மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் சத்து மாவு உருண்டையும், நீரும் மட்டுமே பணியாளர்கள் மூலம் கிடைத்தது.

ஒரு வாரம் கழித்து, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், பேருந்தில் ஏறி சென்னையின் தெருக்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்த பூபாலனுக்கு இரண்டு விஷயங்கள் உறைத்தது. ஒன்று, தான் விபத்தில் அடிபட்ட 2013க்கும் இப்போதைய 2053க்கும் தொழில்நுட்பத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. இன்னொன்று சென்னை நகரத்தின் வீதிகளில் ஒரு உணவகமோ  ஏன் ஒரு டீக்கடை கூட கண்ணுக்கு தென்படவில்லை.

சிவானந்தனின் ஊருக்கு  வந்த பின்னரும் அவனால் வித்தியாசம் உணரமுடிந்தது.அங்கும் உணவகங்களோ, டீக்கடைகளோ தென்படவில்லை.  பத்தாண்டுகளில் எப்படி தொழில்நுட்பம் வளர்ந்தது எனப் பார்த்தவன் பூபாலன். ஆனால் இந்த 40 ஆண்டுகள் அப்படியே தொழில்நுட்பச் சக்கரம் இயங்காமல் போய்விட்டது போல் உணர்ந்தான். மதிய உணவு நேரம் வந்தது. தட்டில் சில சத்து மாவு உருண்டைகளை எடுத்துக் கொண்டு வந்தார், சிவானந்தனின் மனைவி. என்னடா, சிவா, இன்னும் பத்தியம் இருக்கணும்னு சொன்னாரா? டாக்டர்?, என வினவினான் பூபாலன்.

மௌனமாக இருந்தான் சிவானந்தன். பின் அவர்கள் தங்கள் இளமைக்காலம், நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை ஆனது, டீ கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான் பூபாலன். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான், அந்த வீட்டில் சமையலறையே இல்லை என அவனுக்கு உறைத்தது.
என்னடா சிவா இது? என்று வினவினான் பூபாலன்.

”உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சில மாசத்திலேயே ஒரு விசித்திர காய்ச்சல் திடீர்னுன்னு பரவிச்சு. எந்த மருந்துக்கும் கட்டுப்படல. ரெண்டு மாசம் மூணு  மாசம் கூட ஒரே டெம்பரேச்சர்ல அப்படியே இருந்துச்சு. அதுக்கு விஞ்ஞானிகள் ஒரு மருந்து கண்டுபிடிச்சாங்க. அந்த இஞ்சக்‌ஷன் போட்ட உடனே படிப்படியா சரியாயிடுச்சு. அப்புறம் திரும்ப இன்னொரு குரூப்புக்கு அந்த காய்ச்சல் வந்தது. திரும்பவும் அதே இஞ்சக்‌ஷன். சரியாயிடுச்சு. அப்புறன் தெரிஞ்சது, ஒவ்வொரு பிளட் குரூப்புக்கா அந்தக் காய்ச்சல் வருதுன்னு. கிட்டத்தட்ட உலகத்துல இருக்குற எல்லா மக்களுக்கும் அந்தக் காய்ச்சல் வந்து இஞ்சக்‌ஷன் போட்டுக்கிட்டாங்க. அதுக்கு மிஸ்டரி பீவர்ன்னு பேரும் வச்சாங்க. காய்ச்சல் வராதவங்க, முன் னெச்சரிக்கையா அந்த இஞ்சக்‌ஷன் போட்ட பின்னாடி காய்ச்சல் வரல்லை. அதனால அத பரிசோதிச்ச உலக சுகாதார நிறுவனம், அந்த இஞ்சக்‌ஷன தடுப்பு மருந்தா அறிவிச்சு, பிறந்த குழந்தைககளுக்கும் போடச் சொல்லி பரிந்துரை பண்ணுச்சு. பிறந்து 30 நாள்ல அந்த இஞ்சக்‌ஷன குழந்தைகளுக்கு உலகம் பூராம் போட ஆரம்பிச்சாங்க.

