July 29, 2014

கமல் குணா

அன்றைக்கு எங்கள் தெருவில் இருந்தவர்களிலேயே குணா அண்ணன் தான் தீவிர கமல் ரசிகர். மங்கம்மா சபதம் படத்தையே 17 தடவை பார்த்தவர் என்ற ஒன்றே அவரின் கமல் வெறியைச் சொல்லிவிடும்.

அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன் என தொடர்ச்சியாக கமல் படங்கள் வெளிவந்து அவரை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த நேரம், அடுத்த படம் குணா என அறிவிப்பு வந்தது. அவருக்கு அளவில்லா சந்தோஷம். அதுவரை தட்டிகளில் கமல்குணா என போட்டுக்கொண்டிருந்த குணா அண்ணன் இந்தப் படத்துக்கு வைக்கப்படும் தட்டியில் எப்படி பெயர் போடுவார்? என நாங்கள் பேசிக்கொண்டோம்.

ஆனால் பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள், எங்கள் ஆர்வத்தை குறைக்கத் தொடங்கியிருந்தன. சந்தான பாரதி இயக்கம், புதுமுகம்ரோஷினி, எஸ்,வரலட்சுமி,காகா ராதாகிருஷ்ணன் என பழைய ஆட்களின் மறு பிரவேசம், ரேகா போன்ற மார்க்கட் இழந்த நடிகை, இத்தனைக்கும் மேலாக கறுப்படித்த முகம்,முள்முள்ளான தாடி என கமல்.
ஆனால் ரஜினியின் தளபதியிலோ, மணிரத்னம், மம்முட்டி என வலுவான துணைகள். ஆர்வத்தை தூண்டும் ஸ்டில்கள். கேசட் வெளியான அன்றே படத்தின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. அப்போதுதான் குணா அண்ணனே கலங்கிப் போனார்.

அதற்குக் காரணம் இருக்கிறது. “என்னப்பா, எப்பவுமே படம் ரிலீஸாகி கொஞ்சநாள் கழிச்சுத்தான் வசன கேசட் வரும்?, குணாவுக்கு ரிலீஸுக்கு முன்னாடியே வந்திருச்சே?” என ரஜினி ரசிகர்கள் அவரை கலாய்த்து எடுத்து விட்டார்கள். ஒவ்வொரு பாடலுக்கு முன்னாலும் கமல்ஹாசன், இளையராஜா, சந்தான பாரதி ஆகியோர் பாடல் குறித்துப் பேசி இசை மற்றும் பாடல் வரிகளை முடிவு செய்ததையும் பாடல்களுக்கு முன்னால் சேர்த்திருந்ததால் வந்த வினை அது.

ஆனாலும் குணா என்னும் படத்தலைப்புக்கு கீழே இருந்த திரிசூலம் எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. நிச்சயம் ஆக்‌ஷன் அதிரடி இருக்கும் என. அதையும் ரிலீசுக்கு முன்னால் வந்த கமலின் பேட்டி தகர்த்தெறிந்தது. இந்தப் படத்தை ”மதிகெட்டான் சோலை” என்னும் இடத்தில் எடுத்ததாகவும், குணா என்னும் பெயரைவிட மதிகெட்டான் சோலை பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மற்றவர்கள் சம்மதிக்க வில்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கமாக கமல் படத்திற்கு குணா அண்ணன் தலைமையில் தான் போவோம். ஆனால் நானும் சில நண்பர்களும் முதல் காட்சி தளபதிக்கு சென்றுவிட்டோம். கவுண்டமணியின் காமெடி நல்லாயிருக்கு, பானுபிரியா, குஷ்பூ, பாடல்காட்சிகள் என பிரம்மா பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அடுத்த நாள் அதற்குப் போனொம். அன்றே கவுண்டருக்காக மீண்டும் தாலாட்டு கேட்குதம்மா.

என்னடா இன்னும் நம்ம படம் நீங்க பார்க்கலை போலிருக்கே? என குணா அண்ணன் கேட்டபோது தலைகுனிந்தோம். சரி வாங்கடா செகண்ட் ஷோ போவோம் என கூட்டிப் போனார், இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன்.

