March 23, 2016

இயன் போத்தம்

1987 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ரிலையன்ஸ் உலககோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது அந்த நாட்டு மக்களை விட அதிக வருத்தப்பட்டவர் எங்கள் ஏரியா கிரிக்கெட் டீம் கேப்டன் குமார் அண்ணன் தான். ஏனென்றால் அவர் இயன் போத்தமின் தீவிர ரசிகர். அந்நாள் வரை அவர் போத்தம் ஆடிய எந்த மேட்சையும் நேரடியாகவே தொலைக்காட்சியிலோ பார்த்ததில்லை. ஆனாலும் அவர் இங்கிலாந்து அணி ஆடிய ஆட்டங்களின் வர்ணனையை பிபிசி ரேடியோவில் கேட்டும், அது தொடர்பான செய்திகளையும் படித்தே போத்தத்தின் பெரிய ரசிகராய் மாறி இருந்தார்.

அப்போது லைப்ரரிக்கு வரும் காப்பி தவிர எங்கள் ஊருக்கு  மூன்றே மூன்று ஸ்போர்ட்ஸ்டார் புத்தகங்கள் தான் வரும். அதில் ஒன்றை குமார் அண்ணனும் இன்னொன்றை ஸ்டேட் பாங்க் மேனேஜர் ஒருவரும் வாங்குவார்கள். மூன்றாவது காப்பி பஸ்ஸ்டாண்ட் கடையில் தொங்கிக்கொண்டேயிருக்கும். வெளியூர் பிரயாணிகள் யாராவது அதை வாங்குவார்கள். இல்லையெனில் ரிட்டர்ன் தான். அந்த வாரம் குமார் அண்ணன் வெளியூர் சென்றுவிட்டார். பஸ்ஸ்டாண்டில் இருந்த 2 காப்பிகளை எப்போதாவது, பாலோ ஆன் வாங்கியும் ஜெயிக்கும் அணியைப் போல இரண்டு பேர் வாங்கிச் சென்று விட்டார்கள். குமார் அண்ணன் ஊரிலிருந்து வந்ததும் புத்தகம் இல்லையென தெரிந்து டென்சன் ஆகிவிட்டார், ஏனென்றால் அந்த வாரம் நடுப்பக்க நாயகன் போத்தம். அடுத்த பஸ்ஸிலேயே மதுரைக்குச் சென்று காலேஜ் ஹவுஸ் புத்தகக் கடையில் ஒன்றுக்கு இரண்டு காப்பியாக வாங்கி வந்தார்.

போத்தம் ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம், ஆனால் அந்த உயரம் சட்டென தெரியாதபடி சற்று பருமனான உடல்வாகு. ஹாலிவுட் ஹீரோ போன்ற முகவெட்டு. அந்த நடுப்பக்கப் படத்தில் நீல நிற ஜீன்ஸும், சிவப்பு சட்டையும் அணிந்து அதற்கு மேல் ஜீன்ஸால் ஆன சட்டையை ஜெர்கின் போல பட்டன் போடாமல் அணிந்திருப்பார். சீரான தாடி, கூலிங் கிளாஸ், கழுத்தில் தொங்கும் கேமரா உடன் ஒரு மலைப்பாறையில் ஸ்டைலாக அவர் உட்கார்ந்திருக்கும் அந்த போஸ்  யாரையும் வசீகரித்துவிடும்.

அந்த போஸ்டரை வீட்டில் ஒட்டி தினமும் சூடம் காண்பிக்காத குறை தான். அந்த அளவுக்கு போத்தமின் மீது பிரியம் கொண்டிருந்த குமார் அண்ணனுக்கு உலக கோப்பை போட்டிக்கு போத்தம் வராதது பெரிய மன வருத்தம் கொடுத்தது. 

இதுவரை இங்கிலாந்துக்கு விளையாடிய ஆல் ரவுண்டர்களில் போத்தமின் இடத்தை நிரப்ப இன்று வரை ஆள் இல்லை. பொதுவாகவே எந்த துறையிலும் எதிர் எதிர் துருவங்களாக இருமுனைப் போட்டிதான் பெரிதும் பேசப்படும். சினிமா மற்றும் கிரிக்கெட்டில் இது அதிகம். கிரிக்கெட்டில் சச்சின் – லாரா, வார்னே – முரளிதரன் என பல உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேர் ஒரே துறையில் ஒரே சமயத்தில் போட்டியாளர்களாக இருந்தது எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் கபில்தேவ் தான். இந்த ஆல்ரவுண்டர்களை ரீ பிளேஸ் செய்ய அந்த அந்த நாட்டில் யாரும் உருவாகவில்லை. ஏன் உலக அளவில் கூட யாரும் உருவாகவில்லை.

குமார் அண்ணன் போத்தமை பற்றி சொல்லும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் 81 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரைப் பற்றித்தான். அந்த தொடருக்கு போத்தம் தான் கேப்டன். ஒரு டெஸ்டில் தோல்வியும், ஒன்றில் டிராவையும் செய்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. சில சூழ்நிலைகளால் போத்தம் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார்.  மைக் பியர்லி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்றாம் டெஸ்டில் சோதனையாக பாலோ ஆன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. பேட்ஸ்மென்கள் அனைவரும் பெவிலியன் திரும்பி விட்டனர். பந்து வீச்சாளர்களுடன் இணைந்து போத்தம் ஒரு 145 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. பின் ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த 2 டெஸ்டுகளையும் போத்தமின் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கிட்டத்தட்ட தனி ஒருவனாக நின்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டினார் போத்தம். இதே போலத்தான் ட்ராவிட்டும் லக்‌ஷ்மணனும் இணைந்து கல்கத்தாவில் பாலோ ஆன் வாங்கிய அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிராய் ஜெயிக்க வைத்தார்கள்.