அப்புறம் சில மாதங்கள்ல தான் தெரிய வந்தது, அந்தக் குழந்தைகளுக்கு டேஸ்டே தெரியல்லைன்னு. உப்பா இருந்தாலும், சர்க்கரையா இருந்தாலும் எதையும் சாப்பிடுச்சுக. எந்த சாப்பாடையும் ஒதுக்கல. ஒரு வருசம் கழிச்சு, லேஸ் வேணும், குர்குரே வேணும், நூடுல்ஸ்,சிக்கன், மட்டன், பிட்சா,பர்கர் தான் சாப்பிடுவேன் அடம் பிடிச்சிக்கிட்டிருந்த பிள்ளைக கூட எதக் குடுத்தாலும் சாப்பிட ஆரம்பிச்சிருச்சுங்க. உலகம் பூராம் இருந்தும் பேஸ்புக், டிவிட்டர்ல எல்லாம், என்னோட குழந்தை மாறிட்டான். எதையும் சாப்பிடுறன்னு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்.
கொஞ்சம் கொஞ்சமா, ஜங்க் புட்டோட விற்பனை சரிய ஆரம்பிச்சுச்சு. எல்லோர் வீட்டிலேயும் பிள்ளைக எந்த ருசியில குடுத்தாலும், ஒரே மாதிரிதானே சாப்பிடுறாங்கண்ணு சத்தான ஐயிட்டமா செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. தாங்களே அதையும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. சாக்லேட், பேக்கரி ஐயிட்டம்,கே எஃப் சி, சைனீஸ், காண்டினென்டல் புட்னு எல்லாத்தோட மார்க்கட்டும் குறைய ஆரம்பிச்சிருச்சு. பெரிய புட் செயினெல்லாம் லாபத்துல அடி வாங்குச்சு. பிள்ளைகளே ருசிச்சு சாப்பிடலைன்னு மக்கள் தங்களுடைய ஹோட்டல் விசிட்டுகளையெல்லாம் கொறச்சிக்கிட்டாங்க.

 பேச்சிலர்ஸ், ருசிய விட முடியாத சில குடும்பஸ்தர்கள் அப்புறம் ஆபிஸ் பார்ட்டிகள் போன்ற விழாக்கள்ல பங்கெடுத்தவங்க தான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாங்க.
அதுக்கப்புறம் சில வருஷத்துலேயே பெரியவங்களுக்கும் டேஸ்ட் பட் காலியாக ஆரம்பிச்சிச்சு. எத சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அறு சுவைங்கிறதெல்லாம் புத்தகத்துலயும் இண்டர்நெட்டுலயும் மட்டும் பார்க்கிற வார்த்தையாச்சு. எதச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதானே இருக்குன்னு, பெரிய ஹோட்டல்களுக்கு மக்கள் போகிறத நிறுத்த ஆரம்பிச்சாங்க. தினமும் மது குடிக்கிறவன்கூட, சைட் டிஸ் டேஸ்ட் இல்லைன்னு, குடிக்கிறத குறைக்க ஆரம்பிச்சாங்க.

புட் இண்டஸ்டிரியே ஸ்தம்பிச்சுப் போச்சு. அப்போதைய கவர்ன்மெண்ட் கொடுத்த விலையில்லா அரிசியை வாங்கி மாட்டுக்கு போட்டவன் கூட அதைச் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சான்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எல்லோரும் கிடைச்ச உணவ சாப்பிட ஆரம்பிச்சாங்க. தலப்பாகட்டி,சரவண பவன், அடையார் ஆனந்த பவன் அப்படிங்கிற பிராண்ட்டெல்லாம் காலாவதி ஆச்சு.

தடுப்பூசி போட்டு வளர்ந்த ஜெனரேஷன் சிகரெட், மது பக்கமே போகலை. ஹோட்டல், டீக்கடைகள் இல்லாததால, அது தொடர்பான தொழில்களும் நடக்கலை. அதனால அரசாங்கத்துக்கு வரியெல்லாம் குறைஞ்சிடுச்சு.  அரசாங்கமே மக்களுக்கான உணவை, சத்து மாவு மாதிரி செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரே மாதிரி உருண்டை, வயசு கூட கூட எண்ணிக்கை கூடும். அப்புறம் 50 வயசுக்கு அப்புறம் எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வரும்.