குணா அண்ணனுக்கு அந்த நாட்களில் எல்லாம் பயங்கர கோபம் வரும். டேய் குணாவோட சேர்த்து 9 படம் ரிலீஸாயிருக்கு. இதுல தளபதி வேணுமின்னா பரட்டைக்காகவும், பாட்டுக்காகவும் எல்லாத்துக்கும் ஞாபகம் இருக்கும். மத்த படமெல்லாம் மறந்து போயிடும். எழுதி வச்சுக்கங்கடா, இன்னும் 20 வருசம் ஆனாலும் இந்தப் படத்தைப் பத்தி யாராச்சும் பேசிக்கிட்டே இருப்பாங்கடா என்றார். அந்த தீபாவளிக்கு வெளியான விஜய்காந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பாக்யராஜின் ருத்ரா, ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டுக்கு போன தெருக்காரர்கள் குணாவை கண்டு கொள்ளாததில் அவருக்கு அவ்வளவு வருத்தம்.

சில ஆண்டுகள் கழித்து ஒரு கல்லூரியின் வகுப்பறைச் சுவற்றில் “குயிலே எனக்கு கப்ப குடுத்துட்டாங்க குயிலே” என்ற வாசகம் கிறுக்கி இருந்ததைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. அதற்கடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு தியேட்டரில் நடுநிசி 1.30 மணிக்காட்சியாக திரையிடப்பட்ட குணாவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு.

நாங்கள் அந்த ஊரில் இருந்து சில ஆண்டுகளில் வேலை காரணமாக வேறு ஊருக்குச் செல்ல நேரிட்டது. குணா அண்ணனுடனான தொடர்பும் குறைந்து போனது. அதன்பின்னர் லோக்கல் டிவி சானல்களில், பேருந்து பயணங்களில், கடந்த சில ஆண்டுகளாக கேடிவியில் குணாவைப் பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள், படத்தை சிலாகிக்கும் போதெல்லாம் குணா அண்ணனின் நினைவு வரும்.

சில முயற்சிகளுக்குப் பின்னர் அவர் தொலைபேசி எண்ணைப் பெற்று பேசியபோது, நாங்கள் வீடு மாறிய சில மாதத்திலேயே திருமணமாகிவிட்டதாகவும், தற்போது கடைத்தெருவில் ஸ்டேசனரி கடை வைத்திருப்பதாகவும் கூறினார். இரண்டு பையன்கள் என்றும் தெரிவித்தார். முன்னர் போன்றே மன்றப்பணிகளில் தீவிரமாக இருப்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஊரில் இருந்த பள்ளி நண்பர்களின் தொடர்பு வலுப்பெற்ற பின்னர், குணா அண்ணன் தன் எனர்ஜியை இழக்காமல் இன்னும் விஜய், அஜீத் ரசிகர்களுக்குப் போட்டியாக போஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல்களும் வந்து சேர்ந்தது.

சென்ற மாதம், ஒரு திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்தேன். குணா அண்ணனை சந்திப்பதற்காகவே முதல் நாளே சென்றேன். ஸ்டேசனரி கடையை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார். நம்மவர் தான் சொல்லியிருக்காரே, ”கக்கூஸ் கழுவுனாக்கூட பரவாயில்லை, அதுல நாமதான் பெஸ்ட்னு பேரெடுக்கணும்னு”. பின்ன? என்றார்.

இரவு உணவுக்கு அவர் வீட்டிற்குச் சென்றோம். ஹாலை ஒட்டிய அறைக்கதவில் ஆளுயர விஜயின் துப்பாக்கி பட ஸ்டில் ஒட்டப்பட்டிருந்தது.  மகன் ரூம், காலேஜ் பர்ஸ்ட் இயர் என்றார்.

July 28, 2014

கிரிக்கெட்டும் கல்லூரிப் படிப்பும்


கல்லூரிப் படிப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேசிங் செய்வதைப் போல.

எப்படி பவுலிங்& பீல்டிங் நன்றாக இருந்தால் நாம் சேஸ் செய்யவேண்டிய ரன் குறையுமோ அதுபோல கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைக் கவனித்தால்  நாம் படிக்க வேண்டிய நேரமும் வெகுவாகக் குறையும்.