போத்தமின் பேட்டிங் ஸ்டைலானது மிகவும் சிம்பிளானது. ஸ்டைலான பேட்ஸ்மென் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவரது அணி சக வீரர் டேவிட் கோவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு பக்கத்தில் கூட அவரால் வரமுடியாது. ஆனால் எஃபெக்டிவான பேட்ஸ்மென். பந்தை சரியாக கணித்து போர்ஸாக அடிக்கக்கூடியவர், பெரும்பாலும் மிட் ஆன் மற்றும் மிட் ஆப் திசையில் பவர் ஷாட் ஆடுவார். நல்ல லெங்தில் வீசப்படும் பந்தைக்கூட அந்த திசையில் பறக்க விட்டு விடுவார். ஹூக் அண்ட் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடி. கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் ஸ்டைலிஷாக இருக்காது ஆனால் ஸ்கொயர் கட் பொறி பறக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ரிவர்ஸ் சுவீப்பை அப்போதே ஆடியவர். அதை வேகப்பந்து வீச்சாளரிடமே ஆடுவார் என்பது இன்னும் விசேஷம்.

மார்ஷல், தாம்சன் போல போத்தம் அதி வேக பந்து வீச்சாளர் கிடையாது. ஆனால் பந்தை அருமையாக சுவிங் செய்யக்கூடியவர். செட்டிலான பேட்ஸ்மென்களையே எளிதில் திணறடித்து விடுவார். 70களில் நல்ல வேகத்தில் வீசிக்கொண்டிருந்த போது, பந்தையும் சுவிங் செய்வதால் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 80களின் மத்திக்குப் பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறமை சற்று குறையத் தொடங்கி இருந்தது.

போத்தமின் பீல்டிங்கும் சிறப்பான ஒன்று. ஒருமுறை அவர் ஆப் அண்ட் மிடிலில் வீசிய பந்தை பேட்ஸ்மென் ரன்னரின் தலைக்கு மேலே அதி வேகத்தில் அடித்தார். பந்தை  வீசி விட்டு  லேண்ட் ஆகி கண் இமைப்பதற்குள் தன் வலது கைப்பக்கம் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிப்பார். போத்தமைத் தவிர அதை யாருமே நம்பவில்லை. ஒரு அதிசயம் போலவே அதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒரு வழியாக குமார் அண்ணன் 91ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பை நேரடி ஒளிபரப்பில் தான் போத்தமைக் கண்டார். அந்த தொடரில் கேப்டன் கூச்சுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் போத்தம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து 53 ரன்களையும் அடித்தார். இத்தனைக்கும் அது அவரின் அந்திமக்காலம். இந்தியாவுடன் ஆடிய மேட்சிலும் நல்ல பார்மில் ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கரை திணறடித்து அவுட் ஆக்கி வெற்றிக்கு வழி வகுத்தார். தெண்டுல்கர் அவுட் ஆன உடன் அவர் ஆடிய ஸ்டைலான ஆட்டம் அந்த கோப்பையின் சிறந்த வெற்றி ஆட்டங்களில் தலையாயது. இங்கிலாந்து பைனல் வரை போக முக்கிய காரணமாக இருந்ததே  போத்தமின் ஆல் ரவுண்டர் திறமைதான். ஆனால் பைனலில் இறுதிச் சிரிப்பு அவரது சக ஆல்ரவுண்டர் போட்டியாளரான இம்ரான் கானுக்கே வாய்த்தது.

அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து போத்தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கடுத்து யாராவது நன்கு பந்து வீசி, நாலு மேட்ச் ஒழுங்காக பேட்டிங் ஆடிவிட்டாலே வந்து விட்டார் புதிய போத்தம் என்று இங்கிலாந்து  பத்திரிக்கைகள் கூக்குரலிடும். அப்படித்தான் டொமினிக் கார்க் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு ஹேட் டிரிக் எடுத்து 50 ரன்கள் எடுத்தவுடன் அடுத்த போத்தம் என்றார்கள். பிளிண்ட் ஆப் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கிட்டத்தட்ட போத்தம் போலவே பெர்பார்ம் செய்து பெரிய பெயர் பெற்றார். வந்து விட்டார் புது போத்தம் என்றார்கள், அவராலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

போத்தம் ஒரு சண்டைக்கோழி டைப் கேரக்டரும் கூட. ஒரு முறை ஆசியர்களை வம்பிழுத்த போது, இம்ரான்கான் அதற்கு பதிலடியாக “நீங்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதே வடிகால் வசதிகளுடன் நாகரீக வசிப்பிடங்கள் கட்டி வாழந்தவர்கள் நாங்கள்’ என பதிலடி கொடுத்தார். இப்போது ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறார் போத்தம்.

