October 23, 2014

ஆனந்த்பாபு

குறைந்தபட்ச தகுதிகளோடு இருக்கும் ஒரு தொழிலதிபரின் வாரிசு மிக எளிதாக அந்த நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்துவிடலாம். ஆனால் அந்த நிறுவனம் சரியாமல் காக்கவும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் கடின உழைப்பு தேவை. நாள் தோறும் மாறும் வணிக நிலவரங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசியல்வாதியின் வாரிசிற்கும் அரசியலில் நுழைவது எளிது, அதன்பின்னர் அவரது நடவடிக்கைகளே அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதைப் போலவே திரைத்துறையிலும் வாரிசுகளுக்கு அறிமுகம் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் அவர்களின் திறமையை வைத்தே அதை தக்க வைக்க வேண்டும்.
ஒரு தொழில் அதிபரின் மகனை தொழில் அதிபராக ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசியல்வாதியின் வாரிசையும், குறைந்த பட்ச தகுதிகள் இருந்தாலே ஒப்புக் கொள்கிறார்கள். ”ராஜாவின் மகன் ராஜா” என்ற மனப்பாவம் நம்மிடம் இருந்து மறைய நாளாகும். ஆனால் கலைஞனின் மகன் கலைஞன் அல்ல, தன்னை நிரூபித்தாலொழிய.

1930களில் இருந்து படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் 50களில் இருந்துதான் அதிகமாக படங்கள் வெளியாகின. இந்த 50களில் சினிமாவில் இருந்தவர்களின் வாரிசுகள் பலரும் பல்வேறு காலகட்டங்களில் அறிமுகமானார்கள். இந்த போக்கு இன்றுவரை நீடித்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 80களில் இருந்துதான் இது அதிகரித்தது. 1960 மற்றும் 70களில் தமிழகத்தை தன் நகைச்சுவை நடிப்பால் மகிழ்வித்த நாகேஷ், 80கள் தொடங்கிய உடன் தன் இடத்தை இழந்தார். பிரதான காமெடியன் வேடம் மிகச் சில படங்களில் மட்டுமே கிடைத்தது. குணசித்திர வேடங்கள் மட்டுமே அவருக்கு நிறைய கிடைத்தது. இந்த காலத்தில் தான் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு 1983ல் தங்கைக்கோர் கீதம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த வாரிசுகளில் கூட கதாநாயகனின் மகன், இயக்குநரின் மகன், தயாரிப்பாளரின் மகன் என்றால் அவனை சற்று நாயக கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் நகைச்சுவை நடிகரின் மகன் என்றால் தமிழர்களின் மனது, அவனை முழு நாயகனாக ஒப்புக்கொள்வதில்லை.

நம்மால்  முடியாததை நம் வாரிசாவது செய்யட்டும் என்பது பெற்றோர்களின் ஆசை. டாக்டருக்குப் படி, ஐ ஏ எஸ் ஆகு என அப்படி ஆக முடியாத தகப்பன்கள் தன் மகனிடம் சொல்வார்கள். தன் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் மிக கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட பெண்கள், தங்கள் மகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். எந்த நடிகனுக்கும் ராஜபார்ட் போட வேண்டுமென்பதுதான் கனவாக இருக்கும். அதனால்தான் எல்லோரும் தங்கள் வாரிசுகளை நாயகனாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஆனந்த்பாபு, அவர் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ்சினிமாவிற்கு ஏற்ற மெட்டீரியல்தான். அப்போதைய நாயகர்களில் கமல் மட்டும்தான் நன்கு நடனம் ஆடுபவர். மற்றவர்கள் நடனம் ஆடுவதைப் போல் பாவனை செய்து வந்தார்கள். ஆனந்த்பாபு, தன்னுடைய தந்தை நாகேஷின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான மேற்கத்திய தாக்கம் உடைய ஒரு நடன அசைவை கற்று வைத்திருந்தார்.

அந்த நடனமே அவரது உடனடி அடையாளமாக அவர் மீது ஒரு கவனக் குவிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆரம்பகால கட்டங்களில் அவரை அரவணைத்தது டி ராஜேந்தர் மற்றும் இராம நாராயணன். டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதமில் ”தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது” என்ற துள்ளலிசைப் பாடல் மற்றும் நடனத்தின் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனந்த்பாபு நாயகனாக நடித்த “நியாயம் கேட்கிறேன்”  சுமாராகவே ஓடியது. இராம நாராயணன் ஜெய்சங்கர்,ஸ்ரீபிரியா, ஆனந்த்பாபு, அர்ஜூனை வைத்து இயக்கிய ”கடமை” பி மர்றும் சி செண்டர்களில் நன்கு ஓடி, ஆனந்த்பாபுவுக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது.