லைன் அண்ட் லெங்த் – தினமும் கல்லூரிக்கு ஒழுங்கான நேரத்தில், தேவையான புத்தகங்கள், நோட்டு, கருவிகளுடன் செல்வது. எப்படி லைன் அண்ட் லெங்த்தில் பௌலிங் போட்டால் பேட்ஸ்மென்னால் அதிக ரன் அடிக்க முடியாதோ? அதேபோல் நாம் ஒழுங்காகச் சென்றுவிட்டால் நம்மால் படிக்க முடியாத அளவுக்கு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியாது.

நோ பால் – கல்லூரிக்குச் செல்லாமல் லீவு போடுவது. ஒரு ரன்னும் கொடுத்து, இன்னொரு பாலும் கொடுப்பதால் நாம் அதிக நேரம் படிக்கும் அளவுக்கு பாடம் குவிந்துவிடும்.

வைடு – கல்லூரி உள்ளே வந்துவிட்டு வகுப்புக்குச் செல்லாமல், கேண்டீன் செல்வது, மதியம் கட் அடித்து விட்டு சினிமா செல்வது. இதனாலும் நாம் படிக்க வேண்டிய நேரம் கூடும்.

பைஸ் – கிளாஸில் உட்கார்ந்து கொண்டு சுத்தமாக கவனிக்காமல் கற்பனையில் மிதப்பது.

கேட்ச் மிஸ் – எப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு காட்ச்சை விட்டால் அவர் வீறு கொண்டு எழுந்து அதிக ரன்னை குவிப்பாரோ அதுபோல, சில ப்ராப்ளமாட்டிக் சப்ஜெக்ட்களின் அடிப்படைகளை சொல்லித்தரும் போது, கவனிக்காமல் விட்டுவிட்டால் படித்துப் புரியவேண்டியது மலை போல குவிந்துவிடும்.

ரன் அவுட்/ஸ்டம்பிங் – சரியான நேரத்தில் பந்தை எறிந்து அவுட்டாக்குவது போல அசைன்மெண்டுகள்/செமினார்களை குறித்த நேரத்தில் முடித்துவிடவேண்டும்.

கிரவுண்ட் பீல்டிங் – இது சிறப்பாக இருந்தால் எப்படி நம்மால் 30-40 ரன்களை எதிரணியின் ஸ்கோரில் இருந்து குறைத்து விட முடியுமோ, அது போல கிளாஸில் ஆக்டிவ்வாக கவனித்துக் கொண்டேயிருந்தால் நாம் மாலையில் வீட்டில் படிக்க வேண்டியது மிகக் குறைந்து விடும்.

நாம் படிக்கும் போது (நம்ம பேட்டிங்)

ரன்ரேட் - கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பே கூடாது. கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் டீம் கொலாப்ஸ் ஆவதைப் போல காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் வந்தால் நாம் காலி. எனவே சீராக ரன்ரேட் மெயிண்டெயின் செய்வதைப் போல தினமும் படிக்க வேண்டும்.

ஸ்ட்ரைக் பவுலர்கள் – எல்லா டீம்களிலும் ஸ்ட்ரைக் பவுலர்கள் இருப்பது போல எல்லா செமெஸ்டரிலும் சில கில்லர் சப்ஜெக்ட்கள் இருக்கும். அதைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

ஆவரேஜ் பவுலர்கள் – இவர்கள் ஓவரில்தான் நாம் ரன்களைக் குவிக்க முடியும், அதுபோல இவற்றை நன்கு படித்து சிஜிபிஏ வை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

பார்ட் டைம் பவுலர்கள் – இவர்கள் வீச்சில் ஒரு பந்தையும் வீணாக்கக் கூடாது. இது பிராக்டிக்கலை போன்றது. எஸ் கிரேடுக்கு குறைந்து விடக் கூடாது.

கேட்ச் – நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத பாலை தூக்கி அடித்து அவுட்டாவது போல, எதிர் பாலிடம் மயங்கி படிக்காமல் விட்டு விடுவது.

