July 06, 2014

வத்தக்குழம்பான கறிக்குழம்பு

சென்ற வாரம், வழக்கமாக காய்கறி வாங்கும் கடையில் வாரத்தேவைக்கானவற்றை வாங்கிவிட்டு, கொசுறாக அவர்கள் கொடுக்கும் கருவேப்பிலை-கொத்தமல்லிக்காக பையை அகலமாகத் திறந்தபோது, அதில் கருவேப்பிலை மட்டும் விழுந்ததைப் பார்த்து, மல்லி? என கடைக்காரரிடம் கேட்டேன்.

கிலோ 200 ரூபாய். நாலு தழை பத்து ரூபாய் ஆகுது. அதான் போடலை என்றார். வேறுவழியில்லாமல் 10 ரூபாய் கொடுத்து மல்லி வாங்கும் போது, 25 வருடம் மனம் பின்னால் சென்றது. அப்போது ஆட்டுக்கறியின் விலை கிலோ 24 ரூபாய். 10 ரூபாய் கொண்டு சென்றால் கால்கிலோ கறி, ஒரு தேங்காய்,காய்கறிகள் என பை நிறைய வாங்கிக்கொண்டு வந்து விடலாம். ,அவ்வளவு ஏன்? பத்தாண்டுகள் முன்னர் கூட வெறும் 50 ரூபாய்க்கு பை நிறைய காய்கறி சென்னை வேளச்சேரியில் கிடைத்தது.

அதுக்கேத்தமாதிரி தான் சம்பளம் கூடியிருக்கே? எனச் சொல்லலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் எப்படி குறைவாக மதிப்பிட்டாலும் ஒரு 30% சதவிகிதம் பேர், இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த சதவிகிதம் கூட வாய்ப்பிருக்கிறது.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளுடன் கத்தரிக்காய், வாழைக்காய், முட்டை கோஸ் போன்ற பெரும்பாலோனோருக்கு பிடிக்காத காய்கறிகளை மட்டும் வாங்கினால் கூட மாதம் ஒன்றுக்கு ரூ 1000 முதல் 1200 வரை ஆகும். பட்டர்பீன்ஸ், சோயா பீன்ஸ், பச்சை பட்டாணி,காலிபிளவர் என வெரைட்டியாக வாங்கினால் 1500 வரை ஆகும்.
அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றால் வாரம் ஒருமுறை குறைந்தபட்சமாக கால் கிலோ வாங்கினாலும், மாதம் 500 ரூபாய் வந்துவிடும். இதில் பழங்கள் வாங்கி சாப்பிட்டால் காய்கறி பட்ஜெட் 4000த்தை தொட்டு விடும். (கால் கிலோ நாவல் பழம் – 50 ரூபாய், கால் கிலோ கொடுக்காப்புளி – 50 ரூபாய், வாழைப்பழம் ஒன்று 4 ரூபாய் விற்கிறது).

நாம் குறைந்த பட்சமாக சுமாரான காய்கறிகளுடன் இருக்கும் முதல் ஆப்சனையே எடுத்துக் கொள்ளலாம். 1000 ரூபாய் மாதம் ஒன்றிற்கு. இதன் பின்னர் மளிகை சாமான்கள் குறைந்தபட்சம் 1500 ரூபாய் ஆகும். பால் ஒரு நாளைக்கு அரை லிட்டர் வாங்கினால் கூட 500 ரூபாய். ஒண்டுக்குடித்தன வீட்டு வாடகை, மின் கட்டணம்,எரிபொருள், போக்குவரத்து, நல்லது கெட்டதுக்குப் போதல், பிள்ளைகளின் கல்விகட்டணம் முக்கியமாக உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் அந்த செலவு என எப்படியும் மாதம் 10,000 வந்துவிடும்.