வீட்டில சமையல் அறை, தேவையே இல்லாம போயிடுச்சு. ஒவ்வொரு உணவுக்கும், ருசிக்கும், நம்ம கோபம், இச்சைகளை தூண்டுற சக்தி உண்டு. ஆனா இந்த மாவு உருண்டைய சாப்பிடுறவனுக்கு பெரிய இச்சைகள் வர வாய்ப்பில்லாம போயிடுச்சு.பெரிசா சாதிக்கணும்கிற வெறி, நிறைய சம்பாதிக்கணும்கிற வெறி எல்லாம் குறைஞ்சிடுச்சு. சாப்பாட்டுக்கு பெரிய பிரச்சினை இல்லைன்ன உடனே அவன் அவன் தனக்கு பிடிச்சத மட்டும் செஞ்சான். சிலர் சோம்பேறி ஆனான்.

அதனால பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் அப்புறம் நடக்கவே இல்லை. ஒரே மாதிரி வாழ்க்கை ஓடிக்கிட்டி இருக்கு.இதுக்கெல்லாம் அந்த இஞ்சக்ஷன்தான் காரணம்னு, ஒரு குழு போராடி, பிறக்கிற குழந்தைகளுக்கு அதைப் போடக்கூடாதுன்னு முயற்சி பண்ணாங்க. இஞ்சக்‌ஷன் போடாத குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் வரவும், எல்லோரும் பின் வாங்கிட்டாங்க.

என்று சிவானந்தன் சொல்லி முடித்தான்.

தலை சுற்றியது பூபாலனுக்கு. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தான். அவனுடைய சுவை மொட்டுக்கள் இரண்டு நாட்களாக தூண்டப்பட்டு இருந்து வந்தது. குறிப்பிட்ட ரத்த பிரிவிற்கான காய்ச்சல் வந்தபோது, அவன் ஐ சி யூவில் இருந்திருக்கிறான். காய்ச்சல் தாக்கவில்லை. அந்த இஞ்சக்‌ஷனும் அவனுக்கு போடப் படாமல் விட்டுப் போய் இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ருசியில்லா உருண்டை அவன் தொண்டையில் இறங்கவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்குமா? என அலைய ஆரம்பித்தான். சாப்பாடு கூட வேண்டாம், ஒரு டம்ளர் டீ குடித்தால் கூட போதும் என்றானது அவனுக்கு. டீ என்றால் அப்படி ஒரு பிரியம் அவனுக்கு.
வீட்டில் காலை பல் விளக்காமல் குடித்த டீ, டீக்கடையில் மசால் வடையை கடித்துக் கொண்டு, அடுத்தவன் கையில் இருந்த தினத்தந்தியை எட்டிப்பார்த்துக் கொண்டே குடித்த டீ, ஸ்டடி ஹாலிடேஸ்களில் மதியம் தூங்கி, மாலை எழுந்தரித்து, விட்டத பிடிக்கணும்டா என்று சபதம் எடுத்துக் கொண்டே குடித்த டீ, எக்ஸாம் டைமில் பிளாஸ்கில் வாங்கி வைத்து குடித்த டீ, அலுவலகத்தில் மீட்டிங்குகளில் போது, அலங்காரக் கோப்பைகளில் பரிமாறப்பட்ட டீ எல்லாம் அவன் மூளையில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப்படைத்தது.

சிவானந்தனிடம் டீக்காக கெஞ்சினான். ”நான் டீயை பார்த்து 20 வருடத்துக்கு மேல் இருக்கும் அதைப் பயிரிடுவதையே நிறுத்திட்டாங்க: என்றான். மாடெல்லாம் இப்போ ஜூல தான் இருக்கு. சிங்கம் புலி மாதிரி என்றான். அவனின்  அப்போதைய நண்பர்கள் அனைவரையும் சிவானந்தன் மூலம் அறிந்து ஒரு டீக்காக பெரு முயற்சி எடுத்தான். கிடைக்கவேயில்லை.

பால் அதிகம் சுரக்காத பெண்களின் கைக் குழந்தைகளுக்கு மட்டும், அரசாங்க பால் பண்ணையில் இருந்து முதல் மூன்று மாதங்களுக்கு பால் வினியோகிக்கப் படுவதாக ஒரு நண்பன் மூலம் அறிந்தான்.
அதைத தவிர வேறு எதுவும் கிடைக்காது, என்ற நிலையில் அந்த இஞ்சக்‌ஷனை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அலுவலரை பெரும் முயற்சிக்குப் பின் சந்தித்தான்.