1982ல் இந்தியில் பப்பிலஹரி இசையில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்த டிஸ்கோ டான்சர் படத்தை “பாடும் வானம்பாடி” என தமிழில் ஆனந்த்பாபுவை வைத்து 1985ல் ரீமேக் ஆனது. படம் தமிழ்நாடு முழுவதும் நன்கு ஓடியது. சில செண்டர்களில் 100 நாட்கள் என்ற மைல்கல்லையும் தொட்டது. ரங்கராஜன் இயக்கத்தில் மோகன், ரேவதி, ஆனந்த்பாபு நடித்த “உதயகீதம்” படமும் தமிழகம் முழுவதும் ஆனந்த்பாபு ரீச்சாக உதவியது.

அதன்பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், ராமநாராயணின் இளமை, சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்த பந்தம், கார்த்திக் உடன் நடித்த அர்த்தமுள்ள ஆசைகள், சுரேஷுடன் நடித்த மௌனம் கலைகிறது என எல்லாமே தோல்விப்படங்கள். இதனுடன் அவரை மக்கள் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். வெற்றி இருக்கும் இடத்தில்  இல்லாவிட்டால் யாருக்கும் வரும் நிலைமைதான். ஆனந்த்பாபுவின் இந்த கால கட்டத்தில் அவருடன் இணைந்து நடித்தவர்கள் எல்லாமே ஆரம்ப நிலையினர் அல்லது தங்கள் பொற்காலத்தில் இல்லாதவர்கள். தனியாக ஒரு படத்தை தன் நடிப்பால் தாங்கும் அளவுக்கு அவர் அப்போது வளர்ந்திருக்கவில்லை. பெரிய இயக்குநர்களும் அவருக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆர் பி சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸால் நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் வாழ்வு பெற்றார்கள். அவர்களில் ஆனந்த்பாபு முக்கியமானவர். சூப்பர்குட்டின் முதல் தயாரிப்பான விக்ரமனின் புது வசந்தம் ஆனந்த்பாபுவுக்கும் ஒரு வசந்தத்தை கொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையில் இருந்து காணாமல் போயிருந்த ஆனந்த்பாபு இந்த படத்தின் மூலம் மறு அறிமுகமே ஆனார். தொடர்ந்து கே எஸ் ரவிகுமாரின் புரியாத புதிரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  பாலசந்தரின் உதவி இயக்குநராகவே பல ஆண்டுகள் இருந்து பெரும் திறமை கொண்டிருந்த, கமல்ஹாசனின் ஆசான்களில் ஒருவராக இருந்த அனந்து முதன் முதலாக இயக்கிய “சிகரம்” படத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஆனந்த்பாபுவின் கேரக்டர் என்றே சொல்லலாம். இதன் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு பெரிய பிரேக் தந்த “சேரன் பாண்டியன்” படத்தில் நாயகன் மாதிரியான வாய்ப்பு.  அடுத்த ஆண்டு கே பாலசந்தர் இயக்கித்தில் வெளிவந்த  ”வானமே எல்லை”யில் நாயகர்களில் ஒருவராக வாய்ப்பு.  தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த அஷ்ரப் இயக்கிய ”எம்ஜியார் நகரில்” கே எஸ் ரவிகுமாரின் “புத்தம் புது பயணம்”, விக்ரமனின் “நான் பேச நினைப்பதெல்லாம்” என ஓரளவு ஓடிய படங்களில் எல்லாம்  அவர் நாயகனாகவே, நாயகர்களில் ஒருவராகவோ இருந்தார். இதன் மூலம் லோ பட்ஜெட் படங்களின் நாயகனாக அவருக்கு ஒரு முகம் கிடைத்தது.

அடுத்து வந்த ஆண்டுகளில் சூரியன் சந்திரன், மணி-ரத்னம், பட்டுக்கோட்டை பெரியப்பா, வாட்ச்மேன் வடிவேலு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவை எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் பலத்த சரிவு. இக்காலகட்டத்தில் சில தெலுங்குப் படங்களில் நடித்தார். பின் தமிழுக்கு திரும்பிவந்து 1998ல் செந்தமிழன் இயக்கத்தில் ரஞ்சித், வடிவேலு உடன் இணைந்து “சேரன் சோழன் பாண்டியன்” படத்தில் நடித்தார். இவரது சமகால நாயகனான மோகனின் மறு பிரவேசமான “அன்புள்ள காதலுக்கு” படத்திலும் ஒரு கேரக்டர் செய்தார். அத்துடன் தமிழகமும் இவரை மறந்து போனது.
கே எஸ் ரவிகுமாருக்கும் இவருக்கும் பூர்வ ஜென்ம பந்தமோ என்னவோ பத்தாண்டுகள் கழித்து “ஆதவன்” படத்தில் இவருக்கு ஒரு வேடம் கொடுத்தார்.