ஆளையே பார்க்காமல், செய்திகள் வர்ணனைகள் மூலமே போத்தமின் மீது பெரும் அபிமானம் கொண்டவர்கள் இந்தியாவில் அப்போது அதிகம் இருந்தார்கள். அப்படியென்றால் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட ஹீரோவாய் அவர் அப்போது இருந்திருப்பார்?.

March 21, 2016

இம்ரான் கான்

1992ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட்டில் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தை பிரித்த நிகழ்வு எனச் சொல்லலாம். 1970களுக்கு பின்னர் அறிமுகமான நட்சத்திர வீரர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை நிறுத்தி அல்லது குறைத்துக் கொண்ட காலம் அது. பல அணிகள் தங்கள் அணிவரிசையை இந்த போட்டிக்குப் பின்னர் மாற்றிக்கொண்டார்கள். புதிய ஹீரோக்கள் உருவானார்கள். இந்த போட்டியின் இன்னொரு சிறப்பு, பங்கேற்ற ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடனும் ஒரு முறை மோதும் படி அமைக்கப்பட்டிருந்தது. செமிபைனலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் விளையாடும்.


நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கோப்பையை வெல்ல எல்லா தகுதிகளுடன் களம் இறங்கிய இங்கிலாந்து ஆகிய அணிகளின் மீதுதான் ஆரம்ப கவனம் இருந்தது. பாதி போட்டிகள் முடிந்த நிலையில் 20 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் புகுந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிகளை குவித்து கவனம் ஈர்த்தது, நியூசிலாந்து, கேப்டன் மார்ட்டின் குரோவ்வின் வியூகங்களால் வெற்றிப்பாதையில் சென்றது. ஆஸ்திரேலியாவோ தோல்வி முகத்தில் இருந்தது, இங்கிலாந்து தன் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தது,


இந்நிலையில் நான்காவது அணியாக யார் தேர்வு பெறுவார்? யார் கோப்பையை வெல்வார் போன்ற ஹேஸ்யங்களை பலரும் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். அப்போது கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தார் “எந்த அணி வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், பாகிஸ்தான் அணியைத் தவிர என்று சொல்லி இருந்தார்,


அது அன்றைய நிலைமைக்கு சத்தியமான உண்மை. ஆடிய ஐந்து ஆட்டங்களில் ஒரே வெற்றி. மூன்று தோல்வி, ஒரு ட்ரா. அந்த ட்ராவும் எப்படி? பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர்கள் ஆடி 70 சொச்சம் ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இங்கிலாந்து எத்தனை ஓவர்களில் வெல்லும் என்பது பற்றி மட்டும் பெட்டிங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் வந்தது மழை. தப்பித்தோம் பிழைத்தோம் என மூன்றாவது பாயிண்டை எடுத்திருந்தது பாகிஸ்தான்.


அது மட்டுமல்ல, அந்த அணியில் அறிமுகமான உடனேயே நட்சத்திரப்பந்து வீச்சாளராக மாறி, வாசிம் அக்ரமுடன் இணைந்து டபுள் டெவில்ஸ் எனப் பெயர் பெற்ற வக்கார் யூனிஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அருமையான ஸ்ட்ரோக் மேக்கரான சயீத் அன்வரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இம்ரான்கானால் அடுத்த தலைமுறையின் சூப்பர் பேட்ஸ்மென் என ஆரவாரமாக அறிமுகப்படுத்தப் பட்டிருந்த இன்சமாம் ஒற்றைப்படையைத் தாண்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அணியின் பீல்டிங் மகா மோசம். இன்னும் சொல்லப்போனால் அந்த உலக கோப்பைத் தொடரிலேயே பீல்டிங்கில் மோசமான அணி பாகிஸ்தான் தான்.


ஒரு கிரிக்கெட் அணியினுடைய கேப்டனுக்கு எவ்வளவு திறமைகள் தேவைப்படுமோ அதைவிட அதிகமான திறமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு தேவை. நிலையில்லாத அரசியல் சூழல் நிலவும் நாடு. கிரிக்கெட் வாரியத்தலைமை, உறுப்பினர்கள் எல்லாம் அட்-ஹாக் முறையிலேயே பெரும்பாலும் நியமிக்கப் படுவார்கள். கேப்டனை மாற்றுவது எல்லாம் சாதாரணம். ஆஸ்திரேலியா அணியில் கடந்த 30 ஆண்டுகளில் பார்டர், டெய்லர் ,ஸ்டீவ் வாவ், ரிக்கிபாண்டிங், கிளார்க்,ஸ்மித் என விரல்விட்டு எண்ணும்படியான கேப்டன்கள்தான். கேப்டன் பதவியை விட்டு இறங்கிவிட்டால் அணியிலேயே இருக்க மாட்டார்கள். ரிக்கி பாண்டிங் விதிவிலக்கு. ஆனால் பாகிஸ்தான் அணி, அதிகபட்சம் ஆறு முன்னாள் கேப்டன்களுடன் கூட விளையாடி இருக்கிறது.

