July 08, 2011

அலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு

ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் விந்துவாக இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை என்னும் நிலை இன்று. ஆனால் 95-96 ஆம் ஆண்டுகளில் ஈ மெயில் என்ற ஒன்றைப் பார்ப்பது என்பது அரிவாள் நடிக்காத ஹரி படம் போல அரிதானது. ஆனால் அதை பலருக்கு சாத்தியப்படுத்தியது அலாக்ரிட்டி. அது அடிப்படையில் ஒரு கட்டுமான நிறுவனம். தி நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் இயங்கிவந்த அலாக்ரிட்டி தன் நிறுவன புரமோஷனுக்காக இந்த உத்தியை கையாண்டது.

90களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மென்பொருள் வேலை வாய்ப்பு புரட்சியின் காரணமாக ஏராளமான பணம் சென்னையின் தெருக்களில் பாய்ந்தோடியது. அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், ஓரளவு நியாயமான பெனிஃபிட் பண்டுகள் ஆகியோர் போட்டி போட்டனர். ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் தோன்றியதும் அந்தக்காலத்தில்தான்.
அதில் ஸ்டேண்ட் அவுட் பெர்பார்மராக இருந்த்து அலாக்ரிட்டி நிறுவனம்தான். தி ஹிந்து செய்தித்தாளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஆளெடுப்புக்கு அரைப் பக்க விளம்பரம் தரும். அவைகளுக்கு சமமாக அலாக்ரிட்டியின் விளம்பரமும் வெளிவரும். என் ஆர் ஐ களை கவருவதற்காக அவர்கள் கையாண்ட உத்திதான் ப்ரிண்ட் அவுட் ஈ மெயில் முறை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போனில் பேசுவதும், போஸ்ட் அனுப்புவதும் சிரமமாக/செலவாக இருந்த காலம். எனவே அவர்கள் அப்போது இணையம் மூலம் அலாக்ரிட்டியின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டியது. அதில் உறவினர்களின் விலாசமும் இருக்க வேண்டும். மெயில் கிடைத்த உடன் அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து விலாசத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் கிடையாது. இதன்மூலம் ஜெனரேட் ஆகும் குட்வில்லுக்காக இதை செய்தார்கள் அவர்கள்.

அவர்களின் பலமே நியாயமான அணுகுமுறைதான். பணத்தை வெள்ளையிலேயே வாங்கினார்கள். நில உரிமையாளர்களுக்கும் வெள்ளையில் தான் செட்டில்மெண்ட். ஆர்க்கிடெக்ட் முதல் அடித்தட்டு தொழிலாளர் வரை நல்ல நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். சம்பளமும் நியாயமாக வழங்கினார்கள். மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு தேவையான அளவு இடம்விட்டு அடுக்குமாடிகள் கட்டினார்கள். நல்ல மூலப் பொருட்களை உபயோகித்தார்கள்.
இதனால் அந்த நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட சதுர அடிக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். மூலப் பொருட்கள் எதிர்பாராமல் விலையேறினாலும் சொன்ன தரம் சொன்ன விலை என்பதில் உறுதியாய் இருந்தனர்.

எந்த அரசுத்துறைக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற முடிவிலும் உறுதியாய் இருந்தார்கள். இதனால் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மின் இணைப்பு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப்பிரச்சினை சரியாகும் வரையில் ஒரு வீட்டிற்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள் சில மாதம் வரை.

வீடு விற்று விடுவதோடு நின்று விடாமல் வாரண்டி பீரியட் போல பராமரிப்பையும் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் தவறாக உபயோகப் படுத்தியதால் கதவின் தாழ்ப்பாள் பழுதானது. அதை சரி செய்ய வந்தவர், வேலையை முடித்து விட்டு ரூபாய் பதினான்கிற்கு பில் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றது போன்ற பல ட்ராக் ரெக்கார்டுகளையும் கொண்டது அலாக்ரிட்டி.
பத்து ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அலாக்ரிட்டி என்ற பெயரே எங்கும் காணப்படவில்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை. பணிச்சூழலில் அதைப் பற்றிய நினைவும் இல்லை. சென்னையில் இருந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறை கூட அப்பெயர் காதில் விழவில்லை.

சென்ற வாரம் சென்னைக்கு மீண்டும் வந்திருந்தேன். தி நகர் இந்திப் பிரச்சார சபா தெருவில் சிம்பு வீட்டிற்க்கு எதிரே ஒரு அப்பார்ட்மெண்ட். அதில்தான் நான் வந்த உத்தியோக விஷயமான அதிகாரி இருந்தார். அந்த கேட்டிற்கு சென்ற உடனேயே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். விசால கார் பார்க்கிங், உறுதியான சுவர்கள், நல்ல லிஃப்ட் என. வீட்டின் உள்ளேயும் அப்படியே. வேலை முடிந்ததும் அவரிடம் கேட்டேன். எந்த பில்டர் சார் என்று? அலாக்ரிட்டி என்று பதில் வந்தது.
சந்தோஷத்துடன், இப்போ என்ன பெயரில் சார் இருக்காங்க என்றேன்?. இல்லை இது கட்டி 15 வருஷம் ஆச்சு. அவங்க இப்போ பீல்டில இல்லை. நேர்மையானவங்க சென்னையில தொழில் பண்ண முடியுமா என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

14 comments:

RVS said...