மர்மக் காய்ச்சல் பரவியதும், அதை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டபோது, அந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகவும், அதன் பின் விளைவுகள் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை என்றும் அவன் அறிந்து கொண்டான். மேலும் அவர்களால், சுவை மொட்டுக்களை பாதிக்கும் குறிப்பிட்ட என்சைமை தனியே பிரித்து எடுக்க முடியவில்லை என்றும், வேறு எந்த புது காம்போசிஷனலாலும் அந்தக் காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்து கொண்டான்.
முன்னிலும் தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவனுக்கு மூளையில் ஒரு மின்னல் அடித்தது. இந்த ஒரு இஞ்சக்சன் நாட்டில் என்னவெல்லாம் நல்லவற்றை ஏற்படுத்தி உள்ளது என்று.

சமையல் என்ற ஒன்றே இல்லாததால், பெண்கள் சம உரிமையுடன் நடமாடினார்கள். அலுவலகம் சென்று வந்து சமைக்கத் தேவையில்லை.   தேவையில்லாத உணவு வகைகளை உண்டு, மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு நோய் வருவது குறைந்துள்ளது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தின் பெயரால் மக்களை பிரிப்பது நடக்கவில்லை. சொத்து சேர்க்கும் ஆர்வம் குறைந்து சுற்றுச்சூழல் பிழைத்துள்ளது. நாடுகளுக்கிடையே சண்டை இல்லை. இந்தக் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் 2053 இப்படியா இருந்திருக்கும்?


மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு மிஸ்டரி பீவர்க்கான தடுப்பூசி ஒன்று போடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் பூபாலன்.

October 28, 2013

தனுஷின் ஓப்பனிங்

தமிழ் திரையுலகில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட நடிகர்களுக்கு,முதல் மூன்று நாட்களில், திரையரங்குகளில் கிடைக்கும் வரும் வசூலே, அவர்களுடைய  படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நிர்ணயிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

தனுஷ் 2002ல் அறிமுகமாகி 11 ஆண்டுகள் கடந்து விட்டன. அசாருதீன் முதல் மூன்று டெஸ்டுகளில் சதம் அடித்தது போல, அவரும் முதல் மூன்று படங்களில் ஹேட்ரிக் வெற்றியை கொடுத்தார். இடையிடையே ஹிட்டுகள். தேசிய விருது வாங்கும் அளவுக்கு நடிப்புத்திறமை என தமிழ் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை அறிமுகமான முகம். எனவே படம் லேட் பிக்கப் ஆகும் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. ஓப்பனிங் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

சமீபத்தில் வெளியான நய்யாண்டி படத்துக்கு ஓப்பனிங் வெகு சுமாராகவே இருந்தது. மதுரை ஏரியாவில் பல தியேட்டர்களில் முதல் நாள் காலை, மதிய காட்சிகளுக்கு 40 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கூட்டம் இருந்தது. படம் சுமார் என்ற தகவல் வெளியே பரவியதும் சனி, ஞாயிறிலும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

அம்பிகாபதி (ராஞ்சனாவின் டப்பிங்) வெளியான போது, மதுரை புறநகர் தியேட்டர்களில், அந்தந்த தியேட்டர்களில் வேலை பார்ப்பவர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். சரி இந்திப்படம் என்று சமாதானம் கொண்டாலும், அடுத்த வந்த மரியானுக்கும் இதே நிலைமைதான். முதல்நாளிலேயெ பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இத்தனைக்கும் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட். ட்ரைலரும் நன்றாகவே இருந்தது.

திருடா திருடிக்குப் பின்னர் அவர் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையை கண்டேன், அது ஒரு கனாக் காலம், புதுப்பேட்டை வரை எதுவும் பெரிய கமர்ஷியல் ஹிட் கிடையாது. திருவிளையாடல் ஆரம்பம் தான் தனுஷுக்கு அடுத்து கிடைத்த கமர்சியல் ஹிட். அதன் பின்னர் வந்த பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன் மட்டுமே எல்லாத்தரப்புக்கும் நிம்மதியைக் கொடுத்த படங்கள்.