ஆனந்த்பாபு நாகேஷின் மகன் என்பதற்காக அறிமுகத்தை தவிர வேறு எந்த சலுகையும் யாரிடமும் பெறவில்லை என்பதே உண்மை. எல்லோரும் அவர் அவர்களின் தேவைக்கேற்ப வாய்ப்பைக் கொடுத்தார்கள். அது அவர்களின் தவறும் அல்ல. 1980களில் தங்கள் படங்களில் நடனம் ஆடும் ஒரு ரோலுக்கு ஏற்ற நடிகராக அவருக்கு வாய்ப்பளித்தார்கள். 1990களில் சில நாயகர்கள் சேர்ந்து நடித்த படங்களுக்கு, நடிப்பில் மிகவும் சொதப்பாத, மக்களுக்கும் அறிமுகமான நடிகர் வேண்டுமன்பதற்காக அவரை தேர்ந்தெடுத்தார்கள். விக்ரமன் “பெரும்புள்ளி” படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்தில் நாயகன் வாய்ப்பையே கொடுத்தார்.

கே எஸ் ரவிகுமாரைத் தவிர வேறு யாரும் தாங்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆனந்த்பாபுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 80களின் பிற்பகுதியில் முன்வரிசை கதாநாயகர்களாக விளங்கியவர்கள், இயக்குநர்கள் எல்லோருமே நாகேஷிடம் பெரு மதிப்பு கொண்டிருந்தவர்கள். இவ்வளவு ஏன்? எண்ணற்றவர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுத்து தூக்கிவிட்ட  கே பாலசந்தர், தன் உற்ற துணையாக விளங்கிய நாகேஷின் மகனுக்கு பிற்காலத்தில் தான் வாய்ப்பு கொடுத்தார், அதுவும் அவருக்கு தேவைப்பட்டதாலேயே.

அது அவர் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு. ஆனால் ஆரம்ப காலத்திலேயே  ஒரு நூறு நாள் படம் கொடுத்தும் சுதாரிக்காமல் போனது யார் குற்றம்? ஆனந்த்பாபுவுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகும் அளவுக்கு ஆகிருதியான உடல்வாகு இல்லை. கனவுக் கண்ணனாக ஆகும் அளவுக்கு கவர்ச்சியான தோற்றம் இல்லை. உயரமும் சற்றுக் குறைவு. ஆனால் அவரிடம் நடனம் ஆடும் திறமையும், ஓரளவுக்கு உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரும் நடிப்புத்திறமையும் இருந்தது. அதைக் கொண்டு  மோகன் போல சில ஆண்டுகள் நாயகனாக கோலோச்சியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு துணை கதாபாத்திரமாகத்தான் மக்கள் மனதில் பதிய முடிந்தது.

உவமைக் கவிஞர் சுரதா ஒரு கவியரங்கிற்கு தலைமை வகித்திருந்த போது, பங்கேற்ற ஒரு கவிஞர் ஒரே  வரியை திரும்ப திரும்ப வாசித்தாராம். அப்போது சுரதா தன் அருகில் இருந்தவரிடம், இவன் ஏன் ஒற்றைப் பல்லை வைத்தே சிரிக்கிறான் என்றாராம். ஆனந்த்பாபுவும் அது போலத்தான். தன்னுடைய நடனத்தில் சில ஸ்டெப்புகளை மட்டுமே தொடர்ந்து ஆடிவந்தார். நான்கைந்து படங்களிலேயே அது சலித்துவிட்டது. ஒரு இடைவெளிக்குப் பின் புதுவசந்தத்தில் ஆடியபோது மீண்டும் ரசிக்கப்பட்டது. பின்னர் அதுவும் அலுத்தது.

சினிமா துறை என்பது, அரசாங்க அலுவலக வேலை அல்ல. பணியில் சேரும்போது இருக்கும் திறமை போதுமானது. மேலும் வளர்த்துக் கொள்ள தேவையில்லை, சீனியாரிட்டி அடிப்படையில் பிரமோஷன் கிடைக்கும் என்பதைப் போல. தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கவேண்டும். இப்போது அரசு அலுவலகங்களில் கூட தன்னை வளர்த்துக் கொள்ளாதவர்கள் பின் தங்க நேரிடுகிறது. இந்நிலையில் ஆனந்த்பாபு தன் திறமையை வளர்க்க தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். மேலும் அவருடைய தனிப்பட்ட வாழ்வும் சிறப்பாக இல்லை. ஒரு துறையில் ஈடுபடுபவர் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டுமெனில் தனிப்பட்ட வாழ்வின் தவறுகள், சோகங்கள் வேலையில் இருக்கும் போது தலைகாட்டக் கூடாது.  ஆனந்த்பாபுவின் சில தனிப்பட்ட பழக்கங்கள் அவருடைய முன்னேற்றத்துக்கு தடையாய் இருந்தது.