ரன் அவுட் – தேவையில்லாத ரன்னுக்கு ஓடுகிறேன் பேர்வழி, என்று அவுட்டாவதைப் போல, சக மாணவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படிக்கும் நேரம் குறைந்து போவது.

ஹிட் விக்கெட் – தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து காலை எக்ஸாம் ஹாலில் தூங்கி விழுந்து கோட்டை விடுவது.

மெய்டன் ஓவர் – தீபாவளி, பொங்கல், பூஜா ஹாலிடேஸ் என பல்க்காக லீவு வரும் போது படிக்காமல் விட்டு விடுவது. இதனால் நாம் படிக்க வேண்டிய ரன்ரேட் எகிறிவிடும்.

சிங்கிள்ஸ் – சேசிங்கில் முக்கியமே சிங்கிள்ஸ்தான். தினமும் குறைந்த அளவு நேரமாவது புத்தகத்தை திறப்பது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது போல இரண்டு மூன்று சம்ஜெக்ட்களை தொட்டுப் பார்த்து விடவேண்டும்.

பவுண்டரிகள் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து படிப்பது.

பவர்பிளே – தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ். விக்கெட் இருந்தால் தான் இதில் அதிரடியாக ஆடமுடியும். அதுபோல முன்னர் இருந்தே படித்து சப்ஜெக்ட்களின் அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் விரைவாக எல்லாவற்றையும் படித்து முடித்து விட முடியும்.


இன்னும் சில நாட்களில் கல்லூரிகளில் கால் பதிக்கப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 

July 24, 2014

மானா மூனா கூட்டம்

பழுத்த வேலை நாளான திங்கட் கிழமை காலை 10.30 மணி அளவில் மட்டுமே சலூனுக்குச் சென்று முடி வெட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தக் காலத்தில் பெற்ற தாய் தந்தை இறந்தாலே மொட்டையடிக்க யோசிக்கும் மகன்களுக்கு மத்தியில் அங்காளி பங்காளிகளோடு சேர்ந்து மொட்டையடிக்கும் பாசக்கார உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? ட்ராபிக் கான்ஸ்டபிளின் வாடையே இல்லாத சாதாரண முட்டுச்சந்தில் டிவிஎஸ் 50யில் கூட ஹெல்மெட் போட்டு ஓட்டுபவர்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இல்லையென்றால், இது உங்களுக்கானதுதான். மானா மூனா கூட்டம் என்று சொந்தபந்தங்களால் அழைக்கப்படுபடும்  கூட்டத்தைப் பற்றிய பதிவுதான் இது.

ம.முத்துச்சாமி என்பவர்தான் இந்த கூட்டத்தின் எள்ளுத்தாத்தா. அவருடன் பிறந்த அண்ணன் தம்பிகள் எல்லோருமே நல்ல முடிவளத்துடன் இருக்க இவருடைய ஜீனில் மட்டும் ஏதோ  மியூட்டேசன் நடந்து இளவயதிலேயே முடிகொட்டத்துவங்கியது. இளவயது என்றால் மிக இளவயதிலேயே. அந்த சாபம் அவருடன் நின்றுவிடாமல், அவர் பெற்ற பிள்ளைகளின்  மூலம் ஐந்து தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

15 வயது ஆகும்போது, உச்சி மண்டையில் உள்ள சுழியில் இருந்து அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். கன்னியின் தொப்புளைப் போல சிறு வட்டமாக இருக்கும் அந்த சுழி, நாலா பக்கமும் மெல்ல விரிய ஆரம்பிக்கும். ஒரு தேர்ந்த சமையல்காரர் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் போட்டு, கையை எடுக்காமல், சென்ற வழியிலேயே செல்லாமல், கரண்டியால் அழகான தோசை ஆக்குவாரே அதுபோல முடி சீராக கொட்டிக்கொண்டே போகும்.