2010க்குப் பின்னர் வந்த எந்தப் படமும் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்த வில்லை. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, இணையதள பயனாளர்களால் சிலாகிக்கப்பட்டு, தனுஷ்க்கு தேசிய விருது வாங்கித்தந்த ஆடுகளம் கூட சில ஏரியாக்களில் சுமாராகவே போனது. (உடன் வந்த கார்த்தியின் சிறுத்தையும், விஜய்யின் காவலனும் கமர்சியலாக தப்பித்தன).

குட்டி, உத்தம புத்திரன், சீடன் (இதில் கௌரவ வேடம்), மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நையாண்டி என தொடர் பாக்ஸ் ஆபிஸ் பெயிலியர்கள் தான் தனுஷுக்கு.

இதில் சிங்கம் படத்தின் வெற்றிக்குப் பின் ஹரி இயக்கிய படம் வேங்கை. ராஜ்கிரண், பிரகஷ்ராஜ், தமன்னா என நல்ல ஸ்டார் காஸ்ட். இருந்தும் மதுரை புறநகர் ஏரியாக்களில் முதல் நாள் மாலை காட்சிக்கே ஆவரேஜான கூட்டம் தான். மயக்கம் என்னவுக்கு செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷின் ஹிட்டான பாடல்கள் இருந்ததால் ஓரளவு கூட்டம் வந்தது, ஆனால் இரண்டாம் நாள் படம் படுத்துவிட்டது. 
கொலைவெறியால் 3 க்கு நல்ல கூட்டம் முதல் நாள் இருந்தது. ஆனால் அதுவும் இரண்டாம் நாளே காலி.

எதிர் நீச்சல் திரைப்படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயனுக்கு அதற்கு முன் நாயகனாக நடித்து மூன்று சுமாரான படங்களே வந்திருந்தன. ஆனாலும் நல்ல ஓப்பனிங் இருந்தது, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் நல்ல ஓப்பனிங். இது ஏன் தனுஷுக்கு இப்போது சாத்தியம் ஆகவில்லை?

தனுஷின் காதல் கொண்டேன் வெற்றிக்குப் பின்னர் வெளியான திரைப்படம் திருடா திருடி. இயக்குநரும் புதுமுகம். திருச்சியிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்கம் கலையரங்கம். அங்கேயே முதல் நாள் காலை காட்சி ஹவுஸ்புல் ஆனது. அதன்பின்னர் தான் தனுஷுக்கென ஒரு மார்க்கெட் உருவானது. ஆனால் 10 ஆண்டுகள் கழித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின்னரும் அவருக்கு ஓப்பனிங் குறைந்து கொண்டே வருகிறது.

முதல் மூன்று நாள்களில் அதிக எண்ணிக்கையில் படம் பார்ப்பவர்கள் கல்லூரி மாணவர்கள் (கல்லூரி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்), வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலைக்குச் சென்று திருமணம் ஆகாமல் இருக்கும் வாலிபர்களே. சனி, ஞாயிறு மதியம், மாலைக் காட்சிகளுக்கு குடும்பத்தோடு வருபவர்கள் கூட்டம் இருக்கும்.

இதில் சிறுவர்களுக்கு தனுஷை அவ்வளவாக பிடிப்பதில்லை. விஜய், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரை பிடிக்கிறது. ஏன் சிம்புவைக்கூட சிலருக்கு பிடிக்கிறது. கல்லூரி மாணவிகள் மத்தியிலும் தனுஷ்க்கு கிரேஸ் இல்லை. தற்போதைய கல்லூரி மாணவர்களுக்கும் அவ்வளவாக தனுஷைப் பிடிக்க மாட்டேன் என்கிறது. வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்கள் மட்டுமே தனுஷ் படங்களை முதலில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களும் மாலை, இரவு காட்சிக்கு மட்டுமே வருகிறார்கள்.

இணையத்தில் தமிழில் புழங்குகிறவர்கள் மத்தியில் தனுஷ்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர்கள் மொத்த தமிழ் சமூகத்தில் மைனாரிட்டியே.