தற்போது, ஆனந்த்பாபுவின் மகன் கஜேஷ் நாயகனாக “கல்கண்டு” என்னும் படத்தில் அறிமுகமாகிறார். நகைச்சுவை நாயகனின் மகனைத்தான் ஏற்றுக்கொள்ள மக்கள் யோசிப்பார்கள். பாலையா முதல் சிங்கமுத்து வரை அதற்கு உதாரணங்கள் உண்டு. கஜேஷ் நாயகனின் மகனாகத்தான் அறிமுகமாகிறார். அவருடைய தந்தை போல் இல்லாமல் தாத்தா போல் அழியாப்புகழ் பெற வாழ்த்துக்கள்.

October 06, 2014

படையப்பா

படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது.

அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், குமுதம் அரசு பதிலில், அவர் எதையோ (கோட்டை) பிடிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க, அவர் எதைப் பிடிக்கிறார் பாருங்கள் என்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. எப்போது படம் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் அவர்களுக்கு.. 96ல் வெளியான முத்து மெகா ஹிட். ஆனால் அடுத்த படமான அருணாசலம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாங்கள் அப்போது அருப்புக்கோட்டையில் இருந்தோம். எங்கள் தெரு ஒரு ரஜினி கோட்டை. அதிலும் என் உயிர் நண்பன் ரமேஷ் பாபு ரஜினியை தெய்வமாகவே கொண்டாடுபவன். டிடியில் அண்ணாமலை போட்டபோது, சுத்த பத்தமாக குளித்து பட்டையடித்து, விளம்பரத்துக்கு கூட அசையாமல் அவன் படம் பார்த்ததைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அதற்குமுன் குறைந்தது 50 முறையாவது அந்தப் படத்தை அவன் பார்த்திருப்பான்.

அவனே ஆச்சரியப்படும் ரஜினி ரசிகன் ஒருவனும் அருப்புக்கோட்டையில் இருந்தான். முத்துக்குமார். அருணாச்சலம் படத்தை அந்தப் படம் ஓடிய 45 நாட்களும் குறைந்தது ஒரு ஷோவாவது பார்த்தவன். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னம்பலத்தின் பஞ்சு டயாலாக்கான “நாலு கொலை, ஏழு ……, பண்ணின அம்பலம், பொன்னம்பலம்” தைக்கூட மனப்பாடம் செய்தவன்.  அவனுக்கும் கூட அருணாசலம் பற்றிய அதிருப்தி இருந்தது. எனவே படையப்பாவை, பத்தாண்டு ஜெயிலில் இருந்தவன் ரிலீஸை எதிர்பார்ப்பதைவிட அதிகம் எதிர்பார்த்தான். படையப்பா பற்றி எந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்தாலும், அதை வாங்கிவிடுவான். பாடல்கள் வெளியான தினத்தன்று , தெருவையே அலறவிட்டார்கள் இருவரும் சேர்ந்து.

இந்நிலையில் என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக நாங்கள் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்கள் குடும்பம் அந்த நேரத்தில் சில பிரச்சினைகளால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வுற்று இருந்தது. செல்போன் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம். திடீரென்று ஒருநாள் ரமேஷும், முத்துக்குமாரும் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு மாசமாச்சு, பார்த்து அதான் வந்தோம் என்றார்கள். உண்மையிலேயே நான் அன்றிருந்த நிலைக்கு கடவுள்களே நேரில் வந்தது போல் இருந்தது. என் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக வர என்று அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆறுதலும் சொன்னார்கள். மூன்று நாள் கழித்து அவர்கள் கிளம்புகிறோம், நாளன்னிக்கு படையப்பா ரிலீஸ் என்று சொன்னார்கள்,

என் தந்தை, இன்னும் நாலு நாள் இருந்திட்டுப் போங்கப்பா. இங்கயே படையப்பா பாருங்களேன் என்றார். மதுரை, திண்டுக்கல், விருதுநகரில் எல்லாம் தலைவர் படம் ரிலீஸைப் பார்த்திருக்கோம். கோயம்புத்தூர்ல பார்த்தது இல்லை, பார்த்துடுவோம் என அவர்களும் உற்சாகமானார்கள்.
கோவையில் ராகம் தியேட்டரிலும், நடிகை அம்பிகாவுக்கு ஒரு காலத்தில் சொந்தமாயிருந்த அம்பாலிகா காம்ப்ளக்ஸிலும் படம் வெளியானது. ஒரு பட்டாலியனே வந்து கியூவை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு படம் முதலில் பிடிக்கவில்லை. என்னடா இது பயங்கர பிற்போக்குத்தனமா இருக்கே என நினைத்தேன். ஆனால் 50 நாட்கள் ஆகியும் ராகம் தியேட்டரில் சனி, ஞாயிறுக்கு டிக்கட் வாங்குவது பெரிய விஷயமாக இருந்தது.