இந்த 10,000 என்பது இருப்பதிலேயே மிகக் குறைந்த வாழ்க்கைத்தரம். அசைவம் உண்ணாமல், பழங்கள் ஏதும் சாப்பிடாமல், தியேட்டருக்குச் சென்று படம் பார்க்காமல், எதிர்காலத்திற்கான/ பிள்ளைகளின் கல்விக்கான/திருமணத்திற்கான  சேமிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சிறு/குறு தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், அரசு பணியாளர்கள், மருத்துவம்/பொறியியல்/தணிக்கை போன்ற தொழிற்படிப்பு முடித்து பணியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த விலையேற்றமானது பாதிக்காது. ஏனென்றால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இவர்களின் வருமானமும் கூடிவிடும்.

ஆனால் கலை-அறிவியல் கல்லூரிளில்/பள்ளிப்படிப்பு படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்போர், தனியார் பள்ளிகளில் வேலை பார்ப்போர், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சிறிய கடைகளில்/சர்வீஸ் செண்டர்களில் பணிபுரிவோர்களுடைய சம்பளம் என்பது பெரும்பாலும் நான்கு இலக்கங்கள் தான். ஐந்தாம் இலக்கம் பல ஆண்டுகளுக்குப் பின்னரே சாத்தியமாகிறது.

இவர்களுக்கு  திருமணமாகதவரை பிரச்சினை இல்லை. பெற்றோர்களிடம் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு ஜாலியாக இருந்து கொள்ளலாம். ஆனால் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் கஷ்ட ஜீவனம் தான். இதைச் சமாளிக்க தங்கள் வாழ்க்கைத்துணையையும் பணிக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. ஆனால் இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைப்பதில்லை. அதிகமான ஆட்கள் இம்மாதிரி  வேலைக்கு கிடைப்பதால் சொற்ப சம்பளமே வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு இருக்கும் இன்னொரு ஆப்சன் – மாலை வேளைகளில் வேறு தொழில் பார்ப்பது. ஆனால் இப்போதெல்லாம் பணியில் இருந்து வீட்டிற்குத் திரும்பவே ஏழு மணி ஆகிவிடுகிறது.  அதனால் இந்த வாய்ப்பும் பறிபோகிறது.

மின்கட்டணம், கல்வி கட்டணம், பஸ் டிக்கட், வீட்டு வாடகை இதையெல்லாம்  குறைக்க முடியாது என்ற நிலையில் இவர்கள் குறைத்துக்கொள்வது உணவுப் பொருட்களில்தான். .  

20கிலோ ரேசன் அரிசி விலையில்லாமல், ஐந்து கிலோ பச்சரிசி கிலோ 2 ரூபாய் விலையில், உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் போன்றவை ரேசன் கடைகளில் வாங்குவதின் மூலம் சிறிது தாக்குப்பிடிக்கிறார்கள்.

இந்தப் பொருட்களின் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களுடன் கலந்து உபயோகிக்கிறார்கள். உதாரணத்திற்கு ரேசனில் கிடைக்கும் துவரம்பருப்பில் சாம்பார் செய்தால் விழுவிழுவென சுவைகுன்றி இருக்கும். இதனுடன் வேறு துவரம்பருப்பு கொஞ்சம் சேர்த்து, தக்காளி கூடுதலாகச் சேர்த்தால் பரவாயில்லாத சுவை கிடைக்கும்.

முகூர்த்த நாட்களில் சாம்பாரில் போடும் காய்கறிகளின் விலையும் கூடுதலாகிவிடும். அந்நாட்களில் சுண்டவத்தல், மிதுக்க வத்தல், பாக்கெட் கருவாடு (5 ரூபாய்) போன்றவற்றைக் கொண்டு குழம்பு வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர், இரண்டாம் தரத்தில் இருக்கும் (நடைபாதையில் கூறுகட்டி விற்கப்படும்) காய்கறிகளை மட்டும் வாங்குகிறார்கள். அசைவம் பெரும்பாலும் மாதம் ஒருமுறை. அதுவும் பிராய்லர் கோழிதான்.