அட்டகாசம்! நேர்மையா இருந்தா தொழில் பண்ண முடியுமா? கேள்வி சுடுகிறது... பதிவு சூப்பெர்ப்.
அலக்ரிடி ஈமெயில் விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும். ரொம்ப நல்லவங்கெல்லாம் இங்க காலம் தள்ள முடியுமா பாஸ்? நன்றி.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஆர்விஎஸ்

Sankar Gurusamy said...

அருமையான பதிவு... உண்மையில் இப்போது இருப்பவர்கள் அரசை / அதிகாரிகளை அனுசரித்து போக பழகியவர்கள்தான். மற்றவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள். இதன் விளைவு நம் மக்கள் தலையில் விடிகிறது..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

தராசு said...

அலாக்ரிட்டி - நேர்மையான கம்பெனி என்று தெரியும். ஆனால், இந்த ஈ மெயில் மேட்டர் புதுசுண்ணே.

Raja said...

"ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் ’........’ இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை"

மேலே கையாளப்பட்டிருப்பது உங்கள் வாக்கியத்தின் ஒரு பகுதி.

புள்ளிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது “அச்சிலேறும் தகுதியற்ற வார்த்தை”
இதனை இப்படியும் நாகரிகமாக பயன்படுத்தலாம்,

”ஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் ’கருவில்’ இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை”

சொல்ல வருகிற கருத்தில் மட்டுமல்ல வார்த்தை பயன்பாடுகளிலும் நாகரிகத்தின் எல்லையை மீறுவது ஏற்புடையதல்ல

vidivelli said...

nalla pathivu..
valththukkal...



can you come my said?

வே.நடனசபாபதி said...

1993 ஆம் ஆண்டு, நாளிதழ்களில் தாங்கள் எந்த வீதி மீறலையும் செய்வதில்லை என்றும் தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒரு திறந்த புத்தகம் என்று விளம்பரம் வெளியிட்டதாக நினைவு. நீங்கள் சொன்னது போல் கையூட்டு தருவதில்லை என உறுதியாக (அவர்களது கட்டுமானம் போல்) இருந்ததால் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
“ஆடையில்லா ஊரில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன்” என்பார்கள். கையூட்டு தருவது/பெறுவது நடைமுறை ஆகிவிட்ட நம் நாட்டில், அலாக்ரிட்டி போன்ற நாணயமான நிறுவனங்கள் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டது உண்மையில் வருத்ததிற்குரியது.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமையான பதிவு...

King Viswa said...

வலைப்பூவின் வண்ண மாற்றங்கள் கண்ணை கவருகின்றன சார். தொடர்ந்து எழுதிக்கொண்டே வருவதற்கு பாராட்டுக்கள்.

இந்த நிறுவனம் பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை. வயது அப்படி. ஆனால் அந்த ஈமெயில் விஷயம் நல்லதொரு கான்செப்ட். வித்தியாசமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இதைப்போலவே ஒரு தனியார் தகவல் தொடர்பு முறை இருந்தது. கிட்டத்தட்ட டெலி கிராம் போல. உங்கள் நண்பருக்கு ஏதாவது இரு விஷயம் சொல்ல விழைந்தால் அந்த விஷயத்தை இந்த நிறுவனத்திடம் சொல்லி விட்டால் அவர்கள் உடனடியாக உங்கள் நண்பரிடம் சேர்பித்து விடுவார்கள். நான் சொல்வது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் (என்று நினைக்கிறேன்).

kanagu said...

அலாக்ரிட்டி பற்றிய தகவல்களுக்கு நன்றி அண்ணா... இறுதி பத்தி படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது :( :(

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கர் குருசாமி

வருகைக்கு நன்றி தராசு. நல்லாயிருக்கீங்களா?

வருகைக்கு நன்றி ராஜா. மிகவும் முன்னால் வேண்டும் என்ற அர்த்தத்தினால் அந்த வார்ததையை பிரயோகித்திருந்தேன். இனி கவனமாக உபயோகிக்கிறேன்

முரளிகண்ணன் said...

நன்றி விடிவெள்ளி. நிச்சயம்

நன்றி நடனசபாபதி

நன்றி ரிவெர்

நன்றி கிங்விஸ்வா. தொடர்ந்து எழுதுவதற்கு தங்களைப் போன்றோரின் ஊக்கமும் ஆதரவுமே காரணம்

நன்றி கனகு

Bruno said...

//அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், //

:) :)

Unknown said...

Gr8 boss ..
Selvam