படையப்பா படத்தின் வெற்றி என்பது சாதாரணமானது அல்ல என இன்றுவரைக்கும் அந்தப் படம் காட்டிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி படம் ஓடி முடிந்த போது, கே எஸ் ரவிகுமாரிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார், “உணமையில் படையப்பா படத்தை சிவாஜியை விட அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இது டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்த்தால் தெரியும் என்றார்”. மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் கோவை புறநகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் நூறு நாட்களுக்கு பின்னர் படையப்பாவை திரையிட்டார்கள். இரண்டு வாரம் ஹவுஸ்புல். மூன்றாம் வார முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் நூறு பேருக்கு மேல் திரும்பினார்கள். என்னய்யா இந்தப் படம் இந்த ஓட்டம் ஓடுது என்று தியேட்டரைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேசிக்கொண்டதைப் பார்த்து, ஏரியா ரஜினி மன்ற நிர்வாகி, ஒரு மூட்டை மிளகாயை வாங்கி வந்து, நெருப்பில் போட்டு படத்திற்கு திருஷ்டி கழித்தார். ஏரியாவே கமறி விட்டது. அகில உலகிலேயே ஒரு திரைப்படத்திற்கு திருஷ்டி கழிக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.

அப்போது எங்கள் தெருவில் இருந்த சிலர், திருப்பதிக்கு போனார்கள். திரும்பிவந்த அவர்கள், இங்கதான் கூட்டம் அம்முதுன்னா, அங்க நரசிம்மான்னு டப் பண்ணியிருக்கான், அத விட கூட்டம் என்று சிலாகித்தார்கள். படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட்டுகு தயாராகும் பொருட்கள், எல்லா காலேஜ் பங்சன்களிலும் மைம் பண்ணுபவர்கள், மாணவன் திருந்தி படிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதைக் குறிக்க போடும் “வெற்றிக் கொடு கட்டு” பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். சன் குழுமத்திற்கு பெரும் செல்வத்தை கொடுத்த படையப்பா, அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நல்லதையே கொடுத்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இந்தப் படம் தமிழகம் முழுவதுமே ஒரு நல்ல வைப்ரேசனை ஏற்படுத்தியது என்றே சொல்லத் தோணுகிறது.

படம் வெளியாகி 60 நாட்கள் சென்றிருக்கலாம். என் அம்மாவின் அக்கா, அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இருவரும் தற்போதைய தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் பெரியகுளத்தில் இருந்த ரஹீம் தியேட்டருக்கு வண்டி கட்டி சென்று படம் பார்த்தவர்கள், எம்ஜியார் மற்றும் சிவாஜியின் ரசிகைகள். அடுத்த காலகட்ட நடிகர்களில் ரஜினியை மட்டுமே அவர்களுக்குப் பிடிக்கும். அந்த வாரம் அவர்கள் இருவரையும் மாலைக்காட்சி படையப்பா படத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். லயித்து படம் பார்த்தார்கள். படம் முடிந்து தியேட்டர் அருகேயிருந்த மெஸ் ஒன்றிற்கு சாப்பிடப் போனோம். என் அம்மா “மொதோ பாட்டில பொண்ணு மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து ஆடுறதுதான் பிடிக்கல. ஆனா படம் அப்பப்பா” என்று ஆரம்பித்தார். இருவரும் படத்தைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தனர். கேட்டுக் கொண்டிருந்த சர்வர், கெட்டிச் சட்னி, பொடி என சிறப்பாக கவனிக்கத் தொடங்கினார். எதிரில் ஒரு ஆட்டோக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுடனே வெளிவந்த அவரிடம், டாடாபேட் போகணும் என்றேன். 65 ரூபா வாங்குவேன், நீங்க 40 கொடுங்க, என்று சொன்னார்.


வீட்டிற்கு வந்தும் அவர்கள் சிலாகிப்பு நிற்கவில்லை. என் பெரியம்மா சில வருடங்கள் முன்புதான் கணவனை இழந்திருந்தார். சொத்து பிரச்சினை ஒன்றில் ஏமாற்றப்பட்டதாக/ஏமாந்ததாக நம்பும் குடும்பம். நம்ம சொத்து நம்மளைவிட்டுப் போகாது, பிள்ளைக கொண்டுவந்து சேர்த்திடும் என்று படையப்பாவை உதாரணமாக காட்டி பேசினார். நீ கவலைப் படாதடி, உன் பிள்ள இருக்கான், ரஜினி மாதிரி, அவன் பார்த்துக்கிடுவான் என்று தேத்தினார்.  அடடா நாம ரஜினி ரசிகனா இருந்திருக்கலாமே என என்னை இரண்டாவது முறையாக எண்ண வைத்தது என் அம்மாவின் முகத்தில் தோன்றிய நிம்மதி.