அணியில், ஒரு கேப்டனுக்கு சமமான திறமை உள்ளவர், முக்கியமாக முன்னாள் கேப்டனாகவோ, அல்லது அடுத்த வாய்ப்பில் உள்ள ஒருவராகவோ இருப்பின் அவரைச் சமாளிப்பது கேப்டனுக்கு சிக்கலான விஷயம். அணியே இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும். அவர்கள் மனம் கோணாமல் ஒருங்கினைக்க வேண்டும், சரியாக ஆடாதவர்களை திறமையாக கையாள வேண்டும்.


இம்ரான் கானுக்கு அடுத்து அணியில் நுழைந்தவர்தான் ஜாவித் மியாண்டாட். ஆனால் தொடர்ந்து தன்னுடைய பேட்டிங்கால் மிளிர்ந்து 79-80களில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவர் ஸ்டீரிட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்ல. ஸ்டீரீட் பைட்டரும் கூட. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் டென்னிஸ் லில்லியை பேட்டால் அடிக்கச் சென்று பிரச்சினையை உண்டாக்கினார். அதனால் அணியின் மற்ற வீரர்கள் அவர் தலைமையில் விளையாட மறுத்தார்கள். எனவே இம்ரான் கான் அணிக்கு கேப்டன் ஆனார். அந்த நேரத்தில் தான் அவர் தன் பந்து வீச்சு பொற்காலத்தில் இருந்தார். டெஸ்டில் அந்த இரண்டாண்டுகளில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்னுக்கு குறைவாகவே கொடுத்துக் கொண்டிருந்தார். இம்ரான் தலைமையில் அணி தலை நிமிரத் தொடங்கியது. இருந்தாலும் மியாண்டாட்டை சமாளிப்பது ஒரு தலைவலியாகவே இருந்தது இம்ரானுக்கு. போதாக்குறைக்கு இன்னொரு சீனியர் பேட்ஸ்மென் ஜாகிர் அப்பாஸ் வேறு, இந்த நேரத்தில் இம்ரானுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மியாண்டாட், ஜாகிர் அப்பாஸ் என கேப்டன் பதவி மாறி மாறிச் சென்று கொண்டு இருந்தது.


ஆனாலும் இம்ரான் அணியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். மிட் ஆனில் நின்று கொண்டு பந்து வீச்சாளர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார். வாய் வார்த்தைகள் குறைவுதான். இம்ரானின் சின்ன கண்கள் அவர் உணர்ச்சியை துல்லியமாக காட்டிவிடும். ஒயிட், நோபால் வீசினால், பீல்டிங் மிஸ்டேக் செய்தால் ஒரு முறை முறைப்பார். அந்த கண்ணில் புலியின் சீற்றம் தெரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்போது இன்னொரு பிரச்சினை சம்பள விவகாரம். மற்ற நாட்டு வீர்ர்களைவிட குறைவான சம்பளம் தான். இந்திய அணி வீரர்கள் பலரும் ஸ்டேட் பாங்க், தனியார் நிறுவனங்களில் கௌரவ சம்பளம் பெற்று வந்தார்கள். விளம்பர வாய்ப்புகளும் உண்டு. பாகிஸ்தான் வீர்ர்களுக்கு அது கூட கிடையாது. எனவே அவர்களை வேறு எந்த வழிக்கும் சென்றுவிடாமல் மோட்டிவேசன் செய்ய வேண்டிய வேலை வேறு.


இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நட்த்திய 87 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெற்றி பெற எல்லாவித சாத்தியங்களோடும் அணியை உருவாக்கியிருந்தார் இம்ரான். அதோடு ஓய்வு பெறும் திட்டமும் வேறு, ஆனால் அரை இறுதியில்ஆஸ்திரேலியாவோடு தோற்று வெளியேறியது. இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார் இம்ரான். அடுத்ததாக அணியில் மியாண்டாட்டுக்கும் ரமீஸ் ராஜாவுக்கும் பிரச்சினை உண்டாக அணி தொடர்ந்து பல தோல்விகளைக் கண்டது. மக்கள் இம்ரானே மீண்டும் கேப்டனாய் வரவேண்டும் என போராட்டம் நடத்தாத குறை. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கே இம்ரானை அழைத்து மீண்டும் கேப்டனாக்கினார்.


அதன்பின்னர் நேரு கோப்பை வெற்றி, மேற்கிந்திய தீவுகளுடன் டெஸ்ட் வெற்றி என பீடு நடை போட்டார். கடைசியாக 92 உலக கோப்பை. இம்ரானுக்கும் 41 வயது ஆகியிருந்தது. கடைசி உலக கோப்பை வேறு.


இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்துத்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை. எந்த கேப்டனும் துவண்டு போவார். ஆனால் இம்ரான் துவளவில்லை. மூலையில் சிக்கவைக்கப்பட்ட புலியைப் போல் நாம் எதிர்வினை காட்டவேண்டும் என்று அணியினரை உற்சாகப் படுத்தினார்..