ரேசன் அரிசியில், உளுந்து மிகக்குறைவாகப் போட்டு  தயாரிக்கப்பட்டு தெருவில் விற்கப்படும் இட்லிமாவு இவர்களுக்கு ஆபத்பாந்தவன். ஒரு கப் 15 ரூபாய்க்கு வாங்கி பசியாறிக் கொள்வார்கள். பழங்கள் என்றால் வாழைப்பழம் அதிகபட்சம் கொய்யாப்பழம்.

இம்மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில்  பலவகையான நோய்களை கொண்டுவரவல்லது. பெற்றோர்களுக்குப் கூட பரவாயில்லை. குழந்தைகள் பாடுதான் பாவம். ஊட்டச்சத்து மிகக் குறைவாக உள்ள உணவை தொடர்ந்து உண்டு பின்னாட்களில் எதிர்ப்பு சக்தியில்லாமல் நடமாடுவார்கள்.

ஆனால் 25 வருடம் முன்னால் இப்படியில்லை. தனியாரில் சின்ன வேலை பார்த்தவர்கள் கூட ஆரோக்கியமாக சாப்பிடும்படியே விலைவாசி இருந்தது. சாதாரண தொழிலாளிகூட ஞாயிறு தோறும் ஆட்டுக்கறி வாங்கி குடும்பத்தோடு சாப்பிட்டு முக்கியமாக பழங்கள் ஏராளமாக சாப்பிடும் வகையில் சூழல் இருந்தது.

ஆனால் இன்று? தொழில் அதிபர்கள். அரசு ஊழியர்கள், தொழிற்படிப்பு படித்து பணியில் உள்ளோர் மட்டுமே ஆரோக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடும் நிலை உள்ளது. ஆடம்பரமான அல்ல ஒரளவு ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடவேண்டுமானால் மேற்கூறிய ஒன்றாக நீ மாறவேண்டும் என்ற நிலையில் தமிழகம் உள்ளது.

விலைவாசி உயர்வுக்கு அரசின் தவறான கொள்கைகள், மழையின்மை, வியாபார முறைகள் மாறியது என பல காரணம் சொல்லலாம். ஆனால் விவசாயி நிச்சயம் காரணமல்ல. இன்னும் சொல்லப் போனால் அவரும் அதிகம் பாதிக்கப்பட்டே இருக்கிறார். காய்கறிகளை விளைவித்து, ஆள் வைத்து அறுவடை செய்து, பேருந்தில் லக்கேஜ் கொடுத்து, கமிசன் கடை வரை தலையில் வைத்து/ வண்டியில்  கொண்டு வந்து கொடுத்து, ஏஜெண்ட் கமிசன் போக அவருக்கு கிடைக்கும் பணம் அவரின் மனித உழைப்புக்கான கூலியை விட குறைவாகவே இருக்கிறது. அவரும் கூட வெயிலுக்கு இளனி வாங்கி சாப்பிடமுடியாமல் டீ குடிக்கத்தான் முடிகிறது.


இனி தமிழகம் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் உகந்த மாநிலமாக இருக்கப் போவதில்லை.  அப்படி இருந்தால் தொழில் திறமை உடையவர்கள், புத்திசாலிகள், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரளவு சமாளிக்கலாம். இல்லையென்றால் முட்டை மட்டும் தான் அசைவம், வாழைப்பழம்மட்டும் தான் பழம், பிஸ்தா,முந்தரி பருப்பெல்லாம் நவரத்தினக் கற்கள், வத்தக்குழம்புதான் கறிக்குழம்பு என்று பழகிக்கொள்ள வேண்டியதுதான்.

June 25, 2014

பட்டாசு கிளப்பும் பாஸு பாஸு சாங்

படத்தில்/பாட்டில் ஏதாவது அறிவுரை/கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டால் போதும், வெறிநாய் ஒன்று துரத்தி வந்து, அந்த தியேட்டர் பக்கம் ஓடினால் மட்டுமே தப்பமுடியும் என்ற நிலை இருந்தால் கூட பரவாயில்லை, ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று திரும்பி நின்று நாயிடம் கடி வாங்கிக் கொள்ளும் மக்கள் அதிகரித்து விட்ட சூழல் இது.