September 23, 2014

ரகுமான்

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே அரசியல், சமுதாய ரீதியில் பல பிணக்குகள் இருக்கலாம். ஆனால் திரைப்படத்துறை மட்டும் விதிவிலக்கு. நமக்கு தண்ணீரைத் தர மறுக்கும் கேரளா, நாயகிகளை மட்டும் தர தயங்குவதே இல்லை. அந்தக்கால பத்மினி முதல் இடைக்கால ராதா,ரேவதி, நதியா, இந்தக்கால நயன் தாரா, லட்சுமி மேனன் வரை கேரள நாயகிகள் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை வந்துள்ள படங்களில் அதிக படங்களில் நாயகிகளாக நடித்தவர்கள் கேரள பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் நாயகர்களில் அப்படிச் சொல்ல முடியாது. மலையாளத் திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த நாயகர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் மலையாள திரைப்படங்களில் நடிக்காமல் நேரடியாக இங்கு வந்த எம்ஜி ராமச்சந்திரன், அஜீத் ஆகியோர்  இங்கே அளப்பரிய வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.


தமிழ்சினிமாவுக்கு பல நல்ல கதைகளைக் கொடுத்த மலையாளத்திரை உலகம், கமல்ஹாசன் மற்றும் விக்ரமை அவர்களது ஆரம்ப நாட்களில் பட்டை தீட்டிக் கொடுத்தது. ஆனால் தங்களின் கேரியரில் உச்சத்தில் இருக்கும் போது, தமிழில் இருந்து யாரும் கேரளா செல்ல விரும்புவதில்லை. காரணம் சம்பளம். ஆனால் கேரளத் திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்கள் தமிழுக்கு வர தூண்டுதலாய் இருப்பதும் இதே சம்பளம்தான்.

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற திறமைசாலிகள் கூட இங்கே நாயகனாக நிலைபெற முடியவில்லை. ஆனால் இவர்களுக்கு முன்னரே தமிழுக்கு வந்த ரகுமானுக்கு இவர்களுக்கு இல்லாத ஒரு அட்வாண்டேஜ் இருந்தது. மேற்குறிப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில் மிக இளவயதிலேயே தமிழுக்கு நாயகனாக வந்தவர் இவர்.


தன் 16 வயதிலேயே மலையாளத் திரைப்படங்களில் இளைஞனாக நடிக்க ஆரம்பித்த இவர், சில வருடங்களுக்குள்ளாகவே பத்மராஜன், சத்யன் அந்திக்காடு, கே எஸ் சேதுமாதவன், பரதன் போன்ற  இயக்குநர்களின் படங்களில் மம்முட்டி, மோகன்லால், பரத்கோபி, நெடுமுடி வேணு போன்ற திறமை மிகுந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

86ஆம் ஆண்டு தன் 20ஆவது வயதில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில், அப்போது உச்சத்தில் இருந்த நதியாவின் ஜோடியாக ரகுமான் நிலவே மலரே படத்தில் அறிமுகமானார். பின் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணே கனியமுதே, வசந்தராகம் (விஜயகாந்த் உடன்), அன்புள்ள அப்பா (சிவாஜி கணேசனுடன்) போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஷண்முகபிரியன் இயக்கிய ஒருவர் வாழும் ஆலயம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். படத்தில் நடித்தார். இந்த ஆரம்பகாலப் படங்களில் எல்லாம் கதையின் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவுமே நடித்து வந்தார்.