இம்ரான் கேப்டன்ஷிப் பன்முகத்தன்மை கொண்டது என்றால் அதில் ஒரு முகம் பிரச்சினைகளை சந்திக்க தளபதிகளை அனுப்பாமல் தானே களத்தில் இறங்குதல். பாகிஸ்தானுக்கு நிலையில்லாத பேட்டிங்தான் அந்த உலக்கோப்பையில் பிரச்சினை. பொதுவாக மத்திய வரிசையில் இறங்கும் இம்ரான் முதல் விக்கெட் விழுந்த உடன் இறங்கத் துவங்கினார். காரணம் பந்து ஸ்விங் ஆகும். மற்றவர்கள் சொதப்பி விடுவார்கள் என. எல்லாப் பந்துகளையும் பிரண்ட் புட்டில் ஆடி ஸ்விங் எஃபெக்ட்டை குறைத்தார். நல்ல உயரமான வீரர் ஆகையால் அதை எளிதாக செய்ய முடிந்தது. அடுத்து ஏதாவது விக்கெட் விழுந்தால் மியாண்டாட் வருவார். இருவரிம் சேர்ந்து 40 ஓவர் ஆடிவிடுவார்கள். பின்னர் கடைசி 10 ஓவர்களில் ருத்ர தாண்டவம் தான்.


இதே இம்ரான் தான் முன்னாட்களில் பின்ச் ஹிட்டர் என்னும் கான்செப்டை திறம்பட கையாண்டவர். முக்கியமான மேட்சுகளில் வாசிம் அக்ரமை ஒன் டவுன் இறக்கி கன்னா பின்னாவென சுத்தச் சொல்வார். ஆனால் நிலைமையை அனுசரித்து பாஸிவ் ஹிட்டர் என்பதை 92 உலக்கோப்பையில் கொண்டுவந்தவரும் இவர்தான்.

இம்ரானின் இந்த அணுகுமுறையால் மீதமிருந்த அனைத்துப் போட்டிகளையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். இன்சமாம், மியாண்டாட், அக்ரம் எல்லோரும் தேவையான போது பெர்பார்ம் செய்த்து முக்கிய காரணம் என்றாலும் அந்த எபர்டை வெற்றியாக மாற்ற இம்ரான் தேவையாக இருந்தார்.


கேப்டன்ஷிப், பந்துவீச்சு, பேட்டிங் இதுதான் அவரின் தர வரிசை எனலாம். இம்ரான் தன் இளமையில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர், பின்னர் அபாரமான இன்ஸ்விங்கர், பின்னர் ஆபத்தான ரிவர்ஸ் ஸ்விங்கர். இன்சுவிங் யார்க்கரும் போடுவார், முட்டி அளவு வரும் இன்சுவிங் புல்டாஸும் போடுவார், நெஞ்சுக்கும் பந்தை எகிறவிடுவார். ரிவர்ஸ் சுவிங்கின் ஸ்தாபகர்களில் ஒருவர். இவரும் சர்பராஸ் நவாஸும் சேர்ந்துதான் இதை பிரபலப்படுத்தினார்கள். ஆரம்ப காலங்களில் இது பந்தை சேதப்படுத்தியதால் ஆகிறது என குற்றம் சாட்டப்பட்டாலும் பின்னர் ஒரு கலையாகவே பரிமளித்தது.


இம்ரான் ஒரு முறை, தான் சோடா மூடியால் பந்தைத் தேய்த்து ரிவர்ஸ் சுவிங் செய்த்தாகவும், ஆனால் அது ஒரு நல நிதி மேட்ச், மேட்சை சுவராசியமாக்க அப்படி செய்ததாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல 360 டிகிரியிலும் காமிரா வைக்க மாட்டார்கள். இரண்டே காமிரா தான். அதுவும் அம்பயரின் தலைக்கு நேர் மேலே வைத்திருப்பார்கள். பேட்ஸ்மென் பேட்டை டொக் டொக் என தட்டிக்கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். திடீரென பவுலர் வந்து பந்தை வீசுவார். அதை பேட்ஸ்மென் அடிப்பார். கிரிக்கெட் தெரிந்த காமிராமேன் என்றால் காமிராவை பந்தை நோக்கி திருப்புவார். சில கேமிராமேன்கள் பேட்ஸ்மென் அருமையான கவர் ட்ரைவ் அடிக்கும் போது மிட் விக்கெட்டை நோக்கி காமிராவை திருப்பி நம்மை நோகடிப்பார்கள். இதாவது பரவாயில்லை. சில மேட்சுகளில் ஒரே ஒரு காமிரா மட்டும் இருக்கும். ஒரு ஓவரில் பேட்ஸ்மென்னை முன்னாலும், அடுத்த ஓவரில் பின்னால் இருந்தும் தரிசிக்கலாம்.


எனவே பந்தை யார் கண்ணிலும் படாமல் சேதப்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால் இதே வாய்ப்பு எல்லா அணிகளுக்கும் தான் இருந்த்து. ஆனால் அவர்களால் ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியவில்லையே? கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு அணியினர் கூட பல ஆண்டுகள் கழித்தே ரிவர்ஸ் சுவிங்கை பாகிஸ்தானிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். இன்றுவரை பாகிஸ்தான் ஒரு சவால் மிக்க அணியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர்களின் வேகப் பந்துவீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தான். அதற்கு விதை போட்டவர்களில் ஒருவர் இம்ரான்கான்.