கே வி ஆனந்தின் அனேகன் வந்து தனுஷ்க்கு பரந்து பட்ட ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தால் நல்லது. ஏனென்றால் என்ன தான் நல்ல நடிகர் என்றாலும் தியேட்டருக்கு ஆள் வராவிட்டால் தயாரிப்பாளர் தயங்கத்தானே செய்வார்

October 26, 2013

தண்ணி மீனாட்சி


செக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. காரணம் 80களில் திண்டுக்கல்லில் நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சம். பொண்ணு கொடுத்தா தண்ணி தூக்க வச்சே கொன்னுபுடுவாங்கப்பேய் என்று சுற்று வட்டார மக்கள் எல்லாம் பேசிக்கொள்வார்கள். நல்ல தண்ணி என்று சொல்லப்படும் தண்ணீர் வாரத்துக்கொருமுறை நகராட்சி பொதுக் குழாயில் வரும். அதற்கு இப்போது மண்ணெண்ணெய்க்கு வரிசை போடுகிறார்களே கேன்களை, அது போல குடங்களை வரிசையாய் வைத்திருப்பார்கள். ஆளுக்கு நாலு குடத்துக்கு மேல் பிடிக்க விட மாட்டார்கள். சில சமயம் சண்டை வந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த பேச்சு வாங்கி  தண்ணி பிடிக்கிறதுக்கு பதிலா பூச்சி மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோடு போய்ச் சேர்ந்துடலாம் என்று நினைக்கும் அளவுக்கு வைது தீர்த்து விடுவார்கள்.


இப்போது போல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திராத காலம் அது. வீட்டுக்கொரு குழாய் போடவும் முடியாது. கனெக்‌ஷன் வாங்குவதும் லேசு பட்ட பாடில்லை. மோட்டார் பம்ப் வைத்து தண்ணீர் எடுப்பதெல்லாம் பெரும் லக்சுரியாக கருதப்பட்ட காலம். மேலும் போர் போடவும் இடம் வேண்டுமே. வரிசையாக இடைவெளி இல்லாமல் வீட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.


இந்த நாலு குடம் நல்ல தண்ணி, குடிக்கவும் சாம்பார் வைக்கவும் மட்டும்தான். மற்றதுக்கெல்லாம் உப்புத்தண்ணி எனப்படும் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான். நாலைந்து தெருவுக்கு பொதுவாக அப்படி ஒரு கிணறு அமைந்திருக்கும். வடுகமேட்டுராசா பட்டிக்கும் யாதவ மேட்டுராசா பட்டிக்கும் நடுவே அப்படி அமைந்த கிணறுதான் ராணி மங்கம்மா கிணறு. மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது தோண்டிய கிணறு என்று சொல்வார்கள். 20 ஆள் மட்டம் என்று ஆழத்தைச் சொல்வார்கள். அறுவதுக்கு நாப்பது என நல்ல அகலம் சகலமாக இருந்த கிணறு. பக்கத்துக்கு பத்து பேர் நின்று தண்ணீர் இறைக்கலாம்.
அந்த ஏரியாவில் இருந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே அந்தக் கிணற்றில் நீர் இறைத்திருப்பார்கள். ஆளுக்கு 10 நடை எடுத்தாத்தான் பொழப்பு ஓடும். இளந்தாரிகள் அருகாமையில் நல்ல தண்ணி கிடைக்கும் இடத்துக்கு சைக்கிளின் இரண்டு பக்கமும் குடங்களை வைத்து சைக்கிள் டியுபால் கட்டி நாலு நடை போய்வருவார்கள். தண்ணீர் எடுப்பதிலேயே தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் உண்டு. நதிக்கரை நாகரீகத்தால் கலைகள் செழித்து வளர்ந்தன என்பார்கள். திண்டுக்கல்லில் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நாகரீகம் தான் குறைந்தது.


இந்த விதிக்கும் மீறிய ஒரு வீடு அந்தப் பகுதியில் இருந்தது. அதுதான் லாரி செட்டுக்காரர் வீடு. பெயர் சுந்தரம். சுந்தரத்தின் வசதி அப்போது குறைவு என்றாலும் பழைய மெதப்பிலேயே இருப்பவர்.
அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. சமையல் மட்டும் எப்படியாவது தட்டித்தடுமாறி செய்து விடுவார். ஒரு மகன் அடுத்து இரண்டு மகள்கள். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.அதில் மூத்தவள் தான் தங்க மீனாட்சி.