கே.பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரேக் கொடுத்த ”புதுப்புது அர்த்தங்கள்” தான் ரகுமானுக்கு தமிழில் நல்ல பிரேக் கொடுத்த படம். அழகான இளம் பாடகன்(ரகுமான்), பொஸ்ஸிவ்னெஸ் அதிகம் உடைய அவனது மனைவியால்(கீதா) வரும் பிரச்சினைகளால் வெறுப்புற்று தனிமை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் கணவனால் துன்பப்படும் ஒரு பெண்ணைச்(சித்தாரா) சந்திக்கிறான். இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ஆனால் பின்னர் நடக்கும் சம்பவங்களால் இருவரும் தத்தம் துணையுடனே மீண்டும் இணைகிறார்கள். ஜெயசித்ரா ரகுமானின் மாமியார் வேடத்தில் நடித்தார். சித்தாராவிற்கும் தமிழில் நல்ல அறிமுகம் கொடுத்த இந்தப்படத்தில், ஜனகராஜ் மற்றும் விவேக்கின் காமெடி பேசப்பட்ட ஒன்று. அனைத்திற்கும் மேலாக இளையராஜாவின் இசை. நூறு நாட்கள் ஓடிய இந்தப் படம் மூலம் ரகுமான் தமிழில் ஒரு நிலையான இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களான பாக்யராஜின் உதவி இயக்குநர் கோலப்பன் இயக்கிய பட்டணந்தான் போகலாமடி, ரூபிணி, கவுண்டமணியுடன் இணைந்து நடித்த பட்டிக்காட்டான், மற்றும் மனைவி வந்த நேரம், ஆரத்தி எடுங்கடி என பெரும்பாலான படங்கள் சரியாகப் போகவில்லை. கே எஸ் ரவிகுமார் இயக்கிய முதல் படமான “புரியாத புதிர்” மட்டும் ஆவரேஜாக ஓடியது.  இதே நேரத்தில் அவர் மலையாளப்படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார்.
1991 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் நீ பாதி நான் பாதி, ஜெயசித்ராவின் இயக்கத்தில் புதிய ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார். புதுப்புது அர்த்தங்களில் மாமியாராக நடித்த ஜெயசித்ராவுடன் ஏறத்தாழ ஜோடி போன்ற கேரக்டரில் நடித்தார்.

இதுதான் ரகுமான் சறுக்கிய இடம். புதுப்புது அர்த்தங்களில் கிடைத்த வெற்றியை அவர் தக்கவைக்க விரும்பவேயில்லை. தமிழில் மட்டும் கவனம் குவிக்காமல் மலையாள, தெலுங்குப் படங்களிலும் நடித்தார். தமிழிலும் நடித்து தன்னை நிரூபிப்பதற்கான வேடங்களை தேர்ந்தெடுக்கவில்லை. இரண்டு மூன்று நாயககர்களுடனும் இணைந்து நடித்தார். இதனால் அவருக்கென ஒரு தனித்தன்மையோ, ரசிகர்களின் ஆதரவோ கிட்டவில்லை.

ஆனாலும் அவருக்கு மும்மொழிகளிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. மாப்பிள்ளை வந்தாச்சு, நானே வருவேன் (நீயா படத்தின் இரண்டாம் பாகம்), ஆத்மா (ராம்கியுடன்), உடன்பிறப்பு (சத்யராஜுடன்), அதிரடிப்படை (சுமன்), பொன் விலங்கு (ரஞ்சித்), கறுப்பு வெள்ளை, டியர் சன் மருது, பாட்டு பாடவா (எஸ்பிபியுடன்) இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவற்றில் எந்தப் படமும் வெற்றிபெறவில்லை.

1996ஆம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் “கல்கி” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆவரேஜாகத்தான் ஓடியது. அதிலும் எல்லாப் புகழையும் உடன் நடித்த பிரகாஷ்ராஜே எடுத்துக் கொண்டார். இதே ஆண்டில் இந்தியில் பெருவெற்றி அடைந்த சஞ்சய்தத் நடித்த “கல்நாயக்கின்” ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பும் ரகுமானுக்கு கிடைத்தது. அந்தப் படம் மூத்த இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படமும் தோல்வி.

கடைசி வாய்ப்பாக ரகுமானுக்கு கிடைத்த படம் சங்கமம். பிரமிட் நடராஜன் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமானின் சகலையான ரஹ்மானின் இசை அமைப்பில் வெளியான படம். தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் வரிசையில் கலைஞர்களுக்கு இடையேயான போட்டியை அடிப்படையாக வைத்து உருவான படம்.
இந்தப் படத்தில் எத்தனை குறைகள் இருந்தாலும், கடைசியில் வரும் கிளைமாக்ஸ் பாடல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்த போதுமான வலிமையோடு இருந்தது.

1980 மற்றும் 90களில் இருந்த மலையாள ஹீரோக்கள் யாரும் நடனத்தில் வித்தகர்கள் இல்லை. அவர்களுக்கு நன்றாக நடிப்பு வரும், நகைச்சுவையிலும் பிரமாதப்படுத்துவார்கள். ஆனால் நடனம் அவர்களுக்கு ஒரு வீக்னெஸ்ஸாகவே இருந்தது. மேலும் அப்போதைய மலையாள படங்களில் தேர்ந்த நடனத்திற்கு அவசியமிருக்கவில்லை. இதே காலகட்டத்தில் உருவான ரகுமானும் அப்படித்தான். நடனம் சரியாக வரவில்லை. அதுபோலவே நகைச்சுவை காட்சிகளிலும் அவருடைய பங்களிப்பு மிகக் குறைவே.