இம்ரான்கானுக்கும் சத்யம் சிவம் சுந்தரம் ஜீனத் அமனுக்கும் காதல் என அப்போது பாலிவுட் பத்திரிக்கைகளில் பலமான கிசுகிசு அடிபட்டுக் கொண்டிருந்த்து. இம்ரானும் அந்நாட்களில் ஒரு செக்ஸ் சிம்பலாக விளங்கியவர்தான். ஆனால் உலக கோப்பையை வென்றபிறகே தன் 42ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். தன் தாய் புற்று நோயால் இறந்ததால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். பின் அரசியலுக்கு வந்தார். இயல்பாகவே அவரிடம் இருக்கும் தலைமைப் பண்பு அதற்கு கை கொடுத்தது.


நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது பேசிக்கொள்வோம் “நாங்கள்ளாம் பாகிஸ்தான் டீம் மாதிரி. முதல்ல படிக்க மாட்டோம், எக்ஸாமுக்கு கடைசி நாள் படிச்சு தட்டி தூக்கிடுவோம்” என்று. உண்மை. அந்நாட்களில் ஏராளமான மேட்சுகளை கடைசி நேர பேட்டிங்காலோ, பௌலிங்காலோ அந்த அணி ஜெயித்தது. அதன்பின்னால் இம்ரானின் எதையும் செய்யலாம் என்ற மன உறுதி இருந்தது.


இன்றும் கூட நாட்கள் கடந்து விட்டது. ஒன்றும் சாதிக்க வில்லையே? தோற்று விடுவோமோ என்கின்ற நினைப்பு வரும்போதெல்லாம். ஐந்து மேட்சுகளின் முடிவில், டோர்னமெண்டை விட்டு வெளியேறும் நிலையில் இம்ரான் கான் காட்டிய அந்த தைரியமும் நிதானமும் மனதில் தோன்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

February 16, 2016

ஸ்ரீதேவி

எம்ஜியார் 77ல் முதல்வரான போது, அதிகம் கவலைக்குள்ளானவர் எங்கள் பாலு மாமாதான். எம்ஜியாரின் அதி தீவிர ரசிகரான அவர் ஒரு வளையல் வியாபாரி. மலைக்கள்ளன் பார்த்து ரசிகரான அவர் படகோட்டியில் வளையல் வியாபாரியாக எம்ஜியார் மாறுவேடம் புனைந்து வந்ததில் இருந்து அதி தீவிரவானார். அவரது வளையல் பெட்டி நான்கடிக்கு மூன்றடி நீள அகலத்திலும் முக்காலடி கனத்தில் இரண்டாகத் திறக்கும்படியும் செய்யப்பட்டிருக்கும். வளையலை சைஸ் வாரியாக, ரகம் வாரியாக அடுக்குவதற்கு தோதாக அதை அரை அங்குல அகல சட்டங்களால் பிரித்திருப்பார்கள். உள் கூட்டில் எம்ஜியாரின் படம் ஒட்டப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டியை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கு தூக்கிச் சென்று வளையல் விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு 40 வயது. கால் விந்தி விந்தி நடப்பதால் திருமணமாகவில்லை. வியாபாரம் முடிந்ததும் மாலைக்காட்சி ஒரு எம்ஜியார் படம் பார்த்து விடுவார். எம்ஜியார் படம் இல்லையென்றால் ஊருக்கு திரும்பி விடுவார். வளைகாப்புக்கு கூப்பிட்டிருந்தால் நானும் அவரது கூடுதல் பைகளை தூக்கிக் கொண்டு செல்வேன். ஐம்பது பைசா கொடுப்பார். எங்கள் ஊர் தியேட்டரில் ஒரு படம் தாராளமாக பார்ப்பதற்கான தொகை அது. மாமா வளையலை எடுக்க எடுக்க உள்ளே ஒட்டப்பட்டிருக்கும் எம்ஜியார் ஆங்காங்கே தெரிவார். எம்ஜியார் முதல்வரானதால் படம் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதுதான் அவர் கவலை.

அப்போதெல்லாம் எங்கள் சுற்று வட்டார கிராமங்களுக்கு ஓராண்டு கழித்துதான் படம் வரும். எம்ஜியார் நடிப்பதை நிறுத்தியபின் ஒராண்டாக அவரது புதுப்படம் எதையும் பார்க்க முடியாமல் பழைய படங்களை மட்டும் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டிருந்த மாமா அன்று முதன்முறையாக இன்னொரு நடிகர் படத்தை காண நேர்ந்தது. அதுதான் 16 வயதினிலே. வளைகாப்புக்குச் சென்ற இடத்தில் எல்லோரும் அந்தப் படத்தைப் பற்றியே பேசவும், அன்று மாலை அவ்வூரில் அந்தப்படத்தைப் பார்த்தார்.

அடுத்த நாள் என் பாட்டியிடம் வந்து, அந்தப் படத்தில ஸ்ரீதேவின்னு ஒரு பொண்ணு மெயினு ஆக்டு கொடுத்திருக்குத்தை. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. படம் பேரும் 16 வயசு அவளுக்கும் 16 வயசு என்று சிலாகித்தார். எங்கள் தெருவுக்கே ஆச்சரியம். இவரா இப்படி பேசுவது என்று. அதன்பின் தினமும் எந்த ஊரில் எல்லாம் அந்தப் படம் போட்டிருந்தார்களோ அங்கே மட்டும் வியாபாரத்துக்கு போக ஆரம்பித்தார். எங்கள் தெருவுக்கே அந்தப் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. ஒரு வழியாக அந்தப்படம் எங்கள் ஊருக்கு வந்ததும் பார்த்தவர்கள் பாலு மாமா சொன்னது உண்மை எனப் புரிந்து கொண்டார்கள். ஏன் அதற்கு முன்னால் தமிழகமே அதைப் புரிந்து கொண்டிருந்தது.