இந்த மீனாட்சிதான் அந்த வீட்டில் தண்ணீர் எடுக்க நேர்ந்து விடப்பட்டவள். அவள் அண்ணனும் தங்கையும் ஒரு பாத்திரத்தைக் கூட நகட்டி வைக்க மாட்டார்கள். காலையில் 20 நடை பின் பள்ளிக்குப் போய் வந்து 20 நடை மீனாட்சிதான் மாங்கு மாங்கென்று தண்ணீர் எடுப்பாள். அந்தக்காலத்தில் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் பால்காரர்களுக்கு சைக்கிளை மிதித்து மிதித்து தொடை சிறுத்து, முழங்காலுக்கு கீழ்  பகுதி வலுவேறி காணப்படுமே, அதுபோல, தங்க மீனாட்சிக்கு தண்ணீர் இறைத்து இறைத்து கையெல்லாம் காய்ப்பு காய்த்திருக்கும். புஜங்கள் எல்லாம் வலுவேறி இருக்கும். பாவாடையின் மேல் அப்பா அல்லது அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு, பர பர வென்று நடந்து போவாள்.
நம் நாட்டில் தான் ஒரு பழக்கம் இருக்கிறதே. யாராவது ஒருவர் ஒரு வேலையை பங்கமின்றி செய்து விட்டால், அவர் தலையிலேயே அந்த வேலையை கட்டி விடுவது என்று, அதுபோல அவர்கள் வீட்டிலும் தண்ணி எடுக்க மீனாட்சி என்று ஆகிப்போனாள். பள்ளிக்கு போக, தண்ணி எடுக்க, வீட்டு வேலைகளையும் செய்ய என நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பாள். தலையை சீவக்கூட நேரமிருக்காது அவளுக்கு. உண்மையில் அந்தத் தெருவிலேயே அவள்தான் அழகி ஆனால் வேலைகளால் நைந்து நளினம் இழந்து போனவள் அவள்.


அவள் மீது அக்கறை கொண்ட சில தெருப்பெண்கள், அவளின் அம்மாவிடம் , அதான் ஓரளவு வசதியா இருக்கீங்கல்ல, தண்ணி எடுக்க ஒரு ஆளக்கூட போடலாமில்ல, சின்னவ மெழுமையா இருக்கா, பாவம் மீனாட்சி உருக்குலைஞ்சு போயிட்டா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

எங்க வீட்டுக்காரரப் பத்தித்தான் தெரியுமில்ல. வேத்தாளு உள்ள வரக்கூடாதும்பாரு. எங்க ஆளுகள்ள யாரு தண்ணியெடுக்க வருவா? முடியாட்டியும் நீதான் சமைக்கணும்னு என்னயவேற பாடாப் படுத்துறாரு என்று அவளாலும் புலம்பத்தான் முடிந்தது.

மீனாட்சியின் சோட்டுப் பெண்களும், என்னடி இப்படி இளிச்சவாச்சியா இருக்க? உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா? உங்கண்ணன் சைக்கிள்ல போயி பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நீ நாலு நாளைக்கு தண்ணி எடுக்காத என்றும் சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு இரண்டு நாள் தண்ணி எடுக்காமல் இருந்தாள் மீனாட்சி. ஆனால் அவளின் அண்ணனும் தங்கையும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மீனாட்சியின் அம்மா தண்ணி எடுக்க வந்து, கிணற்றில் வழுக்கி விழுந்தது தான் மிச்சமாயிற்று.
சில தெருப்பெண்கள், இந்த நிகழ்வுக்குப் பின், பொட்டச்சிக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுடி, வீட்டுக்கு தண்ணியெடுத்தா குறைஞ்சா போயிடுவ? என்றும் பேசினார்கள்.