இது தரைப்படைத் தாக்குதல் என்றால், முன் நெற்றி வகிடு வழியாக முடி கொட்டிக்கொண்டே செல்லும் விமானப்படைத் தாக்குதலும் உண்டு. 17 வயதில் எல்லாம் இரண்டு வகிடின் வழியாகவும் முடி கொட்டிக்கொண்டே சென்று தோசைவட்டத்துடன் இணையத் துடிக்கும். இரண்டு புருவங்களுக்கு மத்தியின் நேராக நெற்றியில் இருக்கும் முடிக்கொத்து மட்டுமே 21 வயது வரை தாக்குப் பிடிக்கும். அதை மூன்றாகப் பிரித்து,  மூன்று புறமும் பரப்பி முடி இருப்பது போல் டகல்பாஜி வேலை செய்து கொள்வார்கள். அதுவும் 25 வயதுக்கப்புறம் பெப்பே காட்டிவிடும்.

மானா மூனா கூட்ட ஆண்வாரிசுகளுக்கு 25 வயது பூர்த்தி ஆகும் போது, காதின் மேல் ஒரு அங்குலம் மட்டுமே முடி இருக்கும். காதை தாண்டிய உடன், பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் ஆகியோர் இடையழகிகளாக இருந்த இளவயதில் லோஹிப் கட்டும் போது, ஜிலீரென ஒரு அழகு வளைவாக சேலை இறங்கி, தொப்புள் தரிசனம் கிட்டுமே அதே மாதிரி வளைவில் பின் மண்டையின் நடுப்புறத்தை நோக்கி முடி பகீரென இறங்கும். பின் நடுப்புறத்தில் இருந்து மறுபக்க காதை நோக்கி அதே வளைவில் மேலேறும்.

பொம்பளைப் புள்ளைய பெத்து வச்சிருக்கோம், காலா காலத்துல ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துடணும்னு வயத்துல நெருப்பக் கட்டிட்டி இருக்கோம்னு ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்களே. அதுபோல மானாமூனா கூட்டத்தாரும் 22 வயசுக்குள்ள எப்படியாச்சும் மகன்களுக்கு  கல்யாணம் கட்டி வச்சுரணுமே எனத் துடிப்பார்கள்.
ஆனால் ஒரு வகையில் இந்த சாபம் இந்தக்கூட்ட ஆண்வாரிசுகளுக்கு ஒரு மோட்டிவேஷனாக மாறியது. பிளஸ் 2 வில் படிச்சதப் போலவே காலேஜிலும் படிச்சா நம்ம வாழ்க்கை எங்கேயோ போயிரும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. மானா மூனா கூட்டம் பிளஸ் 2 வரைக்கும் சரியாப் படிக்காட்டியும், காலேஜ்ல நுழைஞ்ச உடனே, வெறித்தனமா படிக்க ஆரம்பிப்பாங்க. 21 வயசுல எப்படியும் ஒரு வேலைக்குப் போயிடணும், தலை சஹாரா ஆகுறதுக்குள்ள, சிம்லாக்கு ஹனிமூன் போயிடணும்னு துடிப்பாய்ங்க.

ஒருத்தனுக்கு சரியாப் படிக்காம 25 வயசுலதான் வேலை கிடச்சது. அவன் பொண்ணு கிடைக்காம அலைஞ்சு, ஒரு பால்வாடி டீச்சருக்கு ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டான். அதுல இருந்து உஷாராயிட்டாங்க. இதெல்லாம் எப்படி டீடெயிலாத் தெரியும்னு கேக்குறீங்களா? நானும் அந்தக் கூட்டத்துல ஒருத்தந்தேன்.

ஒரு பெரியப்பா பையனுக்கு 23 வயசாச்சு. தரகர் கேக்குறாரு, தம்பி பொண்ணு சிவப்பா வேணுமான்னு? யானைச் சிகப்பா இருந்தாக்கூட சரிதான். ஏன் யானையா இருந்தா கூடச் சரிதான். ஆனா அவங்க வீட்டில அப்பா, அண்ணன் தம்பி எல்லாம் கரடியாட்டம் இருக்கணும்னான். ஏண்டான்னா?, தலை, உடம்பு பூராம் முடியா இருக்கிற ஜீன் உள்ள குடும்பப் பொண்ணா இருந்தா, என் பிள்ளையாச்சும் வழுக்கை இல்லாம பிறக்கட்டும்ணான். கரடி மாதிரி இருக்கிற குடும்பம் இல்ல, கரடியவே நீ கட்டுனாலும் பையன் சொட்டையாத்தான் போவான்னு தரகர் பார்வை சொல்லாம சொல்லுச்சு.