ஸ்ரீதேவி நாயகியாக அறிமுகமான காலகட்டத்தில் ஸ்ரீவித்யா, லட்சுமி, மஞ்சுளா, படாபட் ஜெயலட்சுமி, சுஜாதா, ஸ்ரீபிரியா போன்ற நடிகைகள் நடித்துக் கொண்டிருந்தார்கள். முகலட்சணமும் நடிப்பும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் பருத்த உடல் அமைப்புடன் இருப்பர்கள் அல்லது கவர்ச்சியான உடல் அமைப்பு இருக்காது. நடனத்தில் ஒரு கிரேஸ் இருக்காது. ஆனால் ஸ்ரீதேவி முக லட்சணம், உடல் அழகு, நடிப்பு, நடனம் என ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக இருந்தார். அதனால் நாயகியாக நடிக்க ஆரம்பித்த உடனேயே எல்லோரையும் கவர்ந்தார். அந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானாலும் அவர் இன்ஸ்டண்ட் ஹிட் ஆவார்.

அப்போது நாயகர்களாக பார்ம் ஆன கமலுக்கும், ரஜினிக்கும் மற்ற நடிகைகளை விட ஸ்ரீதேவியே பொருத்தமாக இருந்தார். அவர்களின் பெரும்பாலான படங்களில் ஸ்ரீதேவிதான் நாயகி. குரு, பிரியா போன்ற கவர்ச்சிகரமான கேரக்டர் ஆனாலும் சரி, மூன்றாம் பிறை, ஜானி போன்ற கிளாசிக்கானாலும் சரி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, தர்மயுத்தம் போன்ற பெர்பார்மன்ஸ் ரோலானாலும் சரி, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ராணுவ வீரன், கல்யாணராமன் போன்ற கமர்சியல் படங்களானாலும் சரி. எந்த ரோலாக இருந்தாலும் அப்படியே பொருந்திப்போவார். வாழ்வே மாயத்தில் ஏர் ஹோஸ்டலாகவும் அசத்துவார், சிகப்புக்கல் மூக்குத்தியில் அப்பிராணி கிராமத்துப் பெண்ணாகவும் மாறுவார். பகலில் ஒரு இரவில் கவர்ச்சியின் எல்லைக்கும் போவார்.

ஸ்ரீதேவி அதே நேரத்தில் தெலுங்கிலும் முண்ணனி நடிகையாக இருந்தார். ராமாராவ்,கிருஷ்ணா என சீனியர் சிட்டிசன்களுடனும் சிரஞ்சீவி போன்ற வளரும் நாயகர்களுடனும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இங்கேயும் சிவாஜியுடன் சந்திப்பு படத்தில் நடித்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் கேரளாவிலும் தன் முத்திரையை பதித்திருந்தார்.

அந்த ஆண்டுகளில் ஸ்ரீதேவிக்கு இருந்த கிரேஸானது மிகப்பெரிது. பிரியா பட நீச்சலுடை ஸ்டில் இல்லாத சலூனை அந்நாட்களில் காண இயலாது. சிறு உணவகங்களில் வெளியே டீ ஸ்டால் இருக்கும். உள்ளே நான்கைந்து மர பெஞ்சுகள் போட்டிருப்பார்கள் சாப்பிட. அந்த பெஞ்சுகளின் பின்னால் உள்ள கிடுக்குகளில் எல்லாம் ஸ்ரீதேவி பட போஸ்டர்களைத்தான் ஒட்டியிருப்பார்கள், பாம்பே டையிங் வெளியிடும் காலண்டர்கள் அந்நாளில் பிரசித்தம். ஸ்ரீதேவி கத்தரிப்பூ கலர் சேலை அணிந்து வெளியான பாம்பே டையிங் காலண்டர்கள் ஆண்டு கழிந்தும் மாற்றப்படாமல் தொங்கின. சிவகாசியில் பெரிய பட்டாசு பார்சல்களில் எல்லாம் ஸ்ரீதேவி படங்கள் தான் ஒட்டியிருப்பார்கள். சரவெடி பாக்ஸ் என்றால் பிரியாவில் வரும் நீச்சலுடைப் படம்.

ஸ்ரீதேவி எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருக்க அவர் ஏற்ற வித்தியாசமான வேடங்களே காரணம். இளைஞர்களில் ஒரு பிரிவினர் அவரது கவர்ச்சிக்கு அடிமை என்றால், மற்றவர்களுக்கு அவர் ஒரு காதல் தேவதையாக தோன்றினார், சிலருக்கு பெர்பார்மென்ஸால் பிரியத்துக்கு உரியவரானார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாக ஒருவர் இருப்பது ஆச்சரியம். பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்ற வழக்கு அப்போது உருவாகி இன்னும் நிலைபெற்றிருக்கிற ஒன்று.