முதலாளிகள்/அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடும் பொதுவுடைமை கருத்து கொண்ட கதாநாயகர்களே அதிகம் புழங்கி வந்த தமிழ் சினிமாவில், இப்போது முதலாளித்துவ சார்புடைய, ஏன்? பாசிச எண்ணமுடைய ஹீரோக்கள் பெருகிவிட்டதில் இருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.

எம்ஜியார் காலம் போல் ”தூங்காதே தம்பி தூங்காதே”  என்று கருத்துடன் பாடினாலோ, ”வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே” என மனிதன் ரஜினி போல பாடினாலோ அல்லது “ரத்த சாட்டை எடுத்தால்” என கண் சிவக்க சிவப்பு மல்லி விஜய்காந்த்தாக மாறினாலோ மக்கள் சேனல் மாற்றி விட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் அதையே மிக கலோக்கியலாக கொடுத்தால், ரசிப்பார்கள். கோழி கூவுது படத்தில் வரும் “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே” பாடல் ஒரு உதாரணம். ”நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சிண்ணேன்”, ”ஒன்னரையணா காய்கறியை ஒண்ணார் ரூபா ஆக்கிப் புட்டாங்க”, என்ற வரிகள் இன்னும் நம்மை முணுமுணுக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

சத்யராஜ் கூட தன்னுடைய சில படங்களில் இப்படி கொடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார். தெற்கு தெரு மச்சான் படத்தில் லொக்கு லொக்கு இருமலு என புகைப் பழக்கத்தை விடச் சொல்லி பாடினார். டைட்டில் பாடலாக இருந்தும் அந்த பாட்டுக்கு மக்கள் தம்மடிக்கச் சென்றுவிட்டார்கள்.

எனவே சில காலம் அதை யாரும் முயற்சி செய்து பார்க்கவில்லை. ரஜினிகாந்த் மட்டும் தன் இண்ட்ரோ பாடல்களில் சில கருத்துக்களை புகுத்தி பாடினார். அவர் ரேஞ்சுக்கு அதை ஒப்புக் கொண்டார்கள்.

கதையின் அவசியம் கருதியோ, கதாபாத்திரத்தின் குணநலனை விளக்கவோ சில சமயம் பாடலில் கருத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. அதை சேதாரமில்லாமல் சொல்ல ஒரே வழி, அப்போதைய கேட்சியான பேச்சுத்தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி பாடல் எழுதுவதே.
அப்படி தற்போது வந்திருக்கும் பாடல், கேபிள் சங்கர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ”தொட்டால் தொடரும்” படத்தில் இடம்பெற்றுள்ள கார்க்கி, கேபிள் சங்கர் இணைந்து எழுதியுள்ள ”யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு” பாடல்.

வேகமாக செல்லும் நகர வாழ்க்கையில் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாத மனநிலையையும், சந்திக்கும் அவதிகளையும், அபத்தங்களையும், ஆனாலும் அவற்றை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தையும் கேட்சியான வார்த்தைகளால் சொல்லி செல்கிறது இந்த பாடல்.

இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு உடனே பிடிக்கும் பாட்டே ஹிட்டாகிறது. அந்த வகையில் இந்தப் பாடல் தற்காலத்திய சிறுவர்களை கவரும் ரிதத்தில் இருப்பது  பிளஸ்.


பாடல் அடைந்த வெற்றி போலவே படமும் வெற்றி அடைய படக்குழுவினரை வாழ்த்துகிறேன். 