மீண்டும் தண்ணிக்குடம் மீனாட்சியின் இடுப்பில் ஏறியது. காலம் ஓடியது. மீனாட்சியின் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. மீனாட்சியின் படிப்பு பிளஸ் 2 உடன் நிறுத்தப்பட்டது. சுந்தரத்தின் மிச்சமிருந்த சொத்துக்களும் கரையத் தொடங்கி இருந்தது. மீனாட்சியின் தங்கை அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தாள். பின் ஒருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். நான் மட்டும் மட்டமா என்ன, என்று மீனாட்சியின் அண்ணனும் ஒரு வேற்று சாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.

சுந்தரத்துக்கு, மகன் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்டது பெரும் வருத்தத்தை தந்தது. இவள்லாம் எனக்கு காரியம் செஞ்சு, அமாவாசை சாப்பாடு சாப்பிடணுமா என்று புலம்புவார். என்னமோ பெரிய மகராஜா போல.

தொடர் சோகங்களால் மீனாட்சியின் அம்மாவும் காலமானார். ஆனால் மீனாட்சி தண்ணீர் எடுப்பது மட்டும் நிற்கவில்லை. எழவுக்கு, காரியத்துக்கு கூட அவள்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது. அவள் சோட்டுப் பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போன பின்னர், அந்தக் கிணறுதான் அவளின் தோழியாகிப் போனது. இறைக்கும் போது கிணற்றுடன் பேசிக் கொண்டேயிருப்பாள்.

சுந்தரம் திவாலாகும் நாளும் வந்தது. இருந்த வீட்டை கடனுக்கு கொடுத்து விட்டு நாலுதெரு தள்ளி ஒரு லைன் வீட்டுக்கு குடி போனார்கள். தன் மெதப்பில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். ஒரு நடைப்பிணமாகத்தான் அவரின் செயல்பாடுகள் இருந்தது. மீனாட்சிக்கு இப்போது நாலு நடையோடு வேலை முடிய ஆரம்பித்து இருந்தது.

கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும். மீண்டும் மீனாட்சி தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள். இம்முறை பேய் மாதிரி. காலை முதல் மாலை வரை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். ராத்திரி ஆனால் பேய்த்தீனி தின்பாள். தண்ணீர் ஊற்றும் கடைகளில் இருந்து சாப்பாடை வாங்கி வந்து கிணற்றடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருளில் இது நடப்பதால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. பின் சில பெண்கள் விவரம் அறிந்து விசாரித்த போது காரணம் சொல்ல மறுத்தாள். தண்ணி எடுத்து ஊற்றுவதால் தண்ணி மீனாட்சி என்றே அவள் பெயர் அங்கே மாறிப்போனது.
சில மாதம் கழித்து, அவளின் நெருங்கிய தோழியை சந்தித்த  போது மட்டும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்தக் காலத்தில் லைன் வீடுகளில் வாடகைக்கு விடும்போது ஒரு சின்னக் குழந்தை இருப்பவர்களுக்கோ அல்லது புது மணத்தம்பதிகளுக்கோ தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி மீனாட்சியின் வீட்டுக்கு இரண்டு பக்கமும், புது மணத்தம்பதிகள். பொது சுவர் என்பதால் அவர்கள் சரசம் இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனை காலம் அடக்கி இருந்த உணர்ச்சிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கவும் அவளால் தாங்க முடியவில்லை. தூக்கம் தொலைந்திருந்தது. அதனால் பகல் முழுவதும் பேயாய் உழைத்து, ராத்திரியில் அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு தூங்கி விரகத்தை கட்டுப்படுத்த பழகிக் கொண்டாள்.


ஏண்டி, உன் தந்தையிடம் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லலாமிலே என்று தோழி கேட்டதற்கு, அப்பனிடம் எப்படி இதைக் கேட்க முடியும்? நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார். சொந்தம்னு இருக்கிற  அவரையும் விட்டுட்டு நான் என்ன செய்யுறது என்று விரக்தியுடன் பதிலளித்தாள்.

பின் ஒரு நாளில், ஹோட்டல்கள், வீடுகள் எல்லாம் மோட்டர் பம்ப்செட் புகுந்து, வேலை கிடைக்காத நேரத்தில், தன் தோழியாய் இருந்த ராணி மங்கம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போதும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வடுக மேட்டுராசா பட்டி போய் தண்ணி மீனாட்சி கிணறு என்று கேட்டால், யாராவது வழி காட்டுவார்கள்.