என் பெரியப்பா பையன் நல்ல உயரமாக, சிகப்பாக இருப்பார். அவனுக்கு என் பெரியம்மா பெண் தேடும் போது, அத்தை ஒருவர், என் பொண்ணு இருக்கு, வெளியே தேடுறீங்க என ஒரு விசேஷத்தில் கேட்டார். அதற்கு என் பெரியம்மா, அவன் அழகுக்கு ஸ்ரீதேவி மாதிரி ஒரு பொண்ணு தேடுறோம் என்றார். அதற்கு அத்தை ஏன் ஸ்ரீதேவியையே கட்ட வேண்டியதுதானே? என்று முகவாய்க்கட்டையால் தோள்பட்டையை இடித்துக் கொண்டார்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டிதான் ஸ்ரீதேவியின் சொந்த ஊர். எங்கள் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மீனம்பட்டியில் பெண்பார்த்துக் கட்டணும்டா என்று சொல்லிக்கொண்டு சிலகாலம் திரிந்து கொண்டிருந்தார்கள்.

தமிழில் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்தாலும், தெலுங்கில் கவர்ச்சி நாயகியாகத்தான் பார்மாகி இருந்தார் ஸ்ரீதேவி. சுஜாதா கூட தன் சிறுகதை ஒன்றில் ஒரு உரையாடலில் இங்கதாம்பா இழுத்துப் போத்திக்கிட்டு நடிப்பா ஆனா தெலுங்கில என்று தொனி வரும் வகையில் எழுதி இருப்பார்.
தமிழ் தெலுங்கில் உச்சத்தில் இருக்கும் போதே இந்திக்கும் சென்று அங்கேயும் நம்பர் 1 நடிகையாக பல ஆண்டுகள் கலக்கினார்.

ஷோலேக்குப் பிறகு பட்டி தொட்டியெல்லாம் ஓடிய இந்திப்படம் என்றால் ஹிம்மத்வாலா தான். காரணம் சிம்பிள். நீச்சலுடையில் மாசு மருவில்லாத, வடிவான தொடை தெரிய ஸ்ரீதேவி கொடுத்த போஸை வைத்துத்தான் போஸ்டரே அடித்திருந்தார்கள். லெக்கின்ஸ் பிரபலமான உடன் நினைத்தது உண்டு. ஸ்ரீதேவியை இந்த உடையில் பார்த்திருந்தால் எத்தனை பேருக்கு சொர்க்கம் கிட்டியிருக்கும் என்று. மிஸ்டர் இந்தியாவில் அனில்கபூருடன் ஆடிய ரெயின் ஸாங்குக்கு இந்தியாவே நனைந்ததே. தெலுங்கில் ராகவேந்திரராவ் ஸ்ரீதேவியின் அழகை மேலும் அழகாக்கினார் என்றால் இந்தியில் சுபாஷ் கை. அவர் சுமாரான அழகுப்பெண்களையே சுந்தரியாக மாற்றக்கூடியவர். ஸ்ரீதேவியை? சாந்தினி படத்தில் ஸ்ரீதேவி கட்டிவந்த சேலைகள் எல்லாம் பெரிய ட்ரண்ட் செட்டர் வட இந்தியாவில்.

ஒரு வகையில் பார்த்தால் இந்தியா முழுவதற்குமான முண்ணனி ஹீரோயின் என்றால் இன்றுவரை அது ஸ்ரீதேவிதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நுழைந்த இடத்தில் எல்லாம் நம்பர் 1. வேறு எந்த ஹீரோயினும் இன்று வரை அதைச் சாதிக்கவில்லை. அந்நாட்களில் எந்த மொழி ரசிகராயிருந்தாலும் சரி, அவர் ஸ்ரீதேவியைப் பற்றி அறிந்திருப்பார் என்ற நிலைமை நிலவியது.

தமிழில் ஹீரோயினாக ரஜினியுடன் இணைந்து நடித்த நான் அடிமை இல்லை சரியாகப் போகவில்லை. சில ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவியுடன் அவர் நடித்த ஜெகதீச வீருடு அதிலோக சுந்தரி டப்பாகி காதல் தேவதை என்ற பெயரில் வந்தது. பொதுவாக வேலை நாட்களின் காலைகாட்சி என்பது பள்ளி,கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் தென்படுவார்கள், ஆனால் அன்றோ முப்பது வயதுக்காரர்களும் அதிகளவில் தங்கள் காதல் தேவதையை காண வந்திருந்தார்கள்.

அவ்வளவு ஏன்? சிவகாசியில் ஒரு பட்டாசுக் கடை ஓனர் இன்றும் தங்கள் பட்டாசு பாக்கெட்டுகளில் ஸ்ரீதேவியின் ஸ்டில்களைத்தான் உபயோகிக்கிறார். சென்ற ஆண்டு ஒரு விசேஷத்துக்கு சரவெடி வாங்கப்போன போது உடன் வந்த சித்தப்பா, ஸ்ரீதேவி படம் போட்ட 5000 வாலாவைத்தான் செலக்ட் செய்தார்.

பாலு மாமாவை அப்படியே விட்டு விட்டேன். அவர் எண்பது வயது வரை திருமணம் ஆகாமல், வளையல் வியாபாரம் பார்த்து மறைந்தார். ஆனால் கடைசி வரை அவரது பிரசித்தமான வளையல் பெட்டியில் பதினாறு வயதினிலே பார்த்தபின் ஒட்டிய ஸ்ரீதேவி படங்களை மாற்றவேயில்லை.