ஆனாலும் இந்தப் பொண்ணுங்களுக்கு நுண்ணறிவு அதிகம்தான். பொண்ணு பார்க்கப்போனா, கூட வர்ற ஆளுகள வச்சு, பையன் முக அமைப்ப வச்சு இவன் சீக்கிரம் சொட்டையாயிருவான்னு ரிஜக்ட் பண்ணிடுறாங்க. அவ்வளவு ஏன்? காலேஜ் படிக்கும் போது, பாவமேன்னு ஒரு லுக்கு கூட விடுறதுல்ல. அதுமட்டுமில்லாம “ஆகாயச் சூரியனை உச்சந்தலையில் சூடியவன்னு” நக்கல் பாட்டு வேற.

ஆனா இந்தப் பசங்களுக்கு அவ்வளவு பத்தாது. சில வருஷத்துக்கு முன்னாடி எங்க தெருவுக்கு ஒரு பேங்க் மேனேஜர் குடி வந்தாரு. அவங்க நிச்சயம் சிண்டெக்ஸ் கம்பெனியோட சொந்தமாவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கணும். மேனேஜர் சம்சாரமும், அவங்களோட ரெண்டு மூத்த பொண்ணுங்களும் அப்படி ஒரு சைஸூ. மூணாவது பொண்ணு மட்டும் ஒல்லியா இருக்கும். அந்த ஒல்லிக்கு நெறையா கில்லிங்க, ஜல்லிங்க புரபோஸ் பண்ணினாங்க. அவங்க குடிவந்த ஒரு மாசத்துல லோக்கல் கிரிக்கெட் டோர்ணமெண்ட் பைனல். ரெண்டு மணிக்கு மேட்ச். ரோலர்லாம் போட்டு பிட்ச்ச ஒரு மாதிரி செட் பண்ணி இருந்தாங்க. ஒரு மணி வாக்குல லேசான தூறல். விழாக்கமிட்டி பரபரபாயிட்டாங்க.

ஏதாச்சும் லாரி ஷெட்டுல போயி, தார்ப்பாய் கிடைச்சா தூக்கிட்டு வாங்கடா, பிட்ச கவர் பண்ணனும்னு ஆர்டர் போடுறாய்ங்க. அப்ப எங்க தெருக்காரன்,  பாங்க் மேனெஜர் வீட்டுல போயி  நாலு நைட்டி வாங்கிட்டு வாங்கடா, மொத்த கிரவுண்டையுமே கவர் பண்ணிடலாம்னான். ஆனாலும் அந்த ஒல்லி பொண்ணு மேல யாருக்கும் கிரேஸ் போகலை.
ஆனா எங்களுக்குத் தெரியும்டா வம்சக்கூறு. நாலு வருசத்துல அந்த ஒல்லிக்கு பாட்டியாலா பேண்டே லெக்கின்ஸ் ஆயிடும்னு மானா மூனா கூட்டம் மட்டும் சிரிச்சுக்கிட்டோம்.

ஆனா எங்க கூட்டத்தப் பார்த்து ஊர் சிரிக்கிறது எங்களுக்கு மரத்துப்போச்சு. பின்னாடி அசிங்கமா கசகசன்னு தொங்குற முடிய வெட்டணும்னா கூட யாருமே இல்லாத நேரத்துல சலூனுக்குப் போக வேண்டியிருக்கு.

இப்படித்தான் எங நெருங்கிய சொந்தக்காரர் கல்யாணத்துல, மண்டப மானேஜர், இந்த தலை பால்டா இருக்குமே அவர்கிட்டதாங்க ஸ்டோர்  ரூம் சாவிய குடுத்தேன் என்று சொல்ல, எங்கள் மாமா “நாமக்கல் முட்டையில கூட ஒரு முட்டையை தனியா கண்டுபிடிச்சிடலாம், இந்த சொட்டைங்க கூட்டத்துல கண்டுபிடிக்கிறது கஷ்டம்னு” பஞ்ச் அடிச்சாரு.
மொதல்ல இவிங்க தலைல எருவா மேட்டின தேச்சு பார்க்கணும்டா, முடி வளர்ந்திருச்சுன்னா கந்து வட்டிக்கு கடன் வாங்கி கூட அதை வாங்கலாம்டா என வியாக்கியானம் செய்யும் நண்பர்கள் வேறு.