June 09, 2014

திராவிட டெக்னீசியன்கள்

பல வருடங்கள் முன்பு, நான்  கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரசித்த பெற்ற ஒரு பம்ப் கம்பெனியின் சென்னைக் கிளையில் சர்வீஸ் எஞ்சினியராக நட்டையும் போல்ட்டையும் ராவிக் கொண்டிருந்தேன். சர்வீஸ் சம்பந்தமான ஒரு தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறையை கோவை தலைமை நடத்தியபோது, என் சீனியரும் நானும் அதில் கலந்து கொண்டோம். காலையில் சம்பிரதாய துவக்க நிகழ்ச்சி முடிந்ததும், சர்வீஸ் ஹெட் டையை இறுக்கிக் கொண்டு எழுந்தார். திரையில் பவர் பாயிண்ட்.

நிமிர்ந்து உட்கார்ந்த என் தோளில் தட்டிய சீனியர். ”டேய், இவரு நம்ம மேனுவல்ல இருக்கறத பாலிஷா சொல்லுவார் அவ்ளோதான்.. மதியம் இண்ட்ராக்சந்தான் மெயினு. இப்பயே கவனிச்சு டயர்ட் ஆகிடாத” என்றார்.   
மீறிக் கவனித்த என்னை, பயணக்களைப்பும்,நெய் வழிந்த கேசரியும், மிளகை விட முந்தரி அதிகம் இருந்த பொங்கலும், ஜோயல் கார்னர் கையளவு இருந்த உளுந்த வடையும் தூங்க வைத்துவிட்டன.
மதிய உணவு இடைவேளை. பஞ்சாப் சிங்கங்கள் சப்பாத்தி தட்டையும், டால் குண்டானையும், வெஜ் பிரியாணி தேக்சாவையும் ஓவர் டைம் பார்க்க வைத்துக் கொண்டிருந்தார்கள். காலை சாப்பிட்ட பொங்கல் கழுத்து வரை இருந்ததால், பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை நாசூக்காய் சாப்பிடுவது போல சாப்பிட்டுவிட்டு மதிய செசனுக்கு உள்ளே நுழைந்தேன்.

சிலர் எழுந்து, சந்தேகங்கள் கேட்டார்கள், ஒரு கிரிட்டிகலான பிரச்சினையைப் பற்றி ஒருவர் கேட்டார். நாங்களும் அந்தப் பிரச்சினையை சந்தித்து இருக்கிறோம். அந்தப் பிரச்சினை வந்தாலே, நாங்கள் ரீபிளேஸ்மெண்ட் கொடுத்து விடுவோம்.  அப்போதுதான் ஒரு சிங் எந்தரித்தார். தன் வயதளவு சப்பாத்திகளையும், கர்நாடகா பஞ்ச காலத்தில் காவிரியில் திறந்துவிடும் நீர் அளவுக்கு டாலையும் கலந்து வெளுத்திருந்த அவர், சற்று உறுமிவிட்டு, அந்தப் பழுதை எப்படி நீக்கலாம்? என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தார். சபையே மௌனமாகிவிட்டது. எல்லோரும் அதைக் குறித்துக் கொள்ள துவங்கினோம். அடுத்தடுத்த சந்தேகங்களுக்கும், அந்த சிங் மட்டுமல்லாது, பல சிங்குகள் பதில் கொடுத்தார்கள். இனி எந்தப் பழுது வந்தாலும் ஒண்டியா சமாளித்து விடலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தது அவர்களின் விளக்கம்.

பின்னர் சென்னை திரும்பும் போது, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்ல, குர்கான், புனே போன்ற நகரங்களில் இருக்கும் டெக்னீசியன்கள் எல்லாம் நல்ல திறமைசாலிகள் என்பதை அறிந்து கொண்டேன். வெளிநாட்டு இறக்குமதி மெஷின்களில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டு, உதிரிபாகம் கிடைக்கவில்லை என்றால், இவர்களிடம் அந்த பழுதான பாகத்தைக் கொடுத்தால் போதும்,  எப்படியாவது அதை தயாரித்துக் கொடுத்துவிடுவதில் இவர்கள் வல்லவர்கள். மேலும் மார்க்கட்டிற்கு வரும் எந்த இயந்திரத்தையும் ஒரிஜினல் போலவே தயாரிப்பதிலும் வல்லவர்கள்.