சங்கமத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ஆக்ரோசமான நடனம் தேவைப்பட்டது. அதைத்தர ரகுமானால் முடியவில்லை. படத்தின் கதாநாயகியான விந்தியாவும் கதைப்படி ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அவருக்கும் சுத்தமாக பரதநாட்டியம் தெரியாது. சுரேஷ்கிருஷ்ணா தன் அனுபவத்தைக் கொண்டு, அது தெரியாமல் பார்த்துக் கொண்டார். நல்ல பரதநாட்டியம் தெரிந்த நாயகியும், பிரபுதேவா போன்ற நடனத்தில் விற்பன்னரும் அந்தப் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் சங்கமம் வெற்றி பெற்றிருக்கும். கேரள நாயகர்கள் யாருக்கும் நடனம் கைகூடவில்லை. அதனால் தான் இப்போதைய கேரள இளைஞர்கள் விஜய்யை ரசிக்கிறார்கள் போலும்.

அதற்குப்பின் ரகுமானுக்கு இறங்குமுகம் தான். 2004ல் கே எஸ் ரவிகுமார் இயக்கிய எதிரி படத்தில் ஒரு நெகடிவ்வான போலிஸ் அதிகாரி வேடம் கொடுத்தார். அடுத்த ஆண்டு வெளியான அமீரின் ராமில் போலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம், பின் 2007ல் வெளியான பில்லா வில் நெகட்டிவ்வான போலிஸ் அதிகாரி வேடம். ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 2 லும் ஒரு நெகட்டிவ் கேரக்டர். இதுதான் ரகுமானுக்கான பாதையாகிப் போனது. மேலும் இவர் இந்த காலகட்டத்தில் இருந்து  தான் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி படங்களில் நடிக்கிறார்.
ஆரம்பகாலத்தில் இருந்தே நல்ல டைரக்டர்கள், நடிகர்களுடன் நடித்து வந்த ரகுமான், ஒரு குறிப்பிடத்தக்க கதாநாயகனாக மாறவே இல்லை. தமிழில் அவருக்கு கிடைத்த ஒரே ஹிட் என புதுப்புது அர்த்தங்களை மட்டுமே சொல்லமுடியும். உணர்ச்சிகளை ஓரளவு வெளிப்படுத்தக்கூடிய முகம், நல்ல உயரம், சிவந்த நிறம் இருந்தும் அவரால் தமிழ் திரைப்பட உலகில் எந்த முத்திரையும் பதிக்க முடியவில்லை.
அதற்கான காரணங்கள் என்று பார்த்தால்,

ரகுமான், தனக்கான படங்களை/கதைகளை/வேடங்களை தேர்ந்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் அவருடைய படங்கள் வெற்றிபெற வில்லை. வெற்றி பெற்ற நடிகருக்குத்தான் இங்கே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும்.
ரகுமான் அறிமுகமான காலத்தில் இருந்து 15 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் நடனக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் அவர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. புதுப்புது அர்த்தங்களில் வரும் நல்ல தாளக்கட்டு உடைய பாடலான “எடுத்து நான் விடவா”வில் அவர் ஜனகராஜுக்கு இணையாகவே ஆடுவார். அது இன்று வரை மாறவில்லை.

தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு அம்சம் நகைச்சுவை. நாயகனாக இருந்து தனியாக நகைச்சுவை செய்யாவிட்டாலும், உடன் இருப்போர் செய்யும் போது, அதற்கு ஏற்ப ரியாக்‌ஷன் கொடுத்து, காட்சியை சிறப்பாகவாவது செய்யவேண்டும். ரகுமானின் பட்டணந்தான் போகலாமடியும் பட்டிக்காட்டானும் நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கொண்டவை. அதிலும் பட்டிக்காட்டானில் கவுண்டமணி டாக்டர் டென் சொங்கப்பாவாக அதகளம் பண்ணுவார். ரகுமான் தேமே என்றிருப்பார். தமிழில் வெற்றி பெற்ற நாயகர்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதில் சரியாக இருப்பார்கள்.


விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் எல்லாம் இன்றுவரை தங்கள் நாயக அந்தஸ்தை இழக்காமல் இருக்க காரணமே அவர்கள் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததுதான். ஏனென்றால் 1980கள் மற்றும் 90களில் சினிமாவின் முக்கிய வருவாய் கேந்திரங்களாக விளங்கிய பி மற்றும் சி செண்டர்களில் ஆக்சன் படங்களே பிரதானமாய் ஓடின. ரகுமானும் நல்ல உயரம், ஓரளவு நல்ல உடலமைப்பும் கொண்டவர்தான் (ஆரம்ப காலங்களில், பின்னர்தான் தொப்பை வந்தது). மேலும் பாரத் பந்த் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் வேறு அவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. எனவே அவர் ஏதாவது சில ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தால் கூட அவர் நாயகனாக தமிழ் மண்ணில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பார். இன்றும் கூட நாயகனாகவே இருந்திருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.