பொதுவா மத்த வீடுகள்ல இருக்குற சண்டையோட சேர்த்து எங்க வீடுகள்ல இன்னொரு சண்டையும் நடக்கும். வழுக்கைய மறைச்சு ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு மருமகள்கள்ளாம் குமுறுவாங்க.  என் மனைவி கூட இது போர்ஜரி கேஸில் வருமா என அவர்கள் வீட்டாருடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஆலோசனை நடத்திவந்தார்.  கையில் காலில் விழுந்து, கெஞ்சிக் கதறி என்னை விட சிறப்பான அடிமை உனக்கு கிடைக்கமாட்டான் என்பதை புரிய வைத்து காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் கூட வெளியிடங்களுக்குச் கூட்டிச்செல்ல வேண்டுமென்றால், விக் வைச்சுக்கிட்டு வாங்க என்கிறார்.

என்னோட இன்னொரு சித்தப்பா பெரிய உஷார் பார்ட்டி. தன் மகனுக்கு இது மாதிரி நேர்ந்திடக்கூடாதுன்னு ஒரு ட்ரிக் பண்ணுனார். அவன் பிறந்ததுல இருந்து, கோயில் கோயிலா போயி மொட்டை அடிக்க ஆரம்பிச்சார். ஒண்ணு விட்ட பாட்டிக்கு ஒத்த தலைவலின்னாக் கூட, தன் மகனுக்கு மொட்டை அடிப்பதாய் நேர்ந்து கொள்வார். தினமும் அவனுக்கு நெல்லிக்காய் ஜூஸ். நல்ல சுத்தமான கொழும்பு தேங்காய் எண்ணெய் வாங்கி, அதில் முடி வளர உதவும் பல மூலிகைகளை காய்ச்சி ஊற்றி, அந்த எண்ணையை தினமும் அவன் தலையில் தேய்த்து வந்தார். அந்த எண்ணெயின் வீரியத்தால் அந்த பாட்டிலுக்கு கூட முடி முளைத்ததாக கேள்வி.

அவனுக்கு 15 வயது ஆனபோது சித்தப்பா வீடு கட்டத்தொடங்கி இருந்தார். பால் காய்ச்சும்வரை மொட்டை அடிக்கக்கூடாது என்று ஒரு சாஸ்திரத்தைக் கேள்விப்பட்டு அவனுக்கு தற்காலிகமாக மொட்டை அடிப்பதை நிறுத்தியிருந்தார். இரண்டு மாதத்தில் அவனுக்கு முடி கருகருவென வளர்ந்து வெயிலுக்கு அரிக்கத் தொடங்கியது. அதனால் முதன் முறையாக  அவன் சலூனுக்கு போகவேண்டிய நிலை ஏற்பட்டது.  
ஒரு வழியாக பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார். பையனும் பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக தேறியிருந்தான். ரெட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்தவர், மானா மூனா கூட்டத்தின் முக்கிய சம்பிரதாயத்தை மறந்து விட்டார். எல்லோருமே பத்தாம் வகுப்பு  முடிக்கும் போது, எங்களுக்கும் ஒரு காலத்தில் முடி இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஸ்டியோவுக்குச் சென்று போட்டோ எடுத்து வைத்துக் கொள்வோம். அதைச் செய்யாமல் விட்டு விட்டார்.

சில நாட்கள் கழித்து, மாடியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருக்கும் போது, அவர் பையன் சைக்கிளில் வந்து வாசலில் இறங்குவதைப் பார்த்தேன். அவன் உச்சந்தலையில் மானா மூனா கூட்டத்தின் உறுப்பினர் படிவம் பிரசுரமாகத் தொடங்கி இருந்தது.