ஓராண்டுக்கு பின்னர், நான் கோவை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கே எங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பவர்களை ஒருங்கிணைக்கும் வேலை. அப்போது, எங்கள் காஸ்டிங்குகளை மெஷினிங் செய்யும் ஒரு லேத் பட்டறைக்கு போயிருந்தேன். அந்த டெக்னீசியன் ஒவ்வொரு கேஸ்டிங்காக எடுத்து மெஷினிங் செய்து கொண்டிருந்தார். திடீரென ஒரு பீஸை எடுத்து தனியே வைத்தார். நான் ஏன்? எனக் கேட்க, இதுல டிபக்ட் இருக்கு என்றார். பின் அதை எடுத்துக் கொண்டுபோய் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் உள்ளே காற்றுக் குமிழால் சிறு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது, தெரிய வந்தது. மிஞ்சிப் போனால் ஒரு 20 கிராம் எடை மாறுபாடு இருக்கும். அதை சாதாரணமாக கையில் எடுத்துப் பார்த்தே கணித்து விட்டாரே என ஆச்சரியம்.

அவரிடம் கேட்டபோது, அதான் ஆயிரக் கணக்கில பண்ணுறோம்ல, எடுக்கும்போதே தெரிஞ்சிடும் என்றார். அதன்பின்னர் நம் மாநில டெக்னீசியன்கள் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. கோவைப் பகுதியில் பட்டறை வைத்திருப்பவர்கள், கொடுத்த வேலையை மட்டும் செய்ய மாட்டார்கள். அதன் தரத்தை எப்படி மேம்படுத்தலாம், எப்படி உற்பத்தி செலவைக் குறைக்கலாம் என டிசைனர்களுக்கு ஐடியா கொடுக்கும் அளவுக்கு தெளிவானவர்கள்.

அதன்பின் ஆராய்ச்சிப்படிப்பிற்காக மீண்டும் சென்னைக்கு திரும்பினேன். விடுதி பக்கத்து அறையில், சீனியர் ஒருவர் எஞ்சின் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்தார். தியரிட்டிக்கலாக அவர் ஒரு  சமன்பாட்டை தருவித்திருந்தார். அதை நிரூபிக்கும் மாடலுக்கு அதிக வெப்பம் தாங்கக்கூடிய ஒரு நாஸில் தேவைப்பட்டது. ஆறுமாதமாக அலைந்தும் அந்த ஸ்பெசிபிகேசனில் எங்கும் நாஸில் கிடைக்கவில்லை. அவர் சமன்பாட்டில் உபயோகித்திருந்த டிசைன் சிக்கலானது. அவர் குறிப்பிட்டிருந்த உலோகமும் மிகக் கடினமான ஒன்று. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் ஆகி, ஸ்டைபண்ட் இல்லாமல் கஷ்டத்தில் இருந்தார். மாடல் செய்து, அதில் ரீடிங் எடுத்தால்தான் அவர் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்து படிப்பை முடிக்கமுடியும்.

ஒருநாள், அவர் இதைப்பற்றி புலம்பிக்கொண்டு இருந்தபோது, இன்னொரு நண்பர் வந்தார். நாளைக்கு திருப்போருர் போவோம் ஒரு வழி கிடைக்கும் என்றார். நான் அவரிடம், “என்ன பாஸ், முருகன் கிட்ட சரணா? என்றேன். அவர் சிரித்தவாறே, நாளைக்கு நீயும் வா என்றார்.

அடுத்த நாள் திருப்போரூர். நாலைந்து லேத் ஷாப்புகள் வரிசையாக இருந்தன. ட்ராயிங்கைக் காட்டி, மெட்டீரியலையும் சொன்னதும், ஒருவர் செய்து தர ஒப்புக்கொண்டார். கஷ்டமான ஜாப்புங்க, அஞ்சாறு டூல்பிட்டு காலியாயிடும். மெட்டீரியலும் வேஸ்டாகும், டைமும் ஆகும், சுகுறா பண்ணித்தந்துடுறேன், பீஸ் ரேட்ட விட கூட குடுத்துறங்க என்றார்.
நான்கே நாளில் செய்து கொடுத்தார். ரீடிங் எடுத்து ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார் சீனியர். வைவா முடிந்ததும், அந்த டெக்னீசியனுக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்தார்.   

 அதற்கடுத்த ஆண்டில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடைபெற்ற  தேசிய அளவிலான கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். என் ஆராய்ச்சி வழிகாட்டி, அங்குள்ள ஒரு பேராசிரியரிடம், உள்ள இம்பாக்ட் மெஷினில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டு வருமாறு சொல்லியிருந்தார். அவர் அறைமுன் தேவுடு காத்து, சந்தித்தபோது, இப்போது அந்த மெஷின் உபயோகத்தில் இல்லை என்று அல்சர் வந்த வயிற்றில், மீந்து போன பாமாயிலில் சுட்ட பஜ்ஜியைப் போட்டார்.

என்ன காரணம்? எனக் கேட்ட போது, சில அட்டாச்மெண்டுகள் பழுதாகி விட்டன. இங்கே அதை சரி செய்ய நல்ல டெக்னீசியன்கள் இல்லை. சென்னையில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளதால், போட்டி போட்டு பல சப் காண்டிராக்டர்களும், டெக்னீசியன்களும் உருவாகிவிட்டனர். ஆனால் இங்கே பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்கள். தனியார் கனரக தொழிற்சாலைகள் சமீபத்தில் உருவாகவில்லை. மென்பொருள் நிறுவனங்கள்தான் அதிகம் வந்தது. எனவே டென்கீசியன்களின் ஸ்கில் லெவல் குறைந்து விட்டது. அரசு பணிகள் செய்வதால் இங்கே ஆட்கள் மந்தமாகிவிட்டார்கள் என்றார்.

கேரள டெக்னீசியன்கள் வேறுவகை. அவர்கள் தெளிவாக வேலை பார்ப்பார்கள். ஆனால் குறைவாகப் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் வீடு கட்ட வேலைக்கு வரும் பணியாட்கள் வந்த உடனேயே வேலையை ஆரம்பித்து விடுவார்கள். வேலை நேரம் முடிந்த பின்னால் தான் தங்களையும், தங்கள் கருவிகளையும் சுத்தம் செய்வார்கள். ஆனால் கேரள பணியாளர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு பீடியைப் பற்றவைத்து ரிலாக்ஸ் செய்து கொள்வார்கள். பின்னர் வேலை நேரம் முடிவதற்கு அரைமணி நேரம் முன்னரே தங்கள் கருவிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து டாண் என கிளம்பிவிடுவார்கள். இதனால் தான் அங்கே தனியார் தொழிற்சாலைகள் குறைவு. மத்திய அரசு தொழிற்சாலைகள் மட்டும் சில உள்ளன. கம்யூனிஸ தாக்கம் உள்ளதால் அவர்கள் நாம வேலை பார்த்து, இவன் சம்பாதிக்கணுமா என என்ணுவார்கள். எனவே திறமை இருந்தாலும், அவர்களை நம்பி வேலை கொடுக்க முடியாது.

இதேபோல் ஆந்திராவில் உள்ள சில டெக்னீசியன்களையும் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் யாவரும் தமிழக டெக்னீசியன்களின் திறமைக்கு அருகில் வர மாட்டார்கள். பதிவர் பலாபட்டறை ஷங்கர், திரைப்பட வசனகர்த்தா கார்க்கி ஆகியோர் ஆந்திராவில் உள்ள டெக்னீசியன்களிடம் பழகியவர்கள். அவர்களிடம் நான் இதைப்பற்றி கேட்டபோது, அவர்களும் இதே கருத்தைக் கூறினார்கள்.
ஆந்திராவில் நிலபிரபுத்துவம் இன்னும் உள்ளது. அவர்கள் தொழிலாளிகள் மேலே வருவதை விரும்புவதேயில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள தூரம் குறைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவே என்னதான் உழைத்தாலும், திறமையை வளர்த்துக் கொண்டாலும் வாழ்க்கைத்தரம் உயராது, என்ற நிலையில் அவர்களின் வேலைத்தரம் குறைந்துவிடுகிறது.

நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது, படிப்பு முடித்திருந்த எங்கள் சீனியர்கள் எல்லாம், என்ன படிச்சாலும் வேலை கிடைக்காது, வேஸ்டுடா என்பார்கள். அது எங்களை மனதளவில் சோர்வடையச் செய்து பல நாட்கள் படிக்க விடாமல் செய்திருக்கிறது. ஆனால் சிலவருடம் முன்பு, ஏராளமான கேம்பஸ் இண்டர்வியூக்கள் எங்கள் கல்லூரியில். அது ஜூனியர் மாணவர்களை இன்னும் அதிகம் படிக்கத் தூண்டியது.

இதேதான் தமிழ்நாட்டிலும். இங்கே ஒரு தொழிலை சிறப்பாக, மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செய்தால் நிச்சயம் முன்னேறிவிடலாம் என்ற சூழல் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது. ஒரு லேத், ஒரு ட்ரில்லிங் மெஷின், ஒரு ஆர்க் வெல்டிங் யூனிட் இருந்தாப் போதும், ஜாப் ஆர்டர் எடுத்து மார்க்கட்டுல நின்னுடலாம் என்ற நினைப்பே, டெக்னீசியன்களை மோட்டிவேட் செய்கிறது. கற்றுக்கொள்ள வைக்கிறது.

சமீபத்தில் ஒரு பெரிய காம்போசிட் பாகத்தை மெஷினிங் செய்ய வேண்டி இருந்தது. சென்னை ஈக்காடு தாங்கலில் உள்ள பட்டறைகளில் முயற்சிக்கலாம் என்று அங்கே சென்றிருந்தேன்.  பெரிய லேத் இருந்த ஒரு பட்டறையில் கேட்டபோது, ”நீங்க சொல்லுற அளவில நம்மகிட்ட சக் இல்லையே” என்றபடி சிலரிடம் போனில் பேசினார். பின்னர், வாங்க சார் என்று அழைத்து தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பட்டறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் கேட்ட அளவில் சக்கும் லேத் பெட்டும் இருந்தது. அந்த ஒரு மெசின் தான் மொத்தமே அங்கு இருந்தது. அடுத்த நாள் வேலையை ஆரம்பித்த போது, மெசினிஸ்டிடம் பேச்சுக் கொடுத்தேன்.

என்னங்க அவர், இவ்ளோ ஹெல்ப் பண்ணுறாரு எனக் கேட்டேன். உடனே அவர், எங்ககிட்ட இல்லாதத கேட்டு பார்ட்டி வந்தா நாங்களும் சொல்லி அனுப்புவோம். அதில்லாம அடுத்த வாட்டி ஏதும் ஜாப்புன்னா நம்பி அவராண்ட போவிங்கல்ல” அதான். என்றார்.

பன்னாட்டு கார் கம்பெனிகள் எல்லாம், துறைமுகத்தையும் உள்கட்டுமானத்தையும் மட்டும் நம்பி இங்கே வரவில்லை. முன்னேற வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட ஆயிரக்கணக்கான சப் காண்டிராக்டர்களை நம்பியும் தான்.  அவர்களுக்கு, உழைத்தால் முன்னேறிவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு சூழல் அமைத்துக் கொடுத்த திராவிட அரசியலுக்கு நன்றி.


இந்தப் பதிவு எழுத தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பலாபட்டறை ஷங்கர் மற்றும் கார்க்கிக்கு நன்றிகள்.